Advertisement

அலை 32

            ஆதவன் தந்தை, குழந்தை, மைத்துனன் என இங்கும் அங்குமாக அவர்களுக்கான சடங்குகளை எல்லாம் முடித்து ,தங்கையையும் விஜயுடன் அனுப்பி ஒரு வாரத்திற்கும் மேலாகியது.தில்லையுடனான தனிமைக் கிடைக்கவே இல்லை. மகன் மட்டும் தந்தையைத் தேடுகிறான் என அவ்வப்போது யாராவது வந்து அவனை அழைத்து வந்தார்கள். குழந்தையும் சோர்வாகத் தெரிந்தான். தாத்தா.. அத்தை… எனக் காலை எழுந்த நேரத்திலிருந்து இரவு உறங்கும் வரையும் அவர்கள் கையிலேயே இருந்த குழந்தையாகிற்றே..

அதில் தில்லையும் குழந்தையை கவனிக்கவே இல்லை… அவளை தான் செண்பாவும் பாக்யாவும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.தில்லை வீட்டிலிருந்து மூன்றாம் நாளே கிளம்பி வந்திருந்தாலும் , எந்நேரமும் உறவுப்பெண்கள் அவளைச் சுற்றி இருந்தார்கள். ஆதவனுக்கும் இரவு பகல் என வேலைகள் நிறையவே இருந்தது.

ஆதவன் செல்லப்பாண்டியன் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்க விரும்பவில்லை.அது தாமரை எங்கே எனத் தேட வைக்கும்.. அதில் சொக்கலிங்கத்தின் ஆட்களும் வருவர்… பெற்ற மகனையே ஆள் வைத்துக் கொன்றது வெளிவந்தால் தில்லை, தேவகியின் நிலை… ஆதவனால் நினைக்கவே முடியவில்லை.

 இது போல பல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் அப்படியே விட்டு விட்டான். ஆனால் அவர்களை எங்கே எப்படி அடித்தால் தண்டனைக் கிடைக்குமோ.. அதற்கான வேலைகளையும் செய்ய ஆரம்பித்தான்.

பின்னே யாரும் தாமரைக்கு எங்கே , என்ன ஆனது ஒரு வார்த்தைக்கூட இது வரை கேட்கவில்லை. அதுதான் அவர்களாக, தாமரை அத்தை மகனை திருமணம் செய்யப் பிடிக்காமல் யாருடனோ ஓடி விட்டாள். அவமானம் தாங்காமல் அருணாச்சலம் உயிர் விட்டதோடு , அத்தை மகனும் தற்கொலை செய்துக்கொண்டான்….என்பதாக ஒரு கதைப் புனைந்துக் கொண்டார்களே …

அது ஆதவன் காதிற்கு வராமல் இருக்குமா … வந்து அவன் முன் பேசினால் சும்மா விட்டு விடுவானா என்ன… நடந்தது நடந்து விட்டது இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் … என்பதாக தான் ஆதவன் இருந்தான். ஆனால் கேட்க வேண்டியவள் இன்னும் கேட்கவில்லை. என்ன நடந்தது என்பதை அவளுக்கு விளக்கிச் சொல்லலாம் , தன்னை விட தங்கையை நன்கு தெரிந்தவள் , அதிக பாசம் வைத்திருப்பவள் சொன்னால் புரிந்துக்  கொள்வாள் என்று இருந்து விட்டான்.

இதோ பத்து பதினைந்து நாள் சென்றிருக்கும் உறவுகள் அனைவரும் கிளம்பி இருந்தனர்.ஆதவன் இரவு வீடு வரும் போது செண்பாவும் , பாக்யமும் வீட்டுக்குள் இருந்தனர். அவர்களது கணவன்மார்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தனர். கூடவே நான்கு காவலாளிகளும். நடந்த நிகழ்வுகளுக்குப் பின் வீட்டினர் பாதுகாப்பை அதிகரித்திருந்தான் ஆதவன்.

தில்லை அறையில் இருக்கிறாள் என்றவர்கள் , சாப்பாட்டை மேசை மீது எடுத்து வைத்து விட்டுக் கிளம்பினர். வீட்டை ஒட்டியுள்ள தோட்டத்தில் தான் அவர்களது வீடும். எனவே ஆதவன் வந்ததும் கிளம்பி விட்டனர். அறைக்கு வந்தவன் குழந்தை உறங்குவதைக் கண்டு விட்டு , ஆதவன் வந்ததைக் கூட உணராமல் விழித்து எங்கோப் பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்றான்.

இன்று தங்கையைக் குறித்துப் பேசி விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் ஆண் மகன் தன்னாலயே இழப்புகளிலிருந்து மீண்டு வர முடியவில்லையே, தில்லைக்கு முடியுமா… அவளும் கதறி அழுது இன்னும் பார்க்கவில்லை. அது மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை தாயின் இழப்பின் போது தங்கை நடந்துக்கொண்டதிலிருந்து பார்த்திருக்கிறானே…

ஆனால் மனைவி தங்கைப் போல் அமைதியானவள் இல்லை … எல்லோரிடமும் நன்குப் பேசக் கூடியவள்… பழகக் கூடியவள் அவள் எந்த உணர்வையும் உடனே காண்பிக்கக் கூடியவள் எனவே மன அழுத்தத்திற்கான வாய்ப்பு இருக்காது .. தன் தோள் சாய்த்து ஆறுதலளித்தால் போதும்…” என எண்ணி விட்டான்.

எனவே மறுபுறமாக தில்லையின் அருகில் சென்றவன் , கிடைத்த சிறிது இடத்தில் அமர்ந்து , அவள் தலையில் கை வைத்து , “திலோ .. ” என்றான். கணவனின் ஸ்பரிசமும் குரலும் உணர்ந்தவள் சட்டென்று எழுந்து , ” . செல்வி ஏன் போனா மாமா… ” என்றாள்.

“எங்கே ” என்ற கேள்விக்காவது பதிலளித்து விடலாம்.. ஆனால் ‘ஏன்’ என்ற கேள்வியின் அர்த்தமே வேறாகிறதே… எனவே , “பாப்பா எங்கேயும் போகல…” என, அவனைப் பேசக் கூட விடாமல் கோபமாக “அப்போ செத்துப் போய்ட்டாளா..” எப்படி பதில் சொல்ல முடியும். திகைத்து விழித்தவன் ,

“நீ உட்காரு.. நான் சொல்றேன்…” என தோளில் கை வைத்தவனை, தட்டி விட்டாள் தில்லைநாயகி.” எதிர்பாராததால் கீழே விழுந்த ஆதவன் , சுதாரித்து எழ, அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டாள். “எங்க போனா உங்க தங்கச்சி … செத்துப் போனாலும் ஒரு எலும்புக்கூடவா கிடைக்கல… “

நிஜமாக இப்படி வார்த்தைகளை எல்லாம் எதிர்பார்க்கவில்லை ஆதவன் .. “ஓடுகாலி… எல்லாரையும் கொன்னுட்டால்ல… எங்கம்மா எவ்வளவோ சொன்னாங்க நான் கேட்கல…வயசு பிள்ளைய வீட்ல வைக்காத வைக்காதனு…” என புலம்ப , ஆதவனுக்கும் கோபம் வந்து … ” என்ன நடந்ததுனு தெரியாம பேசுற திலோ..” என உரைத்தவனிடம், 

“என்ன நடந்திருக்கட்டும் அவ இப்ப இங்க இல்ல… அன்னைக்கு இரு சொன்னப்ப .. இதோ இதோ.. எழுதி வச்சுட்டுப் போய்ட்டா தானே…” என்றவள் , தானாக புலம்பிக் கொண்டே அந்த அறையில் உள்ளப் பொருட்களை தள்ளி விட ஆரம்பித்தாள். ஒவ்வொன்றாக சிதறி சத்தம் வரத் துவங்க … அவர்கள் மகன் விழித்தவன் எழுந்து அழ ஆரம்பித்தான்.

கட்டிலில் இருந்து எழுந்து நடந்து வந்தவன் கீழே சிதறிக் கிடந்த கடிகார கண்ணாடியில் கால் வைத்து விடுவானோ என ஆதவன் தான் வேகமாக போய் பிடித்தான்.தில்லை அதனை உணரக்கூடிய நிலையில் எல்லாம் இல்லை. “நாந்தான் லூசு.. நாந்தான் லூசு..” எதுவும் தெரியாமல் இருந்துட்டேன்.. ” என்ற புலம்பலோடு அறையில் இருந்தவற்றை எல்லாம் கலைத்துக் கொண்டிருந்தாள்.

ஆதவன் குழந்தையை தோளில் போட்டு சமாதானம் செய்ய , தில்லையோ கபோர்டைத் திறந்தவள் … அதனைக் கலைத்து எதனையோ தேடுபவள் போல் உள்ளிருந்தவற்றை எல்லாம் வெளியே வீச, அது குழந்தை மீது விழுவது போல் வரவும் , மீண்டும் உறங்கியிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு தாமரையின் அறையில் படுக்க வைத்தவன். மீண்டும் அறைக்கு வந்துப் பார்த்தால் , கட்டில் நிறைய கடிதங்கள் அடங்கிய கடித உறைகள்…

ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் வந்தவனிடம் , “போதும் மாமா … போதும்… நான் உங்க தங்கச்சிக்காக இழந்தது எல்லாம் போதும்… அவ படிக்கணும்.. படிக்கணும்னு சொல்லுவா… எங்கே அத்தை ஆசைக்காக எங்கண்ணனுக்கு கட்டி வச்சுடுவாங்களோனு பயந்து… என் கல்யாணம் தான் முதல்ல நடக்கணும்னு பிடிவாதம் பிடிச்சு உங்களை கல்யாணம் பண்ணினேன். காரணம் என்ன தெரியுமா ..தாய் தகப்பனுக்கு சமமானவங்க அண்ணனும் அண்ணியும்னு அம்மா சொன்னதால… நானும் உங்கள கல்யாணம் பண்ணினா அவள அம்மா போல பார்த்துக்கலாம்னு தான்… நான் நினைச்ச மாதிரியே அண்ணனோட தாமரைக்கு உடனே கல்யாணம் பண்ற பேச்சையே அம்மாவ எடுக்கவிடலயே மாமா..” என்றவள் “ஓ” என அந்த இரவு வேளையில் , “அண்ணன் அண்ணன் .. ” .என கதறி அழ , வேகமாக வந்து தில்லையை அணைத்துக் கொண்டவனின் நெஞ்சில் அடித்து ,

“ஆசைப்பட்டு இருக்கான்… உங்க தங்கச்சி மேல ஆசைப்பட்டு இருக்கான்… என்னால தான அவன் கல்யாணம் தள்ளிப்போச்சு… உலகத்துல எதையும் அனுபவிக்காம போய்ட்டானே… சாகற வயசா அவனுக்கு” எனக் கதறியவள் , மீண்டும் ஆதவனைத் தள்ளி விட்டு ,

” எல்லாம்… அவ படிக்கணும்னு தானே. இன்னொனு தெரியுமா மாமா … உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் … இதோ உங்களுக்காக லவ் லெட்டர்லாம் எழுதினேன்… ஆனா எதையும் அனுப்ப மாட்டேன் .. அவ படிச்சு முடிக்கிற வரை என்னோட எந்த ஆசைக்கும் நான் இடம் கொடுக்க கூடாதுனு .. 

நம்ம குழந்தை வயித்துல வந்தப் பிறகு இன்னும் நல்லாப் படிக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா அம்மா தாமரைய ஹாஸ்டல்ல விட்டுட்டு நம்ம வீட்ல இருந்துப் போ.. காலேஜ் ரொம்ப தூரம்னு சென்னாங்க.. அதெப்படி  என் முத குழந்தையா அவள தான மாமா பார்த்தேன். என் நல்லதுக்காக அம்மாவ இழந்து தவிக்கிறவள ஹாஸ்டல்ல விட முடியுமா  ….அதுதான் நான் ஆசை ஆசையா ஆரம்பிச்ச என் படிப்பக் கூட விட்டேன்….ஆனா நீங்க கிரேட் மாமா.. என்னைய நல்லா தெரிஞ்சு வச்சுருக்கிங்க… அவளுக்காக தான் படிப்ப நிறுத்துனியானு … கரெக்டா கேட்டீங்க..” என மறுபடி அவனை வந்து அணைத்துக் கொண்டாள்.

ஆதவன் மிகவும் உடைந்தான்.. அவனுக்காக எழுதிய காதல் கடிதங்களில் அவன் மீது அதிக காதலைக் காண்பித்திருந்தாள். தன்னைக் கட்டிப் பிடித்திருந்தவளை முத்தமிட்டு , ” ஐ லவ் யூ டா .. “ஐ லவ் யூ.. கொஞ்சம் பொறுமையாக கேளு பாப்பா எங்கே இருக்கான்னு சொல்றேன்..” என்றவனை வேகமாகப் பிரிந்தவள் ,

“மாமா.. இப்ப என்ன சென்னீங்க ஐ லவ் யூனு தானே… நானும் நீங்க வெளிநாட்டுல இருந்து வந்ததும் இப்படி கட்டிப் பிடிக்கணும் முத்தம் கொடுக்கனும்னு எல்லாம் ஆசை பட்டேன் .. ஆனா இந்த அம்மாதான் வயசு பிள்ள மனசுல சஞ்சலம் வரக்கூடாது அதனால உடனே அண்ணனுக்கு கட்டி வச்சுரலாம் சொன்னாங்க.. எப்படி மாமா விடுவேன்… அதான் நான் தள்ளியிருந்துட்டுப் போறேன்னு உங்க பக்கத்துலயே வரல… நீங்க மேக்னட் போல.. உங்க பக்கத்துல வந்துட்டா என்னால பிரியவே முடியாது மாமா…”

சிரிக்கிறாள். திடீரென கோபமாகிறாள்… திடீரென அழுகிறாள்… தாமரையைக் குறித்து அவன் மீண்டும் பேசப் போக .. “மாமா மாமா… ஆனாலும் உங்கள சைட் அடிச்சு லவ் பண்ண காலம் ரொம்ப நல்லா இருந்தது மாமா…, “என புன்னகைத்து ஆதவனை முத்தமிட்டு கட்டிக் கொண்டவள் ,

” ஆனா..மாமா அவ எங்கம்மாவப் பெத்துக் கொடுனு சொன்னதும்…” என்றவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு , “மாமா சாரி உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்… உங்களுக்கு அநியாயம் பண்ணிட்டேன்… உங்க ஆசைக்கோ என் ஆசைக்கோ உங்க பக்கத்துல வராம… அவ நமக்கு பெண் குழந்தை வேணுமின்னு ஆசைப்பட்டதால உங்க பக்கத்துல வந்தேன் பாருங்களேன்… ச்சீ… நானெல்லாம் நல்ல பொண்டாட்டியா….” என் தலையிலடித்து அழுதவள் கையைப் பிடித்துக் கொண்டவனிடம்..

“உங்கக் கூட சந்தோஷமா இருக்கும் போது கூட இந்த தடவை கரு தங்குமா.. கருதங்குமானு…. ச்சை நானெல்லாம் மனுஷியே இல்ல.. அப்படியே கருதங்குனப்பவும் அவ ஆசைப்படி பொண்ணு பிறக்குமா பொண்ணு பிறக்குமானு தான் நினைப்பு… எப்போ பாரு அவ அவ அவ அந்த …” என்றவள் தேவகி உபயோகித்த மோசமான வார்த்தைகளை எல்லாம் பொருட்களை எல்லாம் சிதறடித்துக் கொண்டே உதிர்த்தாள்.

மனம் கேட்கவில்லை ஆதவனுக்கு, அப்படியெல்லாம் பேசாதே.. என்ன நடந்தது என சொல்கிறேன் கேள் என்றவன் , நடந்ததை விளக்கினாலும்.. அதை சரியாக புரிந்துப் பேசுகிறாளா என்றுக் கூடத் தெரியவில்லை.

“ஏன் மாமா போனா.. யாரை விரும்பினாலும் என் கிட்ட சொல்ல தோணலல.. நான் தான் லூசு மாதிரி உங்கண்ணன் மேல அவ்வளவு காதல்… அப்படி இப்படினு உங்களப் பத்தி பேசுவேன்.. அவளும் பேசியிருக்கலாம்ல.. யார் எதிர்த்தாலும் நான் அவக் கூட நின்னுருப்பேன்ல… அவ போனதுக்கூட எனக்கு தப்பா தெரியல.. எல்லார் முன்னாடியும் நான் வச்ச நம்பிக்கைய கெடுத்துட்டால்ல… அண்ணிக்காரி அவ சுகத்தப் பார்த்து நாத்தனார விட்டுட்டானு சொல்ல வச்சுட்டாள்ல… எங்க அம்மா சொன்ன மாதிரி அவ நாச… “தேவகி தாமரைக் காணாமல்ல் போன நேரத்திலிருந்து கூறியவைகள் அனைத்தையும் தில்லை மனதில் ஏற்றியிருப்பதை நன்கு உணர முடிந்தது.

கேட்கவே முடியவில்லை ஆதவனால்… தங்கைக்கு சாபம் கொடுத்து புலம்பியவளது வாயை கைக்கொண்டு மூட… தன்னிலையிலயே இல்லாதவள் ஆத்திரத்தில் அவன் உள்ளங்கையை கடிக்க…வலிதாங்காமல் இழுத்துக் கொண்டான்.

இழுத்த வேகத்தில் கட்டிலில் தொப்பென விழுந்தவள் , “மாமா… வாய மூடுறீங்கள்ல.. உங்க தங்கச்சிக்காக என் வாய வேற மாதிரி மூடுற நீங்க… இப்ப இப்படி முடுறீங்கள் ல.. ம்ஹூம் இனி அவளப் பத்தி பேச மாட்டேன்… அவ பேரையே சொல்ல மாட்டேன்.. உங்களுக்கு தங்கைனு ஒருத்தி இருந்ததையே மறந்துட்டேன்..நீங்களும் அவ பெயரைச் சொல்லக் கூடாது..” என்றவளுக்கு கட்டிலில் பிரித்தவாறு அவனுக்கு எழுதிய கடிதம் ஒன்றுக் கண்ணில் பட, அதைப் படித்தவள்,

” இங்க பாருங்க பாப்பா உள்ளே அசையறத தொட்டுப் பார்க்கச் சொல்லி எழுதியிருக்கேன்.. எங்கே உங்க கைய வச்சுப் பாருங்க..” என அவனது இரத்தம் வந்த கையை பிடித்து வயிற்றருகேப் போனவள் , திகைத்த விழிகளுடன் ,

“எங்கே.. எங்கே பாப்பா.. பாப்பா எங்கே… பொண்ணுதான்னு அம்மா சொன்னாங்க ” என்றவள், பற்கள் பதிந்ததால் அவனது கையிலிருந்த வந்த இரத்தம் பார்த்து …. ” ஐயோ.. இரத்தம் … அண்ணண் அண்ணன் மேல இரத்தம்… என் காலடியில இரத்தம் … எங்க எங்க அண்ணன் … எங்க என் பாப்பா..” அறைக் கதவைத் திறந்து அங்கும் இங்கும் ஓடி … ” அண்ணா… நம்ம பொண்ணு.. பெரிய மாமா..” எல்லாம் எங்கே … “

என்றவளைப் பார்த்த ஆதவன், வேறு எங்கும் ஓடாமல் அவளைப் பிடித்துக் கொண்டு துக்கம் தாளாமல் கண்கள் சிவக்க நின்றிருந்தான்.  தில்லையோ அவன் நெஞ்சிலேயே சாய்ந்து உறங்கி இருந்தாளா மயங்கி இருந்தாளா தெரியவில்லை. அவளைத் தூக்கிக் கொண்டு கீழே வந்தவன் , பெரிய சோஃபாவில் படுக்க வைத்துவிட்டு , மகனையும் தூக்கிக் கொண்டு கதவைத் திறக்க , முன்னிருந்த காவலாளி வந்து நின்றார்.

அவரிடம் மகனையும் வண்டி சாவியையும் கொடுத்தவன் , தில்லையையும் தூக்கிக் கொண்டு வரவும் , மதுரை வரை செல்வதாகக் கூறி மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு சென்றான்.

தங்கையைக் குறித்து உலா வரும் செய்தியையே தாங்க முடியவில்லை. இப்போது மனைவி வேறு அவள் இயல்பிலிருந்து வேறுபடுகிறாள்.. உறவினர் மருத்துவமனைக்குச் சென்று அது, வேறு ஏதாவது பெயரை.. அதாவது பைத்தியம் என்ற பெயரை அவளுக்கு கொடுத்து விட்டால்… அவனது உள்ளங்கை வேறு வின் வின் என வலித்தது. அதை விட அவனது இதயம்.. அவன் மனைவிப் பேசிய பேச்சுக்கள் கத்தியால் திருகுவது போல் வலியைக் கொடுத்தது.

Advertisement