அலை 27

                பயிற்சி மருத்துவராக , மருத்துவ கல்லூரி மாணவியாக தாமரையின் கல்லூரியின் இறுதி வருட நாட்கள் … விஜயின் வருகையை அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நேரம் , ஒரு எமர்ஜென்ஸி கேஸ் என தலைமை மருத்துவர் செல்லவும் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் அவரது பின்னால் சென்றனர்.

தாமரையை விட சிறிய பெண்ணாக தெரிந்த ஒரு பெண்ணின் பின்னந்தலையில் அடியோடு கையும் உடைபட்டு பார்க்கவே மனதுக்கு கஷ்டமாக தான் இருந்தது. எப்படியோ அவள் உயிர் காப்பாற்றப்பட்டது , வெளிக் காயங்கள் ஆறினாலும் இனி அவள் உயிரோடு இருப்பாள் மற்றபடி பேச, நடக்க முடியுமா என்பது சந்தேகமே.. விஜயலெட்சுமி கூடவே வந்தவள்,

“பெத்தவங்க தான் முக்கியம்னு காதலுக்கு மரியாதை படம் போல வீட்டுக்கு போயிருக்கலாம் டி… இப்ப பாரு என்றவள் , தான் அறிந்துக் கொண்ட விவரங்களைப் பகிர்ந்தாள். அந்தப் பெண் வேறு இனத்தைத் சேர்ந்த இளைஞனை விரும்பி அவனோடு சென்றிருக்கிறாள்.அவர்களைத் தேடி வீட்டிற்கு அந்தப் பெண்ணை மட்டும் அழைத்து வந்திருக்கிறார்கள். அந்த இளைஞனைக் குறித்து தகவல் இல்லை என்பதாகக் கூறிக் கொண்டிருந்தாள்.

இவர்கள் சற்றுத் தள்ளி இருந்துப் பேசிக் கொண்டிருக்க தொலைவில் அவளது தந்தை சில வெள்ளை வேட்டி சட்டை அணிந்த அரசியல் பிரமுகர்கள் நிற்கும் கூட்டத்தினிடையே நிற்பதைக் கண்டாள். அவரைக் கண்டதும் விஜயலெட்சுமியிடம் சொல்லிக் கொண்டு அங்கு சென்ற தாமரையின் காதில் ,

“செங்கச் சூளை , ஆளில்லாத ரெயில்வே கேட் எத்தனையோ இருக்கு … எனக்கு என் குடும்ப கெளரவம் முக்கியம்ணே… ” என அந்த பெண்ணை சேர்த்திருந்த உறவினர்களில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். மேலும் அவர்கள் என்ன பேசப்போனார்களோ, தாமரை ‘அப்பா’ என்றதும் திரும்பியவர் , அனைவரின் பார்வையும் தாமரையின் மீது விழுவதைக் கண்டு உடனே அவர்களிடம் சொல்லிக் கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

மறுநாள் அதிகாலையே சில கட்சி ஆட்கள் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். பக்கத்திலேயே அவர்களை சந்திப்பதற்கு ஒரு அறை கட்டியிருப்பார். அங்கு தான் அவர்களை சந்திப்பார். இன்று அதிகாலையே வந்திருக்க , எப்போதும் அவரிடம் கூறிவிட்டுச் செல்லுபவளால் இன்று முடியவில்லை என்றதும் உடனே கிளம்பி விட்டாள். மதுரைக்கு போகும் வழியாவும் சாலை மறியல்களும் , போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அடிக்கடி மதுரை மாநகரில் நடப்பதுதான் என்பதால் தாமரை சாதாரணமாக தான் கடந்து சென்றாள். ஆனால் விஜயலெட்சுமியோ…”ஹேய் இந்தப் பொண்ணுஉங்க ஊர் பக்கம் தான் போல … அந்த பையன் என்ன ஆனான்னு தெரியலனு சொன்னேன்ல.. இப்ப அந்த பையன் நைட் தண்டவாளத்துல தலையக் கொடுத்துட்டான்னு சொல்றாங்கடி .. காரணம் காதலியை பிரித்ததால் தற்கொலைனு… என்ன உலகம்டி இது … இத்தனைக்கும் அந்த பையனோட அம்மா அவுக ஜாதி ,அப்பா தான் வேற ஜாதி .. அப்படி கல்யாணம் பண்ணது கேவலமாம்… பாவம்டி அநியாயமா ஒரு சின்ன பையன கொன்னுட்டாங்க… அந்த பொண்ணப் பாரு இனி உயிர் இருந்தும் ஜடம் தான் … சினிமால மட்டும் விஜயும் ஷாலினியும் சேரணும்.. நிஜத்துல இந்த கதை தான் … இது கம்ப்யூட்டர் காலம்னு  சொல்றாங்க.. சில வருஷத்துல அடுத்த நூற்றாண்டே பிறக்கப்போகுது.. ப்ச்எவ்வளவு மாறுனாலும் இந்த ஜாதியும் மதமும் மாறப்போறது இல்ல… காதலுக்கு மரியாதை பண்ணி காதல் கோட்டை கட்டுறது எல்லாம் சினிமால மட்டும் தான். ” என அப்போது பிரபலமான திரைப்படம் குறித்துப் பேசினாள்.

அச்சமயம் அப்படம் இளைஞர்களிடமும் அவர்கள் பெற்றோரிடமும் நிறைய தாக்கத்தையும் கேள்விகளையும் எழுப்பியது… இப்போது தாமரையின் மனதிலும் , “அப்போ விஜயும் நானும் சேர முடியாதா…” என்ற கேள்வியை எழுப்பி அவளை மனக்குழப்பத்தில் ஆழ்த்தியது. விஜயின் குடும்ப பின்னனியும் அறிந்திருந்தவள் தானே.. அவன் தந்தை உறவினர் என்றாலும் தாய் வேற்றினத்தவர் என்பதால் தானே விஜய் உறவுகள் இல்லாமல் வளர்ந்தான். இப்படி பலவாறாக சிந்தனைகள் செல்ல இருந்த கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியும் காணாமல் போனது தாமரைக்கு.

அந்த இளைஞனின் மரணம் தமிழ்நாட்டில் தலைப்புச் செய்தியாக … அந்த வழக்கில் பெண் வீட்டு உறவினர்கள் சார்பாக அருணாச்சலம் , சொக்கலிங்கம் என கட்சியினரோடு அதிக நேரம் செலவழித்துக் கொண்டிருந்தனர்.

சித்திரை திருவிழாவோடு காது குத்து வைபவமும் நெருங்க , வீட்டிற்கு உறவினர்கள் வந்துப் போக என எப்போதும் ஆட்கள் இருந்த வண்ணம் இருக்க, தில்லையும் உடல் சோர்வில் அதிக ஓய்வெடுக்க ஆரம்பிக்கவும் தோழியின் முகவாட்டத்தை கவனிக்காமல் விட்டு விட்டாள். இந்நிலையில் தாமரைக்கு திருவிழா நடைபெறும் பனிரெண்டு நாட்களும் இரவு பகலாக இருபத்து நான்கு மணி நேரமும் மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்கான சிறப்பு மருத்துவ முகாம்களில் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது. கூடவே விஜயலெட்சுமி ,

” தாமரை திருவிழா முடிஞ்சதும் நான் ஊருக்கு கிளம்பணும்டி.. அதனால நாம இரயில்வே ஸ்டேஷன் கேம்ப்ல ஜாய்ன் பண்ணிக்கலாம். பையத் தூக்கிட்டு அலைய வேண்டாம் பாரு…” என்றதும் தாமரையும் அதற்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டாள். இருபத்து நான்கு மணி நேரமும் என்பதால் இரவு பணி வருகையில் விஜயலட்சுமியோடு தங்கிக் கொள்வாள்.பகல் என்றால் மாலை பணி முடிந்து வீட்டிற்கு செல்லலாம் என எண்ணினாள்.

முகாம் நடைபெறும் இடத்தை விஜயிற்கு தெரிவிக்க விரும்பியவள் அவனது தொலைப்பேசி அழைப்புக்காகக் காத்திருக்க துவங்கினாள். அவன் கிளம்பும் முன் அழைப்பதாகச் சொன்ன நாளுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தது. சரியாக அன்று அழைத்தும் விட்டான்.. இம்முறை அதிக நேரம் அழுகை… “உன் கழுத்துல போட தாலியோட தான் வாரேன் … அழுதா எனக்கு கஷ்டமா இருக்கும் … நான் ஊருக்குக் கூட போகல.. ஹோட்டல் ரூம்ல திங்க்ஸ் வச்சுட்டு உன்னையப் பார்த்துட்டுத்தான் அடுத்த வேலை.” இப்படி ஏகப்பட்ட சமாதானங்களுக்கு பின் ,

வழக்கம் போல் பூக்கார அம்மாவிடம் சொல்வது போல் விஜயிற்கு தான் பங்கு பெறும் மருத்துவ முகாம் நடைபெறும் இடத்தை தெரிவித்தாள். நாட்களும் சென்றது மதுரையில் திருவிழாவும் துவங்கியது. ஒரு கட்டத்தில் தெருவில்நடக்க இடம் கூட இல்லாத அளவு கூட்டம். தினமும் வீட்டிற்கு வந்து செல்ல முடியாததால் திருவிழா முடியும் வரை விஜயலெட்சுமியுடன் விடுதியிலயே தங்கிக் கொண்டாள். காது குத்து வைபவத்திற்கு முந்தின இரவு பணியில் இருந்து விட்டு அதிகாலையில் அண்ணனோடு வருகிறேன் என்று விட்டவளுக்கு மருமகனையும் , தில்லையையும் பார்க்காமல் ஒரு வாரம் இருக்க வேண்டுமே என்றிருந்தது.

ஏனெனில் திருவிழாவின் ஒன்பதாம் நாள் தான் காது குத்தும் நிகழ்ச்சி . “பாக்யம் நீங்க சின்னக்குட்டி பின்னாலயே ஓடி தான் ஆகணும்… செண்பாக்கா திலோவ பத்திரமா பார்த்துக்கோங்க…வயித்துல எங்கம்மா வேற அவளுக்கு நிறைய வேலையக் கொடுக்கிறாங்க.. பார்த்துக்கோங்க அக்கா.திலோ தினமும் டைம் கிடைக்கிறப்ப பேசுறேன் டி …… பாக்யம் , செண்பாக்கா உங்களை நம்பி தான் இவங்களை விட்டுட்டு கேம்ப் க்கு போறேன்.. கவனிச்சுக்கோங்க….” என்றவள் , “அத்த .. அத்த…” என அவள் கழுத்தைக் கட்டிக் கொண்ட மருமகனை முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்.

தில்லையும் ஆயிரம் பத்திரங்களை தோழிக்கு கூறி அவள் ஆதவனோடு சென்ற வாகனம் கண்களை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தாள். 

செண்பகா பாக்யத்திடம் , “இதுக்கே இப்படி அழுதுட்டுப் போகுது செல்வி பாப்பா… புருஷன் வீட்டுக்கு போகறப்போ எப்படி கிளம்பப் போகுதோ..” என புலம்பிக் கொள்ள ,

பாக்யத்தின் நினைவில் பல வருடங்களுக்கு முன்பு தான் கண்ட காட்சி தான் கண் முன் வந்தது.. ஆனால் அது பொய்யோ என்பது போல் தான் இத்தனை வருடங்களாக தாமரை இருந்தாள். தில்லையோ ,

“நல்ல வேளை எங்கண்ணன தான் கட்டப்போற .. உன்னைய வேற எங்கேயோ கல்யாணம் பண்ணிக் கொடுத்தா என்னால நிம்மதியாவே இருக்க முடியாது டி.. வா வா .. நீ வரும் போது உனக்கு சர்பிரைஸ் காத்திருக்கு.”

காது குத்தும் வைபவத்தன்று மாலை பெரியவர்கள் திருமணத்தை உறுதி செய்யும் போது தாமரைக்கு இனிய அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என அந்த நிகழ்வைக் குறித்து தில்லை இது நாள் வரைப் பேசவே இல்லை.

ஒரு வாரமும் வேகமாக ஓடிற்று.. அன்று இரவு ஆதவன் அழைத்துச் செல்ல வர இருக்கிறான். நாளை காலை காது குத்து நிகழ்ச்சிக்காக பகல் அல்லாது இரவுப் பணியை வாங்கியிருந்தாள். எனவே பைகளை எல்லாம் தயாராக வைத்திருந்தாள். அதோடு பயிற்சியின்போது கிடைத்த பணத்தில் தன் மருமகனுக்காக பரிசுப்பொருள்கள் எல்லாம் வாங்கியிருக்க , எடுத்துச் செல்ல நிறைய இருந்தது அவளுக்கு. 

இவ்வாறு பணியில் இருக்கையில்  மாலையில் திருவிழா கூட்டத்தில் கீழே விழுந்த ஒரு வயதான அம்மாவின் காலில் அடிப்பட்டிருக்க அவருக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தாமரை ஈடுபட்டிருந்தாள். எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். அவர்களது உதவியாளர் ஒருவர் தாமரையைக் காண ஒரு பெண்மணி வந்திருப்பதாகக் கூற மறைவான பகுதியிலிருந்து வெளியே வந்துப் பார்த்தவளுக்கு பல வித எண்ணங்கள் நொடியில் ஓட வேகமாகச் சென்று வந்திருந்த பூக்கார அம்மாவிடம் , பதற்றத்துடன் ..

“என்னம்மா இவ்வளவு தூரம்…” அவரின் பதிலுக்காக பதற்றத்துடன் காத்திருக்க , அவரும் அவள் பதற்றத்தை அதிகரிக்கும் வண்ணம் ,

“சாமி … உனக்கு தந்தி வந்திருக்கு… “, “தந்தி…” என்ற ஒற்றை வார்த்தையில் அவள் கையிலிருந்த ஸ்டெதஸ்கோப் கீழே விழுந்தது.

பனியாக உருகி நதியாக மாறி

அலை வீசி விளையாடி இருந்தேன்

தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து

உயிர்க் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்…