Advertisement

‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே’ – நக்கீரர் நீதி போல்
நெஞ்சில் ஈரம் இன்றி நாட்டினில் வஞ்சகர் பலர் இழைத்து வரும் குற்றங்களுக்குச் சாட்சி நானே..! சிக்ஷையும் நானே தருகிறேன்..!  என்பது வெய்யோனின் நீதி போலும்.
விடியலில் தொடங்கியது தொட்டு அத்தனை வெம்பல் அவனிடம்..! தலைநகரம் தவித்துக் கொண்டிருந்தது.
ஆனால்..
அதே தலைநகரில்.. முற்றும் முரணாய் குளிர்காற்றை நிரப்பிக்கொண்டு நின்றது அந்த அறை. 
மேற்கத்திய சாயலில் கோட் சூட்.. பார்மல்ஸ்.. அணிந்தபடி அங்கிள்ஸ்.. சிங்கிள்ஸ்.. இன்னும் சில சார்மிங் சாப்ட்வேர் எஞ்சினியர்களை அடக்கியபடி அமைதியாக இருந்த அறையில்.. அவன் சத்தம் மட்டும்.     
ப்ரொஜெக்டரில் ப்ரெசென்ட்டேஷன் போய்க்கொண்டிருக்க அவர்களது ப்ராஜெக்ட் குறித்து வந்திருக்கும் ஜெர்மன் க்ளையண்டுகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். 
இரண்டுமணி நேரம் முடிவடையும்போது அவன் வடிவமைத்த ஒர்கிங் மாடலை அவர்களது நிறுவனத்திலேயே தயாரித்து வெளியிட ஒப்புதல் அளித்து பல கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சிறு புன்னகை அவன் இதழ்களில்.. நிறைவின முகவரி அதில்.
“ராம்..!!”
“யெஸ் ஜான்..” என்றபடி அவர் அருகில் சென்றான்.
ஜான் அந்த நிறுவனத்தின் சென்னை கிளையின் சி.ஈ.ஓ.
“ஃபென்டாஸ்டிக் ஒர்க் மேன்..!!!!! யூ ஆல்வேஸ் ஃபைண்ட் எ வே டு கெட் இட் டன்.. அண்ட் டன் வெல்!!”  
மறையாத மகிழ்வுடன் மனதார வந்த பாராட்டை ஏற்றுக் கொண்டான்.  
அடுத்து அவர் “லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் ப்ளீஸ் ஜாயின் அஸ் பார் லன்ச்”  என வந்திருந்த கிளைன்ட்ஸ் அனைவரையும் உணவருந்த அழைத்தார்.
அவர்கள் அனைவரும் மீட்டிங் ஹால் விட்டு வெளியேறச் செல்லும்போது, “கேன் யு கம் அண்ட்  ஜாயின் அஸ்” என்று ஸ்ரீராமையும் தங்களோடு அழைக்க.. ஜானும் வருமாறு கண்ணசைத்தார்.
“ஸூர்.. இட்ஸ் மை ப்ளஷர்” என நாகரிகம் கருதி  மறுக்காது உடன் சென்றான். 
உணவருந்தியபின் அவனது இருக்கைக்குத் திரும்பியவன் கைகளை கோர்த்து நெற்றியில் வைத்தபடி யோசனையில் ஆழ்ந்திருக்க, சில மணித்துளிகளிலேயே தன்னை வந்து சந்திக்குமாறு ஜானிடம் இருந்து அழைப்பு வந்தது.
“மே ஐ கமின் இன் ஜான் “
“ப்ளீஸ் கம்” என்றவர் அவனுக்கான முக்கிய செய்தியை தன்னோடு வைத்திருந்தார்.
“விசா அப்ளை பண்ணிடுங்க” என்று மட்டும் கூறி அவனை பார்க்க..
அவன் யூகித்துதான் இருந்தான் இருந்தாலும், ‘எதற்கு’ என்பதாய் பார்த்திட 
“தே வாண்ட் யு டு ப்ரொசீட்.. டூ த்ரீ மந்த்ஸ்ல ஜெர்மன் போகணும். ஹெட் ஆபிஸ்ல இருந்து நீங்க ப்ராஜெக்ட் டெவெலப் பண்றமாதிரி இருக்கும். கெட் யுவர் டீம் அலாங் வித் யு”  என்றார்.
அகம் ஆனந்தத்தில் மிதக்க அது முகத்தில் பிரதிபலிக்க.. ஜான் அவனைத்தான் பார்த்திருந்தார். அவனைப்போல் ஒருவன் அவர்களது நிறுவனத்திற்கு கிடைத்ததில் பெருமை தான் அவருக்கும்.
ஸ்ரீராம் எழுந்துநின்று கைகுலுக்க..
“ஆல் தி பெஸ்ட்” என்றார் மனதார.
அவன் விடைபெறச்செல்லும் போது “கதிர் ஒரு நிமிஷம்” என்றார். 
அவன் பெயரை அப்படி அழைத்தால் அவனோடு பேசப்போகும் விஷயம் இன்பார்மல் என்றர்த்தம். அவன் காத்திருக்க..
“மெர்லின் உன்ன பார்க்கணும்னு சொன்னா ஒருநாள் வீட்டுக்கு வாயேன்” என்றழைக்க, அவசியம் வருவதாய் தெரிவித்து அங்கிருந்து கிளம்பினான்.
அவனது அறைக்கு வந்தவன், டையை கொஞ்சம் தளர்த்திவிட்டு ஏசியை அதிகப்படுத்திவிட்டு கண்மூடி அமர்ந்திருந்தான் இருக்கையில். 
அறையின் நிசப்தம் மனதிற்கு இதமூட்ட… இதம் தந்த இனிமையில் இருந்தவனது மனம் அளவில்லா மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது.  
அவனுக்கு கிடைத்திருக்கும் வெற்றி மற்றுமே அதற்கு காரணம் இல்லை.. அதையும் தாண்டி என்னவென்று அவன் மட்டுமே அறிவான்.
லிட்டில் ப்ளவர்ஸ்..
ஐவிரல்களையும் மடக்கி சில நொடிகள்.. பின் பெருவிரலை மோதிரவிரலோடு இணைத்து சில நொடிகள்.. அதன்பின் பிறை சந்திரன் போல் விரல்களை சுருக்கி சில நொடிகள் என சைகை மொழியில் ஆங்கில எழுத்துக்களை பயிற்றுவித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவள்.. நற்பவி நங்கை.. 
லிட்டில் ப்ளவர்ஸ்.. அது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத செல்வங்களுக்கான சிறப்புப் பள்ளி. அவள் செய்வதுபோலவே பார்த்து விரல்களை அசைத்துக்கொண்டிருந்தன சின்னஞ்சிறு மலர்கள். அத்தனை அமைதியான அழகான உலகம் அவர்களுடையது.
குறை..!  அது படைக்கப்பட்டவன் குறையல்ல..  படைத்தவன் குறை.. படைத்தவனால் படைக்கப்பட்டவர்களுக்குள் குறை நிறை கிடையாது. அனைவரும் சமமே.
நற்பவியின் மொழியும் கூட வேறுதான். அவள் பேசும் மொழியை பிறர் அறிய அவகாசமெடுக்கும். 
மௌனத்தை வார்த்தைகளாய் கொண்ட மொழி.. அவள் மொழி.
தான் எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு குறைந்தவள் அல்ல என்ற எண்ணம் எப்போதும் அவளிடம் உண்டு. சாதிக்கத் துடிக்கும் நெஞ்சத்திற்கு இதெல்லாம் ஒரு தடையல்ல என்ற தீர்க்கமான சிந்தனையும் உண்டு.  
முதலில் இளங்கலை இசையை பயின்றவள் பின் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாதோருக்கான சைகை மொழியை பயின்று இன்று பலருக்கும் அதன் மூலம் கல்வி பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறாள்.
அவர்களுக்கு பாடம் எடுப்பதில் அத்தனை ஆர்வம் நற்பவிக்கு. அவளது அகமும் முகமும் மலர்ந்திருக்க.. அது அங்குள்ள குட்டி குட்டி மலர்களையும் தொற்றிக்கொண்டது.
கரும்பலகையின் புறம் திரும்பியவள் அதில் சில எழுத்துக்களை எழுதிவிட்டு திரும்ப.. அவள் எழுதியதை கவனித்து தங்களது நோட்டில் எழுதிக் கொண்டிருந்தனர் மாணவர்கள்.
அவர்கள் எழுதிமுடிக்க காத்திருந்தவளுக்கு காலையில் நிகழ்ந்த சம்பவம் நினைவில் காட்சியாக.
“ஏம்மா பார்த்து வரமாட்டே நேரா லாரிக்குள்ள வந்து விழற நான் பிரேக் போடாம இருந்திருந்தா என்ன ஆவுறது!!” என்று லாரி டிரைவர் கத்திக்கொண்டிருக்க.. 
அவள் மீது தவறில்லாதிருக்க அவனை நேராக முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் நற்பவி.
“அதான் ஒருத்தருக்கும் அடிபடலயேப்பா வண்டிய எடுங்க ரோட்டை பிளாக் பண்ணிட்டு ஏன் பிரச்சனை பண்றீங்க” என்று அங்கிருப்போர் குரல் எல்லாம் அவனிடம் எடுபடவில்லை.
“ஏம்மா இவ்ளோ பேசறேன் பதில் சொல்லாம நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என அவன் பஞ்சாயத்தை கைவிடாது பேசிக்கொண்டிருக்க.. 
ஒரு பெருமூச்சை வெளியிட்டவள், தனக்கு பேச வராது என்பதை சைகையில் தெரிவித்தாள்.
“சுத்தம்.. இது வேறையா..?” 
இப்படியும் சில மனிதர்கள் இன்னும் இருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவன். 
அதோடு நின்றானா..? இவளுக்கும் சேர்த்து அல்லவா பேசித் தொலைத்தான்.
‘இவன் எல்லாம் என்ன ஜென்மமோ’ என உக்கிரமாய் நின்றிருந்தவள் மனம் 
‘ஓங்கி ஒன்னு வெச்சிட்டு உன் வழியைப் பார்த்துப் போ.. அன்வாண்டட் நியூசென்ஸ்..’ எனக் கட்டளையிட்டது. 
சரியாக அந்தக் கணம் 
“எனி ப்ரப்ளேம்?” என்று அவளுக்கு பின்னால் கம்பீரமாய் ஒரு குரல்.
அதிர்ந்தே திரும்பினாள்.
ஆறடியல்ல.. ஆனால் அவள் அண்ணாந்து பார்க்கும் உயரம். 
‘ஐயம் அ டெக்கி’ டேக் சுமந்த தோற்றத்தில் அவள் அருகில்..
‘இவனா..? விட்டுட்டு வந்ததுக்கு திட்டிட்டு போக வந்தானோ..?’
‘இல்லை..!’ எனும் பதிலோடு எதிர் கொண்டது அவன் விழிகள்.
அதி கவனமும் விசாரணை தோரணையுமாய், இவளது ஸ்கூட்டி மற்றும்  எதிரே நின்ற லாரி இரண்டையும் அவசரமின்றி ஆராய்ந்தான்.  
லாரிக்கு ஒன்றுமில்லை.. லாரி தான் இவளது ஸ்கூட்டிக்கு சாரி சொல்லும் நிலை.. லைட் டேமேஜ்.
“இந்த பொண்ணுமேல தான் தப்பு தம்பி” என லாரி ட்ரைவர் பஞ்சாயத்து செய்ய வந்தவனிடம் பற்ற வைக்க..
அவன் நற்பவியைத் தான் பார்த்தான். 
விழிகளை பெரிதாய் விரித்தவள் அவனிடம் வேகமாய் ‘இல்லை’ என்று தலையசைத்து மீண்டும் லாரி ட்ரைவரை முறைத்துவைத்தாள்.
அவனது கைபேசியை எடுத்து, லாரியை போட்டோ எடுத்துக்கொண்டு  நம்பரையும் குறித்துக்கொள்ள.. 
பேசுவதை விடுத்து அவனை கவனித்த ட்ரைவர் “தம்பி எதுக்கு போட்டோ எடுக்கறீங்க?” என்றான் குரலுயர்த்தி.
பதில் கூறாது அவனையும் வளைத்து வளைத்து படமெடுக்க 
“சொல்லுங்க தம்பி எதுக்கு என்னையும் போட்டோ எடுக்கறீங்க” கொஞ்சம் குரல் கம்மியது டிரைவருக்கு.
“உங்கமேல பப்ளிக் நியுசென்ஸ் கேஸ் போடப்போறேன் அதுக்குத்தான்” என்றான் சாதாரணமாக.
“என்ன தம்பி சொல்லறீங்க” என அதிர
“பின்ன பொதுமக்களுக்கு இடையூறு தானே செய்யுறீங்க.. உங்களுக்குத்தான் வேலை இல்லைனா எங்களுக்குமா இல்ல? இப்போ நீங்க வண்டிய எடுக்கலைனா நான் கேஸ் கொடுக்கத்தான் போறேன். அப்பறம் உங்க இஷ்டம்” என்ற அடுத்த சில நொடிகளில் வண்டியும் அவனும் இருந்ததற்கான அடையாளம் இன்றி மறைந்திருந்தது. 
கூட்டமும் கலைந்துவிட, “சபாஷ் தம்பி இந்தமாதிரி ஆளுங்கள இப்படிதான் கவனிக்கணும்” என அவனை பாராட்டியபடி மீதம் இருந்த சிலரும் கிளம்பிச்செல்ல.. அவனும் அவளும் மட்டும் அங்கு.
தன் நிலை இறங்கி சட்டையைப் பிடித்து சண்டையிடவில்லை.. சத்தமிடவில்லை.. ஆனால் அமைதியாக காரியம் சாதித்து முடித்துவிட்டான். 
பாராட்டும் விழிகளுடன் இவள் பார்த்திருக்க.. ஸ்கூட்டியை பார்த்திருந்தவன் இவள் புறம் திரும்ப.. 
இவளுக்குள் குழப்பம்.
சாரி சொல்வதா? தாங்க்ஸ் சொல்வதா? சொல்லத்தான் வேண்டுமா..? 
அவனுமே நகராமல் நிற்க.. தன் இதழ்மேல் கைவைத்து நன்றியை கூறிவிட்டு வேகமாய் வண்டியை கிளப்ப.. அது நகர மறுத்தது. 
இறங்கி ஒரு உதை விட்டும் பார்த்தாள். ம்கூம் பயனில்லை.
“கீழ இறங்கு நான் ஸ்டார்ட் பண்றேன்” 
‘இன்றுதான் பார்த்தான் அதற்குள் ஒருமையில் எந்த உரிமையில் அழைக்கிறான்…? மரியாதை வேண்டும்..!’ என்றது மனம்.
சிறு கோவம்.. அதை அவன் சொல் மறுத்து.. வண்டியை விட்டு இறங்காது.. அவளே முயற்சிக்க.. அவன் அதரங்களில் அழகிய புன்னகை அவளைக் கண்டுகொண்டு.
“இறங்குங்க நான் ஹெல்ப் பண்றேன்” தன் சொல்லில் திருத்தம் செய்தான்..
‘மைன்ட் ரீடிங் பண்றானா..?’ 
இல்லை அவளைப் படித்தான். அவளிடம் யார் சொல்ல..?
“என்னை அப்பறம் ஜட்ஜ் பண்ணலாம் சீக்கிரம் இறங்குங்க..”  
அவன் ஸ்டார்ட் செய்ய வண்டி ஸ்டார்ட்டாகி இருந்தது.
அவளிடம் ஒப்படைத்துவிட்டு “நீங்க கிளம்புங்க” என்றுவிட்டு நகர்ந்துகொண்டான் .
அவளோடு பேசும்போது அவள் வலது நெற்றியில் இருக்கும் தழும்பை நொடிக்கு ஒருமுறை அவன் கண்கள் தழுவுவதை கவனித்துதான் இருந்தாள். 
அவன் கிளம்பச்செல்ல.. நற்பவி அவள் ஸ்கூட்டியின் ஹாரனை ஒலித்து அவனை அழைக்க, அவனும் திரும்பினான்.   
கண்களை சுருக்கி காதை பிடித்துகொண்டாள், 
‘சாரி..!!’
லிப்டில் லிப்ட் கொடுக்காத சம்பவத்திற்காக.
“இட்ஸ் ஓகே.. நாளைக்கு நான் வர்றத பார்த்தா நிறுத்துங்க” என்றான் சிறு புன்னகையோடு.
சட்டென அவன் ஏற்றுக்கொண்ட விதமும் புன்னகையும் அவளுக்குப் பிடித்திருந்தது.. அவளிடம் இல்லாத ஒன்று..! 
அவனை நோக்கி நீட்டப்பட்டிருந்தது அவளது மென்கரம். 
அவன் யோசனையோடு நிமிர்ந்து அவள் முகம் காண.. இதழ்களில் விரிந்திருந்த புன்னகையோடு நின்றிருந்தாள். 
‘என்ன ரொம்ப யோசிக்குறான்.. ஒருவேளை ஷை டைப்போ..? பார்த்தா அப்படி தெரியலையே…!’ மேலும் கீழுமாய் அவள் விழிகள் ஸ்கேன் செய்ய..
அவள் கையை அழுந்தப்பற்றி குலுக்கியவன்
“ஸ்ரீராம்.. ஸ்ரீராம் கதிராயன்” அறிமுகம் செய்து கொண்டான்.
அவள் கைபேசியை எடுத்து அதில் தனது பெயரை டைப் செய்து அவன் முன் நீட்டினாள். 
ந..ற்..ப..வி.. 
மெல்ல உச்சரித்தவன் “நைஸ் நேம்” என்றதும்.. இதழ்களின் மேல் விரல்களை வைத்து நன்றி தெரிவித்தாள்.
அவன் அவளது ஒவ்வொரு செய்கைகளையும் கவனிக்க..  கவனிக்கும் அவனை கூர்ந்து கவனித்தாள் அவள். 
“ஓகே எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு.. பார்க்கலாம்” என அவன் கிளம்பியிருந்தான்.
‘இதற்கு முன் இவனை எங்காவது சந்தித்திருக்கிறோமா..!’ என யோசனையோடு நின்றிருந்தவளின் கையை ஒரு சிறுமி சுரண்ட நினைவுக்கு வந்தவள் பாடத்தைத் தொடர்ந்தாள்.
அலுவலகத்தில்.. ஸ்ரீராம் அவனது மடிக்கணினியில் ரிப்போர்ட்டை சரிபார்த்துக் கொண்டிருக்க, கைப்பேசி இசைத்தது.
“நீங்க கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க கூப்பிடறேன்” என அங்கிருந்தவனை வெளியனுப்பிவிட்டு அதை எடுத்து காதிற்குக் கொடுத்தான்.
“தம்பி நான் ரங்கராஜன் பேசுறேன்” அறிவித்து முடிப்பதற்குள்
“சொல்லுங்க.. அந்த லேண்ட் விஷயம் என ஆச்சு?” என்று விசயத்திற்கு வந்திருந்தான்.
“அந்த இடம் மொத்தம் பத்து ஏக்கர்ங் தம்பி. ஆறு ஏக்கர் ஒருத்தர் கிட்டயும் மீதி நாலு ஏக்கர் அவரு தம்பிக்கும் பாகம் இருக்கு” 
அரைத்த மாவையே அவர் அரைக்க..
“நாங்களும் அதே ஊர் தானங்க! நீங்க சொல்றதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான். அவங்க இடத்தை குடுக்கறதா சொன்னதால தானே உங்கள வெச்சு பேசிமுடிக்க சொல்லிருந்தோம்” என்றதும் சொல்லவந்ததை சொல்லலானார்.
“அதுதாங் தம்பி.. பெரியவரு இடத்தை கொடுக்கிறதா சொல்லிட்டாருங்.. நம்ம பேசி முடிச்சிரலாம். சின்னவரு கொடுக்கறமாதிரி தெரியலைங் தம்பி. கொடுத்தாலும் தொகை அதிகம் வெச்சுக் கொடுப்பாரு போலங்”
“எவ்வளவு எதிர்பார்க்குறாருன்னு தெரிஞ்சிட்டுது சொல்லுங்க.. எனக்கு அந்த இடம் மொத்தமா வேணும்” 
“அட என்னங் தம்பி நீங்க! இதைவிட நல்ல இடமெல்லாம் முடிச்சு தரேன்னு சொல்றேன் விலை வெச்சாலும் பரவாயில்ல அந்த இடம் தான் வேணும்னு சொல்லறீங்க.!!”  
“எனக்கு அந்த இடம் மட்டும் தான் வேணும்” அழுத்தமாய் கூறியவன் 
“முடிச்சுக்கொடுத்தா உங்களையும் நல்லா கவனிச்சிறலாம். நீங்க பேசிப்பார்த்துட்டு சொல்லுங்க” என்று பேசும் விதத்தில் பேச
“சரிங் தம்பி சின்னவரு வீட்டுக்குப் போய் ஒருமுறை பேசிப்பார்த்துட்டு சொல்றேன்.. அப்போ வைக்கிறேன்ங் தம்பி” என்றதும் அழைப்பை துண்டித்துக்கொண்டார்.  
அவன் மனம் வேறு கணக்கு போட்டுக்கொண்டிருந்தது..
பேசுவான்…

Advertisement