Advertisement

சில வருடங்களுக்குப் பின்…
“ஏய் மாடசாமி அந்த ஆட்டுக்குட்டிய பிடிச்சிட்டு வா” என்ற குரலில் 
“அதிகாரம் பண்ணுறதுல அப்படியே அன்னம் ஆத்தாள உரிச்சு வெச்சிருகீங்க சின்ன அம்மிணி” என்றபடி பிறந்து சில தினங்களே ஆனா ஆட்டுக்குட்டியை தூக்கிவந்தான் அவன்.
“என்ரா என்டர பேத்திகிட்ட வம்பு பன்னுற” என்ற அன்னத்தின் குரலில் 
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங் சின்ன அம்மிணி ஆட்டுக்குட்டி கேட்டாங் புடிச்சாந்தனுங்” என்றுவிட்டு 
‘அப்பத்தாளுக்கும் பேத்திக்கும் நடுவுல நம்மட்ற தல உருளப்போவுது’ என்றெண்ணி தலையை சொறிந்தபடி நின்றிருந்தான். 
அன்னம் மாட்டுக் கொட்டாயை நோக்கி நடையிட, மாடசாமிக்கு நிம்மதி. 
“எனக்கு இந்த ஆடு வேண்டாம் மாடசாமி ப்ளாக் ஆடு தான் வேணும்” என்ற சிரியவளோ தன் அருகில் தெரிந்த ஆள் அரவத்தில் மெல்லத் திரும்ப ‘ஐயோ அம்மா’ என அதிர்ந்தாள். 
அயிரை(சந்தனம்) நிறத்தில் புடவை அணிந்தபடி கைகளைக்கட்டிக்கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தாள் நற்பவி.
“அம்மா.. உனக்கு இந்த கலர் சாரி நல்லா இருக்கு” என்று புன்னகைக்க.. மகளது சமாளிப்பு எதற்கென்று தெரிந்து சிரிப்பு வர, அதை அடக்கியபடி நின்றிருந்தாள்.
தன் சமாளிப்பு அன்னையிடம் எடுபடவில்லை என்பதால் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் குட்டி.
நற்பவி மாடசாமியை கை காண்பித்து ‘அவரிடம் என்ன கூறினாய்’ என்று சைகை மொழியில் கேட்க 
‘நான் ஒன்றும் சொல்லவில்லை’ இது மகள்.
‘பொய் சொன்னால் அடி’ என்றதும் 
‘பேர் சொல்லி கூப்பிட்டேன்’ சரண்டரானாள் மகள்.
‘அது தப்பு தானே! அவங்க வயசென்ன? பெரியவங்கள அப்படி கூப்பிடலாமா!! சாரி கேளு’
“சாரி மாடசாமி அங்கிள். இனிமேல் அப்படி பேர்சொல்லி கூப்பிடமாட்டேன்” என்று காதை பிடித்துக்கொண்டாள் குட்டி.
இதை எல்லாம் பார்த்திருந்த ஸ்ரீராம் “மொழி குட்டி” என்று குரல் கொடுத்தும் துள்ளி ஓடினாள் அவனிடம்.
“அம்மா உன்மேல கோபப்பட்டாங்களா..? பனிஷ்மென்ட் கொடுக்கலாமா” என்று நற்பவியை பார்த்துகொண்டே சொல்ல
“இல்லை ப்பா. நான்தான் தப்பு பண்ணுனேன் அம்மா கரெக்ட் பண்ணுனாங்க” என்று மொழி கூறியதும் அவளை ஸ்ரீராமிடம் இருந்து வாங்கி அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் நற்பவி.
பதிலுக்கு இரண்டு முத்தங்களை மகள் திருப்பித்தர, இருவரையும் புன்னகையுடன் பார்த்திருந்தான் ஸ்ரீராம்.
மொழியினி. 
தன் மகளிற்கு நற்பவி தேர்ந்தெடுத்த பெயர். 
அவள் பிஞ்சு மொழிகளை கேற்கும்போதேல்லாம் தன்னையும் மறந்திருப்பாள்.
அவள் ரசிக்கும் இசை மொழியினியின் பேச்சு.. 
அவளை பூக்குவியலாய் கையிலேந்திய தருணம் மீண்டும் ஜனித்த தருணம். 
அவள் முதல் முதலாய் ‘அம்மா’ என்றழைத்தபோது அவளுள் தாய்மை அருவி பொங்கி விழிகளில் வழிந்திட ஸ்ரீராமை தான் பார்த்திருந்தாள். 
தாயாக தந்தை மாறி மொழியினிக்கு மொழி கற்றுக் கொடுத்திருந்தானே.!
‘அம்மா’ என்று அவன் கற்றுகொடுத்ததை மொழியினி அவள் பிஞ்சு மொழியில் அழகாய் வெளிப்படுத்தி இருந்தாள்.
மொழியினியிடம் ஸ்ரீராம் அதிகம் நற்பவி குறித்தே பேசுவான். நற்பவி மறுத்தாலும் கண்களை உருட்டி முறைத்தாலும் அவன் கண்டுகொள்ள மாட்டான். மொழியினியின் மனதில் அவள் அன்னைக்கான பிம்பத்தை ஆரம்பத்திலிருந்தே அழகாய் செதுக்கி இருந்தான்.
பள்ளி செல்லும் வயதில் மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் விவரம் வந்ததும் 
“அம்மாவால பேச முடியாதாப்பா?” என்றொரு நாள் கேட்டிருந்தாள் மொழியினி.
“நம்மகிட்ட பேசிட்டு தானே இருக்காங்க” என 
“ஆக்சனல தானே பேசுறாங்க. என்ன மாறி உன்ன மாறி ஆத்தா மாறி எப்போ அம்மா பேசுவாங்க?”
அவளை அருகில் அழைத்து தன் மடியில் இருத்தியவன் 
“அம்மா நம்மள மாதிரி இல்லைடா.. ரொம்ப ஸ்பெஷல். இந்த உலகத்துலேயே அழகான விஷயம் எதுன்னு சொல்லு??”
யோசித்தவள் “ஆட்டுக்குட்டி” என்றதும் சிரித்த ஸ்ரீராம்.
“உன் ஆட்டுக்குட்டிய விட இந்த உலகத்துலேயே அழகான விஷயம் மௌனம். அந்த மௌனம் தான் உங்க அம்மாவோட மொழி. அதான் அம்மா இப்படி பேசுறாங்க. 
உன்ன மாதிரி குட்டி தேவதைக்கு தான் அவங்கள அம்மாவா கொடுக்கணும்னு கடவுள் கிப்ட் பண்ணிருக்காரு ” என்றதும் குதூகலம் குழந்தையிடம்.
“அம்மா இப்போ பேசுறது உனக்கு புரியலையா மொழி குட்டி” என்று கேட்க
“புரியாம என்ன..? அதெல்லாம் நல்லா புரியுதே”
“அம்மா இப்படி இருக்காங்களேன்னு பீல் பண்றியா”
“நான் எதுக்கு பீல் பண்ணனும்? நீதானே சொன்னா அம்மா ரொம்ப ஸ்பெஷல்னு.. காட் எனக்கு அம்மாவை ஸ்பெஷல் கிப்டா கொடுத்திருக்காரு நான் அம்மாவை நல்லா பார்த்துப்பேன்” என்றவள்
 “அப்பா உனக்கொன்னு தெரியுமா?” என்றிட 
“என்னடா குட்டி? நீயே சொல்லு அப்பாவுக்கு தெரியல”  
“எனக்கு அம்மா இப்படி பேசுறதுதான் ப்பா ரொம்ப பிடிச்சிருக்கு. அம்மா இப்படியே பேசட்டும்”  என்று கூறி அழகாய் ரசித்து சிறித்தவள் அவனிடமிருந்து இறங்கி ஓடியிருந்தாள்.  
தந்தை மகளது உரையாடலை கேட்டுகொண்டு தான் இருந்தாள் நற்பவி. அவள் கண்ணீர் துளி கன்னத்தை தொடும் முன் கிச்சனுக்குள் வந்து அதை தன் கைகளால் துடைத்துவிட்டிருந்தான் அவளவன்.
வார்த்தைகள் தேவையில்லை பார்வைகள் பரிமாறியது ஆயிரம் வார்த்தைகளை. 
மதியம் அன்னலட்சுமி அனைவரையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றிருந்தார். அன்று நற்பவி வெற்றிபெற இவர் வேண்டிய வேண்டுதல்கள் மட்டும் ஆண்டுகள் கடந்தும் முடிவை நெருங்கியபாடில்லை.   
இந்திய மதிப்பில் ஏழு கோடி ருபாய் அவளது பரிசுத் தொகை. அதை அனைத்து மாவட்டங்களில் இருக்கும் காது கேளாத வாய் பேச முடியாத குழந்தைகளின் நலனிற்காக பிரித்து அளித்திருந்தாள். 
மெர்லின் போலுள்ள குழந்தைக்கு பெற்றோரால் செவித்திறன் கருவி பொறுத்தி கல்வி கற்க வழிசெய்யமுடியும். ஏழை குழந்தைகளுக்கு..? உதவி செய்ய தனக்கு வாய்ப்பு கிடைத்ததும் பயன் படுத்திக் கொண்டாள். 
ஸ்ரீராமோ அவனது குடும்பமோ அவளது இந்த முடிவுக்கு எந்தவொரு தடையும் விதிக்கவில்லை. அவளை நினைத்து என்றும் பெருமை தான் அவர்களுக்கு. 
சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்புகள் அவளைத் தேடிவர, அவள் மறுத்துவிட்டாள். அவளுக்கே அதில் விருப்பமில்லாது போக ஸ்ரீராமும் விட்டுவிட்டான். 
இப்போது பீத்தோவன் காதலி என்னும் தனது யூ ட்யூப் சேனலை விட்டுவிட்டு நற்பவி கதிராயன் என்ற பெயரிலேயே வேறொன்றை ஆரம்பித்து வீடியோக்களை பதிவேற்றி வருகிறாள்.
வோர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சி அவளை உலகமெங்கும் அடையாளப் படுத்திட, அவளது சேனலுக்கு பல மில்லியன் வாடிக்கையளர்கள் இருந்தனர். இப்போது அவள் ரகசியமாய் இல்லாது வெளிப்படையாகவே பியானோவை ரசித்து வாசிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன வீடியோவில். 
ஸ்ரீராம் தான் அவளது சினிமாட்டோகிராபர்.
பல கோடி மக்கள் அதை பார்த்து பகிர்வதினால் யூ ட்யூபில் கிடைக்கும் வருமானமே அவளுக்கு அதிகமாக இருந்தது. குடும்பத்தையும் சரிவர கவனித்துகொண்டு வீட்டிலிருந்தபடியே வருமானம்.
கோவிலிலிருந்து அனைவரும் மாலை வீடு திரும்பிட, ராமநாதனுக்கும் சின்னசாமிக்கும் ஓட்டப் பயிற்சி அளித்து கட்டாய ஓய்வெடுக்கும் நிலைக்குத் தள்ளியிருந்தாள் மொழியினி.  
ஆம் ராமநாதன் நல்ல முடிவைத்தான் எடுத்திருந்தார். சின்னாம்பாளையத்தில் செட்டில் ஆகியிருந்தார்.
இரவு உணவை முடித்துவிட்டு தன் வீட்டிலிருப்பவருக்கும் ஒரு கேரியரில் உணவை எடுத்துக்கொண்டு ராமநாதன் கிளம்ப அவருக்கு முத்தமிட்டு வழியனுப்பினாள் பேத்தி.
ஸ்ரீராம் அவன் அறைக்குச் செல்ல படியேற, அன்னம் அனைவரையும் இங்கேயே காத்திருக்குமாறு கூறி உள்ளே சென்றார்.
எதற்கு என புரியாது அனைவரும் காத்திருக்க.. நெல் அளக்கும் படியில் வரமிளகு கல்லுப்பு போட்டு எடுத்து வந்தவர் அனைவரையும் கிழக்கு பார்த்து அருகருகே அமரச்செய்தார்.
மொழியினி அன்னை மடியில் ஒருகாலும் தந்தை மடியில் ஒருகாலும் போட்டபடி அமர்ந்துகொள்ள.. இருவரும் தங்கள் காதல் சின்னத்தை சேர்த்து பிடித்திருக்க.. விழிகள் காதல் மொழியை பேசத் தொடங்கியது. 
சின்னசாமி வராதிருக்க..
“குழந்தை கூட சொன்னா பேச்சு கேக்குது ஆனா நீங்க இருக்கீங்களே!!” என்று அன்னம் ஒரு குரல் கொடுக்க.. வேக வேகமாய் வந்து அமர்ந்துகொண்டார்.  
நிலவும் நட்சத்திரங்களும் அந்த குடும்பத்தை விண்ணிலிருந்து கண் எடுக்காது பார்த்திருக்க..
“ஊரு கண்ணு உறவு கண்ணு 
நாய் கண்ணு நரி கண்ணு 
நல்ல கண்ணு நொள்ள கண்ணு 
கொல்லி கண்ணு எல்லா கண்ணும் போகட்டும் 
துப்புங்க” என 
மூன்றுமுறை அவர்களை சுற்றி துப்புமாறு கூறி திருஷ்டி கழிக்க.. அவர் பாடலை கேட்டு ரசித்து சிரித்துக்கொண்டிருந்த மொழியினி 
“தூஊ தூஊ தூஊ” என மூன்று முறை துப்பிட அன்னம் அதை எடுத்துச் சென்று நெருப்பில் கொட்டினார். 
அவர்களது அழகிய கூட்டிற்குள் ஆனந்தம் மட்டுமே நிறைந்திருக்க அன்பு நாளுக்கு நாள் அதிகரித்திருக்க கடவுளிடம் வேண்டியபடி உள்ளே வந்தார் அன்னம்.  
ராமநாதன் எடுத்து வந்த உணவை உண்டுவிட்டு. கயிற்று கட்டிலை கொன்றை மரத்தடியில் எடுத்துப் போட்டு ரேடியோவை ஓடவிட்டார் அவர்.  
‘சொர்க்கமேஏஏ என்றாலும்ம்ம்.. அது நம் ஊரைப் போல வருமா…??’ 
சௌகிதார் சண்முகம் தான்.. 
சொந்த ஊரெனும் சொர்க்கம் திரும்பிய பறவை. தன் கூட்டில் இடம் கொடுத்திருந்தான் ஸ்ரீராம்.
இளங்காற்றும் இரவும் இசையும் இனிமை சேர்த்தன இதயத்தில்..

Advertisement