Advertisement

அத்தியாயம் இருபத்தியொன்று :

இரவு நேரம், விட்டத்தை வெறித்தபடிப் படுத்திருந்தான் அருள். அவனுடைய புது குவார்ட்டர்ஸில்.

சரவணனுடனான வாக்குவாதத்திற்கு பிறகு அன்றே, அவனிடமும் ராதிகாவிடமும் சொல்லி விட்டான். “நான் என்னுடைய குவார்ட்டர்ஸ்சிற்கு போகிறேன்..” என்று.

ராதிகா தான் “வேண்டாம்.. சாப்பாட்டிற்கு என்ன செய்வாய்?”, என்று கூறி அவனை தடுக்க பார்க்க..

“இனிமே.. அதெல்லாம் என் பொண்டாட்டிக்குத் தான்.. அண்ணி அக்கறை இருக்கணும்”, என்றான், செல்வியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே.

செல்விக்கு என்ன செய்வது.. என்ன சொல்வது என்றே புரியவில்லை. அமைதியாகத் தான் நின்றிருந்தாள். அவன் பேசும் வார்த்தைகள் அவளை வருத்தின. என்னவோ.. நான் இஷ்டப்பட்டு இவனை கட்டிகொண்ட மாதிரி.. பேசுகிறான் என்றிருந்தது.

சரவணன்.. இவனுடன் பேசுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை, என்று அமைதியாகிவிட்டான்.

சரவணனும் ஒரு முறை அவன் பங்கிற்கு.. தனியாக போக வேண்டாம், என்று சொன்னான். ஆனால்.. அருள் அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.

அன்று ராதிகாவை ஹாஸ்பிடல் அழைத்துப் போய், மகப்பேறு மருத்துவரை பார்த்துவிட்டு அவர் சொன்ன ஜாக்கிரதைகளை எல்லாம் ராதிகாவிடம் சொல்லி எப்பொழுதும் போல ஹாஸ்டல் வந்துவிட்டாள் செல்வி.

அவளை ஹாஸ்டலில் விடும்முன்.. அவளுடன் சரவணனும் ராதிகாவும் பேசினர். “நீ அவனோட சேர்ந்து வாழ இஷ்டப்படலையா.. செல்வி?”, என்று ராதிகா, செல்வியிடம் கேட்டாள்.

“எனக்கு தெரியலை அக்கா. இந்த கல்யாணமே.. நான் எதிர்பார்க்காத ஒண்ணு தான். சத்தியமா.. எனக்குத் தெரியாது அக்கா இவங்க இப்படி பண்ணுவாங்கன்னு. கொஞ்சமாவது தெரிஞ்சிருந்தா.. நான் அய்யா கிட்ட, உடனே சொல்லியிருப்பேன். ஆனா.. இவங்க என்கிட்ட நேரடியா எதுவும் சொன்னதேயில்லை. என்னைப் பார்க்க.. ஒரு ரெண்டு மூணு தடவை வந்திருக்காங்க. எழில் கல்யாணம் முடிஞ்சவுடனே.. நான் அதை சொல்லிடலாம்னு தான் இருந்தேன்.” என்று அவளின் அய்யாவிடமும் அக்காவிடமும் தன்னிலை விளக்கம் கொடுத்தாள் செல்வி.

சரவணனுக்கும்.. அவள் குழந்தையின் சந்தோஷ விஷயம் சொல்லியிருந்ததால்.. கோபம் சற்று மட்டுப்பட்டது. அதுவுமில்லாமல் அவன் நியாயவான். செல்வியின் பங்கு இந்த திருமணத்தில், எதுவும் இல்லை என்றறிவான். தன் தம்பி, அவளின் மேல் அவ்வளவு காதல் கொண்டிருந்தால்.. அவள் என்ன செய்வாள்.. என்றே தோன்றியது.

“மேற்கொண்டு என்ன செய்யலாம்னு இருக்க..”, என்றான் சரவணன். இந்த கேள்வி சற்று அபத்தம் தான்.. என்று அவனுக்கு தெரியும். ஏனென்றால், எக்காரணத்தை கொண்டும்.. அருள் செல்வியை விடமாட்டான்.. என்று தெரியும். இருந்தாலும், அவளின் விருப்பத்தைக் கேட்க வேண்டும்.. என்பதற்காக கேட்டான்.

“இவ்வளவு நாளா.. நீங்க என்ன சொன்னீங்களோ., அதை தான் செஞ்சேன். இனிமேலும் அப்படி தான் செய்வேன்.” என்று உறுதியாக கூறினாள்.

“அப்படியில்லை செல்வி இது கல்யாண விஷயம்.  உன் முடிவும் முக்கியம். அவன் வேற.. என் தம்பியா இருக்கான். அதனால்.. நான் எதுவும் சொல்ல முடியாத.. நிலைமையில இருக்கேன். உன் இஷ்டம் தான் இதுல. நீ எப்படி செஞ்சாலும் சரி.” என்று விட்டான் சரவணன், அவனின் முடிவாக.

செல்விக்கு.. உடனே எந்த முடிவும் எடுக்க முடியாததால்.. அமைதியாக அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டாள்.

இதெல்லாம் அருளுக்கு தெரியாது. “முடிஞ்சா என்னோட வந்து வாழ சொல்லு”, என்று சொல்லியும் சரவணன், செல்வியிடம் ஒன்றும் சொல்லாததும்.. செல்வி, அவனிடம் என்ன ஏதென்று பேசாததும் அருளுக்கு கோபத்தையும்.. மன வருத்தத்தையும் கிளப்பியது.

“நான் அவ்வளவு சொல்லியும்.. எப்பவும் போல இவ ஹாஸ்டல் போயிட்டா. என் வார்த்தைக்கு ஒரு மரியாதையும் இல்லையா?. ஏன்.. திருமண வாழ்க்கையில் இருப்பவர்களால்.. படிக்க முடியாதா?. அவளே, இப்பொது தான் சற்று இளகி வருவது போல எனக்குத் தோன்றிக்கொண்டிருக்க.. இவன் வேறு அவளுக்கு சாதகமாய் பேசுவதாய் நினைத்து.. குட்டையை குழப்பி விட்டான்”, என்று சரவணனை வேறு மனதிற்குள் திட்டினான்.    

சரவணன் செல்விக்காகப் பரிந்து பேசியது, சுத்தமாக அருளுக்கு பிடிக்கவில்லை. “இவன் இப்படி செல்விக்காக பேசினால்.. அவள் எப்படி என்னோடு வாழ வருவாள்?” என்றிருந்தது.

செல்வி எப்போது வருவாள் என்றிருந்தது. வீட்டில்.. தனிமை அவனை தாக்கியது. அவளின் ஞாபகத்தை அதிகப்படுத்தியது.

திருமணம் முடிந்தவுடனே.. அவள் படிக்கட்டும்.. அவளை தொந்தரவு செய்யகூடாது என்று நினைத்தான். எல்லாரும் இந்த திருமணத்தை எதிர்க்க எதிர்க்க.. செல்வியிடமிருந்து ஒரு பதிலும் இல்லாமல் இருக்க.. அவளை தொந்தரவு செய்தே தான் தீருவேன்.. என்று அவனுக்கு அவனே முடிவெடுத்துக் கொண்டான். தான், அவளின் சம்மதமில்லாமல் திருமணம் செய்தது.. சற்றும் தவறாகவே படவில்லை அவனுக்கு.   

இரவு பன்னிரெண்டு மணி. அப்போது அந்த நேரத்தில் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான். “நீ தூங்கிட்டியா..”, என்று செல்விக்கு .

படித்துவிட்டு.. அப்போதுதான் தூங்க ஆயத்தமாகி கொண்டிருந்தாள் செல்வி.. எப்போதும் குட் மார்னிங், குட் நைட் தவிர வேறொன்றும் வராது. இப்பொது புதிதாக “தூங்கிட்டியா”, என்று கேட்கிறான்.

இவள் பதில் அனுப்புவதா வேண்டாமா.. என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, “எனக்கு தூக்கமே வரலை”, என்று அடுத்த மெசேஜ் வந்தது.

இவள் போனையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஆனந்தி. “யாரு அண்ணாவா?”, என்றாள்.

“ஆமாம்”, என்று தலையாட்டினாள் செல்வி.

“போன் பண்றாங்களா.. எடு.” என்றாள் ஆனந்தி. 

“இல்லை.. மெசேஜ் அனுப்பறாங்க.”

“ரிப்ளை பண்ணு.” என்று சொன்னாள் ஆனந்தி.

“இல்லை, மாட்டேன்.” என்று தலையாட்டினாள் செல்வி.

“ஹேய்! என்ன இது.. இன்னும் சின்ன பிள்ளை மாதிரி. அவரோட நடந்த கல்யாணத்தை முறிக்க, உனக்கு இஷ்டமில்லாத பட்சதுல அவரோட பேச.. உனக்கு என்ன தயக்கம்? பதிலுக்கு மெசேஜ் பண்ணு.” என்று அதட்டினாள்

செல்வி பேசாமலேயே இருக்கவும்

“அருள் அண்ணா, உனக்கு நல்ல சாய்ஸ். உன்னை எவ்வளவு விரும்பறாங்க. இந்த மாதிரி ஒருத்தர் கிடைக்க.. குடுத்து வச்சிருக்கணும் நீ. மெசேஜ் பண்ணு.” என்று மறுபடியும் சொன்னாள்.

ஆனந்தி, அவ்வளவு சொல்லவும்.. சற்று இளகிய செல்வி., அருளுக்கு பதில் மெசேஜ் அனுப்பினாள். “இன்னும் தூங்கலை”, என்று.

“ஏன்”, என்ற பதில் கேள்வி வந்தது. மெசேஜ் மூலமாக அல்ல.. தொலைபேசி மூலமாக. அவளின் பதில் வந்த உடனே அழைத்து விட்டான். செல்வி, எடுப்பதா வேண்டாமா.. என்று மறுபடியும் தடுமாற..

“எடுடி”, என்று மறுபடியும் ஒரு அதட்டல் போட்டாள் ஆனந்தி. அவள் அதட்டிய அதட்டலில்.. உடனே போனை எடுத்துவிட்டாள் செல்வி.

“ஏன், செல்வி இன்னும் தூங்கலை..” என்றான் அருள்.

“படிச்சிட்டு இருந்தேன்”, என்றாள், ஒற்றை வார்த்தையில் செல்வி.

“தினமும் இவ்வளவு நேரம் படிப்பியா..”,

“இல்லை. எப்பவாவது.. அடுத்த நாள் ஏதாவது டெஸ்ட் இருக்கும் போது.. கண்முழிச்சு படிப்பேன்.”

“நாளைக்கு டெஸ்ட் இருக்கா?”,என்றான்.

“ம்! இருக்கு.” என்றாள்.

இப்படியாக தொடங்கிய பேச்சு.. அரை மணிநேரம் கழித்தே முடிவு பெற்றது.

என்ன பேசினான் என்று தெரியாது. அவன் ஏதோ கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க. அவள் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள்.

அதற்குள் ஆனந்தி தூங்கியே விட்டாள்.

செல்விக்கு.. அருளோடு அவ்வளவு நேரம் பேசியது, பிடித்து தான் இருந்தது. சரவணனின் பேச்சிற்கு பிறகு.. அருளின் பால் சற்று மனம் சாயத்துவங்கியிருந்தது. அது முகத்தில் புன்னகையை கொடுக்க.. அந்த புன்னகையோடே உறங்கினாள். கனவிலும்.. அருள் வந்து அவளை சீண்டிக்கொண்டே இருந்தான்!

காலையிலும் அந்த புன்னகையோடே விழிக்க.. “என்ன செல்வி, முகத்துல பல்பு எரியுது. அண்ணா போன் பேசினதுனாலையா..”

“ஆமாம்”, என்றா.. செல்வி சொல்லுவாள். “இல்லையே”, என்று, அந்த இடத்தை விட்டு.. ஆனந்தியிடம் தப்பிப்பதற்காக ஓடிப்போனாள்.  

ஆனந்திக்கு, அவளின் வெட்கத்தைப் பார்த்ததும் தான்.. சற்று திருப்தியாக இருந்தது. தோழியின் வெட்கம், அவளுக்கு ஒரு நிறைவை கொடுத்தது. அவளுக்கு புரிந்தது.. அருள் செல்வியை ரொம்பவும் நேசிக்கிறான் என்று. அவனின் காதல் தானாகவே.. செல்வியிடம், அவளின் சம்மதமில்லாமல் உரிமை எடுத்துக்கொண்டது புரிந்தது.

அது ஒரு வகையில் தப்பென்றாலும்.. செல்வி மாதிரி ஒரு பெண்ணிடம் ..சரியே என்று தோன்றியது. செல்வி என்றும் தன் மனதை யாரிடமும் திறக்கமாட்டாள். அவளாக யாரையும் விரும்ப மாட்டாள்.

நன்றாக படிக்க கூடிய.. எல்லோரிடமும் பழக கூடியப் பெண் என்றாலும் அவளின் நிலை குறித்து, சற்று அவளுக்கு தாழ்வுணர்ச்சி இருப்பது.. ஆனந்திக்கு நன்கு தெரியும்.

இப்போது, அருளுடனான இந்த திருமணம்.. கட்டாயம் அந்த தாழ்வுணர்ச்சியைப் போக்கும்.  அவளுக்கு நிச்சயம் அருளை பிடிக்கும். அவன் காதலை பிடிக்கும் என்று தெரியும். திடீரென்று நிகழ்ந்து விட்ட திருமணம். அவளின் அய்யாவின் மனநிலையை பொருத்து.. முரண்டு பிடிக்கிறது என்றறிவாள் ஆனந்தி.

மொத்தத்தில்.. செல்வியின் இந்த திருமணம்.. நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அருள் நிச்சயம் வெற்றி பெற வைப்பான். செல்வியை, அவள் மனதில் இருக்கும் தயக்கத்தை மீறி.. அவளை வெளிக்கொணருவான்.. என்ற நம்பிக்கை ஆனந்திக்கு நிறைய இருந்தது.

அவளின் எண்ணத்திற்கு ஏற்ப மதியம் லஞ்ச் ஹவரில் செல்வி.. எப்போதும் அமரும் மரத்தடியில், அமர்ந்திருக்கும் போது அருள் வந்தான். முன்பெல்லாம் அவளைப் பார்க்க யூனிபார்ம்மில் வரமாட்டான். இன்றைக்கு யூனிபார்மில் தான் வந்தான்.

அவன் நடந்து வரும் கம்பீரத்தை பார்த்ததும்.. செல்விக்கு அவளையறியாமல் முகத்தில் புன்னகை மலர்ந்தது. மெதுவாக அவனைப் பார்த்து ஸ்நேகமாக புன்னகை செய்தாள். அந்த புன்னகை தானாகவே வந்துவிட்டது.

கூட இருந்த ஆனந்தி.. “ஹாய் அண்ணா.. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நீங்க பேசிட்டு இருங்க.” என்று அருள் வந்ததும் விலகிக்கொண்டாள்.

“சாப்டுட்டியா”, என்றான் செல்வியை பார்த்து.

“சாப்டுட்டேன்”, என்றவள். “நீங்க”, என்றாள் பதிலுக்கு உண்மையான அக்கறையோடே.

“இல்லை. இனிமே தான் சாப்பிடணும்.”,

அவளின் அய்யா.. அருளுடன் பேசிவிட்டதால் முன்பு போல.. கோபம் எல்லாம் இல்லை செல்விக்கு அருளின் மேல். அவனுடன் சகஜமாக பேசவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு தான் இருந்தாள்.. ஆனால் அவனைப் பார்த்தவுடன் வார்த்தை தப்பியது.

அவனையே பார்ப்பதும்.. பிறகு பார்வையை தள்ளி போடுவதுமாக இருந்தாள்.

“என்கிட்ட.. உனக்கு ஏதாவது கேட்கணுமா செல்வி..” என்றான்.

“ஆமாம்.” அவளுக்கு, ஒன்று கேட்க வேண்டி இருந்தது தான். ஆச்சர்யமாக இருந்தது. தன் மனதை.. துல்லியமாக உணர்கிறானே என்று இருந்தது.

“ஆமாம்”, என்பது போலத் தலையாட்டினாள்.

“கேளு செல்வி..”, என்று ஊக்கினான்.

“அது”, என்று தயங்கினாள். “கோவிக்க மாட்டீங்களே..” என்றாள்.

“உன்னையாவது.. நான் கோபிக்கறதாவது. என்ன ஜோக்கடிக்கற நீ..” என்று வாய்விட்டு சிரித்தான்.

ரகசியமாக அவன் சிரிப்பை.. கண்களில் பதிவு செய்தாள் செல்வி. “இவன் நம்மிடம் கோபம் கொள்வதே இல்லையா? இவன் சொல்வது தான் ஜோக்.” என்று மனதிற்குள்ளேயே சொல்லிகொண்டாள்.

“சொல்லு,செல்வி..”,

“நீங்க ஏன்.. அய்யா வீட்டை விட்டு வந்துடீங்க. நீங்க பண்ணினது தப்பு. அதுக்கு உங்களை கண்டிச்சாங்க. அதுக்காக வீட்டை விட்டு வந்துடறதா?”, என்றாள்.

புன்னகைத்த அருள். “இது என் மேல உள்ள அக்கறையில கேட்கறையா.. இல்லை உங்க அய்யா வீட்டை, விட்டு வந்துட்டேன்னா?”,

என்ன பதில் சொல்வது என்று யோசித்தவள். “ரெண்டும் தான்”, என்றாள் சமயோசிதமாக.

“உனக்காக தான்.. வேற வீட்டுக்குப் போனேன். ” என்றான்.

“எனக்காகவா..?”

“ஆமாம். உனக்காகத் தான். நீ என்னோட வரும்போது.. உன்வீட்டுக்கு வரணும்னு நினைச்சேன். அதுதான்.” என்றான் உண்மையாக.

இதற்கு, என்ன பதில் சொல்வது.. என்று செல்விக்குத் தெரியவில்லை. மனதளவில் ஸ்தம்பித்தாள்.

“எனக்கு வீடா..! கிட்டதட்ட ஆறேழு வருடங்களாக.. அவளுக்கு வீடு இல்லை. ஹாஸ்டல் தான் வீடு. அதை விட்டால்.. அய்யாவின் வீட்டுக்கு தான் போவாள். அவளுக்கு வீடு கிடையாது. ஆனால் அதை பற்றியெல்லாம் அவள் யோசித்தது இல்லை. தனக்காக எவ்வளவு யோசிக்கிறான்!” என்று உள்ளம் உருக ஆரம்பித்துது. கண்களும் பனிக்க ஆரம்பித்தது.

அவளின் கண்களை பார்த்தவன். “ஏய்.. என்ன இது.. ஒண்ணுமில்லாததுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகற..”,

“இது ஒண்ணுமில்லாத விஷயமா?. நான்.. இந்த மாதிரி எல்லாம் யோசிச்சதுக்கூட இல்ல..”

“ஏன்.. இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க?’’ என்றாள் இன்னும் எமோஷனலாக

“எந்த மாதிரி பண்றேன்..”,

“எனக்காக இவ்வளவு யோசிக்கறீங்க..”,

சிரித்தான். “சில கேள்விகளுக்குப் பதிலே சொல்ல முடியாது.”, என்றான்.

“என் கூட வருவியா நீ..” என்றான் திடீரென்று.

“எங்கே?”,

“எங்கேயோ.. வருவியா மாட்டியா?”, என்றான் கறாராக. இவ்வளவு நேரமாக இருந்த கனிவான குரல் மாறிவிட்டது. அதில் ஒரு அதட்டல் தெரிந்தது.

“நான் வரலை. கிளாஸ் இருக்கு.”

“பரவாயில்லை.. ஒரு நாள் கட் பண்ணினா, ஒண்ணும் ஆகாது. என்னோட வா”, என்றான் உரிமையாக.

செல்வி தயங்க.. ஆனந்திக்கு அழைத்தவன். “செல்வியை.. நான் வெளியே கூட்டிட்டுப் போறேன். சாயந்தரம் வந்திடுவா”, என்றான்.

வெளியே.. அவனுக்கு கொடுத்திருந்த ஜீப் நின்றிருந்தது. அவனே செல்ப் டிரைவில் எடுத்து வந்திருந்தான்.

அவளுக்காக கதைவை திறந்துவிட்டான். இந்த வேலையெல்லாம்.. இவன் ஏன் செய்கிறான்.. என்று கூச்சமாக இருந்தது.

அவளுக்கு கதவை திறந்துவிட்டவன்.. அவள் ஏறியதும், கதைவை சாத்தி.. மறுபுறம் டிரைவிங் சீட்டில் ஏறி அமர்ந்தான்.

வேகமாக.. சாலையின் ஓட்டத்தில் ஜீப் ஓடியது. அவள்.. அவன் அழைத்ததும் வரவில்லை என்று தயங்கியதற்கு.. கோபம் அருளின் முகத்தில் தெரிந்தது.

அவனின் கோபத்தை பார்த்த செல்விக்குப் பேச்சை.. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அவன் இன்னும் சாப்பிட வேறு இல்லையே.. என்று கவலையாக இருந்தது. 

“நாம எங்க போறோம்..” என்றாள்.

“போனா தெரிஞ்சிக்குவ.”, என்றான் பட்டென்று.

அவன் போய் நிறுத்தியது.. புகழ் பெற்ற ஒரு நகைக்கடை.

“இங்க எதுக்கு..” என்றாள் தயக்கமாக.

“உள்ள வர்ற. நான் வாங்கி கொடுக்கறதை போட்டுக்கற. ஏதாவது.. எல்லோர் எதிர்லையும் தயங்குன்னன்னு தெரிஞ்சது என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது.” என்றான் மிரட்டலாக.

இவன்.. நகை வாங்கி கொடுக்க.. அழைத்து வந்திருக்கிறான் என்று புரிந்து போயிற்று.

“நீங்க இன்னும் சாப்பிடலை.” என்று ஞாபகப்படுத்தினாள்.

“சாப்பிடலாம். ஒண்ணும் அவசரமில்லை.”,

“இப்போ.. எனக்கு நகை அவசியமில்லை.” என்றாள் அமைதியான குரலிலேயே செல்வி.

“எக்ஸ்ட்ரா நகை எதுவும் நான் வாங்கலை. உனக்கு தோடும், வளையலும் தான் வாங்கப்போறேன். நீ என் பொண்டாட்டின்றது.. ஞாபகம் இருக்கா இல்லையா?. இந்த மாதிரி.. பிளாஸ்டிக் தோடு போட்டுட்டு சுத்தினா, எனக்குத் தான் கேவலம்.”

கேட்ட செல்வியின் முகம் சுருங்கி விட்டது. “இதுல என்ன  கேவலம். இத்தனை வருஷம்.. நான் அதைத்தான் போட்டுட்டு சுத்திட்டு இருந்தேன்”, என்றாள் குரலில் வருத்தத்தோடு.  

“சாரி.. கேவலம்ன்ற வார்த்தை உன்னை ஹர்ட் பண்ணிடுச்சுன்னு நினைக்கறேன். நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. அப்போ நீ மிஸ்ஸஸ் அருள் பாண்டியன் கிடையாது. இப்போ நீ மிஸ்ஸஸ் அருள் பாண்டியன். முன்ன உனக்கு யாரும் கிடையாது.. நீ எப்படி இருந்திருந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனா.. இனிமே அப்படி இல்லை. உன்னோட ஒவ்வொரு அசைவும்.. மிஸ்ஸஸ் அருள் பாண்டியனாத் தான் காட்டும். அப்படிதான் காட்டணும்.” என்றான் குரலில் கடுமையை புகுத்தி.

அந்த த்வனி.. சற்று இல்லை நிறைய பயத்தை கொடுத்தது செல்விக்கு.

அவன் முகத்தையே பயந்தபடி பார்க்க அவளின் பயந்த முகத்தை பார்த்தவன் 

“நீ, அடிக்கடி என்னை டென்ஷன் பண்ற. நான் கோபமாயிடறேன்”, என்று அவளை சமாதனப்படுத்தினான்.  

“இறங்கு”, என்று அவளைக் கூட்டிக்கொண்டு போனான் கடைக்குள். இவன் யுனிபார்மையும், இவன் பொசிஷனையும்.. பார்த்தவுடனே, கடைக்குள் ராஜ மரியாதை அவனுக்கு.

அவனோடு போவது.. சற்று பெருமையை கொடுத்தது செல்விக்கு.

அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவனே மூன்று செட் தோடை செலக்ட் செய்தான். பிறகு அவனே நான்கு  வளையல்களை செலக்ட் செய்தான். இன்னும் செயின் மாதிரி ஒன்று எடுத்தான். அது செயினை விட கொஞ்சம் பெருசாக இருந்தது, ஆனால் ஆரம் போலவும் இல்லை. 

எல்லாம் நன்றாக இருந்தது. நல்ல ரசனை இவனுக்கு என்று தோன்றியது செல்விக்கு. அவளின் முக பாவனைகளைப் பார்த்து.. அவளின் மனதை படித்தவன்

“பின்ன.. உன்னை செலக்ட் பண்ணியிருக்கேனே!”, என்றான். 

“ஆங்”, என்றாள் செல்வி புரியாமல்..

“நல்லா செலக்ட் பண்ணியிருகேன்னு தானே நினைச்ச. அதான் உன்னையும் செலக்ட் பண்ணியிருக்கேன்.” என்றான் மறுபடியும், ஒரு சிறிய மனதை மயக்கும் புன்னகையுடன்.  

லேசாக வெட்கம் எட்டிப் பார்த்தது செல்விக்கு.

அதோடு நிறுத்தவில்லை. ஒரு கோல்ட் வாட்ச் வேறு வாங்கினான்.

“ஒரு தோடுக்கு பஞ்சமாயிருந்த தனக்கு.. இவ்வளவா?”, என்றிருந்தது செல்விக்கு. அவனிடம், “வேண்டாம்”, என்று சொல்லவும் பயமாயிருந்தது.

எல்லாம் வாங்கி முடித்தவன் அவன் பில் செட்டில் செய்ய, இவ்வளவா என்று மலைத்தாள் செல்வி. தனக்காக எவ்வளவு பார்த்துப் பார்த்து செய்கிறான் என்றிருந்தது.

ஜீப்பிற்கு வந்ததும். “போட்டுக்கோ”, என்று கொடுத்தான்.

மெதுவாக.. தயங்கி தயங்கி பேசினாள் செல்வி. “நான் ஒண்ணு சொன்னா.. நீங்க கோவிச்சிக்க கூடாது.” என்றாள் பீடிகையோடு.

“கோவிக்கற மாதிரி சொல்லாத.” 

“இதுல ஒரு தோடு, ஒரு வளையல் மட்டும் எடுத்துக்கறேன். மீதியெல்லாம் நீங்களே வச்சிருங்க. நான் இவ்வளவு தான் உபயோகிப்பேன். ஹாஸ்டல்ல இருக்கறதால.. அங்க வைக்கிறது சேஃப் கிடையாது.  நீங்களே எடுத்துட்டு போறீங்களா? அதுவுமில்லாம, இதெல்லாம் போட்டு எனக்கு பழக்கம் இல்லை. திடீர்னு போட்டா அன்ஈஸியா இருக்கும். கொஞ்சம் டைம் கொடுங்க.. ” என்றாள் இறைஞ்சுதலாக. 

அவள் தயங்கி தயங்கி பேசினாலும்.. தான் கொடுப்பதை வேண்டாம் என்பதற்காக பேசவில்லை.. நிஜத்தைத் தான் பேசுகிறாள், என்று உணர்ந்தவன்.. “சரி. ஆனா வாட்ச் கட்டிக்கணும்.” என்றான்.

“வாட்ச், எங்கய்யா வாங்கி கொடுத்தது இருக்கு. அது எனக்கு ராசி. நான் அதைத்தான் கட்டுவேன்”, என்றாள் சிறுபிள்ளை போல.

“உங்கய்யா வாங்கி கொடுத்தது இருக்கட்டும். உங்கய்யாவோட தம்பி, வாங்கிகொடுக்கறதையும் கொஞ்சம் கட்டு”, என்றான் அவள் போலவே.

அவனின் பதிலை ரசித்தாலும்.. அவள் பதில் பேசாமல் அமர்ந்திருக்க.. “சரி, உன் இஷ்டம். எனக்கு இப்போவாவது, இந்த வளையல், வாட்ச், தோடு, செயின்.. எல்லாம் போட்டுக்காட்டேன்.” என்றான் கண்ணில் காதலோடு.

அவன் கேட்ட விதம், அவளுக்குள் மெலிதான வெட்கத்தை தோற்றுவித்தது. அவள் முகத்திலும் நன்றாக அது தெரிந்தது. ரசனையோடு பார்த்தவன்.. “போட்டுக்காட்டேன், செல்வி”, என்றான் மறுபடியும்.

“சரி. போட்டுக்கறேன்”, என்றவள் போட்டுகொண்டாள். இன்னும் செழிப்போடு தெரிந்தாள் செல்வி. நகை பெண்களுக்கு அழகு தானே. அந்த அழகு.. அவன் கண்களில்.. அதீத காதல் தெரிய செய்ய..

அதை பார்த்தும் பார்க்காதவள் மாதிரி.. “நீங்க இன்னும் சாப்பிடலை”, என்று ஞாபகப்படுத்தினாள்.   

“பசிக்கலை”, என்றான்.

“இது நல்ல கதையா இருக்கே. சாப்பிடாம இருக்க போறீங்களா?” என்று கடிந்தாள். அதட்ட நினைத்தாலும் குரல் அவளையறியாமல் கொஞ்சியது.

“நீ எனக்கு கம்பெனி குடுக்கறியா?. நான் சாப்பிடறேன்”, என்று பேரம் பேசினான்.

“நான் சாப்பிட்டுடேன்”, என்றாள்.

“மணி பாரு. நாலரை மணி. நீ ஒரு மணிக்கு சாப்பிட்டு இருப்ப”, என்றான்.

அப்போது தான் மணியே பார்த்தாள். இவனோடு இருந்தால்.. நேரம் போவதே தெரியலை என்று நினைத்தாள்.

“சரி, வாங்க சாப்பிடலாம்”, என்றாள் சந்தோஷமாகவே.  

அவளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவன்.. நகைக்கடை போல அவனே செலக்ட் செய்யாமல்.. அவளை கேட்டே ஆர்டர் செய்தான். பேசிக்கொண்டே, அவளை அதிகமாக உண்ணவும் வைத்தான். அவன் ஹாஸ்டலில், மறுபடியும் இறக்கி விடும் போது ஆறு மணி.  

இருவருக்கும் அந்த சந்திப்பு ஒரு நிறைவை கொடுத்தது. ஒரு உரிமையை மற்றவரிடத்தில் கொடுத்தது. செல்விக்கு தானும் அவனை காதலிக்கத் தான் செய்கிறோமா? அவன் அருகாமையை விரும்புகிறோமா?.. என்ற சந்தேகத்தையும் கொடுத்தது.  

Advertisement