Advertisement

தென்னங் காற்றும்.. ஜன்னல் சீட்டும்..                               
மினி பஸ்சும்.. சொந்த ஊர்ப் பயணமும்.. 
யாக்கையின் ஒவ்வொரு அணுவும் ‘ஐயம் ஹாப்பி!!!!!’ என அரற்றிக் கொண்டிருக்க.. சிங்காரச் சென்னையிலிருந்து சின்னாம்பாளையத்தில் வந்திறங்கினான் ஸ்ரீராம். 
மண் வாசம் மனதை நிறைத்துச் செல்ல.. மலர்ச்சியுடன் வீட்டை நோக்கி நடை போட்டான். 
திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருபோரை எல்லாம் உற்று உற்று பார்த்தபடி இருந்த தொண்ணூறைத் தொட்ட பெரியவர் ஒருவர் அவனைக் கண்டதும், 
“அடடே சின்னச்சாமி மவனா! வா சாமி.. நல்லா இருக்கியா!!” என நலம் விசாரிக்க
“நான் நல்லா இருக்கேனுங் அப்பாரு..” என அவர் அருகில் சென்று கைப்பற்றிக்கொண்டான். 
கொங்குத் தமிழ் வாசம் அவன் வாக்கினில்.. 
“நீங்க எப்படி இருக்கீங்க?” என்றதும் 
“இருக்கேஞ்சாமி எமன் எப்போ எருமைல வருவான்னு எதிர்பார்த்துட்டு இருக்கேன்..”  எனச் சொல்லி கலகலவென சிரித்தவர்
“அது சரி உனக்கு இப்போதான் ஊர்ப்பக்கம் வரத் தெரிஞ்சுதாக்கும்..” என குறைபட்டுக்கொண்டார்.
“அப்படி எல்லாம் இல்லீங் அப்பாரு.. ஆபிஸ்ல கொஞ்சம் வேலை அதிகமுங் அதான் இடையில வரமுடியலீங்..” 
“சரித்தான்! நம்ம புள்ளைக எல்லாம் வேலை தேடி இங்கிருந்து பட்டணத்துக்கு போகுதுக.. கை நிறைய சம்பாதிக்குதுக.. அப்பறம் அப்பனும் ஆத்தாளும் என்ன ஆனாகனு கூட திரும்பிப் பாக்க மாட்டிதுக. நீயாச்சும் கொஞ்ச வருசத்துல திரும்பி வந்து நம்ம நிலபுலன்களை பாருய்யா.. உன்ர அப்பன் ஆத்தாள கூட வெச்சு கஞ்சி ஊத்து சாமி..” என்ற அவரது ஒவ்வொரு வார்த்தைகளிலும் வேதனையின் சாயல். அது அவனையும் எட்டித் தான் இருந்தது.
“ஸ்ரீராமு.. எப்போ கண்ணு வந்த..?” என அவனது தூரத்து சொந்தம் அத்தை ஒருவர் வர, பெரியவரிடம் விடைபெற்றவன் “இப்போதாங் அத்தை” என அத்தையோடு பேசியபடி நடந்தான்.
“என்ன சொல்லாம கொள்ளாம திடுதிப்புனா வந்த??  நீ வர்றது உன்ர அம்மாளுக்கு தெரிஞ்சிருந்தா இன்னேரம் வெடக்கோழி அடிச்சு ஜம்முன்னு கொழம்பு வெச்சிருக்கும்..” 
புன்னகையோடு “அம்மாக்கு நான் வர்றது தெரியும்ங் அத்த” என்று பேசிக்கொண்டு வர, அவரது தெரு வரவும் அத்தை விடைபெற்றுக்கொண்டார்.
சில நிமிட நடையில் தெரிந்தவர்களிடமெல்லாம் தலையசைப்பை உதிர்த்தபடி அவனது வீட்டை எட்டியிருந்தான். கம்பிவேலியை ஒட்டிய கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் விழிகள் இரண்டும் நாத்திசையிலும் சுழல, 
“மாடசாமி…! டேய் மாடசாமி.. கத்துறது காதுல விழலையோ!! சீமைப்பில்லு அறுத்துட்டு வரச் சொன்னா ஒரேடியா எங்க போய்த் தொலைஞ்சானோ..? கெரகம் புடிச்சவன்” எனப் புலம்பியவாறே அன்னலட்சுமி கால்நடைகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருக்க.. 
“நான் இங்க தானுங் இருக்குறேன்.. பில்லு அறுத்து வந்து போட்டாச்சுங்.. களை பறிக்க ஆளுங்கள கூட்டியார அய்யா தானுங் போகச் சொன்னாரு இப்போ போகட்டுமுங்களா?? இருக்கட்டுமுங்களா??” என தூரத்தில் ஒரு மரத்தின் மறைவிலிருந்து வெளிப்பட்டான் மாடசாமி.
“என்ரா அதான் அய்யா சொல்லிட்டாரல்லோ இன்னும் கிளம்பாம இங்கென்ன வேலை?? சட்டுபுட்டுனு போய் களை பறிக்கற வேலையை பாருங்க” என அன்னம் குரல் கொடுக்க.. தலையை சொரிந்தபடி விரைந்து ஓடினான்.
சின்னச்சாமி இதை எல்லாம் கேட்டுக்கொண்டே பாத்தி செதுக்கிக் கொண்டிருந்தார்.   
“ஏனுங்க.. இந்த காளையனை புடிச்சு அக்கட்டால கட்டுறது தானுங்க.. என்ர கூடவே ஒரசிகிட்டு வாரான்” என அன்னம் இப்போது ஆத்துகாரரிடம் கூற
“என்ர பேச்சை எங்க கேக்குறான் அவன்.. நீ நல்லா பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும் வெச்சு வெச்சு அவன் கூட உன்ர பின்னால தான் சுத்துறான்.. நீயே புடிச்சு கட்டு” என்றார் அவர் வேலை செய்தபடியே.
அவரை முறைத்துவிட்டு எதோ கூற வாயெடுத்த அன்னம் தன் மகன் நிற்பது கண்டு “கண்ணு என்னேரம் வந்த??” என்று அவன் அருகில் விரைந்து வர, 
“இப்பதாங்மா” என அவன் பதில் மொழிய.. கை கால்களை அலம்பிக்கொண்டு சின்னச்சாமியும் வந்தார்.
அவர் மகனிடம் பேச வாயெடுக்க..
“ஏனுங்க.. புள்ளய வெளிய நிக்கவெச்சே பேச்சு கொடுத்துட்டு இருக்கீங்க.. அவனே பிரயாணத்துல அலுத்துப்போய் வந்துருப்பான்.. அவன் செத்த ஓய்வெடுக்கட்டும்” என அன்னம் கூற
நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே! என அவர் பார்த்திருந்தார்.
“நீ உள்ளார வா கண்ணு.. வெந்தண்ணி வெச்சுத் தரேன் மொதல்ல தண்ணி ஊத்திட்டுவா” என்றார் அன்னம் மகனிடம்.
அவன் உள்ளே சென்றுவிட, அவனை சின்னச்சாமி பின்தொடர.. இடையில் புகுந்து தடுத்த அன்னலட்சுமி,
 “நீங்க எங்க வேகு வேகுன்னு உள்ளார போறீங்க?? மொதல்ல காளையன புடிச்சு கட்டிட்டு வாங்க” என்றுவிட்டு அவர் மகன் பின்னால் செல்ல.. தோளில் கிடந்த துண்டை ஒரு உதறு உதறியவர் வெளியே சென்றார். 
ஸ்ரீராம் குளித்து வருவதற்குள் தடபுடலாக விருந்து சமைத்தவர் அவனை அழைத்து தலை வாழை இலை போட்டு பரிமாற, அருகில் சின்னச்சாமி வெறும் இலையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். 
அவரை துணைவியார் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை.. கழட்டிவிட்டதாய்த் தான் தெரிந்தது. 
அன்னம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அன்னம் அளிக்காதவரை என்ன செய்ய என்றபடி பார்த்திருந்தவர், அவரே அவர் இலைக்கு சாதம் வைக்கச் செல்ல
“ஏனுங்க புள்ளைக்கும் கொஞ்சம் வெய்யுங்க நீங்களே ஒட்டா முடிச்சிருவீங்க போல” என குரல் கொடுத்தார் மனைவி எனும் மாணிக்கம்.
உடனே அவர் மகனது இலையில் அனைத்தையும் கொட்டிவிட 
“வெவஸ்த கெட்ட மனுஷன்” என வாய்க்குள் முனங்கியவர்  “ஏனுங்க இப்படித்தான் மூஞ்சில அடிச்சமாறி ஒரேமுட்டா கொட்டுவீங்களா?? புள்ளைக்கு கண்ணு பட்டுறப் போவுது”
“அதனால என்ன அன்னம் இங்க யாரு கண்ணு படப்போவுது” 
“ஹ்ம்ம்.. உங்க கண்ணுதான்” என்றதும் அதிர்வில் தோளில் கிடந்த துண்டை வாயில் வைத்துவிட்டார் சின்னச்சாமி.
“ஏது என்ர கண்ணு படுமா..? என்ர புள்ளமேல எனக்கில்லாத பாசமா உனக்கு.. நீ நகரு” என அன்னத்திடம் இருந்து அன்னத்தை பெற்று மகன் இலையில் தள்ள..
“கொண்டாங்க இப்படி.. எம்புள்ளைக்கு நான்தான் வைப்பேன். நீங்க சட்டு புட்டுன்னு சாப்டுட்டு இடத்தை காலி செய்யுங்க” என்று பாத்திரத்தை அவரிடமிருந்து திரும்ப பெற்றுக்கொண்டார். 
ஸ்ரீராமிற்குத் தெரியும் இப்படித்தான் இருவரும் போட்டிபோட்டு அவனை கவனிப்பார்கள் என. எதுவும் பேசாது அவன் உணவை உண்பதில் மட்டுமே கவனமாய் இருந்தான். பல மாதங்களுக்குப் பிறகு அன்னையின் கைப்பக்குவதில் திருப்தியாய் உண்டெழுந்தான்.
பின் அவர்களது தோப்பு துறவு என அனைத்தையும் பார்வையிட்டு வரவே நேரம் மதியத்தை கடந்திருந்தது. மதிய உணவிற்கு அன்னம் அடித்தே விட்டார் வெடக்கோழியை. எப்படியும் மகன் இங்கிருந்து செல்லும்போது நான்கு கிலோ ஏறித்தான் செல்லவென்றும் என்ற தீவிரம் அவருக்கு.
மதிய உணவை முடித்தபின் ரங்கராஜனை சந்தித்தவன் நாளைய பத்திர கிரயத்துக்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பினான்.  
சின்னசாமியிடமும் அன்னலட்சுமியிடமும்  நாளை முக்கியமான ஓரிடத்திற்கு செல்ல வேண்டும் தாயாராக இருக்கும்படி மட்டுமே தெரிவித்திருந்தான். 
எங்கு..? எதற்கு..? என்ற கேள்வி மனதில் இருந்தாலும் மகனிடம் தெரிவித்துக் கொள்ளவில்லை. 
அவன் அழைத்து மறுக்கவா போகிறார்கள்.. அவனே சொல்லும்வரை காத்திருக்க முடிவு செய்து அவரவர் வேலைகளை கவனிக்கலானார்கள்.
நேரம் நில்லாது சென்றுகொண்டிருந்தது.
இரவு உணவை முடித்துக்கொண்டு மாடியில் அவனது அறையில் அமர்ந்திருந்தான் ஸ்ரீராம். 
“கண்ணு.. இந்தா பாலை குடிச்சிட்டு தூங்கு அப்போதான் நல்லா தூக்கம் வரும்” என்று மகனுக்கு பால் ஆத்திக் கொடுத்தார் அன்னம். அவரோடு சின்னசாமியும் நின்றிருந்தார்.
அவன் கையில் வாங்கிப் பருக  
“ஏன் கண்ணு! அங்கேயும் இதுமாதிரி சுத்தமான பால் கிடைக்குமா??” என கேள்வியாய் வினவ
“ஏன் கிடைக்கலைன்னா நீ உன்ர மாட்டை புடிச்சிட்டு போய் பால் கறந்து ஊத்திட்டு வருவயாக்கும்” என்றார் சின்னசாமி.
அன்னம் முறைக்க..
“பின்ன என்ன நாயம் பேசிகிட்டு இருக்க.. அவனென்ன இன்னிக்கு நேத்தா அங்க போனான்.. இப்போ போய் இதெல்லாம் கேட்டுட்டு இருந்தீன்னா.. உன்ர மகனுக்கு குடுத்தயே எனக்கெங்க பாலு??”
“உங்களுக்கு வேணும்னா சமயக்கட்டு பக்கம் போக வேண்டியது தானே?” 
‘இப்போ வருமா வராதா?’ என்னும் பாவனையில் அவர் நின்றிருக்க.. அன்னம் முறைத்தபடி  கீழே செல்ல, ஸ்ரீராம் பார்வையாளனாய் புன்னகையுடன் பார்த்திருந்தான்.
“இப்படி ஏதாவது செய்யலைன்னா உங்கம்மா என்னய சுத்தமா மறந்துருவா.. நீ தூங்குப்பா காலைல எங்கயோ போகணும்னு சொன்னயே” என்றுவிட்டு கீழே சென்றுகொண்டார் சின்னசாமி.
தன் ஐந்து ஏக்கர் மேட்டுக்காட்டை பண்படுத்தி அதை தென்னந்தோப்பாக்கி அதில் ஏழு சென்ட் இடத்தில் காம்பௌண்ட் சுவரிட்டு.. மூன்று படுக்கையறை, ஒரு விஸ்தாரமான ஹால், டைனிங் ரூம், ஸ்டோர் ரூம், கிட்சன், பூஜா ரூம் உடனான வீட்டை கட்டியிருந்தான் ஸ்ரீராம். ஆம் அவனது சம்பாத்தியத்தில் கட்டியதுதான் அவ்வில்லம்.
எப்போதும் மாடி அறை ஸ்ரீராமின் பயன்பாட்டிற்கு. அவன் இப்போதும் அங்கே ஓய்வெடுத்திருக்க.. கீழ் அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் சின்னச்சாமி. அவருக்கு பால் எடுத்துச் சென்றார் அன்னம்.
“இந்தாங்க.. தொணதொணத்துகிட்டு இருக்கமா பாலை குடிச்சிட்டு சட்டுனு தூங்குங்க” என
“ஏது அதிகாரம் எல்லாம் கொடி கட்டி பறக்குது..? மகன் வந்ததும் புருஷன மனுசனா கூட மதிக்க மாட்டிங்குற அன்னம்” 
“என்னங்க பேச்சு இது.. அவன் இன்னிக்குத்தான் வந்திருக்கான் பக்கத்துல இருந்து பார்த்துக்க விடாம ஏட்டிக்கு போட்டியாவே பண்ணிட்டு இருக்கீங்க.. காலை காட்டுங்க” என்றவர் எண்ணெய் தொட்டு அவர் பாதங்களை இதமாய் பிடித்துவிட, அதரங்களில் அரும்பிய புன்னகையோடு பார்த்திருந்தார் மனையாளை.
ஸ்ரீராம்.. ஜன்னலின் வழி தெரிந்த நிலவையே பார்த்திருந்தான். 
நாளை அவன் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாய் இருக்கப்போகிறது. காலத்தின் கோலத்தால் அவன் இழந்ததை அவனிடமே திருப்பியளிக்க போகிறது காலம்.
அது குறித்த சிந்தனையில் இருந்தவனுக்கு அவள் குறித்த சிந்தனையே இல்லை.
ஆனால் இப்போது..? இரவு வந்தால் நிலவு வரவேண்டுமே..!
இரவில் அவனது நிலா அவள். 
பகலிலும் அவள் நிலா தான்.. ஒளியவனின் ஒளிக்கதிர்களில் அவள் மறைந்துபோவாள்.. இவன் மறந்துபோவான்.
கைபேசியை எடுத்தவன் பீத்தோவனின் காதலியைத் தேடினான். அவளிசையை நாடினான்.
செவிக்குள் அவளது இசை நுழைந்தாலே எதோ உணர்வு உள்ளத்தில் வெளிப்படும். 
அவள் அகம் மகிழ்ந்து வாசிக்கும்போது கேட்போரின் உள்ளத்திலும் உவகை ஊற்றுகள் எழும். அவள் சோகத்தில் இசைத்திருந்தால் கேட்போரை கண்ணீர் கடலில் தள்ளிவிடும்.  
இன்று அவள் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்திருக்கக் கூடும்.. அது அவள் பதிவேற்றியிருந்த வீடியோவில் தெரிய, என்றும்போல் இன்றும் அவள் இசையில் தன்னை தொலைத்திருந்தான் ஸ்ரீராம். 
நிலையில்லா மனதை ஒரு நிலையில் நிறுத்தி நிம்மதியான நித்திரையை அவனுக்குப் பரிசளித்திருந்தாள்.

Advertisement