Advertisement

பின்னுரை (EPILOGUE)

              விஜய், தாமரையையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். அவர்களை கவனித்துக் கொள்ள அந்த ஊரில் உள்ளவர்களே துணைக்கு வந்தார்கள். பிரசவத்திற்குக் கூட வராத மனைவியைத் தங்கையின் கண்கள் தேடுவதை உணர்ந்த ஆதவன் ,

“பாப்பா.. திலோ ஏன் வரல … ஏன் பேசலனு நினைச்சு குழந்தைய கவனிக்காம விட்டுறாத… உன் ஃபிரண்டா அவள நல்லா புரிஞ்சுக்கிட்ட நீ சீக்கிரமா உன்னையப் பார்க்க வருவாங்கிற நம்பிக்கையோட இரு மா.. எனக்கு திலோவும் வேணும் , நீயும் வேணும்.. அதனால அவ ஏன் வரல , ஏன் பேசலங்கிற காரணம் என் வாயிலிருந்து ஒரு நாளும் வராது மா… அதோட சின்ன வயசுலருந்து சேர்ந்து வளர்ந்த அவளுக்கு உன் மேல கோபம்ங்கிறத விட வருத்தம் தான் அதிகம்… அதுல கொஞ்சம் அப்சட்.. அது என்னங்கிறது உனக்குப் புரிஞ்சு இருக்கும். அதோட என்றவன் … மெல்லிய புன்னகையுடன் ,

” திரும்ப உண்டாகியிருக்கா.. டாக்டர்ஸ் ரொம்ப கவனமா பார்த்துக்க சொல்லியிருக்காங்க..” என்றதும் அளவில்லா மகிழ்ச்சியடைந்த தாமரை … தில்லை தன்னுடன் பேசவில்லை, தன்னைக் காணவரவில்லை… என்பதையெல்லாம் ஓரம்கட்டி.. அண்ணனுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துகிறாள் என்பதே அதிக மகிழ்ச்சியைக் கொடுக்க, கண்ணீர் மல்க..

“அண்ணா… திலோவுக்கு என் மேல் ஏதோ வருத்தம் இப்ப கோபமா ஆகி இருக்குனு மட்டும் புரியுது. ஆனாப் பரவாயில்லணா அவளுக்கு என் மேல கோபப்பட எல்லா உரிமையும் இருக்கு… நீங்க சொன்னது போல நான் ஏன்னு கேட்க மாட்டேன் .. அவளா என்னையத் தேடி வருவான்ற நம்பிக்கை இருக்குணா… அவள நல்லாப் பார்த்துக்கோங்க …” என்றதோடு ஒரு மருத்துவராக தில்லையைக் கவனிக்க ஆலோசனைகளையும் கூறி மகிழ்ச்சியுடன் தான் விடைக் கொடுத்தாள்.

திரும்ப மருமகளுக்கு பெயர் சூட்ட என வந்தவன்.,.. தாய் மாமனாக குறைவில்லாமல் சீர்செய்தான்..தில்லையும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றாமல் இல்லை. குழந்தையின் பெயரை வைத்தே தாமரை மீதான விஜயின் காதலை அறிந்துக் கொண்டான் ஆதவன். விஜய் அந்தப் பெயரைச் சொல்லிக் கொண்டே தங்கையைப் பார்த்ததும்… தங்கைக் கொடுத்த பதில் பார்வைகளுமே அவர்களது காதல் வாழ்வை அண்ணனவனுக்கு பறைசாற்றியது. சொல்லெணா நிம்மதியில் இருந்தான் ஆதவன். முன்பு அவர்களது காதல் ஆரம்பமானது எப்போது என விஜய் தெரிவித்திருந்தான்.. அதில் குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயர் தானே முக்கிய இடம் பிடித்தது.. என்ன பெயர்??? பார்த்து விடுவோம்.

மனைவி நிச்சியம் தன்னுடன் மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்.. இருப்பினும் தில்லைநாயகி ஏன் பேசவில்லை பார்க்கவில்லை .. தன்னால்தான் என்றால் தானே நேரில் பார்த்து மன்னிப்புக் கேட்கிறேன் என்ற விஜயையும் ஏதோ சொல்லி சமாளித்து விட்டான் ஆதவன்.

தங்கை மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துகிறாள் என்பதே ஆதவனை அவனது குடும்பத்தைப் பார்ப்பதோடு, அவனது தொழிலிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்த வைத்தது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் மருத்துவமனைக்கு பணிக்கு செல்ல ஆரம்பித்தாள் தாமரை. ஆதவன் தொழில் விஷயமாக வெளியே சென்றாலும் அது எந்த நாடாக இருந்தாலும் மனைவியைக் கையோடு அழைத்துச் சென்று விடுவான். தில்லைக்கு பல மடங்கு காதலைக் கொடுத்தான் ஆதவன். அதனால் முன்பு தன்னை மறந்து இருந்த நிலையையே மறந்திருந்தாள் தில்லை … ஆனால் உடல் பலகீனம் வயிற்றில் உதித்த குழந்தையையும் அறுபது நாளிலேயே இல்லை என்றாக்கியது.

ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கு பையன் மட்டும் போதும் என சொல்லியவன் தில்லையை வேறு சிந்தனைக்கே போகவிடாமல் மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டான். உதகையில் தங்கியிருக்கையில் வெளியூர் கிளம்பினால் பாக்யத்திடம் மகனை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு இருவரும் கிளம்பி விடுவார்கள்.

 “ஏன் அப்பா அம்மா கிட்ட விடலாம் இல்ல… அவங்க ராஜா, தேவுனு ஆசையா ஃபோன்ல பேசிப் பார்க்க ஆசைப்படுறாங்க..” என்றவளுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பான். மேலும் அவளிடம் அவள் தந்தைக் குறித்து தான் கூறியதை அப்போதே மறந்து விட்டாளோ என்று தான் இருந்தது.

“இல்லை வயசானவங்க தொல்லைத் தர வேண்டாம்” என்று விட்டான். மீண்டும் கடந்து போன நாட்களை தில்லைக்கு நியாபகப்படுத்த விரும்பவில்லை ஆதவன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள் அது போதும் என விட்டு விட்டான்.தொழில் வளர்ச்சியடைந்துக் கொண்டேப் போக, தலைநகரான சென்னையில் தான் தங்க வேண்டிய சூழ்நிலை. எனவே    உண்டு உறைவிடப் பள்ளியான அவன் படித்த பள்ளியிலேயே அவர்கள் மகனைத் தங்க வைத்துக் கொண்டு…. இவர்கள் உதகை வருகையில் மகனோடு அங்கு தங்கி விட்டுச் செல்வர்.

“ஏன் மாமா… நான் பையன் கூட இருந்து கவனிச்சுக்கிறேனே… ” என்றவளிடம் , “திலோ இப்ப அவன் வளர்ந்துட்டான் , பாரு எப்பவும் ஃபிரன்ட்ஸ் தான்.. அவன் கைக்குள்ளயே வச்சுப் பழக்க கூடாது.. நான் அவனையும் என்னையப் போல் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க பிளான் போட்டுருக்கேன்.. நீ என்னனா.. அதோட நம்ம கல்யாணம் ஆகி ஹனிமூனே போனது இல்ல… சோ இதை நம்ம தேனிலவு நாட்களா எடுத்துக்கலாம் ஒகே… ” என சரசமாக உரைக்கும் கணவனின் வார்த்தைகளுக்கு மயங்கி தான் போனாள். நிச்சியம் தில்லையை தனியே விட முடியாது என்பது அவனறிந்ததே…

தாமரையின் மகளுக்கு ஐந்து வயது இருக்கும் .. உள்ளங்கையில் உலகமாக இணையம், மற்றும் அலைப்பேசிகள் அப்போதுதான் உலகத்தில் அறிமுகமான நேரம்… வட மாநிலங்களில் மழை, வெள்ளம் , நிலச்சரிவு என செய்திகளை தொலைக்காட்சி ஊடகங்கள் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறது. இந்தச் செய்திகள் மனதை கனமாக்க , தங்கைக்கு பேசி அவர்கள் இருக்கும் இடத்தில் பிரச்சினை இல்லை, அவர்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் எனவும் தெரிந்துக் கொண்டான் ஆதவன்.

ஆனாலும் மனம் கேளாமல் ஒரு முறை சென்றும் பார்த்து வர முடிவு எடுத்திருந்தான் ஆதவன். ஒரு மாலை மழை நேரத்தில் தன் சொந்த மருத்துவமனையில் அப்போதுதான் மழலையர் பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்த மகளை தன் அறை மேசை மீது வைத்துப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் தாமரைச்செல்வி.

இப்படி காலமும் நேரமும் வேகமாக ஓட..தாமரைக்கு தனியாக மருத்துவமனையே அண்ணனும் கணவனும் இணைந்துக் கட்டிக் கொடுத்திருக்க , இந்த ஒரு வருடமாக அதை நிர்வகித்து வருகிறாள் தாமரைச்செல்வி.

விஜய் தொழில்நுட்ப பிரிவில் இருந்ததால் அவனுக்கு பேரிடர் காலங்களில் உடைந்த பாலங்கள் சரி செய்வது, மின்சார இணைப்புக் கொடுப்பது என வேலையிருக்கும்.  மனைவி மகளைப் பார்த்து பத்து நாட்களுக்கு மேலானதால் பகலிரவாக அவனது பணிகளை முடித்துக் கொண்டு இன்று வீடு வந்தான்.பின் பகுதியில் வீடும் முன் பகுதி மருத்துவமனையாகவும் இருக்கும். 

விஜயை இம்முறை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளின் முன், அறைக்கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்த கணவனைக் கண்டதும் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதற்குள் அவர்கள் மகள் ‘அப்பா’ என ஓடி வர அவளைத் தூக்கி கழுத்தோடுக் கட்டிக் கொண்டான்.

தாமரைக்கும் அதே நிலைதான்.. உடல் மட்டும் தான் அங்கு இருந்தது. விழிகளும் மனமும் அவன் புறம் பறந்து மகளுக்கு முன்பே கட்டிக் கொண்டதே..

மனம் முந்தியதோ

விழி முந்தியதோ

கரம் முந்தியதோ…

நிலைதான் … அருகில் வந்தவளையும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவனிடம்,”ஷ் … பூக்குட்டி..” என வெட்கப் புன்னகையுடன் கூற , மகளிடம் விளையாட்டுப் பொருளைக் கொடுத்து, வெளியே நிற்கும் செவிலியர் பொறுப்பில் விட்டு திரும்பியவனை வேகமாக கட்டிக் கொண்டாள் தாமரை. விஜயும் மனைவியை இறுக்கமாக கட்டிக் கொண்டவன்  முகம் முழுவதும் முத்த மழைப் பொழிந்தவாறே..

” வரவேற்பு பலமா இருக்கு போலவே… ம்… “எனக் கேட்டான். தாமரை மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தாளென்றால் மட்டுமே தானாகவே சென்று கணவனை அணைத்துக் கொள்வாள்… அதனைக் கொண்டு கேட்டவனின் வலது கரம் எடுத்து தன் வயிற்றில் வைக்க … விஜயைக் கேட்கவா வேண்டும் … இருவரும் விழிகளாலயேப் பேசிக் கொள்ள, அந்த மகிழ்ச்சியில் மீண்டும் ஓர் இறுக்கமான இதழணைப்பு. மகள் வருவது தெரிய மனமின்றி பிரிந்தவர்களை , செவிலியர் ஒருவர் பார்க்க வரவும் தான், தனது கடமையை உணர்ந்தவள் ,

“லேன்ட் ஸ்லைடிங் அதிகம் ஆன கிராமங்கள் ல கேம்ப் போட்டுருக்கு.. எனக்கு பத்து மணி வரை டியூட்டி … நான் வந்துடுறேன்.. அண்ணா நியூஸ்லாம் பார்த்து பயந்து வந்துட்டு இருக்காங்க… அம்ரித் அம்மா சாப்பாடு எல்லாம் தயாரா வச்சுருப்பாங்க… நீங்க அண்ணா எல்லாம் சாப்பிட்டுட்டு இருங்க… நான் கிளம்புறேன்..” என்றவள் மகளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு ..

“மாமா வாராங்க.. அம்மா வர்ற வரை அப்பாக்கூடவும் மாமாக்கூடவும் இருப்பீங்களாம் என் பூக்கூட்டி ..” என கணவனிடம் மகளைக் கொடுக்க … அவர்களை இணைக்கும் பாடலின் பின்னணி இசை விஜயின் சட்டைப்பையிலிருந்து வந்தது.

அன்றைய சிறிய நோக்கியா மொபைலில் ஆரம்பத்தில் இசை மட்டும் தான் தரவிறக்க முடியும். எப்போதும் போல் அந்த இசை இருவரையும் அவர்களது அழகிய காதல் காலங்களுக்கு அழைத்துச் செல்ல இருவருமே புன்னகைத்தவாறு அலைப்பேசியைப் பார்த்தனர்.. ஆதவன் எண் என்றதும் , சகோதரனிடம் பேசிவிட்டு கிளம்பி விட்டாள். அவன் அந்த ஊருக்கு வந்துவிட்டதை விஜயிற்கு தெரிவித்து இருந்தான்.

சென்ற தாமரையும் , வரும் வழியில் நிலச்சரிவாகியிருந்த வேறு இருவரை மண்சரிவிலிருந்து மீட்கையில் பலத்தக் காயங்களுடன் தானும் சிக்கிக் கொண்டவள் மருத்துவமனையில் இரு நாட்கள் சென்றுக் கண் விழிக்கையில் கலங்கி சிவந்த விழிகளுடன் நின்ற கம்பீர ஆண்மகனான கணவனைக் கண்டவள், மகளை அருகில் இருந்த ஆதவன் கையில் ஒப்படைத்து .. “நீதான்னா பார்த்துக்கணும்… திலோகிட்ட நான் இல்லனு சொல்லாதீங்கணா.. அவளால தாங்க முடியாது..” என்றதும் உடைந்து அழுதான் ஆதவன்.

ஏழேழு ஜென்மம் இந்த

அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்

எந்நாளும் எந்தன் பக்கம்

தாயே நீ வேண்டும்….

விஜயிடம், “இந்த நாட்டுக்கு நீங்க வேணும்… உங்க கூட உங்க பாடல்களா.. நீங்க சொல்ற இளங்காற்றா.. இந்த மலைகள்ல பொழியற பனிப்பொழிவா எப்பவும்  நான் உங்க கூட தான் இருப்பேன். இந்த ஜென்மத்துல மட்டுமில்ல  அடுத்த ஜென்மத்துலயும் நான் உங்க கூட தான்.”புன்னகையோடு கணவனின் கரம் பிடித்துக் கொண்டே உலகை விட்டு அவளும் சென்று விட்டாள்.

ஜென்மம் ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்…

கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்…

என்றும் ஓயாது ஓயாது…உன் ஞாபகம்..

அவள் சொன்ன வரிகள் எல்லாம் காதலோடு விஜய் அவளிடம் பகிர்ந்த வார்த்தைகள். இனிக்க இனிக்க காதலைக் கொடுத்தவனிடம் முன்பே அவனை பணிக்கு அனுப்பும் போதெல்லாம் ..

“நான் எங்கம்மா போல , சுமங்கலியா தான் இந்த உலகத்தை விட்டுப் போற வரம் தான் வாங்கி வந்துருக்கேன்… நீங்க இல்லாம இந்த உலகத்துல ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது.. சோ…கவனமா இருக்கணும் போய்ட்டு வாங்க..” என்று தான் அனுப்பி வைப்பாள்.தன் விழிகளை முன்பே தானம் செய்திருந்தாள்.. அவளதுஉடலையும் அவள் அங்குப் படித்த கல்லுாரிக்கே தானமாக முன்பே கொடுக்க சொல்லியிருந்தாள். எல்லாம் இவ்வளவு விரைவில் ஆகும் என யாருக்குமே தெரியாது.

“உனக்கு வரம் கொடுத்துட்டாருல… என்னைய மறந்துட்டியே..” கதறிய விஜயை ஆதவனால் தேற்றவே முடியவில்லை. அவள் உடலைக் கொடுத்த  அம்மருத்துவ மனையிலிருந்து விஜயை வெளியே மறுநாள் தான் அழைத்து வர முடிந்தது.

அன்பே நீ இல்லையேல்…இங்கு நான் இல்லையே…

நெஞ்சில் உன் ஆலயம்…நீ என் உயிர் ஓவியம்…

(இதுக்கு மேல எமோஷனால எழுத என்னாலயே முடியல… )

மனைவி தங்கையை வெறுப்பதாக நினைத்துக் கொள்கிறாள்.. உண்மையில் அவளது ஆழ்மனதின் வருத்தமே என்பதை உணர்ந்தவன் எப்படியும்அவளால் தாமரையின் மறைவைத் தாங்க முடியாது.. அதுவும் ஐந்து வயது பெண் குழந்தையை விட்டு விட்டு… மூன்று மாத கருவோடும் சென்றாள் எனத் தெரிந்தால் … முடியவில்லை … ஆதவன் இதயம் எவ்வளவு தான் தாங்கும் ..தில்லை முன்பு கோபத்தில் கூறியது போல தாமரை இருக்கிறாளா… இல்லையா என்றுக் கூடத் தெரிய வேண்டாம் எனக் கூறவே இல்லை தில்லையிடம் .

விஜய் தங்களது மருத்துவமனையையும் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னவனுக்கு மகளுக்காக உயிரோடு இருக்க வேண்டிய கட்டாயத்தில் மகளை ஆதவனிடம் ஒப்படைத்து விட்டு நாட்டுக்குச் சேவையாற்ற கிளம்பினான். ஆதவன் மருமகளை அழைத்துக் கொண்டு உதகை வந்தவன், பாக்யத்திடமும் பழனிச்சாமியிடமும் தங்கை மகளை, இராணுவத்தில் இருக்கும் நண்பனின் மகள் , எனக் கூறி கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைக்க … பாக்யம் பார்த்ததுமே , ” ஐயா நம்ம  செல்வியம்மா பொண்ணுங்களா… ” எனப் கண்டுப்பிடித்து விட , ஆச்சரியமடைந்த ஆதவன் , எப்படித் தெரியும் , நிச்சியம் தில்லை தங்கையின் பேச்சையே எடுக்க மாட்டாள் என யோசிக்க, பாக்யம், அன்று விஜய் தாமரை சந்திப்பைக் கூறியதோடு இதுநாள் வரை தான் அதுக் குறித்து யாரிடமும் பகிர்ந்ததில்லை என்பதைக் கூறவும், ஆதவனுக்கு நிம்மதியைக் கொடுத்த பாக்யம்,

“ஐயா, என் தங்கச்சிப் பொண்ணுனு அம்மாகிட்ட சொல்லிக்கிறேன் என வீட்டின் சூழ்நிலை அறிந்துக் கூறினாள்.அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் சென்றால் முன்பு அம்ரித் தாதிமாவோடு இருப்போம்.. இப்போது பாகீமா ( பாக்யம் அம்மா) வோடு இருக்கிறோம். என்று உணர்ந்த குழந்தை அவ்வப்போது அம்மாவைத் தேட… அவள் வரமாட்டாள் என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்துக் கொண்டவளை தந்தையும் மாமனும் வந்துப் பார்த்துப் பார்த்துச் செல்வர்.

சில வருடங்கள் சென்ற நிலையில், தங்கை மகளை தான் பார்த்துக் கொள்வதாகவும் விஜயை மறுமணம் செய்துக்கொள்ளவும் சொன்ன ஆதவனிடம், தாமரை இருந்த நெஞ்சில் யாருக்குமே இடம் இல்லை என்று விட்டான்.

திலோ ஒரு முறை உதகை வந்த போது , அப்பெண் குழந்தையின் அழகில் ஆசைப்பட்டு கணவனிடம், “பாக்யம் தங்கை மகளை நாம வளர்ப்போமா “என்றாள். விஜயுடைய தாயாரின் சாயலைக் கொண்டுப் பிறந்திருந்தவளிடம் தாமரையின் சாயல் சுத்தமாக தெரியவில்லை.ஆதவனோ வேறுகணக்குப் போட்டிருந்தவன் “பாக்யம் குழந்தையே இல்லாம இருந்து இப்பதான் சந்தோஷமா இருக்கா.. அவ வளர்த்தாலும் நம்ம வீட்டுப் பொண்ணுதானே..” என்று விட்டான்.

சொக்கலிங்கமும் தேவகியும் தங்கள் சொத்து முழுவதையும் மகனின் பெயரைக் கொண்ட பேரனுக்கு எழுதி வைத்துவிட்டு காலமாகினர்.

        ஆதவனின் இதயமும் எவ்வளவு தான் வலிகளைத் தாங்கும் … தாய் தந்தையின் அதிகப்பிரியத்தோடு செல்லமாக வளர்ந்த தன் மகனுக்கு தன் தங்கை மகளை திருமணம் செய்து விட்டுத்தான் மனைவியிடமும் நடந்த யாவற்றையும் கூறியவன் , இனி எல்லாம் மகனின் பொறுப்பு எனச் சென்று விட்டான்..

ஆதவன், தில்லையின் மகன் பெயர் சூர்யதேவன். விஜய் தாமரையின் மகள் பெயர், அவர்களின் காதலின் சின்னமாகிப்போன விஜய் தாமரையினால் அழகாக தொடுக்கப்பட்ட பூமாலை (Rose Bud) ) தான் அவள்…

காலமும் நேரமும் வேகமாக ஓட பூமாலையின் பக்கமாக மட்டும் பார்த்த நாம் தில்லையின் புறம் என்ன நடந்தது என பார்க்கலாமா..

                தான் கணவனுக்காக கோவிலுக்குச் சென்று வேண்டுதல் நிறைவேற்றி விட்டு வந்ததும்… மருத்துவமனையில் இருந்த ஆதவன் தன் இதயம் இதுவரை தாங்கியிருந்த சுமைகளை மனைவியிடம் மகனின் வாழ்விற்காக இறக்கி வைத்துவிட்டு… அவனும் சென்று விட்டான்.

“அப்போ இவரும் எனக்கு உண்மையா இல்லையா..” என்று தான் முதலில் வேதனை வந்தது. தனக்குத் தெரியாமல் தங்கைக் குடும்பத்தை பார்த்திருக்கிறான். அதோடு தங்கையின் மகளையே தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறான்.”நெடு நாட்களாக ஆழப் பதிந்திருந்த பழைய நினைவுகள் மீன்டும் எழும்பி தில்லையை மன அழுத்தம் கொள்ளச் செய்தது.

எங்கே மகனும் தன்னை விட்டுச் சென்று விடுவானோ என்ற பயம் ஆதவனது தங்கை மகளை மகனிடம் இருந்து பிரிக்கச் செய்தது. விடுதியில் இருந்த சின்னப் பெண்ணைப் பார்த்ததும் தில்லைக்கு சந்தேகம் வந்து ..” அப்பாவ போல தான மகனும் இருப்பான்.. எனக்கு ஒரே நாள்ல பிள்ளையக் கொடுத்தவர்தானே… என் பிள்ளை ஒரு மாசம் குடும்பம் நடத்தி இருக்கான். அப்ப.அப்ப .. வேண்டாம் மொத்தமா என் குடும்பத்தை கெடுத்த அந்த நம்பிக்கைத் துரோகி செல்வியின் வாரிசு எனக்கு வேண்டாம்… வேண்டாம்…” என மனதில் நிறுத்தியவளின் மண்டை வெடித்து விடும் போல் இருந்து… அப்பெண்ணிடம் குழந்தையை அழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் சொல்லி … மகனுடனான தொடர்பையே துண்டித்து விட்டு வந்தவளுக்கு… தான் செய்வது சரியல்ல தவறு… தவறு என ஒரு புறமும் … சரிதான் என ஒரு புறமும் மனம் சொல்ல மீண்டும் மனச்சிதைவுக்கு ஆளாகினாள்.

வீட்டில் தனி அறையில் தாமரையின் மறைவிற்கு அழுகிறாள்.. பின் இல்ல இல்ல அவ துரோகி … கொலைகாரி .. இப்படியாக புலம்புகிறாள். தில்லை நிலை ஆதவனும் இல்லாமல் மிகவும் பரிதாபகரமானது.

ஏனோ தாமரையை நினைத்தாளே தலைவலிக்க … அவளது மகளால் மீண்டும் தன் மகனும் தன்னை விட்டுச் சென்று விடுவானோ … ஆதவன் செய்ததும் துரோகம்… தனக்கு உண்மையாக இல்லை.. இப்படியாக மன அழுத்தங்கள் அதிகரிக்க … அதிகரிக்க மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு,தானே மன நல மருத்துவரை அணுகி மருந்துகள் உட்கொண்டவளுக்கு பூமாலைக்கு தான் செய்வது மன்னிக்க முடியாத குற்றம் என பல கட்ட மனநல ஆலோசனைகளுக்குப் பின் உணர்ந்து கொண்டவள் அவளது நல்வாழ்வுக்கு , முதலில் தன் அக்கா மகனான அதாவது ஆவுடையம்மாளின் மகன் வயிற்றுப் பேரன் விஜய பாண்டியனை தேர்வு செய்து திருமணம் செய்து வைக்க நினைத்தவள் பின் மகனின் நண்பன் பிஜூ விரும்புவது அறிந்து அவனிடம் ஒரு கதை சொல்லி பூமாலையை இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளச் சொன்னாள்.

ஒரு கட்டத்தில்  மன நலம் பெற்றாலும்… உடல் நலம் … ம்ஹூம். .ஆனாலும் தான் செய்ய இருந்த பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டு விட்டுத்தான் சென்றாள் தில்லைநாயகி.

தோள் சேர்ந்த பூமாலை  யில் இளம் ஜோடிகளை பிரித்து பலரின் கோபத்திற்கு ஆளான தில்லைநாயகியின் மறுபக்கமாக எழுதப்பட்டதே இந்த தொடர்… பூமாலையைத் தவிர அவள் அத்தனைப் பேருக்கும் நல்லவளாக மட்டுமே இருந்தாள். அதிலும் தில்லையை விட்டுக் கொடுக்கவே மாட்டாள் அவள் மருமகள் பூமாலை.. யாருக்கும் அடுத்தவர்களுக்கு நாம் கெடுதல் செய்ய வேண்டும் என எண்ணம் கிடையாதே.. காலமும் சூழ்நிலையுமே அவர்களை நமக்கு கெட்டவர்களாக உருவகப்படுத்துகிறது என்பதே உண்மை.

முன்பே சூர்யா , ரோஸ் பட் ஐ அறிந்தவர்களுக்கு இந்த எபிலாக் நிச்சியம் புரியலாம்… அவர்களை அறியாதவர்கள் அதனையும் படித்துப் பார்த்தால் புரியும் என்பதனை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் தோழமைகளே…

ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு flashback என்பதாலயே அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கிய இத்தனை கனமான இறுதிப் பதிவுகள்…

அடுத்த கதை கண்டிப்பாக Happy Ending ஆகவே இருக்கும் என்ற நம்பிக்கையில்… இவங்கதான் writer என உறுதியாகச் சொன்ன என் தோழமைகளுக்கும் , விடாமல் கமென்ட் மற்றும் லைக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படிக்கிறவங்க தீபாவளிக்குள் படித்து விட்டால் மகிழ்ச்சி.

                           நன்றிகளுடன் உங்கள் ஷான்வி சரண் .

              

Advertisement