Advertisement

அத்தியாயம் நான்கு :

அவளுடைய ஐயாவுக்கு திருமணம் என்பதில் செல்விக்குத் தான் மிகவும் சந்தோஷம். உற்சாகமாக எந்த வேலையை கொடுத்தாலும் செய்து கொண்டிருந்தாள். வீட்டில் அவளாகவே ஒவ்வொரு இடமாக தினமும் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

கோதை கூட. “இப்போ வேண்டாம். இன்னும் ஒரு மாசம் இருக்கு.. பக்கத்துல சுத்தம் பண்ணிக்கலாம்”, என்று கூறியும் கேட்கவில்லை.

வீட்டில் அவளுக்கு அதிகம் வேலை வைக்கும் எழிலரசி கூட அதிகமாக வேலை வைக்கவில்லை. அவள் அண்ணன் திட்டுவான் என்று பயம். 

வீட்டிலுள்ளவர்களுக்கு திருமணத்திற்கு உடைகள் எடுக்கும் போது, செல்விக்கும் எடுத்துக்கொடுக்கச் சொல்லி.. கோதையிடம் சொல்லிவிட்டான் சரவணன்.  வேலைக்காரர்களுக்கு எடுப்பது தான்.. இருந்தாலும் அவளுக்கு இரண்டு செட் எடுத்துக்கொடுக்க.. வாய் வார்த்தையாகவும் சொன்னான் சரவணன்.

அவளுக்கும் திருமணத்திற்கு புதுத்துணி எடுத்துக் கொடுத்தனர். எப்போதும் பாவாடை சட்டையையே போட்டுக்கொண்டிருந்த அந்த பெண்ணிற்கு தாவணி பாவாடை எடுத்துகொடுத்தனர். அது அசல் பட்டு அல்ல, ஏதோ ஜரிகை வைத்த பட்டு.. அவ்வளவு தான். இருந்தாலும் செல்விக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அவள் ஆயாவிடம் கொண்டு போய் காட்டிக் கொண்டிருந்தாள். வேறு காட்டுவதற்கு தான் ஆட்கள் இல்லையே.

 என்ன பேசினோம் தினமும்.. என்று கேட்டால், அது சொல்லத் தெரியாமலேயே.. சரவணனும் ராதிகாவும் பேசிக்கொண்டனர். தொலைபேசியில் பேசியது சற்று வேலை செய்தது. அவனோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் சகஜமாக பேசும் அளவிற்கு வந்திருந்தாள் ராதிகா.  

திருமணம் சரவணன் ஊரிலேயே.. மண்டபத்திலேயே வைத்திருந்தனர். எல்லா வேலைக்கும் ஆட்கள் வைத்திருந்ததால் செல்விக்கு வேலையில்லை. ஏவிய வேலையை செய்துகொண்டு மண்டபதிலேயே இருந்தாள். வேலை செய்வது ராதிகாவை எட்டிப் பார்ப்பது.. திரும்ப வேலை செய்வது.. ராதிகாவை எட்டிப் பார்ப்பது.. என்று இருந்தாள். அவளுக்கு ராதிக்காவைப் பார்க்க பார்க்க.. இவ்வளவு அழகாக இருப்பார்களா என்று தோன்றியது.

யாரோ ஒரு பெண் வந்து அடிக்கடி எட்டிப் பார்ப்பதை ராதிகாவும் பார்த்துக் கொண்டுதானிருந்தாள். “இந்த பெண் எதற்கு.. நம்மை இப்படிப் பார்க்கிறது.. தெரியலையே”, என்று அவள் யோசிக்கும் நேரம், அவளை விழி எடுத்தும் எடுக்காமலும் பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு நபர் சரவணன். அதை உணர்ந்த நிமிடம் அவளுள் பதட்டம் ஏறிக்கொண்டது.   

கோதை, செல்வியை வீட்டிற்குப் போய்விட்டு காலையில் வருமாறு கூறினார். அவளுக்கு அடுத்த நாள் எப்போது தான் விடியுமோ என்றிருந்தது. மணமக்களை விட.. அவள் அந்த நாளை அவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தாள் புதுத்துணிப் போட்டுக்கொள்ள.

காலையில் எழுந்து தலைக்கு குளித்து.. அந்த பாவாடை தாவணி போட்டுகொண்டவளை பார்த்து.. அவள் ஆயா திருஷ்டி சுற்றினார். “பெரிய எடத்து பொண்ணு போலவே இருக்கேடி செல்வி”, என்று. ஆம். பார்ப்பதற்கு அந்த உடையில் நன்றாக இருந்தாள் செல்வி.

திருமண வீட்டிற்கு வந்தவள்.. அங்கே வேலைக்காரர்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு சென்று நின்று கொண்டாள். புதிதாக தாவணிப் பாவாடையில் இருந்த கூச்சம்.. அவளை ஓடியாடி வேலை செய்ய முடியாமல் தடுத்தது. திருமணம் நடப்பதையே கண் எடுக்காமல் பார்த்திருந்தாள்.

ராதிகாவிற்கு பதட்டத்திற்கு சொல்லவே வேண்டாம். போனில் பேசும்போது முளைத்த தைரியமெல்லாம் காணாமல் போயிருந்தது. நேற்றிலிருந்து சரவணன் அருகிலேயே எல்லா சடங்கும் நடக்க.. அவளுக்கு அவர்கள் சொல்வது எல்லாம் செய்யத் தடுமாற்றமாக இருந்தது. ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டிருந்தாள்.

இப்போது மணவறையில் சரவணன் அருகில் அமர்த்திவைக்கப்பட்டாள். ஹோமகுண்ட புகை வேறு கண்களில் மோத.. கண்கள் எரிச்சல் எடுத்தது. பக்கத்தில் இருந்த உறவுபெண்மணியிடம் கர்சீப் தேட.. அதை பார்த்த சரவணன் தன்னுடையதை அவளுக்கு கொடுத்து.. “தொடைச்சுக்கோ” என்றான்.

பிறகு ராதிகாவிற்கோ.. சரவணனுக்கோ யோசிக்க நேரமில்லை. யோசிக்க விடாமல் அய்யர்.. “இதை செய்ங்க, அதை செய்ங்க..”, என்று செய்ய வேண்டிய சாங்கியங்களை ஏவிக்கொண்டே இருந்தார்.

ஒரு வழியாக சாங்கியங்கள் முடிந்து.. அய்யர் மந்திரங்கள் ஓத.. ராதிகாவின் அழகிய கழுத்தில் மங்கள நாண் பூட்டினான் சரவணன். அந்த க்ஷணத்தில் ராதிகாவிற்குத் தோன்றியது.. நான் இறக்கும் வரை.. இது என் கழுத்தை விட்டு இறங்க கூடாது.. என்பது தான். அவளையறியாமலேயே ஒரு அமைதி.. ஒரு பொறுப்புணர்ச்சி அவளுள் அமர்ந்து கொண்டது.

இவ்வளவு நாட்களாக சரவணப் பாண்டியன் மீது ராதிகாவிற்கு பெரிய ஆர்வமில்லை. அவன் எதிரேயே இருந்தாலும்.. நிமிர்ந்து பார்க்கத் தோன்றாத அவன் முகத்தை.. இப்போது பார்க்க வேண்டும் போல ஒரு ஆர்வம் தோன்றியது ராதிகாவிற்கு. இது திருமணம் கொடுத்த உணர்வா? 

மெதுவாக ஓரக்கண்ணால் அவன் முகத்தை பார்க்க முற்பட்டாள். சரியாகத் தெரியவில்லை. பின்பு அமைதியாக அமர்ந்து கொண்டாள். திருமண வைபவம், எல்லா சடங்கு சம்பிரதாயத்துடன் இனிதே நடை பெற்றுக் கொண்டிருந்தது.

செல்விக்கு இதையெல்லாம் பார்க்கப் பார்க்க மனதில் இனம் புரியாத சந்தோஷம். அதிலும் ராதிகாவை பார்க்கப் பார்க்க அவளுக்கு சலிக்கவில்லை. விழியெடுக்காமல் பார்த்திருந்தாள்.

இன்றும்.. அருளும் அவன் நண்பர்களும் அங்கு தான் இருந்தனர். அருளின் நண்பன், அருளிடமே சொன்னான்.. “டேய் இன்னைக்குப் பாருடா.. உங்க வேலைக்காரப் பொண்ணு எவ்வளவு அழகா இருக்குதுன்னு”, என்று மறுபடியும் கூறினான்.

அப்போது தான் அருள் செல்வியை பார்த்தான். பட்டுப்பாவாடையில், அவள் வயதிற்கு அவள்.. கண்களுக்கு ரம்மியமாக தோன்றினாள். இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள அருளுக்கு மனமில்லை.

“நீ வேற ஏண்டா..”, என்று நண்பனை கடிந்தவன்.. “பாரு, கல்யாண வீட்ல எவ்வளவு பொண்ணிருக்கு.. நீ ஏண்டா வேலைக்காரப் பொண்ணையே பார்த்துட்டு இருக்க”, என்று திட்டினான்.

அப்போது பார்த்து.. அவர்களைப் பார்த்த செல்விக்கு.. அவர்கள் ஏதோ தன்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள்.. என்று நன்கு புரிந்தது. அருள் மேல் இருந்த காழ்புணர்ச்சி இன்னும் சற்று அதிகம் ஆகியது.

மதிய உணவு உண்ணும்போது தானாகவே ராதிகா சரவணனிடம் பேசினாள். அவளால், தன்னை இப்படி யார் பார்க்கிறார்கள்.. என்று தெரிந்து கொள்ள ஆர்வம் மேலோங்கியது. செல்வி தான் அப்படி பார்த்துக்கொண்டிருந்தாள்.

“யார் மாமா அது?. அந்த பொண்ணு என்னையே அடிக்கடி பார்த்துட்டு இருக்கு நேத்திலேர்ந்து..”

“யாரை சொல்ற”, என்று கேட்டான்.

“அதுதான்.. அந்த கதவோரமா நின்னுட்டு இருக்குள்ள.. அந்த பொண்ணு”, என்று செல்வியைக் காட்டினாள்.

“அதுவா”, என்று ஆச்சர்யப்பட்டவன்.. அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த செல்வியை பக்கத்தில் அழைத்தான். அவன் அழைத்ததும் உடனே அருகில் வந்தாள்.

“என்ன செல்வி.. இந்த அக்காவையே விடாம பார்த்துட்டு இருக்கியா நீ நேத்திலேர்ந்து..”

அந்த சிறுமி அவர்களை பார்த்து புன்னகைத்தவள். “அக்கா! எம்புட்டு அழகா இருக்காங்க..” என்றாள்.

“எனக்கு முன்னாடியே தெரியும், அதுதான் இந்த அக்காவை கல்யாணம் கட்டியிருக்கேன்..” என்றான் சரவணன்.

அவன் பேச்சில் முகம் சிவந்த ராதிகா. “யார் இந்த பெண்”, என்பது போலப் பார்க்க..

“நம்ம வீட்ல வேலை செய்யற செல்வி. நீ பார்த்ததில்லை?”

“அந்த பொண்ணா நீ”, என்று அடையாளம் தெரிந்தவள்.. ‘’தாவணிப் பாவடையெல்லாம் போட்டிருக்கியா.. சட்டுன்னு அடையாளம் தெரியலை”, என்றாள் ராதிகா.

சரவணனும் ராதிகாவும் பேசியவுடன் செல்விக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது. மணமக்களே அவளை கூப்பிட்டு பேசியதால் பெருமையாக உணர்ந்தாள். பின்பு நிறைய நேரம் அவர்கள் இடத்தில் நிற்பது அழகல்ல.. என்று உணர்ந்து அந்த இடத்தை விட்டு சீக்கிரம் அகன்று விட்டாள்.

ராதிகாவிற்கு செல்வியை மிகவும் பிடித்துவிட்டது. தங்களின் அழகினை புகழ்பவர்களை.. எப்படி பெண்களுக்கு பிடிக்காமல் போகும்.  அதனால் செல்வியை மிகவும் பிடித்து விட்டது ராதிகாவிற்கு.

“நல்லப் பொண்ணு மாதிரி தெரியறா”, என்று சான்று வேறு கொடுத்தாள் சரவணனிடம்.

“நல்லப் பொண்ணு மாதிரி இல்லை. நல்லப் பொண்ணே தான்”, என்று பதில் சான்று கொடுத்தான் சரவணன்.

அவனுக்குத் தெரிந்து.. ராதிகா அவனிடம் நேருக்கு நேர்.. சகஜமாக முதன் முதலில் பேசுவது இந்த விஷயம். அந்த உற்சாகம் அவனையும் தொற்ற.. செல்வியைப் பற்றி நல்லவிதமாக அவன் நினைதிருந்ததை.. வாய் விட்டு சொல்ல வைத்தது.

திருமண வைபவம் நல்ல படியாக முடிந்து.. மண்டபத்தை காலி செய்து.. மணமக்களை வீட்டுக்கு அழைத்து வந்தனர். வந்து பாலும் பழமும் கொடுத்தப் பின்.. சற்று உறவுகள் எல்லாம் அமர.. அதன் பின்னரே செல்வி அவள் வீடு நோக்கி சென்றாள்.

சிறு பெண்ணின் மனதில் அத்தனை உற்சாகம். ஏதோ தாங்கள் வீட்டு கல்யாணம் போல. இங்கே அவள் வீட்டிற்கு வந்து.. அவள் ஆயாவிடம் திருமண நிகழ்வுகளை கதை கதையாக சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவள் ஆயாவும் ,அவள் சொல்லுவதை பாதி தூக்கத்தில் கேட்டும் கேட்காமலும் படுத்துக்கொண்டிருந்தார்.

ஆனால் அதை பற்றி எல்லாம் செல்வி கவலைப்படவில்லை. அவர் கேட்கிறாரோ இல்லையோ.. அவள் ஆர்வமாக சொல்லிக்கொண்டே உறங்கிவிட்டாள். 

இங்கே சரவணனுடன் தனியறையில் விடப்பட்டதும் ராதிகாவிற்கு சற்று முளைத்த தைரியம் விட்டது.  சரவணன் ஆவலாக ராதிகாவிற்காக காத்திருந்தான்.

“வா ராதிகா”, என்று அவளை பார்த்ததும் முகமன் வைக்க.. கையிலிருந்த பால் சொம்பை அங்கே இருந்த டேபிள் மேல் வைத்தவள்.. பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தபடி அவன் காலில் விழுந்து வணங்கப் போனாள்.

அவள் செய்கையை உணர்ந்தவன்.. அவசரமாக அவள் தோள்பற்றி தடுத்தான். “என்ன செய்யற.. அதெல்லாம் நமக்குள்ள தேவையில்ல”, என்றான்.

“அத்தை, போன உடனே காலில விழச்சொல்லி.. சொல்லி அனுப்பினாங்க.”

“எங்கம்மாவா”, என்றான் ஆச்சர்யமாக. 

“இல்லையில்லை, எங்கப்பாவோட தங்கச்சி. அந்த அத்தை”, என்றாள்.

“வேற என்ன சொன்னாங்க”, என்றான் கதை கேட்க விரும்புபவன் போல.

“வேற.. கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கின பிறகு.. உங்களுக்கு பால் கொடுத்துட்டு, என்னையும் குடிக்க சொன்னாங்க.. “

“அப்புறம்..”

“அப்புறம் ஒண்ணும் சொல்லலையே..” என்றாள். அவன் பேச்சு வரும் திசையை உணர்ந்து, முறைத்தபடி.

அவள் புரிந்துகொண்டாள் என்றுணர்ந்து “பால் சாப்பிடுவோமா”, என்றான்.

தலையாட்டியவள்.. பாலை அவனுக்கு கொடுத்தாள். சிறிது பருகி, உடனே அவன் கொடுக்க..

“இன்னும் குடிங்க”, என்றாள்.

“நீ குடி ராதிகா”, எனவும்.

“ப்ளீஸ்.. எனக்கு பாலே பிடிக்காது. நீங்க எனக்கு ஒரு ரெண்டு சொட்டு குடுத்தா போதும் சாங்கியத்துக்கு”, என்றாள் முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு.

“அப்படி எல்லாம் சொல்லகூடாது. நீயும் கொஞ்சம் குடிக்கணும்”, என்றான்.

“அச்சோ! புரிஞ்சிக்கங்க. எனக்கு பால் சாப்பிட்டாலே.. வாந்தி வர்ற மாதிரி இருக்கும்.”

“என்னது! ஒண்ணும் செய்யாமலே வாந்தி எடுக்க ஆரம்பிச்சிடுவியா. அது கஷ்டகாலம்.. நானே குடிக்கறேன்”, என்றான் பயந்தவன் போல.

ஏதோ ஒரு வகையில் தொல்லையில் இருந்து தப்பித்தால் போதும் என்று ராதிகாவும் விட்டு விட்டாள்.

அவள் கேட்டுகொண்டப் படி.. ஒரு சொட்டு பாலே மிச்சம் வைத்தான். அதை குடித்து வாந்தி எடுத்து.. அப்புறம் இந்த இரவு என்னாவது என்ற பயம் சரவணனுக்கு.

பிறகு அவன் அமர்ந்து..அவளை அருகமர்த்தி பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். “உனக்கு எப்போ இருந்து என்னை பிடிக்கும்”, என்றான்.

“நான் எப்போ உங்களை பிடிக்கும்னு சொன்னேன்”, என்றாள். பட்டென்று சொன்ன பிறகே சொன்னதை உணர்ந்தவள்.. “அது.. இல்லை.. வந்து.”, என்று இழுக்க..

“பரவாயில்லை.. எனக்கு உண்மையை பேசறவங்களைத் தான் பிடிக்கும். அப்போ உனக்கு என்னை பிடிக்காதா?”

“இல்லை.. அப்படி எல்லாம் எதுவுமில்லை.” என்றாள் பதட்டமாக.

“சரி.. இந்த கேள்வியை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு கேட்கிறேன். இப்போ நீ கேளு. எனக்கு உன்னை எப்போலேர்ந்து பிடிக்கும்னு..”

“இவருக்கு முன்பிருந்தே என்னை பிடிக்குமா.. ஏதோ அப்பா அம்மா சொன்னதுக்காக என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்கன்னு நினைச்சேன்.” என்று மனதிற்குள் நினைத்தவள். “எப்போலேர்ந்து..” என்றாள் வெளியில். 

“ரொம்ப வருஷமா. எனக்கு ஞாபகமில்லை. எனக்கு கல்யாணம் நடந்தா உன்னோடதான்னு நினைச்சிப்பேன்.”

“என்ன! ரொம்ப வருஷமா பிடிக்குமா?” என்றாள். இது அவளுக்கு புதிய செய்தி. “எனக்கு தெரியவே.. தெரியாதே” என்றாள் பெரிய விஷயம் போல. 

“அப்போல்லாம் நீ சின்ன பொண்ணு. உன்கிட்ட நான் அதை சொல்ற வயசு கிடையாது. உன்கிட்ட சொல்ற வயசு உனக்கு வந்துடிச்சின்னு நான் நினைச்சப்போ.. உனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் எங்கம்மா கிட்டையும்.. அப்பாகிட்டையும் சொல்லி, ரகளை பண்ணி.. உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்”,

இதெல்லாம் அவளுக்கு புதிய செய்தி. அவளின் வில்லன் அவளுக்கு ஹீரோவாக ஆரம்பித்தான்.

“என்ன ரகளை பண்ணுனீங்க”, என்றாள் ஆர்வமாக.

“நானென்ன கதையா சொல்றேன்..”

“சொல்லுங்களேன்”, என்றாள் கொஞ்சல் மொழியில். அவளுக்காக.. அவன் என்ன என்ன பண்ணினான்.. என்று அவளுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

“சாப்பிடாம இருந்தேன்”, என்றான்.

“இது ஒரு ரகளையா..”, என்றாள். அவளின் தைரியம் குறித்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. எப்படி.. அவனிடம் பேச பயப்படுபவள்.. இன்று அவனையே.. இது ஒரு விஷயமா என்பது போல கேள்வி கேட்கிறோமே என்று.

“பின்ன.. நான் பசியே தாங்க மாட்டேன். ஒரு நாள் முழுசும் சாப்பிடாம இருக்குறதா..” என்று அவளுக்கு விளக்கம் வேறு அளித்தான்.

சரவணனுக்கும், அவனுடைய இந்த பேச்சுக்கள் அவனுக்கு புதுமையே. யாருக்கும் இவ்வளவு விளக்கம் கொடுத்து.. தன் நிலையுணர்த்தி சகஜமாக பேசமாட்டான். ராதிகாவிடம் மடை திறந்த வெள்ளமென பேச்சுக்கள் வந்தன. போனில் பேசி பழகிவிட்டதாலா.. தன் மனைவி என்ற உணர்வு கொடுத்த உரிமையா.. தெரியவில்லை.

பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அவளை தன் வசப்படுத்த ஆரம்பித்திருந்தான். “வேலையில்லாதவனை கல்யாணம் செஞ்சிகிட்டோம்ன்னு உனக்கு வருத்தம் எதுவும் இல்லையே..” என்ற கேள்வியை.. அவள் முன் அவன் வைத்த போதே.. அவள் வசமிழக்க ஆரம்பிதிருந்தவள்.. அவன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை.

அவள் நிலையுணர்ந்த பிறகு.. அங்கே பேச்சிலா மௌனமே எல்லாவற்றிற்கும் பதிலானது. தன் வேலைகளை செவ்வனே செய்துகொள்ளும் திறமையுள்ளவனாக இருந்தான் சரவணன்.

காலையில் கண்விழிக்கும் போதே ராதிகா அருகில் இல்லை. ஒரு இனம் புரியாத நிறைவை உணர்ந்தான். அதைவிட தன் மனைவி அதை உணர்ந்தாளா என்று அவனுக்கு தெரியவேண்டி இருந்தது. தானும் எழுந்து குளித்து வெளியே போக.. அங்கே இருந்தாள் ராதிகா கோதையுடன்.

அவன் ராதிகாவின் முகத்தை ஆர்வமாக பார்க்க.. அவனை பார்க்க வெட்கியவளாக வேறெங்கோ பார்த்தாள். இருவருக்குள்ளும் ஒரு ரகசிய புன்னகை உதித்தது. அதற்குள்  அவனை பார்த்ததும் கோதை, “குளிச்சிட்டியா சரவணா”, என்றார்.

“ஆச்சும்மா”, என்று அவன் சொன்னவுடனே. “ரெண்டு பேரும் முதல்ல கோயிலுக்கு போயிட்டு வாங்க”, என்றார்.

“அம்மா காபி”, என்று சரவணன் கேட்டதற்கு கூட. “சாமி கும்பிட்டிட்டு தான், போ”, என்றதட்டினார்.

ராதிகாவை அழைத்துக்கொண்டு.. சரவணன் அவன் பைக்கில் கிளம்பினான். முதன் முறையாக சரவணனுடன் பைக்கில் பயணிக்க.. ராதிகா மிக சந்தோஷமாக உணர்ந்தாள்.

இவரைக் கண்டா.. நாம் இந்த பயம் பயந்து கொண்டிருந்தோம் என்றிருந்தது. அமைதியாக அவன் பின் அமர்ந்து வர.. சரவணனும் அமைதியாகவே வந்தான். ஒரே நாளில் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் வந்திருந்தது போலவே இருவருக்கும் தோற்றமளித்தது. முன்பு தோன்றிய சரவணனின் முரட்டுத் தோற்றம்.. ஒரே நாளில் அவளுக்கு பிடித்தத் தோற்றமாக மாறியிருந்தது.. அவளுக்கு ஆச்சர்யமே.

கடவுளை வணங்கி அங்கே இருந்த பிரகாரத்தில் அமர்ந்தனர். “நேத்து நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்டேனே ராதிகா”, என்றான் சரவணன்.

எந்தகேள்வி.. என்று சத்தியமாக அவளின் நினைவிற்கு வரவேயில்லை.

“என்ன கேள்வி.. எனக்கு ஞாபகம் வரலை”,

“என்னோட வேலை”,

“அதுக்கென்ன”,

“எக்ஸாம் பாஸ் பண்ணிட்டா ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆனா வேற மாதிரி ரிசல்ட் வந்துடுச்சின்னா..”

“வராது. ஏன் அபசகுனமா பேசறீங்க”,

“சரி பேசலை. என்ன வேலைன்னாவது உனக்கு தெரியுமா?”

“தெரியுமே.. போலீஸ் வேலை.”

“போலீஸ் வேலைன்னா என்ன? கான்ஸ்டபிளா?”, என்றான் அவளை சீண்டும் விதமாக.

“அது எனக்கு தெரியாதே..”

“நான் எழுதியிருக்கிற பரீட்சை.. ஐ பி ஸ். அது போலீஸ் ஆபீசருங்களுக்கான பரீட்சை..” என்று அவளுக்கு விளக்கினான். “பாஸ் பண்ணிட்டா.. எங்கவேணா வேலை வரும். அவங்க எந்த ஊருல போடறாங்களோ.. அங்க வேலைக்கு போற மாதிரி இருக்கும்.”

“எங்க போடுவாங்க.. ரொம்ப தூரமா போடுவாங்களா?”

“யாருக்குத் தெரியும்.”

“எங்க போட்டாலும்.. என்கூட வருவயில்ல?”

“இதென்ன கேள்வி.. இனி உங்ககூட வராம எங்க போவேன்?”

அவளின் பதிலில் திருப்தியுற்றவன், அவளின் இந்த பதிலுக்கு பிறகு வேலையைப் பற்றி நிறைய பேசினான். அவனுக்கு அந்த வேலை மேல் உள்ள ஆசை, மரியாதை, பக்தி, எல்லாம் அவன் பேச்சிலேயே தெரிந்தது. அதை பற்றியே வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தான்.

எங்கே போனவர்கள் ஆளையே காணோம்.. என்று கோதை போன் செய்த பிறகே.. நேரமாகிவிட்டதை உணர்ந்தவர்கள் அவசரமாக கிளம்பினார்கள்.

கோவிலுக்கு வெளியே வந்து வண்டி எடுக்கும்போது.. ராதிகா சுற்றி பார்வையை ஓடவிட , கோவிலுக்கு  பக்கத்திலேயே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. நல்ல பெரிய அரசு பள்ளி. அதன் முன்புறம் ஒரு பாட்டி.. கட்டில் போட்டு கொண்டிருக்க.. பக்கத்தில் செல்வி பள்ளிச் சீருடையில் நின்று கொண்டிருந்தாள்.

“மாமா”, என்று சரவணனை கூப்பிட்டுக் காட்டினாள். அவனும் அதை பார்க்கும்போது.. அங்கிருந்து செல்வியும் அவர்களைப் பார்த்திருந்தாள். இவர்களைப் பார்த்ததும், தன் ஆயாவிடம் சொல்லிவிட்டு ஓடி வந்தாள் இவர்களிடம்.

“கோயிலுக்கு வந்தீங்களா அக்கா”, என்றாள்.

“ஆமாம்”, என்பது போல தலையாட்டிய ராதிகா. “நீ எங்க இங்க நின்னுட்டு இருக்க, ஸ்கூலுக்கு போகாம..”

“அது, எங்க ஆயா கடை போடும். எடுத்து வச்சிட்டு நான் உள்ள போயிடுவேன்”, என்று சொல்லிக்  கொண்டிருக்கும்போதே அவர்களை நெருங்கி வந்த அவர்களின் ஆயா

“கும்புடுறன் சாமி”, என்றார் சரவணனை பார்த்து. “எப்படியிருக்கிற தாயி”, என்றார் ராதிகாவை பார்த்து.

“நல்லாயிருக்கோம்”, என்று ராதிகா பதிலளிக்க.

“பொழுதுக்கும் இவளுக்கு உங்களைப் பத்தி தான் பேச்சு தாயி”, என்றார் செல்வியை காட்டி.

புன்னகைத்தாள் ராதிகா.

“இவளை எப்படியாவது படிக்க வச்சு.. ஒரு வேலை வாங்கி குடுத்துடுங்க சாமி”, என்றார் சரவணனை பார்த்து.

“கட்டாயம் பாட்டி. கல்யாணம் கட்டி குடுக்கணும்னு நினைக்காம.. படிக்க வைக்கணும்னு நினைக்கறீங்க பாருங்க. அதுவே நல்ல விஷயம். அவ படிக்கறதுக்கு நாங்க உதவி பண்றோம்”, என்று ராதிகா பதிலளித்தாள்.

சரவணனும் அதை ஆமோதித்தான். “அதெல்லாம் பெரிய படிப்பே படிக்கலாம். அரசாங்கம் எல்லா சலுகையும் குடுக்குது. நீ நல்லா படி, என்ன?”, என்று செல்வியை பார்த்து சொல்ல அவள் வேகமாக தலையாட்டினாள்.

அவர்கள் கிளம்பி செல்ல, செல்வியின் ஆயா அவளைப் பார்த்து.. “பாரு அய்யா கூட உதவறேன்னு சொல்லியிருக்கார். நீ நல்லா படிக்கணும்”, என்று தன் பேத்தியிடம் சொல்லி பள்ளிக்கு அனுப்பினார்.

Advertisement