Advertisement

காதல் நூலிழை
அத்தியாயம் 11
உனக்கே தெரியாமல்
உன்னைச் சுற்றி வருகிறேன்
என் சூரியன் நீயல்லவா?!!!
“நீ எதுக்கு இதையெல்லாம் கண்டுக்குற? நீ படிச்சு வேலைக்கு போக பாரு சிந்து. அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது தங்கம்”
“இந்த டார்ச்சல்ல எப்படி மா படிக்க? படிக்க விட மாட்டாங்க.  படிக்கணும்னு புக் எடுத்தா வெண்ணி போடு, டீ போடுன்னு டார்ச்சல். வெண்ணி மட்டுமே எத்தனை தடவை வைக்கிறேன் தெரியுமாமா?”
“ஆமா உன் அத்தை வெண்ணி தான் குடிப்பங்காளாமே? நீ பெரிய சட்டில போட்டு வச்சிர வேண்டியது தானே?”
“ஐயோ அம்மா, எப்பவும் சூடா தான் குடிப்பாங்க. கொதிக்க கொதிக்க வாய்ல ஊத்தணும். பிளாஸ்க்ல ஊத்தி வச்சாலும் பத்த மாட்டிக்கு. நிறைய போட்டு வச்சா ஆறிரும். திருப்பி திருப்பி சூடாக்குறது தான் வேலையே”
“இதுக்கு என்ன தான் தீர்வுன்னு தெரியலையே சிந்து. உங்க வீட்டுக்காரர் என்ன சொல்றாரு”
“விடு கண்டுக்காதன்னு சொல்றாங்க. என் மாமனார் மாமியாரால  எங்களுக்குள்ள தினமும் சண்டை தான். தினமும் சாப்பாடு செஞ்சு வச்சா அவங்க அண்ணன் கேக்கலைன்னா கூட சாப்பாடை அவங்க அண்ணன் கிட்ட கொடுத்துராங்க. இங்க உள்ளவங்களுக்கு பத்த மாட்டிக்கு. அப்புறம் தோசை ஊத்து அதை செய் இதை செய்ன்னு டார்சல் பண்ணுறாங்க”
….
 
“அன்னைக்கு சப்பாத்தி பிசஞ்சு உருட்டி போட்டு செஞ்சு வச்சா இவங்க அண்ணன் வீட்டுக்கு இவங்க அம்மா அள்ளிக் கொடுத்துருச்சு. பாத்தாலே கம்மியா இருந்தது. எனக்கு பசிச்சாலும் எல்லாருக்கும் பத்தாதேன்னு நினைச்சு நான் அப்புறமா சாப்பிடுறேனு சொன்னேன். பாத்தா எனக்கு ஒண்ணும் இல்லை. அதை முன்னாடியே சொன்னா கூட கொஞ்சம் போட்டு வச்சிருப்பேன்ல? அதுவும் சொல்ல மாட்டாங்க. சரி நம்மளே நிறைய
செஞ்சு வைப்போம்னு வச்சா அப்ப அவங்க அண்ணன் கிட்ட கொடுக்காம இங்க காஞ்சிட்டு இருக்கும். இதை ரெண்டு தடவை பாத்துட்டு எங்க மாமனார் எதுக்கு இப்படி நிறைய செஞ்சு வெஸ்ட் பண்ணுற. கொஞ்சமா செய்ன்னு சொல்றாரு., எல்லாரும் சில நேரம் நிறைய சாப்பிடுறாங்க, சில நேரம் கம்மியா சாப்பிடுறாங்க. சரியான அளவு எனக்கு எப்படி மா தெரியும்? இவங்க கிட்ட சொன்னா இவங்க என் அண்ணன் எதுக்கு எடுத்துட்டு போறான்னு அவங்க அண்ணனைத் தான் திட்டுறாங்க”
…..
“கொஞ்ச நாளா தான் மா எங்க வீட்டுக்காரரை பத்தியே புரியுது. ஊருல இருக்குற எல்லாரையும் திட்டுறாங்க. ஆனா அவங்க அம்மா அப்பாவை மட்டும் ஒண்ணுமே தப்பு சொல்ல மாட்டிக்காங்க”
…. 
“அந்த ஊர்ல தான் இவங்க பாட்டி இருக்கு. எப்பவாது இங்க வரும். வந்தா, இவங்க அம்மா முகத்தை திருப்பிக்குவாங்க. அந்த பாட்டி என்கிட்ட புலம்புது. என் தங்கச்சி மகளோட மக தான் இவ. சொந்த பேத்தியா தான். மத்த ரெண்டு மருமகளுங்களாவது ஒரே ஊர்னாலும் அசல் தான். ஆனா இவ முகத்தை திருப்பிட்டு போரான்னு புலம்புது”
“இங்க பார் சிந்து, யார் எப்படி வேணும்னாலும் போகட்டும். படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலைக்கு போக பாரு. எதையும் யோசிக்காத. வேற செயின்ல தாலியை போட்டுருவோமா?”
“அம்மா தாலி, மணி எல்லாம் சேத்து ஒரு பவுன் இருக்கு.நம்ம கிட்ட இருக்குறது ரெண்டுமே ரெண்டு பவுன் செயின் தான். ரெண்டு பவுன்ல போய் ஒரு பவுன் தாலியை போட்டா ரொம்ப நாள் இருக்காது”
“பேங்க்ல மூணு பவுன் செயின் இருக்கு சிந்து. அதை திருப்பி தரேன். அதுல போட்டுருவோம்”,என்று சொன்னதும் சந்தோஷப் பட்டாள் சிந்து. 
“ஹிம் என்னை போடக் கூடாதுன்னு சொல்லிட்டு ஒரு சடங்கு வீட்டுக்கு அவங்க கிட்ட இருக்குற அறுபது பவுன் நகையையும் போட்டு பூ வச்சு மினுக்கிட்டு போறாங்க மா. எங்க வீட்டுக்காரர் எதுக்குமா இவ்வளவு போட்டுருக்கீங்கன்னு கேட்டதுக்கு நீயா எடுத்து கொடுத்தன்னு கேக்காங்கலாம்? ஆனா நீங்க இங்க இருந்து பூ வச்சு விட்டா எதுக்கு வைக்கிற? காத்து கருப்பு அடிக்கும் வைக்காத சொல்றாங்க. பூ வைக்கிற ஆசை கூட போச்சு மா”
“இருட்டுல போகும் போது வைக்க கூடாது சிந்து. அதான் சொல்லிருப்பாங்க. எல்லாத்தையும் நல்லதாவே நினைச்சிக்கோ”, என்று சொல்லி வேறு எதையோ பேசி மகளின் மனதை மாற்றினாள்.
அவள் ராணியிடம் எல்லாம் சொல்லி இருப்பாள் என்று உணர்ந்த சித்தார்த்துக்கு சிந்து வீட்டில் இருப்பது சிறிது சங்கடமாக இருந்தது. “என்ன நினைப்பாங்க? அவங்க பொண்ணை கொடுமைப் படுத்துறேன்னு தான நினைப்பாங்க?”,என்று எண்ணி “எதுக்கு சிந்து இதெல்லாம் அத்தை கிட்ட சொல்ற?”, என்று கேட்டான்.
“யார் கிட்டயும் சொல்லலைன்னா என் மண்டையே வெடிச்சிரும். எங்க அம்மா கிட்ட தான சொல்றேன். வேற பிரண்ட்ஸ் கூட எனக்கு இல்லை. உங்களை எதுவும் அவங்க சொல்லலை”, என்று சொல்லி அவனை சமாதானப் படுத்தினாள்.
செயின் திருப்புவது பற்றி சித்தார்த்திடம் சொன்னதுக்கு அவன் “உங்க அம்மா எங்கயும் பணம் புரட்ட வேண்டாம். எவ்வளவுக்கு வச்சிருக்காங்கன்னு சொல்லு. நான் அனுப்பிறேன்”, என்றான்.
“இப்ப உடனே வேண்டாம்.மூணு மாசம் கழிச்சு தானா தாலி மாத்தணும்,. அப்பா திருப்பிக்கலாம்”, என்று சொல்லி விட்டாள் சிந்து.  
தாலி செயின் பிரச்சனை அத்துடன் முடிய வில்லை. அடுத்த வாரம் ஊருக்கு கிளம்பும் போது சித்தார்த்தை அழைத்த தாயம்மா “அவளை அந்த செயினை போட்டுட்டு போக சொல்லு டா”, என்றாள்.
ஏற்கனவே இரண்டு முறை சொல்லி மூன்றாவது முறையும் சொன்னதும் எரிச்சலானவன் “நீங்க எதுக்கு போட கூடாதுன்னு அவ கிட்ட சொன்னீங்க?”, என்று கேட்டே விட்டான்.
அதில் அதிர்ந்து போனாலும் “இல்லை டா காலம் கெட்டுகிடக்குள்ள? செயினை அறுக்குராங்கல்ல? அதான்”, என்றாள். 
“நீங்க தேஞ்சிரும் அழுக்காகிரும்னு சொல்லிருக்கீங்க”
“சரி அதை விடு. இப்ப போட சொல்லு. நான் இனி ஒண்ணும் சொல்லலை”
“கொஞ்ச நாள் கழிச்சு போடுவா, விடுங்க மா”, என்று தாயம்மாவிடம் சொன்ன சித்தார்த் “எங்க அம்மா ரொம்ப பீல் பண்ணி பேசுராங்க டி. நீ எடுத்து போடேன்”,என்றான்.
“அடுத்த மாசம் என் செயினை திருப்பி தர முடிஞ்சா தாங்க. இல்லைன்னா நான் வெறும் கயிரோடவே இருக்கேன்”, என்று அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் சிந்து. 
இந்த பிரச்சனை முடிந்ததும் அடுத்ததாக பாத்ரூம் பிரச்சனை ஆரம்பித்தது. 
வெயில் காலம் ஆரம்பித்ததும் பேசாமல் வீட்டில் இருக்காமல் தெருதெருவாக வேப்பமுத்து பிறக்குவதற்கு சென்றாள் தாயம்மா. வீட்டருகில் இருந்த மரத்தில் பொறுக்குவதற்கு பக்கத்து வீட்டு பெண்ணிடம் சண்டையும் போட்டாள். 
அப்போது ஒரு நாள் ஆபீஸில் இருந்து போன் செய்த சித்தார்த் “எல்லாரும் என்ன பண்ணுறீங்க?”, என்று கேட்டான். 
“நான் படுத்துருக்கேன், உங்க அப்பா டி‌வி, உங்க அம்மா முத்து பிறக்க போயிருச்சு”
“இந்த அம்மாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு தெரியலை”,என்று சித்தார்த் சொன்னதும் சிந்து எதுவும் சொல்லவில்லை. 
அனைவருமே தாயம்மாவிடம் சொல்லி விட்டார்கள். “இதை வச்சு தான் சம்பாதிக்க போறீங்களா? உடம்ப கெடுத்துக்காதீங்க?”,என்று அனைவரும் சொல்லி விட்டார்கள்.
அது எதையும் கேட்காமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தாள் தாயம்மா. எழுமிச்ச பழத்தோல், தேங்காய் ஓடு இதை தூர போட்டிருந்தால் “இதை எதுக்கு தூர போட்ட? சேத்து வை. மாரியும் குப்பைல தூக்கி போட்டுருக்கா. நீயும் அப்படியே செய்ற?”, என்று திட்டும் தாயம்மா வேப்பமுத்துவை விட்டு வைப்பாளா என்று எண்ணிக் கொண்டாள் சிந்து. 
ஆனால் இரண்டு நாட்கள் களித்து சிந்துவுக்கு தான் மன அழுத்தத்தைக் கொடுத்தாள் தாயம்மா. 
வெயிலில் அலைந்ததால் உடல் சூடு அதிகமாகி மூலநோய், மற்றும் வயிற்று வலி வந்து பாத்ரூம் நிற்காமல் போய்க்கொண்டும் இருந்தது. அதனால் சிந்துவுக்கு தாயம்மாவின் எச்சி பிளேட் எடுப்பது என்று வேலை அதிகமாக தான் இருந்தது. ஆனால் அதெல்லாம் சிந்துவுக்கு பெரிதாக தெரிய வில்லை. 
ஆஸ்பத்திரிக்கு சென்று வந்து சாப்பிட்டு விட்டு தாயம்மா ஏற்கனவே படுக்க சென்று விட்டாள். சிந்து எல்லாவற்றையும் விளக்கி போட்டு விட்டு அவர்களின் அறைக் கதவை அடைக்கும் போது “கதவை பூட்டாத மா. அத்தை பாத்ரூம் போவா. கதவை திறந்தே வை”, என்று சொன்னதும் உச்ச கட்ட எரிச்சல் வந்தது சிந்துவுக்கு.
கதவை திறந்து வைத்து விட்டு வந்த சிந்து “உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் கூட இன்னும் முழுசா முடியலை. அதுக்குள்ளே இப்படி கதவை திறந்து போட்டுட்டு தூங்க சொன்னா என்ன அர்த்தம்?”, என்று சித்தார்த்திடம் கத்தினாள்.
“அவங்களுக்கு உடம்பு சரி இல்லைல சிந்து. அதனால தான். இப்ப கூட அட்ஜஸ்ட் பண்ண மாட்டியா?”
“இங்க பாருங்க போன மாசம் உங்க அம்மா வேணும்னு நான் சொல்ல சொல்ல கேக்காமல் மழைல நனஞ்சு காச்சல் வந்தப்ப இப்படி தான் கதவை திறந்து போட சொன்னாங்க. நான் அப்ப உங்ககிட்ட என்ன சொன்னேன். இன்னொரு ரூம்ல இருக்குற பாத்ரூம்ல உள்ள பொருளை எல்லாம் எடுத்து மாடில போட சொன்னேன்ல? அப்படி போட்டுருந்தா இப்ப அவங்க அந்த ரூம்ல உள்ள பாத்ரூமை யூஸ் பண்ணிருப்பாங்கல்ல?”
“அந்த பாத்ரூம்க்கு பைப் லைன் கொடுக்கல சிந்து. ரெண்டு மூணு நாள் தானே. அட்ஜஸ்ட் பன்னிக்கோ. நாம மாடிக்கு போயிரலாம்னு பாத்தா மாடிலயும் பாத்ரூம் கிடையாது”,என்று சொல்லி அவளை சமாளித்தான்.
ஆனால் இரவில் அவள் மீது கை போட்டு அவளை அணைக்க முயன்றான் சித்தார்த்.  அவன் கையை தட்டி விட்ட சிந்து “இப்படி கதவை திறந்து போட்டுட்டு உங்க கூட என்னால சந்தோஷமா இருக்க முடியாது. உங்க அம்மாவுக்கு சரியாகட்டும் அப்புறம் பாக்கலாம்”, என்று சொல்லி அவனுக்கே செக் வைத்தாள் சிந்து.
இரண்டு மூன்று நாள் அல்ல முழுதாக பத்து நாள் கதவை திறந்து போட்டுக் கொண்டு தூங்கி சிந்துவும் சித்தார்த்தும் உடலால் பிரிந்து இருந்தார்கள். அந்த பிரிவு இருவருக்கும் வலித்தது. ஒருவரை ஒருவர் பிடிக்காமல் பிரிந்திருந்தால் வலித்திருக்காது. அதிகமாக பிடித்தும் இருவரும் மற்றவரின் தொடுகைக்கு ஏங்கினாலும் சந்தர்பம் அவர்களை பிரித்து வைத்தது. 
“எப்படா நமக்குன்னு குழந்தை பிறக்கும்னு இருக்கு டி?”,என்று சித்தார்த் ஏங்கி சொல்லும் போது அந்த ஏக்கம் மனதை சுட்டாலும் “இப்படி உங்க அம்மாவால நாம பிரிஞ்சே இருப்போம். சீக்கிரம் பிள்ளை பிறந்துரும்”, என்று சொல்லி நக்கலாக பதில் சொன்னாள் சிந்து. 

Advertisement