Advertisement

அத்தியாயம் இருபத்திரண்டு:

செல்வியின் மனது அருளின் பால் நன்றாகவே இளகத்துவங்கி இருந்தது. அவனைப் பற்றிய நினைவுகள் எப்போதும் மனதை ஆக்ரமிக்கத் துவங்கின. ஒரு முழுமையான ஆண்மகன் இவளை நேசிக்கிறான்.. என்ற உணர்வே இவளுக்கு ஒரு நிறைவை கொடுக்க துவங்கியது.

பதிலுக்கு.. அவள் அவனை விரும்புகிறாளா? என்று கேட்டால், அவளுக்கு பதில் தெரியாது. ஆனால், அவனுடைய ஒவ்வொரு செய்கையையும் ரசிக்கத் துவங்கி இருந்தாள்.. மறைமுகமாக விரும்பத்துவங்கி இருந்தாள். அவனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்க துவங்கினாள்.

தினமும் வந்து பார்க்க அருளுக்கும் ஆசை தான். அவளை பார்க்கும் நேரம் சரிவரவில்லை. தினமும் யுனிபார்மில் வந்து பார்க்க முடியாது. அது தேவையில்லாத பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும்.

அவன் பிரீயாகும் நேரம் இரவை அடைந்துவிட.. அவளை பார்க்க முடியாமல் போனது. முடிந்த வரையில்.. அவளைப் பார்க்க வந்துவிடுவான். வரும்போதெல்லாம் அவர்களுக்குத் தனிமை கொடுத்து.. ஆனந்தியும் விலகி சென்று விடுவாள்.

அது.. ஒரு அரை மணிநேர சந்திப்பு தானே. இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே.. என்று, இருவருக்கும் இருக்கும்.

செல்வி காணாமல்.. அவளை ரசிக்க கற்றுக்கொண்டான் அருள். தன்னை அவள் சற்றுத் தேடட்டும்.. அப்போதுதான் தன்னுடன் வாழ வருவாள்.. என்று இருந்தது அவனுக்கு. அவனைப் பொருத்தவரை.. சரவணனுடன் பேசும்போதே, அவன் கேட்டு விட்டான்.  இனி அவள் தான் வரவேண்டும்.. என்று அவனுக்கு இருந்தது.

அருள் வருவான். அவளைப் பார்ப்பான். அவளுடன் பேசுவான். அவ்வளவு தான். வேறு எங்கும் வெளியில், அவளை கூப்பிட முயற்சிக்கவில்லை. அவளின் மனம்.. தன்புறம் சாயத்துவங்கி உள்ளது.. என்பதை நன்கு அறிவான்.

சற்று நன்றாக.. தன்புறம் சாயட்டும் என்று நினைத்து, கொஞ்சம் அடக்கியே வாசித்தான். அதுவும் முதல் முறை.. அவன் தொட்டப் பிறகு, அவளின் கண்ணீர் பார்த்தவன்.. அவள் இன்னும் சற்று தெளியட்டும் என்றே நினைத்தான்.

செல்வியும் அவனுக்காக சற்று ஏங்கத்துவங்கினாள். அவன் ஏன் தன்னை வீட்டுக்கு கூப்பிடவில்லை. படிப்பை முடிக்கட்டும் என்று நினைக்கிறானோ.. என்று அவளாகவே நினைத்துக் கொண்டாள். ஆனால் கேட்கவில்லை.

ஆம்! அவன் எப்போது தன்னை கூப்பிடுவான்.. என்று நினைக்க துவங்கினாள். அதுவும் அவன் உனக்காகத்தான்.. உன் வீட்டிற்கு போவதற்கு தான்.. நான் தனியாக வந்தேன், என்று சொன்ன பிறகு.. ஒவ்வொரு முறையும், தன்னை அருள் பார்க்க வரும்போது.. இன்று கூப்பிடுவானா.. இன்று கூப்பிடுவானா.. என்று எண்ணி.. எண்ணி மருகத்துவங்கினாள்.

அருளும், அவள் படிப்பை முடிக்கட்டும் என்று நினைத்தானோ.. இல்லை, அவளாக தன்புறம் வரட்டும் என்று நினைத்தானோ? வீட்டிற்கு வருகிறாயா என்று கூப்பிடவில்லை. வெளியிலும் அழைத்து செல்லவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்து.. பார்த்து மட்டும் சென்றுவிடுவான்.

எப்பொழுதும் போல.. நேரம் கிடைக்கும் போது அவளின் அய்யா வீட்டிற்கு சென்று.. ராதிகாவை கவனித்து கொள்ளவும் மறக்கவில்லை செல்வி.

கோதை, போன் மூலம் ராதிகாவிடம் நடக்கும் அனைத்து விஷயங்களையும் கேட்டுக் கொள்வார்.

“ஏன்.. அவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டான். இப்போ ஏன் தனியா இருக்காங்க?” என்று ராதிகாவை கேள்வி வேறு கேட்டார்.

“தெரியலையே அத்தை.” என்றாள் ராதிகா.

“உங்க வீட்டுக்கு வர்றாளா.. அவ?”

“வர்றா அத்தை. அடிக்கடி வரமாட்டா. எப்போவாவது வருவா. அவ தான் வந்து.. நான் உண்டாயிருக்கறதைக் கூட உறுதி பண்ணினா.’’

“டாக்டர்னு, அதை கூட பண்ண மாட்டாளா?” என்றார் அதையும் சாதாரண விஷயமாக.

மருமகள் உண்டாயிருகிறாள், போய் பார்க்க வேண்டும்.. என்று கோதைக்கும் ஆசை தான். போனால், அருளை பார்க்க வேண்டி வந்துவிட்டால்.. என்ன செய்வது.. என்றே போகாமல் இருந்தார் கோதை.

அவனை பார்த்துவிட்டு.. அவனோடு பேசாமல் வருவது, அவருக்கு முடிகிற காரியமல்ல. அதுவும், இப்போது அவன் சரவணன் வீட்டில் இல்லை.. என்று தெரியும். தனியாக என்ன செய்கிறானோ.. என்று கவலையாக இருந்தது.

இத்தனை நாட்களும் தனியாகத்தான் இருந்தான். ஆனால், பக்கத்தில் அண்ணனின் வீட்டை வைத்துக்கொண்டு.. தனியாக இருப்பது வேறு. அதுவும் திருமணமாகி.. தனியாக இருப்பது என்பது.. கோதைக்கு கோபம் வந்தது.

“என்ன அவள்.. அவ்வளவு பெரிய இவளா? திருமணமே செய்துகொண்டானே.. சேர்ந்து பிழைக்க வேண்டியது தானே?. இப்படி தனியாக விட்டால் என்ன அர்த்தம்?” என்று கோபம் கோபமாக வந்தது.

அதை ராதிகாவிடம் சொல்லித் திட்ட வேறு செய்தார். “என்ன அவ்வளவு பெரிய இவளா இவ. என் மகனோட வாழ கசக்குதோ. எப்படி இருந்த அவளை..  எப்படி ஆக்கி விட்டுருக்க நீ.   நீ.. சொல்ல மாட்டியா?” என்று ராதிகாவையும் கடிந்தார்.

“சொல்றேன் அத்தை”, என்று சொல்லும் ராதிகா, செல்வியிடம் எதுவும் சொல்ல மாட்டாள். ராதிகாவை பொருத்தவரை.. இது அவர்கள் சொந்த விஷயம். சரவணனே தலையிடாத போது.. அவள் எங்கே போய் தலையிடுவாள்.

கோதைக்கு. தன் மகன் இன்னும்.. திருமண வாழ்வை துவங்க வில்லையே என்று இருந்தது. அதையும் ராதிகாவிடம் தான்.. தன் கோபமாக காட்டினார். ராதிகாவும் அவரை புரிந்தவளாக.. மகனின் பாசம் தான்.. அவரை பேசத் தூண்டுகிறது, என்று அறிந்தவளாக அமைதி காத்தாள்.

இப்படியே ஐந்தாறு மாதங்கள் கழிந்துவிட்டன. அன்றும் செல்வியைப் பார்க்க வருகிறேன் என்றிருந்தான் அருள். அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள் செல்வி. இன்றைக்கு அவனைப் பார்க்க வேண்டும் போன்ற உணர்வு.. அவளிடம் அதிகமாக இருந்தது. 

அதற்குள் வேலை வந்துவிட.. அதில் மும்முரமாகி விட்டான் அருள். பிறகு அவளுக்கு கிளாஸிற்கு நேரமாகியிருக்கும்.. என்று தான் வராமல், செல்விக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பினான்.. “நான் வரவில்லை”, என்று. செல்விக்கு பயங்கர ஏமாற்றம். அது கோபத்தை கொடுக்க..

உடனிருந்த ஆனந்தியிடம். “நீ கிளாஸ்க்கு போ.. நான் வரலை.” என்றுவிட்டு.. அவளின் மரத்தடியிலேயே அமர்ந்து கொண்டாள்.

ஆனந்திக்கு செல்வியின் மனம் நன்கு புரிந்தது. அருள் வராததற்கு தான் இப்படி இருக்கிறாள்.. என்று உணர்ந்தவள், அருளை போனில் அழைத்தாள்.

அவளின் தொலைபேசி என்றவுடனே எடுத்தவன்.. “என்ன ஆனந்தி”, என்றான்.

“பிஸியா அண்ணா..”

“இல்லைமா சொல்லு..”

“அப்போ.. ஏன் நீங்க இன்னைக்கு வரலை?”

“அப்போ கொஞ்சம் பிசி. இப்போ ப்ரீ ஆகிட்டேன். உங்களுக்கு இப்போ கிளாஸ் இருக்கும்னு வரலை.”

“உங்க வீட்டம்மாக்கு இதெல்லாம் புரியலை. கோபமா அவ மரத்தடியில உட்கார்ந்து இருக்கிறா. நான் கிளாஸ்க்கும் வரலைன்னு சொல்லிட்டா.”

“சரி! நான் வர்றேன். அவகிட்ட சொல்லிடு.”

“ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் கிளாஸ் வந்துட்டேன். நீங்களே போய் பார்த்துக்கோங்க.” என்று தன் வேலை முடிந்தது போல.. போனை வைத்துவிட்டாள் ஆனந்தி.

அவளுக்கு கோபம் என்றதும்.. சற்று புன்னகையை வரவழைத்தது அருளுக்கு.  “என் வீட்டம்மா. இது கூட நல்லா இருக்கே”, என்று அவனுக்கு அவனே.. சொல்லி பார்த்துக்கொண்டான்.

அவன் விரைவாக வந்து பார்த்த போது.. கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தாள் செல்வி. தூர இருந்து பார்த்தான். அப்போது தான் அவளின் உடையை பார்த்தான். அடிக்கடி இவள் இதையே போடுகிறாளே.. இவளின் உடை விஷயத்தை எப்படி கவனிக்காமல் விட்டோம்.. என்று தன்னையே கடிந்து கொண்டான்.

முன்பெல்லாம் ராதிகா எடுத்துக்கொடுத்தாள். செல்வியின் திருமணத்திற்குப் பிறகு அவளும் எடுத்துக்கொடுக்கவில்லை. எடுத்துக்கொடுக்க கூடாது என்று இல்லை. தோன்றவில்லை. நகை எதுவும், இல்லாமல் இருப்பதைப் பார்த்தவுடனே கண்களை உறுத்த.. உடனே வாங்கி கொடுத்துவிட்டான் அருள். உடையை அவனும் கவனிக்க மறந்துவிட்டான். இருக்கும் நாலைந்து உடைகளையே.. திரும்ப திரும்ப.. அணிந்து கொண்டிருந்தாள் செல்வி. 

அவளின் ஹாஸ்டல் பில்லை.. எப்பொழுதும் போல சரவணனே கட்டினான். எடுத்த காரியத்தை பாதியில் விடுவதில்லை.. என்பது அவன் முடிவு. நானே கட்டுகிறேன்.. என்று சொல்லிவிட்டான். அருளும் அதற்கெல்லாம் ஆட்சேபிக்கவில்லை. 

செல்வியைப் பார்க்க வரும்போது.. கட்டாயபடுத்தி, அவளுக்கு கொஞ்சம் பணம் மட்டும்.. அவ்வபோது அருள் கொடுத்து செல்வான்.. ஏதாவது தேவை இருக்கும் என்று. அதையும் செல்வி செலவழிக்க மாட்டாள். மிகவும் தேவை என்றால்.. ஏதாவது வாங்குவாள். இல்லையென்றால் அதுவும் இல்லை.   

அவன் இனி வரமாட்டான்.. என்று நினைத்தவளாக செல்வி, எதையோ யோசித்தப்படி.. கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்க..

“கன்னத்துல கைவச்சு.. உட்காரக்கூடாது.” என்றபடி அவளின் முன் நின்றான் அருள். அவனின் குரல் கேட்டவள்.. சட்டென்று நிமிர்ந்து, முகம் மலர்ந்தாள். மலர்ந்த முகம்.. கோபத்தில் சுருங்கிற்று.

“நான் கிளாஸ் போயிருந்தா..” என்றாள் மொட்டையாக.

“வந்திருக்க மாட்டேன்”, என்று சொல்ல வந்தவன்.. சட்டென்று பேச்சை மாற்றி “வந்துட்டு.. நீ இல்லைன்னதும் போயிருப்பேன்.” என்றான்.

அவள் உம்மென்றே இருக்க.. “அதான் வந்துடோமில்ல. அப்புறம் எதுக்கு கோபம்?” என்றான்.

அவன் சொன்ன விதத்தைக் கேட்டு.. புன்னகை எட்டி பார்த்தாலும் கண்களில் கலக்கமும் எட்டி பார்த்தது. தன்னை இவன் கண்டு கொண்டானே என்று.

அவளின் கண்களில் கலக்கத்தை கண்டவன்.. அவளை சகஜாமாக்கும் பொருட்டு, “வெளில போலாமா..” என்றான்.

“எங்கே..” என்றாள்.  

“எங்கேயோ போலாம். வருவியா மாட்டியா?” என்றான் உடனே குரலை உயர்த்தி.

“வருவேன்”, என்பது போல அவசரமாக தலையாட்டினாள்.  

அவனுடன் ஜீப்பில் ஏறும்போது தான் பார்த்தாள். டிரைவர் சீட்டில், வேறொரு போலீஸ் இருந்ததை. அதனால் அவளும் அமைதியாக வந்தாள்.. அவனும் அமைதியாக வந்தான்.

“வீட்டிற்கு போங்க”, என்றான், அவரை பார்த்து அருள்.

வீடும் வந்துவிட. “நீங்க போங்க. இனி நானே பார்த்துக்கறேன்.” என்று அவரை அனுப்பிவிட்டான் அருள்.

“இன்னைக்கு காலையில.. ரொம்ப சீக்கிரமே கிளம்பிட்டேன். அங்க இங்கன்னு காலையில இருந்து அலைஞ்சது.. குளிச்சிட்டு போலாம்.” என்று, தான் வீடு வந்த காரணத்தை சொல்லியபடியே வீட்டை திறக்க..

கவனமாக.. அவளே வலது கால் எடுத்து வைத்துத் தான் வந்தாள். அதை சொல்ல வந்த அருளும்.. அவளின் செய்கையை பார்த்து அமைதியாகி விட்டான்.

வீட்டிற்குள் நுழைந்து பார்த்தால் ஒன்றும் இல்லை. ஒரு சாமானும் இல்லை.  ஹாலில் இரண்டு சேர் இருந்தது. ஒரு அறையில், கட்டில் மெத்தை இருந்தது. அவனின் உடைகள் எல்லாம் கூட.. அங்கே இருந்த அலமாரியில், கச கச வென்று.. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தன.

நிறைய துவைகாமல்.. அழுக்காகத் தான் கிடந்தது.

“யாரும் துவைக்க வரமாட்டங்களா?” என்ற அவளின் கேள்விக்கு..

“வருவாங்க. அவங்க வர்ற நேரம் ஒரு வாரமா நான் சீக்கிரம் கிளம்பிறேன். அது தான் இப்படி. சண்டே எல்லாத்தையும் துவைச்சிடுவாங்க. ”

சமையல் அறையில் சென்று பார்த்தால்.. அங்கே எதுவும் இல்லை.

அவள் எல்லாவற்றையும், பார்ப்பதையே பார்த்திருந்தான்.

“ஏன்.. ஒரு சாமானும் இல்லாம இருக்கு?”

“உன் வீடு. நீ வந்து தானே வாங்கணும்.” என்றான் அவளையே ரசனையோடு பார்த்தபடி. 

இவன் தன்னை கிண்டல் செய்கிறானா.. என்பது போல செல்வி பார்க்க. இல்லை.. அவன் உண்மையாகத்தான் சொல்கிறான்.. என்று அவன் முகம் காட்டியது.

“எனக்காக.. இவன் எவ்வளவு பார்க்கிறான்..” என்று மனம் அவன் புறம் முற்றிலும் சாய..

மேலே, அவன் எதுவும் சொல்லாமல்.. குளிக்க ஆயத்தமாக சட்டையை கழற்ற.. சட்டென்று பார்வையைத் திருப்பினாள்.

அங்கே இருக்கவே, அவளுக்கு கூச்சமாக இருந்தது. அவசரமாக திரும்பி நின்று கொண்டாள்.

அவளின் செய்கையை பார்த்த அருள்.. வாய்விட்டு சிரித்தான்.

அவன் சிரிப்பு.. இவளுக்கு கோபத்தை கிளப்ப.. “என்ன சிரிப்பு?” என்று செல்வி ரோஷத்தோடு திரும்ப.. அவன் ஷர்ட், பனியன் கழற்றி விட்டு.. வெற்று மார்புடன் நிற்க.. அவசரமாக மறுபடியும் திரும்பினாள்.  

“லூசு, லூசு..” என்று மெதுவாக அவனைத் திட்ட.. அவன் அதை சட்டை செய்யாமல் குளிக்க போனான்.                         

அவன் குளித்து வரும்வரை.. இவனின் துணிகளை எல்லாம் ஒழுங்கு பண்ணலாம்.. என்று செல்வி, வேகமாக துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துப்போட்டு.. மற்ற துணிகளை அடுக்கி வைத்தாள்.

அப்போது பார்த்து, அவனின் தொலை பேசி ஒலிக்க.. அதில் இருந்த ரிங் டோன்.. அவளை தன்னிலை மறக்கச் செய்தது.

அதில் ஒலித்தது

என்னோடு  வா  வா  என்று  சொல்லமாட்டேன் 

உன்னைவிட்டு  வேறு  எங்கும்  போகமாட்டேன்.

நீ  என்னோடு   வா  வா  என்று  சொல்லமாட்டேன் 

உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போகமாட்டேன்.

செல்லச்சண்டை  போடுகிறாய் 

தள்ளிநின்று  தேடுகிறாய்  

அஹ  அஹ  அஹ  அன்பே  என்னை  தண்டிக்கவும் 

புன்னகையில்  மன்னிக்கவும்  உனக்கு  உரிமை இல்லையா?

என்னோடு  வா  வா  என்று  சொல்லமாட்டேன் 

உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போகமாட்டேன்.

என்னோடு வா  வா  என்று.

சொல்ல  மாட்டேன். போகமாட்டேன்.

          போனை எடுக்கும் எண்ணமே இல்லாமல்.. அவன் வைத்திருந்த பாடலையே விடாமல் கேட்டிருந்தாள். அருளின் மனநிலையை, அது நன்கு எடுத்துக்காட்ட.. அந்த பாடல் வரிகளிலேயே சமைந்து நின்றாள். அது அடித்து ஓய்ந்து விட்டது.

இத்தனை நாட்கள் அவனை பார்க்கிறாள். அவளோடு இருக்கும் போது.. போனும் பேசியிருக்கிறான் தான். ஆனால், இந்த பாடல் ஒலித்தது இல்லையே. இந்த பாடல் மட்டுமல்ல.. எந்த பாடலும் ஒலிக்கவில்லை. அநேகமாக அவன் போனை, வைப்ரேஷன்னில் போட்டிருக்க வேண்டும்.. என்று உணர்ந்தாள்.

அவன் குளித்து ஒரு துண்டுடுத்தி வந்ததைக் கூட கவனிக்கவில்லை. அவனின் மொபைலையே பார்த்துகொண்டிருக்க.. அதையேன் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணியவன், “செல்வி”, என்றழைத்தான். அது அவளின் செவிகளை எட்டவில்லை என்றதும்..

அவளின் அருகில் வந்தவன்.. அவளோடு விளையாடிப் பார்க்க ஆசைப்பட்டுத் தலையை சிலுப்ப.. அவன் தலையில் இருந்த நீர்த்துளி, அவள் மேல் பட திரும்பினாள். வெகு அருகில் அவன் முகம். இமைக்க மறந்தாள். அவனுமே.. அவளின் முகத்தை அருகில் பார்த்தவுடன்.. தன்னிலை இழந்தான்.

“யாருடி லூசு..”, என்று அவன் கேள்வி கேட்க. அவள் பதில் பேசாமல்.. இவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனின் அருகாமையை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வை அவனை வசீகரித்தது.  

இருவருக்குமே ஒரு மோன நிலையை அது கொடுக்க.. அது கொடுத்த மயக்கத்தில்.. அவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன்.. அவளின் இதழ்களை.. தனது இதழ்களால் சிறை செய்தான்.

மென்மையாக அல்ல. வன்மையாக. அப்போதுதான்.. உணர்வுக்கு வந்த செல்வி, அவனின் முதல் இதழ் முத்தத்தால்.. சற்று திணறினாள். அவளை விடுவிக்கும் எண்ணமே இல்லாமல்.. அது நீண்டு தொடர்ந்தது. 

நீண்ட நேரம் கழித்தே விடுவிக்க.. செல்வி என்ன சொல்வாளோ.. என்று நினைத்து அவன் தடுமாற.. முகத்தில் வெட்கம் தோன்ற, தலை குனிந்து நின்றாள்.

அது அவனுக்கு.. ஒரு பெரிய திருப்தியை கொடுத்தது. “நான் ரெடியாகணும் செல்வி..” என்றான் அருகில் வந்து கிசுகிசுப்பாக.

அப்போது தான், அவன் நிற்கும் நிலை உணர்ந்தவள்.. வெட்கத்தோடே ரூமை விட்டு வெளியே போகப் போனாள். அவளின் கைபிடித்து நிறுத்தியவன். “எதுக்கு அப்படி நின்னுட்டு இருந்த..” என்றான். 

“உங்க செல்.. பாட்டு..” என்று திக்கினாள். அவள் கைவிட்டவன்.. அவளை நோக்கி, அந்த பாட்டை ஹம் செய்ய..

அவனையே.. திரும்பி திரும்பி பார்த்தபடி வெளியே போனவள்.. அன்று மாதிரி, அவனின் அருகாமையில்.. தன்னிலை இழக்கிறோமா.. தன்னிலை மறக்கிறோமா.. என்று எதையும் சிந்திக்கவில்லை. அந்த முதல் முத்தத்தை அனுபவித்து தான் நின்றாள். அவன் பாட்டையும் யோசித்து நின்றாள்.

அவன் ரெடியாகி வந்து, “போகலாமா”, என்றான்.

அவ்வளவுதானா என்றிருந்தது செல்விக்கு. கேட்கவா முடியும்? “போகலாம்”, என்பது போல தலையாட்டினாள். 

அவளின் முக பாவனைகளை பார்த்தவனுக்கு.. படிக்கின்ற பெண்ணை கெடுக்கிறோமோ.. என்று சற்று குற்ற உணர்ச்சியாக இருந்தது. அதனால் அமைதியாகவே வந்தான்.

இதையெல்லாம் உணரும் நிலையில் செல்வி இல்லை. முதல் முத்ததிலேயே ஆழ்ந்திருந்தாள்.

அவன் அவளை அழைத்துச் சென்ற இடம், புகழ் பெற்ற ஒரு துணிக்கடை. “நகை போய்.. இப்போது துணியா..” என்று தைரியமாக அவனிடமே கேட்டாள்.

“நகை வாங்கிக்கொடுத்து ஆறு மாசம் ஆகிடுச்சு. உனக்கு ஏதாவது வேணும்னா நீயும் வாங்க மாட்டேங்கற. என்னையும் கேட்க மாட்டேங்கற”, என்று அவளைக் கடிந்தான்.

அவள் அமைதியாகவே இருக்க.. “என்னை கேட்கணும்.. செல்வி.”, என்றான் மறுபடியும் அதட்டலாக.

“சரி”, என்பது போல தலையாட்ட..

“வாயை திறந்து சொல்லு..” என்று அதற்கும் அதட்டினான்.

“சரி”, என்று வாயால் சொன்ன பிறகே விட்டான்.

“எனக்கு பொண்ணுங்க டிரெஸ் பத்தி அதிகம் தெரியாது. நீயே எடுத்துக்கோ.. குறைஞ்ச பட்சம் ஒரு பதினஞ்சாவது எடுக்கணும்.” என்று சொல்லியே வண்டிய விட்டு இறக்கினான்.

அவளும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் சொன்னபடியே எடுத்தாள். பத்து சுரிதார் எடுத்தவள், ஐந்து சேலைகளையும் எடுத்தாள். ஆனால் அதை எடுப்பதற்குள்.. கடையையே அலசி விட்டாள். எதை எடுத்தாலும்.. அது சரியில்லை, இது சரியில்லை.. என்று வைத்துவிட்டாள்.

“டேய் அருளு! அவளையே, உன்னை செலக்ட் பண்ண சொல்லியிருந்தா.. பண்ணியிருக்க மாட்டா போல இருக்கே. டிரெஸ்க்கே இவ்வளவு பாக்கறா.. பரவாயில்லைடா நீ. அவளுக்கு சான்சே கொடுக்காம.. ஸ்ட்ரைட்டா தாலி கட்டினதுனால தப்பிச்சிட்ட.” என்று, அவனுக்கு அவனே மனதிற்குள் சொல்லிக் கொண்டான். 

எடுத்தவள் கிளம்ப போக.. “சேலை எடுத்தா போதுமா.. வேற வேணாமா?” என்று அவன் சொல்ல.. அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

“யாரோ.. பொண்ணுங்க, டிரெஸ் பத்தியே தெரியாதுன்னு சொன்னாங்க..” என்று முனுமுனுத்தாள்.

“என்ன சொன்னேன்னு.. இப்படி உன் முகம் சிவக்குது. ப்ளௌஸ் வேண்டாமா?  போய் எடுத்துட்டு வா. நான் வெயிட் பண்றேன்.” என்றான் விஷமமாக.

முகம் இப்போது.. ரத்த நிறமே கொண்டுவிட்டது செல்விக்கு. “வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க வாங்க.” என்று, அவனை நோக்கி சொல்லி.. முகம் முழுக்க புன்னகையை பூசியபடி.. முன்னால் நடந்து சென்றாள்.

“ஓ.கே, அஸ் யூ விஷ்”, என்று அவனும் பின்னால்.. அவளின் டிரெஸ் பைகளை எல்லாம்.. தூக்கியபடி நடந்து சென்றான். 

“டேய் அருளு இது கூட நல்லா தாண்டா இருக்கு.”,என்று அவனுக்கு அவனே சொல்லியபடி.

Advertisement