Advertisement

வண்ணங்கள் தூவிய விடியலின் துவக்கத்தில் சென்னை திரும்பியிருந்தான் ஸ்ரீராம். 
அவனது பிளாட்டை அடைந்தவனின் விழிகள் இரண்டும் அனிச்சையாக எதிர் பிளாட்டில் அடைக்கலம். 
காட்சி கொடுக்க யாருமில்லை கதவைத் தவிர.
இன்று விசா இன்டெர்வியு.. அதற்கான சான்றிதழ்களை சரிபார்த்து எடுத்து வைத்தவன் ஒரு குளியல் போட்டு வந்தான். 
கோபி அவனது டீமை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்கு டீம் அவ்டிங் சென்றிருக்க.. ஸ்ரீராம் தனக்குமட்டும் எதுவும் சமைக்கத் தோன்றாது வெளியில் பார்த்துக்கொள்ள முடிவெடுத்து கிளம்பினான். 
அந்த கணம் அவனுக்குக் காட்சி கொடுத்தாள் நற்பவி நங்கை.
‘ஸ்ரீராம்…!!’
காதல் அவனைக் கண்டதும் காரிகையின் விழியிலும் வதனத்திலும் அவசரமாய் ஒரு ஆசுவாசம் வந்தமர்ந்தது.   
மரகதப்பச்சை வண்ணப் பட்டுடுத்தி.. முல்லைச்சரம் சூடி நின்றவள் முகத்தில் கொஞ்சமும் இவனுக்கான முறுவல் இல்லை. 
‘ஏனோ…??’ அறிந்து கொள்ள அடம் கொள்கிறது அவன் அகம்.
“பவி..!!!”
அவன் பதம் பாவையின் விழிகளில் துளிகள் சேர்க்க.. அவள் விழித்துளிகள் இவனிடம் திகைப்பை விதைத்தன. 
“ஸ்ரீராம் ஊரிலிருந்து வந்தாச்சா..??”  
இராமநாதன் அவ்விடம் வந்து சேர.. பிரியமின்றி பார்வையை வஞ்சியிடமிருந்து பிரித்தெடுத்து அவரிடம் வைத்தான்.  
ராமநாதனும் வெண்ணிற வேட்டி சட்டையில் தயாராகியிருக்க.. 
“ஏதும் பங்ஷனா சார்..?” பதில் தராது கேள்வியைத் தந்தது அவன் இதழ்கள். 
மனம் இன்னமும் மங்கையிடம் தான் அவள் கண்ணீருக்கான காரணம் தேடியது.
இராமநாதனின் பதிலில் இவனுக்கான இரண்டுமே இருக்க.. இதயம் இரும்பாகிட.. இதழ்கள் “கங்கிராட்ஸ் பவி..” என்றிசைக்க.. இன்டெர்வியுவிற்கு விடைபெற்றான்.
விடைபெற்றவன் விதைத்துச் சென்ற வெறுமை அவள் விழிகளில் இருக்க.. இரவு எட்டு மணிக்கு வீடு வந்தவனை வரவேற்றதும் அவள் வீட்டு வெறுமை தான்.
ஒரு சில மணித்துளிகளில் சண்முகம் வந்து விஷயம் உரைக்க.. யமஹாவை உதைத்துக் கிளப்பியது முதல், சிட்டி ஹாஸ்பிடல் வரை.. எல்லாமே வேகம் தான்.
ஹார்ட் அட்டாக்.. இராமநாதனுக்கு..
ஏனோ..? என்பது இவன் எண்ணத்தில் இல்லை.. 
‘பவி..!!!!!!!!!!!!!!’ சித்தமெங்கும் அவள் பிம்பச் சிதறல்கள் மட்டுமே..! 
அவள் உயிரே அவளுக்கு உயிர் கொடுத்தவர் தானே.. உடைந்து போயிருப்பாளோ..?  
மருத்துவமனையை அடைந்ததும் அகம் அவளை நோக்கி அலைபாய.. கிரிஜா மாமியும் அவளும் விழிகளில் விழ.. மாமி இவனை நோக்கி வந்தார். 
மாமியிடம் இருந்து வேண்டிய செய்தியை வாங்கியனுக்கு வேதனை ஆஃபராக வந்தது.
கிரிஜா மாமி விடைபெற்று கிளம்பியதும் நற்பவியின் அருகில் வந்தவன் அவளோடு அமர்ந்துகொண்டான். அவளோ அவனது அருகாமையைக்கூட உணராது இருந்தாள்.
அவள் தோற்றம் கண்டு தேற்ற அழைத்தான்.
“பவி..!!” 
அழைப்பிற்கு செவிசாய்க்கவில்லை அவள்.
வாய்மொழியில் கூறி பாரத்தை குறைக்க வாய்ப்பில்லை என்றறிந்து விழிவழியே கரைத்துக் கொண்டாளோ..??
ஆள் தாக்கிடும் கருவிழிகளில் கண்ணீர் காய்ந்த தடங்கள்.. கசங்கியது அவன் நெஞ்சம்.
அங்கிருக்க முடியவில்லை அவனால். எழுந்து கான்டீன் சென்றவன் இருவருக்கும் பிளாஸ்கில் காபி வாங்கி வர, இருந்த இடம் விட்டு அசைந்திருக்கவில்லை அவள்.. காபியை அவள்முன் நீட்ட அதையும் கவனித்தாளில்லை. 
அதற்குமேல் அவளை அப்படியே விடக்கூடாதென்று அவள் தோள்பற்றி 
“ப..விவிவிவி..” என உலுக்க.. மெல்ல நிமிர்ந்தாள். 
திரையிட்டிருந்த கண்ணீர்த்துளி வழிந்து அவனைத் தெளிவாய் காட்டியது.  
“இதை குடி..!” என நீட்டினான். 
அவள் மறுக்க, 
“உன் அப்பாக்கு நீ மட்டும் தான் இருக்க..”
அவன் முழுவதும் முடிக்கவில்லை.. அது அவள் உணர வேண்டிய ஒன்று..! உணரட்டும் என விட்டுவிட்டான். 
அவ்விடம் வந்த நர்ஸ் சில மருந்துகளை வாங்கிவருமாறு கூற.. 
“நீ இரு நான் வாங்கிட்டு வரேன்” என நற்பவியை அமர்த்தி அவனே வாங்கி வந்தான்.
இரவுப் பொழுதின் இறுதியில் இருவரும் இருக்க..
“நீ கொஞ்ச நேரம் தூங்கும்மா…!!” என 
மறுத்தாள் மங்கை.
வற்புறுத்தி அழைத்து வந்தவன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் அவளை உறங்கச்சொல்லி அவளுக்கு சற்று தொலைவில் ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டான்.
அவள் விழித்துக்கொண்டே இருக்க 
“தூங்க ட்ரை பண்ணுடா..” 
கனிவு மொழிகளில் கரைகிறது கன்னி மனம்.. இயலாமையில் கசிகிறது கண்கள். 
அவள் அருகில் வந்தமர்ந்தவன் தன் கைப்பேசியை எடுத்து பீத்தோவனின் காதலியின் இசையை ஒலிக்கவிட்டு 
“இதை கேட்டுப் பாரு.. கொஞ்சம் பெட்டரா பீல் ஆகும்..” என அவள் அருகில் வைக்க.. 
அவனை முறைத்து வைத்தவள் வேகமாய் அவன் கைபேசியை அணைத்து அவ்விடத்திலேயே வைத்துவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
‘எனக்கு மட்டும் தான் அந்த பீலிங்கோ…?’
ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு கண்மூடி அமர்ந்துவிட்டான். 
அவன் அருகாமை தந்த ஆறுதலில் மெல்ல கண்ணயர்ந்தாள். 
யாமம் முடியும் நேரத்தில் பல காட்சிகள் அவளுள் கிளைபரப்ப அதன் தாக்கம் தூக்கத்திலும் வெளிப்பட்டது. 
காதல்..!! 
பொக்கிஷம் தான்.. 
உள்ளத்தின் உள்ளே வரும் தருணத்தை விட உணரும் தருணம் தான் பொக்கிஷம்…!!
ஸ்ரீராமின் மீதான காதலை உணர்ந்த தருணத்தை எண்ணி ரசித்திருந்தவளுக்குள் இடிபோல் இறங்கியது அச்செய்தி.
“பவிம்மா வர்ற வெள்ளிக்கிழமை உறுதி பேச வர்றாங்கடா..” வாஞ்சையான வருடலுடன் தந்தை சொல்ல.. வெடித்துச் சிதறியது வஞ்சியவள் உள்ளம்.
அவளது காதலை அவனிடம் கூட இன்னும் வெளிப்படுத்தவில்லை.
அவன் மீதான காதலை உணரும் முன்னர் இதுபோல் எதாவது நடந்திருந்தால் தந்தைக்காக மறுக்காது ஏற்றுக்கொண்டிருப்பாள். அதன்பின் அம்முடிவை நோக்கி மட்டுமே அவள் வாழ்கை பயணித்திருக்கும். 
இப்போது அது நிச்சயம் முடியாதென்று மனம் தீர்க்கமாய் தெரிவிக்க.. அவனிடமே இதுகுறித்து வெளிப்படுத்திவிடும் எண்ணத்தில் அவளிருக்க.. ஊர் சென்றவன் திரும்பியபாடில்லை. 
திரும்பினான் வெள்ளியன்றே.
அவளுள் பூத்த காதல் பூக்களுடன் அவனுக்காகக் காத்திருக்க.. அதன் சுகந்தம் சுகித்திட வேண்டியவனே கசக்கிப் போய்விட்டான்.
‘ஹம்ம்ம்..!!’ வெறுமையின் வேர்கள் இவள் அங்கமெங்கும். 
‘அவன் போறான் பவி..’
‘போயிட்டு போறான் விடு..!’
‘உன்னை விட்டு போறான் பவி’
‘போகட்டும்..!!’
‘உன்னோட காதல்…??’
‘இருக்கட்டும்.. எனக்குள்ள மட்டும்..’
‘ப்ச்..’
மனிதனுக்கு இரு மனம் தானே..? இவளுள் இருக்கும் இரு மனங்களும் இப்படித்தான் பேசிக் கொண்டன.  
இவள் தந்தையிடம் வரும் சம்பந்தத்தை ஏற்க மறுக்க.. அவர் காரணம் கேட்க.. இவள் மௌனம் காக்க.. அவர் உறுதியாய் நிற்க.. சில மணித்துளிகளில் மாப்பிள்ளை வீட்டார் விஜயம் செய்ய.. அதன் பின் நிகழ்ந்தவை எல்லாம் தான் இவள் நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்தன. 
இவள் மௌனம்.. இவள் மொழி.. எல்லாம் அறிந்து தான் வருகை தந்தனர். ஆனால் உடன் வந்த உறவுகள் சில இவளது குறைக்கு நிறையாய் சீர் கேட்க.. இராமநாதனின் கோபம் கரை கண்டது. ருத்ர தாண்டவம் அங்கே அரங்கேறியது.
அவரிடம் உள்ளது மொத்தமும் அவளுக்குத் தான். அனைத்தையும் வாரிக் கொடுத்திருப்பார் அவள் வாக்குப்பட்டுப் போயிருந்தால். ஆனால் அவள் குறையை குறிப்பிட்டு அவர்கள் கேட்டதை அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
முதல் முறையாய் தந்தையின் இன்னொரு பக்கத்தை பார்த்தாள் இவள்.. மென்மையின் மறுபுறமும் மென்மையாய் இராது.
வன்மையின் சாயல் அதனிடம் உண்டு. 
முழுதாய் உணர்ந்தாள் இன்று.
துவங்கிய வேகத்தில் எல்லாம் முடிய.. “சாரிடாம்மா…!!” தழுதழுத்தது அவர் குரல்.
மகள்கள் அன்னையாய் மாறும் தருணம் அது.. இவளும் அன்னையாய் அவரைத் தேற்றினாள் தான். ஆனாலும் ஆறுதலில் ஆற மறுத்தது அவருக்கு.
மெல்ல.. மெல்ல.. அச்சம் சூழ்ந்தது. பவியைப் பற்றி.. அவள் துணை பற்றி.. அது தான் இழுத்து வந்து நிறுத்தியது அவரை மருத்துவமனைக்கு.  
செகண்ட் அட்டாக்.. இவள் இரண்டாம் முறையாய் உடைந்து போனாள் இன்றைய தினம்.
தன்னால் தான் அனைத்தும்.. தன்னைப் பற்றிய கவலை தான் தந்தையை இந்நிலைக்கு தள்ளிவிட்டதென்று நினைக்க அழுகை வெடித்துக்கொண்டு வெளிப்பட, கால்கள் தளர்ந்துபோய் கீழே அமர்ந்தழுதாள்.  
அன்னை தன்னை விட்டு பிரிந்தபோது கூட வாழ்க்கையின் மீதிருந்த பிடிப்பு போயிருக்கவில்லை.. தந்தை தன்னோடு இருந்ததினால் கடந்துவந்திருந்தாள்.
அவர் உடன் இல்லாத உலகத்தை எண்ணியும் பார்த்திட கனவு கூட துணை வரவில்லை. 
வேர்வைத்துளிகள் முகமெங்கிலும் பூக்க பதறி எழுந்தாள்.
அருகில் ஸ்ரீராமும் இல்லை. பரவியிருந்த இருளானது அச்சமூட்ட.. தனித்துவிடப்பட்ட உணர்வு ஓங்க.. தந்தைக்கு என்னானதோ என பதறியபடி கட்டிலிலிருந்து இறங்கியவள் கதவை திறந்துகொண்டு விரைந்தாள்.
வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த நிலையில் கண்மூடி தலையை சாய்த்திருந்தான் ஸ்ரீராம். 
அவள் அமைதியாய் கடக்க முற்பட  
“பவி எங்க போற..?” என்ற குரலில் திரும்ப.. இருக்கையில் இருந்து எழுந்திருந்தான் ஸ்ரீராம்.
‘அப்பாவை பார்க்க’ என சைகை செய்ய, அவளோடு இணைந்து சென்றான். 
ராமநாதனின் உடல்நிலை சற்று தேறியிருப்பதாய் மருத்துவர் தெரிவித்ததும் தான் இருவரிடமும் ஒரு நிம்மதி. 
வைகைறைப் பொழுதில் ஊர் திரும்பியிருந்த கோபி விடயம் அறிந்து மருத்துவமனை வந்திருந்தான். அவனை ராமநாதன் அருகில் இருக்கும்படி கூறிவிட்டு நற்பவியை அழைத்துக்கொண்டு அபார்ட்மெண்ட் வந்திருந்தான் ஸ்ரீராம்.
அவன் குளித்து தயாராகி அவளுக்காக காத்திருந்தான். அவள் வந்தபாடில்லை. அவன் சென்று காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க.. ஈரம் சொட்டிய கூந்தலோடு வந்து நின்றிடுந்தாள். 
“இன்னும் கிளம்பலையா நீ…?” 
‘ஐந்து நிமிடம்’ என விரல்களை காண்பித்து கண்களை சுருக்கியவள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். 
அவன் உள்ளே வராது கதவோரம் நின்றிருக்க.. உள்ளே வந்து அமருமாறு தெரிவித்தாள். 
“நான் இங்கயே வெயிட் பண்றேன் நீ பொறுமையா வா..” என்றுவிட்டான். 
தலையசைப்புடன் நகர்ந்தவள் தந்தைக்கான உடையை எடுத்துவைத்துவிட்டு, அவள் தயார் செய்த உணவை பேக் செய்துகொண்டிருந்தாள். பின் அவளது அறைக்குள் சென்றவள் கூந்தலை பின்னிக்கொண்டு பொட்டை நெற்றியில் ஒட்டியபடி திரும்ப.. திடுக்கிட்டாள். 
தன் தந்தை இல்லாத நேரத்தில் உள்ளே வருவதற்கே தயங்கி வெளியில் காத்திருந்த கண்ணியவான் இப்போது தன்னறைக்குள் நின்றிருக்கும் காரணமென்ன! என பெண்ணவள் சிந்தனை இருக்க.. ஸ்ரீராமின் பார்வை வேறெங்கோ இருந்தது. 
அவன் பார்வை சென்ற திசையில் பார்த்தவளுக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. 
அந்த அறையில் அவள் இருப்பது தெரியாது தான் ஸ்ரீராம் வந்திருந்தான். அவனே அறியாது கால்கள் தானாய் அழைத்து வந்திருந்தன அறைப்பக்கம். 
அவன் அவளுக்காக வெளியில் காத்திருந்தபோது திறந்திருந்த கதவின் வழியே தென்பட்டது ஒரு பியானோ. 
‘நற்பவிக்கு பியானோ வாசிக்க கூட தெரியுமா’ என பார்த்திருக்க.. அதன் மேலிருந்த பீத்தோவனின் படமும் அவன் கண்ணில் பட்டது. 
அதே படம்!! 
அவன் யூ டியூபில் பார்க்கும் வீடியோக்களில் தென்படும் அதே படம். அதை கண்டதும் கால்கள் தானாய் பியானோவின் அருகில் செல்ல அதை பார்த்தபடி நின்றிருந்தான்.
புரிந்துகொண்ட பாவையோ புன்னகையுடன் தனது ட்ரெஸ்ஸிங் டேபிளின் மேல் இரண்டு முறை தட்ட.. ‘டொக் டொக்’ என்ற ஒலியில் திரும்பினான். 
கைகளை குறுக்காய் கட்டிக்கொண்டு தலையை அழகாய் சாய்த்து ‘என்ன’ என புருவத்தை உயர்த்தினாள் நற்பவி.
“பீத்தோவன் காதலி..??” என அவன் புருவங்கள் முடிச்சிட வினவ 
ஆம் என கண்சிமிட்டி புன்னகைத்தாள்.
மருத்துவமனையில் ஸ்ரீராம் கைபேசியை நீட்டியபோது ‘என் இசை எனக்கேவா?’ என்றுதான் அவள் அணைத்து வைத்தது. 
அவன் முகத்தில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் பரவிக்கிடக்க.. அவன் அதரங்களில் ஒரு ரகசிய புன்னகை. 
பேசுவான்…..

Advertisement