Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து :

அவளின் தவிப்பு அருளுக்கு நன்கு புரிந்தது. அதே சமயம் அவள், இந்த பத்து நாட்களாக புக்கை.. கையில் கூடத் தொடவில்லை என்று, அறிந்தே இருந்தான். இன்னும் அவளின் பரீட்ச்சைக்கு.. மூன்று மாதமே உள்ள நிலையில்.. அவளை தன்னோடு அழைத்துச் சென்றால் படிப்பாளா? மாட்டாளா? என்ற கேள்வி அவன் முன் பூதகரமாக தோன்றியது.

ஆனால்.. அவனின் யோசனைக்கு அவசியமே இல்லை.. என்பது போல, அவனை டிஸ்சார்ஜ் செய்தவுடனே.. சரவணன் செல்வியிடம் சொன்னான். “இனிமே, நீ ஹாஸ்டல் போகாத. வீட்டுக்கே வந்துடு.” என்று.

“இல்லை.. அவள் படிப்பு முடியட்டும்.” என்று இழுத்தான் அருள் அங்கேயே.

கேட்டுக் கொண்டிருந்த செல்விக்கு.. “ஐயோ.. இவன் காரியத்தையே கெடுக்கிறானே..” என்று அருளின் மீது கோபம் பொங்கியது.

அதற்கெல்லாம் அசையாமல்.. “அதெல்லாம் படிச்சிக்குவா.” என்று வாயை அடைத்துவிட்டான் சரவணன். இப்போது தான் செல்விக்கு மூச்சே சரியாக வந்தது.

இனியும்.. அவர்களை பிரித்து வைப்பது சரியில்லை என்று.. சரவணனிடம் ராதிகா ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டு இருந்தாள். அவள் பேச்சை மீறினால் தொலைத்துவிடுவாள்.. என்று தெரியும் சரவணனுக்கு.

பூபதி பாண்டியனுக்கும் கோதைக்கும்.. அவ்வளவாக இதில் ஆட்சேபணை இல்லை.. என்று சரவணனுக்குத் தெரியும். அவர்கள் செல்வியுடன் நன்றாக பேசுவர் என்று.. உடனே எதிர்பார்க்க முடியாது. நாளடைவில் எல்லாம் சரியாக வாய்ப்புகள் அதிகம்.. என்றே சரவணனுக்குத் தோன்றியது.

அதனால் தான்.. அவள் வீட்டிற்க்கே வரட்டும் என்று.. அருளிடமும் செல்வியிடமும் சொல்லிவிட்டான்.

சரவணன் தான்.. அருளையும் செல்வியையும், அருளின் வீட்டிற்கு கூட்டி வந்தான். அப்போது தான்.. அருளின் வீட்டிற்கு முதல் முதலாக வருகிறான் சரவணன். வீட்டில் ஒரு பொருளும் இல்லாமல்.. வீடே வெறிச்சோடி இருந்தது.

“என்னடா இப்படியிருக்கு வீடு. வீட்ல அடுப்பு கூட இல்லை.” என்று அவனை கடிந்து கொண்டிருந்தான்.

அப்போது பார்த்து கோதையும், பூபதி பாண்டியனும், ராதிகாவும் வர.. அவர்களுமே வீட்டின் கோலத்தை பார்த்து அதிர்ந்தனர்.

“ஏண்டா.. வீட்ல ஒரு பொருளும் இல்லை.” என்று கோதையும் அவனை கேள்வி கேட்டார்.

தனக்காக பார்க்கப் போய் தானே.. அவன் எல்லோரிடமும் பேச்சு வாங்குகிறான்.. என்று இருந்தது செல்விக்கு.

“எனக்கு சரியானதும்.. உடனே போய் வாங்கிடறேன்மா.” என்றான் அருள் .

“அதுவரைக்கும், என்ன சமைச்சி.. என்ன சாப்பிடுவீங்க..” என்று மறுபடியும் கேள்வி எழுப்பினார் கோதை.

“விடுங்கம்மா”, என்று அவரை சமாதானப்படுத்திய சரவணன்.. “நான், ராதிகாவை கூட்டிட்டுப் போய் எல்லாம் வாங்கிடறேன்”, என்றான்.

“பணம் நான் தர்றேன் சரவணா.” என்றான் அருள்.

“பொண்ணை வளர்த்து.. இந்தளவுக்கு ஆளாக்கி விட்டிருக்கிறோம். எங்களுக்கு சீர் செய்ய தெரியாதாடா? நீ இதுல எல்லாம் தலையிடாத. நாங்க வாங்கறோம்.” என்றான் ஒரு கண்டிப்போடு சரவணன்.

“சரியா சொன்னீங்க.” என்று அதை ஆமோதித்தாள் ராதிகா.. கண்களில் மெச்சுதலோடு தன் கணவனைப் பார்த்தபடி.

செல்விக்கு கண்கள் பணித்து விட்டது. இவர்களின் அன்புக்கு, தான் என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று.

கோதைக்கும் ஆச்சர்யம் தான். என்ன கண்டுவிட்டார்கள்.. இந்தப் பெண்ணிடம். தன் பெரிய மகன், தன் பெண் போல பார்த்துக்கொள்கிறான். தன் சின்ன மகன், அவள் மேல் அவ்வளவு காதல் கொண்டுள்ளான். அவளின் ஜாதகம், அவ்வளவு அருமையாய் இருக்கிறது போல.. என்று நினைத்துக் கொண்டார்.                         

அவரால்.. அவர்கள் போல ஒட்டமுடியும்.. என்று தோன்றவில்லை. இருந்தாலும்.. வெறுப்பும் காட்டமுடியவில்லை. தன் மகனின் வாழ்க்கை அல்லவா. ஒத்த கருத்தே பூபதி பாண்டியனுக்கு. உடனே, செல்வியுடன் அப்படி ஒட்டி உறவாட முடியவில்லை என்றாலும்.. காலத்தின் போக்கில் சரியாகிவிடும், என்ற நம்பிக்கை அவருக்கும் இருந்தது.

அன்றே.. வீட்டிற்கு வேண்டிய சாமானை.. வாங்கத் துவங்கி விட்டான் சரவணன். சமையலறை அத்தியாவசிய பொருட்களை உடனே வாங்கினர். எழிலரசியும் அப்போது பார்த்து.. அண்ணனைப் பார்க்க வந்தாள்.

அடுத்த நாள் காலையிலேயே, எல்லாப் பொருட்களையும்.. ஆட்களின் துணையுடன் ராதிகா ஒதுங்க வைத்து.. எழிலரசியின் உதவியுடன் வீட்டிற்கு பாலை காச்சினாள். எல்லாவற்றையும் ஒரு பிரமிப்போடே பார்த்திருந்தாள் செல்வி.

அருளும் எதிர்பார்க்கவில்லை. சரவணன் இப்படி.. எல்லா செலவையும் தானே ஏற்றுக்கொண்டு செய்வான் என்று.

மற்றொரு முறை கூட சொல்லிப் பார்த்தான். “போதும்டா. வேற எல்லாம் நான் வாங்கிக்கறேன்.” என்று.

ராதிகா ஒத்துக்கொள்ளவேயில்லை. “அவளோட பொறுப்பை நாங்க தான் ஏத்துட்டு இருக்கோம். நாங்க செய்வோம்.” என்றாள்.

செய்வதை செய்யட்டும் என்று அருளும் விட்டு விட்டான். செல்விக்குள் எழுந்த நன்றி உணர்ச்சிக்கு அளவே இல்லை. ஒரே நாளில்.. அவளது கனவு வீட்டை அமைத்துக் கொடுத்துவிட்டான் சரவணன்.

பிறகு.. கோதையும் பூபதி பாண்டியனும் சொல்லிக்கொண்டு ஊருக்கு கிளம்ப.. எழிலரசியும் வீட்டிற்கு கிளம்பினாள். அருளையும் செல்வியையும் தனித்து விட்டு.. ஆயிரம் ஜாக்கிரதைகள் சொல்லினர், சரவணனும் ராதிகாவும்.

“எப்போ இருந்து காலேஜ் போற.. செல்வி?”என்றாள் ராதிகா.

“நாளைல இருந்து போறேன் அக்கா.” என்று சொன்னாள் செல்வி.

“நல்லா படிக்கணும் செல்வி. குடும்பத்தை கவனிக்கறேன்னு சொல்லி.. படிப்புல குறைஞ்சிடாம பார்த்துக்கோ.” என்றாள் ராதிகா.

“அப்படி எதுவும் நடக்காது அக்கா. படிப்புல ரொம்ப கவனமா இருப்பேன்.” என்றாள் செல்வி.

அவள் அந்த வாக்குறுதிய கொடுத்தப் பிறகே.. நிம்மதியாக தங்களின் வீட்டிற்கு சென்றனர் சரவணனும் ராதிகாவும்.

வீட்டிற்கு வந்ததும் ராதிகாவிடம் சரவணன், “கலக்கறடி. அட்வைஸ் எல்லாம் தூள் பறக்குது.”

“எனக்கு தான் படிப்பு வரலை. உங்க பின்னாடியே சுத்திட்டு திரியறேன். அது நல்லா படிக்கற பொண்ணு. உங்க தம்பி பின்னாடி சுத்தி.. கோட்டை விட்டுறக்கூடாதில்ல..” என்றாள் பெரிய மனுஷியாக.

“இவ எங்கடி சுத்துறா.. அவன் தாண்டி சுத்துறான்.”

“அது முன்னாடி. இப்போ.. அவளை அருள், அவன் பின்னாடி சுத்த வச்சிட்டான்றதுதான்.. என்னோட கணிப்பு.” என்றாள் எல்லாம் தெரிந்தவளாக.

“உன் கண்ணுக்குத் தப்புமா..” என்றான் சரவணன்.

“அய்யே! உங்களுக்கு எதுவும் தெரியாத மாதிரி.. எதுக்கு பில்ட் அப்பு. செல்வி மனசும்.. உங்க தம்பி மேல இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தானே.. அவளை அவனோட வீட்டுக்கே வர சொன்னீங்க.”

“கண்டுபிடிச்சிட்டியா.” என்றான் சிரிப்போடு.

“பின்ன.. யாரு நானு. போலீஸ்காரன் பொண்டாட்டியாகும்.” என்றாள் கர்வத்தோடு.

“இது தாண்டி. இந்த, உன்னோட மனசு அழகுதாண்டி.. என்னை உன் பின்னாடியே.. சின்ன வயசுல இருந்து சுத்த வச்சது.” என்று அவளை அணைத்துக்கொண்டான்.

“நீங்க.. என் பின்னாடி சுத்துனீங்க..”

“நிஜம்மாவே சுத்துனேன்.”

“ஆனா.. என்னைப் பார்த்து ஒரு சின்ன சைகை கூட, காட்டினது கிடையாது. எனக்கு கல்யாணம் முடியறவரைக்கும்.. நீங்க என்னை விரும்புணீங்கன்னே தெரியாது. உங்களை பார்த்தாலே.. அவ்வளவு பயமா இருக்கும்.” என்றாள் மனதை மறையாது.

“இப்போ அப்படியே மாறிபோச்சு. எனக்கு தான்.. உன்னைப் பார்த்து பயமா இருக்கு.” என்றான் பயப்படுவது போல.

“உங்களுக்கு.. என்னைப் பார்த்து பயம். நான் அதை நம்பணும்.” என்று ரைமிங்காக சொன்னவள், கலகலவென்று சிரிக்க..

“என்னை சிரிச்சே மயக்குறடி.” என்றான், அவளின் காதல் கணவனாக சரவணன்.

“ம்! அப்புறம்”, என்றாள் கதை கேட்பவள் போல ராதிகா.

“நான் என்ன கதையா சொல்றேன்.” என்று, அவளை மயக்கத்தோடு பார்த்தவன்.. அவளின் தயக்கங்களை தயக்கமில்லாமல் வெற்றி கொள்ளத் துவங்கினான்.

அங்கே செல்வி.. வீட்டில் எல்லா சாமான்களையும் எடுத்துவைப்பதிலேயே நேரத்தை போக்கினாள்.

“ஒரே நாள்ல.. எல்லாத்தையும் எடுத்து வச்சிட முடியாது, செல்வி. மெதுவா வெச்சிக்கலாம். வந்து படு”, என்று அவளை அழைத்துக் கொண்டிருந்தான் அருள்.

“இதோ.. இது மட்டும் தான். எடுத்து வச்சிட்டு வந்துடுறேன்.” என்று வேலையை இழுத்துக்கொண்டு இருந்தாள் செல்வி.

அழைத்து அழைத்து பார்த்தவன்.. சோர்வில் உறங்கியே விட்டான். செல்வி எல்லாவற்றையும்.. அதனதன் இடத்தில் வைத்து விட்டு வந்து பார்த்தால்.. அருள் உறங்கியிருந்தான்.

செல்வியின் முகம் புன்னகையை பூசியது. அமைதியாக அவனருகில் வந்து படுத்துக்கொண்டாள்.

மனது மிகவும் திருப்தியாக உணர்ந்தது. அவள் படுத்த அசைவில் அருள் எழுந்துகொண்டான்.

“சாரி! எழுப்பி விட்டுட்டேனா..” என்றாள்.

“எவ்வளவு நேரம் வெயிட் பண்றது. என்னையறியாம கண்ணை அசந்துட்டேன். என்ன உங்கய்யா.. உன் வீட்டை அமைச்சி கொடுத்துட்டாரா..”

“ம்!”, என்றாள் சந்தோஷமாக.

“இதுக்கெல்லாம்.. நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலை..”

“நீ.. உங்கய்யவோட தம்பியோட,  நல்லபடியா குடும்பம் நடத்து. வேற எதுவும் தேவையில்லை.”

“இனிமே.. உங்களை விட்டு நான் எங்கயும் போறதா இல்லை. நீங்க தான்.. என்னை துரத்தறதுலேயே குறியா இருக்கீங்க.”

“நானா.. எப்போ?”

“பின்ன.. நீங்க என்ன வீட்டுக்கு கூப்பிடவேயில்லையே.”

“அது உன் படிப்பு கெட்டுடும்னு தான்..” என்று அசடு வழிந்தான். அவன் மனம் வாடுவதை பொறுக்காமல்..  

பேச்சை மாற்றும் பொருட்டு, “சரி தூங்குங்க”, என்றாள்.

“நீ தூங்கு முதல்ல. நாளைல இருந்து காலேஜ் போகணும். ஞாபகம் இருக்கா..”

“இருக்காம.. அதெல்லாம் எவ்வளவு லேட்டாப் படுத்தாலும், சீக்கிரம் எழுந்துடுவேன்.” என்றாள்.

“அப்போ.. உன்னை லேட்டா படுக்க விடலாம்னு சொல்ற.” என்றான் ஒரு விஷமச் சிரிப்போடு.

“எப்போ பார்த்தாலும்.. டபுள் மீனிங்க்ல பேசறதே வேலையா வெச்சிருக்கீங்க. இந்த பேச்செல்லாம் விட்டுட்டு படுங்க..” 

“பேச்சு வேண்டாம். செயல்ல மட்டும் காட்டுன்னு சொல்றீயா..”

“அச்சோ.. நீங்க இந்த பேச்சை விடவே மாட்டீங்களா.. முதல்ல உங்க காலை சரி பண்ணுங்க.”

“என் காலெல்லாம் நல்லா தான் இருக்குது.” என்றான்.

“நேத்து தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தோம். பேச்சை பார்..”

“சரி நான் பேசலை. என்னோட தூக்கம் எல்லாம் போச்சு. நீ பேசு”,

“எனக்கா பேச விஷயம் இல்லை. எனக்கு ரொம்ப நாளா நிறைய கேள்விகள். எப்போ என்னை விரும்ப ஆரம்பிச்சீங்க. எப்பவும் என்னை திட்டிடே தானே இருப்பீங்க..”

“உனக்கு மட்டும் அந்த கேள்வி தோணலை. எனக்குள்ளேயும் அந்த கேள்வி ரொம்ப நாளா இருக்கு. எனக்கேத் தெரியலை.. உன்னை நான் எப்போ விரும்ப ஆரம்பிச்சேன்னு. என்ன பார்த்தேன்.. உன் கிட்டன்னு எனக்கேத் தெரியலை. ஆனா எப்பவும் உன் ஞாபகம் மட்டும் தான்.”

“ஒரு ஸ்டேஜ் ல.. என்னால உன்னை விட்டுட்டு.. இருக்க முடியும்னு தோணலை. நீயும் உன் அய்யாவை எதிர்த்து எதுவும் செய்யமாட்ட. செய்ய மாட்ட என்ன? யோசிக்க கூட மாட்ட.”

“இப்போக் கூட.. வலுக்கட்டாயமா உனக்கு, நான் தாலி கட்டலைன்னா.. நீ என்னை விரும்பியிருப்பியா?”

அதற்கு பதிலாக.. “இல்லை”, என்று சொல்லாமல்.. “தெரியலை” என்றாள்.

அவளுக்கே நிஜமாக தெரியவில்லை. “இவ்வளவு காதல்.. அவன் தன் மீது வைத்திருக்கும் போது.. தன் மனம் தனக்கே அறியாமல், அவன் மீது சாய்ந்திருந்தாலும் சாய்ந்திருக்கும்.” என்றே தோன்றியது        

“நிஜமாவே உங்களுக்கு.. எதுக்கு என் மேல காதல் வந்துச்சுன்னு, தெரியலையா..”

“நிஜமாவே தெரியலை செல்வி.” என்றான் உள்ளார்ந்த அன்போடு.

“ஏதாவது.. என் மேல காதல் வந்ததுக்கு.. பெரிய கதை வெச்சிருபீங்கன்னு நினைச்சேன்.”

“என் காதல் உனக்கு கதையா..” என்றவன், எப்பொழுதும் போல.. “அடிங்க.” என்றவன்.. அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்.

“ரொம்ப டையர்டா இருக்கு.. தூங்கவா.” என்றாள் செல்வி.

“தூங்கு! ஆனா இப்படியே தூங்கு.”

“உங்களுக்கு கால் வலிக்கப் போகுது”, என்றாள் அக்கறையாக.

“அதெல்லாம் வலிக்காது”, என்றான் சற்று குரலை உயர்த்தி.

“நல்லா பேசிட்டு இருக்கறீங்க. திடீர்னு என்னமோ ஆகிடுது. ஸ்ட்ரிக்ட்டா பேச ஆரம்பிச்சிடுறீங்க..” என்றாள் ஆதங்கத்தோடு.

“அது என் கூட பிறந்தது. மாறாது. நீ அதுக்கு பழகிக்கோ. இப்போ பேசாம தூங்கு.” என்று மறுபடியும் அதட்டினான்.

“அது தான் அருள்.” என்று புரிந்தவளாக கண்ணை மூடினாள்.

தினமும் சமைத்து விட்டு காலேஜ் போகப் பழகிக்கொண்டாள்.

“நீ படிக்கற வேலையை பாரு. உனக்கு சிரமாமாயிருக்கும். ஆள் வச்சிக்கலாம்”, என்று அருள் எவ்வளவோ கூறியும்.. ஆள் வைத்துக்கொள்ள ஒத்துக்கொள்ளவேயில்லை.

“எனக்கு ஒரு சிரமமும் இல்லை. சிரமாயிருந்தா கட்டாயம் சொல்றேன்.. ஆள் வச்சிக்கலாம்”, என்று அவனை சமாளித்தாள்.

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு.. அருள் ட்யூட்டியில் சேர்ந்தான். நாட்கள் பறந்தன. செல்வியின் இறுதித் தேர்வுகள் நெருங்கியதால்.. அவளும் மும்முரமாகப் படிப்பில் ஆழ்ந்தாள்.

அவர்களுக்குள் தாம்பத்தியம் என்று ஒன்று தொடங்கப்படாமல் இருந்தாலும்.. அதை பற்றிய சஞ்சலம் செல்விக்கும் இல்லை. அவ்வளவு காதலித்து மணந்த அருளுக்கும் இல்லை. அவளின் படிப்பு, நல்லபடியாக முடியும் வரை.. அவளை எந்த வகையிலும் சலனப்படுத்த கூடாது.. என்றிருந்தான் அருள்.

செல்வியும் அது புரிந்தே இருந்தாள். தாம்பத்தியம் தான் இல்லையே தவிர.. சில பல கொஞ்சல்கள்.. சீண்டல்கள்.. ரகளைகள்.. எல்லாம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக.. நடந்த வண்ணம் தான் இருந்தன.

ராதிகாவின் வளைகாப்பு ஊரில் நடந்தது. அதற்கு அருள், தன் மனைவியோடு போயிருந்தான். புது மணவாழ்க்கை கொடுத்த மகிழ்ச்சியில்.. செல்வி இன்னும் ஜொலித்தாள்.

இவளுக்கு வந்த வாழ்வை பாரேன் என்று.. ஊரில் பல பேர் பொறாமைப்பட.. சில பேர் வாழ்த்தவும் செய்தனர். அவர்களின் வாழ்த்தோ.. வசவோ.. எதுவும் தன்னை கொண்டு செல்லாமல் காத்தாள் செல்வி. ஒரு தைரியம்.. கம்பீரம்.. அவளிடம் தெரிந்தது. அது மற்றவர்களை.. அவளை நெருங்க விடாமல் செய்தது.

கோதை கூட.. செல்வி விசேஷத்திற்கு வருவதால்.. நிறைய பேச்சுக்கள் எழுமோ என்று நினைத்தார். ஒன்றிரண்டு எழுந்தது தான். ஆனால் அதிக சலசலப்பு இல்லை.

அருளின் நண்பர்கள் எல்லாம்.. “ஏண்டா அந்த பொண்ணை அந்த திட்டு திட்டுவ. இப்போ எப்படிடா இவ்வளவு பிளாட் ஆன..” என்று அவனை கிண்டல் செய்தனர்.

ராதிகாவின் நிச்சயத்திற்கு சமைத்த அம்மாவே தான்.. இப்போதும் சமையல். அவர் செல்வியிடம்,

“என்ன கண்ணு.. உங்கய்யா மாதிரி போலீஸ் ஆவேன்னு சொன்ன. இப்போ டாக்டர் ஆகிட்ட.’’

“இது படிச்சாலும் போலீஸ் ஆகலாம்.. ஆயா” என்றாள்.

இதை அருள் கேட்டுக்கொண்டே தான் இருந்தான்.

“என்ன.. நீ போலீஸ் ஆகப்போறியா?” என்றான் அதிர்ச்சியாக.

அவள், “ஆமாம்” என்பது போல தலையசைக்க.. “பிச்சி புடுவேன் பிச்சி..” என்றதட்டினான்.  ஆயா, அவ டாக்டர் தான்..ஆயா’’ என்று அந்த சமையல்கார அம்மாவிடம் பதில் கொடுத்தான்.

“ஏன் வேண்டாமா..” என்றாள் செல்வி.

“ஒண்ணும் வேணாம். ரெண்டு பெரும் போலிசா இருந்து.. நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் இருக்கவா.. அதெல்லாம் சரிபடாது. அதுவுமில்லாம.. போலிஸ் வேலையெல்லாம் உனக்கு செட் ஆகாது.”  என்றான் கண்டிப்போடு.

அவனை பற்றி தெரிந்தவளாக.. “சரி ஆகலை. இதுலையே மேல படிக்கறேன். போதுமா..” என்றாள்

“இப்போ சொன்னியே.. இது சரி.” என்றான்.

இவனா.. சற்று நேரத்திற்கு முன் அவ்வளவு கோபப்பட்டவன்.. என்று தோன்றியது செல்விக்கு. எப்போது குளிர்வான்.. எப்போது காய்வான் என்று.. அவனைத் தெரிந்தவளாக, அவனை எதிர்த்து பேசாமல்.. அவனின் கோபத்தை தணித்து விட்டாள்.    

ராதிகாவின் வளைக்காப்பு நல்ல படியாக முடிந்து ஊர் திரும்ப.. திரும்பும் போது அமைந்த ரயில் பயணம்.. அவர்கள் திருமணம் முடிந்ததும் வந்த ரயில் பயணத்தை ஞாபகப்படுத்தியது.

“எப்படி கூச்சமேயில்லாம என் காலை பிடிச்சீங்க..” என்றாள் அன்றைய நாளின் நினைவில்.

”உன் காலை பிடிக்கறது பெரிய விஷயமா. அதெல்லாம் ஒரு விஷயமேயில்லை.” என்றான்.

“எனக்கு.. அது தான் விஷயம். அப்போ இருந்து.. உங்க பக்கம் சாய ஆரம்பிச்சவ தான்.. இப்போ மொத்தமா உங்க மேலேயே சாஞ்சிட்டேன்.” என்றாள் கண்களில் காதலுடன்.

அன்றையை நினைவில்.. அவள் கண்களில் நிறைய காதல் தெரிந்தது.

“இப்படி எல்லாம் பார்த்து வக்காதடி.. உன் படிப்பு முடியறவரைக்கும். என்னை ஒழுங்கா இருக்க விடுடி.” என்றான் கெஞ்சலாக.

செல்விக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வர.. அருளும் அவளின் கூட சேர்ந்து நகைத்தான். இருவர் கண்களிலும் தெரிந்த காதல்.. யாராவது பார்த்தால்.. அவர்களுக்கும் காதலிக்கத் தோன்றும்.

நான்கு வருடங்களுக்கு பிறகு

சரவணன் ராதிகாவிற்கு முதலில் ஒரு பெண் குழந்தை. அதையடுத்து மூன்று வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை.

இப்போது அவர்கள் ஈரோட்டில் இருந்தனர். மிகவும் சந்தோஷமான வாழ்க்கை ராதிகாவினது. அதற்கு சற்றும் குறையாமல் இருந்தது அருள் செல்வியின் வாழ்க்கை.

அவள் மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்து.. மகப்பேறு மருத்துவத்தில் மேல் படிப்பும் முடித்துவிட்டாள்.

இப்போது அவள் ஐந்து மாத கர்ப்பம்.

உள்ளங்கையில் வைத்து தாங்கினான் அருள்.

அப்போது தான் வேலையில் இருந்து வந்தான் அருள். மணி இரவு பத்து என்றது.

அப்போது.. அவசரமாக ஹாஸ்பிடல் கிளம்பிக்கொண்டு இருந்தாள் செல்வி. மிகவும் பதட்டத்தோடு. 

அவளை பார்த்தவன், “இப்போ எல்லாம்.. நீ அரக்க பரக்க கிளம்பக்கூடாதுன்னு.. சொன்னா கேட்கறியா?” என்று அவளை அதட்டினான் அருள்.

“சாரிங்க.. ஒரு டெலிவரி கேஸ். எமெர்ஜென்சி. உடனே ஹாஸ்பிடலுக்கு போகணும். கொண்டு போய் விடுங்க.” என்று பரபரத்தாள்.

அவளின் பரபரப்பு.. அவனையும் தொற்ற. .அவசரமாக அவளை ஹாஸ்பிடல் கூட்டிச் சென்றான்.

அந்த அவசரத்திலும். “நீங்க போங்க.. நான் ஹாஸ்பிடல் கார்ல வந்துடுவேன்.” என்று சொல்லி சென்று விட்டாள் செல்வி.

ஆனால்.. அதையெல்லாம் கேட்பவனா அருள். அவன் அசையாது அங்கேயே அமர்ந்து கொண்டான்.

கேஸ் முடித்து.. அவள் களைப்பாக வெளியே வந்த போது மணி இரண்டு. வந்து பார்த்தால் அருள்.. அவளுக்காக காத்திருந்தான்.

“நீங்க போகலையா..” என்றாள்.

“உன்னை விட்டுட்டு நான் எங்க போவேன்.” என்றவன், “என்ன குழந்தை?” என்றான்.

“பொண்ணு”, என்றாள் சந்தோஷமாக.

அவளால்.. ஒவ்வொரு உயிர் ஜனிக்கும் போதும்.. செல்விக்கு அவ்வளவு சந்தோஷம். அவளின் அந்த சந்தோஷத்தைக் காண அருளுக்கும் நிறைய பிடிக்கும். அவன் தன்னை ஆசையோடு பார்ப்பதை பார்த்தவள்..

“என்கிட்ட என்ன இருக்குன்னு.. இப்படி என் பின்னாடியே சுத்துற நீ.. “

“ம்! அதை கண்டுபிடிக்கத் தான் சுத்திட்டு இருக்கேன்.” என்றான் நக்கலாக.

“ஆமா.. நீங்க ஏன், என்னை போய் லவ் பண்ணுனீங்க..”

“என்ன.. உன்னைப் போய்..” என்று கோபப்பட்டான்.

“கோபப்பட்டாதீங்க. சொல்லுங்க..” என்றாள். எப்போதும் கேட்கும் கேள்வியாக.

அவளும் நிறைய முறை கேட்டுவிட்டாள். அருளும், “எனக்கு தெரியலை.” என்று சொல்லிவிட்டான். இருந்தாலும் கேட்பாள்.

“உன்கிட்ட  எத்தனை முறை சொல்றது. எனக்கு இந்த கேள்விக்குப் பதில் தெரியாது.. தெரியாது.. தெரியாது.” என்றான் தலையை ஆட்டி.

அவள், அவனையே இமைக்காமல்.. இன்னும் ஆசையோடு பார்த்தபடி நிற்கவும்.. “வீட்டுக்கு போகலாமா.. வேண்டாமா?” என்றதட்டினான்.

“போகலாம். இன்னும் ஒரு தடவை பேஷண்டை பார்த்துட்டு வந்துடறேன்.” என்று வேகமாக போனாள்.

“ஏய்! மெதுவா போ..” என்ற அவனின் குரல்.. அவளின் செவிகளை எட்டியதாக கூட தெரியவில்லை.

காத்திருந்து அவளை அழைத்துப் போனான். அந்த இரவு நேரத்திலும், தான் வயிற்றில் குழந்தை இருப்பதால்.. குளித்துவிட்டு தான் படுத்தாள். தூக்கம் கண்களை  சுழற்றியது. அப்போதும் அவன் மேல் படுத்து தான் உறங்கினாள்.

நிம்மதியான உறக்கம் அவளுக்கு. ஆனால் அருளுக்கு தான் உறக்கம் இல்லை. காதலோடு அவளையே பார்த்தபடி இருந்தான்.

“ஆம்! என்ன இருக்கு இவளிடம் என்று.. என் மனம் இவ்வளவு காதல் வயப்பட்டது.. இவள் மீது.” என்றான். அவனின் கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.

பலமுறை அவனே யோசித்தும்.. இந்த கேள்விக்கு.. ஒரு விடையும் தெரிந்தது இல்லை.

அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே, கண்விழித்த செல்வி.. “தூங்கலையா நீங்க. தூங்குங்க. மணி நாலு.” என்று அவனை அதட்டி கண்மூட வைத்தாள். அவனுக்கும் சற்றும் குறையாத காதலை.. இப்போது அருள் மேல் செல்வியும் கொண்டிருந்தாள். இருவருமே.. ஒருவரின் அருகாமையில் மற்றவர்.. நிம்மதியான உறக்கத்தை தழுவினர்.

அவர்களின் காதல் மென் மேலும் சிறக்க நாம் வாழ்த்துவோம்.  

  

                          நிறைவுற்றது

Advertisement