Advertisement

நதியோடு நாள்களுக்கென்ன பந்தயமோ..? நில்லாது நிகழ்காலத்தை கடந்தகாலமாக்கியபடி சென்று கொண்டிருந்தது.  
கதிரவன் பூமியில் பரப்பிய தன் செங்கதிர்களை திரும்பப் பெற்றுக்கொள்ள ஆயத்தமான நேரம்.. கடற்கரையில் மணல்வெளியில் அமர்ந்திருந்தாள் நற்பவி நங்கை.
ஆழியின் அலைகளைப்போல் அவள் அகமும் அமைதியற்று  ஆர்ப்பரித்தது. 
மனம் சமீபத்திய நிகழ்வுகளையே சுற்றிவந்தது. அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் நிற்பவன் தான் அவன் நினைவுகளுக்குப் பின் நிற்பவனும்.
அலை நுரைகள் கரை தொட்டுத் தொட்டு திரும்ப.. இவள் மனமும் கடந்த காலம் தொட்டது.
ஸ்ரீராம்…!! 
எந்த கணம் முதலோ இவள் நெஞ்சில் நெருக்கமாய்.. புது வரவாய்.. உறவாய் அவன் வந்துவிட்டிருந்தான்.
அவன் அன்பும் அக்கறையும் பாவையினுள் பாதை போட.. ஆரவாரமின்றி வந்து அமர்ந்திட்டிட்டான் அகத்தில். 
‘ஏனோ..? எப்படியோ..?’
‘இதன் பெயர் என்னவோ..?’
‘அவனுக்கும் இது போல் இருக்குமோ…?’
‘இப்போதெல்லாம் அவன் மட்டுமே உன் நினைவில் நிற்கிறான்.. நடக்கிறான்.. நர்த்தனம் செய்கிறான்.. உன்னையே மறந்து நிற்கிறாய் நீ..?’ – குற்றம் சாட்டியது மனம்.
‘ஆம்..!!’ எவ்விதம் எதிர்ப்பும் இன்றி ஒப்புக்கொண்டாள்.
‘அது சரியா…?’
சரியோ.. தவறோ.. விவாதம் செய்யவும் விடை சொல்லவும் விருப்பவில்லை வஞ்சியவளுக்கு.
அவளது ஸ்கெட்ச் புக்கை எடுத்துக்கொண்டு கார்டனுக்கு வந்தவள், செடிகளுக்கு நடுவில் அமைக்கப்பெற்றிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி வரையத்துவங்கினாள். 
சிறிது நேரம் கடந்திருக்க.. ஓவியம் முடிந்திருக்க.. அதை மூடி எடுத்து அவள் அருகில் வைத்தவள் அங்கு விளையாடும் குழந்தைகளை ரசிக்கத்துவங்கினாள். 
எத்தனை மகிழ்ச்சி அவர்களிடத்து.. தன் இளமைக்காலம் இப்படி இருந்திருக்கவில்லையே என்ற வருத்தம் அவளுள். 
உடனிருப்போர் காட்டிய ஒதுக்கமா இல்லை அவளாக ஒதுங்கிக்கொண்டாளா என்று இப்போதும் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான நேரங்கள் தனிமையில் தான் கழிந்திருந்தது என்பதை மட்டும் உறுதியாய் தெரிவிப்பாள்.
நண்பரை சந்திக்கச் சென்றிருந்த ராமநாதன் அபார்ட்மெண்ட் திரும்பவும், அவரோடிணைந்து தங்களது பிளாட்டிற்கு சென்றுவிட்டாள் நற்பவி.  சிறிது நேரம் கடந்தபின் தான் நினைவு வந்தது தன் ஸ்கெட்ச் புக்கை கார்டனிலேயே விட்டுவிட்டு வந்தது.
அவள் தாமதிக்காது விரைந்து வந்து பார்த்தபோது தவறவிட்ட இடத்தில அது இருந்திருக்கவில்லை.. 
மாறாக ஸ்ரீராமின் கைகளில்.. 
அதை அவனிடம் இருந்து வாங்கிவிடும் எண்ணத்தில் அவனை நோக்கி விரைந்து நடந்தாள்.
கிரிஜா மாமி அவ்வழி வருவது தெரிந்ததும் உடனே அங்கிருந்த தூணின் அருகில் மறைவாக நின்றுகொண்டாள், இந்நேரத்தில் அவர்கள் இருவரையும் அங்கு பார்த்து அவர் எதாவது நினைக்கக்கூடும் என அவள் எண்ணியதால்.
ஸ்ரீராமை பார்த்த கிரிஜா மாமி அவனோடு பேசிக்கொண்டிருக்க.. தன் கூர்மையான டிடெக்ட்டிவ் விழிகள் கொண்டு அவன் கையிலிருந்ததை கவனித்துவிட்டார். 
“ஸ்ரீராமா என்னதிது..?” 
“நீங்களே பாருங்க” என அவரிடம் காண்பித்தான். அதை வாங்கியவர் அதிலிருந்த பக்கங்களை புரட்டினார்.
ஸ்ரீராமின் பார்வையும் அதில் இருக்க.. மறைவிலிருந்த நற்பவிக்கு மெல்லிய பதற்றம்.
“என்னதிது எதோ குழந்தை கிறுக்கி வைத்ததுபோல இருக்கே..!!” மாமியின் கலைக் கண்ணில் அது அப்படித்தான் விழுந்து தொலைத்தது.
‘வாட்ட்….??? கிறுக்கலா..?? மாமி..!!!!!!!!!!!!’ நங்கையின் மனம் மௌனமாய் சண்டைக்கு சென்றது மாமியிடம்.
“இது ஒரு விதமான ஓவியம் மாமி..” கொஞ்சம் ரசனையுடன் அவன் சொல்ல..
“என்ன ஓவியமோ போ எனக்கு கிறுக்கலாதான் தெரியுறது” மாமி சொல்ல.. அவன் அதரங்களில் ஒரு சின்ன சிரிப்பு. 
அதைக்கண்டதும் மறைவில் இருந்தவளிடம் வெளிப்பட்டது முறைப்பு.
“ஆமா இதை யாரு வரைஞ்சது..?” என்று அவர் வினவ
“கீழ வரைந்தவங்க பேரு இருக்கு பாருங்க” என
அவர் கண்டுபிடிப்பதுபோல் தெரியவில்லை.
“நற்பவி” என்றான் அவனே.
ஸ்ரீராமின் நற்பவி நங்கையினுள் நறுந்தேன் பாய்ச்சியது. உள்ளமெல்லாம் தித்திப்பு..!!
“ஓ அந்த ஊமை பொண்ணா??” சட்டென அவளுக்கு அடையாளம் கொடுத்திருந்தார். 
அதைக் கொண்டவள் மனதில் முளைத்து தைத்தது முள்.
அதை பெரிதுபடுத்தாது அவனது பதில் என்னவாய் இருக்கும் என பார்த்திருந்தாள்.. அவன் மௌனமாய் நின்றிருந்தான்.
‘என்ன சொல்லப் போகிறான்…?’
‘என்ன சொல்வான்.. ஆம் என்பான்..’.
காரணம் தெரியாது கண்கள் கலங்கலாயிற்று..
இதெல்லாம் அவளை பாதிக்க அவள் அனுமதிப்பதில்லை.. அடுத்தவர் வன்சொல் மதிப்பதுமில்லை.. அனுமதிப்பதுமில்லை.
ஆனால் இன்று மட்டும் என்னவோ..?
“என்ன ஸ்ரீராமா அந்த ஊமை பொண்ணான்னு கேட்டேன்..?” என்றார் மாமி அவன் பதிலளிக்காதது கண்டு. 
“நற்பவி ராமநாதன்.. பி டென் பிளாட்ல இருக்காங்களே மாமி அவங்க” என்றான் அவள் பெயருக்கு சற்று அழுத்தம் கொடுத்து.
இவள் விழிகளிலும் இதழ்களிலும் அவன் சொல்லில் சிறு புன்னகை. 
“அவங்க பெயர் தான் மாமி அவங்க முதல் அடையாளம். நீங்க அடையாளப்படுத்துனது அவங்க அடையாளம் இல்ல. இன்னோருத்தரோட அடையாளத்தை நாம உருவாக்கக்கூடாது.. நமக்கு அந்த உரிமை இல்லை மாமி” என்றான்.
பொன்மஞ்சள் விளக்குகளின் ஒளி அவன் மீது பட்டுதெறிக்க.. தென்றல் காற்றில் அவன் முன்னுச்சி முடிகள் களைந்தாட அவனை இமைக்காது பார்த்திருந்தாள் நற்பவி. 
மாமிக்குப் புரிந்துபோனது தன் தவறு. 
அவர் அவளிடம் கண்ட குறையை குறிப்பிடவில்லை.. ஆனாலும் சட்டென அடையாளம் சொல்ல அப்படி வந்துவிட்டது அவருக்கு.
“மன்னிச்சுடுடா ஸ்ரீராமா.. நீ சொன்னது வாஸ்தவம் தான். பல நேரங்கள்ல பெரியவாளே யோசிக்காம தப்பு பண்ணிடறா” என ஒப்புக்கொண்டார்.
“என்கிட்ட மன்னிப்பெல்லாம் எதுக்கு மாமி நீங்களும் என் அம்மா மாதிரி தானே! நீங்க போய் மாமாவை பாருங்க.. நான் வரேன்” என கிளம்ப
“இதை நற்பவிகிட்ட நீயே கொடுத்திடு.. மறந்து வெச்சுண்டு போய்ட்டாளா இருக்கும்” என அவரது தவறை திருத்தி அதை அவனிடமே அளித்துவிட்டுச் சென்றார்.
நற்பவி வேகமாய் அவன் பார்வையில் படாதவாறு அங்கிருந்து வந்து அவளது பிளாட்டிற்குள் புகுந்துகொண்டாள்.
“என்னமா நோட் கிடைக்கலையா..?” என ராமநாதன் கேட்க விழித்தவள் ‘இல்லை’ என்று தலையசைத்துவிட்டு அவள் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
அழுகையும் மகிழ்ச்சியும் ஒருசேர வர கண்களில் கண்ணீர் வடிய.. இதழ்களோ விரிந்து மலர்ந்திருந்தது.
கிரிஜா மாமியின் அந்த ஒரு சொல்லே அவளுள் ரீங்காரமிட்டது. 
கடந்து வந்த பாதை முழுதும் இதுபோன்ற அடையாளங்களே அவளுக்கு. அதை உடைத்தெறிந்து வாழ்க்கையில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள போராட, போராட்டமே வாழ்க்கையாய் உள்ளது.
உலகமே அவள் மீதோறு அடையாளத்தை திணிக்க இதுவல்ல அவள் அடையாளம் என்றானே அவன்..?  அந்நொடி எப்படி உணர்ந்தாள் என்று அவள் மொழியில் சொல்ல வார்த்தையில்லை..
அவளுக்கு ஏட்பட்ட வலி கிரிஜா மாமியின் வார்த்தைகளால் வந்த வலியல்ல.. 
இதுவரை அவன் விழிகளில் அவள் கண்டிடாத ஒன்றை இன்று அவன் விழிகளிலும் கண்டுவிட நேர்த்துவிடுமோ என்று எண்ணியதால் உண்டான வலி.  
அவனிடமும் அவளுக்கான பரிதாப பார்வையோ பேச்சுகளோ கிடைத்துவிடுமோ என்று எண்ணித்தான் கலங்கியிருந்தாள். 
அவள் கொண்ட அந்த ஒரு நிமிட வலி இதுவரை உணர்த்தப்படாத.. அவள் உணரப்படாத விசயத்தை எல்லாம் உணர்ந்திட, உணர்ந்துகொண்டாள் அவனுக்கும் பிறருக்குமான வேறுபாட்டை.  
அவள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு வார்த்தையில் பதில் கிடைக்க.. அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. 
எழுந்து சென்று கண்ணாடியின் முன் நின்றாள். மனம் எதை தெரிவித்ததோ அவள் கண்களும் அதையே தெரிவித்தது, மீட்டப்படாத வீணையாய் இருந்த அவள் உணர்வுகளை அவன் என்றோ மீட்டிவிட்டான் என. 
காதலா..? எனக்கா..? அவன் மீதா..?
கடலை நோக்கி திரும்பிய அலைகளிடம் நூறாவது முறையாக கேட்டுவிட்டாள். அதுவும் ஆம் என்று திரும்பி வந்து அவள் பாதம் தொட்டு முத்தமிட்டுச் சென்றது.
தன்னை எண்ணி வியப்பாய் அமர்ந்திருந்தாள் அப்போதும் இப்போதும்.
அன்றைய நாளின் தொடர்ச்சியை எண்ணிப்பார்த்தாள்.
அவள் சென்று வெகு நேரம் கழித்தே அவளது பிளாட்டின் காலிங் பெல் ஒலித்தது. ராமநாதன் சென்று கதவைத் திறந்திருந்தார். 
வந்திருப்பது யாரென்று அறிந்தும் அவள் வெளியே வரவில்லை. அவன் முன் சென்று நிற்க புதிதாய் ஒரு தயக்கம். 
ஸ்ரீராம் தான் வந்திருந்தான். அவளது ஸ்கெட்ச் புக்கை ராமநாதனிடம் அளித்தவன் அவரோடு பேசிக்கொண்டிருந்தான். 
‘போலாமா வேண்டாமா’ என அவள் யோசித்துக்கொண்டே இருக்க, அவன் கிளம்பச்செல்லும்போது மெல்ல அவள் அறையிலிருந்து எட்டிப்பார்த்தாள். 
அவன் ஒரு விசிட்டிங் கார்டை ராமநாதனிடம் கொடுக்க.. என்னவென்று புரியாது பார்த்திருந்தாள் நற்பவி. 
அப்போது அவன் திரும்புவான் என எதிர்பார்க்கவில்லை.. 
அவன் நொடியில் அவள்புறம் திரும்பிவிட, உள்ளேயும் செல்ல முடியாது வெளியிலும் வர முடியாது முழித்துக் கொண்டிருந்தாள். 
சிறு புன்னகையுடன் “நான் வரேன் அங்கிள்” என்று அவன் கிளம்பிட, ராமநாதன் விடைகொடுத்தார்.
அவன் சென்றதும் தன் தந்தையிடம் என்ன விஷயமென்று விசாரிக்க 
“உன்னோட நோட்டு அந்த தம்பி கைக்கு கிடைச்சிருக்கு அதை கொடுக்க வந்திருக்காரு பவிம்மா” என்றவர் அந்த விசிட்டிங் கார்டை அவளிடம் அளித்து
“இந்த இடத்துல எதோ ஓவிய போட்டி நடக்குதாம் உன்ன கலந்துக்க சொல்லிட்டு போறாரு என்னனு பாரு.. விருப்பம் இருந்தா கலந்துக்க பவிம்மா” என்றுவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார். 
அந்த கார்டை பார்த்தாள் அதில் ஒரு ஆர்ட் கேலரியின் அட்ரஸ் இருந்தது. 
மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த ஆர்ட் காலரிக்கு செல்லத் தயாரானாள். 
உடன் வருவதாக ராமநாதன் கூற மறுத்தவள் தானே பார்த்துக்கொள்வதாய் தெரிவித்து நகர்ந்தாள்.
ராமநாதனும் அவர் பணியாற்றும் வங்கிக்கு கிளம்பிச்சென்றார். இன்னும் சில மாதங்களில் ஒய்வு பெற்றுவிடுவார், அதுவரை அவரது பணியை விடுப்பு எடுக்காது தொடரட்டும் என்று நினைத்தாள். அதற்குமேல் தனது வேலைகளை தானே பார்த்துக்கொள்ளவேண்டும் யாரையும் எதிர்பார்க்கக்கூடாது என்று நினைப்பவள் அதனால் புறப்பட்டுவிட்டாள். 
அவளை பின்தொடர்ந்தபடி ஸ்ரீராம் வருவது தெரிந்தது. 
‘இவர் எங்கே இங்கே..? எதாவது ஆபிஸ் வொர்க்…??’
அவள் அருகில் வந்தவன் 
“இந்த ரூட் வேண்டாம் என்ன பாலோ பண்ணிக்கோ” என்றுவிட்டு அவளுக்கு முன்னாள் சென்றுவிட்டான்.
என்ன சொல்கிறான் என புரியாத போதிலும் அவனை பின்தொடர்ந்தாள். 
அவள் வருகிறாளா என பார்த்தபடியே வண்டியின் வேகத்தை கூட்டவும் குறைக்கவும் சென்றுகொண்டிருந்தான். அவனை சோதித்து பார்க்கவே இருபதை தாண்டாது வந்துகொண்டிருந்தாள். 
இருவரும் ஆர்ட் கேலரியை வந்தடைய எந்த இடம் என நிமிர்ந்து நோக்கினாள் நற்பவி.
அவளது பெயரை பதிவு செய்ய சென்றபோது அங்கிருந்த பதாதையில் என்ன விதமான போட்டி என்று பார்த்தவள் அடுத்து கீழே பார்க்க.. ரெஜிஸ்டரேஷனுக்கான நாள் நேற்றோடு முடிவடைந்ததாய் இருந்தது. முன்பே பதிவு செய்தோருக்கு இன்று போட்டியென இருந்தது கண்டு திடுக்கிட்டாள். 
அதிர்ச்சியாய் அவனை பார்க்க.. அவன் கைபேசியில் எதோ நோண்டியபடி கூலாக நின்றிருந்தான். 
அவன் கையை தட்டி அங்கு பார்க்குமாறு கண்களாய் காண்பிக்க.. அதை படித்தவன் மீண்டும் கைப்பேசிக்குள் புக, அவள் காதிலிருந்து புகை வராத குறை. 
“உன் பேரை ரெஜிஸ்டர் பண்ணியாச்சு” என்றபடி நகர்ந்தான். 
‘இது எப்போடா..?’ எனும் பாவனையில் அவனை பின்தொடர்ந்தாள். 
பதினைந்து நிமிடங்கள் இருந்தது போட்டி துவங்க. இருவரும் மரத்தடியில் காத்திருக்க.. அவன் அன்னைக்கு அழைத்தவன் அவரோடு பேசிக்கொண்டிருந்தான்.
அவன் புன்னகை முகமாய் பேசிக்கொண்டிருக்க.. அவனையே கண்ணெடுக்காது பார்த்திருந்தாள் நற்பவி. 
அவளுக்கும் அவள் அன்னை நினைவு வந்தது. அவர் தவறி பத்து வருடங்களாகிறது. அந்த குறை தெரியாது தந்தை வளர்த்தியிருந்தாலும் இன்று எனோ மனம் அன்னையின் நினைவுகளில் வாட்டம் கொள்ள அது முகத்தினில் பிரதிபலிக்க.. 
அவளைக் கண்டவன் “அப்பறம் கூப்பிடறேன் மா ” என்று அழைப்பை துண்டித்துவிட்டு அவள் அருகில் வந்தான்.
“டைம் ஆச்சு உள்ள போலாம்” என.. அவனுடன் உள்ளே நடந்தாள்.
“என்ன காம்பெடிஷன்னு தெரியும் தானே” என
அவள் ஆம் என்று தலையசைத்தாள். 
“நீ ட்ரை பண்ணினா நிச்சயம் வின் பண்ணலாம்” என்றதும் அவனை கேள்வியாய் நோக்கினாள். 
“என்ன முழிக்கற.. வின் பண்ணுவ தானே??” என 
‘அதை எப்படி உறுதியாய் சொல்ல முடியும்..? எனக்கே தெரியாது’ 
“முதல்ல நீ வின் பண்ணுவேன்னு உனக்கு அந்த நம்பிக்கை வரணும்.. அடுத்து உன்னமாதிரியே உன் படைப்புகளும் தனித்துவமா இருக்கணும். சாதாரணமா இருந்தா உனக்கும் மத்தவங்களுக்கு என்ன வித்தியாசம் இருக்கும்?” என்றான். 
தலையை ஆட்டிக்கொண்டே வந்தவள் உன்னைப்போல் தனித்துவமாய் என்ற வார்த்தையில் அவன் முகம் காண..
அதரங்களில் அரும்பிய புன்னகையுடன்  “ஆல் தி பெஸ்ட்” என நீண்டிருந்தது அவன் கரம்.
அதை மெல்ல பற்றி குலுக்கியவள் அவனை திரும்பி பார்த்தபடியே உள்ளே சென்றுகொண்டாள்.
அது ஒரு அனமோர்பிக் ஆர்ட் காம்படீஷன். போட்டியாளர்கள் என இருபத்தைந்துபேர் அவர்களுக்கான இடத்தில் தயாராயிருக்க போட்டி துவங்கியிருந்தது.
இதுபோல் போட்டியிலெல்லாம் இதுவரை கலந்து கொண்டிருந்ததில்லை நற்பவி. அவளிடம் ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அவளுக்காக அவன் எடுத்துக்கொண்ட முயற்சிக்காக மட்டுமே கலந்துகொள்ள நினைத்தாள். 
அவனது வார்த்தைகளே ரீங்காரமிட்டன அவளுள். 
“நீங்க இன்னும் ஸ்டார்ட் பண்ணலயா?? டைம் இஸ் ரன்னிங்” என்றொருவர் கூறவும் வரையத்துவங்கினாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் போட்டி முடிந்திருக்க.. ஒரு பெரிய ஹாலில் அனைவரும் குழுமியிருந்தனர். வெற்றியாளரை அறிவிக்க தயாராகிக் கொண்டிருந்தனர். 
நற்பவி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் யாரோ வந்தமர.. நிமிர்ந்து நோக்கினாள். 
நோக்கியவள் பார்வை அங்கிருந்தவனை விட்டு விலக மறுத்தது. 
அவன் அப்போதே கிளம்பி அலுவலகம் சென்றிருப்பான் என எண்ணினாள், இங்கு காத்திருப்பான் என நினைத்தும் பார்க்கவில்லை.
அவள் புறம் திரும்பிய ஸ்ரீராம் ‘என்ன’ என்று புருவம் உயர்த்த.. ‘ஒன்றுமில்லை’ என தலையசைத்தாள். 
‘அப்போ அங்க பாரு’ என மேடையின் புறம் கண்களால் காண்பித்தான். புன்னகைத்த இதழ்களை அடக்கிக்கொண்டு திரும்பினாள்.
அதற்குமேல் அவர்களை காக்கவைக்காது மைக் பிடித்தார் ஒருவர். மூன்றாவது வெற்றியாளரை அறிவிக்க.. கரகோஷம் எழுந்தது. 
அவர் வரைந்த படத்தை முதலில் திரையில் காண்பித்தனர். கிறுக்கல் போல் தான் பார்வையாளர்களுக்கு தென்பட்டது. பின் அந்த படத்தை விரித்து வைத்து அதன் நடுவில் ஒரு சிலிண்டரிக்கல் மிரரை வைக்க அந்த மிரரில் பிரதிபலித்தது அனமோர்பிக் ஆர்ட்  எனப்படும் வகையிலான ஓவியம். இயற்கையை பாதுகாக்கும் விதமாய் பூமியை கையில் தங்கியிருப்பதுபோல் இருந்தது.  
ஸ்ரீராம் அவள்புரம் பார்க்க.. கவலையின்றி கைதட்டிக் கொண்டிருந்தாள்.
“வெற்றி முக்கியமில்லை பார்ட்டிசிபேசன் தான் முக்கியம்” என்றான். ஆமாம் என தலையசைத்துவிட்டு மேடையை நோக்கினாள் நற்பவி.
அடுத்து இரண்டாவது வெற்றியாளரையும் அறிவிக்க.. அவரது படம் இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலத்தை குறிப்பிட்டிருந்தது.
“தோல்விதான் வெற்றிக்கு முதல்படி” என்றான் ஸ்ரீராம் இப்போது.. அவள் அதற்கும் தலையசைக்க.. அவளையே பார்த்திருந்தான். 
தன்னை படிக்க முயல்கிறான் என புரிந்தவளோ, 
‘என்னைப் பார்க்காம கொஞ்சம் அங்க மேடையைப் பார்க்கலாம்..’ சன்ன சிரிப்பை அவளிதழ்கள் உதிர்க்க.. அவள் கண்களும் விரல்களும் அவனிடம் பேச..
விளையாட்டாய் முறைத்தான்.
“தி வின்னர் ஒப் தி ஈவென்ட் ஈஸ்” என்று அறிவிக்கப்போக.. இருவரது பார்வையும் மேடைக்கு திரும்பியது.
“வின்னர் அனௌன்ஸ் பண்றதுக்கு முன்னாடி அந்த ஓவியத்தை முதலில் பார்த்துடுவோம்” என்றார் மைக் பிடித்தவர்.
திரையில் ஒருவருடைய முகம் போல் ஒரு உருவம் காண்பிக்கப்பட்டது.
சில கணங்கள்.. ஸ்ரீராமின் ஒவ்வொரு அணுவிலும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தான்.
அவனை அல்லவா வரைந்து வைத்திருக்கிறாள் இந்தப் பெண்..? 
“தி வின்னர் ஈஸ்… மிஸ் நற்பவி நங்கை.. ப்ளீஸ் கம் டு தி ஸ்டேஜ் ” என்று அழைத்தனர். 
“இவங்களுக்கு ஏன் முதல் பரிசுனா.. இவங்க வரைந்த ஓவியத்தை ஒரு மணி நேரத்திற்குள்ளாக வரையவே முடியாதுனு நம்ம ஜட்ஜஸ் சாலஞ் பண்ணுறாங்க.. இப்போதான் தெரியுது அது அவங்களுக்கு ரொம்ப முக்கியமான ஒருத்தரோட முகம்னு” என மைக் பிடித்தவர் ஸ்ரீராமை பார்த்துக்கொண்டே கூற.. நற்பவி தான் நெளிந்தபடி நின்றிருந்தாள். 
மெல்ல நிமிர்ந்து ஸ்ரீராமை பார்க்க.. அவன் முகத்தில் சிறிதும் சலனமில்லை.
‘ஏன் வரைந்தேன் என நினைப்பானோ..?’
‘இல்லை ஏன் வரைந்தாய் என என்னிடம் கேட்பானோ..?’
‘சத்தியமாய் அவனை வரைய நான் நினைக்கவில்லை.. விரலும் பென்சிலும் அவனை வரைந்து வைத்தால் நான் என்ன செய்ய..?’ 
நியாயம் தானே அவள் கேட்பதும்..?
சில விஷயங்கள் நடப்பது நம் கையில் இல்லை.. சில விஷயங்கள் நம் கையில் மட்டுமே..! அவளுக்கு அப்படித்தான் போல.
அவளுக்கான பரிசாக பத்தாயிரம் ருபாயை அளிக்க.. அதை பெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினர். 
நற்பவிக்கு ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியாது இருந்தாள். ஸ்ரீராம் ஒரு வாழ்த்து கூட தெரிவித்திருக்கவில்லை அங்கிருந்து கிளம்பி அவனது அலுவலகத்திற்கு சென்றிருந்தான். அவளும் பள்ளிக்கு வந்திருந்தாள்.
பள்ளி முடிந்திருக்க பிளாட்டிற்கு செல்ல மனதே இல்லாமல் கடற்கரைக்கு வந்து தனிமையில் அமர்ந்திருந்தாள். தனிமையில் அவள் மனதின் ரகசிய அறைகள் திறந்துகொண்டதில் நாழிகைகள் நகர்ந்ததை அறியவில்லை நங்கை. 
சித்தம் முழுதும் சிந்தனை வயப்பட்டிருக்க அவளது செங்காந்தள் விரல்கள் தானாய் மணற்பரப்பில் கோலமிட்டுக் கொண்டிருந்தது. 
எதேர்ச்சியாய் திரும்பியவள் ‘நற்பவி ஸ்ரீராம்’ என்று எழுதியிருப்பதை கண்டு விழிகளை விரிக்க.. அவர்களது பெயரை அழித்துவிடாது கடலலையும் ஒதுங்கி செல்ல.. இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள.. காதல் கண்கட்டியிருந்தது.
இருள் பரவத் துவங்கியிருக்க.. திடீரென நினைவு வந்தவளாய் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். 
பல மணி நேரமாய் இங்கு இருப்பதை உணர்ந்து தந்தைக்கு தகவல் சொல்ல கைபேசியை எடுக்க.. அது அணைந்திருந்தது. 
தன் கைப்பையை எடுத்துக்கொண்டு எழுந்தவள் சுற்றலிலும் கவனிக்க.. தனிமை தேடி வெகு தொலைவு வந்திருந்தது தெரிந்தது. 
அவளுக்கும் பின்னால் சிறிது தூரத்தில் இருவர் அவளை கூர்ந்து கவனிப்பது தெரிய, நடையின் வேகத்தை கூட்டினாள். அப்போதே அவள் கைப்பையில் இருந்து அதை எடுத்துக்கொண்டாள்.
அவர்கள் பின்தொடர ஆரம்பிக்க.. இதுவரை இருந்த இதம் போய் பயம் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது. 
நடையின் வேகம் நொடிக்கு நொடி கூடிக்கொண்டே செல்ல இப்போது ஓட்டமாய் மாறியிருந்தது… அவர்கள் நெருங்கியிருக்க.. புடவை ஓடவிடாது தடுக்க வேகமாய் தன் கையிலிருந்த ஸ்பிரேவை அவர்களது கண்களில் அடித்துவிட்டு திரும்பி பார்த்தபடியே ஓடிவந்தவள் எதிரே வந்தவன் மீது மோதி விழச்சென்றாள்.
தாங்கிப்பிடித்திருந்தது ஒரு வலிய கரம். 
அவள் இடையில் ஒரு கையும் அவள் தோளில் ஒரு கையுமாய் அழுந்த பற்றியிருக்க.. அவள் இதயத்தின் ஓசை அவளுக்கே ஹை டெசிபலில் கேட்பதுபோல் இருந்தது.
மருள விழித்தபடி நிமிர, ஸ்ரீராமின் கைகளில் இருப்பதை கண்டு தான் சுவாசமே சீராக வந்தது.
கீழே விழுந்த குடிமகன்கள் சுதாரித்து எழ அங்கு ஸ்ரீராமையும் கோபியையும் கண்டு வந்தவழியே ஓட்டமெடுத்தனர்.
கோபி அவள் கையிலிருந்த பெப்பர் ஸ்பிரேவை பார்த்தவன் அவள் கைப்பையை வாங்கிப் பார்க்க.. அதனுள் ஸெல்ப் டிபென்ஸ் அலாரம், மேஸ் ஸ்ப்ரே, டேக்ட்டிகள் பென் க்னைஃப் போன்ற பல உமன் சேப்டி டிவைஸ்கள் இடம்பெற்றிருந்தன. 
இதெல்லாம் இருப்பதினால் தனிமையில் தைரியமாய் சுற்றிக்கொண்டிருப்பதா என கோபம் அவனுக்கு.
“இங்க என்ன பண்ற பவி?? இங்க இருக்கேன்னு ஒரு மெசஜ் அனுப்பியிருக்கலாம் நீ.. அங்க அங்கிள் உன்னை காணாம எவ்வளவு டென்ஷனா இருக்காரு நீ கடற்கரைல காத்துவாங்கிட்டு இருக்க.. அதுவும் தனியா இவ்வளவு தூரம் தள்ளி வந்திருக்க.. அவனுக உன்னை பாலோ பண்ணிட்டு வரானுக நாங்க வரலைனா என்ன ஆகுறது..? உங்கிட்ட இத எதிர்பார்க்கல பவி” என கோபி தான் பேசிக்கொண்டிருந்தான். 
அவள் தலை குனிந்து நின்றிருக்க.. அவளிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை ஸ்ரீராம். 
முதலில் ராமநாதனுக்கு அழைத்த ஸ்ரீராம்
“சார் நற்பவி எங்க கூடத்தான் இருகாங்க.. நல்லா இருக்காங்க நீங்க கவலைப்படாதீங்க.. அங்கதான் வரோம்..” என வைத்துவிட்டு கோபியை நற்பவியின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பச்சொல்ல அவனும் கிளம்பியிருந்தான். 
நற்பவி தலை குனிந்தபடி நின்றிருக்க.. 
“அறிவிருக்கா உனக்கு…?” என்றான் ஸ்ரீராம் அடக்கப்பட்ட கோபத்தில்.  
கோபி பேசும்போதே அப்போதா இப்போதா என விழவிருந்த கண்ணீர் இப்போது வழிந்தோட..
“ப்ச்..!!”
வண்டியை உதைத்து உறுமவிட.. அவன் வெம்மை அடக்கும் பொருட்டு வேகமாய் ஏறி அமர்ந்தாள்.
அவள் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு வர, அவன் அடிக்கடி சைட் மிரரை பார்ப்பது தெரிந்தது.
பார்வையை திருப்பிக்கொண்டவள் கடந்துபோகும் சாலையை பார்த்தபடி வந்தாள். 
சாலையில் சுற்றிக்கொண்டிருந்த தெருநாய் ஒன்று அவளைத் தெரிந்த நாய் போல் உரக்க குறைத்தபடி பின்னால் துரத்தி வந்தது.
‘ஐயோ..!!’ பயந்தவள் சற்று முன்னாள் நகர்ந்து அவன் வயிற்றை இறுக பிடித்துக்கொண்டு அவன் முதுகில் முகம் புதைத்துக்கொண்டாள். 
அவன் வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தியிருக்க.. சில நொடிகளில் சத்தம் குறைந்திருந்தது அவள் பிடி மட்டும் தளரவில்லை.
அபார்ட்மெண்டின் அருகில் வண்டியை நிறுத்தியவன்,
“இன்னும் மாறவே இல்லையா நீ..?” என்றதும் மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்
அவள் கையை எடுத்துவிட்டு 
“அபார்ட்மெண்ட் வந்தாச்சு இப்படியே வரப்போறயா” என்றதும் விலகி அமர்ந்துகொண்டாள்.
பின் உள்ளே வண்டியை செலுத்தியதும் 
“என்ன பவிம்மா இப்படி பண்ணிட்ட..?” உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை இப்படியாய் தந்தை சொல்ல..
பொறுப்பற்று இருந்ததை எண்ணி குற்றவுணர்வில் கண்கலங்கினாள்.
ஸ்ரீராம் அவளை பார்த்தபடியே 
“அங்கிள் அவங்க வண்டி ரிப்பேர் ஆயிடுச்சு.. போன்ல சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு. அதான் உங்களுக்கு தகவல் சொல்ல முடியாம போயிருக்கும். நாங்க போகும்போதே எதிர்க்க வந்துட்டு தான் இருந்தாங்க. 
ஹெவி ட்ராபிக் அதான் நற்பவிய டிரைவ் பண்ண வேண்டாம்னு அவங்க வண்டிய கோபி எடுத்துட்டு வந்தான். அவங்கள நான் கூட்டிட்டு வந்தேன்” என நீண்டதொரு விளக்கம் தர 
“அப்படியா பவிம்மா” என்றார் மகளிடம்
நற்பவி ஸ்ரீராமை  நிமிர்ந்து பார்த்தாள். தன் தந்தைக்கு நடந்தது தெரிய வேண்டாம் என மாற்றிச் சொல்கிறான் என புரிந்து கொண்டு ஆம் என்று தலையசைத்தாள்.
“சரி நீ உள்ள போடா..” என அவளை அனுப்பியவர்  
கோபி அருகில் வந்து “ரொம்ப நன்றிப்பா” என,
“அங்கிள் இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம் விடுங்க” என்ற கோபி பிளாட்டிற்கு கிளம்பினான். 
ஸ்ரீராமை பார்க்க.. 
“நன்றி எல்லாம் சொல்லாதீங்க” என்றுவிட்டான் முன்கூட்டியே. அதில் லேசாக புன்னகைத்தவர் 
“நன்றி சொல்லலப்பா ஆனா நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என்றார் அவன் கையை அழுந்த பற்றியபடி. 
தான் கூறியதை அவர் முழுதாய் ஏற்றுக்கொண்டதுபோல் தெரியவில்லை ஸ்ரீராமிற்கு. அவரிடம் மேலும் பேச்சுக் கொடுக்காது
“அதெல்லாம் எதுவும் இல்ல அங்கிள் நீங்க உள்ள போங்க” என்றான்.
அவன் தோளை தட்டியவர் ஒரு பெருமூச்சை வெளியேற்றியபடி உள்ளே சென்றார். 
உள்ளே செல்லும் அவரையே பார்த்தபடி நின்றிருக்க.. இரண்டு லக்கேஜுகளுடன் கோபி லிப்ட்டிலிருந்து வெளியேறினான்.
“இந்தா எடுத்துட்டு கிளம்பு” என்று அதை அவன் அருகே வைத்தவன் “இந்த பவிய தேடி உன்கூட அலைஞ்சதுல என் இடுப்பு எலும்பு இடுப்புல இருந்து இறங்குனதுமாதிரி இருக்கு” என இடுப்பை வளைத்து முறித்துவிட்டு திரும்பி சென்றான்.
“ஆமா அப்படியே சிம்ரன் இடுப்பு” என முனங்கியபடி லக்கேஜை தூக்கிக்கொண்டு கேட்டின் அருகே வந்தான் ஸ்ரீராம்.
பணிக்கு திரும்பியிருந்த சண்முகம் “ஸ்ரீராம் தம்பி நம்மூருக்கா கிளம்பிடீங்க?” என்றார். 
“ஆமாங்க” என 
“இந்த மாசத்துல மழை நல்லா தட்டி எடுக்கும் பார்த்து சூதானமா போயிட்டு வாங்க” என்றவர் அவனது ஒரு லக்கேஜை தூக்கிக்கொண்டு உடன் வந்தார்.
“உங்களையும் கூப்டுட்டே இருக்கேன் நீங்க தான் வரவே மாட்டிறீங்க..” குறை பட்டுக் கொண்டான்.
“அடுத்த முறை நீங்க போகும்போது நிச்சயம் வரேன் தம்பி” என புன்னகைக்க
“இதையே தான் எல்லா தடவையும் சொல்றீங்க” என்றான்.
அதற்குள் பேருந்துவர அவன் விடைபெற்று அதில் ஏறிக்கொண்டான். 
‘ஊர் மண்ணுல கால வெச்சா என் உசுரு என்ர மண்ணுலயே போயிடாதான்னு இருக்கும் தம்பி.. அப்பறம்  என்னால எப்படி திரும்ப அங்கிருந்து இங்க வர முடியும்..? வரவே முடியாது’ என நினைத்தபடி நகரும் பேருந்தையே நகராது பார்த்தபடி நின்றிருந்தார் சண்முகம். 
பேசுவான்…

Advertisement