Advertisement

மழைக்காற்றும் மண்வாசமுமான மாலைப் பொழுதில்.. சிந்தும் மழைச்சாரல் சிறிது சிலிர்ப்பை சிந்திச் சென்றது மேனியில்.
மதராஸ்ல மழையா……….??
ஆச்சர்யமுடன் அந்தப் பொழுதை.. அந்திப் பொழுதை.. அனுபவித்தபடி ஸ்ரீராம்.. ஏ.டி.எம்மில் இருந்து எதிர்புறம் நின்ற யமஹாவை அடைய வேண்டி சாலையைக் கடக்கக் காத்திருந்தான்.
அவனுடன் அவள். அவள் மட்டுமே..!
பொன் மஞ்சள் உடையில்.. மஞ்சள் பூவாய்..
சிக்னல் பாசாகிட.. இவன் சாலையைக் கடக்க அடியெடுத்த பொழுதில்.. சட்டென இழுத்து நிறுத்தியவள்.. இவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். 
முழு அதிர்வு அவன் முகம் முதல் அடிப் பாதம் வரை.
என்னவென்று நினைப்பதாம்…?
என்னவென்று கேட்பதாம்..?
இவன் எதுவும் நினைத்து.. கேட்கும் முன்.. இவர்களின் முன்பு ஆஜராகியிருந்தது.. மிஸ்டர்.டாக்
ஜெர்மன் ஷெப்பர்ட்.. 
இப்பொழுது இவனும் ஜெர்க்காகி நிற்க.. இருவரையும் பார்த்து நின்ற டாகை அதன் உரிமையாளர் இழுத்துச் செல்ல.. இவனை நிமிர்ந்தும் பாராமல் விலகிச் சென்றாள் அவள்.
நொடிகளில் நடந்த நிகழ்வுகளே ஆயினும் அவனால் எளிதில் கடக்கமுடியவில்லை.. 
சாலையையும் அவளையும்..
ஒரு வாரம் ஓடியிருக்க.. ஸ்ரீராமிற்கு காட்சி கொடுத்தாள் அவள்.
துர்கா தேவி கோவிலின் அருகே தன் நண்பனோடு பேசிக்கொண்டிருக்க.. ஸ்ரீராமின் கண்கள் நொடியில் ஜூம் செய்து சரியாய் அடையாளம் கண்டுகொண்டது கோவிலில் இருந்து மஞ்சள் மலராய் நடைபோட்டு வந்தவளை. 
அடர் இமைகளுக்குள் அங்குமிங்கும் அலைபாயும் அவள் கருவிழிகள் அவன்புறம் எதேர்ச்சியாய் திரும்ப.. அவள் பார்வையில் படாது நண்பனின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டான் ஸ்ரீராம்.
அவர்களைக் கடந்து சற்று தொலைவில் நிறுத்தியிருந்த அவளது வண்டியை எடுக்கச்செல்ல.. அவளுக்கும் சற்று தொலைவில் குழந்தையோடு வந்துகொண்டிருந்த ஒரு பெண்மணியிடமிருந்து தாலிக்கொடியை பறித்து சென்றான் ஒரு கயவன்.
பெருங்குரலெடுத்து அவனிடம் முடிந்தளவு போராடியவர் தடுமாறி சாலையில் விழுந்திட, ஸ்ரீராமும் அவன் நண்பனும் அருகில் ஓடி வருவதற்குள் மஞ்சள் பூவானவள்.. புயலென திருடனை நோக்கி ஓட்டம் எடுத்திருந்தாள்.
அவனுக்கு இணையாய் ஓடியவள் அத்திருடனை நெருங்கும் வேலையில்.. பையிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவன் பாதையில் உருட்டிவிட.. உருளை வடிவத்தில் இருந்த அதில் காலை வைத்தவன் சாலையில் உருண்டிருந்தான்.
அவன் எழுவதற்குள் அவனை நெருங்கியிருந்தாள். எழுந்தவன் அவள் முன் கத்தியை காண்பிக்க அதற்கும் அசராதவள் தன் தோல் பையிலிருந்து பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து அவன் கண்களுக்கு குறிபார்த்து அடித்திருந்தாள்.
அவள் கண்களை தேய்க்கும் அந்நொடியில் அவள் அவனிடம் போராடி  நகையை கைப்பற்றிக்கொள்ள, ஸ்ரீராமும் அவன் நண்பனும் இன்னும் சிலரும் அவ்விடத்தை நெருங்கிவிட சுதாரித்த திடுடன்.. அவளை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாய் ஓட்டமெடுத்தான். 
என்ன நடந்தது என்று யூகிக்கும்முன் சொற்ப நொடிகளில் நிகழ்ந்தேறி இருந்தது சம்பவம். 
திருடியவனின் கூட்டாளி தெருமுனையில் இருந்து அவனை நோக்கி வண்டியில் வர, அதில் ஏறி இருவரும் தப்பிக்க முயல.. ஸ்ரீராம் அவன் சட்டையை பிடித்திருந்தான். அங்கிருந்த சிலர் வண்டியை மடக்கிப் பிடித்தனர்.
விடயம் அறிந்து அவர்கள் அவ்விருவரையும் வெளுக்கத்துவங்க.. 
ஸ்ரீராமின் கண்கள் அவளைத் தான் தேடியது. அவன் சென்று உதவும்முன் அவளாகவே மெல்ல எழுந்திருந்தாள்.
“ஆர் யூ ஓகே” என ஸ்ரீராம் பதற்றமாய் வினவ 
ஆம் என்பதாய் தலையை மட்டும் அசைத்தாள். முன்நெற்றியில் கல் பதம் பார்த்ததன் அடையாளமாய் உதிரம் சொட்டிக்கொண்டிருந்தது.  
“யூ ஆர் ப்ளீடிங்.. ஹாஸ்பிடல் போலாமா..?” 
அவனை நிமிர்ந்து பார்த்தவள் தேவையில்லை என்பதாய் ஒரு பாவனையோடு அங்கிருந்து நகர்ந்து வந்து அப்பெண்மணியிடம் தாலிக்கொடியை ஒப்டைக்க.. அவளை கண்ணீரோடு ஆரத்தழுவிக் கொண்டார். 
அவளின் உதிரம் கண்டு அவரும் அவளை மருத்துவமனை அழைக்க, புன்னகையுடன் தான் பார்த்துக்கொள்வதாய் சைகை செய்தவள் கைக்குட்டை கொண்டு முன்நெற்றியில் ஒத்திக்கொண்டாள்.
செல்லும் அவளையே புரியாது பார்த்திருந்தான் ஸ்ரீராம். 
சிறு நாயிக்கு அஞ்சியவளா இவள்..?
திருடனுக்கோ வழியும் உதிரத்துக்கோ விழிகளில் சிறு அச்சமும் இல்லை அவளிடம். 
அதற்குமேல் அந்த தேவதைப் பெண்ணால் ஒலி கேட்கும்படி மொழியாற்ற முடியாதென்றும் அறிந்தான். 
அதனாலென்ன தேவைதைகள் பேசுமா என்ன..? ஒருவேளை பேசினாலும் அவை இந்த மௌனமொழி பேசும் தேவதையின் அழகுக்கு ஈடாக முடியாது என்பது அவன் எண்ணம்.
அவனுக்கு அவளைவிட அவளது மௌனம் அழகாய்த் தெரிந்தது. 
அதுவே அவளை ஓசையின்றி மௌனமாய் அவனுள் நுழையச்செய்தது.
“நகை விலை இப்படியே ஏறிட்டு போனா என்னதான் பண்றது இதுமாதிரி திருட்டு நாய்க கிட்ட இருந்து பொம்பளைக தாலிய காப்பாத்திக்கவே ஒவ்வொருநாளும் போராடனும் போல” என்னும் குரலில் நினைவுக்கு வந்தான் ஸ்ரீராம்.  
“அதுக்குன்னு அந்த ராஸ்கல் அவன் அம்மா அக்கா தாலிய எல்லாம் பறிப்பானா..?” 
“இவனுக கிட்ட நியாய தர்மத்தையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.. காலம் கெட்டுக்கிடக்கு நம்ம ஜாக்ரதையா இருந்துக்கனும். எங்கயுமே பாதுகாப்பில்ல. சமூகம் எதை நோக்கி போயிட்டிருக்குனே தெரியல” 
“தாலிய கழட்டியும் வைக்கமுடியாது இவனுகளுக்கு பயந்து வீட்ட விட்டு எங்கயும் போகாம இருக்கனும் போல” என பலவராக குரல்கள் எழுந்தவண்ணம் இருந்தன. 
“மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்துன கோளறு நீங்க பேசுறது. அந்த பொண்ண பார்த்தீங்களே எப்படி தைரியமான தனியாளா போராடி நகைய மீட்டுச்சு.. அந்த துணிச்சல் தான் ஒவ்வொரு பொண்ணுக்கும் தேவை. திருடறவன் திருடிட்டு தான் இருப்பான் நம்ம பயந்து ஒதுங்கிபோறது தான் அவனுக்கு தேவை. ஒவ்வொரு இடத்திலும் இப்படி ஒரு ஆள் குற்றங்களுக்கு எதிரா எதிர்த்துநின்னா போதும். அங்க நம்ம ஒத்துமைய காட்டனும். பாதுகாப்பான சமூகம் நமக்குள்ள தான் இருக்கு. நமக்குள்ளயே தொலைச்சுட்டு வெளிய தேடுறதுல எந்த பிரயோஜனமும் இல்லை” என மூத்த பெண்மணி ஒருவர் கூற அனைவரும் ஆமோதித்தபடி நகர்ந்தனர்.      
ஸ்ரீராமும் அவன் நண்பனிடம் விடிபெற்று அங்கிருந்து கிளம்பினான். 
ஒரு மாதம் சென்றிருந்தது..
ஜானின் இளையமகள் மெர்லினை காண  ஸ்ரீராம் லிட்டில் ப்ளவர்ஸ் வந்திருந்தான். 
மெர்லினுக்கு அவன் மிகவும் பிடித்தமானவன். அவனோடு மொழியாட அதிகம் விரும்புவாள். அதுபோல் தான் அவனும், நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவளைக்காண வந்துவிடுவான். 
அங்கு பயிலும் சின்னஞ்சிறு மலர்களின் செய்கைகளை ரசித்தபடி அவன் காரிடோரில் நடந்து வந்துகொண்டிருக்க, அவனுக்கு நேர் எதிரிலிருந்த வகுப்பை எதேர்ச்சியாய் பார்த்தான். 
வட்ட வடிவிலான இடத்தின் நடுவே அழகுச்செடிகளும் மரங்களும் அதன் கிளைகளும் மறைந்திருந்தாலும் எதிர்புறம் இருந்தவள் அவனுக்கு நன்கு தெரிந்தாள்.
நீலப்பச்சை நிறத்தில் செங்கற்சிவப்பு பூக்கள் படந்திருப்பதுபோலான  புடவையின் முந்தி காற்றிலாட, அவள் கார்குழலின் முன்னுச்சி முடிகளாட..  நீள் விழிகளோடு செங்காந்தள் விரல்களும் சேர்ந்தாட.. அவள் அசைய.. காதிலிருந்த சிறுவளையம் உடனசய.. பாடம் நடத்திக்கொண்டிருந்தாள் அவள். 
மௌனமொழி தேவதை.
அவளை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான் ஸ்ரீராம். 
அவளுக்கும் எதோ தோன்றிட மெல்ல பார்வையை திருப்பிய போது.. அங்கு யாருமில்லாததால் மீண்டும் தன் பணியை தொடர்ந்தாள்.
அதற்குள் மெர்லின் ஓடிவந்து ஸ்ரீராமின் கைபிடித்துக்கொள்ள.. அவள் முன் மண்டியிட்டிருந்தான். 
தன் மென்கரத்தை அவன்முன் நீட்டிய மெர்லின் புருவத்தை அழகாய் உயர்த்தி ‘தா’ என்பது போல் பார்க்க.. 
புன்னகைத்த ஸ்ரீராம் தன் சட்டை பாக்கெட்டிலிருந்து சாக்லெட்டை எடுத்து அவள் கையில் வைக்க.. முகம்கொள்ளா சிரிப்புடன் பெற்றுக்கொண்டாள். 
இருவரும் கொன்றை மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த பெஞ்சில் சென்று அமர, அவனிடம் சாக்லேட்டின் கவரை பிரித்துத்தரும்படி நீட்டினாள் குட்டிப்பெண்.
‘ஒன்று தான் வாங்கி வந்தாயா..?’ என அவள் வினவ 
‘ஒரு நாளிற்கு ஒன்றுதான் சாப்பிடவேண்டும்’ என இவன் சொல்ல..
அவள் முகத்தை திருப்பிக்கொள்ள.. அவள் முன் நீட்டப்பட்ட இரண்டாவது சாக்லேட்டில் முகம் மலர்ந்தவள் அவனை குனியச்சொல்லி கன்னத்தில் முத்தமிட்டாள்.
இருவரது உரையாடலும் சைகை மொழியில். 
மெர்லின் செவித்திறன் மற்றும் பேசும்திறனற்றவள்.
முதலில் மெர்லினிடம் பேசுவதற்காகவே ஒரு சில வார்த்தைகளை தெரிந்திருந்தான், அவள் அவனோடு உரையாடும்போது அவளது முழுமதி முகத்தில் பரவும் மகிழிச்சிக்காகவே அம்மொழியை முழுதாய் கற்றுக்கொண்டான்.
மெர்லினை சந்தித்துவிட்டு வெளியே வந்ததும் தான் நினைவு வந்தது அவளுக்கு சாக்லேட் பிரித்து தரும்போது தன் வண்டி சாவியை தனக்கு வலப்புறம் பெஞ்சில் வைத்தது. 
அதை எடுக்கச்சென்றபோது அவன் அமர்ந்திருந்த இடத்தில் இப்போது அவள் இருந்தாள்.
மெர்லினோடு சைகை மொழியில் பேசிக்கொண்டிருந்தாள்.  
மெர்லின் இரண்டாவது சாக்லெட்டை பிரிக்க முயல.. 
‘ஒரு நாளிற்கு ஒன்று தான்’ என அவனைப்போலவே அவளும் சொல்ல.. அவன் அதரங்களில் புன்னகை. 
அவர்கள் முன்சென்று நில்லாமல் மறைவிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தவன் இருவரும் அங்கிருந்து சென்றபின்னரே சாவியை எடுத்துக்கொண்டு திரும்பினான்.
அதன் பின்னரும் ஓரிருமுறை அவள் வண்டியில் செல்லும்போது பார்த்திருக்கிறான். காணும்போதெல்லாம் அவள் மட்டும் அவன் கண்களுக்கு தனித்துவமாய் தெரிவாள்.
கையை இறுக பிடித்தாள்.. முகம் புதைத்தாள்.. விழி விரித்தாள்.. இதயத்தில் எப்போது நுழைந்தாள்..? 
நுழைய நீ எப்போது அனுமதித்தாய்..? என பதில் கேள்வி பிறந்தது.
அவனுள் ஓர் காதல் ஈர்ப்பு விசை.. 
அவள் மௌனமே ராகமாய் உருவான மெல்லிசை..
மெல்லிசை அவன் இதயத்தில் மெல்ல நுழைந்து 
மீட்டியது காதலிசை..
காதலை உணர்வது இனிமையான தருணம் அதை தன் இணையிடம் இனிமையாய் உணர்த்தவும் வேண்டும் அதற்கெல்லாம் அவகாசம் இருக்குமா அவனிடத்தில்..?
அவன் செய்யவேண்டிய கடமை தான் முன்னின்றது. அதை செய்து முடிக்கும்வரை தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடமளிக்க விரும்பவில்லை அவன்.
அந்நேரம் கடமை முன்னிருந்து காதலை பின்னுக்குத் தள்ளியிருந்தது. நாளை வேலை விஷயமாக யூ.எஸ் கிளம்பவேண்டும். அதில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தான்.
ஒரு வருடம் கழித்து.. ஸ்ரீராம் திரும்பியதும் முதல் வேலையாய் அவன் சென்று நின்ற இடம் லிட்டில் பிளவர்ஸ். 
செவித்திறன் அளிக்கும் கருவி பொருத்தப்பட்டு மெர்லின் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்தாள். அவளும் இல்லை அவளது ஆசிரியையும் இல்லை அங்கு. 
அவன் விலக்கி வைத்திருந்த காதல் அவனை விட்டு வெகுதூரம் விலகியிருந்தது. 
அவள் பல மாதங்கள் முன்பே ஊரை விட்டு சென்றுவிட்டதாக தகவல். இத்தனை நாட்கள் தெரிந்துகொள்ள முற்படவில்லை அவன்.. முற்பட்டபோது தொலைந்திருந்தாள் அவள். 
தொலைத்திருந்தான் அவன். 
இங்கிருந்து எங்கு செல்லப் போகிறாள் என அவன் நினைத்திருக்க எங்கு சென்றாள் என்றே தெரியாத நிலைக்கு அவனை கொண்டுவந்து விட்டிருந்தது விதி. 
ஒருமுறையாவது அவளை பார்த்துவிடமாட்டோமா என்று காத்திருந்தவனுக்கு ஒரு வருடத்திற்குப்பின் அவன் குடியிருப்பின் அருகிலேயே குடிவந்து இன்ப அதிர்ச்சி அளித்தாள்.
தொலைந்த பொக்கிஷம் திரும்ப கிடைத்த உணர்வு. இரண்டு வருட காத்திருப்பை அவன் ஒற்றை பார்வையில் வெளிப்படுத்த.. அவளோ பார்த்தாலே ஒரு பார்வை எற இறங்க.. அவளுக்கு அவனை அடையாளம் தெரிந்திருக்கவில்லை என்பதை அதிலேயே கண்டுகொண்டான்.
அவளைத் தேடிக்கொண்டு அவளை மட்டுமே நினைத்துக்கொண்டு இப்படி ஒருவன் இருப்பதே அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
லிப்ட் சம்பவம் அடுத்த சிறிது நேரத்திலேயே சாலையில் அவளைக் கண்டான். காண்பதெல்லாம் அவள்போல் தெரிகிறது என்று எண்ணி மீண்டும் காண அவளேதான்! விழிகளை உருட்டி முறைத்துக் கொண்டிருந்தாள் எதிரிலிருப்பவனை.
என்னவளிடம் எவன் வம்பிழுப்பது என எட்டி பார்த்து பின் லாரி ட்ரைவரை தலைதெறிக்க ஓடவிட்டான்.
என்னதான் காட்டிக்கொள்ளக்கூடாது என்று நினைத்தாலும் நொடிக்கொரு முறை அவளது முன்னெற்றியின் தழும்பை கண்கள் தழுவாது தடுக்க முடியவில்லை.  
தானாய் சென்று உதவ, அவன் ஒருமையில் அழைத்ததை கண்டு அவள் யோசிக்க சுதாரித்தவன் பன்மைக்கு தாவி உதவி செய்துவிட்டு நகர்ந்துகொண்டான். 
நகர்ந்துகொண்டதாய் காட்டிக்கொண்டு அவளை பின்தொடர்ந்தவன் அவள் லிட்டில் பிளவர்சிக்கு தான் செல்கிறாள் என்பதை தெரிந்துகொண்ட பின்னரே அலுவலகம் சென்றான்.   
அன்றுதான் அவள் பெயரையே அறிந்திருந்தான். அவனை எண்ணி அவனுக்கே சிறு சிரிப்பு. நூறு முறைக்கும் மேலாக உச்சரித்து பார்த்துவிட்டான் 
‘நற்பவி நங்கை’ 
அவளோடும் அவள் நட்போடும்.. சிறு சேட்டைகளோடும் அழகாய் நாட்கள் கழிய.. வந்தது அந்த நாள்.. அவள் காதல் கண்டு கொண்ட நாள்.  
அவனையே அல்லவா வரைந்து வைத்திருந்தாள்..?
என்ன அர்த்தமாம் அதற்கு..? காதலன்றி..?
அவளைப் போலவே அழகு அவள் காதல் காட்டிய விதமும். ஆனாலும் அவன் காரணங்கள் அப்படியே இருக்க.. கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை அவன்.
அவன் கனவை.. கடமையை நிறைவேற்ற ஊர் சென்ற பொழுதிலே அவன் காதலையும் பெற்றோரிடம் சொல்லிவிட்டிருந்தான்.
அவன் எப்படி அவளை ஏற்றுக் கொண்டானோ.. அதே போல் அவர்களும் அவளை ஏற்றுக் கொள்ள.. ஆனந்த மழை அவன் அகத்தினுள்.
ஆசையாய் அவளிடம் வந்து சேர.. அவனிடம் வந்து சேர்ந்தது அவளைப் பெண் பார்க்க வரும் வைபவத்திற்கான செய்தி.
என்ன பேசிட முடியும்..? அவன் பேச்சு அர்த்தப் பேச்சானாலும் அனர்த்தம் விளைவிக்குமே அங்கே.. மௌனம் காத்தான்.
வாழ்த்து மூலம் வருத்தம் தந்து போனான்.. ஆனாலும் மனதோரம் அவள் நிச்சயம் இதை மறுப்பாள் என்ற நம்பிக்கை.
அதன் பின் மருத்துவமனை வாசம்..
அப்போது தான் தெரிய வந்தது இரண்டு வருடங்களாய் தன்னை இசையால் ஆட்சிசெய்த இசை அரசி அவனது மனதை ஆட்சி செய்யும் பேரரசி தான் என்று. 
அவன் எதிர்பாராத விஷயம் இது. இரண்டு வருடங்களாய் அவளைத் தொலைத்துவிட்டோம் என்று எண்ணியே தூக்கத்தை தொலைத்திருக்க.. இசையால் அவனை விட்டு அகலாதிருந்திருக்கிறாள் அவள். 
அறியாதிருந்திருக்கிறான் அவன்.
காதல் காட்டாற்று வெள்ளம் அவனுள் அந்த கணத்தில். 
ராமநாதனிடம் நற்பவி மீதான காதலைச் சொல்லி.. கல்யாணம் செய்துகொள்ள கேட்க.. இன்பமாய் அதிர்ந்தார். 
சுயம்வரம் செய்தாலும் கலியுகத்தில் ஸ்ரீராமனை காண இயலாது.. ஆனால் ஸ்ரீராமன் போல் ஒருவன்..? ஸ்ரீராம் என்ற பெயரில்..?
சாத்தியம் தான்.. சட்டென சம்மதம் சொல்லியிருந்தார் ராமநாதன்.. அதன் பின் தான் ஜெர்மன் ட்ரிப். இரு ஆண்களுக்கும் இடையிலான ரகசியங்கள் காக்கப்பட,  ஆறு மாத காலம் ஓடியிருக்க.. அவனது வருகையை அவளிடம் தெரிவிக்காது குடும்பத்தோடு அவள் வீட்டில் தோன்றி அவளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தான்.
அவனது கடந்த காலத்து காதலையெல்லாம் அவளிடம் வாய்மொழியில் தெரிவிக்க விரும்பவில்லை அவன். 
அவளாய் தெரிந்துகொள்ளும்போது தெரிந்துகொள்ளட்டும், ஆனால் அதற்குள் அதற்குமேல் அவளை காதல் செய்துவிடுவேன் என்ற எண்ணம் அவனிடம்.
அவளோடான ஒவ்வொரு நொடியும் ஒன்றாய் சேர்ந்து காதல்மொழி பேசிக் களித்து கழிக்க விரும்பினான். 
இப்போது இருப்பதைப்போல.. ஈருடல் ஓருயிராய்.. 
இணைந்து துடிக்கும் இதயத்தின் ஓசையோடு இளமை கொண்ட இருமான்கள் இறுக அணைத்தபடி இன்பத்தில் இனிய பொழுதை நகர்த்தி கொண்டிருந்தன.  
அஞ்சனமிட்ட விழிகளை விரித்து அவனை மொத்தமாய் அதில் வைத்தவளை..
“இப்படி பார்த்து வைக்காத.. இவ்வளவு நாள் அமைதியா போன மாதிரி இப்போ போமுடியாது என்னால..” குறுஞ்சிரிப்புடன் அவன் சொல்ல..
‘ஓ என்ன செய்வாயாம்…?’ என்பதாய் அவள் புருவம் உயர்த்த 
அவள் இதழ்களை பார்த்துக்கொண்டே 
“சொல்றதவிட செஞ்சு காட்டவா…” என்றபடி இதழ் நோக்கி குனிய 
வேகமாய் ‘ஒரு வேண்டாம்..!!!!!’ அவளிடம்.
“வேற என்ன வேணுமாம் என்னோட பவிக்கு..???” அவள் முகத்தை ஏந்தி கேட்க..
‘எப்போது நீ காதல் கொண்டாய்..? எப்போது என் காதலைக் கண்டு கொண்டாய்…?’
“ம்ஹும்..!! கல்யாணம் வரை டைம் இருக்கே.. நீயே கண்டுபிடி”
‘ப்ளீஸ்………!!’
“அப்போ நான் கேக்கிறதை கொடுக்கணும்…” – டீல் பேசினான்.
அவன் எதாவது ஏடாகூடமாய் கேட்டு வைத்தால்…?
‘வேணாம்.. நானே கண்டு பிடிக்கிறேன்..’ 
“சரி.. ஆனாலும் நான் கேட்டதை கொடுக்கணும் இப்போ..”
‘நோஓஓஓஒ…!!!!!!!’ 
அதற்கு மேல் அங்கு நில்லாமல் அவனையும் இழுத்து வந்தாள் நற்பவி வரவேற்பறைக்கு.
பேசுவான்…..

Advertisement