தில்லை தொடர்ச்சியாக இன்னும் இரண்டு நாட்களும் விடுமுறை எடுத்துக் கொண்டவள் ,மறுநாள் கல்லூரி புத்தகங்கள் நிறைய எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதால் அன்று கல்லூரிக்கு செல்ல பேருந்துப் பயணம் வேண்டாம் கார் பயணத்தில் செல்லலாம் என தில்லைக் கூறியதும் அருணாச்சலம் அவர்கள் பயணம் செய்யும் வண்டியின் பின்னாலயே மதுரை வரை அவரது வண்டியையும் செலுத்திக் கொண்டு வந்தார்.
அன்று நடுவழியில் நின்றதால் இன்று இந்த ஏற்பாடு .. மறுபடி திரும்பி அவர் வேறு வழி செல்ல வேண்டும் தான் … ஆனால் பெண் பிள்ளைகள் பாதுகாப்பிற்காக அவ்வாறு வந்தார். பெண்கள் இருவரும் அதனை உணர்ந்து தான் இருந்தனர். அதனாலும் இருவரும் அவரவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துக் கொண்டனர்.
விஜயுடன் பேருந்து பயணம் இனி இருக்காது என்பதும் தாமரைக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அதுவும் முந்தய நாள் பயணம் அவளது வாழ்வில் மறக்கவே முடியாத பயணமாகவும் இருந்தது. தான் விடுதியில் தங்கப் போகும் விவரம் யார் மூலமாகவாது அவனுக்கு சென்று விடும் என்பதால் எப்படியும் தன்னைக் காண வந்து விடுவான் என்ற உறுதியான நம்பிக்கை தாமரையிடம் இருந்தது.
இந்த நான்கு மாதங்களாக படித்த புத்தகங்கள், நோட்டுகள்.. ஏன் தில்லை குடுவை குடுவையாக விதைகள், மண்கள் என ஆராய்ச்சி செய்வதற்காக வீட்டில் வைத்திருந்த அனைத்தையும் வண்டியில் ஏற்றி இருந்தாள்.தாமரைக் கூட , “அதுக்குள்ள உன் ப்ராஜக்ட் முடிஞ்சுடுச்சா என்ன.. எல்லாத்தையும் எடுத்துட்டு வர்ற… ” எனக் கேட்க… அவளைப் பார்த்து மென்னகையோடு,
“வேற ப்ராஜக்ட் இருக்குடி … அதை நல்லவிதமா பண்ணனும்.. அதுதான் இதையெல்லாம் மூட்டைக் கட்டுறேன்.” என கேலியாகக் கூறினாள். தாமரையும் அதை சாதரணமாக எடுத்துக் கொண்டவள் , முதலில் தங்கள் கல்லூரியில் இறங்கிக் கொண்டாள். மாலையில் பேருந்தில் தான் வீட்டிற்கு செல்ல இருந்தார்கள்.
தாமரை வண்டியை விட்டு இறங்கியதும் தில்லையின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது. கல்லூரிக்கு வந்ததும் , வளாக காவலாளி உதவியுடன் கொண்டு வந்த அனைத்தையும் வகுப்பறைக்குள் கொண்டு வந்து வைக்க , உடன் படிப்பவர்கள் எல்லாம் அதனைக் குறித்துப் பேச ஆரம்பித்தனர்.
ஆண்கள் வரிசையில் அமர்ந்திருந்த சிபியைப் பார்த்து , ” சிபி சக்கரவர்த்தி அவர்களே ஃபாரஸ்ட்ரி நோட்ஸ் கேட்டிருந்தல்ல .. இது நானே எழுதினது…நீயே வச்சுக்கோ” என்றவாறு தன்னிடம் இருந்த ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரிடமும் கொடுத்தாள்.அனீஸிற்கும் சிலவற்றைக் கொடுக்க … அனீஸ் அவளை உற்று நோக்கியதிலேயே தில்லையின் மாற்றங்களை உணர்ந்தவள் , அவள் அனைத்தையும் கொடுத்து விட்டு அமர்ந்ததும்..
“அப்ப இனி காலேஜ் வரும் ஐடியா இல்ல…” என சிறிது கோபமாக கேட்டாள்.தில்லை ஒரு புன்னகை மட்டுமே கொடுத்து வேறு பக்கம் திரும்பிக் கொள்ள , அவள் தாடையைப் பிடித்து தன் புறம் திருப்பிய அனீஸ்.. அவளது கண்கள் சிவப்பதை உணர்ந்து , தோள் மீது சாய்த்துக் கொண்டாள்.
“எனக்கும் அக்ரி படிக்க ரொம்ப ஆசைதான்…” என அழும் குரலில் பேசியவள், நிமிர்ந்து அமர்ந்து , ” ஆனா ஃபாத்தி… மா…” எனவும், சிரித்து விட்ட அனீஸ்…
“இத்தனை நாள் அக்கானு கூப்பிடாதனு சொன்னப்ப எல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அக்கா போட்டுட்டு இப்ப ஃபாத்திமானு பெயரா சொல்ற… போடி அனீஸக்கா… அட்ராசக்கனே கூப்பிடு ..” எனவும்,
“நான் எப்ப உங்க பெயரை சொன்னேன் …ச்ச.ச்ச … எந்த காலத்திலேயும் பெரியவங்கள பெயர் சொல்லி கூப்பிடமாட்டேன்.. நான் ஃபாத்தி… மா… தானே சொன்னேன்.அதாவது எங்கம்மா போல இங்க வந்த நாளிலிருந்து என்னைய நல்லா பார்த்துக் கிட்ட ஃபாத்தி “அம்மா’வோட சுருக்கம் ….” என கன்னத்தில் கை வைத்துக் கொண்டவளிடம்,
“அடியே அக்கா போய் அம்மா ஆகிட்டேனா…” என சிரித்தவளிடம் , ” என்னைய இந்த நாலு மாசமா எங்கஅம்மா போல பார்த்துகிட்டீங்களே.. அப்ப உங்களை அப்படி தானே சொல்லணும்… வாழ்க்கைய காப்பாத்திக்கோனு சொன்னீங்க.. எத்தனையோ வகையில யோசிச்சுப் பார்த்தும் இது தான் தீர்வா கிடைச்சது. எனக்கு செல்வி தான் கா என்னோட முதல் குழந்தை…அத்தை இல்லாம அவ தவிக்கிறது எனக்குத் தான் தெரியும்.
எல்லோரும் பக்கத்துல இருந்துட்டே அவள எப்படி ஹாஸ்டல்ல விட முடியும்… அதுவும் என் பாப்பா வயித்துக்குள்ள வந்ததும் அவமுகத்துல அப்படி ஒரு சந்தோஷம்.. அதோட வயிறு பெரிசாக பெரிசாக இங்க வர்றதும் கஷ்டம்… எனக்கு ரெண்டு குழந்தைங்களும் முக்கியம்.. அதனாலதான் கா இந்த முடிவு … இன்னும் எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. இனி தான் சொல்லணும்.. என்ன எங்க அண்ணன் ரொம்பவே ஃபீல் பண்ணுவான். இப்ப எனக்கு படிப்ப தொடர முடியுமா தெரியல… ஆனா நிச்சியம் படிப்பேன் …”
அனீஸுக்கு தில்லையை நினைத்து நெகிழ்ச்சியாக இருந்தது. இதில் அவள் எதையும் கூறி தில்லையைக் குழப்பி விட விரும்பாமல் , “ஐ மிஸ் யு தில்லைநாயகி.. அதுவும் நீ கூப்பிடுற அக்காவ ரொம்ப மிஸ் பண்ணுவேன். டைம் கிடைச்சா ஃபோன் பண்ணு” என்ற அனீஸ் அவளது முகவரியையும் தொடர்பு கொள்ளக் கூடிய தொலைப்பேசி எண்ணையும் எழுதிக் கொடுத்து பிரியாவிடைக் கொடுத்து அனுப்பினாள்.
மாலையில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவளோடு வீடு வருகையில் அந்த சமயங்களில் அவர்களோடு வீட்டிற்கு திரும்பும் வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் பதினொன்று பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மூன்று பெண்களோடு பேசிக் கொண்டு வந்த தில்லை, அதிகம் பேச்சுக் கொடுக்காத தாமரையையும் அவர்களோடு பேச வைத்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் விடுமுறை தினம் என்பதால் பெற்றோரை வரச் சொல்லியிருந்தாள். அவர்களும் அவளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தான் வந்தார்கள். தேவாவும் கூடவே வந்திருந்தான். முன்பு மீனாட்சி அவர்களெல்லாம் வரும் போது குடிக்க சாப்பிட என ஏதேனும் தன் கையால் தயாரித்துக் கொடுப்பார். அதுபோல் தாமரையும் தோழியை அதிக வேலை செய்ய வைக்க கூடாது என்ற நோக்கத்தில் தில்லையை அவர்களோடு இருக்க வைத்துவிட்டு உதவியாளர்களோடு இணைந்து தாயைப் போலவே சமைத்தவள் அனைத்தையும் தானே பரிமாறினாள்.
தேவாவிற்கும் இயல்பாக “அப்பளம் எடுத்துக்கோங்க அத்தான். ரசம் எடுத்துக்கோங்க அத்தான் … ” என வார்த்தைக்கு வார்த்தை அத்தான் போட்டு அவனை திணறடித்துக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த தேவகியோ,
“பரவாயில்ல யே மருமக டாக்டருக்குப் படிச்சாலும் நல்லா சமைக்குது… எல்லாரையும் பார்த்து பார்த்து கவனிக்குது.. அதுவும் பையன நல்லாவே கவனிக்குது, சீக்கிரம் ரெண்டு பேருக்கும் உறுதிப்படுத்தணும்..” என்ற எண்ணம் கொண்டார்.
அனைவரும் உண்டு முடித்து கூடத்தில் அமர்ந்து அருணாச்சலத்திடம் பேசிக் கொண்டிருக்கையில் தில்லை அருணாச்சலம் முன்பு வந்து நின்று ,
“மாமா .. நான் சில விஷயங்கள் செல்ல வேண்டியிருக்கு.. அதான் அப்பா அம்மாவையும் இங்க வரச் சொன்னேன். எனக்கு இப்ப நாலாவது மாசம் … காலேஜ் போறது வாறது ரொம்ப கஷ்டமா இருக்குது. அதான் நான் வீட்ல இருந்தே கரஸ்ல படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்றதும் தேவா இருக்கையை விட்டு எழுந்தே விட்டான். தாமரையும் அதிர்ச்சியுடன் தில்லையின் அருகில் வந்து அவளது தோள் பிடித்துக் கொண்டாள்.
அவளைப் பெற்றவர்களும் கூட இதனை எதிர்பார்க்கவில்லை. தில்லையே மீண்டும் , “அது இந்த வருஷமா.. அடுத்த வருஷமா தெரியல… எனக்கு பாப்பாவ நல்லவிதமா பெத்து எடுக்கணும். அம்மா வீடு பக்கமா தான் இருக்கும்… ஆனா எனக்கு காலேஜ் போய் படிக்கிற எண்ணம் இப்ப இல்ல. அப்புறம் மாமா கிட்ட இப்ப காலேஜ் போய் படிக்கலனும் சொல்ல வேண்டாம் .. இன்னும் ரெண்டு மாசம் தானே எல்லாம் இங்க வந்த பிறகு சொல்லிக்கலாம். எப்ப ஃபோன் பண்ணாலும் நல்லா படி நல்லா படினு சொல்லுவாங்க.. அவங்க படிப்ப முடிக்கிற நேரம் அவங்களுக்கு நாம இப்ப எந்த தொந்திரவும் கொடுக்க வேண்டாம் .” என்றதும் அருணாச்சலத்தின் முகத்தில் புன்னகை.தேவகியிடம்
“உன் மதினி அவ புள்ளைக்கு எந்த தொந்திரவும் கொடுக்கக் கூடாதுனு இப்படி தான் தனக்கு உடம்பு முடியலனா கூட சொல்லாம இருப்பா… என் மருமகளும் அதேப்போல அவன் நல்லதுக்குனு சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாயிருக்கு …” என்றவர் தில்லையிடம் ,
“நாயகி அம்மா நீங்க என்ன செய்றதா இருந்தாலும் அது உங்க விருப்பம் தான்… இது உங்க வீடு மா.. இந்த குடும்ப நல்லதுக்காக இனி நீங்க எடுக்கிற முடிவுக்கு நான் எப்பவும் துணை நிற்பேன்.” என்றவர் சொக்கலிங்கத்திடம் பேச ஆரம்பித்தார்.
தேவா தங்கையின் அருகில் வந்தவன் , “பாப்பா அக்ரி படிக்கணும்ங்கிறது உன்னோட ரொம்ப நாள் ஆசை பாப்பா… குழந்தைக்காக அதை விட்டுக் கொடுக்காத மா… நம்ம வீட்டுக்கு வா… உன்னைய பத்திரமா காலேஜ் கூட்டிட்டு போய்ட்டு வர்றது என் பொறுப்பு… ” என தெரிவித்தான். தாமரையும் அருகில் நின்றவள் ,
“திலோ அத்தான் சொல்றதுதான் நானும் சொல்லுவேன்.. நான் எங்க சீனியர் கிட்ட எல்லாம் விசாரிச்சுட்டேன் அஞ்சு மாசத்துக்கு மேல கவனமா ட்ராவல் பண்ணலாம்னுதான் சொன்னாங்க.. உன் ரிப்போர்ட்ஸும் எடுத்துப் போய் எங்க புரஃபெசர்ட்ட காட்டி கேட்டுட்டேன் .. நீ நார்மல் தான் பயப்படாதடி… ” என அவளுக்கு எடுத்துக் கூறினாள்.
தேவகியோ மகனிடம் , ” ஐயா அவளே மனசு வந்து வயித்துப்பிள்ள முக்கியம்னு சொல்றா… படிப்பு எப்ப வேணா படிச்சுக்கலாம்.. குழந்தை முக்கியம்..” என்றவர் மகளிடம் ,
“சரி சாமி தேவைக்கு எல்லாம் எடுத்து வச்சுட்டியா கருக்கல்ல கிளம்பக் கூடாது.. நேரத்தோட கிளம்புவோம்.” என்றார். தில்லையோ , “எங்கம்மா கிளம்பணும்… இப்ப தானே பெரிய மாமா சொன்னாங்க இது என் வீடுனு… நான் எடுக்கிற முடிவு தான்னு..நான் இங்கேயே தான் இருக்கப் போறேன்.
செண்பா மதினி இருக்காங்க.. பாக்யம் இருக்கிறா.. எல்லாத்துக்கும் மேல… இதோ இவ இருக்கிறா…” என தாமரையைக் காட்டியவள் ,குழந்தை உண்டானது தெரியாம இருக்கிறப்பவே என்னைய அப்படிக் கவனிச்சுக்கிட்டாங்க. இனி சொல்லவா வேணும்… ” என்றதும் தாமரைக்கு எதுவோ புரிவது போல் இருந்தது. அவளை விட்டு நகர்ந்தவள் மாடியேறி தன் அறைக்குச் சென்று அமர்ந்து விட்டாள்.
“அம்மா உனக்கு என் வாய்க்கு ருசியா சமைச்சு தர ஆசையா இருந்தா இங்க இருந்து என்னைய கவனி.. இல்ல எனக்கு என் புருஷன், புள்ள, காடு கழனி தான் முக்கியம்னா நீங்க மட்டும் கிளம்புங்க… உங்களுக்கு உங்க வீடு எப்படியோ… அப்படி தான் எனக்கு என் வீடும் .. ” என தேவகிக்கு பதில் சொன்னவள் தேவராஜனிடம் ,
“அண்ணா சின்ன வயசுல யார் என்னவாகப் போறேன்னு கேட்டாலும் டாக்டர் னு சொல்லுவேன்… ஒரு டைம் மேல என்ஜினியர்னு சொன்னேன்… ஃபெமினா புக் படிக்கிறப்ப எல்லாம் நாமளும் மாடலாகணும்னு ஆசைப்படுவேன். அப்புறம் நம்ம கரும்பு ஃபேக்டரி போய் சீனி எடுக்கிறதப் பார்த்ததும் , அக்ரி படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அது அப்படியே கன்டினியூ ஆச்சு… இப்ப குழந்தை வந்தவுடனே இன்னும் குழந்தைங்களா .. ” என புன்னகையுடன் சொல்லப் போனவளை ,
“பாப்பா… பாப்பா … நீ சொன்னா சரியா தான் இருக்கும் … ஆனா படிப்பவிட்டுறக் கூடாது மா… நான் எங்க யுனிவர்சிட்டில இப்பவே சேருறது போல என்ன கோர்ஸ் இருக்குனு பார்க்கிறேன். ஆனா என்னை விட மச்சான் ரொம்ப ஃபீல் பண்ணுவான்… ஃபோன்ல பேசறப்ப உனக்கு அக்ரி சம்பந்தமா நிறைய புக்ஸ் ரெஃபர் பண்ணதே ஆதவன் தான் … என்னவோ கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.. ஏதோ ஒரு டிகிரியாவது முடிச்சிடலாம்மா… உடம்ப பார்த்துக்கோ” என்று விட்டான்.
தில்லை வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக பேசினாலும் தேவா வருந்தியதைப் பார்த்து அவளுக்கும் வருத்தமாக இருந்தது. அதுவும் ஆதவனும் தான் படிப்பதை ஊக்குவித்து இருக்கிறான் என்ற போது … “மாமா.. எனக்கு தெரியும் உங்கள..அதுதான் இப்ப சொல்லக் கூடாதுனு எல்லாரையும் அன்பாலயே கட்டிப் போட்டு வச்சுருக்கேன்… இப்ப தாமரையை எப்படி சமாளிக்கிறது…என்ன சொன்னா நம்புவாள்…”
யோசித்து அவளிடம் இது தான் காரணம் என்றாள்.தாமரையும் இருக்கலாமோ என நம்பினாள்.தோழிக்காக இருக்கும் அத்தனையையும்… இழந்த.. இழக்கப்போகும் தில்லைநாயகி அப்படியொரு நம்பும்படியான காரணத்தை தான் கூறினாள்.
இந்த பச்சைக்கிளி இன்பமே…
பொய்மையா பொய்மையா…
இங்கு பாவப்பட்ட ஜென்மமே…
பெண்மையா பெண்மையா..
(என்ன காரணம் கூறியிருப்பாள். உங்கள் யூகம் என்ன வாசகர்களே..,)