Advertisement

‘சொர்க்கமேஏஏ என்றாலும்ம்ம்.. அது நம் ஊரைப் போல வருமா…??’ 
நிஜம் தனையும் நிழல் தனையும் மறைத்து வைக்கும் இருள்.. இன்பம் தான். 
இசைத் தூறலோடு.. பேரின்பம் தான்..!
‘ஆல் இன்டியா ரேடியோ’ இசையின் தூவானமாய் இருக்க.. நெஞ்சிலாடும் நினைவுகளின் கனத்தோடு.. மெல்லிய பொன்மஞ்சள் விளக்கின் பொழிவில் யாருமில்லா சாலையை சாளரத்தின் வழியே ‘சைட்’ அடித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.    
வெண்மை தாங்கிய புல்வெளி சிரம் மேல்., கம்பீரமான மீசை.. இரண்டும் அறுபதை தாண்டி நிற்கும் கிழம் என கட்டியம் கூறும். 
இடது கையில் ஒரு பழைய கைக்கடிகாரம், காக்கி நிறத்திலான ஒரு பேண்டும் சட்டையும்.. இதுவே அடையாளம்.
அவர் சிங்காரச் சென்னையில் உள்ள ஆருத்ரா அப்பார்ட்மெண்டின் சௌகிதார்.. சண்முகம்..!! 
குடும்பம் என்ற கூட்டில் யாருமில்லை.. கூட்டை விட்டு பறந்து பசிக்காகத் தரையிறங்கியது மதராசப்பட்டினத்தில்..
சிறகுகள் சிறை வைக்கப்பட.. அதன் பிறகு பறக்கவேயில்லை..! 
சில நினைவுகள் காலம் கடந்தும் உடன் பயணிக்கும். விலக்கிவைக்கவும் முடியாது விட்டுவிலகவும் முடியாது. 
நினைக்கமட்டுமே முடியும் அந்த நினைவுகளால் நிகழ்காலத்தில் ஒன்றும் நிகழ்ந்தேறிவிடப் போவதில்லை.. உணர்ந்த உள்ளத்தில் அழுத்தமான பெருமூச்சு.
ரேடியோவை நிறுத்தி நாற்காலியை வெளியில் எடுத்து போட்டு அமர்ந்துகொண்டார்.
சாலையின் தனிமையை விரட்டிட வெளிச்சமும் உறுமலுமாய் வந்து நின்றது யமஹா.. அடுத்த கணம் கடமையை செய்துவிட்டு நின்றார்.
ஹெல்மெட் அவன் முகத்திற்கு முழுதாய் திரையிட்டிருக்க.. வெண்மை நிறத்தில் முழங்கை வரை மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை, அதன் கீழ் வெளிப்பட்ட பாகத்தில் அங்கு மிளிர்ந்த பொன்மஞ்சள் நிற விளக்குகளின் ஒளி படர.. அதனோடு சேர்ந்து மிளிர்ந்தது அவனது சந்தன நிறமும்.
யமஹாவை உற்றுப் பார்த்து உறுதி செய்தவர்.. உள்ளே காத்து கிடந்த பார்சலையும் பிலாஸ்க்கையும் கையேடு எடுத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தார்.   
உள்ளே வந்தவனோ தனது வண்டியை பார்க்கிங் லாட்டில் நிறுத்திவிட்டு ஹெல்மட்டை கழட்டிட, அதுவரை மந்தாரை மரத்திலையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த கன்னிக்காற்று அவன் அலையலையான கேசத்தைக் கண்டநொடி அவன் கேசத்தை களைத்து விளையாடத் தொடங்கினாள்.
ஒருகையால் ஹெல்மட்டை பிடித்தவாறு மறுகையால் தலை கோதியவாறே அவன் லிஃப்டை நோக்கி முன்னேறினான்.
“தம்பி..”
சட்டென்ற அழைப்பில் சடார் என்று பிரேக் அடித்திருந்தான் அவன்.
அவன் ஸ்ரீராம்.. ஸ்ரீராம் கதிராயன்..!! 
திரும்பியவனின் விழிகளில் சண்முகம் அவனை நோக்கி வேக எட்டுக்களுடன் வருவது விழ, அவனும் அவரை நோக்கி முன்னேறி இருவருக்கும் இடையிலான தூரத்தை முடிந்த அளவு குறைத்திருந்தான்.
“இந்தாங்க தம்பி” 
ப்ரெஷ் காபியும் டிபனும் கை மாறியது.
அபார்ட்மெண்ட்டிற்கு அவர் வெறும் வாட்ச்மேன்.. ஆனால் அவனுக்கு..??  
அவன் அவரையும் அவர் கையில் இருப்பதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு
“நீங்க சாப்டீங்களா??” என
மரத்துப் போயிருக்கும் மனம் கூட துளிர்த்துப் போய்விடும் அன்பு இருப்பின்.. இங்கே.. இவர் மனம் தழைத்துப் போனது.
“ஆச்சுங் தம்பி.. நீங்க வந்து.. சமைச்சு.. எப்போ சாப்பிடறது..?? அதான் நேரம் பாத்துப்போட்டு போயி வாங்கியாந்து வெச்சுட்டேன்..” 
உரிமையும் பாசமுமாய் நீட்ட.. அவன் அதரங்களில் ஒரு கீற்றுப் புன்னகை உதயம். 
‘சரி பில்லு எவ்ளோ சொல்லுங்க..?’
மறந்தும் அவன் இதழ்கள் இப்படி கேட்டிடாது.. கேட்கவும் முடியாது. அன்பிற்கு அளவும் இல்லை.. அடக்கவிலையும் இல்லை.
“சரி நீங் போங் தம்பி.. சூடு ஆறிப் போயிரும்.. நேரநேரத்துக்கு சட்டுன்னு சாப்டுட்டு தூங்குங்க.. வேலை வேலைன்னு ஒடம்ப கெடுத்துக்காதீங்க..” 
அதிகப்ரசங்கமும் அதிகாரமும் அல்ல.. அன்பில் உரிமை..!!
தலையசைத்து நகர்ந்திருந்தான்.
மனம் லேசுப்பட்டிருக்க இப்போது பாதியில் நிறுத்தியிருந்த பண்பலையை தொடர்ந்தபடியே கேட்டின் அருகில் சென்று அமர்ந்துகொண்டார் சண்முகம். 
லிப்டில் ஏறிய ஸ்ரீராம் அவனது தளத்திற்கான பொத்தானை அமுக்கிவிட்டு நின்றிருக்கத்தான் பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்ததையே உணர்ந்தான்.
ஒருவழியாக அவனது தளத்திற்கு வந்தவன் அவனிடம் இருந்த சாவியை வைத்து பிளாட்டை திறந்து உள்ளே நுழைந்தான்.
பால்கனியோடான இரண்டு படுக்கையறை அதனோடு கூடிய அட்டாச் பாத்ரூம், ஒரு ஹால், ஒரு கிட்சன், சிறிய அளவிலான ஒரு டைனிங் ரூம் வசதியுடன் கூடிய பிளாட் அது.  ஸ்ரீராமும் அவன் நண்பன் கோபிகேஷும் அங்கு தங்கி வேலைக்கு சென்று கொண்டிருக்கும் ஆடவர்கள்.
உள்ளே வந்தவன், நண்பனின் அறைக் கதவை மெல்லத் திறந்து பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் கோபிகேஷ்.. அவனைத் தொந்தரவு செய்யாது அறைக் கதவை சாத்திவிட்டு வந்தவன் ரெப்ரெஷ் செய்துவிட்டு பின் இரவு உணவை சுவைக்கத் துவங்கினான்.
பசி இருந்தும் உணவு இரண்டு வாய்க்குமேல் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. கைகள் தட்டில் கோலமிட,
“அட என்ன கண்ணு நெரெண்டிட்டு இருக்க.. சற்று புட்டுன்னு அள்ளி வாயில போடு..!!” 
அன்னையின் குரல் அவனுக்குள்.. புன்னகையுடன் தலையை சிலுப்பிக்கொண்டான். 
அன்னையின் நினைவில் அமுதுண்டு வந்தவன் வாலட்டில் வாசம் செய்த அன்னை தந்தை புகைப்படத்தில் விழியாலும் விரலாலும் வருடினான்.
ஊர் சென்று வரலாமா..??
மூன்று மாதங்களுக்கும் மேலாகியிருந்தது ஊர் சென்று வந்து. அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ப்ராஜக்ட் வேலைகள் அப்படி. இருக்கும் நேரம் அனைத்தும் அதனோடே கழிய.. வேறெதிலும் கவனம் செலுத்தவும் முடியவில்லை. 
இப்போது அதுவும் முடியும் தருவாயில் இருக்க.. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டுமே! 
ஒரு பெருமூச்சோடு லேப்டாப்பை எடுத்து வைத்து அதில் முடிக்க வேண்டிய வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.
லட்சத்தில் சம்பளம். அதற்கேற்ப கரும்பை உள்ளே விட்டு சாற்றை பிழிந்து சக்கையைத் தூக்கிப்போடும் படியான அலுவலக வேலைகள். காலையில் கரும்பாய் செல்வோர் அந்தி சாயும்காலம் சக்கையாய் திரும்புவர். 
பர்பெக்ட் மெஷின் லைப்..!!. 
என்னடா வாழ்க்கை இது..?? அடிக்கடி விசிட் செய்து போகும் எண்ணம். ஆனால் அதன் பிறகு இன்னொன்றும் வந்து எட்டிப் பார்த்து ஹாய் சொல்லிப் போகும்.  
அவன் நினைத்ததுபோல் வாழ காலம் கனியவில்லை இன்னும். முடிக்கவேண்டிய கடமைகள் சிலதிருக்க அதற்கு இப்போது கடுமையாய் உழைத்துத்தான் ஆகவேண்டும்.
காலம் தான் காத்திருக்காதே..! கடந்திருந்தது இவன் கடமையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதில். 
கண்கள் ஒய்வு ப்ளீஸ் என்று கெஞ்ச.. நேரத்தைப் பார்த்தான். யாமம் தொடங்கிட, லேப்டாப்பிற்கும் ஓய்வு கொடுத்தான்.
விளக்குகளை அணைத்துவிட்டு மெத்தையில் விழுந்தால்.. அடுத்த ஐந்து நிமிடங்களில் உறக்கம் அவன் வசமாய் இருந்ததெல்லாம் ஒரு காலம். அது இறந்தகாலம்.
ஆனால் இப்போது!! அத்தனை சோர்விலும் உறக்கம் எட்ட நிற்கிறது.
மின்னல் வெட்டியது போல் அவன் நினைவில் அது வந்து போக, எழுந்து கொண்டான் பஞ்சனையில் இருந்து. 
நிதமும் மெஷினிலிருந்து அவனை டியூன் செய்து மனிதனாக்கி அவன் நினைவுகளை தற்காலிகமாய் மறக்கச்செய்து அவனை சார்ஜ் செய்வது..
இசை.. அவளது இசை..
அவள்.. பீத்தோவனின் காதலி..!!
‘பீத்தோவனின் காதலி’ இந்தப் பெயர் தான் முதலில் அவனை ஈர்த்தது. இந்தப் பெயரில்தான் அவள் யூ டியூப் சேனல் வைத்திருக்கிறாள். 
துவக்கத்தில் புகழ்பெற்ற மேஸ்ட்ரோவான பீத்தோவனின் சிம்பொனிகளை மட்டுமே வாசித்து வெளியிட்டுக் கொண்டிருந்தாள். இப்போது அவளாகவே டியூன்களை வாசிக்க ஆரம்பிக்க.. அவள் பதிவேற்றும் வீடியோக்கள் அனைத்தும் பதிவேற்றிய சில நொடிகளிலேயே பல லட்சம் வியூக்கலை பெற்றுவிடும். 
அத்தனை ரசிகர் பட்டாளம் இருந்தாலும் அவள் இதுவரை ரகசியம் தான்.. இவனுக்கு மட்டுமல்ல.. எல்லோருக்குமே..! 
இசை மட்டுமே அவளின் அடையாளம்.. திரைக்குப் பின் இருளில் அவள்.. வெளிச்சத்தில் அவள் இசை..
பீத்தோவனின் ஓவியமும்.. இசை மீட்டும் அவள் தளிர் விரல்கள் மட்டும் காட்சிக்காக.. இரண்டு நிமிடங்கள் கூடிய வீடியோ முழுவதும் அவளது இடைவிடாத இசை மட்டுமே..
ஸ்ரீராமின் கைகள் தானாய் கைப்பேசியைத் துளாவியது. 
இன்றைய உளைச்சலில் அவனுக்கான மருந்தை மறந்து போக இருந்தானே!! அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா அந்த அருமருந்தை..??
சில மணி நேரத்திற்கு முன்புதான் ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தாள். அதற்குள் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்..!!
கண்கள் நீயே.. காற்றும் நீயே..
தூணும் நீ.. துரும்பில் நீ..!!
வரிகள் மட்டுமா வருடும்..? அவள் வாசிப்பும் கூட..!!
வீடியோ முடிந்ததும் ஸ்ரீராம் அந்நொடியில் அவன் மனதில் தோன்றியதை அங்கு கமெண்ட்டில் பதிவு செய்தான்.
அவளது இசைக்கு இவனும் ஒரு ரசிகன். ரசிகன் என்பதைவிட இப்போதெல்லாம் அவள் இசைக்கு இவன் அடிமை. அவனறியாது அடிமையாக்கி இருந்தாள் அவள். 
அவளது இசையை கேட்காது அவனது அன்றைய நாள் முடிவடையாது. மறந்தேபோனாலும் இறுதியில் அவளிடம் தான் அவன் சரணடையவேண்டும். இப்போது அடைந்ததைப் போல.
அந்த வீடியோவை மீண்டும் ஒலிக்கவிட்டு கேட்டவாறு அவனிருக்க.. அடுத்த சில மணித்துளிகளில் சீரான மூச்சுக்காற்று வெளியேற நித்ராதேவி அவனைத் தழுவிக்கொண்டாள்.
இவனை தன் இசையால் அடிமையாக்கிய அவளும் அந்நேரத்தில் அவளது அறையில், பியானோவின் முன்புதான் அமர்ந்திருந்தாள். 
திரைசீலைகளின் வழியே வந்த காற்று அவள் கூந்தலில் நுழைந்து வெளியேற.. முன்னெற்றியில் படர்ந்த ஒரு பகுதியை பின்னுக்குத் தள்ளியபடி இவனது கமெண்ட்டை தான் படித்தவாறு இருந்தாள். 
“உங்கள் இசையோடு பயணிப்பதானால் திரும்பி வராத தூரத்துக்கும் செல்லத் தயார்.. உண்மை..!! இது வெறும் புகழ்ச்சியில்லை..!!”  
படித்தவளது விழிகள் வியப்பில் விரிய.. அவளிதழ்களும் ஆம்பல் மலராய் விரிந்து மலர்ந்தன.
பேசுவான்…

Advertisement