Advertisement

பின் தாயம்மாவுக்கு சரியாகி அவள் வெளியே உள்ள பாத்ரூம் பயன்படுத்திய பிறகு தான் இரவு இவர்கள் கதவு அடைக்க பட்டது. ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் தாயம்மா மேல் சிந்துவுக்கு வெறுப்பை உருவாக்கியது. 
சித்தார்த் கூட சண்டை வருவது, அவனை பிரிந்து இருப்பது அனைத்துமே தாயம்மாவால் தான் என்று அவள் மீது கொலை வெறியே வந்தது சிந்துவுக்கு. 
இந்த மாதமும் சிந்துவுக்கு குழந்தை தங்காமல் போனது. அது வருத்தம் தந்தாலும் அந்த வாரம் கடைசி வெள்ளி அன்று அவளால்  கோயிலுக்கு செல்ல முடியாததால் சந்தோஷமாகவே பிறந்த வீட்டுக்கு சென்று விட்டாள். 
அதற்கு அடுத்த வாரத்தில் மற்றொரு பிரச்சனையை கிளப்பினாள் தாயம்மா. அது அந்த ஊரில் உள்ள மற்ற பெண்களைப் போல குளத்து வேலைக்கு செல்ல போகிறேன் என்று சொன்னது தான். 
“உங்க உடம்புக்கு இது தேவையா? அங்க போய் கதை பேச தான போறீங்க? அதெல்லாம் வேண்டாம்”,என்று அனைவரும் சொன்னாலும் நான் போயே தீருவேன் என்று சொல்லி பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண சுந்தரமும் தாயம்மாவும் கிளம்பினார்கள். 
ஆனால் வரும் போதே கால் முட்டு திரும்பி விட்டது என்று நொண்டிக் கொண்டே வந்தாள் தாயம்மா. பின் மீண்டும் சிகிச்சை, கால் நடக்க முடியாது என்பதால் பாத்ரூமுக்காக சிந்து சித்தார்த் அறைக்கதவும் திறந்து வைக்க வேண்டும் என்ற கட்டுப் பாடு போடப் பட்டது. 
“இவங்க கதவை திறந்து வைக்க சொன்னா வைக்கணும். இவங்க நல்லா இருக்கும் போது தான் நாங்க புருஷன் பொண்டாட்டி சந்தோஷமா இருக்கணுமா?”, என்று எண்ணி மிகவும் சோர்ந்து போனாள் சிந்து.
“இங்க பாருங்க, நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகுது. இப்பவே இப்படி பிரிஞ்சு இருக்குறது நல்லாவா இருக்கு. உங்க அம்மா வேணும்னு வினையை இழுத்துட்டு வருது. அந்த ரூம் பாத்ரூமை சரி பண்ணிருங்களேன்”, என்று கெஞ்சினாள் சிந்து. 
“அப்பா கிட்ட சொல்றேன் சிந்து”, என்று சொன்னவன் சுந்தரத்திடம் சொன்னதுக்கு “அது எதுக்கு டா தேவை இல்லாத வேலை? அதை ஸ்டோர் ரூம் மாதிரி தானே வச்சிருக்கோம். அப்படியே இருக்கட்டும் என்று முடித்து விட்டார். சித்தார்த் தான் வாயை மூட வேண்டி இருந்தது. இதை சிந்துவிடம் சொன்னால் அவள் குதிப்பாள் என்பதால் சுந்தரம் சொன்னதை அவனுக்குள்ளே வைத்துக் கொண்டான். 
கால் நடக்க முடியாததால் கையில் கொண்டு போய் உணவைக் கொடுத்து அவளை கை கழுவ வைத்து என்று அனைத்தும் சிந்து தான் பார்த்தாள். மனம் முழுவதும் வெறுப்பு இருந்தாலும் கடமைக்காக செய்தாள் சிந்து. 
ஆனால் கணவனுடன் தனித்திருக்கும் அழகான காதல் நிமிடங்களுக்காக அவள் மனது ஏங்கியது நிஜம்.
அந்த ஏக்கத்தின் விளைவு “இந்த வீட்ல இருந்தா தானே இவ்வளவு பிரச்சனை குவார்ட்ரஸ் கிடைச்சா அங்க போயிரலாம்”, என்று சிந்துவை எண்ண வைத்தது. 
பின்னர்  அதைப் பற்றிய சண்டை இருவருக்கும் தொடர்ந்தது. அவன் குவாட்ரஸ் உடனே கிடைக்காது என்று சொல்ல “அப்ப வேற வீடு பாருங்க”, என்று அவள் சொல்ல இவர்களுக்குள் யுத்தம் மூண்டது. 
“இப்ப என்ன இந்த ரூம் பாத்ரூம் அவங்க யூஸ் பண்ணுறது தானே பிராப்ளம். அந்த பாத்ரூம் சரி பண்ணிட்டா உனக்கு பிரச்சனை இல்லையே”, என்று கேட்டான் சித்தார்த். 
“இயற்கையா முடியாதவங்களுக்காக என்ன வேணும்னாலும் விட்டுக் கொடுக்கலாம். ஆனா இவங்க வேணும்னு போய் பிரச்சனையை இழுத்துட்டு வராங்க. நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் மழைல நனைஞ்சு காச்சலை கொண்டு வராங்க. வெயில்ல முத்து பிறக்க போய் மூலத்தை வாங்கிட்டு வாராங்க. வேலை பாக்கணும்னு இவங்களுக்கு என்ன தலை எழுத்து? குளத்து வேலை இவங்களுக்கு தேவையா? அங்க எதுக்கு போகணும்? நானும் பொறுத்து பாத்துட்டேன். மாசம் மாசம் எனக்கு பீரியட்ஸ்ன்னு அஞ்சாறு நாள் நாம விலகி இருந்தா உங்க அம்மாவால மாசத்துல பத்து நாள் நாம பிரிஞ்சு இருக்க வேண்டி இருக்கு. இப்படி வாழ்ந்துட்டு பிள்ளை ஆசை வேற? இதுக்கு முடிவு என்னன்னா,நீங்க அந்த பாத்ரூம் சரி பண்ணுங்க. இல்லைன்னா வேற வீடு பாருங்க. எனக்காக ஏதாவது பண்ணணும்னு நினைச்சா இதை பண்ணுங்க”, என்று சொல்லி முடித்து விட்டாள்.
ஆனால் சித்தார்த் எதுவுமே செய்ய வில்லை. சிந்துவை சரி கட்டி விடலாம் என்று மட்டுமே அவன் எண்ணினான். அவனுக்கு வேற வீடு பார்ப்பது ஒன்றும் பெரிதில்லை. ஆனால் அம்மா அப்பா கிட்ட என்ன காரணம் சொல்வது என்ற குழப்பம். மற்றொரு முக்கியமான காரணம் அவனுடைய வருமானத்தை விட அதிக ரூபாய் அவனுடைய சேமிப்புக்கு செல்வது தான்.
பல எல்.ஐ.சி, சீட்டு பணம் என்று பல கமிட்மெண்ட்ஸ் இருந்தது அவனுக்கு. வேறு வீடு பார்த்தால் வாடகை மற்ற செலவு என்று பணம் போகும். 
இங்கேயே இருந்தால் வாடகை செலவு இல்லை. வீட்டு செலவையும் சுந்தரம் பார்த்துக்குவார் என்று எண்ணினான். ஆனால் சிந்துவின் மனநிலை மட்டும் அவனுக்கு புரியவே வில்லை. புரிந்தாலும் முடிவெடுக்க தெரியாமல் தடுமாறினான். 
அந்த வாரம் சனிக்கிழமை ஊருக்கு கிளம்ப சொன்னாள் சிந்து. “அம்மாவை பாக்கணும்ல சிந்து”,என்றான் சித்தார்த்.
“உங்க அம்மாவை என்னை விட உங்க அப்பா நல்லா பாத்துக்குறார். அதனால கவலைப் படாம கிளம்புங்க. இங்க இருந்தா மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. நாளைக்கு வந்துரலாம்”, என்று சொன்னதும் அவனும் கிளம்பி விட்டான். 
கிளம்பும் போது “இங்க உள்ள தாம்பூலத்தட்டு உங்க வீட்ல இருக்கு தாயி. கல்யாணத்தன்னைக்கு மாறி போச்சு. அதை எடுத்துட்டு வா”,என்று சொல்லி அனுப்பினாள் தாயம்மா.
“உங்க அம்மாவுக்கு கால் உடைஞ்சதுல தப்பே இல்லை. தாம்பூலத்  தட்டு மாறி தான போச்சு. உங்க தட்டு எங்க வீட்ல இருந்தாலும் எங்க தட்டு உங்க வீட்ல இருக்கு தானே. உங்க அம்மா இதை அங்க போய் கொடுத்துட்டு அதை வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல வேண்டியது தான? அதை கொடுக்க மட்டும் மனசில்லையோ”, என்று கத்தினாள் சிந்து.
“மாமியார் மருமகள் சண்டைல புருஷன் ரொம்ப பாவம் சிந்து. இப்ப என் நிலையும் அது தான். உங்களை சேத்து வைக்க ஏதாவது மாத்திரை இருக்குமா?”, என்று அவன் கேட்டதும் அவனைப் பார்த்து சிரித்து விட்டாள் சிந்து.
“உங்க கூட சந்தோஷமா இருக்க தான் எனக்கும் ஆசை. அதை கெடுக்குறது உங்க வீட்ல உள்ளவங்க தான். இதுல என் கைல ஒண்ணும் இல்லை”, என்று சொல்லி அவனுக்கு புரிய வைக்க 
முயன்றாள். 
சிந்து வீட்டுக்கு சென்றதும் அன்று இரவு தாயம்மாவை போனில்
அழைத்து “சாப்பிட்டீங்களாம்மா? அப்பா என்ன செய்ராறு?”, என்று கேட்டான் சித்தார்த்.
“சாப்பிட்டோம். உங்க பெரியம்மா பெரியப்பா வந்தாங்க. இப்ப தான் போனாங்க சித்தார்த்”
“என்ன சொன்னாங்க மா?”
“உனக்கு கால் வலி இருக்கு. உன்னை இப்படி போட்டுட்டு அவங்க எதுக்கு அங்க போய் இருக்காங்கன்னு கேட்டாரு. நான் தான் எனக்கு சரியாகிருச்சு. இன்னைக்கு தான் போயிருக்காங்க. நாளைக்கு வந்திருவாங்கன்னு சமாளிச்சேன்”,என்று சொல்லி தாயம்மா போனை வைத்ததும் சிந்து அருகில் அமர்ந்தான் சித்தார்த்.
போனில் பேசியதை அவளிடம் சொன்னவன் “பாத்தியா சிந்து, எங்க பெரியம்மாவும் பெரியப்பாவும் எப்படி பத்த வச்சிட்டு போயிருக்காங்க பாரு”, என்று அவர்களை திட்டினான்.
“அவங்களை திட்டுறதுல எந்த அர்த்தமும் இல்லை மா. ஏன்னா அவங்க உண்மையான அக்கரைல சொல்லிருக்காங்க. பெரியவங்களை அந்த நிலைமைல போட்டுட்டு வந்தா யார் வேணும்னாலும் அப்படி தான் கேப்பாங்க. ஆனா உங்க பெரியம்மா பெரியப்பா மேல உங்களுக்கு கோபம் இருக்குனு தெரிஞ்சும் அந்த கோபத்தை அதிக படுத்துற மாதிரி அவங்க சொன்னதை உங்ககிட்ட சொல்லி வத்தி வச்சது யார்ன்னு என் வாயாலே சொல்ல மாட்டேன்”, என்று நக்கலாக சொன்னாள் சிந்து.
“ஆமா நீ எங்க அம்மாவையே சொல்லு. அவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? எங்க அம்மாவை எப்படி கஷ்ட படுத்திருக்காங்க தெரியுமா?”
 
“அவங்க என்ன செஞ்சா எனக்கென்ன? ஆனா கஷ்ட படுத்திருக்காங்கன்னு உங்க கிட்ட சொன்ன உங்க அம்மா அவங்க கூட நல்லா தானா பேசுறாங்க? தினமும் போனில் கூட பேசுறாங்க”, என்று சொன்னதும் சித்தார்த்தால் பதில் பேச முடிய வில்லை. 
தாயம்மா ஓரளவு சரியாகி விட்டாள். அதன் பின் மீண்டும் பிரச்சனைக்களாக தான் இருந்தது. 
அவர்கள் வீட்டில் இருக்க முடியாமல் மூச்சு முட்டிப் போய்  “எங்கயாவது கூட்டிட்டு போங்க”, என்ற சிந்துவின் நச்சரித்தாலால் சிந்துவின் பெரியம்மா வீட்டுக்கு கேரளாவுக்கு அழைத்து சென்றான் சித்தார்த். அவர்களுடன் ராணியும் சென்றாள்.
அந்த பயணம் இருவருக்குமே இனிதாக இருந்தது. “கேரளாக்கு போகணும் ன்னு ரொம்ப ஆசை சிந்து. உன் மூலமா தான் வாய்பு கிடைச்சிருக்கு”, என்று உண்மையிலே சந்தோஷப் பட்டான் சித்தார்த். 
சுற்றி உறவினர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அது தேன்நிலவாகவே பட்டது. 
அங்கிருந்து வந்ததும் வாழ்க்கை அதன் போக்கில் சென்றது. ஆனால் தாயம்மா மற்றும் சுந்தரத்தால் தினமும் சிந்து மற்றும் சித்தார்த்துக்குள்ளே சண்டைகள் வந்த வண்ணம் தான் இருந்தது.
சண்டை போட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் சமாதானமானதால் வாழ்க்கை நல்ல படியாக சென்றது. இருவருக்கும் ஈகோ இல்லாமல் இருந்ததால் சரியா போயிற்று. 
சண்டையில் ஈகோவும் கலந்திருந்தால் எப்போதோ இருவரும் பிரிந்திருப்பார்கள். அந்த விஷயத்தில் சித்தார்த்தை பாராட்ட வேண்டும். சிந்து எவ்வளவு கோபத்தில் கத்தினாலும் சிறிது நேரத்தில் அவள் கோபத்தை குறைக்கும் வித்தை அவனுக்கு தெரிந்திருந்தது. 
காதல் தொடரும்….

Advertisement