அலை 19 (2)

              தனது அறையில் இருந்த ஜன்னல் திண்டில் வழக்கம் போல் தலை சாய்த்து அமர்ந்திருந்த தாமரையின் எதிரில் வந்தமர்ந்த தில்லை. “என்னடி யோசனை.. நீ பேசாம வந்தப்பவே தெரியும் நீ இதுல தான் உட்கார்ந்து இருப்பனு… என்ன கேட்கப் போற..” தன்னை நன்கு அறிந்திருந்த தோழியைப் பார்த்து மென்னகைப் புரிந்தாள் தாமரை. அதே புன்னகையோடு ,

“என்னோட ஒவ்வொரு அசைவையும் நீ கண்டுபிடிக்கிற மாதிரி எனக்கும்  உன்னைய கொஞ்சமாவது புரியாம இருக்குமா.. ஏன் காலேஜ் போகமாட்டேன்ற… வெளிய எல்லார் முன்னாடியும் சொன்னத என்கிட்ட சொல்லாதடி… நான் அக்ரி படிக்கணும் நம்ம தோட்டம் பார்க்கணும் … அதை கண்டுபிடிக்கனும் இதை கண்டுபிடிக்கணும்னு சொன்ன நீ .. எதுக்கும் பயப்படாம.. தைரியமா எதையும் ஃபேஸ் பண்ற நீ … எப்பவும் படிக்கணும் அந்த பிஸ்னஸ் பண்ணனும் இந்த பிஸ்னஸ் பண்ணனும் சொல்ற நீ  …. இப்ப குழந்தைய காரணமா வச்சுப் போகலனு சொல்ற.. நான் எப்படி நம்புவேன் …அதுக்கான காரணம்…” என அடுக்கிக் கொண்டேப் போனவள் சட்டென ஏதோ தோன்ற,

“திலோ… இந்த கல்யாணம் அம்மாவுக்காக இல்லையோ … எனக்காக தான் எந்த எதிர்ப்பும் இல்லாம அண்ணன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டியா..” கேட்ட தாமரையை புன்னகையோடு பார்த்திருந்தாள் தில்லை ..

“இது தான். இந்த நட்பு தானடி என்னைய இவ்வளவு தூரம் உனக்காக யோசிக்க வைக்குது..” என நினைத்துக் கொண்டிருந்தவளின் தோளை உலுக்கி ,

” உண்மையச் சொல்லுடி.. அம்மாவுக்கு ரொம்ப முடியலனு தெரிஞ்சதும் சுத்தி என்ன நடக்குனுக் கூட தெரியல… அப்ப இருந்து நீ மட்டும் தான் என் பக்கத்துலயே இருந்தேனு எல்லாரும் சென்னாங்க.. அப்ப என்னைய கவனிச்சுக்கிறதுக்காக மட்டும் தான் நீ இந்த கல்யாணமே பண்ணிக்கிட்டியோ… இங்க வந்ததுலருந்து எங்கம்மா இல்லாத குறையே தெரியாம பார்த்துட்டு இருக்கிற… இப்ப குழந்தைய காரணமா வச்சு .. நீ படிக்க போகாம இங்கயே இருந்து என்னைய ஹாஸ்டலுக்கு போக விடாமலும் பண்ற சரிதானே.. அதுதானடி உண்மை … ” என்றவளுக்கு கண்ணீர் ஆறாக பெருகியது.

பார்த்த தில்லைக்கும் அப்படியே , ” எப்படி என்னைய கணிச்சு சொல்றா..இந்த அன்புக்காக இவளுக்கு நான் என்ன வேணா செய்யலாம்…” என நினைத்தவள் தனக்கு வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஏதோ சொல்ல வர…

“பார்த்தியா நீயும் அழுகுர… அப்ப அது தான் உண்மை.. வேண்டாம் டி நீயும் அம்மா போல இவ்வளவு பாசம் என் மேல வைக்காத ” என்றவள் தன் முகத்தை தாமரையின் மடியில் புதைத்துக் கொண்டு ,

” வீட்ல அம்மா என்னைய குழந்தைமாதிரி ட்ரீட் பண்ணாங்கன்னா.. ஸ்கூல்ல இருந்து இப்ப வரை நீயும் அப்படியே பார்த்துக்கிற… அவங்க இடையிலயே போய்ட்டாங்க… நீயாவது என் கடைசி நாள் வரை என் கூட வரணும்..” அவளது தலையில் தட்டிய தில்லை,

“லூசு என்னடிப் பேசுற…”

“லூசுதான் நான்.. ப்ளீஸ் என்னைய யோசிக்காம நீ உன் வேலைகளைப் பாரு… நானும் தனியா இந்த உலகத்துல எல்லாம் சந்திச்சாகணும்… நான் ஹாஸ்டல்லயே இருந்துக்கிறேன்.. நீ அத்தை வீட்ல இருந்து படி.. எனக்காக இப்படி காலேஜ் போகாம இருக்காத.. அது என்னைய ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ண வைக்கும் … ” என அழுதாள்.

“இந்த குற்றவுணர்ச்சி உனக்கு வரக்கூடாதேடி…” என மனதினுள் நினைத்துக் கொண்டே , அவள் தலையைக் கோதிவிட்டு ,

“அடியே செல்வி… தாமரைச்செல்வி .. நீ நினைக்கிறது சரிதான்… நான் காலேஜ் போய் படிக்காம இருக்கிறதுக்கு குழந்தையும் ஒரு காரணம்.. ஆனா அது மட்டும் காரணம் கிடையாது. அது போல நீ நினைக்கிறது போல ஃபிரண்டுக்காக படிப்பையே விட்டுக் கொடுக்கிற பெரிய தியாகியும் நான் கிடையாது… அதுக்கெல்லாம் காரணம் வேற… ” என்றதும் பட்டென மடியில் இருந்து எழுந்த தாமரை..

“சும்மா சொல்லதடி… இதை தவிர வேற என்ன காரணம் இருக்க முடியும்… ” என்றதும்.. புன்னகையுடன் எழுந்துக் கொண்ட தில்லை… ” இருக்குடி … இவங்கதான் காரணம்…” என ஆதவனது புகைப்படம் இருந்த இடம் சென்று சுவற்றில் சாய்ந்துக் கொண்டாள்.தாமரைக்கு புரியவில்லை , அவளருகில் வந்தவள் ,

“புரியல திலோ … அண்ணா பொண்ணுங்க படிக்கணும் எல்லாத்துலயும் பங்கெடுத்துக்கணும்னு நினைக்கிறவங்க… அவங்க எப்படி உன் படிப்பு தடைப்பட காரணமாவாங்க… ” என்றவளிடம் ,

“அவங்கன்னா.. அவங்க மேல எனக்கு வந்த காதல் தான் காரணம்… நான் உங்கண்ணன ரொம்ப லவ் பண்றேன் டி.” என்று முகம் சிவந்த தில்லை.அந்த சிவப்பை தன் கரங்களால் மறைத்துக் கொண்டாள்.

“அந்த காதல் என்னைய எதுலயும் கவனம் வைக்க விட மாட்டிக்குது. எப்போதும் உன் அண்ணன் நினைப்புதான்.”

 இப்போது தாமரை வாயடைத்துப் போனவள் கட்டிலிலே அமர்ந்து விட்டாள்.

தில்லையின் நாணம் அவள் பேசியது உண்மை தான் என்பதை அப்பட்டமாக காட்டியது. ‘காதல்…” காதலை உணர்ந்து ஒவ்வொரு நொடியும் அனுபவித்துக் கொண்டிருப்பவள் அல்லவா..

அவளருகில் வந்த தில்லை, “அதென்னவோ சித்திரை திருவிழாவுக்கு வந்த உங்கண்ணன.. என்ன இவ்வளவு ஹேன்ட்சம்மா இருக்காங்கனு சைட் தான் அடிச்சுட்டு இருந்தேன்.. திடீர்னு அத்தை எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னவுடனே , படிக்கணும் கல்யாணப் பேச்சசெல்லாம் பேசக்கூடாதுனு  சொல்ற நான் சரினு சொல்லிட்டேன்.

கல்யாணம் ஆகி பதினஞ்சு நாள் தான்… எங்கண்ணன் எங்கண்ணன்னு நீ சொல்லி சொல்லி என் மூளை ல பதிய வச்ச உங்கண்ணன… நான் பக்கத்துல பார்த்து பழகியதுல அவங்க என் மனசுல பதிஞ்சுட்டாங்கடி… அவங்க கிளம்பினதுலருந்து சதா அவங்க நினைப்புதான். இதுல இப்ப பாப்பாவும் வந்தவுடனே … ” என்ற தில்லையின் முகம் நாணத்தைச் சுமந்து அவ்வளவு அழகாக இருந்தது.

நான்கு மாதங்களாக மனித உடலியலைப் படித்துத் தெரிந்துக் கொண்டவளுக்கு தில்லையின் இந்த அழகிய வெட்கம் புரியாதா என்ன.. கூடவே விஜயின் நியாபகம். அதுவும் அன்றும் பேருந்தில் அவன் மீது சாய்ந்து எழுந்த தருணம் உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வைக் கொடுத்ததை நினைவுக் கூர்ந்த தாமரை… சட்டென எழுந்து நின்றாள்.

தில்லையோ அவள் அப்படி எழுவதைப் பார்த்து , “ஹேய் நீ என்னைய நம்பலையாடி .. இங்க வா…” என்றவள் ஆதவனது அறைக்கு அவளை அழைத்துச் சென்று , சில புத்தகங்களுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த கடித உறைகளை எடுத்துக் காண்பித்து ,

“இங்க படிக்க வர்றதா உன்கிட்ட சொல்லிட்டு இந்த லவ் லெட்டர் எல்லாம் உங்கண்ணனுக்கு எழுதி வச்சேன் டி ….அனுப்ப தான் இல்ல… அப்புறம் இந்த புக்ஸ் பாரேன்.. படிக்கனு எடுப்பேன்.. ஆனா முப்பொழுதும் உன் கற்பனைகள் , சிந்தனையில் நம் சங்கமங்கள்னு உன் அண்ணன் தான் சினிமால காட்டுவாங்களே அது போல நடுவுல வந்து சிரிக்கிறார். அவங்க பெயரை ஆயிரம் தடவை இந்த புக் முழுசும் எழுதி வச்சுருக்கேன்.. இதை யாருக்கும் கொடுக்கவும் முடியல… பத்ததாதுக்கு கவிதை கவிதை னு ஏதேதோ கிறுக்கியிருக்கேன் டி… பாதி ‘ஏ’ கவிதை பிரிச்சுக் காட்டுறேன் பார்க்கறியா” என கடித உறையைப் பிரிக்கப் போனவளிடம், கையிலிருந்த புத்தகத்தைக் கொண்டு அவளது தோளில் அடித்து சிரித்துக் கொண்டே,

“ச்சூ போடி … நான் உன் ஃபிரண்டு தான்.. ஆனா உன் ஹஸ்பன்ட் .. லவ்வர் பாய் ஆதவ மூர்த்தி எங்கண்ணன் டி.. போதும் போதும் உன் காதல் கவிதைகள் எல்லாம் எங்கஅண்ணன் வந்ததும் இதையெல்லாம் கொடுத்துப் படிக்க சொல்லு… ” என்ற தாமரை அவளிடமிருந்து அவற்றையெல்லாம் வாங்கி தில்லை வைத்திருந்த இடத்திலயே வைத்தாள். 

நிஜமாக ‘காதல்’ வந்ததால் படிக்க முடியவில்லை என சொல்ல தான் வந்தாள் தில்லை. ஆனால் மனதை திறக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அவற்றையெல்லாம் கணவனின் தங்கை என்ற எண்ணமின்றி தோழியிடம் கூற ஆரம்பித்து இருந்தாள். தாமரை இவ்வாறு கூறவும் தன் நாக்கைக் கடித்துக் கொண்ட தில்லை , “என்ன நாயகி பண்ற..” என நினைத்தவள் , தோழியின் கைகளைப் பிடித்து ,

“செல்வி.. இப்படி உங்கண்ணன் நினைப்பாவே இருக்கிறதால தான்டி படிப்புல கவனமே போகல… காதல் வந்தா இப்படி ஆகிடும் போல.. ” என்றவளுக்கு ,

” காதல் வந்தா இன்னும் நல்லா படிக்கக் கூட தோணும்…” என தன் அனுபவத்தைக் கூற வேண்டும் போல் இருந்தது, அதை மனதில் பூட்டி விட்டு ,

“மொத்தத்துல என் நினைப்பு இல்ல எங்கண்ணன் நினைப்புதான்னு சொல்லிட்ட… பரவாயில்ல டி … ஆனா ஏதாவது ஒரு கோர்ஸ் நீ படிச்சு தான் ஆகணும் சொல்லிட்டேன்.” என்றவளை கட்டியணைத்துக் கொண்ட தில்லை… மனதினுள் ” உன் நினைப்பு இல்லயாமா போடி… ஆனா பொய்யா இல்லாம உண்மையான ஒரு காரணத்தை சொல்லிட்டேன் ஹப்பா…” என எண்ணியவள் சிரித்துக் கொண்டே,

“நீ சொல்றது சரிதான்.. கவிதையா கொட்டும் போது நான் அக்ரி படிக்க லாயக்கு இல்லனு நினைப்பேன்… ஆன்… சாந்தி நிலையம்ங்கிற படம் பார்த்து அதோட கதை ஜேன் அயர்(Jane Eyre) புக்க லைப்ரரில எடுத்துப் படிச்சேன் டி.. அப்ப இன்னும் நிறைய கதைப் படிக்க இங்கிலிஷ் லிட்டரேச்சர் படிக்கலாமோனு யோசிச்சுருக்கேன்.. இப்பவேற கவிதைங்கிற  பேர்ல நிறைய ரைமிங் வார்த்தைகள் வருது… என் கற்பனைக்கு அதுதான் சரி… இரு அண்ணன் கிளம்புறதுக்குள்ள சொல்லிட்டு வாறேன்” என சென்றாள்.

தாமரையால் அவள் கூறுவதை எல்லாம் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மொத்தத்தில் அவள் கல்லூரிக்கு செல்லாததால் அவளும் விடுதிக்குச்  செல்லவில்லை .தாமரை மட்டும் கல்லூரிக்குச் சென்றாள். விஜய் இரண்டு நாள் மூன்று நாள் தாமரை தனியாக வருவதை கவனித்தவன் , நான்காம் நாள் கேட்டு விட்டான். தாமரை எப்படி அவனுக்கு பதில் சொல்வது என திகைத்து , விழிகளால் தயங்கி நிற்க .. அதை உணர்ந்தவன் ,

“எப்ப சொல்லத் தோணுதோ அப்ப சொல்லு.” என்று விட்டான். தேவாவும் தங்கை அந்த வருடத்திலேயே சேருவது போல் தொலைதூரக் கல்வியில் பாடம் பயில எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்தான். தாமரை தன் படிப்பு நேரம் போக மற்ற நேரங்கள் எல்லாம் தில்லைக்கு சத்தான உணவுகள் செய்து தருவது,சத்து மாத்திரை மருந்துகள் தருவது என தாய் போல் கவனித்துக் கொண்டாள். மறக்காமல் அவளையும் படிக்க வைத்தாள்.

தேவகி இடையில் மகளைக் காண வருபவருக்கு தாமரை தில்லையை கவனித்துக் கொள்ளும் விதம் , விரைவில் தாமரையை மருமகளாக்கிக் கொள்ளும் ஆவலைத் தூண்டியது. ஐந்தாம் மாதம் குழந்தையின் அசைவை உணர்ந்த தில்லை தாமரையிடம் கூறி மகிழ்ந்தாலும் கணவனிடமும் கூறி மகிழ ஆசையாக இருந்தது.

எப்போது தொலைப்பேசியில் அழைப்பான் என காத்திருந்தவள் அதிக நேரம் தொலைப்பேசி அருகிலேயே அமர்ந்திருக்க ஆரம்பித்தாள். காத்திருந்ததின் பலன் அன்று தொலைப்பேசி மணி ஒரு முறை அடித்ததுமே எடுத்து காதில் வைத்தாள்.

ஆதவனின் குரல் கேட்டதுமே அழுகை வர ஆரம்பித்து விட்டாலும் , அழுகையைத் துடைத்து , ” எப்ப வருவீங்க மாமா… ” என்றாள். “மாமா” என்ற அழைப்பு ஆதவனைத் தவிக்க விட்டாலும்… “இந்த மாசக் கடைசியில வந்துருவேன்.. படிப்பு விஷயமா நான் இன்னொரு ஊருக்கு போக வேண்டி இருக்கும் … திரும்ப கிளம்பரப்பதான் ஃபோன் பண்ண முடியும்.. அதான் இப்பவே கூப்பிட்டேன்… பாப்பா எங்க பேசிட்டு வைக்கிறேன்.” எப்போதும் இப்படி பொதுவான பேச்சுக்கள் தான். 

” நமக்கும் பாப்பா வரப்போகுது…” என்பதை மனதுக்குள் சொல்லிக் கொண்டவள், ஒரு ‘இச்’ சத்தத்தைக் கொடுத்து விட்டு தாமரையை அழைத்துக் கொடுத்தாள்.ஆதவனிடம் பேசிவிட்டு வைத்த தாமரை,

“போடி … குழந்தையோட அசைவுகள போன தடவையும் சொல்ல முடியல. இப்பவும் சொல்ல முடியலனு கஷ்டமா இருக்கு… தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா.. எப்ப வருவாங்கனு இருக்கு டி “

“எனக்கும் தான் … ” என மனதுள் சொல்லிக் கொண்டவள் அவனது வருகைக்காக காத்திருக்கலானாள். அவன் தன்னைப் பார்க்கும் போது என்ன உணர்வான்.. நிச்சியம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் .. அது இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே தில்லையின் ஆசையாக இருந்தது. இதோ நாட்கள் வேகமாக சென்று சென்னைக்கு வந்து இறங்கியவனை தேவராஜனும் விஜயானந்தும் மதுரைக்கு அவர்களது காரில் அழைத்து வந்துக் கொண்டிருந்தனர்.

இங்கு காத்திருந்தேன் தனியே

எதிர் பார்த்திருந்தேன் உனையே

பகல் இரவாய் பல பொழுதாய்

உன்னை மீண்டும் கூடும் நினைவாய்…