Advertisement

லட்சம்.. லட்சம் இடைவெளியை கடந்திடும் லட்சியத்தில் நொடிக்கு நொடி வேகம் நாடி, பூக்கள் தரும் பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது மழை.
தலைநகரின் இன்னொரு பக்கம்… அத்தனை அத்தனை அழுக்குடன் அடையாளம் மறைந்து போகும் வண்ணம் சாலையில் சாக்கடையும் சந்தைக்கடை இரைச்சலுமாய்.. மக்களின் பொறுமைக்கு சோதனையாய்.. ஹெவி ட்ராபிக்கும் ஹெவி ரெயினும்..  
“டேய் ஸ்ரீ… ஒரு காரை வாங்கித் தொலையேண்டா.. இன்னும் எத்தனை நாளைக்கு இதை வெச்சிட்டு இருக்கறதா ஐடியா உனக்கு..?” – ‘சோ’ எனப் பெய்யும் மழையில் நனைந்த எரிச்சலோடு கோபி. 
“இதை வெச்சிருக்கறது மட்டும் தான் என் ஐடியால இருக்கு..” 
“……..”
“டேய்.. கார் அத்தியாவசியம்னா வாங்கலாம்.. எனக்கு அது அனாவசியம்.. அப்புறம் எதுக்கு..?”
தலையிலடித்துக் கொண்டான் கோபி.. மானசீகமாயத் தான்.
“வாங்குற சம்பளத்தை எல்லாம் என்னதான்டா செய்ற?” விடமால் தொற்றும் வேதாளம் போல் ஸ்ரீராமை தொற்றிக்கொண்டது கோபியின் இந்தக் கேள்வி எப்போதும் போல். 
இவனும் விக்கிரமாதித்தனாய் ஆகச் சிறந்த பதிலான மௌனம் பூசிய புன்னகையை விடையாய்க் கொடுத்தான்.
‘இதுக்கு மட்டும் பதில் வராதே..!’ வேதாளம் ப்ச்.. கோபி அமைதியானான்.
மாலை மங்கும் வேளையில் கிளம்பியவர்கள் மாலை மங்கிய பின்தான்  தங்களது அபார்ட்மெண்டிற்கு வந்திருந்தனர்.
பண்பலையில் பாடல் உடன் வர.. கடமையில் காவல்காரர் சண்முகம்.. சிறு தலையசைப்புடன் கடந்தனர்.
ஸ்ரீராம் பார்க்கிங்கில் இருந்து வர.. கோபியோடு அவனையும் சேர்த்துக் கொண்டது லிப்ட்.. கதவை மூடிக்கொள்ளும் முன் கணம் அவர்கள் முன்.. மழையில் நனைந்த மலராய்.. நற்பவி. 
ஸ்ரீராம் விழிகளில் வஞ்சியவள் விழுந்த நொடி.. காலை கதவின் இடையில் வைக்க அவளும் உள்ளே வந்துகொண்டாள். 
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் இதழ்களின் அருகே கைவைத்து நன்றியுரைக்க.. இருவரது இதழ்களிலும் நட்பு குறுநகையாய்.
‘என்ன பிளையிங் கிஸ் கொடுக்கறா…?’ சத்தமான கோபியின் மைன்ட் வாயிஸ்..  
அப்போதுதான் அருகிலிருக்கும் கோபியை கண்டாள். கோபியை கண்டதும் வெளியேறச்செல்ல.. அவள் வெளியேறுவதற்குள் கதவு மூடிக்கொண்டது. 
மூடிய கதவையே அவள் பார்த்தவாறு நற்பவி நின்றிருக்க.. 
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. கேள்வி பட்டிருக்கியா ஸ்ரீராம்..? அது இதுதான்..” 
சம்பந்தமின்றி வள்ளுவம் அவன் வாய் மொழியில்.
சத்தியமாய் புரியவில்லை ஸ்ரீ ராமிற்கு.. ஆனால் சம்பந்தப்பட்டவளுக்குப் புரியும் தானே..?
முழு விழியிலும் முறைப்பை முன் வைத்தாள். 
“நான் வர்றத பார்த்தும் லிப்ட்டை நிறுத்தாம என்னை ஆபிஸ்க்கு லேட்டா போகவெச்சு பழிவாங்குனாலும் அதெல்லாம் மன்னிச்சு.. மறந்து.. இன்னிக்கு உனக்கு உதவி செஞ்சிருக்கோம்னா……..” என்று இழுத்து நிறுத்த 
‘இவனுக்குமா…?????’ – சத்தமின்றி ஸ்ரீராம்.
“உன்னை மாதிரி கல்நெஞ்சக்காரி இல்ல நாங்க..” என்று இழுத்தத்தை முடித்து வைத்தான் கோபி. 
‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்….!!!!!!!’ – நங்கைக்குள் முளைவிட்டது சிறு கோவம்.
“சாரி.. கல்நெஞ்சக்காரன் இல்ல நாங்க..” தமிழில் பிழை திருத்தும் மலையாளம்.
“அப்போவும் சிங்குலார் தான் வருதா..? கல்நெஞ்சக் காரர்கள்னு சொன்னா சரிதானே..??” 
தமிழ் அவனிடம் படும் பாட்டில் பவி பொறுமையிழந்திருந்தாள்.
முதலில் கோபியை முறைத்தவள் இப்போது ஸ்ரீராமை முறைக்க.. அவனோ இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னையும் முறைப்பது கண்டு 
‘என்ன இவன் கொடுக்கிற ஆக்ஸன்க்கு என்கிட்ட ரியாக்சன் வருது??’ என்றபடி கோபியின் தலையில் தட்டி அடக்கி வைத்தான்.
அதற்குள் அவர்களது தளம் வர வேகமாய் இன்னொரு முறை முறைத்து விட்டு வெளியேறினாள் நற்பவி.
அவள் வரவிற்காக வெளியே காத்திருந்தார் அவள் தந்தை ராமநாதன். 
“பவிம்மா..” என்ற அழைப்பில் அவர் அருகில் சென்று நின்றிருக்க
“என்னமா இப்படி நனைஞ்சுபோய் வந்திருக்க.. உள்ள வா மொதல்ல” என்றழைத்துப்போய் டவலை எடுத்துவந்து துடைத்துவிட, தந்தையையே பார்த்திருந்தாள். 
“என்னடா அப்படி பார்க்கற..?” என
 ஒன்றுமில்லை என தலையசைத்து புன்னகைத்தாள்.
“நீ குளிச்சிட்டு வா அப்பா.. அதுக்குள்ள டீ போடறேன்” என்று அவர் கிட்சனுள் புகுந்துகொள்ள.
அவள் குளித்துமுடித்து வர சூடான தேநீரோடு அவளுக்காக காத்திருந்தார் ராமநாதன்.
அவள் வந்து அவருக்கான கோப்பையை அவர் புறம் நகர்த்திவிட்டு அவளுடையதை எடுத்து பருகிக்கொண்டிருக்க.. அவள் முகத்தையே பார்த்திருந்தார்.
‘என்ன’ என்று புருவம் உயர்த்த.. ஒன்றுமில்லை என தலையசைத்தார்.
அவரது ஒன்றுமில்லைக்கு பின் எத்தனை இருக்கும் என்பதை அறிவாள் மகள். 
சில உணர்வுகளை வாய்மொழியால் தெரிவித்தால் தான் புரியுமென்பதில்லை.. உணர்வுகளை உணர்ந்துகொள்ள மொழி தேவையில்லை. 
சராசரி சிட்டி லைப்.. லிவிங் ஸ்டைல்.. ஒரு மனிதனுக்கு என்ன தருமோ அதைத் தந்து விட்டிருந்தது அவருக்கு.
அழுத்தமும் அட்டாக்கும்..!
ஆசைப்படவில்லை.. ஆனால் வந்து அமர்ந்து கொண்டது அவருக்குள்.
தந்தையாக நிற்கும் தனி மனிதனை தழுவிக் கொண்டது பயம்.. மகள் பற்றி.. அவள் வாழ்க்கைப் பற்றி. 
பயம் ஒன்றே போதுமே.. மனம் தனில் போராட்டம் செய்து வைக்க.. அவருக்குள்ளும் அதே.
மகள் அறியாத தந்தையின் மனப் பக்கமா..? 
தன் நலத்தை.. நம்பிக்கையாய் அவரிடம் கொடுத்தாள்.. ஆனாலும் ஏற்கவில்லை அவர்.  
அவளை இன்னொரு பாதுகாப்பான கூட்டில் வைக்க.. திருமணம் செய்து கொள் என்றார். துளியும் அந்த எண்ணமில்லை.. விருப்பமுமில்லை.. ஆனாலும் அவரை விட.. அவர் விருப்பத்தை விட.. நிம்மதியை விட அவளுக்கு வேறென்ன வேண்டும்..?. 
சரி என்றிருந்தாள்.. 
தந்தையும் மகளும் அவரவர் சிந்தனையில் இருக்க முதலில் சிந்தனை களைத்த நற்பவி, தந்தை முன் கையசைத்து அவர் கவனம் களைத்து தேநீரை பருகுமாறு கூறி புன்னகைக்க, அவளது புன்னகை அவரையும் தொற்றிக்கொண்டது.
தேனீரை பருகிமுடிக்க அவர் எதிர்பார்த்த ஆளிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அவர் அழைப்பை எடுத்த விதமும் பரபரப்பாய் அவர் அறைக்குள் சென்ற விதத்திலுமே அழைத்து யாரென்று புரிந்து போனது நற்பவிக்கு.
ஸ்ரீராம் இஞ்சியும் துளசியும் சேர்த்த டீயை கோபியிடம் கொடுத்துவிட்டு தனக்கும் எடுத்துக் கொண்டு அமர.. 
“ஹ்ம்ம் ஆஹா” என ஒவ்வொரு சிப்பிற்கும் உச் கொட்டியபடி குடித்துமுடித்தான். 
அதோடு அமைதியாக இருந்திருக்கலாம் அவனோ நண்பனின் தோள்பற்றி தீவிரமாக
“என்ஜினீரிங்க விட்டிடு டீ ஸ்டால் போட்டிடு..!!” என்று டயலாக் அடிக்க, அவனை ஆழமாய் பார்த்த ஸ்ரீராம் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்று கதவை பூட்டிவந்தான்.
“எதுக்கு மச்சா கதவை பூட்டற??”
“காரணமாத்தான்” என்றபடி சாவியை எடுத்துக்கொண்டு கோபிகேஷிடம் இருக்கும் மற்றுமொரு சாவியையும் வாங்கிக்கொண்டு
“நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன் அதுக்குள்ள போய் காய் நறுக்கு குருமா வைக்கணும்.. அப்பறம் மாவு பிசைஞ்சு வெச்சிரு” என்று கட்டளையிட்டுச்செல்ல, பரிதாபமாக அமர்ந்திருந்தான் கோபிகேஷ்.
ஏதாவது ஏடாகூடமாய் செய்வதும்.. எஸ்கேப் ஆவதும் வாடிக்கை தான் கோபிக்கு.. இன்று வசமாய் மாட்டிக் கொண்டான்.
தன் அறையில் இருந்து வெளிப்பட்ட ராமநாதனின் முகமெங்கும் மகிழ்ச்சி ரேகைகள். அதை கவனித்தவள் அவராய் சொல்லட்டும் எதுவானாலும் என்று கிச்சனுக்குள் நுழையச்செல்ல
“பவிம்மா இருடா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என அவளை அமரச்சொல்லி அவள் அருகில் அமர்ந்துகொண்டார்.
“அவங்களுக்கு சம்மதமாம்.. இப்போதான் பேசுனேன். ஒரு நல்ல நாள் பார்த்து உன்னைப் பார்க்க வராங்கடா” 
தந்தையாய் தாயிற்குமான சந்தோஷம் அவரிடம். ஆனால் துளியும் அவளிடம் இல்லை. இதழோரம் துளிப் புன்னகையுடன் தலையசைத்து எழ..
“நீ இரு.. இன்னைக்கு அப்பா உனக்காக சமைக்குறேன்.. ம்ம்” சந்தோசத்தை சமையலில் காட்டுகிறேன் என அவர் களமிறங்க..
கன்னி மனம் ‘இனி எல்லாம் அவன் செயல்’ என்றெண்ணியபடி வீற்றிருக்க.. நாற்காலியிலிருந்து சரிந்தது அவளது கைப்பை. அதை எடுத்து வைக்கும்போது விழிகளில் விழுந்தது அது.
சட்டென ஒரு ஐடியா..!
அதை கையில் எடுத்துக் கொண்டாள். 
சில நிமிடங்களில் ஸ்ரீராம் பார்மலில் இருந்து டீஷர்ட்டிற்கு மாறி வர, அங்கு காய்கறிகளோடு கதகளி ஆடிக்கொண்டிருந்தான் கோபிகேஷ். அதை சிறப்பாய் நறுக்கி முடித்தவன் இடுப்பை வளைத்து நெட்டி முறித்துவிட்டு
“ஞான் எந்து செய்யும் என்தே குருவாயூரப்பா!!” என்று மாவு பிணைய மோகினியாட்டத்தை துவக்க, நண்பனை பார்த்த ஸ்ரீராமின் அதரங்களில் அடக்கமாட்டாத சிரிப்பு.
“டேய்!! நகரு” என்று அவனை தள்ளியவன் மடமடவென குருமாவிற்கான ஏற்பாட்டை செய்துவிட்டு சப்பாத்திக்கு மாவும் பிணைத்து வைத்தான். 
ஐந்து வருட பேச்சிலர் வாழ்கை ஸ்ரீராமிற்கு சமைக்க கற்றுக்கொடுத்திருக்க.. கோபிக்கு காய் நறுக்க மட்டுமே கற்றுக்கொடுத்திருந்தது. 
ஸ்ரீராம் தேய்த்து கொடுக்க கோபி அதை வாங்கி தோசைக் கல்லில் போட்டெடுத்தான்.
“அந்த பொண்ணுகிட்ட என்ன பிரச்சனை உனக்கு” என ஸ்ரீராமே ஆரம்பித்தான்.
“ஒரு வாரம் முன்னாடி ஆபிஸ் முடிஞ்சு நான் சீக்கிரம் வந்துட்டேன். அன்னிக்குத்தான் இவங்களும் குடி வந்திருந்தாங்க. சரி புதுசா வந்தவங்களாச்சே ஏதாச்சும் உதவலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல அவங்க பிளாட் காலிங் பெல்லை அடிச்சேன். இவங்கதான் கதவை திறந்தாங்க. 
டூ யு வாண்ட் எனி ஹெல்ப்புனு தான் கேட்டேன் அதுக்குப்போய் கதவை முகத்துல அடிச்சமாதிரி சாத்திட்டு போய்ட்டாங்க.. ஜஸ்ட் மிஸ்.. இல்லை என் மூக்குல மூணு பிளாஸ்டர் போட்ருக்கணும்” கொட்டோ கொட்டென்று கொட்டினான் மனதை.
அவர்களது காலிங் பெல்லை அழுத்திவிட்டு இவன் காத்திருக்க அவள் தான் கதவைத் திறந்தாள். 
இவனோ ‘ஹேய் பியூடிபியுல்! டூ யூ வாண்ட் எனி ஹெல்ப்..?’ என்று கேட்டுவைக்க, படாரென கதவை சாற்றிச் சென்றிருந்தாள்.  அதை எண்ணி பார்த்த கோபிகேஷ்.. தலையை சிலுப்பிக்கொண்டான்.
அதை கொண்டே கோபி வரும் நேரம் பார்த்து நற்பவி லிஃப்டை மூடிக்கொள்வதெல்லாம்.. 
“நீ அவ கிட்ட எதோ வம்பு பண்ணிருப்ப.. அதான் அப்படி நடந்திருப்பா”  என்றான் ஸ்ரீராம் சரியாக.
திருத்திருத்தவனுக்கு சரியாக அழைப்பு வர,
“ஆறான்னு பறையுறது இவட சிக்னல் இல்லா” என தப்பித்துக்கொண்டு வெளியேறினான்.
இப்போது ஸ்ரீராமின் கைபேசி இசைக்க.. ரங்கராஜனிடம் இருந்து தான் அழைப்பு.  எடுத்து காதிற்கு கொடுத்தான். 
“தம்பி உங்களுக்கு நேரம் நல்லா இருக்குது போங்க. சின்னவரு கிட்ட பேசிட்டேன் இடத்தை உங்களுக்கு குடுக்க ஒத்துக்கிட்டாரு. நீங்க எப்போ கிரயத்தை வெச்சுக்கலாம்னு சொல்றீங்களோ அப்போ வெச்சுக்கலாம்” என்றார்.
“நான் பார்த்துட்டு சொல்றேன்ங்க” என்றான்.
“அப்புறம் தம்பி என்னையும் கொஞ்சம்” என்று இழுக்க 
“எல்லாம் நல்லபடியா முடியட்டும் உங்களுக்கு செய்யாமையா..” என்றிட, சின்னாம்பாளையமே அதிரும்படி ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு வைத்தார்.
கோபிகேஷ் சென்று வெகுநேரமாக.. தயாரித்த உணவை டேபிளில் எடுத்து வைத்துவிட்டு அவனை அழைக்க வெளியே வந்தான் ஸ்ரீராம். 
காரிடோரில் நடந்துகொண்டே போன் பேசிக்கொண்டிருந்த கோபி கீழே எதையோ மிதித்துவிட்டு பின் என்னவென்று பார்த்தபோது.. கை காலெல்லாம் நடுங்க “ஐயோ பாம்பு” என்று அலறியடித்து மயங்கி சரிந்திருந்தான்.
சில மணித்துளிகளில் அவனுக்கு விழிப்புவர சுற்றிலும் நோக்கினான். அவன் அறையில் படுத்திருக்க அவனை சுற்றிலும் கிரிஜா மாமி, சௌகிதார் சண்முகம், ராமநாதன், ஸ்ரீராம் உட்பட இன்னும் சிலர் நின்றுகொண்டிருந்தனர். 
அதற்குள் விஷயம் அறிந்து இன்னும் சிலர் வருகை புரிய, முதலில் அனைவரும் தன் மீதுள்ள பாசத்தால் வருகிறார்கள் என்றெண்ணியிருந்த கோபிக்கு பேரதிர்ச்சி. 
“அட என்ன தம்பி குழந்தைக வெச்சு விளையாடுற பொம்மை பாம்புக்கு போய் மயக்கமே போட்டு விழுந்துருக்கீங்க” என்று சொல்லி சிரித்தார் சண்முகம்.
‘என்னது பொம்மை பாம்பா.. எவனோ நமக்கு வேண்டாதவன் செஞ்ச விஷம வேலைதான் இது’ என்றவன் யோசித்திருக்க 
“ஏன்டா அம்பி மாமாலாம் மலைபாம்பையே கைல புடிப்பார் நீ என்னடானா பேடியா இருக்கையே” என கிரிஜா மாமி கிண்டல் செய்ய
‘அந்தாளு கரப்பான் பூச்சிக்கே மயங்கி விழுவார் அதுதெரியாம பந்தா காட்டுது மாமி’ என மைண்ட்வாய்சில் பேசியவன்
“வெந்த புண்ல வேலை பாய்க்காம போங்கோ மாமி” என்றதும் நலம் விசாரித்தபடி அனைவரும் சென்றனர்.
“ஒடம்ப பார்த்துக்கோங்க தம்பி” என ராமநாதனும் கூறிச் செல்ல.. சிறிது நேரத்தில் மீண்டும் காலிங் பெல் ஒலிக்க ஸ்ரீராம் சென்று கதவை திறந்தான்.
நற்பவி தான் நின்றிருந்தாள்.
அவன் விலகி வழிவிட உள்ளே வந்தவள் கோபியிடம் கண்களை சுருக்கி காதை பிடித்து மன்னிப்பை யாசிக்க.. அவனுக்கு வருத்தமாய் போனது, அவளிடம் எதற்கு வம்பை வளர்த்தோம் என.
“தப்பெல்லாம் என்மேலதான்.. அம் ரியலி சாரி” என்று மன்னிப்பு கேட்டவன் 
“உங்களுக்கு எதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுங்க அஸ் அ பிரதரா நான் இருக்கேன்” என  
அவளிடம் அழகிய புன்னகை. 
அதனோடே அவள் அருகிலிருந்த ஸ்ரீராமை நிமிர்ந்து பார்க்க.. அவன் குறுகுறுவென பார்த்திருந்தான். 
சிறு பதற்றம் பாவையிடம்.. அவன் பார்வையினால். விடைபெற்று வெளியேற எத்தனிக்க..
“பவி ஒரு நிமிஷம்..!!” அழைத்தவன்
‘பவியோட பழிவாங்கும் படலம் கண்டுகொண்டானோ..??’
“இதையும் எடுத்துட்டு போ” என்றிருந்தான். 
அவன் காட்டிய திசையில் இருந்தது அந்த ரப்பர் பாம்பு. அவனைப் பார்த்து திருதிருத்தவள் பின் அதை தூக்கிக்கொண்டு இடத்தை காலிசெய்தாள். 
அவள் சென்றதும் “எதுக்கு அதை அவகிட்ட கொடுத்த.. என்னை பயமுறுத்தின பாம்பை போட்டவனை கண்டுபிடிக்க போறாளா..?”
“ப்ச்.. ப்ச்..”
“அப்புறம்…?”
“பத்திரமா கொண்டு போய் அவ வீட்ல வைக்க..” 
“வாட்ட்ட்ட்…….?????”
பேசுவான்..

Advertisement