” என் தங்கமே… என் பொறந்த வீட்டுக் குலம் உன்னால தான் வளரணும்ங்கிறது அந்த ஆண்டவனோட முடிவா இருக்கும் போது அதை யாராலயும் மாத்த முடியாது. உன்னைய கண்ணு போல அங்க எல்லாரும் பார்த்துக்குவாங்க தங்கம் … நீ எவ்வளவு படிக்கணுமோ படி… படிப்புக்கு எந்தக் குறைவும் வராது. என் பொறந்த வீட்டார் பொட்டப்புள்ள ஆசைகளுக்கு மதிப்பு கொடுக்கிறவுக தான் சாமி” என மகளிடம் நெகிழ்ந்து பேசிய தேவகியிடம் ,

“அம்மா இன்னொன்னு… இதை உடனே மாமா அத்தைக் கிட்ட சொல்லி சம்மதம் வாங்குங்க.. ரெண்டு கல்யாணமும் ஒரே நேரத்துல பண்ணக் கேட்டா, அடுத்த முகூர்த்தத்துலனு சொல்லிடுங்கமா … எல்லாம் காரணமா தான் சொல்றேன். முக்கியமா நான் என் புருஷனோட நின்னு தான் எங்கண்ணன் பொண்டாட்டிக்கு மூணாம் முடிபோடுவேன்” என்று விட்டாள். தேவகியும் தன் கணவர் மற்றும் தமையனிடமும் பேசியவர் மீனாட்சியிடமும் விவரம் கூற ,

முதலில் தயங்கினாலும் பின் சரி என்றவரின் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை துவங்க சொல்ல… மகனின் திருமணத்தையாவது பார்த்து விட்டுத்தான் அறுவை சிகிச்சை நடைபெறும் அறைக்குள் செல்வேன் என்று விட்டார்.

அவர்களும் அதற்கும் சம்மதித்து மீனாட்சியைத் தேற்றியதோடு ஆதவனிடத்தில் திருமணம் குறித்து அருணாச்சலத்தை தகவல் அளிக்க கூறினர்.  அவனிருந்த மனநிலையில் மீனாட்சி கைகாட்டும் எந்த பெண்ணின் கழுத்திலும் தாலி கட்ட ஆயத்தமாக இருந்த நிலையில், சமீபத்தில் அதிகம் அவனை ஈர்த்த பெண்ணாக  தில்லைநாயகி இருக்க.. அவளே அவனது அன்னையின் தேர்வு என்றதில் விரும்பியே சம்மதித்தாலும் , படிக்கும் பெண்ணாகிற்றே என்ற எண்ணமே ஓங்க, தந்தையிடம் அதனையும் எடுத்துரைக்க… அவரோ அனைத்தும் மீனாட்சிக்காக தான் அதற்கு மேல் ஆதவனது விருப்பம் என்றவர்,

“இத்தனை வருஷத்துல எத்தனையோ முறை உங்கம்மாவ ஆஸ்பத்திரில சேர்த்து குணபடுத்தி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கேன்.. ஆனா இந்த முறை நம்பிக்கையில்ல ஆதவா … தொழில் தொழில்னு அவளை கவனிக்காம இருந்துட்டேனோனு இருக்குப்பா..” மேலும் பேச முடியாமல் அமைதியானவரிடம் ஆதவனால் மேலே பேச முடியவில்லை.

ஆதவனிடம் தாமரையின் திருமணம் குறித்து அவர் பேசத் தயங்கிவர் முதலில் மகனது திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்து தாமரையைக் குறித்துப் பேசவில்லை. அவருக்குத் தெரியும் தங்கையின் மீது அதிக பாசம் கொண்டவன் , படிக்க விடாமல் திருமணம் செய்வதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதை அறிந்தவராதலால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டார்.

ஆதவனும் குழப்பத்தில் இருந்தான்..” தன் தங்கை வயதுடையவள்… ” என யோசித்த போது தில்லை தேவாவிடம் பேசியது நினைவில் வர..

“தில்லை… அப்ப அம்மாவ நினைச்சும் , தங்கச்சியை நினைச்சும் நான் கவலைப்படாம இருக்கலாம். நிச்சியம் நான் இங்க இல்லாத சமயங்கள்ல அவ நல்லாப் பார்த்துப்பா…” என நினைத்துப் பார்த்தவனுக்கு தில்லையுடனான பொழுதுகள் நினைவு வர… மனதில் ஒரு மழைச்சாரல் … அது முகத்திலும் எதிரொளிக்க புன்னகையுடன் அவளை நினைத்துக் கொண்டவன்.. ” தில்லைநாயகி… தில்லை … ” என சொல்லிக் கொண்டவன் , “ம்ஹூம் திலோ… ” என்றவாறு புன்னகைத்துக் கொண்டான். அதன் பிறகு அவனது திருமணத்திற்கு மனச்சுணக்கம் இல்லாது தயாரானான்.

தாமரையோ தன்னிலேயே உழன்று கொண்டிருந்ததால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளும் ஆர்வமில்லாது எப்போதும் மீனாட்சியின் அருகிலேயே இருந்தாள்.

மீனாட்சி அறுவை சிகிச்சை அறைக்குள் செல்லும் நேரமும் வந்தது. அதே நேரம் தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு தன் தாத்தா ஊருக்கு வந்த விஜயானந்தும் நண்பனின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது வீட்டில் பணிபுரிபவரின் மூலம் மீனாட்சிக் குறித்து  தகவல் அறிந்ததோடு அவர் கூறிய ,

“பெரிய அம்மாவுக்கு உடம்பு முடியாததால சின்னய்யாவுக்கும் , சின்ன அம்மாவுக்கும்.. இன்னைக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறதா இருக்காங்க தம்பி … இப்பதான் எல்லாரும் கிளம்பிப் போனாங்க…” என்ற தகவல் அன்றே அப்போதே மருத்துவமனைக்கு செல்லத் தூண்ட… எப்படியும் அரை மணி நேரமாவது ஆகக்கூடிய பயணத்தை பத்தே நிமிடத்தில் அவனது புல்லட்டில் கடந்து மருத்துவமனையை நோக்கி விரைந்தான். 

ஏன் ஏன் …அத்தனை வேகம்… நிஜத்தில் அவனது புல்லட் சத்தத்தைக் காட்டிலும் அவனது இதயம் துடிக்கும் ஓசை தான் அவனுக்கு அதிகம் கேட்டது போல் இருந்தது.

தனக்கு இந்த ஊரில் என்ன இருக்கிறது.. பெற்றவர்களும் இல்லை… அவர்களது உறவுகளும் தன்னிடம் சற்றுத் தள்ளியே இருந்துப் பழகுவது போல் ஒரு உணர்வு… சென்ற முறை நண்பனோடு வந்தக் காரணமே அனைத்தையும் விற்று விட்டு செல்ல தான். ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது மட்டுமே அவனது நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த எண்ணம் எல்லாம் ஈரக் கூந்தல் அவனது தொடையில் உரசி… தாமரை முகம்.. ஆம் தாமரையை போன்ற முகமுடையவளின் பார்வையும் அவனையும் உரசியதால் மட்டுமே மாறியது.

இங்கேயே இருந்து விட தூண்டியது… அந்த பார்வைக் கொடுத்த  Iதைரியத்தில் தான் சென்னையில் கிடைத்த பயிற்சி வகுப்புகளைக் கூட மதுரைக்கு மாற்றிக் கொண்டு வந்ததே.. இப்போது அந்தப் பார்வை கிடைக்காதோ என்ற ஏக்கத்தில் தான் இத்தனை வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறான்.

அதே நேரம் தேவகி தன் மகளுக்கு அடர் பச்சையில் அரக்கு நிற ஓரமுடைய பட்டுடுத்தி இருந்த தங்க அணிகலன்களை எல்லாம் பூட்டி ம்ருத்துவமனையிலிருக்கும் மீனாட்சியின் அறைக்கு அழைத்து வந்தார். அப்போது தான் தோழியை கவனித்த தாமரை , அவளின் தோற்றத்தில் மாற்றம் கண்டு எழுந்து தில்லை அருகே வந்தவள் ,

“தில்லை.. என்ன… என்ன இந்த ட்ரஸ்ல..” எனும் போதே  ஆதவன் பட்டு வேட்டி சட்டையில் உள்ளே வர… தேவராஜன் இரண்டு பூமாலைகளுடன் அறைக்கதவை திறந்துக் கொண்டு வந்தான். நடக்கப் போவதை பார்வையாலயே உணர்ந்த தாமரை தொண்டை விக்கித்து பேச முடியாமல் தில்லையிடம் ஏதோ கேட்க வர.. அவளது தந்தையும் தில்லையின் தந்தையும் ஆவுடையம்மாள் பாட்டியை கைப் பிடித்து அழைத்து வந்து மீனாட்சி அருகில் விட , அவர் அழுது கொண்டே மீனாட்சியிடம் ஏதோ பேசப் போக… மற்றவர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவரது கையில் தாலிக் கோர்க்கப்பட்ட தங்கச் சரடு ஒன்றைக் கொடுத்தனர். சுற்றிலும் சில நெருங்கிய உறவுகள் மட்டும் நிற்க,

ஆதவனையும் தில்லையையும் மீனாட்சியின் முன்பாக மாலை மாற்றிக் கொள்ளச் சொல்ல… ஆதவன் அவளைப் பார்த்தவாறு மாலையை அவள் கழுத்தில் போட்டாலும் நினைவுகள் தாயைக் குறித்தே இருந்தது. மருத்துவர் கொடுத்த தகவல்கள் அவன் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. அதனால் பெரியவர்கள் சொன்னதை இயந்திரத்தனமாக செய்துக்கொண்டு இருந்தான்.

தில்லையும் அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. அவளது நினைவுகளும் அடுத்து தான் கூறப்போவதை நினைத்தும் தோழியின் மனநிலையைக் குறித்தும் தான் இருந்தது. சின்னாத்தா கரம் கூப்பி அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு ஆதவனிடம் கொடுத்த தாலிக் கோர்த்த தங்கச் சரடை தில்லையின் தலைவழியாக அணிவிக்கவும், சுற்றி இருந்த அவர்கள் குடும்பத்தினர் கையில் கொடுக்கப்பட்டு இருந்த பூக்களை அவர்கள் மீது தூவி ஆசிர்வதித்தனர்.

அந்த நேரம் வேகமாக தனது இருச்சக்கர வாகனத்தில் வந்த விஜயானந்தனும் மிகுந்த பதற்றத்தில் மருத்துவமனையில் வேகமாக நுழைந்து மீனாட்சி இருந்த அறையை தடதடக்கும் இதயத்தோடு அடைந்து அங்கு குழுமி இருந்தவர்களை பார்வையால் அலச.. அவன் பார்வையில் பட்டது என்னவோ  சரியாக தலைவராமல் கலைந்திருந்த நீண்ட ஜடையுடைய தாவணி அணிந்திருந்த இளம் பெண்ணின் முதுகுப் புறம் தான் … ஆனாலும் அவனது முகத்தில் புன்னகை தோன்ற துவங்கியது.

அவள் தான் .. ஆம் அவள் தான் … அவன் மனதுக்கினியவள் தான்.முகம் பார்க்காமலே உணர்ந்தான் தாமரை செல்வியை .. அதன் பிறகு தான் மணமக்களாக நின்றவர்களைப் பார்க்க.. சொல்லெணா நிம்மதி … இத்தனை நேரம் பதறி துடித்த இதயம் ஆசுவாசம் அடையத் துவங்க உடலும் இளைப்பாற வேண்ட அப்படியே பின்னால் முட்டிய சுவற்றில் சாய்ந்தவன் கண்களை மூடிக்கொண்டான்.

அழுகை மற்றும் பேச்சு சத்தத்தில் தான் விழிகளை திறந்தவன் அங்கு நடந்துக் கொண்டு இருப்பதை அப்போதுதான் உட்கிரகிக்க ஆரம்பித்தான்.

மணமகனாக நின்றவன் அவனது நண்பன்.. நடப்பது புரிபட… தன் தலையில் கை வைத்துக் கொண்டவனது  மனம் ஆயிரம் கேள்விகளை அவனிடத்தில் கேட்டது…

“ஷ்… இப்படி ஒரு சூழல்ல கல்யாணம்னா… ஆன்ட்டி… ” என மீனாட்சியின் நினைவு வந்து படுக்கையைப் பார்த்தான். அப்போதுதான் தாமரை மெல்ல நடந்து மீனாட்சி அருகே வந்தவள்.. அன்னையையே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மனதிலும் பல குழப்பங்கள் … அதில் அவளும் விஜயனைப் போலவே,

“அப்ப அம்மா திரும்பி வர முடியாத இடத்துக்கு போறாங்களா… அது தான் இவ்வளவு அவசரமா தில்லையோட அண்ணனுக்கு கல்யாணமா..” என்பதாக எண்ணங்கள் ஒட மீனாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளுக்கும் சுற்றி என்னப் பேசுகிறார்கள் என்பது காதில் விழாமல் போயிற்று.ஆதவனையும் தில்லையையும் மீனாட்சியின் காலைத் தொட்டு வணங்கி எழச் சொன்ன தேவகியிடம் மீனாட்சி மேலும் ஏதோக் கூறப் போக … தில்லை முந்திக் கொண்டாள்.

மீனாட்சியின் கைகளை பிடித்துக் கொண்டவள் , “அத்தை நீங்க என்ன சொல்ல வாறீங்கனு புரியுது.. இப்ப ஆபரேஷனுக்கு டைம் ஆகிருச்சு… தாமரையோட கல்யாணம் தானே.. அதுக்கு நான் பொறுப்பு… நான் இப்ப அவளுக்கு ஃபிரண்டு மட்டுமில்லயே… அண்ணன் மனைவியும் தானே… உங்க இடத்துல இருந்து அவளுக்கு நல்ல வாழ்க்கைய நான் அமைச்சுக் கொடுப்பேன் அத்தை.. ” என்ற ஆறுதலைக் கொடுக்க … தாமரை விழியகற்றாமல் அன்னையைப் பார்த்திருக்க … அந்த வார்த்தைகளில் தான் ஆதவன் அவன் சற்று முன் தான் தாலி கட்டி தனக்கு மனைவியானவளை நிமிர்ந்து  பார்த்தான்.

தில்லையோ அழுதுக் கொண்டே , “அத்தை நீங்க நல்லாகிட்டு வீட்டுக்கு வாங்க … அம்மா சொல்லும் எங்க மதினி என் தாய்க்கு சமம்னு … நானும் தாமரைக்கு அப்படித்தானே.. அதனால நீங்க உங்க புள்ளைங்கள பத்தின கவலையில்லாம நிம்மதியா இருங்க அத்தை … நான் பார்த்துக்கிறேன். நீங்க சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் நாம பேசுவோம் .”

ஆதவன் மட்டுமல்ல… தேவகியும் தேவராஜனும் கூட தில்லையின் பேச்சைத் தான் கவனித்துக் கொண்டு இருந்தனர். கழுத்தில் தாலியேறியதுமே சிறு பெண் கூட பக்குவமடைந்து விடுவாளா என்ன… 

இத்தனை நாட்கள் விளையாட்டுப் பெண்ணாக … என்னக் கூறினாலும் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டு இருந்தவளா இன்று பொறுப்புடன் பேசுகிறாள். அவர்கள் எல்லாம் இப்படி எண்ணி தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மீனாட்சியை தேற்றிக் கொண்டிருந்தவள் தாமரையையும் தோள் சாய்த்துக் கொண்டாள். மகளைப் பெற்ற ஒரு தாய்க்கு இதைவிட வேறு நிம்மதிக் கிடைத்து விடுமா என்ன… தான் இவ்வுலகில் இருக்கிறோமோ இல்லையோ.. தன் மகளின் வாழ்க்கை நன்றாக அமையும் என்ற நம்பிக்கையில் முகம் மலர்ந்த மீனாட்சி ஆதவன் , தில்லை இருவரது கைகளையும் இணைத்து தாமரையின் கரத்தையும் அவர்கள் மீது வைத்து வாழ்த்திய நிம்மதியோடு தான் அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றார்.

அந்த நிம்மதியோடவே மூன்றாம் நாள் கண் விழிக்கமலயே இவ்வுலகை விட்டும் சென்றும் விட்டார் மீனாட்சி. ஆம்.. எழுபத்து இரண்டு மணி நேரம் மருத்துவர்கள் கெடு விதிக்க .. கெடு முடிவதற்குள் கண்விழிக்கமலயே மகன் மற்றும் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையிலயே சென்றிருந்தார்.

தோழமை உறவுக்கு

ஈடேதம்மா

நீ சொன்ன மொழி நானே

கேட்பேனம்மா

உனக்கென நானும்

எனக்கென நீயும்

உலகினில் வாழ்வோம் எந்நாளுமே

இனி வாழ்வில் நீதான்

என் சொந்தமே…