Advertisement

காக்க காக்க கனகவேல் காக்க..
யாழினி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!’
ஆரவாரம் சூழ்ந்த அந்த அரங்கத்தை, அரை கணத்தில் நிசப்தத்தில் நிறுத்தியது இந்த அழைப்பு.  
இயல்பான அழைப்பல்ல அது. அன்பை அதிரடியாய் காட்டும், கொட்டும் கூட்டத்தின் அழைப்பு. எனது வாலில்லா வானரப்படையின்  அதிரடி அழைப்பில், ஆவலும் சிறு அதிர்வும் தாங்கி, அங்கிருந்த அத்தனை விழிகளும் என்னில் தஞ்சம்.
என்னிடமும் அதிர்வு தான்
இனம் காணா இன்பமொன்று இமைப்பொழுதில் எனைத்  தாக்கிச் செல்ல, இமைக்கா விழிகளுடன் நின்றிருந்தேன்.
யாழினி…..!!!!!’
மறுமுறை அவர்கள் மீட்டிய யாழில், எனை மீட்டுக்கொண்டு, அந்த அன்புச் சங்கமத்தில் சேர்ந்து ஆர்ப்பரிக்க, அவர்களிடம் சென்றேன்.
அடுத்தடுத்த என் பொழுதுகளெல்லாம், நலம் அறிய ஆவல் கொண்ட நெஞ்சங்களுக்காகக் கழிந்தது.
அகம் அத்தனையும் ஆனந்தம் அதிகாரம் செய்தது. முழு ஏழு ஆண்டுகளாக, நான்  தொலைத்த அழகுத் தோழமைகள், மீண்டுமாய் என் தோள் சேர்வதனால் வந்த ஆனந்தம் அது.
இப்படியான சுக தருணம் எனக்குச் சாத்தியமானது, அவள் நிமித்தமே.
அவள்?????
அவள் இளவேனில்…..!
இளா, எனது வசந்த கால (கல்லூரி) வரம்..!
அவளுடனான என் பொழுதுகள் ஆயிரம் நாள்கள் மட்டுமே..! ஆனால் அணு அணுவாய் எனைப் பற்றிய அறிதலும் புரிதலும் இளாவிடம் இருக்கும், ஒரு அம்மாவைப் போல.
எம் உறவின் ஆழம் அப்படி!
இத்தனைக்கும் இருவரும் எதிரெதிர் எல்லாவற்றிலும்..! முரண்களெல்லாம் முரட்டுத்தனமாய் இருக்கும். ஆனாலும் இளவேனில்
என்னுயிர்த் தோழி..!
இன்று அவளுக்கும் அவள் மனம் கொண்ட மதுரனுக்கும் தான் திருமண வரவேற்பு.
யாருமில்லா தனிமைச்சிறையில் விரும்பியே சிறையாகி, ‘நானும் என் வேலையும் மட்டும்’ என்றிருந்த என்னை, இழுத்து வந்து இங்கு நிறுத்தியிருக்கும் சுப வைபோகம் அது தான்.
கனா கண்ட கல்லூரி காலத்திற்குப் பின் நான் டெல்லியில் வாசம் செய்ய, என் முகவரி தொலைத்து நின்ற நட்புகளிடம், இப்பொழுது முறுவலும் முறைப்பும் தான், உரிமையாக. இரண்டையும் ஏற்றுக் கொண்டேன் நானும்.
நான் அவர்களை நினைக்கவில்லை. அவர்கள்  எனை  மறக்கவில்லைஎன் இதழ்களில் சத்தமில்லா இளஞ்சிரிப்பு, சந்தோஷத்தால் வந்த ஒன்று அது.
கரிகாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…..!
2012 பேட்ஜ், கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட். ஐம்பது அரியவகை பிராணிகளைக் கொண்டது.
ஆஹா..!! அடடா..!! அற்புதம்..!! அச்சச்சோ..!! இப்படி விதவிதமாய் அடுத்தவர்களை அலற வைத்த பெருமை எங்களை மட்டுமே சேரும்.
கொஞ்சம் கலாட்டா..                                                                   
கொஞ்சம் கற்றல்..                                                                     
கொஞ்சம் கனவு..                                                                         
கொஞ்சம் காதல்.. 
என கல்லூரி நிமிடங்கள் நினைவுகளாய், ஈரமாய், இன்னமும் எல்லோர் நெஞ்சிலும்..!  
யாழினி..!! இளாவ பார்த்திட்டு வருவோமா..?” என என் முன் வந்து நின்றவள் என் விழிகளில் வியப்பையும் சேர்த்து வைத்தாள்.
அவள் ஹர்ஷிதா..!
அவளுக்கும் எனக்குமான கல்லூரிக் காலப் பொழுதுகள் கொஞ்சம் கசப்பும் காரமும் தான்
காரணம்..?
அழுத்தமாய் அழிக்கப்பட்டிருந்தது காலத்தால். காலத்தின் கடமை அது தானே! எதையும் மறக்கவும் செய்யும் மறைக்கவும் செய்யும்
அவளுக்கான என் முதல் பதில், புன்னகை..! 
புன்னகை, புது உறவிற்கு பாதை போடும். பழைய உறவிற்குப் புது உயிர் கொடுக்கும்..!  
இங்கே எனக்கும் ஹர்ஷிதாவிற்க்கும் இடையில் இந்த இரண்டும் தான்.
எப்படியிருக்க ஹர்ஷி?”
எப்படியிருக்கேன்? நீ தான் சொல்லணும். ஆனா உண்மையை மட்டும் சொல்லிடாதே! என் லிட்டில் ஹார்ட் தாங்காது” 
ஹா ஹா! மம்மிமிமி!” 
பார்த்ததும் தெரியுதா? மம்மி ஆகிட்டேன்னு” – ஹர்ஷியின் தற்போதைய கவலை இது தான்.
மம்மி இல்லை. ஆன்ட்டி ஆகிட்டே!”- கூட்டத்திலிருந்த எவனோ ஒரு நல்லவன்.
ஹா ஹா..
மொத்த கூட்டமும் சிரிப்பை சிந்த
டேய்!!!!!” பல்லைக் கடித்தாள் ஹர்ஷி.
அங்கிளுக்கு அப்படித்தான் தெரியும். நீ வா ஹர்ஷிஎன அவளுடன் நான் மேடையேற, வெகு நாட்களுக்குப் பிறகு என் முகவரி கண்டு, முக வாசல் வந்து சேர்கிறது தயக்கமும் தடுமாற்றமும்.
பாதங்கள் இரண்டும் பாதை மறந்தது போல் நின்றன.
என்னாச்சு யாழினி..? நின்னுட்ட
ஹர்ஷியிடம் ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்து அடியெடுத்து வைக்க, அடுத்த சில அடிகளில் இளாவிடம் நின்றிருந்தேன்.
என் உள்ளத்தில் உவகை உச்சம் தொட, உதட்டில் புன்னகையால் அதன் கவிதை எழுதப்பட, முற்றும் முரணாய் விழிகளில் மட்டும் சாரல்
எதற்காம்..?
அதன் அர்த்தம் இளாவிற்குத் தெரியும்.
ஆயிரம் பேரை அடக்கிய அரங்கில் அரங்கேறிக் கொண்டிருந்த ஆட்டம், பாட்டம், எதுவும் என் விழிகளில் விழவில்லை.
கருவிழியிலும் கருத்திலும் இளா மட்டுமே..!
இளா…..!!!!!’
மென் நடுக்கத்தில் என் இதழ்கள் இசைக்க, மதுரனிடம் மையம் கொண்டிருந்த  மங்கையவள் விழிகள் இப்பொழுது என்னிடம்.
யாழ்!!!!!!!’
இளாவின் இதழ்கள் இசைத்து முடிக்கும் முன், அவளோடான இறுகத் தழுவலில் இருந்தேன் நான். இதழ் முறுவலோடும் மதுரம் சிந்திய மனதோடும் பார்த்திருந்தான் மதுரன்.
மறைந்திருந்த எனை மறக்காதிருந்த உறவுகளின் முன்பும், மனம் தனில் எனை சுமந்து நிற்கும் இளாவின் முன்பும் என்னை இழுத்து வந்து நிறுத்தியவன் இவன்.
இளாவின் மதுரன், என்னுயிர்த் தோழன்…..!
கணங்கள் பல கடந்தும் பிரிவாற்றாமையை நானும் இளாவும் இறுகிய அணைப்பில் காட்டி நிற்க,
நானும் இங்க தான் இருக்கேன்சிறு பொறாமையோடு பொதுவாகச் சொல்லி வைத்தான் மதுரன்.
அப்பொழுதும் என்னிடமும் இளாவிடமும் அவன் எதிர்பார்த்த எதுவும் இல்லாமல் இருக்க, சினத்திற்கும் சேராமல் எரிச்சலுக்கும் சேராமல் எதுவோ ஒன்று அவனிடம்
ஆனாலும் இடம் பொருள் ஏவல் எல்லாம் அவனுக்கு எதிராக அல்லவா நிற்கிறது..? எதுவும் செய்யாது அமைதியோடு நின்றான்.
போதும் அவன் பொறுமையைச் சோதித்ததுஎன நிதானமாக முடிவு செய்ய, அரை மணித்துளியில் என் விழிகள் அவன் புறம் சேர்ந்தது, மன்னிப்பு மடலோடு..!
ஏற்பானா..?
நிச்சயம்..! என்னிடம் இருந்து எதையும் ஏற்க மறுக்க மாட்டான் எப்பொழுதும்
அவன் விழிகள் என் விழிகளில் மடல் வாசித்த மறுகணம், மறுப்பாய் தலையசைத்தான்.
மன்னிப்பை ஏற்கவில்லையோ அவன்..?
ம்ஹூம்..! அவசியம் இல்லை என்பது அதன் அர்த்தம்.
இந்தப் புரிதலில் புன்னகை சேர்கிறது என் இதழ்களில்.
ஆனால் அவனிடம்..? எனக்கான இதழ் முகிழ்த்தல் இல்லை.
இப்பொழுதே வேண்டும், எனக்கான அவன் இதழ் புன்னகை. சிறு பிடிவாதம் கொண்டு விழிகளில் அவனைச் சிறையெடுத்து நிற்க,
அவனது உயரத்தை அரை அடி குறைத்து, தலையை தாழ்த்தினான் என் முன்பு, சத்தியத்திற்காக..!
மெதுவாக அவன் தலை மேல் என் கரம் சேர்த்தேன்
சத்தியம் ! இனி எப்போதும் நம்முள் பிரிவில்லை..!”
அடுத்த கணம் இளாவும் அவனும் இருபுறமாக அணைத்து நின்றதில், அன்பின் ஆயிரம் அர்த்தம் கண்டேன் நான்.
மூவரின் மனம் தழைத்து நின்ற தருணம் அது..!
என் விழியோரம் உவர் துளி, உவகையால் வந்த துளி!
இன்னும் கொஞ்ச நேரம் தான் இதெல்லாம். முடியவும் உன்கிட்ட ஓடி வந்திடறோம். ம்ம்?” – இளாவும் மதுரனும்.
ஒரே கணத்தில் வந்த இருவரின் மதுர மொழிகளில், என் மனதோரம் மகிழ்வின் சாரல்..!
அடுத்த இரு நாழிகைகள் அர்த்தமில்லா அரட்டையில், ஆனால் ஆனந்தமோடு கழிய, இளாவும் மதுரனும் வந்து எம்முடன் இணைய, களை கட்டத் தொடங்கியது திருமணத் திருவிழா
செல்லச் செல்ல சீண்டல்கள் தலைவனும் தலைவியுமாகிய மதுரனுக்கும் இளாவுக்கும்..!
அஞ்ஞாத வாசம் செய்த குற்றத்திற்காக வெஞ்சினமும் விடை கொடுக்க இயலா வினாக்களும் என்னை நோக்கிப் படையெடுக்க, எல்லாவற்றிற்கும் புன்னகை மொழி மட்டுமே மறுமொழியாகக் கொடுத்தேன்.
இனியொரு முறை இப்படிச் செய்யாதே! தேடி வந்தடிப்போம்” 
தமிழ்நாட்டை விட்டு பார்டர் தாண்டக் கூடாது நீ
அன்பு மிரட்டவும் செய்யும் கட்டளையிடவும் செய்யும்!
தமிழ்நாட்டை விட்டு இல்லை, இந்த ஊரை விட்டுக் கூட போற ஐடியா இனி இல்லைநான் சொல்லவும் தான் விட்டனர். 
களம், காலம் எல்லாம் புறம் தள்ளி நெடுந்தூரப் பயணம் எங்களின் பேச்சில். காலேஜ் கேண்டீன் பஜ்ஜியில் ஆரம்பித்து காலேஜ் டூர், வர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி, தோனியின் வின்டேஜ் பார்ம், சினிமா, இந்தியா பாலிட்டிக்ஸ், காலேஜ் எலெக்ஷன் என பேச்சின் எல்லை விரிந்தது. 
நேரம் நள்ளிரவை விட்டு நகர்ந்து விட, இரு வீட்டுப் பெரியவர்கள் வதனத்தில் பிடித்தமின்மையின் வாசம்.
கண்டு கொண்டதும், களைந்து சென்று துயில் கொள்ள எல்லோரும் ஆயத்தமாக, ஹர்ஷியின் மகளைக் கையில் ஏந்தி, அவள் மழலை மழையில் நனைந்தபடி இருந்தேன்.
யாழினி, பாப்பாவ அம்மாகிட்ட கொடுத்திட்டு வா. நம்ம பேட்ஜ் மட்டுமா போட்டோ எடுத்துக்கலாம்” – ஹர்ஷிதா
ஹர்ஷியின் அழைப்பில், அனுமதியின்றி என் அகம் அதிர்ந்தது.
2012 பேட்ஜ் அத்தனை பேரும் ஆஜர், அவனைத் தவிர..!
அவனை மறந்துவிட்டார்களா..? 
சாத்தியமா..? 
மறக்கக் கூடியவனா அவன்..?
அகம் அவசரமாக அம்பு விட, இலக்கில்லாமல் தோல்வியை ஏற்கவும் இயலாமல் என் கேள்விகள் என்னோடு மட்டும் இருக்க,
இளா எழுந்து வந்து என் கரம் பிடித்து இழுக்க, இயலாமையுடன் எழுந்து கொண்டேன்.
அகத்தினில் அறிமுகமாகியது அதுவரை இல்லா அழுத்தம். சுவாசம் தடை செய்யும் ஆத்திரம் அதனிடம்.
இளா ! இப்போ வந்துடறேன்..” தவிப்புடன் சுவாசக்காற்றினைத்  தேடி வெளியேறினேன்.
தவிப்பு மூச்சுக்காற்றுகாகவா..? அவனுக்காகவா..? 
அகத்தினை அகழாய்வு செய்தல் வேண்டும் அதற்கு.
என்னம்மா இந்த நேரத்தில இங்க..?” மதுரனின் உறவில் ஒருவர் வினாவோடு வர, விடையளிக்க விழித்து, பின்  சமாளித்து உள்ளே வந்தேன்.
என் கண்கள் கண்ட காட்சி, எனை இழுத்துச் சென்றது கல்லூரிக் காலத்திற்கு..!
 
காதல் அதிகாரம் செய்வோம்…..! 

Advertisement