Advertisement

அலை 35(final)

      மதுரையிலும் இருக்கும் ஆதவனது வீட்டில் தான் இப்போது மனைவி மகனோடு தங்கியிருந்தான் ஆதவன். , அங்கிருந்து தான் உதகைக்கு கிளம்புவதாக இருந்தார்கள். பெண் குழந்தை உடை உடுத்திய பொம்மையை தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவளிடம் ,

“திலோ … மாமா என்ன சொல்றேனோ அதெல்லாம் இப்ப சொல்லணும் சரியா… பாப்பாவுக்கு ஸ்வெட்டர் அப்புறம் நீ கேட்ட பிங்க் டிரஸ் வாங்க நாம போகலாம் சரியா…” என்றதும்.

“மாமா.. அம்மா சொல்லியிருக்காங்க மாமா என்ன சொன்னாலும் கேட்கணும்னு.. இனி யாரும்..” என்றவள் முகம் யோசனைகளுக்கு போவதற்குள், ” சரி சரி..” என்றவன் தில்லையை யோசிக்க விடாமல் அப்போதைய கார்ட் லெஸ் ஃபோனில் அழைப்பு விடுத்தவன் ஸ்பீக்கரையும் போட்டு விட்டான்.

அங்கிருந்து தாமரை , “திலோ… ” எனவும் , ” உடம்பு பரவாயில்லயா.. ஸ்கூல்ல குட்டிய சேர்க்கப் போறோம்… பாப்பாவ வச்சிட்டு அலையக் கூடாது தானே. அதனால அப்புறமா உன்னையப் பார்க்க வருவோம் சரியா..” என்றதும் தாமரை , “இப்ப எனக்குப் பரவாயில்ல நான் அங்க வரட்டுமா.. உங்க எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு…” என அழவும், ஆதவன் தொலைப்பேசியின் வாய்ப் பகுதியை மூடி … ” நீ இங்க வர்றது நல்லதுக்கு இல்ல… நீ நிம்மதியா படி .. மாமா வேலை விஷயமா அமெரிக்கா போறப்ப என்னையும் கூட்டிட்டுப் போறாங்களாம். அண்ணா உன்னைய நல்லா பார்த்துப்பாங்க.. நீயும் பாப்பா பெத்துக்கணும் சரியா…” என சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக ஆதவன் சொல்லிக் கொடுத்ததை அப்படியேச் சொல்ல… இடை இடையே தாமரை பொம்மையிடமும் மகனிடமும் பேசியதை தாமரை உணரவில்லை.

அவளுக்கு தில்லை தன்னிடம் பேசிவிட்டாள் என்ற நிம்மதி மட்டுமே இருந்தது. அதிலேயே உணர்ச்சிவசப்பட்டவளிடம் ஆதவன்  பேசினான்.

 “பாப்பா.. இனி தில்லைய தனியா விட்டுட்டு எங்கேயும் போக முடியாது.’அதனாலதான் பாப்பா திலோவையும் அழைச்சுட்டுப் போறேன். அந்த சமயங்கள்ல  உன்கிட்ட பேச முடியுமா தெரியாது. அமெரிக்கா.கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு தடவை வந்துட்டுப் போறேன்.” என வைத்தவனது நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது. எத்தனை நாட்கள் சமாளிக்கப் போகிறோம் எனத் தெரியாது தலைவலித்தது.

வட இந்திய மாநிலத்தின் மலைப்பிரதேசத்தில் விஜயிற்கு ஒதுக்கப்பட்ட இராணுவ குடியிருப்பிற்கு செல்ல இருந்த தங்கையையும் தங்கை கணவனையும் சென்னையிலிருந்து வழியனுப்பியவன் , அவள் மேற்படிப்புக்கான சான்றிதழ்களோடு வீட்டில் இருந்த தாமரையின் பொருட்களையும் கொடுத்தனுப்பினான். “அண்ணா திலோ பிரசவத்துக்கு இந்தியா வந்துருவாளா …” எனக் கேட்ட தங்கைக்கு எப்போதும் போல் யோசித்து பதிலளித்திருந்தான்.

தாமரையின் உடல்நிலையும் தேறியிருக்க … தில்லையும் நல்ல விதமாகவே தொலைப்பேசியில் பேசிவிட்டு கிளம்பியிருக்க , எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தாள் தாமரை.பனிப் பிரதேசத்தில் வெள்ளை மழை பொழிந்த ஒரு நன்னாளில் குளிருக்கு இதமாக மனைவியை பின்னிருந்து அணைத்துக் கொண்ட விஜயின் மனம் மட்டுமல்ல… உடலும் மனைவியைத் தேட,

“புதுவெள்ளமழை இங்கு பொழிகின்றது… ” என்ற பாடலை மனைவியின் காதோரம் பாட , இத்தனை நாட்கள் அணைத்ததற்கும் இன்றைய அணைப்பிற்கும் வேறுபாடு உணர்ந்தவளின் உள்ளமும் உடலும் உருகாது இருக்குமோ…பல வருடக் காதலை உள்ளத்தால் மட்டுமின்றி உடலாலும் உணர்த்தினான் விஜயானந்தன்.   வாழ்க்கை மிகவும் அழகாகவே விஜய் மற்றும் தாமரைக்குச் சென்றது.

மேற்படிப்பை அங்கேயே படிக்க ஆரம்பித்தாள் தாமரை. இடையிடையே தில்லையிடம் பேசினாள். திடீரென தில்லைப் பேசுவதை நிறுத்தியிருக்க , என்னக் காரணம் என அறியாது குழம்பியவளிடம்,  மிகுந்த அலைச்சலிலும் , உடல் பலகீனத்தாலும் குறைப் பிரசவமானதில் தில்லையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது… அதில் உடல் பலகீனமடைந்து இப்போது தான் தேறி வருகிறாள் என்ற மற்றொரு உண்மையை வேறு விதத்தில் கூறியவன் இந்தியா வர இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்று விட்டான்.

அதிர்ந்த தாமரை தில்லையைக் காண தான் அமெரிக்கா வருவதாக தெரிவிக்க , ஆதவன் நொந்தே விட்டான். எப்படி பேசினால் தங்கை கேட்பாள் என யோசித்தவன் ,

“பாப்பா நீ ஒன்ன புரிஞ்சுக்கணும் மா… திலோவப் பார்த்துக்க நான், உன் மருமகன், அவளோட அப்பா அம்மானு நிறைய பேர் இருக்கிறோம். அங்க விஜய்க்கு நீ மட்டும் தான் … அவன் சந்தோஷமா குடும்பம் நடத்த வேண்டாமா… நீ எப்பவும் எங்களையே யோசிச்சுட்டு இருந்தா எப்படி மா..” என்றவன் ,

“உதாரணத்துக்கு திலோவையே எடுத்துக்கோ.. கல்யாணம் ஆகி வந்த நாளிலிருந்து என்னைய , உன்னைய, அப்பாவ , குழந்தையனு நம்ம சுற்றி தான் அவ உலகமே இருந்தது. உனக்கேத் தெரியும் பிரசவத்துக்கு கூட அவ அம்மா வீட்டுக்குப் போகல.. அவ வீட்டைக் கவனிச்சுக்கிட்டாங்கிற திருப்தியில தானம்மா நான் நிம்மதியா வெளிவேலைகளப் பார்க்க முடிஞ்சது.. பெருமைக்காக சொல்லலமா… அப்பா கிட்ட இருந்த விட என் கைக்கு பிஸ்னஸ்வந்தப் பிறகு பல மடங்கு உயர்த்தி இருக்கிறது உனக்கேத் தெரியும் தானே… அதுவும் ஆனந்த் நாட்டைக் காக்கிற பெரிய பொறுப்புல இருக்கிறான்.

உன் முகம் கொஞ்சம் வாடி இருந்தாலும் அவன் வேலைல கவனம் சிதற வாய்ப்பு இருக்கு.. அது எவ்வளவு ரிஸ்க் … அப்பா அம்மா இருந்தா அவங்க உனக்கு இதை சொல்லிக் கொடுத்து இருப்பாங்க.. இப்ப அந்த இடத்துல இருந்து நான் சொல்றேன் மா… நீ படிப்பை முடிக்கவும் நாங்களும் இந்தியா வந்து விடுவோம் அப்போது பார்த்துக் கொள்ளலாம்..பேசிக் கொள்ளலாம்… தில்லையே உனக்குப் பேசுவாள்.. அதுவரை நீ உன் கணவன் , குடும்பம் என கவனித்தால் தானே நல்லது.” என பெருமூச்சோடு கூறியவன் தொய்ந்து அமர்ந்தான்.

அவனால் முடியவில்லை, மனைவியையும் பார்க்க வேண்டும் , அதே நேரம் தங்கையும் நன்றாக வாழ வைக்க வேண்டும் … அதற்கு இது போல் எல்லாம் பேசியாக வேண்டும். காரணம் , தில்லை குணமாகிக் கொண்டிருந்தாள்… மருத்துவர் தாமரையின் பேச்சையே அவள் முன் எடுக்க வேண்டாம் என்று விட்டார்.

அன்று கபோர்டை திறந்து பொருட்களை வெளியே எறிந்துக் கொண்டிருந்தவளிடம் நடந்ததை பொறுமையாக விளக்கி உன் தந்தையும் தாமரை காணமல் போனதற்கும் ,தேவாவின் இறப்புக்கும் ஒரு காரணம் என்றதும்,

“எனக்கு இனி அப்பா , அம்மாவே இல்லை.. ” எனக் கோபமாக உரைத்தவளிடம் ,தான் தான் அந்த சூழ்நிலையில் விஜயிற்கு திருமணம் செய்து அனுப்பி வைத்தேன் என்றதையும் ஏற்றுக் கொண்டவளால் , தாமரையும் விஜயும் காதலர்கள் என்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் பாதி மனப்பிறழ்வே …

“அப்போ என்னைய இத்தனை வருஷமா ஏமாத்தியிருக்கா.. நாந்தான் கிறுக்கு மாதிரி இல்ல… எங்கம்மா சொன்னது போல கிறுக்கியே தான் … செல்வி செல்வினு அவளையே சுத்தி வந்துருக்கேன்… அவ ஏன் போனா… போகலனா இவ்வளவு பிரச்சினை வந்துருக்காது இல்ல… பெரிய மாமாவுக்கு அப்படி ஆகியிருக்காது. எங்கண்ணன் இருந்துருப்பான்.. என் பொண்ணு இருந்திருப்பா… ஆனா இப்போ இனி எனக்கு யாருமில்ல நீங்க தான் … நீங்கதான்..” என்றவளின் மனம் அதிகம் பாதிக்கப்பட்டு இடமாற வேண்டும் என ஊர் மாற்றி… கடைசியில் நாட்டையே மாற்றி இதோ கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் போகிறது.

தில்லை முழுவதும் குணமடைந்தாள் என்றாலும் ,தாமரையின் பெயரோ, அவள் குறித்த எந்தப் பேச்சோ வந்தாலும் பொருட்களை உடைப்பது , எறிவது… அமைதியாக எதிலும் ஈடுபடாமல் , குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்காமல் அவனை கவனிக்காமல் , எதையோ வெறிப்பது… என்பது போலாவாள்.

மருத்துவர் அதற்கும் ஆலோசனைகளும் மருந்துகளும் தந்தாலும் , ஆதவனிற்கு தான் அதிக ஆலோசனைகள் சொல்லப்பட்டது. அதில் எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் தாம்பத்திய உறவு சிறப்பாக இருப்பின் எவ்வித மன அழுத்தங்களும் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். அதிலிருந்து ஆதவனும் மனைவியுடன் இணக்கமாக சென்றவன் , கணவனாக அவளை அணுகிய இரவில் ,

“மாமா.. உங்களுக்கு நானும் நம்ம பையனும் மட்டும்தானே… ” எனவும் , அந்த நேரத்தில் என்ன கேள்விஎன்றாலும் மனைவியுடன் கூடிக் களைத்திருந்தவனிடம் ,

“இனி உங்க தங்கச்சிய பத்தி என்கிட்ட பேசக்கூடாது.. அவளுக்கும் நமக்கு மான தொடர்பு இருக்கவே கூடாது.. எப்பவும் நாம நம்ம குடும்பம்னு இருப்பீங்கனு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க மாமா … ” என அவன் வெற்று மார்பில் கோலமிட்டுக் கொண்டே சொல்ல.. அந்த இடத்தில் ஓர் ஜடமாக மட்டுமே உணர்ந்த ஆதவன் அவளின் கைமேல் கை வைத்தான். ஆனால் அவனால் காப்பாற்ற முடிந்ததா என்பதை காலமே அறியும்.

அதனாலயே தங்கையிடம் அது போல் பேசியிருந்தான். தாமரையும் எல்லாப் பெண்களையும் போல பிறந்த வீட்டுக் கவலைகள் அத்தனை இருந்தாலும் , கணவனிடம் எதனையும் காட்டிக் கொள்ளாமல் அன்போடும் காதலோடும் விஜயுடன் வாழ்ந்து , இதோ அவளின்   படிப்பு முடிய நான்கைந்து மாதம் இருக்கையில் தான் தாயாகப் போகும் மகிழ்ச்சியான செய்தியைக் கணவனுக்குத் தெரிவித்திருந்தாள்.

ஆதவனுக்கும் அவன் அலுவலக எண்ணிற்கே அழைத்துச் சொல்லியிருக்க .. மாமனவன் உடனே தங்கையைப் பார்க்க வந்து விட்டான்.தில்லைப் பேசவே இல்லை.. விஜயும்.. அவர்கள் குடியிருப்பில் இருந்தவர்கள் மட்டுமே உறவுகளாகி இதோ பிரசவமும் நெருங்கி இருக்க… தில்லை வருவாளா என எதிர் பார்த்திருந்தாள்.

பிரசவ நாளும் நெருங்க, ஆதவன் மட்டுமே வந்திருந்தான். தேவகிக்கு உடல் நலமில்லாததால் அவரை மருத்துவமனையில் வைத்துக் கவனிக்கிறாள் என்று விட்டான். விஜய், தாமரை என இருவருமே அதற்கு மேல் ஆதவனிற்கு, ஏன் எனக்கேட்டு சங்கடம் தரவில்லை.ஆதவன் கூறியதை ஒரு முறை நம்பலாம்.. இரு முறை நம்பலாம்… எல்லா நேரமும் எல்லாவற்றையும் நம்ப முடியவில்லை. மொத்தத்தில் தில்லைக்கு தாங்கள் திருமணம் செய்துக்கொண்டது பிடிக்கவில்லை என்பதை மட்டும் உணர்ந்துக் கொண்டார்கள்.

ஆதவன் வந்த இரண்டு நாட்களிலேயே விஜயின் தாயே மறுபிறவி எடுத்தது போல அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் தாமரைச்செல்வி.மருமகளை கையில் வாங்கிய ஆதவனது விரலைப் பிடித்துக் கொண்ட பிஞ்சுக் கரங்களை தன் இறுதிக்காலம் வரை ஆதவன் விடவில்லை.

 தில்லைக்கு தங்கள் மீது என்ன வருத்தம்..எதனால் இந்தப் பிரிவு எனக் கேட்டு தாமரையும் விஜயும் ஆதவனை சங்கடப்படுத்தாமல்… இது தான் விதித்தது என வாழ்க்கையை ஏற்றுக் கொண்டனர்.சகோதர சகோதரி பாசம் இருந்தாலும் கணவன் மற்றும் மனைவியின் உறவே இறுதி வரை என்பதை உணர்ந்த இந்த இரு இளம் தம்பதியர்களும் தங்கள் காதல் வாழ்வை தங்கள் இணையருடன் மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தனர்.

( மிகவும் கனமான இறுதிப்பதிவுகள் தான். அதற்கான காரணங்களோடு … எபிலாக்கில் உங்களைச் சந்திக்கிறேன் தோழமைகளே.. எப்படியும் டைம் டிராவல் செய்து உங்களை 90 களுக்கு அழைத்துச் சென்றிருப்பேன் என நம்புகிறேன். எனது எபிலாக் வருவதற்குள் இப்படி இருந்து இருக்கலாம் என்ற உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி.. நன்றி.. நன்றி வணக்கம் )

                 

            

Advertisement