Advertisement

அலை 21 (2)

                    உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்

                    இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?

          தில்லை  எப்போதும்  ஆதவன் நினைவிலேயே தான் இருப்பதைக் கொண்டு அல்வாறு கூறியிருக்க … ஆதவனோ தில்லைக்கு தன் மேல் கோபம் இல்லையென்றாலும், வருத்தம் இருக்குமோ.. அப்படியோ.. இப்படியோ.. தலையை பிய்த்துக் கொள்ளாத குறைதான்… இறுதியில் குழந்தை உண்டான காரணத்தால் கல்லூரிக்குச் செல்ல முடியாததை தான் இல்வாறு கூறுகிறாள் என்பது போல் நினைத்துக் கொண்டான்.

இரவு பகல் வித்தியாசத்தில் சரியான உறக்கமின்றி அங்கும் இங்குமாக புரண்டவனின் அசைவு உறங்கும் தில்லைக்கு தொந்திரவைத் தர.. அவளது அசைவு உணர்ந்து அமைதியாக விழிகளை மூடிக் கொண்டவன் சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான்.

அவன் விழிக்கும் போது மாலை இருள் சூழத் துவங்கியது. எழுந்து கீழே வந்தவன் தங்கையுடன் தில்லை அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அருகில் வர, எழுந்து சென்ற தில்லை ஆதவனுக்கு தன் கையாலயே தயாரித்த தேநீரும் பலகாரங்களும் கொடுத்து விட்டு ,தாமரை எங்கெல்லாம் செல்கிறாளோ அவள் பின்னோடு தான் சென்றுக் கொண்டிருந்தாள்.

மொத்தத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையை கவனிப்பதை விட பல மடங்கு அதிகமாக தாமரையை கவனிப்பதில் தான் அதிக நேரம் செலவிட்டாள்.

அருணாச்சலம் வந்ததும் சிறிது நேரம் உரையாடிவிட்டு , அனைவரும் அமர்ந்து இரவு உணவும் உண்ட பின், ஆதவனுக்கும் தில்லைக்கும் தனிமைக் கொடுத்து அனைவரும் அவரவர் அறைக்குச் செல்ல , தில்லை ஆதவனிடம் ,

“மாமா காயு பெரியம்மா தினமும் நைட் கொஞ்ச நேரம் நடந்துட்டு படுக்க சொல்லியிருக்காங்க… செல்வியப் பாருங்களேன் நீங்க வந்ததும் கூட நடக்க வராம போய்ட்டா…” என புன்னகையோடு குறை கூறினாள்.தாமரை ஏன் நடக்க வரவில்லை என்பது இருவருக்குமே புரிந்து இருக்கவே இந்த புன்னகை.

பதிலுக்கு புன்னகைத்த ஆதவனும் , “வா நாம ரெண்டு பேரும் நடந்துட்டு வரலாம்” என்றவாறு முன் தோட்டத்திற்கு வந்து நடக்க ஆரம்பித்தார்கள். “அப்பா பாப்பாவுக்கும் ,தேவாவுக்குமான கல்யாணத்தைப் பேசினார். ” என்றதும் அப்படியே நின்று அவனை நோக்கித் திரும்பியவளின் முகம் பார்த்தே அவள் பதற்றத்தை புரிந்துக் கொண்டவன் ,

” படிச்சு முடிக்கட்டும்.. அது வரை எதுவும் பேச வேண்டாம்.முக்கியமா பாப்பா காதுக்கு இப்படி ஒரு பேச்சு நடக்கிறதே இப்போதைக்கு தெரிய வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என்றதும் புன்னகை முகமாக,

“இப்ப தான் நிம்மதியா இருக்கு மாமா..அம்மாகிட்ட நான் சொன்னா கேட்கிறதேயில்ல.. நீங்க சொன்னதுனால இனி அதைப் பத்தி பேச மாட்டாங்க.” என்றவளின் முகமலர்ச்சியை  கவனித்தவனுக்கு சட்டென தில்லையுடனான அன்றைய இரவு நியாபகத்தில் வந்தது. உடனேயே

“திலோ .. நீ. நீ.. விரும்பின கோர்ஸ் படிக்காததற்கு நீங்களும் ஒரு காரணம்னு சொன்ன … அப்படினா இன்னொரு காரணம் செல்வியா.. அவளுக்காக தான் கல்யாணம்னு சொன்னது.. நானும் ஒரு காரணம்னு சொன்னதெல்லாம் வச்சுப் பார்க்கிறப்போ.. அவ நல்லதுக்காகனு ஏதாவது காரணம் வச்சுருக்கியா”

தன் மனதிலுள்ளதை அப்படியே சொன்ன ஆதவனை கட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தில்லைக்கு இப்போது எழுந்தது… அந்த கண்கள் மலர்ந்து விரியவும் … உண்மை தானோ என்ற சந்தேகம் ஆதவனுக்கு எழுந்தது. அவள் தோள்களைப் பிடித்தவன் பதற்றத்துடன்,

“திலோ அப்படியெல்லாம் இருந்தா சொல்லிடு … நான் பார்த்துக்குவேன் … நாம மதுரையில இருக்கிற வீட்டுக்கு கூட போயிடலாம்… நான் அங்க காலேஜ்ல பேசுறேன்.. நாங்க ஆம்பிள்ளைங்க எவ்வளவு தூரம்னாலும் சமாளிச்சுக்குவோம்…” என்றவனின்

பார்வையின் வீச்சைத் தில்லையால் தாள இயலவில்லை. அந்த கண்களுக்குள் தான் விழுவதால் தான் உண்மைக் கூறிவிட்டால்… கூடவே அவனின் அன்பில் அக்கறையில் அழுது விடுவேனோ எனப் பயந்தவள் வேறுபுறம் பார்த்துக் கொண்டே ,

“மாமா… நான் படிக்காம போறதுக்கு செல்வி எப்படி காரணமாவா… உங்க தங்கச்சி என்னைய அப்படி விட்டுருவாளா .. அதெல்லாம் லேடிஸ் மேட்டர்.. உங்க கிட்ட எப்ப சொல்லணும்னு தோணுதோ அப்ப சொல்வேன்… நான் படிக்க தானே செய்யறேன்.. ஏன் லிட்டரேச்சர் படிச்சா உங்களுக்கு பிடிக்காதா… இனி படிப்ப பத்தி பேசுனீங்க எந்த டிகிரியும் வேண்டாம்னு இருந்துடுவேன் ஆமா… ” என கோபம் போல் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள… ஆதவன் ,

“ஐயோ… அப்படியில்ல… சரி நான் இனி படிப்பபத்திப் பேசல… நீ விரும்பினத படி உனக்கு எல்லா விதத்திலயும் நான் சப்போர்ட்டா இருப்பேன்…”

“நீங்க சப்போர்ட்டாவும் இருங்க… சப்போட்டா பழமாவும் இருங்க… ஆனா கைய எடுத்துட்டுப் பேசுங்க எனக்குத் தோள் வலிக்குது… ” என்றதும் தோள்களை மெல்ல தடவிக் கொடுக்கப் போனவன் கைகளை பின்னிழுத்துக் கொண்டான். அவளது இந்த பதில்கள் ஏதோ ஒன்றை மறைக்கத்தான் என்பது நன்கு புலப்பட… இப்போது அவளது நிம்மதி முக்கியம்… இதுவரை எப்படியோ… இனி நான் கவனித்துக் கொள்வேன், அதற்கு அவளோடு இசைந்துப் போக வேண்டும் என்ற மனநிலைக்கு வந்தான். 

ஏனோ தில்லையின் இந்த குணம் அவளின் மீது அவனுக்கும் காதலை அதிகப்படுத்தியது.தில்லைக்கும் ஆதவன் தன் அதட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவது புன்னகையைக் கொடுக்க … அவன் முன் வெளிப்படுத்தாமல் , “சரி வாங்க நடக்கலாம் … ஹாஸ்பிட்டலுக்கு இன்னும் ரெண்டு நாள்ல செக்கப்புக்குப் போகணும்..” என்றதும் ஆதவனும் குழந்தையைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டான்.

குழந்தையைப் பற்றின பொதுவான கேள்விகள் பதில்கள் மட்டுமே அவர்களது உரையாடலாக இருந்தது. “முத்தாரம்மா.. இந்த மாமா என்ன எல்லார் மேலயும் அன்பை பொழியுறாரு… இப்படி உன்னைய பார்த்து பார்த்து கவனிச்சுகிட்டா.. சீக்கிரமே ஐ லவ் யூ சொல்லிடப்போற .. ” இருவருமே தங்கள் அன்பை , காதலை மனதோடு மட்டுமே வைத்துக் கொண்டார்கள். திரும்பி வீட்டுக்குள் வந்ததும் தாமரையின் அறைக்குச் சென்றவளை ,

“ஏன் அங்கு செல்கிறாய்” என ஆதவனும் கேட்கவில்லை..தில்லையும் விளக்கம் கொடுக்கவில்லை. ஆனால் வாசலிலேயே நின்று திரும்பியவள் , “மாமா பாப்பாவுக்கு குட்நைட் சொல்லுங்க… நாம பேசுறத கேட்டுக்கிட்டே இருப்பாங்களாம்… செல்வி சொன்னா…” என்றதும் சிரித்துக் கொண்டே, “குட் நைட்..” என வயிற்றைப் பார்த்துச் சொன்னவனுக்கு மறுபடியும் தொட்டுப் பார்க்கவும் ,முத்தமிடவும் ஆசை வந்தது.. ஆனால் அவள் அனுமதியோடு தான் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. அந்த அனுமதியைக் கேட்டுப் பெறவும் விருப்பம் இல்லை” எனவே தில்லையிடம் தலையசைத்து விட்டு அவனறைக்குச் சென்று விட்டான்.

ஆதவன் மற்றும் தில்லையின் நாட்கள் இப்படித்தான் சென்றன.. ஆதவன் தொழிலில் கவனம் வைக்கத் துவங்க , இருவருக்கும் இரவு உணவு முடிந்ததும் தோட்டத்தில் உலாவச் செல்லும் முக்கால் மணி நேரம் கிடைக்கும் தனிமை மட்டுமே.. அந்த நேரமும் குழந்தை, தாமரை, படிப்பு , அவன் தொழிலை விரிவாக்க செய்யும் திட்டம் இப்படித்தான் பேச்சுக்கள் போகும்.

அன்று அப்படி நடந்துக் கொண்டு இருக்கும் போது , கையில் ஆப்பிள் பழத்தை வைத்துக் கொறித்துக் கொண்டிருந்தவள் , வேண்டுமா என சைகையில் கேட்டு அவன் வாயருகே கொண்டு செல்லுகையில் , அவளின் பளபளப்பான அழகு கன்னங்கள் மிக அருகில் இருக்க.. தன்னையறியாமல் “இந்த ஆப்பிளையும் டேஸ்ட் பார்க்கணும் போல இருக்கு… ” என்று விட்டான். சொன்ன பிறகு தான், “ஐயோ எனப் பதற்றமாகி ” தில்லையைப் பார்க்க அந்தக் கன்னங்கள் காஷ்மீர் ஆப்பிள்களே தோற்று விடும் நிறத்தில் சிவந்து ..

” பார்க்கலாம்… பார்க்கலாம் … ஆனா இப்ப இல்ல…” என்றவள் நாணத்தோடு நடந்து அறைக்குச் சென்று விட்டாள். அவள் கோபமடையாமல் முகம் சிவந்ததே அவனுக்குப் போதுமானதாக இருக்க அதன் பிறகான நாட்களில் மனைவியின் மீதான காதல் பார்வைகளை கட்டுப்படுத்தவில்லை ஆதவன்.

இப்படி சில சமயங்கள் மனைவி என்ற முறையில் அந்தரங்க பேச்சுக்கள் வந்தாலும் இருவரும் காமம் புகாமல் காதலோடு நிறுத்திக் கொண்டார்கள். ஆதவனுக்கும் தங்கை வீட்டிலிருக்க , மனைவியோடு அதிக நேரம் தனிமையில் இருப்பதை தவிர்த்தான் என்றே சொல்ல வேண்டும்.

எப்படி தாமரையின் மனதில் திருமணமான தன்னால் எந்த சலனமும் வரக்கூடாது என தில்லை நினைத்தாளோ.. அதையே உடன் பிறந்தவனாக ஆதவனும் யோசித்து நடந்துக்கொண்டான். இப்படியாக ஆதவன் தில்லையின் மண வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்க,

விஜய் இப்போது அதிகம் தாமரையின் கண்களில் படுவதில்லை. அதோடு ஆதவன் பெரும்பாலான நாட்களில் தங்கையை அழைத்துக் கொண்டு சென்று வந்துக் கொண்டிருந்தான். தந்தையையும் சில பொறுப்புகளிலிருந்து விடுவித்து தானே கவனித்துக் கொண்டிருந்தான். தாமரையை அழைத்துக் கொண்டு மாலையில் வீடு வருகையில் தில்லை அவனையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள , அந்த முகத்தைக் கண்டு ரசிக்க ஆர்வமானவன் தாமரையை பேருந்தில் அனுப்புவதை குறைத்தான். அது தாமரை மற்றும் விஜயின் காதல் பார்வைகளுக்கு இடைவெளியைக் கொடுத்தது.

அதோ இதோ என தில்லைக்கு ஒன்பதாம் மாதமும் வர… தேவகி மகளுக்கு வளைகாப்பு செய்ய விரும்பினார். ஆனால் மீனாட்சி இறந்து ஒரு வருடமாகாததால்  , ஆவுடையம்மாளின் ஆசைப்படி எந்த சடங்குகளும் இல்லாமல் வீட்டிலுள்ளவர்களை வைத்து வளைபூட்டினர்.

இதில் பாக்யம் திருமணமாகி வந்து இன்னும் தாய்மையடையாமல் இருப்பதால் வளைபோட மறுக்க …

“இல்லைங்க அம்மா.. வேண்டாம்…” என தயங்கினாள். “வந்ததிலிருந்து பெயர் சொல்லிக் கூப்பிடுனு சொன்னா… அது எப்படி அம்மா அம்மானு என்னைய பெரிய மனுஷியாக்கிட்ட.. இப்ப அம்மா நிஜமாவே ஆகப் போறேன்… நீ எனக்கு வளையல் போடல.. நீ எனக்காக செய்து தர எதையும் சாப்பிட மாட்டேன் .. வா வந்து போட்டுவிடு.” என அதட்டியதும் வேகமாக வந்து வளையல் போட்டுவிட்டதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆவனுக்கு ,

யாரிடமும் ஏற்றத்தாழ்வுகள் பாராமல் பழகும் தில்லைமீது அளவில்லா காதல் உண்டானது. அனீஸிற்கு கூறியிருக்க கூட இரு தோழிகளோடு வந்தவளைப் பார்த்து மகிழ்ந்த தில்லை…

“அனீஸக்கா…ஒரு வயசு சின்னவளான என்னை பாக்யம் அம்மா அம்மானு கூப்பிடும் போது தான் கா உங்க வலி எனக்கு புரியுது..” என்றவள் கூடவே முகத்தை வருத்தத்தோடு வைத்துக் கொண்டு வந்திருந்த சரஸ்வதியிடம் ,

“ஹேய் சச்சு.. நான் அதெல்லாம் மறந்துட்டேன்டி முகத்தை சிரிச்சது போல வச்சுக்கோ… நீ மட்டும் அப்படி சொல்லலடி இந்த விஷயம் கேள்வி பட்ட இன்னும் சிலர் கூட அப்படி சொன்னாங்க.. அப்ப வருத்தமா இருந்துச்சு… இப்ப இல்லடி … ” என சமாதானம் செய்தாள். குழந்தையைக் காரணம் காட்டி கல்லூரிக்கு வரவில்லை என்றதும்… அதை அழித்து விட்டு படி… என கூறியிருக்க … இப்போது வருத்தப்பட்டுக் கொண்டு , ‘என்னைய மன்னிச்சுருடி.. அப்படி சொன்னது பெரிய தப்பு தெரியாம பேசிட்டேன்” என்றுக் கூறிக் கொண்டிருந்தாள்.

விஜயையும் அழைத்திருக்க , வந்திருந்தவன் பெரிய பரிசுப் பெட்டி ஒன்றை தில்லைக்குப் பரிசளித்து விட்டு, தாமரையை தனியாக சந்திக்க காத்திருந்தான். அவனது பார்வை அதனை நன்கு உணர்த்த , கீழே இருக்கும் அறை ஜன்னலில் சென்று அமர்ந்து கொண்டாள். அதை கவனித்தவன் மற்றவர்கள் உணராமல் அந்த ஜன்னல் அருகே வந்தவன் , ஜன்னல் திண்டில் ஒரு கடித உறையை வைத்து விட்டு, ” காத்திட்டு இருப்பேன்… வாறேன் ” என்றவாறு கிளம்பி விட்டான்.

முதன்முதலாக கடித பரிமாற்றம் …நெஞ்சுப் படபடக்க அதனை எடுத்துக் கொண்டவள் , அதனை யாருமறியாமல் படிக்க வேண்டிய பயத்தில் மறைவாக ஒரு புத்தகத்தில் வைத்தவள் , அதனை எடுத்துக் கொண்டு வெளியே வருகையில் அனீஸ் கிளம்பிக் கொண்டிருந்தாள்.தில்லை அழைக்கவும் அருகில் வந்த தாமரையிடம் ,

“தாமரை … ஃபிரண்ட்ஷிப்னா என்னனு உங்களப் பார்த்து தான் கத்துக்கணும் போல … இப்ப பிரசவத்துக்குக் கூட அம்மா வீட்டுக்கு போக மாட்டேன்னு சொன்னா.. பார்த்தா தான் தெரியுது.. நீ அவங்க அம்மாவுக்கு மேல அவள நல்லா கவனிச்சுக்கிற… அதுக்கு மேல உங்கண்ணன்.. அவ கொஞ்சம் முகம் சுருக்கினாலும்.. நாம இத்தனை பேர்  பக்கத்துல இருந்தாலும் என்ன என்னனு வாறாங்க… இப்படி ஒரு ஃபேமிலி கிடைச்ச நீங்க ரெண்டு பேருமே அதிர்ஷ்டசாலிங்க தான் ” என்று விட்டு கிளம்பி விட்டாள்.

அனைவரும் கிளம்பியதும் தனது அறைக்குச் சென்று கடிதத்தைப் பிரித்தவள் முகத்தில் புன்னகை குடிக் கொண்டது. கல்லூரிக்கு மிக அருகில் இருந்த எஸ்டிடி பூத் பெயரைக் குறிப்பிட்டு நாளை கல்லூரிக்குள் செல்லுமுன் அங்கு வரச் சொல்லியிருந்தான். 

ஆதவனோடு அதிகம் செல்வதால் விஜயைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.. அதனால் தான் அழைக்கிறானோ… அவள் இருக்கும் இடம் தேடி வருவானே தவிர… அவளை அழைத்ததில்லயே… பல யோசனைகள் இருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியுன் … எப்போதையும் விட தன்னைக் கூடுதலாக அலங்காரப்படுத்திக் கொண்டு விஜயைக் காணச் சென்றாள்.

உன்னைக் காணாமல் நான் ஏது..

உன்னை எண்ணாத நாள் ஏது…

கவிஞனைத் தேடி கவிதை கேட்க வந்தேன்…

வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும்…

Advertisement