Advertisement

அத்தியாயம் பதினேழு :

“என்ன! வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்றீங்களா?”, என்று அதிர்ந்தார் கோதை.

“பின்ன.. இங்கயே வச்சு குடும்ப மானத்தை.. உன் பையன் மாதிரி ஏலம் போட சொல்றீயா?, நம்ம பொண்ணு கல்யாணம்டீ  இது. அதை நல்ல படியா முடிப்போம். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்.” என்று கோதையை அதட்டினார் பூபதி பாண்டியன்.

“கிளம்புடா..” என்றார் அருளை பார்த்து.

“நான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட பேசிட்டு போகட்டா?”, என்றான் அருள்.. அவன் தந்தையைப் பார்த்து.

“ஒண்ணும் வேணாம்.. நீ முதல்ல கிளம்பு”, என்று கர்ஜித்தார் பூபதி பாண்டியன்.

இப்போது மண்டபத்தில் எல்லாரும் நடந்த நிகழ்வை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். சுற்றி ஒரு கூட்டமாக நின்றிருக்க சிலர் எட்டி எட்டி செல்வியை பார்க்க முற்பட்டனர். சுரேஷின் அப்பாவும் அம்மாவும்.. என்ன இது கலாட்டா என்பது போல.. கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தனர்.  

நிலைமையை பார்த்த கற்பகம். “இந்தா பொண்ணே.. எந்திரி போகலாம்”, என்றார்  செல்வியிடம். அவள் எழுந்து நின்று, அவளின் அய்யாவின் முகம் பார்க்க அவளின் அய்யாவான சரவணன்.. முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டான்.

செல்வியின் கண்களில் கண்ணீர் தளும்பியது. ராதிகாவின் முகத்தைப் பார்க்க.. அவள் பாவமாக முகத்தை வைத்திருந்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் செல்வி நிற்க, “போ”, என்பது போல தலையை அசைத்தாள் ராதிகா.

ராதிகா தலையசைக்கவும்.. செல்வி கற்பகத்துடன் கிளம்பினாள். ராதிகா தலையசைத்ததை பார்த்த சரவணன்.. ராதிகாவை பார்த்து முறைத்தான். அவன் அருளின் மேல் கோபத்தில் இருந்தான். அதைவிட அதிகமாக செல்வியின் மேல் கோபத்தில் இருந்தான். தங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டுவிட்டாளே என்று.

அருள் விரும்புவது.. இவளுக்கு கொஞ்சம் கூடவா தெரிந்திருக்காது. ஏன்.. தன்னிடமோ, ராதிகாவிடமோ சொல்லவில்லை. சொல்லியிருந்தால்.. ஆரம்பத்திலேயே கூப்பிட்டு அருளை கண்டித்திருந்தால்.. இந்த மாதிரி ஒரு நிலைமை வராமல் இருந்திருக்குமோ.. என்னவோ என்று தோன்றியது. அதனால் அருளை விட செல்வியின் மேல் அதிக கோபத்தில் இருந்தான்.        

உறவுகள் எல்லாரும் சூழ்ந்திருக்க வார்த்தை எதையும் பேசாமல் மெளனம் காத்தனர் குடும்பத்தினர்.

அருளையும் செல்வியையும் கூட்டிக்கொண்டு கற்பகமும் அவள் கணவரும் காரில் கிளம்பினர். செல்வி அழுதாள் என்று சொல்ல முடியாதுஆனால் கண்களில் இருந்து நீர் மட்டும் நிற்காமல்.. வழிந்து கொண்டே இருந்தது.    

அருளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை செல்வி. அருளும், தன்னை அவள் பார்ப்பாளா, பார்ப்பாளா என்று தவிப்பாக பார்க்க.. அவள் கண்களை, அவன் புறம் திருப்பக் கூட இல்லை. வீட்டிற்கு வந்தவள் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள். களைப்பாக இருந்தது. படுத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. வாமிட் வரும் போல இருந்தது. என்னவென்று அவளுக்கே தெரியவில்லை. மனதோடு சேர்த்து உடலும் கஷ்டத்தை அனுபவித்தது.

அமைதியாக அமர்ந்து கொண்டாள். இன்னும் என்னென்ன.. எதிர் கொள்ள வேண்டுமோ.. தெரியவில்லை என்று. கழுத்தில் இருந்த தாலி உறுத்தியது. அதை பார்க்கப் பார்க்க பார்க்க முடியாமல் கண்களில் நீர் நிறைந்தது.

கற்பகம் சத்தமாக  எதுவும் பேசவில்லை. ஆனால் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். அருள் அவர்களை ஏதாவது சொல்லிவிடுவோமோ, என்று இறுக்கமாக வாயை மூடிக்கொண்டான். அத்தை என்று மட்டும் இருந்தால் ஏதாவது சொல்லியிருப்பான். ஆனால்.. அண்ணியின் அம்மா வேறு.. இல்லையா. அதனால் அமைதியாக இருந்தான்.

நேரம் கடந்து கொண்டே இருந்தது. மதியத்துக்கு மேல் ஆனது. செல்விக்கு பசிக்குமே என்று அருளுக்கு இருந்தது. அவனின் அத்தை முன்.. ஏதாவது கேட்கவும் தயக்கமாக இருந்தது. அவளையே.. எப்பொழுதும் போல், பார்த்தும் பார்க்காமல்.. பார்த்துக்கொண்டு இருந்தான்.   

எல்லாரும் திருமணத்தை முடித்து மதியம் தான் வந்தனர். கோதை வந்தவுடனே பொறிய ஆரம்பித்தார். “இந்த கல்யாணத்தை எல்லாம்.. நாங்க ஒத்துக்கொள்ள முடியாதுடா. என்ன.. இப்போ தாலியை தானே போட்டிருக்க. அது சினிமால வர்ற மாதிரி.. ஒரு கல்யாணம்னு நாங்க நினைச்சிக்கறோம். அதை கழட்டிடு..” என்றார், சற்றும் நிர்தாட்சயமின்றி செல்வியிடம்.

தாலியை கழட்டுவதா? அங்கே இருந்த அனைவரும் அதிர்ந்தனர். பூபதி பாண்டியனுக்கு.. மனைவி சொல்வதில் உடன் பாடு இல்லை. இருந்தாலும் அமைதியாக தான் இருந்தார். ஊருக்குள் இது.. அவருக்கு பெரிய தலைகுனிவு  என்று அவருக்குத் தெரியும். தன்னை பார்த்து கும்பிடு போட்டு.. ஒதுங்கிப்போகும் ஜனங்கள் எல்லாம்.. இனி தனக்கு உறவுக்காரர்களா.. என்றிருந்தது.

சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாகத்தான் நின்றான். அவனுக்கு எதுவும் பேச விருப்பமில்லை. அவனே பேசாத போது, ராதிகா என்ன பேசுவாள். அவளுக்கு செல்வியை நினைத்து பாவமாக இருந்தது.      

செல்வி அவர்கள் என்ன சொன்னாலும், செய்யும் முடிவில் தான் இருந்தாள்.

“தாலியை கழட்டிடு..” என்ற வார்த்தையை கேட்டு.. அதிகம் அதிர்ந்தது அருள் பாண்டியன்தான்.

“என்னமா சொல்ற நீ..” என்றான். அவன் குரலில் இருந்த அதிர்ச்சி.. அனைவரையுமே தாக்கியது. 

“வேற என்ன சொல்வாங்க”, என்று அருளிடம் சீறிய கோதை..

செல்வியை நோக்கிப் போய் “ம், அதை கழட்டிடு”, என்றார் மறுபடியும்.

செல்விக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தன் ஐயாவையும் அக்காவையும் பார்த்தாள். அவர்கள் அமைதியாகத்தான் நின்று கொண்டிருந்தனர்.

அருளுக்கு முதல் முறையாக பதட்டமானது. அவள் கழட்டிவிட்டால்.. என்ன செய்வது என்று.

செல்வியைப் பார்க்க அவள் தான், இவனை பார்க்க தயாராகவே இல்லையே. அவள் தன் ஐயாவையும் அக்காவையும் பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.

“அம்மா.. நீ அவளை தாலியைக் கழட்ட சொன்னீனா பொண்ணுங்க.. தாலியை எதுக்கு கழட்டுவாங்களோ.. அது தான் மா நடக்கும்.” என்றான் உறுதியாக.

இதைக் கேட்ட அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர். முக்கியமாக கோதையும் செல்வியும் தான்.. அதிகம் அதிர்ந்தனர். கோதைக்கு, “இப்படி சொல்லிவிட்டானே..” என்றிருக்க செல்விக்கு, “அப்படி என்ன.. இவனுக்கு தன் மேல்..” என்று அதிர்ச்சியாக  இருந்தது.

அதிர்ந்த முகத்தோடு.. அங்கே, முதல் முறையாக அருளை ஏறிட்டு நோக்கினாள். அவன்.. அவளையே தான் தீவிரமாக பார்த்துக்கொண்டு இருந்தான். அந்த பார்வையின் தீவிரம்.. அவளை, பார்வையை விலக்க வைத்தது.   

கோதையின் கோபம் முழுவதும்.. சரவணனிடமும் ராதிகவிடமும் திரும்பியது. “ஏண்டா.. எத்தனை  தடவை சொல்லியிருப்பேன். ஏதாவது பிரச்சினை ஆகிடப்போகுதுன்னு.. என் வாயை அடைச்ச. இப்போ.. இதுக்கு என்னடா சொல்ற?” என்று தன் பெரிய மகனிடம் பாய்ந்தார் கோதை.

அவன் என்ன சொல்வான். அவனுக்குத் தான்.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதுவுமில்லாமல்.. தான் எப்படி இதைக்கண்டுபிடிக்காமல் போனோம்.. என்று அவனுக்கே குற்ற உணர்ச்சியாக இருந்தது. அருளின் பேச்சில்.. பார்வையில் இருந்த தீவிரம்.. சரவணனுக்கு நன்கு உணர்த்தியது. இது இன்று, நேற்று வந்த நேசம் அல்ல.. வெகு வருடங்களாக இருந்திருக்க வேண்டும். அது கூட தெரியாமல்.. தான் பெரிய முட்டாளாயிருந்திருக்கிறோம் என்றிருந்தது.

அதுவும்.. செல்வி தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே.. என்று செல்வி மீது கோபமாக வந்தது. கண்டிப்பாக.. அருளின் காதல், அவளுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.. என்றே சரவணனுக்கு தோன்றியது.  

தன் அன்னையின் பேச்சுக்கு.. மறு பேச்சு பேசாமல் அமைதியாக நின்றான். அன்னை சொல்லும்.. தாலியை கழட்டுவது நியாமில்லை என்று தோன்றினாலும்.. என்ன இதற்கு முடிவெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. செல்வியின் மீது கோபம் என்றாலும்.. இந்த திருமணம், அவள் மீது திணிக்கப்பட்ட ஒன்று.. என்று நன்கு தெரிந்தது. இதற்கு.. அவள் தான் முடிவெடுக்க வேண்டும்.. என்று எதுவும் பேச விருப்பமில்லாமல்.. வாய் திறவாமல் நின்றான்.

“இப்படி நடந்ததுக்கு பதில் பேசாம நின்னா.. என்ன அர்த்தம்?. நீதானே அந்த பொண்ணை.. தலைல தூக்கி வச்சு ஆடின, இப்படி பண்ணிடாளேடா. எனக்கு ஒரு பதில் சொல்லுடா?” என்று சரவணை பிடித்து உலுக்கினார் கோதை.

செல்வியிடம் கேள்வி கேட்டே.. ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டான் சரவணன்.

“உனக்கு.. அருள் உன்னை விரும்பறது முன்னாலேயே தெரியுமா?”,

“தெரியும்”, என்பதை போல தலையாட்டினாள் செல்வி.

“அப்புறம் ஏன் எங்க கிட்ட சொல்லலை.? சொல்லியிருந்தா.. நாங்க அப்போவே தடுத்து நிறுத்தியிருப்போம். ஏன் சொல்லலை?”, என்றான் கோபமாக.

“எனக்கு சமீபமா தான் தெரியும். எழிலக்கா கல்யாணம் முடிஞ்சவுடனே சொல்லலாம்னு இருந்தேன். இவங்க இப்படி பண்ணுவாங்கன்னு தெரியாது..” என்றாள் அழுதுகொண்டே. மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இதை கேட்ட கோதை.. இன்னும் கோபமானார்.

“ஏண்டி உன்னை அவ்வளவு நல்லா பார்த்துட்டாங்களே.. என் மகனும் மருமகளும். இவனைப் பத்தி தெரிஞ்ச உடனே.. அவங்க கிட்ட சொல்லியிருக்க வேண்டாம்? இப்படி உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டியேடி. நல்ல பெரிய இடம். பையனும் பெரிய வேலையில் இருக்கிறான். வளைச்சு போடலாம்னு காத்திருந்திருக்க என் பையனும் அது தெரியாம.. உன் மேல ஆசைப்பட்டு.. வந்து வசமா மாட்டிகிட்டான்”,

“அப்படி சொல்லுங்க அண்ணி”, என்றார் பார்த்துகொண்டிருந்த கற்பகமும்.

“அம்மா நீ பேசாத..”, என்று அவரை மெதுவாக அதட்டினாள் ராதிகா.

அதே சமயம். “அம்மா, அவளுக்கு இதுல விருப்பம் இருந்தாலும்.. இல்லாட்டாலும்.. நான் அவளை தான் கல்யாணம் செஞ்சிருப்பேன். அதனால அவளை, அனாவசியமா பேசற வேலை வேண்டாம்”, என்றான் அருள்.

“ஒஹ்! அவ்வளவு தூரம்.. நீ அவ மேல பித்து பிடிச்சு போய் அலையறியா.? அப்படியாட.. நான் உன்னை வளர்த்து வச்சிருக்கேன்.” என்று தலையில் அடித்து கொண்டு அழ.

சரவணன் அவரின் கையை பிடித்து தடுத்தான். “அம்மா உடம்புக்கு ஏதாவது இழுத்து விட்டுக்காத..” என்று.

“என்னை, என்னடா பண்ண சொல்ற? இவன் இப்படி செஞ்சிட்டனே. பிடிச்சது தான் பிடிச்சான்.. நம்ம சாதி சனத்துல பிடிக்க கூடாது ..போயும் போயும் இவ தானா கிடைச்சா?” என்று கோபமாக கத்தியபடி.. கதறியழுதார் கோதை. ஆசை மகன்.. இப்படி செய்ததை அவர் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

சாதியை பற்றியெல்லாம் இழுக்கவும்.. இன்னும் அழுகை பொங்கியது செல்விக்கு.

“ஊருக்குள்ள நமக்கு இருக்குற மரியாதையை பத்தி கொஞ்சமாவது நினைச்சானா? இனிமே நம்ம எப்படி எல்லோர் முகத்துலயும் முழிக்கறது?. நம்ம மானம் மரியாதையை கெடுக்க.. என்ன வேலை செஞ்சு வச்சிருக்கான்”, என்று அழுதபடி ஆவேசமாக பேசிக்கொண்டே போனார் கோதை.  

“விடு கோதை”, என்று, ஒரு அதட்டல் போட்ட பூபதி பாண்டியன் “நாம யாரும் தேவையில்லைன்னு நினைச்சு அவன் பண்ணிட்டான். அவன் வாழ்கையை அவன் தீர்மானிச்சிட்டான். இனி நாம சொல்றதுக்கு என்ன இருக்கு?. அவன் வழிய அவன் பார்த்துக்கட்டும். விட்டுடு.. பேசி பிரயோஜனமில்லை.”

“இனி இங்க நிக்க வேண்டாம்.. நீ கிளம்பிடு.” என்றார் ஒற்றை வார்த்தையாக பூபதி பாண்டியன்.

“அப்பா..” என்று அருள் ஏதோ சொல்ல வர

“நீ எந்த விளக்கமும் சொல்ல அவசியமில்லை. நீ கிளம்பிடு.” என்றுவிட்டார் முடிவாக பூபதி பாண்டியன்.

கோதை இப்போது எதுவும் பேசாமல்.. அழுதுகொண்டே இருந்தார்.

“செல்வி வா”, என்று அவளை அழைத்தான் அருள்.

“என்ன! நான் இவனோடு போவதா?” என்று மறுபடியும் அதிர்ந்தாள் செல்வி.

தன் அய்யாவை பார்க்க.. “எனக்கும் இதற்கும் ஒரு சம்மந்தமுமில்லை”, என்பது போல நின்று கொண்டிருந்தான் சரவணன்.

“அய்யா.. நான் எந்த தப்பும் பண்ணலைங்கய்யா. இவங்க இப்படி பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியாது.. அய்யா”, என்று சரவணனிடம் சென்றாள் செல்வி.

அவன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொள்ள “அக்கா நீங்களாவது சொல்லுங்க அக்கா..” என்றாள் ராதிகாவைப் பார்த்து அழுதுகொண்டே.

அவள் செய்வதறியாது கையை பிசைந்தாள். 

அவர்கள் இருவரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்றுணர்ந்த செல்வி “இல்லை.. நான் வரமாட்டேன்”, என்றாள் உறுதியாக அருளை நோக்கி.

“வராம.. என்ன செய்ய போற?”, என்றான் அருள்.

“நான்.. என் ஹாஸ்டலுக்குப் போறேன்”, என்றவள், நிற்காமல்.. எல்லாரும் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கப் பார்க்க, அவளின் பேகை உடனே தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டாள். அவளைப் ‘’போக வேண்டாம்’’ என்று நிறுத்துவரோ ‘’அருளுடன் செல்’’ என்று சொல்லுவரோ..  இல்லை, ‘’ இப்படி செய்’’ என்று கூறுவரோ.. யாரும் இல்லை.

அருளுக்குப் புரியவில்லை.. அவளை எப்படி சமாதானப்படுத்த போகிறோம்.. என்று. அவளின் பின்னோடு போவதா.. இருப்பதா.. ஒரு நிமிடமே யோசித்தான். அதற்குள் கண்களில் இருந்து மறைந்திருந்தாள் செல்வி.

“நான் வரேம்பா.. வரேம்மா, வரேன் சரவணா..”, என்றவன் ராதிகாவிடம் தலையசைத்து விடை பெற்று.. அவனும் சென்று விட்டான்.

வீட்டில் மாயன அமைதி நிலவியது. “என்னடா.. இப்படி பண்ணிட்டுப் போறான்.. சரவணா. நான் எத்தனை தடவை சொல்லியிருப்பேன். பொட்ட புள்ள.. நாம பொறுப்பெடுத்துக்கவேணாம்ன்னு இப்போ குடும்பமே கலைஞ்சு நிக்குதேடா. அவளுக்கு என்னடா? என் பையன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேடா..” என்று சரவணன் கையை பிடித்துக்கொண்டு அழுதார்.

“நாம் தான்.. சரியாக நடந்து கொள்ளவில்லையோ.? முன்பே இவர்கள் பேச்சை கேட்டிருக்க வேண்டுமோ?” என்று மனம் அடித்துக்கொண்டது சரவணனுக்கு. செய்த நல்ல செயலையும்.. தவறோ.. என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளபட்டான் சரவணன்.

வீட்டை விட்டு வெளியே வந்த.. அருள் செல்வியை தேட, அவளை எங்கும் காணவில்லை. பேருந்து நிலையம் வந்து பார்த்தான் அங்கும் இல்லை.

அருகே இருந்த டீக்கடையில் விசாரித்தான். “இப்போ ஏதாவது பஸ் வந்ததா..”, என்று.

“இப்போ தான், சர்.. ஒரு பஸ் வந்தது. அதுல அந்த பொண்ணு ஏறிபோயிடுச்சுங்க”, என்றான் கேட்காத தகவலாக டீக்கடைக்காரன்.

சின்ன ஊர் தானே. நிமிஷத்தில் விஷயம் பரவியிருக்கும். அடுத்த பஸ்சிற்கு இன்னும் அரை மணிநேரம் இருந்தது. வேறு டாக்ஸி, ஆட்டோ மாதிரி.. அங்கே ஒன்றும் கிடைக்காது.  காலையில் கூட அவன் சாப்பிடவில்லை. ஒரு டீயை வாங்கி அருந்தி கொண்டான். அவளுக்கு பசிக்குமே என்று செல்வியைப் பற்றி தோன்றியது.  செல்வியை பற்றி எண்ணம் வட்டமிட   

வீட்டை விட்டு வெளியே வந்தவள்.. கிடைத்த பேருந்தில், ஏறி ரயில்வே ஸ்டேஷன் நோக்கி கிளம்பிவிட்டாள் செல்வி. மாலை எட்டு மணிக்கு தான்.. அவளிடம் சென்னைக்கு செல்ல, டிக்கெட் இருந்தது. சென்னை ட்ரெயின்னும் அந்த சமயதிற்கு தான் வரும். வேறு இருந்தாலும்.. அவளிடம் செலவு செய்ய நிறைய பணம் இல்லை. எதற்கு.. இருக்கும் டிக்கெட்டை வேஸ்ட் செய்யவேண்டும் என்று.. பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் அமைதியாக அமர்ந்து கொண்டாள். 

எதிர்காலம் பூதாகரமாக தெரிந்தது. நெஞ்சு கனத்தது. அதில் இருந்த தாலியும் கனத்தது. “இன்று காலையில் தானே.. தங்கத்தைப் பற்றி நினைத்தேன். இப்படி ஒரு தங்கத்தை.. உடனே கொடுத்துவிட்டாயே, பிள்ளையாரப்பா. என்ன சோதனை இது..” என்று நினைத்துக்கொண்டாள். அவளுக்கு விடிவைத்தான் பிள்ளையார் கொடுத்திருக்கிறார்! சோதனையை அல்ல.. என்று அவளுக்குத் தெரியவில்லை. 

இனி, படித்து முடிக்கும்வரை.. செலவிற்கு என்ன செய்ய போகிறோம் என்றிருந்தது.

காலேஜ் பீஸ் கட்டியாகிவிட்டது. ஆனால் ஹாஸ்டல் பீஸ் அழுகை வந்தது. வெளியே அழக்கூடாது என்று, முயன்று கட்டுப்படுத்தி அழுகையை அடக்கினாள். தன்னை எந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான், என்று அருள் மீது கோபமாக வந்தது. அதே சமயம், தன் மீது இவ்வளவு காதலா? எதனால் என்றும்.. கேள்வியாக இருந்தது.

“அதுவும் நீ தாலியை கழட்டினால்.. எதற்காக பெண்கள் தாலியை கழட்டுவார்களோ.. அது தான் நடக்கும்.. என்று எப்படி சொல்லிவிட்டான். தனக்காக சாகும் வரை போய்விட்டானா?. பையித்தியக்காரன். கஷ்டப்படாமல் வளர்ந்து விட்டான். அதனால வாழ்வின் வலிகளும் வேதனைகளும் நிதர்சனங்களும் புரியவில்லை. எவ்வளவு அசால்டாக சாவை பற்றிப் பேசுகிறான்..” எரிச்சலாகயிருந்தது.

எவ்வளவு எரிச்சலாக வந்ததோ.. அதில் கொஞ்சமே கொஞ்சம்.. தனக்காக ஒருவன் இவ்வளவு உருகுகிறானா? என்றும் இருந்தது. ஆனால்.. வேலைக்கார செல்வியாக இருந்த தன்னிடம், அருளின் நடத்தை எப்படி இருக்கும்.. என்றறிந்தவள் தானே. அப்படியே இருந்திருந்தால்.. உருகி இருப்பானா? என்றிருந்தது. பேதைப் பெண்.. அவளுக்குப் புரியவில்லை. காலம் தான் அதற்கு பதில் சொல்லியிருக்கும். யாராலும் அதை கணிக்க முடியாது.

தன்னுடைய இன்றைய நிலைக்கு காரணம் அய்யாவும் அக்காவும். அவர்கள் இல்லாவிட்டால் இந்த நிலைமை ஏது? அவன் தன்னை விரும்புவது ஏது? என்று தோன்றியது. எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லியிருக்கும்.

அய்யா தன் முகம் கூட பார்க்கவில்லையே.. தன்னை தப்பாக நினைத்துவிட்டாரே தன்னை நம்மபவில்லையே.. என்று நிறைய வருத்தமாக இருந்தது. “என் மீது ஒரு தப்பும் இல்லை, என்று நான் எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பேன்..” மறுபடியும் கண்களில் நீர் குளம் கட்ட ஆரம்பிக்க.. தான் உட்கார்ந்திருந்த பெஞ்சில், வேறு யாரோ உட்காருவது தெரிந்தது.

கண்களில் நீர் இருந்ததால் சரியாக தெரியவில்லை. விழிசிமிட்டி, கண்ணீரை வெளியேற்றி பார்க்க.. அது அருள் என்று தெரிந்தது.

அவசரமாக எழுந்தாள்.. வேறு இடம் போவதற்காக.

அவள் எண்ணம் புரிந்தவன், உட்கர்ந்த வாக்கிலேயே அவளின் கையை பற்றி நிறுத்தினான்.  “உட்காரு.. நான் உன்கிட்ட பேசணும்”, என்றான்.

கையை அவள் பிடித்து.. இழுக்கப் பார்க்க “உட்காருன்னு சொன்னேன்.” என்று அடிக்குரலில் அதட்டினான். அவன் அதட்டல் வேலை செய்தது. அமைதியாக அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும்.. கையை விட்டுவிட்டான். திரும்பி அவள் முகம் பார்த்தான். அவள் அவனை பார்க்காமல்.. நேராக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“என்னை ஒரு நிமிஷம் பாரு.. செல்வி”, என்றான். குரலில் திரும்பி பார்.. என்ற கட்டளை இருந்தது. அது அவளையறியாமல் திரும்பி பார்க்க வைத்தது.

“ஐ லவ் யூ செல்வி”, என்றான். இதை கேட்ட செல்விக்கு, எரிச்சலாக வந்தது.. இருந்தாலும் அசையாமல் அமர்ந்திருந்தாள். 

“இவ்வளவு நடந்ததுக்கு.. அப்புறம் நான் இதை சொல்வது அபத்தமா இருக்கலாம். ஆனா ஐ மீன் இட்.”

“என்ன மாதிரியான ஆளுடா இவன்..” என்பது போல, கண்ணிமைக்காமல் அவனை பார்த்திருந்தாள் செல்வி.

“ஐ அம் சாரி”, என்றான் மறுபடியும்.

“இது எதற்கு..”, என்று புரியாதவளாக செல்வி பார்க்க., “உன்னோட சம்மதமில்லாம தாலி கட்டினதுக்கு.” என்றான்.

தாலியைப் பற்றி கேட்டவுடன்.. அவள் முகம் கோபத்தை காட்டியது. அவளின் கோப முகத்தை பார்த்தவன்.. “கண்டிப்பா நீ சம்மதிக்க மாட்டேன்னு தெரியும். எனக்கு வேற வழி தெரியலை.. அதுதான்.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான். 

இவனுக்கு இந்த அளவுக்கு கூட தெரிகிறதா? அப்போது, தப்பென்று தெரிந்தே செய்திருக்கிறான். இவனை என்ன செய்யலாம்.. என்று கோபமாக வந்தது. என்னால்.. இவனை என்ன செய்ய முடியும்.. என்று ஆற்றாமையாக இருந்தது.

“என்னால.. எதுவும் செய்ய முடியாதுன்னு தானே.. செஞ்சிடீங்க”, என்றாள், அவனிடம் வாயை திறந்து.

“அது அப்படி இல்லை.. செல்வி”, என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நீங்க சொன்னது.. செஞ்சது.. எல்லாம் போதும்.”,என்றாள் காட்டமாக.

“நான் தான் சாரி கேட்டேன், இல்லை?”,

“சாரி கேட்டா.. நீங்க செஞ்சது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா?. என்னை விட்டுடுங்க..” என்றாள்.. கையெடுத்து கும்பிட்டு.. தணிந்த குரலில்.

“உன்னை விடறதுக்கா.. எல்லோரையும் எதிர்த்து.. ஏன்.. உன் சம்மதம் கூட இல்லாம.. கல்யாணம் பண்ணிட்டேன்?”,

“எங்கய்யாவை மீறி.. நான் எதுவும் செய்ய மாட்டேன்.” என்றாள் தெளிவாக செல்வி.  நீங்க தாலி கட்டினாலும்.. அதனால எனக்கு ஒண்ணும் இல்லை. இது எனக்கு ஒரு எக்ஸ்ட்ரா செயின் அவ்வளவு தான்”, என்றாள் சற்று திமிராகவே.

அருளுக்கு அவள் தன்னை.. பயப்படாமல் எதிர்கொள்ளும் தைரியம் நிறைய பிடித்திருந்தது. அவள் பேச்சை கேட்டு சிரிப்பு வந்தாலும்.. அப்பா.. தாலியை கழட்ட மாட்டா என்றிருந்தது.

அவன் சிரிப்பை அடக்குவது தெரிந்து.. செல்விக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. “என்ன சிரிப்பு?. நான் சிரிக்கற மாதிரியா பேசிட்டு இருக்கேன்?”

“பின்ன.. நீ சிரிக்கற மாதிரி தான் பேசற. உன்னை கல்யாணம் பண்ணினதுக்கே.. நான் உன்கிட்ட கேட்கலை. இன்னும் வாழறதுக்கா.. உன்கிட்ட கேட்கப் போறேன்?” என்றான் தெனாவெட்டாக.   

Advertisement