Advertisement

அத்தியாயம் ஒன்று :

“கஞ்சி காச்சும் நேரத்துல

காடு கழனி தோட்டத்துல

மழையக்கா வருமோன்னு

வானம் பார்த்து உட்கார்ந்தேனே “,

சீரிய சிந்தனைகள் அந்த சிறு பெண்ணை ஆக்கிரமித்திருந்தன. அந்த  பெண் வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்தாள். வானமும் இருண்டு தான் இருந்தது. மேற்கூறிய வரிகள் அவளுள் ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்கும் அந்த எண்ணங்களுக்கும் சம்மந்தமில்லை. அது மற்றவர்களை பார்த்து அவளுள் தோன்றும் எண்ணம். அந்த மற்றவர்கள் அவளுடைய இனத்தவர்கள். வயக்காட்டில் இறங்கி வேலை பார்ப்பவர்கள்.    

அதுதான் செல்வி. அவளுக்காகினும் சரி.. மற்றவர்களுக்காகினும் சரி.. எங்கு நின்றாலும் ஏதாவது யோசனைகள் அவளுள் ஓடிக்கொண்டே இருக்கும். பதினான்கு  வயது சிறுமி அவள். ஒற்றைப்பெண். தாயில்லை. பிறந்தவுடனே இறந்துவிட்டார்.

தந்தை உண்டு. இருந்தும் இல்லாததற்கு சமம். குடி, குடி, அப்படி ஒரு குடி. கூலிவேலை தான் தொழில். எப்போதாவது அதிசயமாக வேலைக்கு போவார். பணம் குடிப்பதற்கு போக மீதி பாட்டியிடம் வரும். பாட்டி அப்பாவின் அம்மா. மிகுந்த வயதானவர். அவர் முடிந்தவரை ஏதாவது சமைத்து தர, அதை உண்டு அவர்கள் ஜீவனம் ஓடிக்கொண்டிருந்தது.

செல்வியின் தற்போதைய நேரத்தை படிப்பு, வேலை, இரண்டுமே எடுத்துக் கொண்டன. எடுத்துக்கொண்ட காரணம் பள்ளி.. மதிய உணவிற்காக, வேலை.. இரவு உணவிற்காக. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். மதிய உணவு அவளின் படிப்பை காப்பாற்றி வைத்திருந்தது. பள்ளியில் முதல் மாணவி என்று சொல்ல முடியாது. ஆனால் நன்றாக படிக்கும் மாணவி. அரசாங்கம் அவர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குவதால், அவளால் பள்ளியில் தொடர்ந்து தாக்கு பிடிக்க முடிந்தது. 

பள்ளி முடிந்தவுடனே பெரிய வீட்டில் வேலை. அந்த கிராமத்தில் அவர்கள் தான் பெரிய வீடு என்று பெயர் பெற்றவர்கள். அங்கே அவளின் வேலை.. கூட்டுவது, பெருக்குவது, கடைக்குப் போவது. இது தான் அவளது வேலை. அதற்கு கூலி அவர்கள் மதியம் மீந்த சாதத்தை, அவளுக்கு உண்ணக் கொடுப்பர். இன்னும் மீதமிருந்தால் வீட்டிற்கு எடுத்துப் போகலாம். எப்போதாவது தேவை என்று இவள் கேட்டால்.. ஏதாவது பணத்தைக் கொடுப்பர். மற்றபடி சம்பளமெல்லாம் கிடையாது.     

இப்படி மதிய உணவிற்காக அவளுக்கு படிப்பும் இரவு உணவுக்காக வீட்டு வேலையும் அந்த சிறுமிக்கு தொழிலாயின.  தற்போதைக்கு அவள் தொழில் நன்றாகத்தான் போயிற்று. காலையில் அவளின் கஞ்சியை மட்டும் அவளின் ஆயா பார்த்துக்கொள்வார். அவளும் அதற்காக வருத்தப்படும் நிலையில் எல்லாம் இல்லை. இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் செல்வியிடம் இருந்தது.

“ஏய் செல்வி எங்கடி இருக்க”, என்று அவளின் பாட்டி கத்தும் சத்தம் கேட்க

“என்ன ஆயா”, என்று பதில் சத்தம் கொடுத்தாள்.

“என்ன பொண்ணோ போ.. இப்பவே, உட்கார்ந்தா.. அப்படி அப்படியே உட்கார்ந்துக்கற. என்ன யோசனையோ.. இஸ்கூலு விட்டு எம்புட்டு நேரம் ஆகிபோச்சு.  வேலைக்குப் போற உத்தேசமில்லையா?”   

“போகணும் ஆயா, இன்னும் மணியாகலை. கொஞ்சம் படிக்கறதுக்கு இருந்தது.. படிக்கறேன்”. 

“மணி எல்லாம் ஆகிடுச்சு. வந்து படிக்கலாம். வெரசா வேலைக்குப் போயிட்டு வா. மானம் பொத்துகிட்டு நிக்குது. மழை புடிச்சது அப்புறம் மழையிலையே நனைஞ்சிட்டு வருவ. அதுக்கு தான் நீ இம்புட்டு நேரம் பண்றியா”, என்று தள்ளாமையிலும் நன்கு கத்தியே பேசினார்.

அவர் தன்னை திட்டுகிறார் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வேலைக்கு ஓடினாள். அதற்கும் கத்தினார். “செல்வி நீ இன்னும் சின்ன பொண்ணு இல்லை. ஓடாத நடந்து போ”, என்று.

அவள் காதில் வாங்கினால் தானே அவள் ஓடிவிட்டாள். ஓலை வேய்ந்த தன் வீட்டிலிருந்து எடுத்த ஓட்டம், அங்கே போய் அந்த மாடி வீட்டின் முன் தான் நின்றது. இது தான் பெரிய வீட்டுகாரர்களின் பெரிய வீடு. அங்கே தான் செல்வியின் வேலை.

முன் வாசல் வழியாக உள்ளே நுழைய அனுமதியில்லை. பின் வாசல் வழியாக தான் செல்ல வேண்டும். ஆனால் சுற்றி வந்து முன் வாசலைக் கூட்டலாம். ஏன் இப்படி என்று பலமுறை யோசித்திருக்கிறாள். ஆரம்பத்தில் தன் ஆயாவிடம் சென்று கேட்டும் இருக்கிறாள்.

“அவங்க எல்லாம்.. மேல இருக்கிற சாதி சனதுக்காரவுங்க.. கண்ணு. நம்ம.. கீழ இருக்கிற ஜாதி சனதுக்காரவுங்க கண்ணு. அதனால தான் அப்பிடி”, என்றார்.

“யார், ஆயா சொன்னா இப்படி”, என்பாள் ரோஷமாக. 

“யாரும் சொல்ல வேண்டாம் கண்ணு.. நம்ம பொறப்பு சொல்லிடும்”.

“என்னவோ போ ஆயா. முன் வாசல் வழியா நுழையக்கூடாது. ஆனா, பின் வாசல் வழியா வந்து முன் வாசலை கூட்டலாமா?”

“அதென்னவோ கவனிக்காம விட்டுட்டு இருக்காங்க கண்ணு. அவங்க இஷ்டம் தான். நீ சின்ன பொண்ணு. இதைப்பத்தி எல்லாம் பேசக்கூடாது”.

“ஏன் பேசக்கூடாது?”..

“பேசக்கூடாதுன்னா.. பேசக்கூடாது.”

“போனமா.. வந்தமா.. வேலையப்பாத்தம்மான்னு, இருக்கணும். என்ன சரியா?”, என்றார் மிரட்டுவது போல.

அவரின் தொனி மாறுவதை உணர்ந்தவள், “சரி ஆயா”, என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொள்வாள். பின்பு வயது ஆக, ஆக.. அவளே தங்களின் நிலை உணர்ந்து தெளிந்து கொண்டாள்.

அவசரமாக பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து எஜமானியை தேட அந்த அம்மாள் சமையல் அறையில் வேலையாக இருந்தார். அவர் கோதை. அந்த வீட்டின் எஜமானர் பூபதி பாண்டியன். அவர்களுக்கு மூன்று மக்கள். சரவணப் பாண்டியன், அருள் பாண்டியன், எழிலரசி.

இவளை பார்த்த கோதை, “ஏண்டி இவ்வளவு நேரம். நீ வந்து கூட்டுனதுக்குப் பொறவு தான், நான் விளக்கு போடணும்னு தெரியாது?. போடி.. போய் சீக்கிரம் கூட்டு. ஐயா ஏசுவார் போ”, என்றார்.

“சரிம்மா”, என்று எப்பொழுதும் போல, ஒற்றை வார்த்தையில் பதில் பேசியவள் வேகமாக வேலையைப் பார்த்தாள்.

நன்கு சுத்தமாக கூட்டி முடிக்கவும் “அம்மா! காபி!”, என்று சரவணன் வரவும் சரியாக இருந்தது.

சரவணப் பாண்டியன்.. கோதை, பூபதி பாண்டியனின் மூத்த மகவு. இருபத்தி ஐந்து வயது இளைஞன்.  பொலிடிகல் சயின்ஸில் பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு, சிவில் சர்விஸ் எக்ஸாம்மிற்காக தீவிரமாக படித்து கொண்டிருப்பவன். ஐ.பி. எஸ் ஆகவேண்டும் என்பது தான், அவன் கனவு.. லட்சியம் எல்லாம். சென்னையில் அதற்கான ஸ்பெஷல் கோச்சிங்கில் இருந்தான். விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தான்.

இவனை பார்த்ததும் அறிமுகமான புன்னகை ஒன்று செல்வி புரிய முற்பட அதை சற்றும் கண்டு கொண்ட மாதிரிக் கூட காட்டிக்கொள்ளவில்லை சரவணன். ஒரு அறிமுகமில்லாத, “நீ, இங்கே வேலைக்காரி”.. என்ற பார்வையை பார்த்து வைத்தான்.

அந்தப் பார்வையை பார்த்தாலும்.. செல்வி மேல் கரிசனமுண்டு, சரவணனுக்கு. ஒரு வேலை சாப்பாட்டிற்காக அந்த பெண் அங்கு வேலை பார்ப்பது தெரியும். வீட்டிலிருப்பவர்கள்  வேண்டுமென்றே அவளுக்கு வேலை வைப்பார்கள் என்றும் தெரியும்.

இளைத்தவர்களை ஏய்ச்சுவது உலக வழமை தானே. அதில் அவர்களுக்கு, என்ன வரும் என்பதை.. நிறைய நேரம் அறிந்து ஆராய முற்படுவான் சரவணன். ஆனால் இன்று வரை சிறிது கூட பிடிபடவில்லை அவனுக்கு.    அதனால், அவனால் முடிந்தவரை.. யாராவது அனாவசிய வேலை அந்த பெண்ணிற்கு வைத்தால் தடுப்பான்.

அவன் இருக்கும் வரை தான் அவனால் தடுக்க முடியும். அவன் இல்லாத போது ஒன்றும் செய்ய முடியாது என்பதும் அவனுக்கு தெரியும். அதுமட்டுமல்ல அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். வீட்டிற்கு சிறிது நேரமாக போனால், ஏதாவது படிப்பாள் என்று எப்போதுமே நினைப்பான். 

அது அவளுக்கு சகஜமே. அது புரிந்தாலும், “நீ எனது எஜமானன்”, என்ற விசுவாசமான பார்வையை பார்த்தாள் செல்வி.

அதற்குள், அங்கே வந்த எழிலரசி செல்வியிடம், “என் ரூம்ல புஸ்தகமெல்லாம் கலைஞ்சிருக்கு. எடுத்து நீட்டா அடுக்கி வை.. போ”, என்றாள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள் எழிலரசி.  

“சரி”, என்று செல்வி புஸ்தகத்தை அடுக்கப் போகப் போக.

“புஸ்தகத்தை படிக்கறது தான் இல்லை. அடுக்க கூட முடியாதா?. நீ போ செல்வி.. அவளே செஞ்சிப்பா “,என்றான் சரவணன் எழிலரசியை பார்த்து.

“அண்ணா, நீ இதுல எல்லாம் தலையிடாத. வேலைசெய்யறது தான் அவ வேலை”.

“அதுக்குன்னு, இதையெல்லாமா செய்வாங்க?. உன் புஸ்தகம்.. நீ அடுக்குனா தான்… எது எங்க இருக்குன்னு, உனக்குத் தெரியும். போ.. நீ போய் அடுக்கு”.

செல்வி போவதா.. வேண்டாமா என்று இவர்கள் வாக்குவாதத்தை பார்த்து நிற்க..

“அதான், போன்னு சொல்றேனுள்ள” என்று செல்வியைப் பார்த்து கர்ஜித்த சரவணன். “எனக்கு தெரியாம நீ ஏதாவது அடுக்கினேன்னு தெரிஞ்சது, உன்னை தொலைச்சிடுவேன்”.. என்று மிரட்டி வேறு அனுப்பினான்.

வாய் பேசாமல் தலையாட்டியபடி. .“என்னால் ஒன்றும் செய்ய முடியாது”, என்று எழிலரசியை நோக்கி கண்களால் மன்னிப்பு கேட்டு கொண்டே சென்றாள் செல்வி.

“இருடி உன்னை பார்த்துக்குறேன்”, என்று மனதினில் கருவிக்கொண்டே செல்வியை எழிலரசி முறைத்துப் பார்க்க.. “அவளை என்னடி பார்க்கிற. போ. ஒழுங்கா அடுக்கி படிக்கற வேலையை பாரு”, என்றதட்டினான் சரவணன்.

அவனை எதிர்த்து பேசமுடியாமல் சென்றாள் எழிலரசி. அந்த வீட்டில் சரவணனை எதிர்த்து பேசும் தைரியம் யாருக்கும் கிடையாது.                                    

வீட்டிற்கு சீக்கிரமாக வந்த செல்வியை பார்த்த அவள் ஆயா. “என்ன செல்வி, சீக்கிரமா வந்துட்ட இன்னைக்கு”, என்றார்.

“அதுவா ஆயா, ஊருல இருந்து நம்ம சின்னையா வந்திருக்காங்க. அதான் வீட்ல எனக்கு யாரும் நிறைய வேலை வைக்கலை”, என்றாள் சௌகரியமாக காலை நீட்டி அமர்ந்து கொண்டு.

“சரி சாப்பிட என்ன கொண்டுவந்திருக்க”, என்றார் ஆர்வமாக.

“அங்கே வச்சிருக்கேன் பாரு”, என்றாள். அவள் கொண்டுவந்தது இருவருக்கும் போதுமானதாக இருக்க. உண்டு உறங்கினர். பாட்டி, பேத்தியின் தினசரி வழக்கம் இதுதான். 

படுக்கும்முன், “எங்க ஆயா அப்பனை இன்னும் காணோம்”, என்றாள்.

“குடிச்சிட்டு எங்க பொரண்டு கடக்கறானோத் தெரியலை. நீ தூங்கு. அவன் எப்பவோ வரட்டும்”, என்றார். அவள் தந்தை வந்தாலும், அப்படியே திண்ணையில் படுத்துக் கொள்வார்.

விடியல் வந்தபோது அவர்களும் விழித்திருக்க.. அவள் தந்தை அப்போதும் வந்திருக்கவில்லை. பாட்டிக்கும் பேத்திக்கும் சற்று பயம் பிடித்தது. இப்படி ஆனதேயில்லை. எவ்வளவு குடித்தாலும் வீடு வந்து சேர்ந்து விடுவார்.

பயந்த செல்வி. “பாட்டி, நான் எதுக்கும் அப்படியே ரோடுல போயி பார்த்துட்டு வரேன்”, என்று கிளம்பினாள்.

எங்கு தேடியும் இல்லை. சோர்வாக வீடு திரும்ப.. அவள் குடிசைக்குமுன் ஒரு ஆள்  நின்று கொண்டிருந்தார்.

பக்கத்தில் சென்று பார்த்தாள். அடிக்கடி தன் தந்தையோடு பார்த்திருக்கிறாள் அவரை. குடிப்பதில் கூட்டாளியோ என்னவோ என்று நினைதிருக்கிறாள். அவரை பார்த்ததும் வேகமாக செல்ல  

அவள் செல்லவும், அவளின் ஆயா பெருங்குரலேடுத்து ஓலமிடவும் சரியாக இருந்தது.

ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள் பயத்தோடே வந்தவரை, என்ன ஏது என்பது போலப் பார்க்க “உங்கப்பன் குடிச்சிட்டு வந்திருக்கான்.. மெயின் ரோடுல வண்டி மோதி அங்கயே இறந்துட்டான். உடம்பு டவுன்ஆஸ்பத்திரில இருக்கு”, என்று தகவல் சொன்னார்.

“என்ன!!”, என்ற செல்விக்கு அதிர்ச்சியில், அழுகை கூட வரவில்லை. பாட்டி அழுவதை பார்த்ததும் தான் அழுகை வரும்போல இருந்தது.

அவரால் பிரயோஜனமோ இல்லையோ, வீட்டிற்கு ஆண் மகன் என்று இருந்தது அவர்தான். பாட்டி மகனை இழந்த துக்கத்தில் வெகுவாக ஓய்ந்து அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் “நாங்க இப்போ என்ன பண்ணனும்”, என்றாள் வந்தவரிடமே.

“போ, சொந்தக்காங்க யாரையாவது கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போ”, என்றார்.

பக்கத்தில் அவளுக்கு சொந்தம் என்று தெரிந்த வீட்டிற்கு ஓடினாள். “பெரியம்மா! பெரியப்பா இல்லை? எங்கப்பா வண்டி மோதி செத்துபோச்சாம். ஆஸ்பத்திரில உடம்பு இருக்காம். இப்போ தான் ஒருத்தர் வந்து சொன்னாங்க”, என்றாள் கண்கள் கலங்கி மூச்சு வாங்கியவாறே. 

இப்போது லேசாக அழுகை எட்டிப்பார்த்தது.

“அய்யையோ”, என்று பதறிய அவளின் உறவினள் “யோவ்! இந்த புள்ள என்னமோ சொல்லுது பாரு. உன் சின்னம்மா மகன் இறந்துட்டானாமே”, என்று குரல் கொடுக்க வந்த அந்த ஆள், “என்ன புள்ள”, என்றார்.

அவருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

“ஐயோ”, என்று பரிதாபப்பட்டவர். “நீ போ, நான் வரேன். ஆசுபத்திரிக்கு எல்லாம் போனா பணம் செலவாகும். எதுக்கு பணத்தை ரெடி பண்ணி வச்சிக்கோ”, என்றார்.

“பெரியப்பா எம்புட்டு பணம் செலவாகும்?”,

“தெரியலையே புள்ள. எதுக்கும் ஒரு நாலஞ்யாயிரம் ரெடி பண்ணிடு”, என்றார்.

“ஐயோ”, என்றிருந்தது அந்த பதினான்கு வயது சிறுமிக்கு. எப்படி அவ்வளவு பணத்திற்கு ஏற்பாடு பண்ணுவாள். தந்தை இறந்த துக்கத்தை விட, எப்படி பணத்தை ரெடி செய்யப்போகிறோம் என்ற துக்கம் அதிகமாக இருந்தது.

கண்களில் நீர் பெருகியது. மீண்டும் ஆயாவிடம் தகவல் தெரிவிக்க ஓடி வந்தாள்.

“என்ன செய்யறது ஆயா”, என்று அழுகையோடு கேட்க

“எனக்கு தெரியலையே கண்ணு.. என்ன செய்யறதுன்னு எனக்கொண்ணும் புரியலையே”, என்றார் கதறியபடி அந்த மூதாட்டி.

“எம் பையனை.. நான் எப்படி கொண்டு.. காடு சேர்க்க போறேனோ..”, என்று புலம்பினார்.

என்ன செய்வது என்ற வகை தெரியாதவளாக, மறுபடியும் அவள் வேலை செய்யும் பெரிய வீடு நோக்கி ஓடினாள்.

வீட்டின் முன் வாயிலிலேயே உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தான் சரவண பாண்டியன்.

வேகமாக ஓடி வந்தவள் அவனை பார்த்ததும் நின்றாள்.

அவளின் அழுத முகமே ஏதோ சரியில்லை என்று காட்ட. “அம்மா இங்க வந்து என்னன்னு பாரு”, என்று குரல் கொடுத்தான் சரவணன். 

அவன் குரல் கேட்டு கோதை வெளியே வந்தார்.

“என்ன சரவணா? என்றார்.

“இந்த பொண்ணு அழுதுட்டு நிக்குது. என்னன்னு கேளு”, என்றான்.

அவளை பார்த்தவர். “என்ன செல்வி”, என்று வினவ.

“அப்பா வண்டி இடிச்சு செத்து போயிட்டார். டவுன் ஆசுபத்திரில உடம்பு இருக்காம். அதை கொண்டு வரணும்னா செலவாகுமாம். பெரியப்பா சொல்லிச்சு. எனக்கு பணம் வேணும்”, என்றாள் அழுத வாக்கிலே.

அவள் சொன்ன செய்தியைக் கேட்டு அங்கிருந்தவர்களுக்கு பரிதாபம் எழுந்ததென்னவோ உண்மை தான். ஆனால் பணம் என்றதும் கோதைக்கு பரிதாபம் குறைந்தது.

“எவ்வளவு பணம் வேண்டும்”, என்றார்.

“அஞ்சாயிரம்”, என்றாள்.

“என்ன? அஞ்சாயிரமா! அவ்வளவு எல்லாம் முடியாது”, என்று கோதை சொன்னவுடனே… அவரது காலில் அப்படியே விழுந்துவிட்டாள் செல்வி.

“அம்மா, நீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. எனக்கு உங்களை விட்டா யாரையும் தெரியாது”, என்று கால்களை பற்றிக்கொண்டு விட

“ஏய் விடுடி! என்ன பண்ற. விடு! விடு! அவ்வளவு பணமெல்லாம் ஐயா கொடுக்க மாட்டார். ஏதோ.. ரெண்டாயிரம் வாங்கிட்டு போ”, என்றார்.

இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்த சரவணன். “அம்மா குடு! எதா இருந்தாலும் அப்புறம் பேசலாம்”, என்றான் செல்வி மேல் இரக்கப்பட்டு.

“நீ வேற ஏண்டா? எங்கடா பொணம் எடுக்க.. அஞ்சாயிரம் செலவாகும். அதெல்லாம் நம்மளா பார்த்து செலவு பண்றது தான் அவ தான் கேக்கறான்னா. இப்ப என்ன அவங்கப்பாவை மேல தாளத்தோடவா கொண்டு போகப்போறா?. சும்மா சாதரணமா எடுத்தா போதும். அதெல்லாம் ரெண்டாயிரமே கட்டும்”, என்றார் சற்றும் தாட்சண்யமின்றி. 

அம்மா பணவிஷயத்தில் எப்போதுமே கெட்டி என்று தெரியும். இந்த நிலையிலும், அந்த சின்ன பெண்ணிடம் அம்மா வாதாடுவது அவனுக்கு பிடிக்காமல் இருந்தாலும் அடுத்தவர் முன்பு அம்மாவை விட்டு கொடுக்க முடியாமல், ஒன்றும் பேசாமல் அமைதி காத்தான்.  

“அதுக்கில்லம்மா. ஆசுபத்திரில உடம்பை குடுக்க கேட்பாங்கலாம்”, என்றாள் செல்வி.

“அதெல்லாம் நாங்க ஏழைப்பட்டவங்க! குடுக்க முடியாதுன்னு சொல்லி, தூக்கிட்டு வா! நான் சொல்றதை கேட்டா ரெண்டாயிரம் தரேன்! இல்லைனா அதுவும் இல்லை! என்றார் கறாராக.

வேறு வழியில்லாமல் தலையாட்டினாள் செல்வி. தலையாட்டும் அவளைப் பார்த்தான். தலையெல்லாம் கலைந்து, பள்ளியின் பாவாடை சட்டையிலேயே இன்னும் இருந்தாள் அந்த சிறுமி. ஆதரவற்ற நிலை.. அடக்கப்பட்ட துக்கம்.. அவள் முகத்தில் நன்கு தெரிந்தது. இருந்தாலும் தந்தை இறந்த இந்த நிலையிலும் தளர்ந்துவிடாத போராட்டக் குணம், அந்த சிறுமி இடத்தில் இருப்பதாக தான் அவனுக்கு தோன்றியது.  

அம்மாவின் தலை மறைந்ததும். “எந்த ஆசுபத்திரி”, என்றான் சரவணன்.

“டவுன் பெரிய ஆசுபத்திரி”, என்று செல்வி சொன்னதும், உள்ளே சென்று விட்டான். உள்ளே சென்றவன் சிறிது நேரத்திலேயே வெளியேயும் சென்று விட்டான்.

அவன் ஏதாவது சொல்லி பணத்தை வாங்கி கொடுப்பானா, என்ற சின்ன நப்பாசை அந்த சிறுமிக்கு இருந்தது. இப்போது அவனும் பேசாமல் சென்று விட அழுகை தொண்டையை அடைத்தது செல்விக்கு. இருந்தாலும் அடக்கி கொண்டாள். அடக்க.. அடக்க துக்கம் நெஞ்சுக்குள் ஒரு வலியை ஏற்படுத்தியது. நிறைய நேரம் காக்க வைக்காமல் கோதை பணத்தை எடுத்து வந்து செல்வியிடம் கொடுக்க பணத்தை வாங்கிக்கொண்டு மறுபடியும் வீட்டிற்கு ஓடினாள்.

தந்தையைப் தேடி காலையில் ஆரம்பித்த ஓட்டம்.. இன்னும் நிற்கவில்லை. ஓடிக்கொண்டேயிருந்தாள். 

அவள் வீட்டிற்கு போவதற்காக ஓட்டம் எடுத்த போது சிறிது தூரத்திலேயே அவளை எதிர்கொண்டான் சரவணன்.

அவனை பார்த்ததும் செல்வி தயங்கி நிற்க அவள் கைகளில் பணத்தை திணித்தான். “இதுல மூவாயிரம் இருக்கு வச்சுக்கோ”, என்றான்.

செல்வி உணர்ச்சிவசப்பட்ட நிலையில், நன்றியோடு சரவணனை பார்க்க “போ சீக்கிரம்”, என்று அவளை அனுப்பி விட்டு, வீடு வந்தான்.

அவள் வீடு வந்தபோது பெரியப்பா என்று அழைக்கப்பட்டவரும், மற்றும் சிலரும் வந்திருக்க எல்லோரும் பஸ்சில் டவுன் ஆஸ்பத்திரியை நோக்கி புறப்பட்டனர். 

அங்கே சென்றால், அப்போது தான் உடம்பை போஸ்ட்மார்ட்டம் செய்ய கொண்டு சென்றிருந்தனர். அங்கே கொடுக்க ஆரம்பித்த பணம்.. இல்லாதவர்கள் என்று எவ்வளவு வாதாடியும் செல்லுபடியாகவில்லை.

“பணத்தை கொடுத்துட்டு, பொணத்தைத் தூக்கு”, என்றனர் ஈவு இரக்கமே இல்லாமல்.

“ஏய்யா கவெர்மெண்டு உங்களுக்கு எல்லாம் சம்பளத்தை கொட்டி கொடுக்கலை. அப்படியும் ஏன்யா எங்க மாதிரி ஏழைப்பட்டவங்க கிட்ட புடுங்கறீங்க”, என்று யாரோ ஒரு பெருசு சவுண்ட் கொடுத்தார்.

“கவெர்மென்ட்டு சாப்பிடத்தான் சம்பளம் கொடுக்குது. இந்த மாதிரி பொணத்தை தூக்கும் போது.. அது வாடை அண்டாம இருக்க இல்லை. அதை தாங்க நாங்க சரக்கடிக்க வேண்டாமா? தினமும் எத்தனை பார்க்குறோம். போ பெருசு! ரூல்ஸ் பேசாம பணத்தை வக்கிற வழியைப் பாரு”, என்றனர்.

நியாயமோ.. அநியாயமா அவரவர்க்கு அவரவர் காரணங்கள். பணமில்லாமல் சாகக்கூட முடியாது என்றாகிவிட்டது.   

கிட்டதட்ட ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவு செய்த பின்னரே உடம்பு கைக்கு வந்தது. அதை ஒரு அம்புலன்ஸில்  ஐநூறு ரூபாய்க்கு பேசி.. அவர்களின் ஓலைக் கீற்று வேய்ந்த வீட்டிற்கு எடுத்து வந்து போடுகிறவரைக்கும் ஒரு உயிர் போன துக்கத்தை அனுபவிக்க கூட யாராலும் முடியவில்லை.

அது முடிக்க வேண்டிய ஒரு வேலையாகிப் போனது.

அதன் பிறகு அந்த சடங்கு, இந்த சடங்கு என்று செய்து சிறிது துக்கம் கொண்டாடி சுடுகாட்டிற்கு கொண்டு போய் புதைத்து வந்தனர்.

தன் தந்தையை கௌரவமாக அடக்கம் செய்து வந்தவுடன்.. ஒரு நிம்மதி அந்த சிறுமிக்குள்.. அவளையறியாமல் உதித்தது. அவள் தந்தைக்கும் அவளுக்கும் அவ்வளவு ஒட்டுதல் இல்லாத போதும், கூட இருந்த மனிதர்.. அதுவும் தந்தை காலமாவது என்பது.. துக்கமான விஷயமே.

இரவான போது பளிச்சென்று உறவுகள் கிளம்பினர். மறுநாள் காரியத்திற்கு எல்லோரும் கூட வேண்டும் என்று சொல்லியபடியே. மறுநாள் காரியத்தையும் முடித்துவிட்டு பாட்டிக்கும் பேத்திக்கும் ஆயிரம் அறிவுரைகளை சொல்லி கிளம்பினர்.

இந்த உலகத்திலேயே இலவசமாக எந்த சிரமமும் இல்லாமல் கிடைப்பது அறிவுரை தான். அதனை வஞ்சனையின்றி சொல்லி சென்றனர்.

“இனி பேத்தியை தனியாக வளர்க்க வேண்டும். சாப்பாட்டிற்கும் பார்க்க வேண்டும் . பேசாமல் பேத்தியை பள்ளியில் இருந்து நிறுத்தி.. ஏதாவது வேலைக்கு அனுப்பு”, என்று அறிவுரையாக வழங்கி சென்றனர்.

அதைகேட்டவுடனே செல்விக்கு பகீர் என்றாகிவிட்டது. என்ன பள்ளியை விட்டு நிற்பதா? படிப்பென்றால் அவளுக்கு உயிர். என்ன இது.. இவர்கள் இப்படி சொல்கிறார்கள்.. என்று அவளுக்கு பயமாகி விட்டது.

எல்லோரும் போனதும் அவளது ஆயாவிடம். “ஆயா,  நீ என்னை பள்ளிகூடத்துல இருந்து நிறுத்திடுவியா?”, என்று கண்கள் கலங்கியபடி கேட்டாள்.

அவளின் கலங்கிய முகத்தை பார்த்த ஆயாவிற்கு மனது கலங்க

“இல்லை கண்ணு.. இல்லை! நான் பார்த்துக்கறேன்! எப்படியாவது நான் உன்னை பார்த்துக்கறேன்! நீ படி கண்ணு. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உன்னை படிக்க வைப்பேன்”, என்று புதிய உறுதி எடுத்தார் ஆயா.

தந்தை இறந்து, ஒரு வாரத்திலேயே பள்ளிக்கு சென்று விட்டாள். ஆனால் பெரிய வீட்டிற்கு வேலைக்கு செல்லவில்லை. தீட்டு என்று சொல்லுவர் என்று வீட்டிலேயே இருந்து விட்டாள்.  

பதினாறாம் நாள் காரியங்கள் முடிந்துதான் வேலைக்கு சென்றாள். அதற்குள் ஜீவனதிற்கு ஒரு ஏற்பாடு செய்திருந்தது அவளின் ஆயா.

அரசு பள்ளியின் முன்னே.. ஒரு கயிற்றுக் கட்டிலில், திண்பண்டங்கள் கடை போட்டு அமர்ந்துவிட்டது ஆயா. அதில் ஒரு நாளைக்கு எப்படியும் ஐம்பது ரூபாய் லாபம் வர இத்தனை நாள், தனக்கு இது தோன்றாமல் போய் விட்டதே.. என்று நொந்து கொண்டே அதை கெட்டியாக பிடித்துக் கொண்டது. 

Advertisement