Advertisement

அத்தியாயம் பத்தொன்பது :

செல்வியை இறக்கிவிட்ட அருளுக்கு.. எங்கே செல்வது என்று தெரியவில்லை. அவன் சரவணன் வீட்டில் தான் தங்கியிருந்தான். ஆனால், இனியும் அங்கு தங்குவதில் விருப்பம் இல்லை.

தனது தந்தை, வீட்டை விட்டுப் போக சொன்ன போது.. சரவணன் அமைதியாக தானே இருந்தான். அப்போது.. அவனும் தன்னை வீட்டை விட்டுப் போக சொன்ன மாதிரி அர்த்தம். அவன் வீட்டில் மட்டும் எப்படி தங்குவது?

அதுவுமில்லாமல்.. எதிர்காலத்தில் செல்வி, அவனோடு வாழ வரும்போது.. அங்கே இருப்பது சரிவராது என்றே நினைத்தான். அருளுக்கும் குவார்ட்டர்ஸ் அல்லாட் ஆகியிருந்தது தான். ஆனால் ,இத்தனை நாட்கள் அதனைப் பற்றிய கவலை இல்லாமல் இருந்தான். இப்போது அவனுக்கு அல்லாட் ஆகியிருக்கும் குவார்ட்டர்ஸ்சிற்க்கு போய் விடலாம் என்று தோன்றியது.

சொல்லாமல் கொள்ளாமல் போகவும் மனதில்லை. அது மரியாதையும் இல்லை என்றறிவான். அதனால் சரவணனும் ராதிகாவும் வரும் வரையில் வீட்டில் தங்குவது.. அவர்கள் வந்தவுடன் சென்று விடுவது.. என்று முடிவெடுத்துக்கொண்டான்.

அன்றே.. அவனுக்கு அல்லாட் ஆகியிருக்கும் குவார்ட்டர்ஸ்சிற்கு சென்றான். அது சரவணனின் குவார்ட்டர்ஸ்சிற்கு பக்கத்திலேயே இருந்தது. இது வேறா.. என்று நினைத்தான். எப்படி அவர்களை பார்த்துக்கொண்டு.. அவர்களிடம் பேசாமல் இருப்பது.. என்று நினைத்தான். வேறு வழியில்லை.. பார்ப்போம் என்று விட்டுவிட்டான்.

குவார்ட்டர்ஸ் உள்ளே நுழைந்தால்.. அது வெறிச்சென்று இருந்தது. உள்ளே ஒரு சாமானும் இல்லை. எல்லாம் வாங்க வேண்டுமோ?. எவ்வளவு செலவாகும்.. என்று கணக்கு போட்டான். எல்லாம் இப்போது வாங்க வேண்டாம். தனக்கு எது தேவையோ.. அதை மட்டும் வாங்க முடிவெடுத்தான். ஒரு கட்டிலும் மெத்தையும் மட்டும் இப்போதைக்கு போதும் என்று நினைத்தான். 

மற்ற சாமான்கள் எல்லாம்.. செல்வியும் வந்து, கூட சேர்ந்து வாங்கினால்.. நன்றாக இருக்கும் என்று நினைத்துதான்.. அந்த முடிவை எடுத்தான். தன்னோடு செல்வி.. எப்போது வாழ வருவாளோ என்றிருந்தது.         

செல்வி.. அவனோடு வாழ வருவது.. சரவணன் ராதிகா கைகளில் தான் இருக்கிறது.. என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளுக்கு, ஒரு வேளை விருப்பம் வந்தால் கூட.. அவர்களை மீறி எதுவும் அவள் செய்ய மாட்டாள்.. என்று அவன் அறியவில்லை.

அங்கே ஊரில்.. சரவணன் ராதிகாவைத் தான் வறுத்து எடுத்துக்கொண்டிருந்தார் கோதை. சரவணனும் எதுக்கும் பதில் சொல்ல முடியாத மௌனியாகவே இருந்தான்.

அருள் இப்படி செய்வான் என்றும் எதிர்பார்க்கவில்லை.. இனி என்ன செய்வது என்றும் சரவணனுக்குத் தெரியவில்லை. கோதை அம்மாவை எப்படி சமாதானப்படுத்துவது என்றும் தெரியவில்லை.

மறு வீட்டு விருந்துக்கு வந்த எழிலரசியும், “எனக்கும்.. இந்த விஷயம் தெரியும்”, என்று கூறிவிட்டாள்.

“ஏன் சொல்ல வில்லை..” என்று எல்லாரும் அவளிடம் பாய.. அண்ணன் அவளிடம் சொல்லக்கூடாது.. என்று மிரட்டியதையும் சொன்னாள். தானும் திருமணம் முடிந்து.. சொல்லலாம் என்று இருந்ததாக சொன்னாள்.

சரவணனுக்கு நன்கு புரிந்தது. தங்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டால்.. எப்படியும் தடுத்துவிடுவோம் என்று தெரிந்து.. முதலிலேயே காரியத்தை சாதித்து கொண்டான் என்று.

சரவணன், செல்வி மேல் பயங்கர கோபத்தில் இருக்கிறான்.. என்றுணர்ந்த ராதிகா தான்.. “அவள் என்ன செய்வாள்.. பாவம்.”, என்று செல்விக்காக சரவணனிடம் பரிந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

“நீ அவளுக்காக பேசாத.. ராதிகா. அவளுக்கு தெரிஞ்ச உடனே.. நம்ம கிட்ட சொல்லியிருக்க வேண்டாமா?. அவளுக்கு தெரியாம இருக்க வாய்பே இல்லை. ஏன் அப்படி செஞ்சா?” என்றான் காட்டமாக.

“அவளே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. நம்ம கிட்ட சொல்ல கூடாதுன்றது அவளோட எண்ணமா இருந்திருக்காது. அதுக்கான வாய்ப்பை.. அருள் யாருக்கும் குடுக்கலை. உங்களுக்கு எல்லாம் சம்மதம் இருக்காதுன்னு தெரிஞ்சு தான்.. அவன் யார்கிட்டயும் சம்மதமே கேட்காம.. யாருக்கும் தெரிஞ்சு, தடுக்கறதுக்கு முன்னாடியே.. அவளை கல்யாணம் செஞ்சிகிட்டான்.”

“உன்னால இதை ஏத்துக்க முடியுதா.. ராதிகா?”,

“நாம ஏத்துக்கறோமா.. இல்லையான்ற ஆப்ஷனையே.. அருள் நமக்கு குடுக்கலை. இனிமே..அவன் வேணும்னு நாம நினைச்சம்னா.. அந்த கல்யாணத்தை, நம்ம ஏத்துகிட்டு தான் ஆகணும். வேற வழி இல்லை. அதுவுமில்லாம ரெண்டு பேருமே நமக்கு பிரியமானவங்க தானே..”

“இப்போதைக்கு.. என்னால அது முடியும்னு தோணலை, ராதிகா. அம்மாவோட கோபம் குறையணும். என் மனசும் ஆறணும். காலம் தான் இதுக்கு பதில் சொல்லணும். நீ என்னதான்.. என்னை சமாதானப்படுத்த முயற்சி எடுத்தாலும்.. என் மனசு இதை ஒத்துக்கவே மாட்டேங்குது.” என்றான் கறாராக. 

ராதிகா, வித வித மான வார்த்தைகளை போட்டு.. சரவணனை சமாதானப்படுத்த முயற்சித்தாள். ஆனால் முடியவேயில்லை.

செல்வி.. அவள் மனதில் அருளின் நினைவுகளை அசை போட்டு கொண்டு படுத்திருக்க.. எப்பொழுதும் போல ஆனந்தியை.. செல்வி எழுப்பததால், அவள் எழுந்திருக்கவேயில்லை.

இவள் நினைவுகளையெல்லாம் முடித்து.. “இன்று காலேஜ் போவதா வேண்டாமா..” என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான்.. ஆனந்தி இன்னும் உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்தவள்.. மெதுவாக அவளை எழுப்பினாள்.

எழுந்த ஆனந்தி செல்வியை பார்த்தவள்.. “எப்போ வந்த செல்வி”, என்றாள். 

“கதவை கூட லாக் பண்ணாம தூங்குவியா நீ..” என்று அவளை அதட்டினாள் செல்வி. 

“எனக்கு தனியா படுக்க பயமாயிருந்ததுன்னு.. ஜூனியர், ஒரு பொண்ணை துணைக்கு படுக்க சொன்னேன். அவ காலைல எழுந்து போகும் போது.. கதவை சும்மா மூடிட்டு போயிருப்பா.”, என்றவள் செல்வியின் உடை.. அவள் கழுத்தில் பளிச்சென்று கனமாயிருந்த.. ஒரு புதிய சங்கிலி எல்லாவற்றையும் பார்த்தாள்.

“நீ ஏன்.. கல்யாணத்துக்கு கட்டுன புடவைய கூட மாத்தாம.. அப்படியே ட்ரெயின்ல வந்திருக்க. கழுத்துல புதுசா.. இது என்ன செயின்? இவ்வளவு பெருசா..”, என்றாள்.

அருள் நல்ல கனமான சங்கிலியில் தான் தாலியை கோர்த்திருந்தான். கிட்டத்தட்ட எட்டு பவுன் சங்கிலி அது. அப்போது கனமாய் தானே இருக்கும்.

வாய் மொழியாக பதில் கூறாத செல்வி.. அந்த சங்கிலியை எடுத்து கழுத்துக்கு வெளியில் போட்டாள்.

பார்த்த ஆனந்தி அதிர்ந்தாள். எழுந்து அவள் அருகில் வந்தவள். “என்ன செல்வியிது? என்ன நடந்தது?. உனக்கு கல்யாணமா.. யாரோட?” என்றாள்.

“திடீர்னு நடந்தது. எனக்கேத் தெரியாது”, என்றாள் செல்வி கம்மிய குரலில்.

“யாருடி ? சும்மாவா விட்ட அவனை. யாருடி அவன்?”, என்றாள்  கோபமாக.

“அருள் பாண்டியன்”, என்றாள் ஒற்றை வார்த்தையாக செல்வி.

“யாரு அருள் அண்ணனா?”, என்றாள் அதிர்ச்சியாக ஆனந்தி. கூடவே, “ஒரு போலீஸ் ஆபிசர். இப்படி செய்வாரா?” என்றாள்.

“செஞ்சிட்டாரே..”,

“ஏன்? உன்கிட்ட சொல்லி.. லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணியிருக்கலாமில்ல..”,

“என்னை பார்த்தா.. உனக்கு லவ் பண்ணி.. கல்யாணம் பண்ற மாதிரியா இருக்கு?.”, என்றாள் கோபமாக செல்வி.

“அதான்.. சொல்லாம கொள்ளாம.. கல்யாணம் பண்ணிட்டார் போல..” என்றாள், அவளின் கோபத்தை பார்த்து ஆனந்தி.

“அப்போ.. நீ அவர் பண்ணினது சரின்னு.. சொல்றீயா?”

“தப்பு தான்! என்ன பண்ணப் போற இனி! அவரே போலீஸ் ஆபிசர். அவருக்கு எதிரா கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறியா?”

“என்னது கம்ப்ளைண்டா?”, என்று அதிர்ந்தாள் செல்வி. அவள் அந்த கோணத்தில் எல்லாம் யோசிக்கவே இல்லை.

“என்னது.. எங்க அய்யாவோட தம்பிய, நான் போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கறதா.? வேற ஏதாவது பேசு”, என்றாள் கோபமாக.

“என்னடி நீ? அதுக்கும் கோபப்படற. இதுக்கும் கோபப்படற. அப்போ என்ன.. அவரோட குடும்பம் நடத்தப் போறியா?”, என்றாள் ஆனந்தி.

“என்ன.. குடும்பம் நடத்தறதா?”, என்று அதற்கும் அதிர்ந்தாள் செல்வி.

அவள் அதிர்ந்ததை பார்த்து பாவமாக இருந்தது ஆனந்திக்கு. “அப்போ.. என்ன தாண்டி பண்ணபோற?”,

“எனக்கேத் தெரியலை”, என்றாள் பாவமாக. “எப்பவும்.. எங்க அய்யாவும் அக்காவும் தான்.. நான் என்ன பண்ணனும்னு சொல்லுவாங்க. இப்போ தான்.. என்கிட்ட அவங்க கோபிச்சிட்டாங்களே..” என்றாள் அழுகை கண்களில் முட்ட.

“அவங்க உன்னை ஏண்டி கோபிச்சிட்டாங்க..என்ன தான் நடந்தது சொல்லு”, என்றாள் ஆனந்தி.

நடந்ததனைத்தையும் செல்வி ஆனந்தியிடம் சொல்ல.. தங்கையின் திருமணத்திலேயே, எல்லாரும் பார்க்க தாலியை கட்டியிருக்கிறான். இவள் மேல் நிறைய காதல் இருக்க வேண்டும். வீட்டினரும் ஒத்துக்கொள்ள மாட்டார். இவளும் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று தெரிந்து தான்.. இப்படி செய்திருக்க வேண்டும்.

அவள் சொன்னதை வைத்து.. “அப்போ உன் ஜாதி தான் பெரிய தடைன்னு சொல்லு”, என்று சொல்லி யோசித்தவள். “சரி! கல்யாணம் பண்ணிகிட்டார்! ஆனா.. உன்னை ஏன் மறுபடியும் ஹாஸ்டல் அனுப்பினார்?”,

“நான் தான் ஹாஸ்டல் போறேன்னு.. அங்க வீட்டுலயே கிளம்பிட்டேன்.”,

“நீ கிளம்பிட்ட.. ஆனா கட்டாயப்படுத்தி தாலி கட்டின.. அவர் ஏன் விட்டார்?”,

“விடலை. என்கூட வந்து.. ஹாஸ்டல் வரைக்கும் விட்டுட்டு தான் போனார்.” என்றாள் ரோஷமாக செல்வி. சொன்ன பிறகு தான்.. தான் தன்னை அறியாமல்.. அவனை சப்போர்ட் செய்வதை  உணர்ந்தவள். 

“அவர் ஏன் என்னை.. விட்டுட்டு போனார்னு எனக்கு தெரியலை. ஆனா கூப்பிட்டு இருந்தாலும்.. நான் போய் இருக்க மாட்டேன்.”

“ஏன் உனக்கு அவரை பிடிக்கலையா?”

“பிடிச்சிருக்கா.. பிடிக்கலையா.. நான் யோசிக்கவே தயாரா இல்லை.”

“அது தான் ஏன்?”

“என்னை.. இத்தனை வருஷம் ஆளாக்கின எங்கய்யாவையும் அக்காவையும் மீறி.. நான் எதுவும் செய்ய மாட்டேன். எங்கய்யாவுக்கு  இந்த கல்யாணம் பிடிக்கவேயில்லை. எனக்கு அவரைப் பார்த்தவுடனே தெரிஞ்சிடுச்சு. அவரும் என்னை தப்பா நினைச்சு கேள்வி கேட்டார். அதனால இது நடக்காது..”

“அப்போ.. அவர் கட்டின தாலியை ஏண்டி போட்டுட்டு இருக்க.. அவங்கம்மா சொன்ன மாதிரி.. என் சம்மதமில்லாம நடந்ததுன்னு, பேசாம கழட்டியிருக்க வேண்டியது தானே..”

“அது தான் என்னை மிரட்டுறாரே..”,

“யாரு?”

“எங்கய்யாவோட தம்பி..”

“என்னன்னு”,

“இதை கழட்டினா.. பொண்ணுங்க எதுக்கு தாலியை கழட்டுவாங்களோ.. அது தான் நடக்கும்னு.”

“சபாஷ்.. இப்படி ஒரு செக்கா.”,என்று மனதிற்குள்ளேயே அருளை பாராட்டினாள் ஆனந்தி.

“அவர் மிரட்டினா.. நீயேண்டி பயப்படற. நீ பாட்டுக்கு கழட்ட வேண்டியது தானே..”, என்று செல்வியை உசுப்பேற்றினாள் ஆனந்தி.

“அது எப்படி? அவருக்கு ஏதாவது ஆகட்டும்னு விட முடியுமா?” என்றாள் செல்வி. 

செல்விக்கு இந்த திருமணத்தில்.. விருப்பம் உள்ளதோ இல்லையோ.. ஆனால் வெறுப்பு இல்லை போலவே.. ஆனந்திக்கு தோன்றியது.

“இப்போ என்னதாண்டி பண்ண போற..” என்றாள் மறுபடியும் ஆனந்தி.

“ஒண்ணும் பண்ணப் போறதில்லை. எப்பவும் போல படிப்பை தொடர போறேன்.”

“அருள் அண்ணா வந்து கூப்பிட்டால்..”,

“நான் போகமாட்டேன்”, என்றாள் தீர்மானமாக செல்வி.

திருமணம் போல.. அவன் ஏதாவது அதிரடி நடவடிக்கை.. எடுத்தால் தான் உண்டு.. என்ற எண்ணமே ஆனந்திக்கு தோன்றியது. ஆனால் அதை செல்வியிடம் சொல்லவில்லை.

“சரி. இப்போ என்ன காலேஜ்க்கு கிளம்பறோமா.. இல்லையா?”,

“என்னை யாராவது கேட்டா.. நான் என்ன சொல்ல” என்றாள் பரிதாபமாக செல்வி. 

“உனக்கு கல்யாணம் ஆனது யாருக்காவது தெரிஞ்சா தானே கேட்பாங்க..”

“உன்னை மாதிரி யாராவது செயின் பார்த்து கேட்டா..”

“திடீர்ன்னு நடந்துடுச்சு. யாரையும் கூப்பிட முடியலை. என் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம்.. என்னை கூட கூட்டிட்டு போவார்னு சொல்லிடு. ரொம்ப சிம்பிள்.” என்றாள்.

“எப்படிடி உன்னால எல்லாத்துக்கும்.. இப்படி டக்குன்னு பதில் சொல்ல முடியுது ..“

“ஏன்னா.. உன் ஃபிரன்ட் ரொம்ப புத்திசாலி.”

“யாரும் என்னை பத்தி.. தப்பா நினைப்பாங்களா?”,

“எதுக்கு? கல்யாணம் ஆனதுக்கு எல்லாம் தப்பா யாரும் நினைக்க மாட்டாங்க.”

“என்னவோ பயமாயிருக்கு”, என்றாள் செல்வி கண்கள் கலங்க.. தன் மனதை மறையாது.

“அசடு மாதிரி அழாத. நடந்ததுக்கு நீ பொறுப்பில்லை. நடந்திடுச்சு. இனி என்ன நடக்குது பார்ப்போம். இது பைனல் இயர். நீ படிப்பை கவனி. நான் நினைக்கிறேன் அருள் அண்ணன் கூட.. நீ படிக்கட்டும்னு தான் ஹாஸ்டலுக்கே மறுபடியும் வர விட்டிருப்பார்.” என்று அருளுக்கு சப்போர்ட் பண்ணி பேசினாள்.

அருளை பற்றி சொன்னதால்.. அவள் ஏதாவது எதிர்த்து பேசுவாள் என்று ஆனந்தி நினைக்க.. செல்வி அமைதியாகவே நின்றாள். “சரி.. எப்படியும் ஃபர்ஸ்ட் ஹவர் கட் அடிக்க போறோம். செகண்ட் ஹவராவது போகலாம்.. கிளம்பு, சீக்கிரம்.” என்று அவளின் மனதை திசை திருப்பினாள்.

மதியம்.. அவளை எப்பொழுதும் பார்க்கும் நேரத்தில்.. அருள் அவளை பார்க்க வரவில்லை. ஆனால் தொலைபேசியில் செல்வியை அழைத்தான். இவள் எடுப்பதா வேண்டாமா என்று யோசித்து.. அதையே பார்த்துக்கொண்டிருக்க, ஆனந்தி போனை எடுத்தாள்.

அவன், “செல்வி”, என்றழைத்ததுமே..

“அண்ணா நான் ஆனந்தி”, என்றாள்.

“என்னம்மா.. அவ போனை எடுக்கலையா?”

“எடுக்கவா வேண்டாமான்னு.. முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருந்தா. நான் தான் எடுத்தேன்”, என்றாள்.

“அவ எங்க கல்யாணத்தைப் பத்தி சொன்னாளாம்மா?”,

“சொன்னா அண்ணா”

“நான் உன்கிட்ட நேர்ல பேசறேன். அவளை அப்பப்போ பார்த்துக்கோ”, என்றான்.

“அப்பப்போ எதுக்கு அண்ணா. எப்பவுமே பார்த்துக்குவேன்.” என்றாள் ஆனந்தி.

“தேங்க்ஸ் ஆனந்தி! அப்படியே உன் நம்பரை எனக்கு மெசேஜ் பண்ணு. ஏதாவது எமெர்ஜென்சின்னா.. எனக்கு கூப்பிட வசதியாயிருக்கும்”, என்றான் அருள்.

“சரி அண்ணா. செல்வியோட பேசறீங்களா, குடுக்கவா?”

“அவ பேசினா குடும்மா.”

அவள் பேசமாட்டேன் என்பது போல தலையாட்ட.. “அவ பேசமாட்டேங்கறா”, என்றாள் அப்படியே ஆனந்தி.

“சரி விடு! எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு. அப்புறம் கூப்பிடறேன்”, என்று சொல்லி, அவனும் போனை வைத்துவிட்டான்.

“நான் தான் இனிமே உங்களுக்கு நடுவுல தூதா.. ஹய்! இது கூட நல்லாயிருக்கு.” என்று ஆனந்தி குதூகலிக்க.. செல்வி அவளை முறைத்தாள்.

அதற்குள் பரத் வர.. அவன் என்ன விஷயம் என்று கேட்க.. அவனும் அவர்களுக்கு உற்ற நண்பன் என்பதால்.. யாரிடமும் இதை பகிர வேண்டாம் என்று சொல்லி.. அவனிடம் மட்டும் விஷயம் உரைக்கப்பட்டது.

“நான் அப்போவே சொன்னேன் இல்லை. அந்த சர் கண்ணுல ஒரு தீவிரம் தெரிஞ்சது. நீ தான் அசால்டா இருந்துட்ட.” என்று செல்வியை கடிந்தான்.

“நடந்ததுக்கு அவ என்ன பண்ணுவா..” என்று ஆனந்தி சப்போர்டிற்கு வர

“இப்போ மட்டும் என்ன? அருள் சர் நல்ல செலச்ஷன் தான்னு எனக்கு தோணுது.  ஐ பி எஸ் கேடர்.  நல்ல பெர்சனாலிட்டி..  நல்ல உயரம்.. என்ன கலர் தான் கொஞ்சம் மாநிறம். இவ கலருக்கு கொஞ்சம் கம்மி. மற்றபடி, அவர் டபுள் ஓ.கே கூட இல்லை.. ட்ரிபில் ஓ.கே.. எவ்வளவு தைரியமா வீட்டை எதிர்த்து தாலி கட்டியிருக்கார்.” என்று பரத்தும் அருள் புகழ் பாட..

செல்வி முறைத்து பார்ப்பாள் என்று ஆனந்தி எதிர்பார்க்க.. அவள் அமைதியாகத் தான் நடந்து கொண்டிருந்தாள்.

பரத்தும் ஆனந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து.. புருவம் உயர்த்தினர். அவர்கள் இருவருமே உணர்ந்தது ஒன்று தான். அருளை செல்விக்கு பிடிக்குதோ இல்லையோ.. வெறுப்பு இல்லை. திருமணத்திற்கு பிறகு.. திருமணத்தைக் குறித்து, மனதில் நல்லவிதமாக சிறு சலனமும்.. தோன்றியிருக்க வேண்டும் என்று.

ஆம்! செல்வி மனதில் சிறு சலனம் தான். அந்த இரவு.. அருள் அவளை ராணி மாதிரி உணரவைத்த பிறகு.. சிறு சலனம் தான் மனதில். அதுவும் தனக்காக.. அவன் வீட்டில் உள்ள எல்லோரையும் எதிர்த்து.. திருமணம் செய்திருக்கிறான் என்றதும், சிறு சலனம். அது மட்டுமல்லாமல்.. அருளை போல ஒரு வாலிபனை மறுக்க ஒரு காரணமுமில்லை. எல்லாம் நல்லபடியாக நடந்திருந்தால்.. அய்யாவுக்கு கோபம் வராமல் இருந்திருந்தால் என்று மனம் சற்று ஏங்கத்தான் செய்தது.  

அவளின் மௌனத்தை ஆனந்தியும் கலைக்கவில்லை. பரத்தும் கலைக்கவில்லை. அவள் சற்று யோசிக்கட்டும் என்று விட்டு விட்டனர்.

அன்று இரவு.. பதினோரு மணிவரை விழித்து.. படித்துக்கொண்டுதானிருந்தாள் செல்வி. கூடவே கவனம்.. ஏன் இன்னும் குட் நைட் மெசேஜ் வரவில்லை.. என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அவள் உறங்கும் வரையிலும் வரவில்லை.

காலையில் அவள் எழுந்ததும்.. முதலில் தேடியது அவளின் போனை தான். மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்க. பார்த்தால்.. இரவு மணி இரண்டுக்கு மெசேஜ் வந்து இருந்தது “குட் நைட்”, என்று.. மறுபடியும் காலை ஐந்தரைக்கு “குட் மார்னிங்”, மெசேஜ் வந்திருந்தது.

இது என்ன.. மூன்றரை மணிநேரம் தான் தூங்கினானா?. இப்படி தூங்கினால் உடம்பு கெட்டுவிடாதா.. என்று அவன் மேல் அக்கறை தோன்றியது. இதற்கு முன்னாலும்.. அவன் இந்த நேரங்களில்.. பலமுறை மெசேஜ் அனுப்பியிருக்கிறான் தான்.

அப்போதெல்லாம் தோன்றாத அக்கறை.. அவளையறியாமலேயே இப்போது தோன்றியது.  தன் கணவன் என்ற உரிமையோடு பார்க்கிறாளா.. அவளுக்கேத் தெரியவில்லை. எப்படியோ தூங்கும் நேரமும் அவனையே நினைத்தாள். விழிக்கும் நேரமும் அவனையே நினைத்தாள்.

“என்ன செல்வி புதுசா.. எப்பவும் போனை நோண்டிட்டே இருக்க”, என்றாள் ஆனந்தி.

“ஒண்ணுமில்லையே”, என்றாள் பதட்டமாக செல்வி. அவள் ஒன்றுமில்லை என்று சொன்னதிலேயே.. ஏதோ இருக்கிறது என்று ஆனந்திக்கு புரிய..

“என்ன.. அண்ணா போன் பண்ணுவாங்கன்னு.. பார்த்துட்டு இருக்கியா?”,

“இல்லையே”, என்றாள் வீம்பாக செல்வி. உண்மையில் அவள் மனம்.. அவனுடன் பேச ஆவலாக தான் இருந்தது. தன் மனதின் ஒரு நாளைய மாற்றம்.. அவளே எதிர்பார்க்காதது. தன் ஐயாவுக்கு.. இது பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை.. என்று கஷ்டப்பட்டு ஞாபகத்தில் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவள் யோசனையை கலைக்க..   

“சரி நம்பிட்டேன்”, என்றாள் கிண்டலாக ஆனந்தி.

“அம்மா தாயே.. என்னை விட்டுடு”, என்று செல்வி கைகூப்ப..

“சரி போனா போகுது. பொழைச்சு போ. அருள் அண்ணனோட..” என்று ஆனந்தி ஆசீர்வதிக்க..

அருளையே நேற்றிலிருந்து நினைத்துக்கொண்டு இருந்ததினால்.. “நானே.. அவரை கஷ்டப்பட்டு மறக்க முயற்சி பண்ணினா.. நீயேன் அவரை ஞாபகபடுத்தி விடுற..” என்று அவளின் மனதை மறையாது.. அவள் வாயிலிருந்தே வார்த்தைகள் வந்து விழுந்தன. 

“ஹேய் ஒத்துக்கிட்டியா..” என்று ஆனந்தி கத்த.. தான் சொன்ன வார்த்தையின் வீரியம் புரிந்து. “அச்சோ”, என்று தலையில் செல்வி கைவைக்க.. 

“எதுக்கு மறக்க முயற்சி பண்ணற. அதெல்லாம் வேண்டாம். ஒண்ணும் மறக்க வேண்டாம்.”, என்று ஆனந்தி அழுத்தி சொன்னாள். 

இங்கே ஆனந்தி அழுத்தி.. அருளை மறக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்க. “எப்படி தான்.. என் மகன் அந்த புள்ளையை மறக்க போகிறானோ?” என்று ஒரு பக்கம் கோதை புலம்பிக்கொண்டிருந்தார். பூபதி பாண்டியன் இரண்டு நாட்களாக.. அவரை தேற்றியதையும் மீறி புலம்பிக்கொண்டிருந்தார்.

அன்று இரவு சரவணன் மட்டும் கிளம்புவதாக இருந்தது. “நானும் வருவேன்”, என்று  ராதிகா பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“அருள் வேற.. இப்படி பண்ணிட்டு போயிட்டான். அந்த வருத்தத்துல வீடு இருக்கும்போது.. எல்லாரும் கிளம்பிபோனா எப்படி.? எனக்கு நிறைய நாள் லீவ் போட முடியாது, ராதிகா. புரிஞ்சிக்கோ நீ இருந்துட்டு வா.”, என்று சரவணன் அவளை சமாதனப்படுத்திக்கொண்டிருக்க.

ராதிகா. “நான் மட்டும் தனியா இங்க இருக்க மாட்டேன். எனக்கு பயமா இருக்கு. நான் இருந்தா.. அத்தை என்னையும் உங்களையும் திட்டிட்டே இருப்பாங்க. நானும் வர்றேன்”, என்று பயங்கரமாக பிடிவாதம் பிடித்தாள்.

“அம்மா அப்படி செய்யமாட்டாங்க. அப்பா அவங்களை சமாதனப்படுத்திட்டே தான் இருக்கிறார்.”, என்று ராதிகாவிடம் சரவணன் சமாதனம் செய்தும் எடுபடவில்லை.

 வேறு வழியில்லாமல் சரவணன் கோதையிடம், “அம்மா நாங்க இன்னைக்கு கிளம்பறோம்”, என்று சொல்ல..

“போங்கடா! போறவங்க எல்லாம் போங்கடா. நான் யாரையும் இருன்னு சொல்ல மாட்டேன். அவன் ஒருத்தன்.. நாங்க தேவையில்லைன்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டான். என்ன ஆகப் போறானோ..”, என்று புலம்பிக்கொண்டே முகத்தை தூக்கி வைத்துக்கொண்டார்.

சரவணனுக்கு.. யார் புறம் பேசுவது என்றே தெரியவில்லை.

“என்ன கோதை இப்படி பேசுற..”, என்று அவரை கடிந்த பூபதி பாண்டியன்.

“நம்ம பையன் நல்லா இருப்பான் கோதை. தெரிஞ்சோ, தெரியாமலோ.. அருள் ஒரு வாழ்கையை தேர்ந்தெடுத்துட்டான். நமக்கு பிடிக்கலைன்றதுக்காக.. நம்ம பையன் நல்லா இருக்கக்கூடாதுன்னு இருக்கா என்ன? அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். ரெண்டு நாளா நான் இதைதான் சொல்றேன்.. நீ கேட்க மாட்டேங்கற.”, என்றார்.

“நமக்கு விருப்பமில்லையா.. நம்ம தள்ளியே இருப்போம்.” 

“அந்த பொண்ணு நம்ம ஜாதியில்லை, வசதியில்லை. இதைத்தவிர.. என்ன குறை அந்த பொண்ணுகிட்ட. நம்ம கண்முன்ன வளர்ந்த பொண்ணு. குணத்துலையோ, நடத்தையிலோ.. சின்ன தப்பு கூட சொல்ல முடியாது. நம்ம சரவணன் வளர்த்த பொண்ணு. டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கு. நல்ல எதிர்காலம் இருக்கு. படிப்பு எல்லாத்தையும் மறக்கடிச்சிடும்”, என்றார்.

அவர் செல்வியை பற்றிப் பேசப் பேச.. கோபம் இருந்தாலும், சரவணனுக்கு பெருமையாக இருந்தது.  

கோதை ஒரு புறம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாலும், கணவர் சொன்னதை எதிர்த்தோ மறுத்தோ பேசவில்லை. கோதை அருளை பற்றியே நினைத்துக் கொண்டிருக்க.. 

அதே சமயம் அருளுக்கும்.. அவன் அன்னையின் ஞாபகம் அதிகமாக இருந்தது. எங்கிருந்தாலும் தினமும், அன்னையிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பவன் அவன். திடீரென்று அன்னையிடம் பேசாமல் நிறுத்த முடியவில்லை.

“அவர் பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன? நாம் பேசுவோம்”, என்று அருள், அவன் அன்னைக்கு கூப்பிட.. அவன் அன்னை போனை எடுத்தார்.

அது அவனின் அழைப்பு என்று தெரிந்து.. எடுக்கவா வேண்டாமா என்று யோசித்த போது.. சரவணன் தான் ‘’எடுங்க அம்மா’’ என்று சொன்னான். அதனாலேயே எடுத்தார்.

எடுத்தவுடனேயே அருள். “சாரி அம்மா. எழில் கல்யாணத்துல நான் அப்படி பண்ணினது தப்பு தான்மா. என்னை மன்னிச்சிடுங்க”, என்றான்.                        

“தெரியாம பண்ணினா மன்னிக்கலாம். தெரிஞ்சே பண்ணினவனை எப்படிடா மன்னிக்கறது..” என்றார் காட்டமாக.

“ப்ளீஸ் மா.. என்னை மன்னிச்சு.. எங்களை ஏத்துக்கம்மா.” என்றான் அருள்.

“உங்களை மன்னிச்சு ஏத்துக்கற அளவுக்கு.. எனக்கு மனப்பக்குவம் இல்லைடா சாமி. நான் மன்னிச்சா என்ன.. மன்னிக்காட்டி என்ன.. உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ தேர்ந்தெடுத்துட்ட. அதுலயாவது நல்லா பொழைச்சுக் காட்டு.” என்றார் கோதை.. வேண்டா வெறுப்பாக பேசுவது போல.

என்ன செய்வது.. தாய் மனதுக்கு அவன் செய்ததும் பிடிக்கவில்லை. அதே சமயம் செல்ல மகனையும் விட முடியவில்லை. இரண்டு நாட்களாக பூபதி பாண்டியன் கோதையை வெகுவாக தேற்றி இருக்க.. அவருக்கு தெரிந்த நியாயத்தை அவர் சொன்னார்.   

Advertisement