Advertisement

அலை 33

                 சென்னை மருத்துவமனைக்கு தாமரையை அழைத்துப் போன விஜயோ மனைவியை குழந்தைப் போல் கவனித்துக் கொண்டான். உடைமாற்ற, இயற்கை உபாதைகளை மேற்கொள்ள மட்டுமே செவிலியரைத் துணைக்கு விட்டு வெளியே நிற்பான்.இருபத்து நான்கு மணி நேரமும் தாமரையுடன் தான் விஜயின் பொழுதுகள். சொன்னது போல் நீண்ட விடுமுறை எடுத்து வந்திருந்தான்.. ஆனால் அது இப்படி செல்லும் என நினைக்கவில்லை.

பணத்திற்கும் பற்றாக்குறை கிடையாதே.. எனவே கூடவே இருந்து அவளை கவனித்துக் கொண்டான். எப்போதும் போல் தாமரை வாயே திறக்கவில்லை. விஜய் தான் பேசிக் கொண்டே இருந்தான். விடுமுறை முடிந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் தான் அவனது பணி , எனவே அவனுக்கு அங்கு இராணுவ குடியிருப்பில் வீடும் ஒதுக்கி இருந்தார்கள். வந்து திருமணம் முடித்து தாமரையை அங்கு அழைத்துச் செல்வதாக தான் இருந்தான். ஆனால் மருத்துவமனையில் இருந்து வந்தாலும் ஒரு மாதமாவது சென்னையில் தங்கி மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று செல்வதற்காக ..கடற்கரைச் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டான்.

தங்கை எப்படி இருக்கிறாள்…அவளது உடல் நிலை தேறியிருக்கிறதா என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துக் கொண்ட ஆதவன் தந்தையைக் குறித்து விஜயிடம் மட்டுமாவது பேசி விடலாம் எனச் சென்றான். விஜயும் ஒரு பங்குதாரர்.. தாமரையைக் கவனிப்பதில் விஜயின் முழுக்கவனமும் இருப்பதால் தொழில் முறை பேச்சுக்கள் பேசவில்லை. எப்படியும் தெரியக் கூடும் அதை இப்போதே கூறி விடலாம் என்று தான் வந்திருந்தான்.

தாமரையின் மனதை உணர்ந்த விஜய் ஆதவனிடத்தில் , “ஏன் யாரும் வரவில்லை , தொலைப்பேசியிலாவது பேசலாமே…” என்ற கேள்வியை கேட்க… அடக்க முடியாத துக்கத்தில் ,

“பாப்பா … உன்னையக் கொல்லப் போறதா தகவல் கொடுத்த கொஞ்ச நேரத்துல நீயும் காணம போனதால அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துருச்சு…” என்றவன் அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே மறைந்த செய்தியைக் கூறியதும்… “அப்பா…” என கத்தி அழ ஆரம்பித்த உடனே தலைவலி வந்து மயக்கத்திற்குச் சென்றவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தந்தையின் மரணச் செய்திக்கே இப்படியென்றால் மற்றவற்றை கேட்டால் என்னாவாள்… எனவே நடந்ததை மறைக்கவே நினைத்த ஆதவன்,

கண் திறந்தவளிடம் ,” இப்போது தில்லைக்கும் மகனுக்கும் இரு மடங்கு பாதுகாப்பு தர வேண்டியுள்ளது. தொலைப்பேசி தகவல் பரிமாற்றம் கூட பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே நிலமை சரியானதும் தானே பேச வைப்பதாக கூறினான்.

மேலும் இருவரும் காதலர்களே என்றாலும்.. தான் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தாலும் இருவரிடமும் இணைந்து வாழ ஏதோ தயக்கமிருப்பதாக தோன்ற தங்கையின் கரத்தினைப் பிடித்துக் கொண்ட ஆதவன்,

“பாப்பா .. ஊரைக் கூட்டிப் பெரிசா சீர் செய்து உனக்கு கல்யாணம் பண்ண நானும் அப்பாவும் ஆசைப்பட்டோம்.. ஆனா.. ஆனா.. சூழ்நிலை உன்னைய யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி  அனுப்ப வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளிருச்சு.. சத்தியமா அந்த கொலைல அப்பாவுக்கு நேரடியா தொடர்பு கிடையாது.. ஆனா தப்புனு தெரிஞ்சும் அதுக்கு துணைப் போனதாலதான் அப்பாவ பலிவாங்கிறதா நினைச்சு …உன்னைய… எல்லாத்துக்கும் காரணம் கெளரவம்.. அந்த கெளரவம் இப்ப எங்கே வந்து நம்மள நிப்பாட்டி இருக்குப்பாரு ” என்றவனுக்கு நடந்தவற்றை நினைத்துப் பேச முடியவில்லை.

தன்னை திடப்படுத்திக் கொண்டவன் , “அன்றைய நிலைல நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறது தெரியாம இருந்தாலும் ஆனந்த் அங்க இருக்கிறப்போ உன்னையக் காப்பத்த இந்த கல்யாணத்த நடத்தி அவனோட நிச்சியம் அனுப்பியிருப்பேன் பாப்பா.. நான் இவ்வளவு சிரமப்பட்டு இதையெல்லாம் செய்யும்போது நீ ஆனந்தோட சேர்ந்து வாழ்ந்தா தானம்மா எனக்கு அங்க நிம்மதியா இருக்க முடியும் … அப்பாவோட ஆன்மாவும் சாந்தியடையும்.. உன்னைய ஊர் பக்கம் அழைச்சுட்டு வர வேண்டாம்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுத்தான் அப்பா போனார். ” என்றதும் விஜய் அண்ணன் தங்கைக்கு தனிமைக் கொடுத்து விட்டு அறையிலிருந்து வெளியேறி இருந்தான்.

அவன் சென்றதைப் பார்த்த ஆதவன் , அடுத்த முறை நான் உன் காலேஜ் சர்டிஃபிகேட்ஸ் எடுத்துட்டு வாறேன்… நீ மேல படிக்கணும்னா படி… அது உன்னிஷ்டம்… அப்புறம் விஜய என் தங்கச்சியப் பார்த்துக்கோனு நான் சொல்ல மாட்டேன் மா… அத்தனை நம்பிக்கை இருக்கப் போய் தான் நான் இவ்வளவு முடிவுகளையும் எடுத்தது.

ஆனா உன் கிட்ட ஒரு பொறுப்புக் கொடுக்கப் போறேன்… ” என்றதும் புருவம் நெறித்து யோசித்தவளிடம் , ” ஆனந்த் பற்றி உனக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கும். அவனுக்குனு இப்ப இருக்கிறது நீ மட்டும் தான்.. அவனுக்கான ஒரு அழகான,அன்பான மனைவி குழந்தைகள்னு ஒரு குடும்பத்த அமைச்சுக் கொடுக்கிறது உன் பொறுப்பு தான் பாப்பா.. நான் இங்க ரொம்ப நாள் இருக்க முடியாது.. போய் தில்லையப் பார்க்கணும்..” என்று விட்டு சென்றிருந்தான்.

ஆதவன் வந்து விட்டுச் சென்றதிலிருந்து நிதர்சனத்தை ஓரளவுப் புரிந்துக் கொண்ட தாமரை.. அப்பா இறந்த துக்கம், தில்லையுடன் பேசவோ பார்க்கவோ முடியாத வெறுமை இருந்தாலும், பெற்றவர்கள் இல்லை … சகோதரனுக்கும் குடும்பம் இருக்கிறது… அவனுக்கு தன்னால் இனியும் சுமையேற்றக் கூடாது என நினைத்த தாமரை… இனி தனக்கு தன் கணவன் மட்டுமே என்ற எண்ணத்தை மனதில் ஆழப் பதிய வைத்தாள்.

 அதுவும் தன்னைப் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்ளும் விஜயுடன் எவ்வித தயக்கமுமின்றி திருமண பந்தத்தில் இணைந்து வாழ வேண்டும் என முடிவெடுத்திருந்தாள் தாமரை செல்வி. ஆனால் விஜயிடம் பேசுவதற்கு கூட ஒரு வித தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டே இருந்தது. மருத்துவமனை என்பதாலும் அவனிடம் எந்த வகையில் இணக்கம் காட்டுவது என்றும் புரியவில்லை.

இதோ ஒரு மாதம் சென்று தாமரையை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான் விஜய்.செல்லும் போது அங்கிருந்த செவிலியர்கள், “மேடம் உங்க ஹஸ்பன்ட் கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும் … உங்களை எப்படி கவனிச்சுக்கிட்டார்.. ” என அங்கிருந்த நாட்களில் விஜய் நடந்துக்கொண்டதைக் கூறி அவன் அருமைப் பெருமைகளைக் கூறினர். பெருமையாக புன்னகைத்துக் கொண்டாள் தாமரைச்செல்வி.

அவளிடம் ஆதவன் அந்த மருத்துவமனை எண்ணிற்கு அழைத்து தன்னிடம் பேசியதைக் கூறியவன், வீட்டுக்குப் போனதும் தில்லை சிஸ்டர் உனக்கு பேசுவாங்க … இல்ல நாமளே பேசுவோம்.” என்றதும்  தாமரைக்கு கூடுதல் நிம்மதியாக இருந்தது.

அன்று வீட்டிற்கு செல்கிறோம்.. உன் மனைவி, குழந்தை என அனைவரிடமும் பேச விரும்புகிறாள் , நாங்கள் சென்று விட்டு வீட்டிற்கு அழைக்கிறோம் என்ற விஜயிடம் தானே அழைப்பதாக கூறியிருந்தான் ஆதவன். 

சென்னைக்கு அனுப்பிய பத்து நாட்களில்  விமானம் மூலம் ஒரே நாளில் அங்குள்ள மருத்துவமனையில் தங்கியிருந்த தங்கையைப் பார்த்து விட்டு வந்த போது தான் …ஆதவனும் மனைவியிடம் என்ன நடந்தது எனக் கூறி விடலாம் என எண்ணியே தனிமைக் கிடைத்ததும் தில்லையிடமும் பேசப் போனது…ஆனால் எல்லாமே தலைகீழானது போல் உணர்ந்தான்.

                  அன்று தில்லையை இரவில் மதுரைக்கு அழைத்துச் சென்ற ஆதவன்  முன்பு தாமரையை விஜய் அனுமதித்திருந்த மருத்துவமனையில் மட்டும் தான் , தன்னையோ , தனது குடும்பத்தினரையோ அதிகம் தெரியாது என்பதால் அங்குச் சென்றான்.  தன் கையில் ஆழமாகப் பதிந்திருந்த தில்லையின் பல் பட்ட காயங்களுக்கு தானும் சிகிச்சை எடுத்துக் கொண்டவன் , மருத்துவரிடம் விவரம் கூறி தில்லையை கவனிக்கச் சொன்னான்.

அவள் உறக்கத்திலிருக்கிறாள் ,எழுந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று விட , மகனை ஒருபுறம் படுக்க வைத்துவிட்டு விடிய விடிய உறங்காமல் மனைவியையேப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன்.

விழித்தவள் , மீண்டும், ” என் பொண்ணு. என் பொண்ணு… ” என அரற்ற ஆரம்பித்தாள்.ஆதவன் என்ன சொல்ல வந்தாலும் கேட்பதாக தெரியவில்லை , மகனையும் கவனிக்கவில்லை.. இரத்தம் .அண்ணா.. என எழுந்து ஓடத் துவங்கினாள். இறுதியில் செவிலியர்கள் உதவியுடன் அவளை பிடித்து வைத்துதான்…மருத்துவர்கள் அவளது பிதற்றலுக்கும் , பயத்திற்கும் , அழுகைக்கும் மருந்துக் கொடுத்து அமைதிப் படுத்தினர்.

ஆனால் அது அடுத்த அடுத்த நாட்களும் தொடர்ந்தது. தன் முன் இல்லாதவர்களை இருப்பதாக நினைத்துப் பேசத் துவங்க கட்டாயம் மனநல மருத்துவரை அணுகவேண்டிய அவசியத்தையும் பொது மருத்துவர் கூறினார். மன நலமருத்துவரும் தில்லையை பரிசோதித்தவர் , முதலில் அவர்கள் ஊருக்கோ , வீட்டிற்கோ அழைத்துச் செல்ல வேண்டாம் என்றவர் இடமாற்றம் மிகவும் முக்கியம் என்றார்.

மேலும் தாமரைசெல்வி மீது அதிக கோபம் உண்டாகியிருப்பதால் அவளைப் பற்றிய பேச்சே வேண்டாம். அவள் உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ யாருடனும் சென்றாளோ இல்லையோ.. தன்னிடம் அன்று சொல்லாமல் கிளம்பி விட்டாள் என்பது தான் மனதை அதிகம் அழுத்தியுள்ளது. கூடவே கருக்கலைந்தது உடல் உள்ளம் என இரண்டையும் பாதிப்படைய வைத்தததால்… இரண்டு மூன்று மாதத்திற்கு மனநல சிகிச்சை கட்டாயம் என்று விட்டார்.

மேலும் தில்லை தன் கணவனை அதிகம் நேசிப்பதால் , அவன் அன்பு முழுவதும் அவளிடம் மட்டுமே காட்ட வேண்டும் என விரும்புகிறாள். தங்கைக்கு முக்கியத்துவம் தந்தாலும் அதனை அவள் முன் காண்பிப்பது தில்லையை குணமாக்குவதை தாமதமடையச் செய்யும் , எனவே அவள் குணமாவது ஆதவன் கையில்தான் என்றும் தெரிவித்தார்.

மருத்துவமனை வந்து நான்கைந்து நாட்களான நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி… தில்லையை அழைத்துக் கொண்டு உதகையில் இருக்கும் தங்கள்  வீட்டில் இருந்துக் கொண்டு , கோவையிலும் இருக்கும் தங்களது கிளை அலுவலகத்தில் இருந்துப் பணிகளைப் பார்க்கலாம் என முடிவெடுத்துக் கொண்டான். அவனது அத்தை மாமாவை அதாவது மாமனார் மாமியாரான தேவகிக்கும் சொக்கலிங்கத்திற்கும் மகளை அழைத்துக் கொண்டு கோவைக்குச் செல்கிறோம் என்ற தகவலை நேரடியாகச் சொல்ல விருப்பமின்றி பணியாள் மூலமாக மட்டுமே தெரிவித்தான்.

அன்றைய அவனது விளக்கத்தை புரிந்துக் கொண்டாளா இல்லையா தெரியாது. ஆனால் பெற்றோரே தனக்கும் இல்லையென்றிருந்தாள்.

அதோடு தேவகியை துணைக்கு வைத்தால் தில்லையின் நிலையை ஊர் உலகமே அறிந்து விடக் கூடும் ,  தில்லையின் மனப்பிறழ்வுக்கு அதிக காரணம் தேவகியே என்பது ஆதவனின் எண்ணம். பாக்யத்தை மட்டும் தில்லையின் துணைக்கு விட்டுச் சென்றான். அவள் கணவன் பழனிச்சாமி மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்திருப்பதை மட்டுமே வேலையாகக் கொடுத்திருந்தான்.

சமீபமாக குழந்தையில்லாத காரணத்தைச் சொல்லி பழனிச்சாமிக்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய நினைத்தக் குடும்பத்தை தன் கணவன் மற்றும் மாமனார் மூலம் பஞ்சாயத்து வைத்து பழனிச்சாமிக்கும் பாக்யத்திற்கும் தனியாக வீடுக் கொடுத்து இருக்க வைத்தவளே தில்லைதான். அதில் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட இருவரும் வேறு எங்கேனும் சென்றுப் பிழைத்துக் கொள்ளலாம் என இருப்பதாக , தில்லை தன் கணவனிடம் கூறியிருந்தவள் , 

“நாம அவங்களுக்கு ஏதாவது செய்யணும் மாமா… ” என, “நீ சொல்லி என்ன செய்யலனு சொல்லு… ” என மனைவியை அணைத்துக் கொண்ட நாட்கள் புன்னகையோடு கண்ணீரைக் கொடுத்தது ஆதவனுக்கு. இதுநாள் வரை தனக்கு என எதையுமே கேட்டதில்லை… மற்றவர்களுக்காகப் பார்த்து பார்த்து செய்தவளுக்கா இந்த நிலைமை என்றிருந்தது.

ஆதவன் மகனையும் இந்த வருடத்தில் பள்ளியில் சேர்ப்பதாக இருந்தது.. எனவே உதகையில் ஆதவன்  படித்த பள்ளியிலயே சேர்க்க முடிவு செய்தான். அறையில் பொம்மையை தன் பெண் குழந்தையாக நினைத்து மகனிடமும் , ‘பாப்பா பாருங்க… பாப்பா பாருங்க ‘ எனக் காட்டிக் கொண்டிருந்தவளை அன்று தாமரையிடம் பேச வைப்பதாக சொல்லியிருந்தான். ஆம் இப்போது தில்லைநாயகி சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக மாறியிருந்தாளே.

Advertisement