அலை 18 ( 2 )

                “பாரு பாப்பா டாக்டருக்கு படிக்கிற புள்ளையே சொல்லுது.. வா சாமி… அண்ணன் வந்ததும் சொல்லிட்டு நேரத்தோடயே கிளம்பலாம்…” என்றதும் , தாமரையிடம் ..

“செல்வி.. இனிப்பு திகட்டுற மாதிரி இருக்கு… கொஞ்சமா சுடு தண்ணி வேணும்டி.” சொன்னதும் தண்ணிக் கொண்டு வர எழுந்து சென்று விட்டாள் தாமரை. அவள் சென்றதும் தேவகியிடம் ,

“அம்மா பேசாம நீங்க  இங்கிருந்து எனக்கு சாப்பாடு ஆக்கி தறீங்களா..”

“அது எப்படி பாப்பா… அங்க உங்க அப்பா … அண்ணன எல்லாம் கவனிக்க வேண்டாமா.. நான் அங்க இல்லனா ஒருத்தரும் சரியா சாம்பிடறதும் இல்ல.. காடு கழனி எல்லாம் அப்படியே போடவும் முடியாது.”

“பார்த்திங்களா எனக்காக கூட இங்க இருக்க மாட்ட .. ஆனா நான் மட்டும் அங்க வரலாமா… உனக்கு ஒரு நியாயம் …எனக்கு ஒரு நியாயமா.. இங்க நான் கவனிச்சுக்க வேண்டாமா.. இது என் வீடுனு தானே சொல்லுவீங்க.” என கேட்க ஆரம்பித்தாள்.

 மகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவராக “அப்ப என்ன தான் பாப்பா செய்யறது.பிள்ளைய பத்திரமா பெத்து எடுக்கணுமே … செண்பாவும் அவ கொழுந்தன் பொண்டாட்டியும் இராவுல வீட்டுக்குப் போயிடுவாக… அப்பவும்  துணைக்கு இருக்கிற மாதிரி முத்தாவர்ணம் பெரியம்மாவ இங்க மருமவளுக்கு துணைக்கு வச்சுட்டுப் போவமா…”

“ஷ்.. ம்மா… முத்துப் பாட்டி வந்தா.. அவுக எங்கள கவனிக்கிறாகளோ இல்லையோ.. நாங்க தான் அவுகள கவனிக்கிற மாதிரி இருக்கும் … “

“என்ன சாமி ஏட்டிக்கு போட்டியா எதையாவது சொல்ற… முடியாது எனக்கு நீயும் என் பேரப்புள்ளயும் முக்கியம்… இந்த முறை அண்ணன்கிட்ட பேசப் போறேன்…”

“என்ன பேசுவ… என்னைய கூட்டிட்டுப் போறேன்னு சொல்லுவ…பெரிய மாமா காலையிலயே கிளம்பி வேலைக்குப் போனா நைட்டு தூங்க மட்டும் தான் வீட்டுக்கே வர்றாரு.. இல்லையா தொழில் விஷயமா ரெண்டு மூணு நாள் வெளியூர் போய் தங்கிடுறாரு.. அப்ப செண்பா மதினி வீட்டுக்குள்ள படுத்தா… அந்த அண்ணன் வெளிய கட்டில் போட்டுப் படுத்துக்கிறாரு.. வீட்ட சுத்தி ஆளுங்க இருந்தாலும் இவ்வளவு பெரிய வீட்ல பயமா இருக்குமா .. இதுல அவ மட்டும் தனியா இருந்தா பயப்பட மாட்டாளா..”

“இதுக்குத் தான் மதினி ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல கல்யாணம் பண்ண சொல்லிச்சு நீ வேண்டாம்னுட்ட… இன்னும் ரெண்டு மாசந்தேன் மருமவன் வந்ததும் செல்விக்கும் உங்கண்ணனுக்கும் பேசி முடிச்சு அடுத்த நாலு மாசத்துல கல்யாணம் வைக்கச் சொல்லப் போறேன் .. அதுவரை செல்வி புள்ள ஆஸ்டல்ல பத்திரமா இருக்கட்டும். அதுக்கப்புறம் உன்னை விட பத்திரமா நானும் எம்புள்ளையும் மருமகள நம்ம வீட்ல ராணி மாதிரி பாத்துக்கிடுவோம்.”

“ஷ் … இந்தப் பேச்சு இப்ப பேசாதனு எத்தனை தடவை சொல்றது… ” என்றதும்,

“பின்ன என்ன பாப்பா உன்னையப் போல எங்களுக்கும் அக்கறை இருக்கத்தான் செய்யுது.. நீ படிக்கிறது போல.. செல்வியும் கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சிட்டுப் போகுது…” எனும் போது தாமரை வந்து விட தில்லை அதற்கு மேல் தேவகியிடம் பேசவில்லை. அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.. யோசிக்கலானாள். அன்று அருணாச்சலம் வந்ததும் தேவகி தனது எண்ணத்தை அவரிடம் கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

அருணாச்சலமும் மருமகளின் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்து ஆதவனிடம் தானாக எதுவும் கூற வேண்டாம் என முடிவெடுத்துக் கொண்டவர் அன்று இரவே மகளை மட்டும் அழைத்து , மருமகளின் உடல்நிலைக் குறித்துப் பேசியவர் ,

“பாப்பா உங்களுக்கே தெரியும்… ரெண்டு உயிரா இருக்கும் போது ரொம்ப கவனமா பாத்துக்கிடணும் , அதுவும் உங்க அண்ணன் இங்க இல்லாதப்ப நாம தான் மருமகளுக்கு எல்லா வசதியும் செய்து தரணும்.. நானும் அடிக்கடி வெளியூர் போகணும்..” என்றவர் தேவகிக் கூறியது போல் தில்லையை அவர்கள் ஊருக்கு சிறிது நாட்கள் அனுப்பி விடுவதோடு , தாமரையையும் விடுதியில் சேர்த்து விடுவாதக் கூறினார்.

“இல்ல உங்களுக்கு வீட்ல இருந்துதான் படிக்கணும்னு இருந்ததுனா.. உங்களுக்கு இங்க இருக்க , காலேஜ் போக வர பாதுகாப்புக்கு இன்னும் ஆட்கள ஏற்பாடு பண்ணனும் நீங்க என்ன முடிவெடுக்குறீங்களோ அப்படியே பண்ணிடுவோம்.. ஆதவன் வர்ற வரைக்கும் தான்.. அதற்கப்புறம் எல்லாத்தையும் அவர் பொறுப்புல விட்டுட்டு கொஞ்சம் ஓய்வு எடுக்கணும் பாப்பா..” என்பது போல் தன் நிலையைக் கூறினார்.

தில்லையைப் பிரிந்து இருப்பது சங்கடமாக இருந்தாலும் எல்லாம் நல்லதிற்காக தானே.. கூடவே கல்லூரி விடுதியிலும் தில்லைக் கொடுக்கும் அன்பை போல் நல்ல நட்போடு பழகும் கல்லூரித் தோழி “விஜய..”ம்ஹூம் லெட்சுமி இருக்கிறாளே… “விஜய் என்ற பெயரை சொல்லவே கூச்சப்படும் தாமரை அவளை லெட்சுமி என்று தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

எனவே தந்தையிடம் தான் கல்லூரி விடுதியிலேயே தங்கிக் கொள்வதாக சொன்ன தாமரை ,அறைக்கு வந்து ,

“திலோ.. பாப்பா நல்லபடியா பிறக்கணும்… அதுக்கு நீ நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கணும்.. அண்ணன் பக்கத்துல இருந்தா கவலையில்லை… உன்னைய பூப்போல பார்த்துக்கும் … ” என்றதும்..தில்லை ஆதவனின் நினைவில் , “அப்படியா எந்த பூப்போல டி. இந்த தாமரைப் பூவைப் போல வா…” என அவள் கண்ணம் தட்டி கேலி செய்ய ,

“நிச்சியமா.. அம்மாவிட அண்ணன் கூட தான் நான் இங்க இருக்கும் போதெல்லாம் சுத்திட்டே இருப்பேன்… உன்கிட்ட கூட சொல்வேனே… அந்த அளவுக்கு என்னைய நல்லாப் பார்த்துப்பாங்க.. தங்கச்சி என்னையவே பூப்போல பார்த்துக்கிறவங்க… உன்னையவும் பாப்பாவையும் எப்படிப் பார்த்துக்குவாங்க …” என்றதும் தில்லையின் முகத்தில் வெட்கசாயல் … அதை மறைத்து …

“சரி சரி… இப்ப என்ன தான் சொல்ல வர்ற..” என்றதும்..” எனக்கும் உன்னைய நல்லா பார்த்துக்க ஆசைதான் …ஆனா அதுக்கான வாய்ப்பு இப்ப அமையுமா தெரியல… அது தான் அப்பா சொல்ற மாதிரி.. ” என ஆரம்பித்தவள் அவர் கூறிய காரணங்களை எல்லாம் அடுக்கி … கட்டிலில் அமர்ந்திருந்த தில்லையின் முன் மண்டியிட்டு அமர்ந்து , அவள் வயிற்றின் மேல் கையை வைத்து ,

“செல்லம்… நீங்க நல்லா சாப்பிட்டு நல்லா ஹெல்தியா வளரணும்.. இந்த அத்தைக்கு உங்கள கவனிச்சுக்க முடியல அதனால நீங்க கொஞ்ச நாள் உங்க அம்மாச்சி வீட்ல இருந்துட்டு வருவீங்களாம்… உங்க அத்தை ஹாஸ்டல்ல இருந்து வாரா வாரம் உங்களுக்கு ஃபோன் பண்ணி பேசுவேனாம்..” என்ற போதே தாமரைக்கு அழுகை வர..கண்களைத் துடைத்துக் கொண்டே ..

” அண்ணன் வந்ததும் முடிஞ்சா வீட்ல இருந்து காலேஜ் போகப் பார்க்கிறேன்… நீ உடம்ப பார்த்துக்கோ சரியா..” என்ற தாமரை எழுந்து மறுபுறம் திரும்பிப்  படுத்துக் கொண்டாள். அவள் வருந்தி அழுகிறாள் என்பதைக் கூட அறியாமல் இருப்பாளா தில்லை.

“சொல்றத சொல்லிட்ட… இருக்கட்டும் நான் பார்த்துக்கிறேன். காலையில தான் எங்கம்மா வரப் போறாங்களானு துள்ளிக் குதிச்ச.. இப்ப இப்படி அழுகிற.. உனக்கு என்னையத் தெரியுதோ இல்லையோ… உன்னைய எனக்கு நல்லாத் தெரியும் டி… இப்படி அவசரமா உங்கண்ணன கல்யாணம் பண்ணி வந்ததே உனக்காகதான்னு உனக்கு தெரியப்போறதில்ல … லூசு நான் அங்க போய் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கணுமாம்…” என அவளைப் பார்த்த வண்ணமே மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் , பலவாறு யோசித்து ஒரு முடிவெடுத்துக் கொண்டாள்.

மறுநாள் சிறிது சோர்வாக இருப்பதாகக் கூறி தில்லைநாயகி கல்லூரிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டாள். முதல் நாளே சிறிய சாக்லேட் அட்டைப் பெட்டி ஒன்றை வாங்கி வைத்திருந்த தாமரையிடம் ,

“நர்சிங் காலேஜ் போற கார்த்திகா… அப்புறம் கெமிஸ்ட்ரி சுந்தரி ரெண்டு பேருக்கும் நடுவுல உட்கார்ந்துக்கோ.. நீ இன்னைக்கு சாக்லேட் வேற கொடுக்கப் போற.. உன்னைய இன்னைக்கு மடியில கூட உட்கார வச்சுக்குவாளுக..” என வாசல் வரை வந்தவள் , “பஸ் ஸ்டாப் வரை நான் வரட்டுமா டி.. இல்ல மதினி…” என செண்பாவை அழைத்தாள் தில்லை.

“ச்சூ… நான் சின்னக் குழந்தையாடி… அதோ தெரியுது ஸ்டாப்… இதுக்கு துணைக்கு வர்றாளாமா… நானே போய்க்குவேன் …”

“இருக்கட்டும்…” என்ற தில்லை செண்பாவை பஸ் ஸ்டாப் வரை அனுப்பி வைத்தாள். தோழியின் கன்னம் இரண்டையும் கையால் கிள்ளி ,

“போடி … அப்படியே எங்கம்மா மாதிரியே பன்றடி … ரெஸ்ட் எடு..” என்றவள் பேருந்து நிறுத்தத்திற்கு செண்பகாவுடன் சென்றாள். தில்லைக்கு தாமரையும் தன் வயது பெண் தான் என்பதெல்லாம் நியாபகத்தில் கிடையாது. தன்னுடன் சிறு வயதில் இருந்து வளர்ந்த அமைதியான பெண். அவளுக்காக, தான் அனைத்தும் செய்ய வேண்டும்.. அதுவும் இப்போது தாமரை தனது பொறுப்பு என்பதை மட்டுமே நினைவில் நிறுத்தியிருந்தாள் தில்லைநாயகி.

மதுரை பேருந்து நிலையம் வந்து இறங்கியவள் விழிகளால் விஜயைத் தேடிக் கொண்டே வந்தாள். ஊரிலிருந்து உடன் வந்த கார்த்திகா மற்றும் சுந்தரி வரும் வழியில் இருக்கும் அவர்களது கல்லூரியில் இறங்கிக் கொள்வார்கள். எனவே தனியே நின்ற தாமரை அவளது பேருந்து நின்றும் ஏறாமல் இருக்க… விஜய் அருகில் வந்து ,

”  எங்கே சிஸ்டர காணோம் ,அவங்க காலேஜ் லீவா…” என்றவன் , அவளது விழிகள் மகிழ்ச்சியைக் காட்டியதும் , “என்னைய தான தேடின… ” எனவும் , தனது பையிலிருந்து சிறிய அட்டைப் பெட்டியை திறந்துக் காட்டினாள். உள்ளே இருந்த சாக்லேட் ஒன்றையும் எடுத்துக் கொண்டவன் , 

“உன் பிறந்த நாள் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே வந்துருச்சு… இது… ” என்றவனுக்கு என்ன பதில் சொல்வது, அண்ணனுக்கே இன்னும் தெரியாது.. என தாமரை யோசிக்கும் போதே ஒரு வயதான பூக்கார அம்மா பூக்கூடையுடன் விஜயினிடத்தில் வந்து ,

“பேரா … உன் தங்கச்சி இன்னைக்கு வரலையேப்பா…” எனவும்.. சிரித்துக் கொண்டே , “இந்தாங்க பாட்டி.. அவங்க இன்னைக்கு காலேஜ் போகல ..” என்றவாறு அவரிடம் அப்போது புழக்கத்திலிருந்த ஐந்து இரண்டு ரூபாய் தாள்களாகக் கொடுத்தனுப்பினான். புரியாமல் பார்த்தவளிடம் ,

“ஆதவோட தங்கச்சி மட்டுமல்ல அவனோட மனைவியின் பாதுகாப்பும் எனக்கு முக்கியம். நான் உன் பஸ்ல ஏறி வந்துடுவேன் , அந்த பாட்டி ஆதவ் வொய்ஃப் க்கு பாதுகாப்பா அவங்க காலேஜ் வரை போய்ட்டு வர தில்லை சிஸ்டருக்கு தெரியாம் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.” என்றவனை நன்கு ஏறிட்டுப் பார்த்தாள் தாமரை.. அவன் மீதான காதல் அதிகரித்துக் கொண்டே சென்றது.

பார்வை செய்த சோதனை 

நாளும் இன்ப வேதனை

இருவரது விழிகள் மட்டும் பேசிக் கொண்டிருந்த சில நொடிகளில் அவள் ஏற வேண்டிய பேருந்து நகரத் துவங்க இருவருமே உணர்வுக்கு வந்து மெல்ல நகர்ந்த பேருந்தின் பின் படிக்கட்டில் வேகமாக ஏறினர்.

தாமரை கூட்டத்தில் முன்னே நடக்க பின்னாலயே விஜய் நடந்தான். பேருந்து, பேருந்து நிலையத்தை விட்டு வெளியேற வளைவில் திரும்ப … அனைவரும் ஒரு புறமாக சாயத் துவங்கினர்.தாமரையும் விஜயின் மீது சாய்ந்து நிமிர்ந்திருந்தாள்.அன்று விஜயின் தொடையை மட்டும் உரசிய அவளது கூந்தல் இன்று அவன் நெஞ்சில் முழுதாக பதிந்து மீண்டது.

பாவை உந்தன் கூந்தல் இன்று..

போதை வந்து ஏற்றும் போது…

பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில் ..

வந்திடாத மாற்றம் ஏது..

அன்று தன்னுணர்வு இல்லாத நிலையில் விஜய் கரம் பிடித்தான் தான் … அது அப்போது தெரியவில்லை. ஆனால் இன்று …தாமரை முதன் முறை உணர்ந்த விஜயின் ஸ்பரிசம் அவளது உயிர் வரை தீண்டிய உணர்வு. மொத்தத்தில் அந்த இளம் காதலர்களுக்கு… அதுவும் விஜயானந்தனுக்கு பேரானந்ததத்தைதான் கொடுத்தது. பேருந்தில் இருந்து இறங்கும் வரை அந்த சுகத்தை அனுபவித்தான் விஜயானந்தன்.