Advertisement

இம்முறையும் பருவமழை பொய்த்துவிட, போதிய நீரின்றி பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகிவிட, கனத்த இதயத்தோடு சுவரை வெறித்தபடி பிரம்பு நாற்காலியில் வீற்றிருந்தார் சின்னசாமி. 
கந்துவட்டிக்கு பணம் வாங்கி படாத கஷ்டமெல்லாம் பட்டு பயிரிட்டால்.. ப்ச்..  அநியாய வட்டி வாங்குபவர் பரவாயில்லை பருவமழைக்கு. 
நம்பியோரை ஏமாற்றுவதில் மழையை மிஞ்ச ஆளில்லை.
விவசாயிகளை சோதித்துப் பார்ப்பதில் அத்தனை மகிழ்ச்சி அதற்கு.
தன் சொந்த நிலத்தில் போட்ட முதலீடெல்லாம் பயன் தராது நஷ்டத்தையே வாரி வழங்கிட நிலைகுலைந்து போய்விட்டார் சின்னசாமி.
“என்னங்க.. போன காரியம் என்னாச்சுங்க??” என்று அருகில் வந்தார் அன்னலட்சுமி.
சின்னசாமி பார்வையை விலக்காது பதிலின்றி அமர்ந்திருக்க.. கணவரின் பாவனையிலேயே பதிலையும் கண்டுகொண்டார் அன்னம்.
பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் மட்டுமே விவசாயிகளுக்கு உண்டு, பேரிடர் காலத்தில் அந்தத் தொகை மட்டும் கைவசம் வந்து சேர்வதில்லை. அவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொகை மூன்று ஆண்டுகளாய் இழுவையில் உள்ளது. இன்று எப்படியும் கிடைத்துவிடும் நம்பிக்கையில் சென்றிருந்தார். இன்றும் ஏமாற்றமே.
கணவரின் நிலை கண்டு அன்னத்தினுள் ஒரு நடுக்கம். நிலையானதொரு வாழ்க்கையை வாழமுடியாமல் இருப்பதில் அவருக்கும் வருத்தமே.. என்ன செய்ய இங்கு பலருக்கு போராட்டம் மட்டுமே வாழ்க்கையாய் அமைகிறது. 
இல்லத்தின் ஆணிவேரான பெண்கள் சிறிது துவண்டாலும் குடை சாய்ந்துவிடுமே வாழ்க்கைத் தேர். தன்னை நொடியில் மீட்டுக்கொண்டவர்
“ஏனுங்க இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படி விட்டத்தை பார்த்துட்டு உக்காந்திருக்கீங்க??” என 
“கடவுள் நம்மள ரொம்பவே சோதித்து பார்குறார் அன்னம்” என்றார் விரக்தியாய். 
கைவசம் இருந்த சேமிப்புகள் அனைத்தும் கரைந்திருக்க மகனின் படிப்பை தடையின்றி தொடரவைக்க வழிதெரியாது வருத்தம் கொண்டிருந்தனர்.
விவசாயம் கைகொடுக்காத நிலையில் சொந்த வயிற்றை நிரப்புவதை காட்டிலும் கால்நடைகளின் வயிற்றை நிரப்ப பாடுபட வேண்டியதாய் இருந்தது. இருவரும் வேலை பார்த்து வீட்டு செலவுகளை சமாளித்தாலும் மகனின் படிப்பு செலவுகளை சமாளிக்க முடியவில்லை. போதிய வருமானமின்றி நடுத்தர குடும்பத்தை ஓட்டமுடியவில்லை.
“நம்ம புள்ளைக்கு இந்த மாசம் பீஸ் கட்டணும் அன்னம்.. எங்கயும் ஏற்பாடு பண்ண முடியல அதுதான் என்ன பண்ணுறதுன்னு தெரியல” என பெருமூச்செறிய 
சற்றும் யோசிக்காது அவரது மாங்கல்யத்தை கழற்றி கணவரின் கைகளில் வைத்தார் அன்னம். கைகள் நடுங்க அதை பார்த்திருந்த சின்னசாமி
“என்ன காரியம் செய்யுற அன்னம்.. அதுவும் நம்ம கல்யாண நாள் அன்னைக்கு.. நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்.. பொண்டாட்டி புள்ளய வெச்சு காப்பாத்த முடியாத கையிலாகதவன்னு முடிவு பண்ணிட்டியா”
“என்னங்க பேசுறீங்க.. உங்களை பத்தி தெரியாதுங்களா எனக்கு.. வாக்கப்பட்டு பண்ணி வந்ததுல இருந்து நான் என்னிக்காச்சும் கண்ணை கசக்கிருப்பனுங்களா! ராணி மாறி வெச்சுருக்கீங்க என்னை. நமக்கு ஆயிரம் கஷ்டம் வந்தாலும் பரவாயில்லங்க நம்ம புள்ள நல்லா இருக்கோணுமுங்க. 
எனக்கு என் கழுத்துல இருக்குற மஞ்சள் கயிறும் உங்க கையாள வெச்சுவிடற குங்குமமும் போதும்ங்க. இதை வெச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.. நம்ம புள்ள படிப்புதான் முக்கியம் அதுக்கு எந்த தடையும் வந்திறக் கூடாது. நம்ம புள்ள இதை எனக்கு சீக்கிரம் மீட்டு கொடுப்பான்” என்றார் உறுதியான குரலில்.
அவர்களது உரையாடலை கேட்ட ஸ்ரீராம் கலங்கிய கண்களோடு சுவரை வெறித்துக் கொண்டிருந்தான். 
“கண்ணு இன்னும் எழுந்தரிக்கலயா” என்ற அன்னையின் குரலில் விழித்தான். 
அவனது பார்வை அவரது தாலிக்கொடியின் மேல் தான் முதலில் விழுந்தது.
சில நினைவுகள் காலம் கடந்தும் நீங்காதவை.. 
அன்று அவன் அன்னை சொன்ன சொல்லே அவனுள் ரீங்காரமிட.. அவர் உரைத்ததுபோலவே அவனது சம்பாத்தியத்தில் வாங்கியது தான் அன்னையின் தாலிக்கொடி. 
அவர்களது திருமண நாளின்போது அன்னையிடமிருந்து பிரிந்த ஒன்றை வருடங்கள் கடந்து மீண்டும் அந்நன்னாளிலேயே அவர்களுக்கு அளித்திருந்தான். கோவிலில் வைத்து தந்தையின் கையால் அன்னைக்கு அணிவித்தபோது அவன் அகம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. 
அவன் அந்நினைவுகளில் இருக்க.. 
“எங்கயோ போகணும்னு சொன்ன.. என்னேரத்திற்கு போகணும்? நீ சொல்லிட்டின்னு அப்பா காலங்காத்தால எழுந்து புறப்பட்டு கீழ உக்காந்திருக்காரு” என புன்னகைத்தார் அன்னம்.
“நீங்களும் புறப்படுங்கம்மா நானும் வந்தர்றேன்” என்றவன் குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.
காலை உணவை முடித்துக்கொண்டு மூவரும் சென்ற இடம் பத்திரப்பதிவு அலுவலகம்.
இங்கு எதற்காக..? என பெற்றோர் இருவரும் பார்த்திருக்க.. அடுத்து அவன் கூறிய செய்தியில் இருவரிடமும் அதிர்வலைகள்.
வீட்டை அவர்கள் மறுத்தும் கேட்காது அன்னலட்சுமியின் பெயரில் பதிவு செய்திருந்தான். இப்போதுதான் அவர்களுக்கே தெரிந்தது இடத்தை சின்னசாமியின் பெயரில் வாங்குவது.
வானில் ஆல்மழை.. அவர்களது விழிகளில் ஆனந்த மழை..! 
ரங்கராஜனும் வந்திருக்க இடத்தின் தற்போதைய உரிமையாளர்களும் வந்திருக்க பத்து ஏக்கர் நிலத்தை சின்னசாமியின் பெயரில் கிரயம் செய்யச்சென்றனர். 
அவர் மகனையே பார்த்தபடி நின்றிருந்தார். அவர் நினைவலைகள் அந்நாளை நினைவூட்டியது.
முன்பொரு காலத்தில் இந்த பத்து ஏர்க்கரும் அவர்களுடையதே.. பதினைந்து ஏக்கரில் பத்தை விற்று தான் ஸ்ரீராமை படிக்க வைத்திருந்தனர் சின்னசாமி அன்னலட்சுமி தம்பதியினர். மீதி ஐந்து ஏக்கர் பயன்படுத்தமுடியாத மேட்டுக்காடு.
நிலத்தை விற்கமுடிவு செய்துவிட்டு வந்த சின்னசாமி தன் நிலத்தரையில் படுத்திருந்தார். அவர் அருகில் வந்த அன்னம் அவரை வீட்டிற்கு அழைக்க, வர மறுத்துவிட்டார். 
“என்னங்க நீங்களே இப்படி உடைஞ்சு போய்ட்டா எப்படி?? எழுந்திரிங்க வீட்டுக்கு வாங்க இன்னும் எத்தனை நேரம் தான் இப்படியே இருப்பீங்க” என அவள் தோள் பற்றிட,
உயிர்ப்பில்லாத கண்களோடு மெல்ல நிமிர்ந்தவர் 
“என் அம்மா போனப்போ உண்டான அதே வலி இன்னைக்கும்.. என் நிலம் என்னைவிட்டு போகப்போவுதுனு தெரிஞ்சதும். இன்னைக்கு மட்டும்தான் என்கூட இருக்கப்போகுது இதைவிட்டு எங்கயும் வர மனசில்லை நீ போ அன்னம்” என கண்களை மூடிக்கொள்ள முந்தானையை வாயில்வைத்து அழுகையை கட்டுப்டுத்தியபடி அங்கிருந்து வந்தார் அன்னம்.
தாய் மண் தாயைப் போலத்தானே.. அதை விற்கும் நிலை வேதனை விளைத்தது அவர் நெஞ்சில்.
தன் நிலத்தை இன்னோருவர் உரிமைகொண்டாடும்போது ஒரு விவசாயியின் மனவேதனைகள் விவரிக்கமுடியா ஒன்று. பொன் விளையும் பூமியில் சிறு புல் பூண்டும் விளையாது போயினும் அதன் மீது கோபம் கொள்வதில்லை விவசாயி. சாமியை நம்புவதை விட பூமியை நம்பியே வாழும் குடிக்கு மண்ணில் விளையும் சிறு பயிரும் பிள்ளைகளே. 
ஸ்ரீராம் அவருக்கு அனைத்திற்குமேல். 
தன் பிள்ளைக்காக அவன் வாழ்வை நன்றாய் அமைத்துத்தருவதற்காக தன் தாயை அவர் கொடுத்துவிட்டார். அவனுக்காக என்ற ஒரே காரணத்தால் அவர் அதையும் தேற்றிக்கொண்டு மீண்டுவந்தார்.
அவன் மேற்படிப்பிற்கு வெளிநாடு சென்றபோதும் தடையேதும் சொல்லாது அவன் விருப்பத்திற்கே முன்னுரிமை அளித்தனர். 
தன் வாழ்வை செதுக்க இத்தனை செய்த பெற்றோருக்கு தான் செய்யவேண்டுவன யாது..? அவர்களிடம் இருந்து சென்றதனைத்தையும் மீட்பதோன்றே அவனது கனவாகிப்போனது!
அனைத்தையும் மீட்டும்விட்டான் இன்று. 
ஆண்டுகள் கடந்திருந்தும் கடவுளின் கிருபையால் அந்நிலத்தை அவர்கள் விற்க..  ஸ்ரீராமே வாங்கியும்விட்டான். விற்றபோது லட்சங்களில் இருந்த இடத்தின் மதிப்பு வாங்கும்போது கோடிகளுக்கு சென்றிருந்தது. 
கோபியே பலமுறை கேட்டுவிட்டான் வாங்கும் சம்பளத்தை என்னதான் செய்கிறாய் என.. ஒரு புன்னகையே ஸ்ரீராமிடம் இருந்து வரும். அந்த புன்னகைக்கு பதில் அவனது இந்தக் கனவே. 
இப்போது ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும் வந்ததுபோல் இருந்தது. பேங்க் பாலன்ஸ் துடைத்து வைத்ததுபோல் இருந்தது. அதை எண்ணிக் கவலையில்லை.. இப்போதைய காலநிலையில் கோடை மழையும் கொங்க மழையும் விவசாயத்தை செழுமைப்படுத்தியிருக்க தன் நிலம் தரும் லாபமே போதுமானது அவனுக்கு. அதற்குமேல் அவனிடம் வேறு சில திட்டங்களும் இருந்தன.
கையெழுத்திடும் நேரத்தில் சின்னசாமியின் கண்கள் ஸ்ரீராமை பார்த்த பார்வை.. அவனுள் ஆயிரம் அர்த்தத்தைக் கூறியது. 
தந்தை மகனுக்கு ஆற்றிய உதவியை மகன் தந்தைக்கு ஆற்றும் நேரம். வார்த்தைகள் மறைந்துபோய் உணர்வுகள் ஓயாது பேசிக்கொண்டிருந்தன.
வரும்வழியில் பேச்சுகளே இல்லை.. மௌனமே ஆட்சியாய் இருந்தது. இல்லம் வந்ததும் அவனே அதே உடைத்தும் இருந்தான் 
“ப்பா.. நம்ம நிலம் நம்மகிட்டயே..! சந்தோசமாங்ப்பா..” என வினவ அவனை பார்த்திருந்தவர் அருகில் அழைத்தார். 
அவன் வரவும் அணைத்துக்கொண்டார். அது உணர்த்தியது அவரது ஆனந்தத்தை. 
இதைபோல் ஒரு பரிசு அவருக்கு எவராலும் கொடுத்திட இயலாது. ஆயிரம் இடத்தை வாங்கிப்போட்டாலும் அவருக்கு இப்படி ஒரு மனநிறைவு ஏற்பட்டிருக்காது. 
கண்கலங்க பார்த்திருந்த அன்னம் இருவருக்கும் பால் பாயசம் செய்து எடுத்துவந்தார்.   
மதியத்திற்குமேல் மூவரும் கோவில் சென்று பூஜையை முடித்துவிட்டு அவர்களது நிலத்தில் சிறிதுநேரம் இருந்துவிட்டு வந்தனர். இதுநாள் வரை இல்லாத ஒரு பொலிவு பெற்றோரிடம் தென்படுவதை கவனித்துதான் இருந்தான். அவர்கள் மகிழ்ச்சிக்காக எத்தனை கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ளலாம் என இருந்தது அவனுக்கு.
பெற்றோர் இருவருக்கும் தனிமை கொடுத்து வந்தவன் மாடியில் அவனது அறையில் ஓய்வெடுத்திருக்க.. மந்தாரை மரத்திலிருந்து பாய்ந்துவந்த மந்திரக்காற்று தந்த குளுமையில் உறங்கிப்போனான்.
“டேய் மாடசாமி!! கன்னுக்குட்டிக்கு பில்லறுத்தாந்து போட்டயா?” என்று அன்னம் இங்கிருந்தே குரல் கொடுக்க 
“அதெல்லாம் அப்பளயாவே போட்டுட்டேனுங்கோவ்” என்று தொலைவிலிருந்து குரல் கொடுத்தான் அவன். 
ஸ்ரீராம் திடுக்கிட்டு விழித்துப்பார்க்க பொழுது போயிருந்தது. எழுந்து கீழே வந்தவன் தந்தையின் அருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.  
வெளியே வந்த அன்னலட்சுமி தனது கால்நடைகளை ஒவ்வொன்றாகப் பார்த்திருந்தார். 
அவர் தலை தட்டுப்படுவதைக் கண்டு தனது தலையைக் குனிந்து கூரிய கொம்புகளை நிலத்தில் முட்டவைத்து வணக்கம் வைத்தான் காளையன். அவன் அருகில் காங்கேயன். அவனும் தன் வாலை வேகமாய் அசைத்திருக்க.. அடுத்து அன்னலட்சுமியின் பார்வை பசுமாடுகளின் புறம்.
அவை அனைத்தும் மும்மரமாக வைக்கப்போரை வாயில் வைத்து மென்றிருக்க.. சில தினங்களுக்குமுன் கிடாரிக் கன்றை ஈன்றெடுத்த சரசுவை நோக்கினார்..
அவர் பார்ப்பதை அறிந்து அதுவும் காதை அசைத்து அம்மா.. என்று அழைக்க.. 
“ஏன்டா மாடசாமி நம்ம சரசுக்கு மொச்சைக் கொடி அறுத்தாந்து போட்டயா??”
“அதெல்லாம் அப்பளயாவே போட்டுட்டேனுங்கோ..” என்றபடி அவர் அருகில் வந்தான்.
“பொய் சொன்னையாக்கும் ஒரே போடா போட்டுருவேன் ராஸ்கோலு.. ஆருகிட்ட உன்ர வேலைத்தனத்தை எல்லாம் காட்டுற”
“அட அதைய மறந்துப்புட்டேனுங் போடலையாட்டம்” என காதை சொரிய 
“ஏது மறந்துபுட்டயா..? வாய் மாட்டும் கேளுங்க ஏழூருக்கு அடிக்கும்.. சரியான ஆகாவழி.. உருப்படியா ஒன்னத்தயும் செய்யுறதில்ல.. காரியத்துல கண்ணா இருக்கோணுமாக்கும்.. இல்லைனா கண்ணாமுழி ரெண்டையும் நோண்டி புடுவேன் ஜாக்குறத.. வெரசலா அறுத்தாந்து போடு”
“இதோ ரெண்டே நிமிசத்துல போறேனுங்.. போட்டுரேனுங்” என்று அவன் ஓட்டம் எடுத்தான்.
சரசு அன்னலட்சுமியை உரசிக்கொண்டு நின்றிருக்க அதன் தலையை நீவிவிட்டவர் 
“எம்புட்டு கொழுப்பு அந்தப் பயலுக்கு நாஞ்சொல்லியும் என்ர சரசுக்கு சாப்பாடு போடாம விட்டுருக்கான்.. வரட்டும் அவன்.. வாயில்லா ஜீவன்னா இளக்காரமா போயிருச்சா.. அதெங்க பேசப்போவுதுங்கற தைரியத்துல தானே அந்த கொல்லைல போனவன் கொடி அறுத்து போடாம ஏய்ச்சிருக்கான்” என்று கோமாதாவிடம் பேசிக்கொண்டிருக்க.. மாடசாமி வந்ததும் அவனிடம் இருந்து தானே மொச்சைக் கொடியை வாங்கி சரசுவுக்கு அளிக்க.. நாக்கை சுழற்றி உள்ளே தள்ளியது.
மாடசாமி அன்னையிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தான் ஸ்ரீராம். அன்னம் உள்ளே வந்ததும் அவரிடம் 
“அதெப்படிங்மா அவரு போடலைன்னு சொல்றீங்க..? ஒருவேளை அவரு போட்டிருந்து, அதை மாடும் சாப்பிட்டிருக்கலாம் தானே” என்றான்.
“அப்படி கேளுங் தம்பி” என மாடசாமி குரல்கொடுக்க.. அன்னம் முறைத்ததில்..
“மாட்டை நம்புறாங்க மனுஷனை நம்பமாடீறாங்க” என முனங்கியபடி வேலையைத் தொடர்ந்தான்.
மகனிடம் திரும்பிய அன்னம் “இல்ல கண்ணு அந்தக் கூறுகெட்டவன் தான் மறந்துட்டான். சரசு என்னைய பார்க்கும்போதே நான் கண்டுக்கிட்டேன். சாதாரணமா அப்படி பார்க்கமாட்டா அவ..” என அவரது புரிதலை காண்பித்தார்.
“ஆமப்பா உங்கம்மா வாயைத்திறந்து சொல்லாமயே மனசுல இருக்குறத எல்லாம் நல்லா புரிஞ்சுப்பா.. மலையடிவாரத்துல மாசக்கணக்கா உக்காந்து இந்த வரத்தை வாங்கிட்டு வந்திருக்கா..” பாரபட்சமின்றி பகிரங்கமாக வாரி வைத்தார் அன்னத்தை.
அவருக்கு ஒரு முறைப்பை பார்சல் செய்த அன்னம்.. 
“பேசறது எதுக்கு கண்ணு.. தகவல் சொல்றதுக்குத்தானே தவிர எல்லா விசயத்தையும் பேசித்தான் தெரிஞ்சுக்கணும்னு இல்ல. பேசாமலே பல விசயத்த புரிஞ்சுக்கலாம். எல்லாத்துக்கும் நம்ம மனசுதான் காரணம். மனசை படிக்கறதுக்கு பாஷை எதுக்கு கண்ணு..? பாசம் ஒன்னு போதாதா..?” என அன்னம் கூற, ஸ்ரீராமும் ஒப்புக்கொண்டு தலையசைத்தான்.
“வாய் பேச முடியலைன்னா என்ன இப்போ..? சரசு என்னைய புரிஞ்சுக்கிது நான் அதையே புரிஞ்சுகுறேன் அது போதும் தானே.. இது மாட்டுக்கு மட்டும் சொல்லல கண்ணு மனுஷனுக்கும் தான் சொல்லுறேன்” என்றவர்  
“குழந்தை எதுக்கு அழுகுது எதுக்கு சிரிக்குதுனு ஒரு அம்மாவுக்கு தெரியாதா..? அது பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அது என்ன நினைக்குதுன்னு ஒரு அம்மாவால புரிஞ்சுக்க முடியாதா..? அதேபோல ஒரு அம்மா தன் பிள்ளைமேல உள்ள பாசத்தை வாயார சொல்லிக்கிட்டு இருக்கமாட்டா.. செயல்ல உணர்த்துவா. 
எல்லா உறவுகளுக்கும் இது பொருந்தும் கண்ணு. நான் உன்ன நேசிக்குறேன்னு அன்னாடம் சொல்லுறதைவிட அதை உணர்த்தனும்.. உணரவைக்கணும்..” என மகனிடம் சொன்னவர் தன் ஆத்துக்காரரையும் சேர்த்து ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றுகொண்டார். 
“மழைக்கு கூட பள்ளிக்கூடத்து பக்கம் ஒதுங்குனதில்ல உங்கம்மா.. இன்னைக்கு பாரு தத்துவமா பேசிட்டு போறா.. ஆனா அவ சொல்றதும் நியாயம் தான்” என துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு சின்னசாமியும் தண்ணீர் பாய்ச்ச கிளம்பினார்.
அசையாது அமர்ந்திருந்த ஸ்ரீராமின் அக ஆழியில் மட்டும் சத்தமின்றி அலைகள் ஆர்ப்பரித்தது.
பேசுவான்…. 

Advertisement