Advertisement

வான் அரங்கத்தில் மேகத்தின் அரங்கேற்றம்.. இசையோடான இன்ப மழை. அதே கணம்.. புவியிலும் ஓர் இசை அரங்கேற்றம்..! 
“தி வின்னர் இஸ்………. மிஸ் நற்பவி இராமநாதன்..!!!!!”
வான் மழையோடு வாழ்த்து மழையும் அவ்விடம் சேர்ந்திட.. சுகமாய் நனைந்தாள். 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறவுள்ள ‘தி வோர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவிற்கான தகுதிச்சுற்று பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் நடந்தது. 
நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் குழுவாகவும், தனிநபராகவும் பல்வேறு இடங்களில் நடந்த தகுதிசுற்றில் கலந்துகொண்டனர். 
அதில் சென்னையில் நடந்த போட்டியில் அவளது அசாத்திய பியானோ இசைக்கும் திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டு.. போட்டியளர்கள் ஐம்பது பேரையும் பின்னுக்குத்தள்ளி ஒற்றை ஆளாய் அடுத்த சுற்றுக்குள் நுழைந்திருந்தாள் நற்பவி நங்கை.
பியானோ.. 
அவளது முதல் காதலன்..!!
அவனைத் தீண்டிடும் பொழுதுகளில் கவலைகள் கரைந்தே போகும்.. சுகம் சொல்லாமல் வந்து தொட்டுப் போகும். எங்கும் மகிழ்ச்சியின் சுகந்தம் மட்டுமே சுற்றியிருக்கும். 
அவனின்றி அவளில்லை என்ற நிலை தான்.. காதலின் கடை நிலை இது தானோ…???
மென் சிரிப்புடன் அதன் அருகில் சென்றவள்.. மெல்ல வருடி இதழ் பதித்தாள்.
அவள் இதழ் தீண்டலில் ஒரு பரவசம் அதனிடம்.. ‘டொய்ங்’ சிணுங்கி காதலிசையை வெளிப்படுத்தியது. 
அவளுக்கென ஓர் அடையாளத்தைக் கொடுத்தவன் இந்தக் காதலன் தான்.. பீத்தோவன் காதலியாய் அவளை யூ ட்யூப் சானெல் மூலம் உலகிற்கு அடையாளப்படுத்தினான். எண்ணற்ற ரசிகர்களையும் அதன்மூலம் கிடைக்கச்செய்தான். 
நற்பவி நங்கையாய் தன்னை உலகிற்கு வெளிக் கண்பித்துக்கொள்ள அவளுள் எப்போதும் ஒரு தயக்கம். அதுவே பீத்தோவனின் காதலியாய் அவளை உருமாற்றியது. அவளுள் ஒரு உலகத்தை உருவாக்கியது.  அவ்வுலகைவிட்டு வெளிவந்து வெற்றிகளை குவிக்கத் தடையாய் இருந்தது அவளது தயக்கம்.
அவள் கதிராயனின் காதலியாய் மாறிய நொடி, அவள் தயக்கத்தை எல்லாம் தகர்த்தெறிந்து அவளை அவளாகவே அடையாளப்படுத்தி அவளுக்கு மாபெரும் வெற்றிகள் பல வந்துகுவிந்திட வழிவகை செய்து வருகிறான் அவளவன். 
முன்பு நடந்த ‘ஏரோபிக் பெய்ண்டிங் கண்டெஸ்ட்’ போல் இப்போட்டிக்கான வாய்ப்பும் அவளுக்கு கிடைக்க அவளவனே காரணம்.
அவன் ஜெர்மன் சென்று இன்றோடு ஆறு மாதங்களாயிற்று.. 
காலத்தை கட்டிவைக்க முடியாமல் நேரத்தை நிறுத்தி வைக்கமுடியாமல் அவன் தன்னைத் தேடி வருவான் என்ற நிலையான நம்பிக்கையில் தான் நாட்களை நகர்த்தியிருந்தாள் நற்பவி.  
அந்த மாபெரும் அரங்கிலிருந்து வெளியேறியவள் தனிமை தேடி ஒரு மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்தமர.. மனம் கடந்து வந்த நாட்களை மெல்ல எண்ணிப்பார்த்தது.
‘பீத்தோவன் காதலி’யாய் அன்று அவளைக் கண்டு கொண்டதும் அத்தனை ஆச்சர்யம் அவனிடம்.. 
ஆவலுடன் அவன் வார்த்தைகளுக்காக அவள் காத்திருக்க.. 
“போலாமா பவி…?” என்று அவளை மருத்துவமனை அழைத்து வந்துவிட்டான். 
தந்தை  இருந்த நிலையில் அவளும் வேறெதிலும் கவனம் செலுத்தாது அவருடன் இருந்து நன்கு கவனித்துக்கொண்டாள்.
நான்கு நாட்களில் ராமநாதன் பிளாட் திரும்பவும், ஒரு வாரத்தில் அவளும் பள்ளிக்குத் திரும்பியிருந்தாள். ஸ்ரீராமை அரிதாய் தான் காணமுடிந்தது. அவனது அலுவலக வேலைகளில் ஈடுபட்டிருந்தான். 
அப்படி ஒரு நாள் தான் எதிர்பாராத விதமாய் ஸ்ரீராமே அவளிடம் வந்து  எங்கே என தெரிவிக்காது ஓரிடத்திற்கு உடன்வருமாறு அழைக்க.. ராமநாதனிடம் என்ன கூறுவது என்று அவள் தயங்கியபடி நின்றிருந்தாள்.
அவளது தயக்கத்தை புரிந்து அவனே சென்று விடயத்தை கூறி அனுமதியும் வாங்கி வந்தான்.  
எங்கு? எதற்கு? என்றெல்லாம் அவள் கேட்கவுமில்லை அவன் தெரிவிக்கவுமில்லை. ஆனால் அவனை நம்பி தந்தை உடன் அனுப்புகிறார் என்றார் அவர் மனதில் அவனுக்கான இடம் மட்டும் புரிந்தது.
ஸ்ரீராம் நற்பவியை அழைத்துச் சென்ற இடம் ‘தி வோர்ல்ட்ஸ் பெஸ்ட்’ ரியாலிட்டி ஷோவிற்கான ஆடிசனில் கலந்துகொள்ள.. ஆடிசன் நடக்குமிடத்திற்கு. 
அவள் தான் ஏதேதோ நினைத்து வந்து ஏமாந்து நின்றாள். இடத்தையும் அவனையும் மாறி மாறி பார்க்க..
“என்னாச்சு பவி..?” 
‘நீ கேட்டதும் சொல்லனுமா..? போ… போ.. எதுனாலும் நீயே கண்டுபிடி’ 
அங்கு போடப்படிருந்த இருக்கையில் சென்றமர்ந்துகொண்டு பார்வையை திருப்பிக்கொண்டாள்.
‘சுமாராக வரைந்ததற்கே கூட்டிச்சென்று அங்கு நிறுத்தியவன் சூப்பராக இசைக்கும்போது சும்மாவா இருப்பான்?? இழுத்துவந்து விட்டானே இங்கு’ என மனதில் நினைத்துகொண்டு பெருமூச்சை விட்டபடி அமர்ந்திருந்தவள் அவன் புறம் திரும்பினாள்.
அந்நொடி அவளிடம் இருந்து அவன் பார்வையை திருப்பிகொண்டான். 
‘இப்போ எதுக்குடா இந்தப் பார்வை..?’ கேட்கவேண்டும் போல் ஒரு வேகம் அவளுள்.
பின்னே.. அவன் பார்வையின் பொருளும் விளங்க மறுக்கிறது இவளுக்கு.
இவள் பார்வை அவனிடம் நிலைத்து நின்றுவிட.. சிலநொடிகளில் மெல்ல அவள் புறம் திரும்பியவன் 
‘இங்க வா..’ விழிகளாலே அழைத்தான்.
‘காதலைக் கண்டு கொண்டானோ..?’ காதல் மனம் எதையும் அவளுக்குச் சாதகமாகத் தான் எண்ணிப் பார்க்கிறது.
“நேரம் ஆச்சு உள்ள போ” என்றான். 
அவனை முறைத்துகொண்டே முன்சென்றவளுக்கு பின்னாலிருந்து கேட்டது அவனுடைய  “பெஸ்ட் ஆப் லக்”
அதில் ஒருநொடி நின்றவள் பின் திரும்பாது வேகமேடுத்தாள்.
அவளது செய்கையில் அரும்பியது புன்னைகை அவன் அதரங்களில். 
அடுத்த சிலமணி நேரங்களில் அவள் திரும்ப “என்னாச்சு” என்றான் ஆர்வமாய்.
அவள் உதடுபிதுக்கி இடவலமாய் தலையசைத்து சோகத்தை வெளிபடுத்த.. நம்பாது அவள் கண்களைத் தான் உற்று பார்த்திருந்தான்.
அவள் மை விழிகளில் மெய் காண வேண்டி அவன் பார்க்க..
‘ஏன் என் கண் மட்டும் பொய் சொல்லாதோ..?’ 
நினைத்துக் கொண்டாலும் அவனுக்கு எதிர் புறமாய் நின்று கொண்டாள்.
“பவி.. நீ பீல் பண்ணாத..”
‘நான் பண்ணவே இல்லையே..’
“இந்த ஷோ ஒன்னும் உன்னை விட ஸ்பெஷல் கிடையாது..”
‘ஹான்.. அப்புறம்..?’
“உன்னை மிஸ் பண்ணதுக்கு அவங்க தான் பீல் பண்ணனும்..”
‘டேய்.. இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல..’
அவனது வாய்சும் இவளது மைன்ட் வாய்சும் தான் அவ்விடம்.
“மேடம் உங்கள எங்கெல்லாம் தேடுறது கன்பிர்மேசன் சர்டிபிகேட் கொடுக்கறதுக்குள்ள வந்துடீங்க” 
ஒருவர் வந்து அவளிடம் நீட்ட, அவள் வாங்காது ஸ்ரீராமை தான் பார்த்திருந்தாள். 
தகுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருந்தாள்.
அவன் அதை வாங்கி பார்த்துவிட்டு முறைப்பும் மென்னகையுடன் நிமிர அவள் இதழ்களிலும் ஒரு மென்னகை.
அதே மென்னகை இப்போதும் அவளிதழில் இருக்க, கைப்பேசியில் செய்தி வந்ததற்கான ஓசை. 
அதை எடுத்துப் பார்க்க.. ராமநாதன் தான் அனுப்பிருந்தார். 
அவரிடம் இம்மகிழ்ச்சியான செய்தியை இவள் பகிர்ந்துகொள்ள.. பதிலுக்கு அவர் அளித்த செய்தி உவப்பானதாக இல்லை இவளுக்கு. உறுதியை குழைப்பதாய் இருந்தது.
அவளிடம் பதில் செய்தியில்லாது போக.. கைபேசிக்கு அழைத்திருந்தார். அழைப்பை எடுத்து காதிற்கு கொடுத்தவள் பின் துண்டித்தாள்.  
இத்தனை நாட்கள் நிம்மதியாய் இருந்தாள் பெண் பார்க்கும் படலம் இன்றி.. ஆரம்பித்துவிட்டது இன்று.
விரைந்து வருமாறு தந்தை கூறும்போது அவரது குரலில் இருந்த மகிழ்ச்சியை அவளால் உணரமுடிந்தது. 
பெருமூச்சை விட்டபடி வண்டியை ஆருத்ரா அபார்ட்மெண்ட் நோக்கி கிளப்பினாள், இன்று தந்தையிடம் எப்படியாவது தன் முடிவை தெரிவித்துவிட வேண்டும் என்ற உறுதியுடன்.
ஸ்ரீராமிடம் இன்னும் சொல்லவில்லை.. சொல்லவும் போவதில்லை.. அவனே வருவான்.. ஆழ்ந்த நம்பிக்கை.. இவளிடம்.
அவளது காதல் வித்தை மனதில் விதைத்து நீர் வார்த்து வளர்த்துக் கொண்டிருந்தாள். அவனை காணும்போதெல்லாம் அது வளர்ந்து விரிந்து மலர்ந்து அவள் விழிவழியே பூத்துக் குலுங்கியதையெல்லாம் அவன் அறிந்திருப்பானா..? 
அறிந்திருந்தால் இப்படி விட்டுச் சென்றிருப்பானா..? என எண்ண கண்களில் நீர் துளித்தது. 
அவன் ஜெர்மன் கிளம்புமன்று கூறிய வார்த்தைகள் அவள் நினைவில் வந்துபோயின..
‘உன்னிடம் சொல்லப்படாத விசயங்கள் பல என்னுள் புதைந்து கிடக்க அதை அறிந்துகொள்ளுமுன் என்னை இங்கு விட்டு நீ எங்கு செல்லப்போகிறாய்..?’ என அவள் விழிகள் சொன்னதெல்லாம் உணர்ந்து கொண்டானோ..!
“நெக்ஸ்ட் லெவல் போக வாழ்த்துகள் பவி.. அப்போ பார்க்கலாம்” என்றான் புன்னகையுடன்.
நீ அடுத்த கட்டத்திற்கு நகரும்போது நான் உன்னுடன் இருப்பேன் எனக் கூறியதுபோல் அவளுக்குப்பட்டது. 
உடன் ராமநாதன் இருந்ததினால் அவள் தலையசைப்பை மட்டும் அளிக்க, அவன் விடைபெற்றான். 
இன்று சென்று வென்று திரும்புகிறாள்.. அவளருகில் அவன் இல்லையே..! அந்தக் கவலை ஒருபுறம் தந்தையின் செய்தியால் வந்த கவலை ஒருபுறம்.
அவன் வந்தாலும் வராவிட்டாலும் தன் வாழ்வில் அவனையன்றி வேறொருவன் இல்லை என்பதில் மட்டும் தீர்க்கமாய் இருந்தாள். 
தந்தையை நினைத்து தான் மனம் வருந்தியது. எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொன்னால் இதை தாங்கிக்கொள்வாரா..? என நினைக்கையில் ஒரு கலக்கம்.  வரும் வழியெல்லாம் அவள் சிந்தனை இப்படியாய் இருக்க.. அபார்ட்மெண்ட் வந்திருந்தது. 
பதற்றத்துடன் லிப்ட்டில் ஏறியிருக்க.. தளம் வருவதற்குள் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள். அவனது பிளாட்டை கடக்கும்போது கால்கள் தானாய் நின்றுவிட, ஸ்ரீராம் அவளைப் பார்த்து என்னவென்று புருவம் உயர்த்துவதுபோல் இருந்தது. என்றும் போல் இன்றும் அவன் “பவி”  என்று அவளை அழைப்பதுபோல் இருந்தது. 
‘நித்தமும் அவன் நினைவே’ தலையை சிலுப்பிக்கொண்டு கடந்து சென்றாள்.
அவளது பிளாட்டை நெருங்கியபோதே உள்ளே ஆட்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் அவளை எட்டியது. 
தயக்கத்துடன் உள்ளே நுழைய.. அவள் எதிர்பார்த்ததுபோல் தந்தையுடன் அவர் வயதுடைய ஒருவரும் ஒரு பெண்மணியும் அமர்ந்து முகம் மலர பேசிக்கொண்டிருந்தனர். 
“இதுதாங்க என் பொண்ணு நற்பவி நங்கை” என்று அவளை ராமநாதன் அவர்களுக்கு அறிமுகப்படுத்த.. இருவரும் அவள்புரம் திரும்பினர்.
வட்ட பொட்டும் வகுடெடுத்த கொண்டையுமாய் உச்சியில் குங்குமமிட்டு மங்களகரமாய் இருந்தார் அப்பெண்மணி. தறியில் நெய்யப்பட்ட காட்டன் புடவையில் மரியாதையான தோற்றத்துடன் இருந்தவர் அவளைப் பார்த்து அழகாய் புன்னகைக்க.. அவளே அறியாது பதிலுக்கு புன்னகைத்தாள். 
அவர் அருகில் வெந்நிற வேட்டி சட்டையில் கம்பீரமாய் வீற்றிருந்தார் அவள் தந்தையைப் போன்றவர். அவரை கையெடுத்து அவள் கும்பிட.. அவளுக்கு புன்னகையுடன் ஒரு தலையசைப்பை அளித்தார். 
“நல்லா இருக்கயாமா..?” என அப்பெண்மணி நற்பவியிடம் நலம் விசாரிக்க.. அவரிடம் தலையசைத்தாள்.
“பவிம்மா..” 
ராமநாதனின் பார்வையைப் படித்தவள் அவ்விருவரின் பாதம் தொட்டு வணங்க.. ஆசிர்வதித்தனர். 
அதிலும் அப்பெண்மணி 
“நல்லா இருக்கோணும் சாமி உன்ர விருப்பப்படி நீ சந்தோசமா இருக்கோணும்” என வாழ்த்த அவரை மிகவும் பிடித்துப்போனது அவளுக்கு.
அவர்கள் வந்த காரியத்தை எல்லாம் மறந்துபோய் அவர்களை அன்பொழுகப் பார்த்திருந்தாள். 
“கொஞ்சம் தண்ணி கொண்டா கண்ணு..!” என்றதும் இவள் உள்ளே செல்ல.. 
“பவிம்மா.. காபியே கொண்டு வந்திருடா..” 
இவள் தந்தையிடம் தலையசைத்து உள்ளே நகர்ந்தாள்.
“எங்களுக்கு பவியை ரொம்ப பிடிச்சிருக்கு.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங் சம்பந்தி எங்க பொண்ணுமாதிரி பார்த்துக்கறோம்” 
அவர்களது வார்த்தை காதில் விழுந்தநொடி அவள் கையிலிருந்த டம்ளர் ‘டொய்ங்’ என விழுந்து சத்தத்தை ஏட்படுத்த அப்பெண்மணி அடுத்தநொடி கிச்சனுக்குள் வந்திருந்தார்.
“பார்த்துமா.. கைய ஏதாச்சு சுட்டுட்டயா?” என அக்கறையாய் அவள் கைப்பற்றி வினவ ‘இல்லை’ என தலையசைத்து விழித்துவைத்தாள். 
“நீ மொல்ல போட்டு எடுத்துட்டுவா ஒன்னும் அவசரம் இல்ல.. நாங்க பேசிட்டு இருக்கோம்” என.. 
அவள் தலையசைக்க.. அவர் புன்னகயுடன் நகர்ந்துகொண்டார். 
சிறிது நேரத்திலேயே அவளுக்கு மிகவும் பிடித்தவராகிப் போயிருந்தார் அப்பெண்மணி. ஆனால் அதற்காகவெல்லாம் அவரது மகனை மணமுடிக்க தயாராயில்லை அவள். எப்படி தந்தையிடம் தெரிவிப்பது என்ற யோசனையில் வந்தவள் அவர்களிடம் காபி கப்பை நீட்டியபடி நின்றிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எடுத்துக்கொண்டனர்.
“அப்பறம் சம்பந்தி எப்போ கல்யாணத்தை வெச்சுக்கலாம்?” என அப்பெண்மணி கேட்க.. திடுக்கிட்டு தந்தையை பார்த்தாள் நற்பவி.
அவர் தன்னிடம் விருப்பம் கேட்பார் என்று எண்ணியிருக்க..  
“உங்க விருப்பம் போல பண்ணுங்க எப்போனாலும் எனக்கு முழு சம்மதம்” என்றுவிட, நற்பவிக்கு நடப்பதை கிரகித்துக்கொள்ளவே நேரம் பிடித்தது.
அவள் முகமாற்றத்தை கவனித்தவர்கள் 
“என்னமா நீ இன்னும் எங்க பையனை பார்க்கவே இல்ல அதுக்குள்ள இவங்க கல்யாணத்த பத்தி பேசுறாங்கன்னு நினைக்குறையா?” என அப்பெரியவர் கேட்க, எப்படி தலையசைப்பது என்றே தெரியாது நின்றிருந்தாள்.
“உள்ளார தான் இருக்கான் போய் பாரு” என்றார் அப்பெண்மணி சின்ன சிரிப்புடன்.
‘என் அறையில் இவன் என்ன செய்கிறான்..?’ என முதலில் கோபம் தான் வந்தது முகம் தெரியாதவன் மேல். 
தந்தையைப் பார்க்க,
“போய் பாருமா மாப்பிள உள்ள தான் இருக்காரு” என 
‘எனக்கு விருப்பமா இல்லையா என்றெல்லாம் கேட்காது உரிமையாய் மாப்பிள்ளை என்கிறாரே’ என்று அவர் மீதான கோபமும் உள்ளிருக்கும் அவன்மீது திரும்பியது.
இவர்கள் எல்லாம் ஹாலில் கூடியிருக்க.. அவள் டைனிங் ரூமைத் தாண்டி இருக்கும் அவள் அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.
அவள் அறைக்குள் நுழையச் செல்லும்முன் முன்பொருநாள் ஸ்ரீராம் உள்ளே வந்து அவளது பியானோவை பார்த்துக்கொண்டிருந்தது நினைவில் வர.. கண்கள் லேசாய் கலங்கியது. 
அவள் அறையிலும் அகத்தில் உரிமை என்னவோ அவனுக்குத்தான். கலங்கிய கண்களை சரிசெய்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.
யன்னல்கள் அனைத்தையும் திரைசீலை மூடியிருக்க ஒரே இருளாக இருந்தது. அவள் சுற்றிலும் பார்க்க.. அவன் பியானோவின் முன் அமர்ந்திருப்பது தெரிந்தது. பின்னாலிருந்து அவளுக்கு வேறெதுவும் தெரியவில்லை. அவள் பதிவேற்றும் வீடியோ போலவே பீத்தோவனின் படம் மட்டும் தெரியும்படி இருந்தது.
அவள் ‘டொக் டொக்’ என கதவை இருமுறை தட்டி அவள் வந்திருப்பதை உணர்த்த.. 
அவன் பியானோவை வாசிக்கலானான்.
‘என்ன தைரியம் இவனுக்கு என் பியானோவைத் தொடுகிறான்’ என கோபம் ஏறிக்கொண்டே சென்றது அவன்மீது. 
முதலில் ஒரு திரைசீலையை மட்டும் விலக்கி ஒளி புக அனுமதித்தாள். 
அவன் இடைவிடாது வாசிக்க.. அவனை மேலும் வாசிக்கவிடாது தடுக்க அவனருகில் வந்தவள் அவன் கையைப் பிடித்து தடுத்தாள்.
அவள் கையை விலக்கியபடி மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்து கண்ணடித்தான்… 
அவன் அதரங்களுக்கு அழகு சேர்த்த புன்னகயுடன்.
ஸ்ரீராம்..
அதிர்ச்சியில் அவனைவிட்டு மெல்ல பின்னால் நகர்ந்தபடியே சென்றவள் சுவரில் இடித்து அப்படியே சாய்ந்து நின்றிருந்தாள்.
கண்ணிமைக்காது அவனையே பார்த்திருந்தாள். இமைத்தால் எங்கு அவன் மறைந்துவிடுவானோ என்று. 
அவளை பார்த்தபடியே தொடர்ந்தான்.. 
வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே!!
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே!!
என அவளைப் பார்த்துக்கொண்டே பாட, இன்னும் இமைக்கவில்லை அவள்.. நீர் துளிக்கத் துவங்கியது விழிகளில்.
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல
வேண்டும் எனக்கும் பூந்தளிரே..
என அவளைக் காண.. இப்போது கண்ணில் துளிர்த்த நீர் கன்னத்தில் வழிந்திருந்தது.
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ!!
வாசிப்பதை நிறுத்தியவன் எழுந்து அவளை நோக்கி தன் இருகைகளையும் விரிக்க.. அவனையும் கையையும் மாறி மாறி பார்த்திருந்தாள்.
அழகாய் புன்னகைத்தபடி ‘வா’ என தலையசைக்க.. 
மின்னலென ஓடிவந்தவள் அடுத்தநொடி அவன் கைச்சிறைக்குள் இருந்தாள். அவளது வேகத்தில் அவனே இரண்டடி பின்னால் சென்றிருந்தான்.
காற்றும் காதலர்களுக்கு இடையில் புக அனுமதி வேண்டிக் காத்திருந்தது.
 
பேசுவான்..

Advertisement