Advertisement

அலை 28

                 காவிரியும் வழிமறந்து வேறு திசை நடப்பதில்லை

                 கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை..

               “தந்தி ” என்ற வார்த்தை அக்காலக்கட்டத்தில் படித்தவர் , படிக்காதவர் என யாரையும் பதற்றம் கொள்ளச் செய்து விடும்… தாமரையும் விதிவிலக்கல்லவே… அதற்குள் பூக்காரம்மா கீழே விழுந்த அவளது ஸ்டெதஸ்கோப்பை கையில் எடுத்தவர் , “சாமி பயப்பட ஒன்னுமில்ல. சந்தோசமான விஷயம் தான்… நான் தபால்காரரப் படிச்சுக் காட்ட சொன்னேன்… தம்பி நாளைக்கு சாயங்காலம் இங்க வருதாம்  .. அந்த தகவல்தேன்.. ” என தன் இடுப்பில் இருந்த சுருக்குப்பையில் இருந்த தந்தியை எடுத்துக் கொடுத்தார்.

அதை வாங்கி கண்ணோடு அழுத்திக் கொண்டவளுக்கு கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. உடனேயே தன் நிலைக்கு வந்தவள் , அவருக்கு சாப்பிட , குடிக்க என வாங்கிக் கொடுத்து தான் அனுப்பினாள். ஆனால் நாளை மாலை என்றால்.. ஒரே யோசனையாகிற்று… அந்த நிலையில் ஒரு மனிதர் கையில் சிராய்ப்புடன் வர ..உடனே அதில் கவனம் செலுத்தினாள். அப்போதுதான் தாமரை ஒன்றை கவனிக்க நேர்ந்தது. இதே மனிதன் இந்த எட்டு நாட்களில் மூன்றாவது முறையாக அவளிடம் சிகிச்சைக்கு வருகிறான். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்டதாக வந்து சிகிச்சைப் பெற்று சென்றிருந்தான். ஆரம்பத்தில் வயிற்று வலி என்று ஒரு முறை வந்திருந்தான்.

அவனது கால்களை ஆராய அந்த கட்டு இருந்தது. தலை நிறைய முடி… கூடவே மீசை தாடி என கண்கள் மட்டுமே தெரியக்கூடியதாக இருந்தது. உடல் நல்ல திடகாத்திரமாக தான் இருந்தான். அப்படிப்பட்டவனுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் , கூடவே அதிக ஜன நெருக்கடி மிகுந்த, நிலையாக யாரும் தங்கியிராத இரயில் நிலையத்திலேயேவா அடிபடும்.. விஜயலெட்சுமிக்கும் இந்த சந்தேகம் வரப் போய் இந்த கருத்துக்களை எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

கூடவே , “தாமரை இவனப் பார்த்தா பேஷன்ட் மாதிரி இல்ல.. நம்மள நோட்டம் விடுறானோ … நானாவது ஒரு பவுன் செயின் , அரை பவுன் கம்மல் னு போட்டு இருக்கேன் , நீ சிம்பிளா போட்டுருக்கேன்ற பேர்ல வைரக் கம்மல் , வைர டாலர் னு போட்டுருக்கடி … செக்யூரிட்டி எவ்வளவு இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் கவனம் டி”

“சரி, என தலையாட்டிக் கொண்டவள் ஆதவனின் காரைக் கண்டதும் விஜயலெட்சுமியையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தாள். நாளை மாலை இருவரும் முகாமிற்கு திரும்ப வருவதாக இருந்தது. வீடு நிறைய உறவினர் கூட்டம் ,தில்லையைச் சுற்றியும் உறவுப்பெண்களாக அமர்ந்திருக்க, அவளது மருமகன் தான் அத்தையைக் கண்டதும் துள்ளிக் கொண்டு ஓடி வந்தான்.விஜயலெட்சுமியை அழைத்து வந்தக் காரணத்தால் தாமரை அவளையும் அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்று விட்டாள்.

“என்னடி அத்தை மடி மெத்தையடி னு இருக்கான் உன் மருமகன்.. சரி எங்கடி அந்த பட்டர்ஃபிளை ஹீரோ , நாளைக்கு முதல் மரியாதை அவங்களுக்குத் தானே… ” என தேவாவைக் கேட்டாள்.

“அத்தானா.. அவங்க எல்லாம் நாளைக்கு காலைல தான் டி வருவாங்க … தாய்மாமா மடில தான காது குத்துவாங்க… பெரிய படையே திரட்டிட்டு வருவாங்க… ” என புன்னகைத்தாள்.

“ஹேய் உன் அத்தானுக்கு பொண்ணுப் பார்க்குறப்ப என்னையும் நியாபகத்துல வைக்க சொல்லுடி உன் மைனிய … ” எனக் குறும்புடன் கூறிக் கொண்டிருந்தாள் விஜயலெட்சுமி. முன்பே தேவாவை உனக்குப் மணமகனாகப் பார்ப்பார்களா என்று கேட்டு வைத்ததற்கு ,

” அத்தான்னு முறை சொல்லிக் கூப்பிடுகிறேனே ஒழிய அவர் எனக்கு அப்பா அண்ணனுக்கு சமம் லெட்சுமி… எங்கம்மா இறந்தப்பவோவும் சரி , எங்கண்ணன் படிக்கப் போனப்பவும் சரி அவ்வளவு நல்லா கவனிச்சுக்கிட்டாங்க.. அப்படி பேச்சு வராது வந்தா நான் சொல்றத தான் எங்க வீட்ல கேப்பாங்க.” என்று நம்பிக்கையோடு கூறியிருந்தாள்.அதனைக் கொண்டே தேவாவை அவ்வப்போது இப்படி கேலி செய்துப் பேசிக் கொள்வாள் விஜயலட்சுமி.

இதோ விடிந்தும் விட்டது.. இரவு முழுவதும் தாமரையுடன் தான் இருந்தக் குழந்தையை மறுநாள் விழாவுக்கும் தயார்படுத்தினாள். அருகிலிருக்கும் அவர்களது குலதெய்வக் கோவிலில் தான் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துகிறார்கள் என்பதால் அனைவரும் அங்கு குழுமியிருந்தனர்.

ஆதவனும் தில்லையும் அழகாக தயாராகி வந்திருந்தார்கள். தாமரையும் புது பட்டுச்சேலையுடன் அழகாக வலம் வந்தாள்.

தேவராஜன் நினைத்தது போலவே தங்கை மகனுக்கு சீர்பொருட்களை வண்டி வண்டியாக தான் இறக்கினான். ஊர் எல்லையில் துவங்கிய ஊர்வலம் கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த பந்தல் வரவே அரை மணி நேரம் எடுத்துக் கொண்டது.தாமரையும் தில்லையும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். காரணம் ஐந்து அலங்கரிக்கப்பட்ட யானைகளிலும் சீர்பொருட்களைக் கொண்டு வந்துக் கொண்டிருந்தான்.

குழந்தையை மடியில் வைத்து அனைத்து வைபவங்களும் இனிதே முடிந்து தேவா கொண்டு வந்த கிடாக்கள் எல்லாம் மதிய விருந்துக்கு தயாராகிக் கொண்டிருந்தது.தாமரை மருமகனுக்கு சாப்பாடு தர , விளையாட என அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மாலை விஜயை சந்திக்கப் போகிறோம் என்பதிலேயே இருந்தது.

அருணாச்சலம் ஏதோ பதற்றத்திலேயே இருந்தவர் , மகனை அங்கு கவனிக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்ப , தாமரையும் நாங்களும் வருகிறோம் என்றவள் தில்லையிடம்  வந்தாள் ,

“திலோ உடம்ப கவனிச்சுக்கோடி … லெட்சுமி உடனே கிளம்பணும் சொல்றா.. வீட்ல போய் அவ பைய எடுத்துட்டு கிளம்பட்டும்… முடிஞ்சா சீக்கிரமா நானும் கிளம்பணும்..” என்றதும் தில்லை ,

“ஏய் நீ கிளம்பிராதடி.. நாங்க வர்ற வரை வெய்ட் பண்ணு முக்கியமான வேலையிருக்கு” என்று விட , மனச்சுணக்கத்தோடு தலையாட்டிச் சென்றாள். குழந்தையும் அவளுடன் வர அழ… இன்றைய விழா நாயகனே அவன் தான் என்பதாலும் அவனைக் காண இன்னும் வந்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதாலும் விட்டுச் சென்றாள்.

வீட்டிற்கு வந்தால் அருணாச்சலம் வேறுபுறம் செல்ல வேண்டி இருப்பதாகக் கூறி மணியிடம் விஜயலெட்சுமியைக் கொண்டு விடும் பொறுப்பை ஒப்படைத்தார். அணிந்திருந்த தங்க அணிகலன்களில் தேவையானவற்றை மட்டும் அணிந்துக் கொண்டு மற்றவற்றை கழற்றிப் பத்திரமாக வைத்தவளுக்கு அங்கு இருக்க முடியவில்லை. விஜயைக் காண வேண்டும் என்ற ஆவல் தாமரையைக் கிளம்ப வைத்தது.

அதிகாலை தில்லை உறங்கிக் கொண்டிருந்தாலோ அல்லது அவளிடம் ஏதேனும் தகவல் தந்துவிட்டு படிக்க வேண்டும் என்றாலோ ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டுச் செல்லும் வழக்கம் இருந்ததால் , “என்னைய மன்னிச்சுரு அண்ணி ” என எழுதி வைத்துவிட்டு விஜயலெட்சுமியோடு கிளம்பி விட்டாள்.

இந்த ‘அண்ணி’ என்ற வார்த்தை அவர்களுக்குள் விளையாட்டாக வரக்கூடியது.. இன்று அவள் பேச்சைக் கேட்காமல் கிளம்புகிறோமே என்ற குற்றயுணர்வில் தில்லையின் கோபத்தைக் குறைக்கும் பொருட்டு இந்த ‘அண்ணி’யை உபயோகப்படுத்தினாள்.

“நீயும் ட்ரஸ் மாத்தி இருக்கலாமே தாமரை.. இந்த வெயிலுக்குள்ள பட்டு .. யம்மாடி.. எப்படா மாத்துவோம்னு ஆகிருச்சு..” என செல்லும் வழியில் சொன்ன விஜயலட்சுமியிடம் , விஜயைப் பார்க்கும் ஆவலில் இந்த உடையை உடுத்தி இருப்பதை எப்படிக் கூற முடியும். எனவே , ” நேரமாகிரும் டி.. நைட் ஹாஸ்டல்ல மாத்திக்கிறேன்” என்று விட்டாள்.

நேரமும் சென்றுக் கொண்டிருந்தது… எப்போதடா மாலை வரும் , விஜய் எப்போது வருவான் என காத்திருக்கத் துவங்கினாள் தாமரை. விஜய் கண்ணில் தென்படுகிறானா என முகாம் பந்தலுக்கு வெளியே வந்து பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தவளிடம் ஒரு வயதான பெண்மணி ,

“அம்மா அம்மா என் பொண்ணுக்கு பிரசவ வலி வந்து அங்க உட்கார்ந்து இருக்கா வந்து பாருங்கம்மா …” என்றதும் விஜயை மறந்து கடமையாற்ற கிளம்பியவள் உள்ளே இருந்தவர்களிடம் , விவரம் தெரிவித்து கூட இரு நர்சுகளை அழைத்தாள். அவர்கள் வருகிறார்களா என்று பார்பதற்குள் அந்தப் பெண்மணி வேகமாக அவளது கைப் பிடித்து கூட்டத்தினுள் இழுத்துச் சென்று விட்டார்.

அதற்குள் கோவிலில் வேலைகளை முடித்துவிட்டு முக்கிய உறவினர்கள் எல்லாம் வீடு திரும்ப ,அங்கு தாமரை இல்லை என்றதும் தேவகி புலம்ப ஆரம்பித்து இருந்தார். குழந்தையை தொட்டிலில் இடுகையில் அதில் இருந்த காகிதத்தைப் பார்த்த தில்லைக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது. தேவகியிடமும் ,

”ம்மா அவ கிட்ட இன்னைக்கு பரிசம் போடுறதப் பத்தி சொல்லவே இல்ல… அதனால அவளுக்குத் தெரியாது.. ஏழு மணிக்குத் தானே …நான் அவங்க அண்ணன விட்டு கூட்டிட்டு வரச் சொல்றேன்…” என சமாளித்தாள். ஆனால் மாலைவரை ஆதவனையும் காண முடியவில்லை அருணாச்சலத்தையும் காண முடியவில்லை.

அவர்கள் வீடு வர மாலை ஆகவும் , தில்லை அவனிடம் தாமரையை அழைத்து வரக் கூறினாள். தந்தையின் முகம் பார்த்தவன் உடனே வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்ப இருக்க… கூட்டத்தில் ஒருவர் ஏதோ சொல்ல… அங்கு உறவினர்களுக்குள் ஒரே சலசலப்பு.. அதற்குள் சத்தமாக ஒரு மூத்தஉறவினர் ,

“என்ன அருணாச்சலம் ..பொண்ணு ஓடி போய்ட்டானு சொல்றாய்ங்க..” என்றதும் ஆதவன்” பெரியப்பா ” என கோபத்தில் கத்தி விட்டான். கூட்டத்தினரின் பேச்சு செல்லும் திசை பயத்தைக் கொடுக்க, தில்லை ,

” இல்லங்க மாமா ,, மெடிக்கல் கேம்ப் க்கு தான் போயிருக்கா.. இதோ இப்ப வந்துருவா…” என வார்த்தைகள் நடுங்க கூற.. கூட்டத்தில் சலசலப்பு அதிகமாக அருணாச்சலம் வியர்க்க விறு விறுக்க நெஞ்சைப் பிடித்து விட்டார். பதறிய ஆதவன் தேவா என அனைவரும் அருணாச்சலத்தைக் காரில் ஏற்ற ஆதவனும் சில உறவினர்களும் மருத்துவமனைக் கொண்டு சென்றனர்.

தில்லையால் நடப்பதைப் பார்க்க கேட்க முடியவில்லை .. தேவகி வேறு அழுது புலம்பியவாறு குழந்தையையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனை செல்ல தில்லையின் கையைப் பிடித்தார். அப்போது சொக்கலிங்கத்தின் மூத்த சகோதரி முறையில் இருந்த ஒருவர் ,

“சொக்கா… என் கொழுந்தன் மகளக் கட்டுனு சொன்னதுக்கு என் மகளைக் கொடுத்த இடத்துல தான் மகனுக்கும் பொண்ண எடுக்கனும்னு சொன்ன .. இப்ப என்னாச்சு. அது எவன் கூடயோ ஓடிப் போயிருச்சு… நான் சொன்னா கேட்டாத்தான.. டாக்டரு பொண்ணு டாக்டரு பொண்ணுனு தம்பட்டம் அடிச்ச… “

சொக்கலிங்கம் ஏற்கனவே நடப்பதைக் கண்டு ஒரு வித கோபத்தில் இருந்தார் என்றால் அந்த பெண்மணி சொன்னது கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. இப்படியே உறவுகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள அது முற்றி  தேவா வயதையுடைய சில இளைஞர்கள் ,

“என்ன.. சகல .. மாமன் பொண்ணு தங்கச்சி நாத்தனாருனு சொல்லிட்டு இருந்த … என்ன ஆச்சு ஏன் உன்னை விட்டுட்டு வேற எவன் கூடயோ போயிருக்கான்னா… நீ .. ஆம்பிளை இல்லையா…” கேட்டவன் இரண்டடி தூரப் போய் விழுந்தான். கடைசியில் கைகலப்பு ஆக… தில்லை பேச்சிழந்து நிற்கும் போதே , தேவராஜன் கோபத்துடன் வண்டியை எடுக்க ,

தேவகி ” ராஜா.. ராஜா.. ” என மகன் பின்னாலயே ஓடினார். அவனோ யாரையும் கண்டுகொள்ளாமல் வண்டியை புழுதிப் பறக்க வேகமாக ஓட்டிக் கொண்டு கிளம்பினான். அவன் மனதில் தாமரையைக் குறித்து எந்த தப்பான எண்ணங்களும் வரவில்லை. ஆனால் அவள் ஏன் இன்றைய தினம் சென்றாள். ஒரு வேளை என்னைத் திருணம் செய்துக்கொள்ள பிடிக்கவில்லையோ.. நிச்சியம் காரணம் தெரிந்தே ஆக வேண்டும் .. அவர்கள் பேசிய பேச்செல்லாம் மண்டைக்குள் சடுகுடு ஆட.. வண்டி அவன் கையில் பறந்தது.

 தில்லை என்ன நடக்கிறது எனப் புரியாமல் நிற்கும் போதே அவளை கைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஒரு வாகனத்தில் அருணாச்சலம் சேர்க்கப்பட்ட  மருத்துவமனைக்கு அழுது புலம்பிக் கொண்டே சென்றார் தேவகி .

“நான் சொன்னேனே.. வயசு பிள்ளைய வீட்டுல ரொம்ப நாளைக்கு வச்சுக்கக் கூடாதுனு சொன்னேனே கேட்டியா… படிக்கா படிக்கானு தள்ளிப் போட்டு இப்ப என்ன ஆச்சுப் பார்த்தியா… அண்ணன் பொண்டாட்டி என்ன பார்த்தானு கேள்வி வந்துருச்சு… பத்தாததுக்கு பத்தாததுக்கு என் பிள்ளைய.. காது கூசுற பேச்செல்லாம் கேட்க வேண்டிருக்கே… “

தேவகி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் முள் குத்தும் உணர்வை தில்லைக்கு கொடுத்தது என்றால் அவளின் ஐந்து மாத வயிறும் ‘சுருக்… சுருக்..” எனத் தைத்தது .. ஆனால் உணர முடியாத அளவு மூளையும் மரத்துப் போயிருந்தது.

இப்படி குடும்பத்தில் ஆளுக்கொருப் பக்கம் மனம் துடித்துக் கொண்டிருக்க.. சொக்கலிங்கம் தனது கூடவே இருக்கும் விசுவாசிகளிடம் அங்கிருந்த தாமரையின் புகைப்படத்தை சுவற்றில் இருந்து எடுத்து வீசியவர் ,

“என் பிள்ளை வேண்டாம்னு சொன்னவள போட்டுத் தள்ளுங்கடா… அவளும் இருக்க கூடாது.. எவன நம்பி போனாளோ அவனும் இருக்கக் கூடாது.” என்றவர் தன் கையில் எப்போதும் வைத்திருக்கும் ஒரு ஜிப் வைத்த பையைத் திறந்து பணத்தைக் கொட்டினார்.

அன்னியானவள் அன்பை வளர்த்ததும் தீமையானதே…

இதில் யாரைக் குறை சொல்வது… விதிதானே பிழை செய்தது.

இது தேவனின் நாடகம் வேறேது காரணம்..

Advertisement