Advertisement

யாயும் ஞாயும் யாராகி யரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
யார் யாராகவோ இருந்து எவ்வித உறவுமுறையுமின்றி காதலால் மட்டுமே கலந்த இரு நெஞ்சங்களின் இனிய கலப்பு. 
அன்பு வயப்பட்ட காதலர்கள் இதயத்தால் ஒன்றுபட்டு திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்து இன்றோடு மூன்று மாதங்களாயிற்று.
லாஸ் ஏஞ்சல்ஸ்…
கொஞ்சம்.. கொஞ்சமாய்.. இருள் பூசிக் கொண்டிருந்த வானத்தை இரு விழிகளில் வைத்தபடி நங்கை.. நற்பவி நங்கை.
அவளருகில்.. அவளைத் தனக்குள் வைத்துக் கொள்ள ஆவல் கொண்ட அகத்தை அடக்கி தன் விழிகளில் மட்டுமாய் வைத்தபடி ஸ்ரீராம்…
நங்கையின் முகமெங்கும் சிந்தனைக் கோடுகள்.. அங்கும் இங்குமாய். அதில் சில தவிப்பு. அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது அவனால். 
ஆனால் அவள் தானே இதையெல்லாம் கடந்து வர வேண்டும்..? இவ்வளவு தூரம் அப்படித்தானே வந்திருக்கிறாள்..? 
சின்னாம்பாளையம் டூ லாஸ் ஏஞ்சல்ஸ்.. 
சட்டென்று அடையாளம் சொல்லிட முடியாதபடி இந்தியாவின் ஒரு கோடியில் இருக்கும் சிறு கிராமம்.. சின்னாம்பாளையம். அங்கிருந்து.. அவளது அடையாளத்தை காட்ட வந்திருக்கிறாள் அமெரிக்காவிற்கு.
‘very dedicated’ 
இப்போதும் இவன் இதழ்கள் முணுமுணுத்தது. 
மெல்ல இவன் புறம் திரும்பியவள் ‘என்ன..?’
“கான்பிடன்ஸ் வாங்க கடலுக்கு வந்துட்டு வானத்தை பார்த்திட்டு இருந்தா எப்படி… ம்ம்..?”
கொஞ்சமாய் ரிலாக்ஸ் செய்து கொள்கிறேன் என வந்தவளை வம்பிழுத்தான் அவன்.
இதற்கு இவனிடம் என்ன பதில் சொல்ல முடியும்..? அமைதியாய் பார்வையை மீண்டும் வானில் வைக்க..
எழுந்து நின்றான் ஸ்ரீராம்.
‘ஏன்..? என்னாச்சு..?’ கேள்விகளோடே இவளும் எழுந்து கொள்ள.. தன் இரு கைகளையும் விரித்தான் ஸ்ரீராம்.
‘வந்து விடு..’ என்பதாய் சிறு தலையைப்பும்.
அடுத்த கணம் அவனுக்குள் அவள்.
அவனிடமும் அவள் மௌனம் இப்பொழுது. அவளிடம் தவிப்பின் தடம் மறைந்து ஆசுவாசம் எட்டிப் பார்த்தது. 
“இங்க கிடைக்கிறது இங்க மட்டும் தான் கிடைக்கும்.. தேடினாலும் வேற எங்கயும் கிடைக்காது..” மெல்ல அவள் காதோரமாய் சொல்ல..
அர்த்தம் புரிந்தவளிடம் புன்னகை மட்டுமே..!
“போலாமா…?”
அவள் தலையசைக்க.. அவள் தளிர் விரல்கள் அத்தனையிலும் தன் அதரம் வைத்தெடுத்தவன்..
“இப்போ போலாம்…” என்றான்.  
இன்று ‘வோர்ல்ட்ஸ் பெஸ்ட்’ டின் இறுதிச்சுற்று.
இந்தியாவின் நற்பவி நங்கையா ஜப்பானின் யூகியா!! வெற்றியாளரை தீர்மானிக்கப்போகும் இறுதிச்சுற்று.
நட்சத்திர கூட்டுக்குள் காலடி எடுத்து வைப்பதுபோல் இருந்தது அவ்வரங்கம். உலக நாடுகளை சேர்ந்த அறுபது நடுவர்களின் ஒட்டுமொத்த வாக்குகள் தீர்மானிக்கப் போகின்றன வெற்றியாளர் யாரென்பதை.
இறுதிசுற்று ஆரம்பம் என மைக் பிடித்தவர் துவங்கிவைக்க 
முதலில் யூகி பீத்தோவனின் ‘கிரேன்ட் சொனாட்டா’வை வாசிக்க.. அரங்கமே கரவோசைகளால் நிரம்பியது.
அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்தது நற்பவியின் செயல்திறன்.
அவள் பீத்தோவனின் ‘மூன்லைட் சொனாட்டா’ வை வாசித்திருந்தாள்.
சிவப்பு மற்று பச்சை விளக்குகளை ஒளிக்கவிட்டு நடுவர்கள் தீர்ப்பை வழங்கிட, நற்பவியின் இதயத்தை விட ஸ்ரீராமின் இதயம் துடித்த துடிப்பே அதிகம். 
அவளுக்கு தைரியம் கூறிவிட்டு அவளை விட அதிக பதற்றம் கொள்வது இவனே.. 
அவன் கண்களை திறந்து பார்த்தபோது பெரிதாய் அதிர்ந்தான்.  
நடுவர்களின் வாக்கெடுப்பு சமநிலையில் முடிய டை பிரேக்கர் ரௌண்ட் அறிவிக்கப்பட்டது.
மேடையிலிருந்தபடி நற்பவி ஸ்ரீராமை பார்க்க.. பதற்றத்தை பின்னுக்குத் தள்ளி தம்சப் காட்டிக்கொண்டிருந்தான். 
அடுத்த சில நொடிகளில் டை பிரேக்கர் சுற்று துவங்கியிருக்க.. போட்டியளர்கள் இருவருக்கும் பீத்தோவனின் ‘பாக்ஹுடல் இன் ஏ மைனார் ஃபூர் எலைசா’ இசை அமைப்பை வாசிக்கும்படி ஸ்பாட் பெர்பாமென்ஸ் கொடுக்கப்பட்டது.
யூகி தன் மொத்த அனுபவத்தையும் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும்  தன் முழுமூச்சாய் வாசிப்பில் கொண்டுவந்திருந்தார்.
அறுபது நடுவர்களில் ஐம்பத்தி நான்குபேரின் ஓட்டுக்களைப் யூகி பெற்றிருந்தார். இப்போது அவரை விட ஒரு ஓட்டு அதிகம் பெற்றாகவேண்டும் நற்பவி. 
நடுவர்களை தன் இசையால் ஈர்கவைத்தால் மட்டுமே வெற்றி. இரண்டுபேரும் ஒரே இசையை வாசித்து அதில் இவள் வெற்றிபெறுவது அவ்வளவு எளிதல்ல. 
நற்பவிக்கு தன்னை நிருபிக்கவேண்டிய கட்டாயம். கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்துகொண்டாள். 
“உன்னமாதிரியே உன் படைப்புகளும் தனித்துவமா இருக்கனும். சாதாரணமா இருந்தா உனக்கும் மத்தவங்களுக்கு என்ன வித்தியாசம் இருக்கும்? இதை மட்டும் மனசுல வெய்”
ஒலித்தது அவளவனின் குரல் அவளுள். 
கண்களை திறந்தவள் பார்வை அவளவனைத் தழுவிய பின், நேராக நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் சென்றவள் அவரது கைப்பேசியை வாங்கி டைப் செய்து காண்பித்தாள்.
“ஷி வாண்ட்ஸ் அனதர் பியானோ” என அவர் அதை நடுவர்களுக்கு தெரிவித்தார்.
அவர்கள் எதற்கு மற்றுமொரு பியானோ என்று யோசித்தபோதும் அனுமதியளித்தனர். சில நொடிகளில் மேடையில் அவள்முன் இரண்டு பியானோக்கள் இருக்க அதன் நடுவில் போடப்படிருந்த ஸ்டூலில் சென்று அமர்ந்துகொண்டாள்.
“ஆர் யூ ரெடி மிஸ் நற்பவி?” என தொகுப்பாளர் கேட்க புன்னகையுடன் தலையசைத்தாள்.
என்ன செய்யவிருக்கிறாள் என்பதை தெரிந்துகொள்ள நடுவர்களுக்கு ஆர்வம்.  யூகி ரசிகர்களுக்கு பதற்றம். அவர்களைவிட யூகிக்கு. அவளையும்விட ஸ்ரீராமிற்கு. 
கேரளத்துக் கண்ணன் கோபிகேஷ் அவனது கன்னடத்துப் பைங்கிளியான கோபிகாவோடு அவர்களது பெங்களூர் இல்லத்தில் லைவ் ஷோ பார்த்திருந்தான். இருவரின் மொழியும் வேறாகினும் மனம் ஒன்றையே விரும்பியது.. நற்பவி வென்றாகவேண்டும் என.  
சின்னாம்பாளையத்தில் இதை அனைத்தையும் லைவாக ராமநாதன் காண்பித்துக் கொண்டிருக்க அன்னத்திற்கு தான் அனைவரையும் விட அதீத பதற்றம். ஊரிளுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல்களை வைக்கத் துவங்கினார் தன் மருமகள் வெற்றிபெற வேண்டுமென.
இத்தனை பேரை பதற்றமடையச் செய்தவளோ புன்னகை முகமாக தயாராகியிருந்தாள். தன் காதலனை மெல்ல வருடினாள். அவன் விட்டுவிடுவானா அவளை..? 
அவளுக்கான நேரம் துவங்கப்பட இரண்டு பியானோக்களையும் ஒரே நேரத்தில் வாசிக்க ஆரம்பித்தாள். 
பார்வை ஸ்ரீராமிடம் இருக்க.. அவளது தளிர் விரல்கள் மட்டும் பியானோவை வாசித்துக் கொண்டிருந்தது.
அவள் காட்டிய மாயத்தில் ஸ்ரீராம் வேறு உலகிற்கு சென்றிருந்தான். இப்போது புரிந்தது அவள் ‘பீத்தோவன் காதலி’ என்று பெயர் வைத்திருப்பது.
கண்கள் பார்க்காமல் இரண்டு பியானோக்களை எப்படி சரிவர வாசிக்கிறாள் என அரங்கமே ஆச்சர்யத்தில் இருக்க, நடுவர்கள் இருக்கையில் இருந்து எழுந்து விட்டிருந்தனர்.
அவளது நேரம் முடிவடைத்து அவள் வாசிப்பை நிறுத்த.. கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது. நடுவர்களில் சிலர் மேடைக்கு வந்தே அவளை பாரட்டி மகிழ்ந்திட இறுதியாய் அவளுக்கான ஓட்டு எண்ணிகைக்கான நேரமும் வந்தது.
அறுபது ஓட்டுக்களையும் பெற்று ‘தி வோர்ல்ட்ஸ் பெஸ்ட்’ சாம்பியன் பட்டத்தை வென்றாள்.
அவள் ஸ்ரீராமை மேடைக்கு அழைக்க.. அதைக் கண்டு 
“ஜென்டில்மேன் ப்ளீஸ் கம் டு தி ஸ்டேஜ்” என தொகுப்பாளரும் நடுவர்களும் அவனை அழைக்க.. அவள் ஓவியப் போட்டியில் வென்றபோது எப்படி இருந்தானோ அதே போல் இருந்தான்.
அவனவளை தூக்கி சுற்றும் அளவிற்கு அதீத மகிழ்ச்சி அதை பிறர் முன்னிலையில் வெளிப்படுத்த முடியாது அமைதியாய் மேடைக்கு வந்திருந்தான். அவன் கண்கள் லேசாய் கலங்கியிருந்ததை அவள் கண்டுகொண்டாள். 
“தி வின்னர் ஒப் வோர்ல்ட்ஸ் பெஸ்ட் ஷோ இஸ் நற்பவி ப்ரம் இந்தியா” என அறிவிக்க.. உலக மக்கள் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் ‘மேஸ்ட்ரா’ நற்பவி நங்கை ஆகினாள்.
போட்டியில் வென்றதற்கான சாம்பியன் பட்டமும் ஓன் மில்லியன் டாலரும் பரிசுத் தொகையாய் அவளுக்கு வழங்கப்பட, வாழ்த்து மழையில் நனைந்துபோயிருந்தாள்.   
அனைத்து பார்மாலிட்டிகளையும் முடித்து ஊர் வந்தடைய நாட்கள் பிடித்தது. 
சின்னாம்பாளையமே கலை கட்டியிருக்க.. ஆரத்தி எடுத்து வரவேற்றார் அன்னம். ஒவ்வொருவராய் வந்து அவள் வாங்கிய ஷீல்டை பார்த்துச்செல்ல ராமநாதனுக்கு மகளை எண்ணி அத்தனை பெருமை. 
தந்தையாய் இருந்தாலும் அவளது ஷீல்டை முதலில் அன்னத்திடம் காண்பித்து ஆசிவங்கியது மகள் அங்கு எப்படி போருந்தியிருக்கிறாள் என்பதை காண்பிக்க.. அவள் இந்தக் கூட்டில் அழகாய் பொருந்தியது அவருக்கு மகிழ்ச்சி.. அதே சமயம் அவர் கூடு வெறிச்சோடி இருந்தது. 
மனம் நிறைந்திருந்தாலும் தந்தைக்கே உரிய தவிப்பு  ஒரு ஓரத்தில் இருந்தது. ஒரு தனிமை உணர்வு அவள் மணமாகியதில் இருந்து அவருக்கும் உண்டு. அதை சிறிதேனும் வெளிக்காண்பித்தால் மகள் வருந்துவாள் என்பதாலேயே காண்பித்துக் கொள்ளமாட்டார்.  
உறவினர்கள் எல்லாம் கிளம்பவே மாலை ஆகியிருந்தது. குடும்பத்தார் மட்டும் இருக்க.. இரவு உணவை முடித்தபின் ஸ்ரீராம் அனைவரிடமும் பேசவேண்டும் என்று கூற அனைவரும் ஹாலில் காத்திருந்தனர்.
அவன் வேலையை விட்டிருந்தான். இனி தொடரும் எண்ணம் இல்லை. சின்னசாமிக்கும் வயது ஏறிக்கொண்டிருக்க அவருக்கு ஓய்வளித்துவிட்டு நிலபுலன்களை பார்க்கும் பொறுப்பை கையிலெடுத்துக் கொண்டான். 
தன் முடிவை தெரிவிக்க.. சின்னசாமி யோசித்திருக்க.. அன்னத்தின் முகத்தில் பிரகாசம். தன் ஆத்துகாரர் ஏதும் குட்டையை குழப்பாதிருக்க 
“சரின்னு சொல்லுங்க” என முந்திக்கொள்ள, அவர் அன்னத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு 
“இது வயக்காட்டுல வெந்த ஒடம்பு இந்த ஓய்வெல்லாம் ஒத்துவராது.. நான் எப்பவும்போல என்ர வேலைய பார்பேன் தோப்பு தொரவெல்லாம் உன்ர கட்டுப்பாட்டுல வெச்சுக்க. நீ விவசாயம் பார்கறதுல எனக்கும் சந்தோசந்தான்” என சின்னசாமி அவர் விருப்பத்தை தெரிவித்துவிட, நற்பவிக்கும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாய் இருப்பதில் மகிழ்ச்சி.
அவன் அடுத்து கூறியதில் நற்பவிக்கு கண்கள் கலங்க.. ராமநாதனோ ஒப்புகொள்ள மறுத்தார்.
ராமநாதனை தங்களோடு இருக்கும்படி கூறியிருந்தான். அது ஒத்துவராது என்று அவர் கூற,
“புதுசா மட்டை மில் ஆரம்பிக்க போறேன் லோன் வாங்கணும் அப்பறம் மில் ஆரம்பிச்சா கணக்கு வழக்கெல்லாம் கூட இருந்து பார்த்துக்க உதவியா ஒருத்தர் வேணும். அனுபவசாலியான நீங்க என்கூட இருந்தா சப்போர்ட்டா இருக்கும். நீங்க மறுக்க மாட்டீங்கங்கர நம்பிக்கைல தான் கேட்டேன். விருப்பம் இல்லேன்னா விட்டுடுங்க மாமா நான் கம்பெல் பண்ணல” என்றுவிட இதற்குமேல் மறுப்பாரா என்ன! 
“அப்படி இல்லேங்க மாப்பிள்ள” என தயங்க
“மகளை கொடுத்த இடத்துல எப்படி இருக்கறதுன்னு யோசிக்கறீங்களா?” என்றதும் அவனை நிமிர்ந்து பார்க்க 
“உங்கள எங்க வீட்ல இருக்க சொல்லலீங்க மாமா.. எங்களோட இருங்கன்னு தான் சொல்றேன்” என்றவன் தொடர்ந்தான்
“சென்னை பிளாட் வாடகைக்கு விட்டுக்கலாம். மட்ட மில் கட்ட போற இடத்துக்கு பக்கத்துல உங்களுக்கு வீடு பார்த்திருக்கேன் நீங்க அங்க தான் இருக்கப் போறீங்க. உங்களுக்கு துணையா நாளைக்கு நைட் ஒருத்தர் அங்க வருவாரு. உங்களுக்கு நல்லா தெரிந்தவர் தான் அதனால ஒரு தொந்தரவும் இருக்காது 
இங்க இருந்தா உங்களுக்கு தோணும்போதெல்லாம் பவிய பார்க்கலாம். எனக்கும் உங்க உதவி தேவைப்படும். இனி நீங்க தான் உங்க முடிவ சொல்லணும். காலைல சொல்லுங்க” என்று அவருக்கு நேரம் கொடுத்து அவனது அறைக்குச் சென்றிருந்தான்.
விலாவாரியாக கூற அவன் முன்கூட்டியே அனைத்தையும் தீர்மானித்து காய் நகர்த்தியது அனைவர்க்கும் புரிந்தது.
“நானே உங்ககிட்ட இதைபத்தி பேசிருக்கேன் அண்ணா ஆனா நீங்கதான் மறுத்துட்டீங்க. சென்னைல ஒருத்தர் மட்டும் இருக்குறதுக்கு நம்ம சொந்த பந்தங்களோட இருக்குறது நிம்மதியா இருக்கும். முன்ன இருந்ததுக்கு இப்போ ரொம்ப சோர்வா தெரியுறீங்க. மகளை பிரிஞ்சிருக்குற வருத்தம் எங்களுக்கும் புரியுது. அவளுக்கும் உங்க ஞாபகம் வரும்போதெல்லாம் ஒரெட்டு வந்து பார்த்துட்டு போவா” என்று அன்னம் கூற
“என்ன சம்பந்தி இன்னும் யோசிகுறீங்க சரின்னு சொல்லுங்க. அதான் உங்க தங்கச்சி இவ்வளவு தூரம் எடுத்து சொல்லுறால்ல..” என சின்னசாமி கூறியும் ராமநாதனுக்கு அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை.  
“சரி இப்போ நீங்க ஓய்வெடுங்க அண்ணா.. உங்க மருமகனுக்கு நாளைக்கு நல்ல பதிலா சொல்லிக்கோங்க” என அன்னம் கூற தலையசைப்புடன் அவர் அறைக்குச் சென்றுகொண்டார்.
ஸ்ரீராம் அறைக்குச் சென்று வெகுநேரம் ஆகியே நற்பவி சென்றாள்.
தன் தந்தையை பிரிந்திருப்பது அவளுக்கும் வருத்தமே அதை காண்பித்துக் கொண்டால் அவர் வருந்துவார் என்றே அவள் சகஜமாக இருப்பதுபோல் அவர்முன் காண்பித்துக் கொள்வாள். இருந்தும் இதய நோயாளி தனிமையில் என்ன செய்கிறாரோ என ஒவ்வொரு நொடியும் நிம்மதி இன்றி தான் இருக்கும் நற்பவிக்கு.
ஸ்ரீராம்! என்ன செய்திருக்கிறான் இன்று.. கவலை என்ற வாசத்தையே அவள் நுகரக் கூடாது என்றிருக்கிறானா..? 
அவள் சந்தோசத்தை அவனிடம் காட்ட ஆவலாய் காத்திருக்க.. அவனோ குளியலறைக்குள் இருந்து வந்தபாடில்லை.
அவளை மேலும் காக்க வைக்காது தரிசனம் தந்திட, அடுத்தநொடி சிறகு முளைத்த பறவை அவன் நெஞ்சில் அடைந்திருந்தது தஞ்சம்.
‘எனக்காகவா’ என்றாள் 
இல்லை என்பதாய் தலையசைத்தவன் 
“என் மாமனாருக்காக” என்றபடியே அவளை அழைத்துவந்து கட்டிலில் அமரச்செய்து 
“அவரு ஹார்ட் பேசன்ட் நம்மதான் அவரை பத்திரமா பார்த்துக்கணும். அவர் அங்க தனியா இருக்கறது சரிவராது” என, தலையை லேசாய் அசைத்தபடி பார்த்திருந்தாள்.
“அப்பறம்.. என் பவி அவங்க அப்பாவ நெனச்சு நைட் யாருக்கும் தெரியாம அழ வேண்டி இருக்காது” என்றிட,
இதையும் கண்டுகொண்டானா என விழி விரித்து பார்த்திருந்தாள்.
“இப்படி எல்லாம் பார்த்து வெச்சா அப்பறம் உனக்கு தான் பிரச்சனை” என அவன் பார்வையை திருப்பிக்கொண்டு கைகளை தேய்த்தபடி அதரங்களில் அடக்கப்பட்ட சிரிப்போடு கூற 
‘தேங்க்ஸ்’ 
அவள் இதழ்கள் அவன் கன்னத்தில் எழுத..
‘இட்ஸ் மை ப்ளஷர்’
அவன் இதழ்கள் அவள் இதழ்களில் எழுத..
இருவருக்கும் இடையில் புது காதல் மொழி..!! அவர்கள் மட்டுமே புரிந்த மொழி..!. 
இதழ் கொண்டு பேசிய மொழி போதும் என்று அவர்கள் உணர்ந்த வேளையில் இதயங்கள் இரண்டும் இணைந்து பிணைந்து காதல் மொழி பேசத் துவங்கியது.
என்னுள் நீ
உன்னுள் நான் 
நம்முள் பூத்த காதலோடு
காதலிசை மீட்டிடவா!!
மௌனம் சொல்லும் 
வார்த்தைகளோடு 
காதல் மொழி பேசிடவா!! 
நற்பவி நங்கையாகியவள் ஸ்ரீராம் கதிராயனுள் அடக்கம்.
விண்ணிலிருந்து அவர்களை எட்டி எட்டிப் பார்க்கத் துடிக்கும் நிலவையும் நட்சத்திரங்களையும் வெளியில் விடாது தன்னுள் இறுக்கிப் பிடித்திருந்த கருமேகம்.. நான் கருமேகமல்ல.. காதல் மேகம் என்று அறிவித்து ‘வாழ்க உங்கள் காதல் மொழி’ என அவ்விருவரையும் வாழ்த்தி விடைபெற்றது.

Advertisement