Advertisement

 அலை18 ( 1 )

                 அன்று விடுமுறை தினம் என்பதால் பெண்கள் இருவருமே வீட்டில் தான் இருந்தனர்.தேவாவின் வண்டி சத்தத்தை நன்கு தெரிந்து வைத்திருந்த தில்லை , அவனை எதிர்பார்த்து வீட்டின் முன் வாசல் வந்து நின்றாள். காரிலிருந்து இறங்கும் போதே தேவகி மகளைப் பார்த்து விட்டார்.

முதலில் மெதுவாக பைகளை எடுத்து வந்தவர் அருகில் வர வர நடையின் வேகத்தை அதிகரித்து தில்லையின் அருகில் வந்து நின்றார். பல நாட்களுக்கு பிறகு பார்த்ததாலோ ,இல்லை சில சமயங்களில் தாயைத் தேடியதாலோ என்னவோ தில்லைக்கு தேவகியைக் கண்டதும் அழுகை வந்து விட்டது.புன்னகையோடே “அம்மா… ” என அழைத்த மகளை உற்று நோக்கிய தேவகியின் முகமும் பூரித்து மகிழ ,

“பாப்பா..” என்றவர் அவளை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு கைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தேவகியின் பெற்றோர் மற்றும் அவர்களது மறைந்த மூத்த உறுப்பினர்களது ஓவியப் புகைப்படங்களோடு தற்போது மாட்டப்பட்டிருந்த மீனாட்சியின் புகைப்படம் அருகே அழைத்துச் சென்றவர் ,

“சாமி அம்மாகிட்ட விளையாடாம உண்மையச் சொல்லணும்… நீ இன்னும் தலைக்கு ஊத்திக்கலதானே…” எனவும் சிறிது தயங்கினாலும் , முகம் புன்னகைப் பூச , “ஆம்…” எனத் தலையாட்டினாள். சமையலறையை விட்டு வெளியே வந்த தாமரை, செண்பகா , துணைக்கு இருக்கும் செண்பகாவின் மைத்துனன் மனைவி , தேவகி பின்னால் வந்த தேவராஜன் என அனைவரும் சற்றுத் தள்ளி நின்று அவர்களது உரையாடல் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தேவகி மகளை கட்டியணைத்து நெட்டி முறித்தவர் வழக்கம் போல் சாமி படங்களுக்கு முன் இருந்த விபூதியை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டவர் ,

“சாமி .. நாள் தள்ளிப் போனா அம்மாகிட்ட முதல்லயே சொல்ல வேண்டாமா.. வா பாப்பா இப்பவே டாக்டருகிட்ட போகலாம்..” எனத் திரும்ப…

“அம்மா அதெல்லாம் டாக்டரப் பார்த்து செக் அப் பண்ணிட்டேன்…” என்றவளை அதிர்ச்சியோடுப் பார்த்தார். அந்தப் பார்வை மற்றவர்களை குழப்ப , தேவா “என்னம்மா ..” என்பதாக அருகில் வர , தில்லையும்

” என்னாச்சு அத்தை.. ” என்ற பதற்றத்துடன் தில்லையின் அருகில் தோள் பிடித்து நின்றாள்.

தாமரையின் பதற்றமும் அவளுக்கும் ஒன்றும் தெரியாது என்பதை உணர்த்த ..தாமரையைப் பார்த்து ,

“சாமி.. நீ அத்தையாகப் போற… ” என்றவர் , அருகில் நின்ற மகனிடம் “ஐயா நீ தாய்மாமனாக போற… உன் தங்கச்சி குழந்தை உண்டாகி இருக்காப்பா…” என தாமரை, தேவா  என இருவரையும் பார்த்துக் கூறினார். தாமரை மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவள் , தில்லையின் தோளோடு அணைத்து, . “திலோ … எனக்கு என்ன சொல்றதுனே தெரியலடி ” என்றவள் கண்ணீருடன்,

“ரொம்ப ஹாப்பியா இருக்கு … எங்கம்மா  உன் மூலமா திரும்பி வரப் போறாங்களா..” என்றவள் தில்லையை அணைத்து முத்தமிட்டு கட்டிப்பிடித்துக் கொண்டாள்.தில்லை தாமரை மகிழ்வாள் என்று எதிர்பார்த்ததுதான். ஆனால் இது போல் கூறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படியே அசையாது யோசித்து நின்று விட்டாள்.

“திலோ .. அண்ணன் அப்பாகிட்ட எல்லாம் சொல்லலாம்….” என்றவள் மணிப் பார்க்க… அது காலை ஒன்பதரை என்பதைக் காட்டவும்..” இப்ப அங்க அண்ணன் தூங்கிட்டு இருப்பாங்க.. அவங்க தங்கியிருக்க இடத்துக்குப் பேசுறதும் கஷ்டம்… அப்பாவும் இப்ப தானே கிளம்பினாங்க… அரை மணி நேரம் கழிச்சு ஃபேக்டரிக்கு பேசுவோம்… நீ அத்தை கிட்ட பேசிட்டு இரு.. நான் ஸ்வீட் செய்து எடுத்துட்டு வாறேன்…” என்ற தாமரை பறக்காத குறைதான். அந்த அளவு உற்சாகத் துள்ளலோடு சமையலறைச் சென்றாள்.

அதனை தில்லை மட்டுமில்ல அங்கிருந்த அனைவருமே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.செண்பகா மீனாட்சி இருக்கும் போது தாமரையை இப்படிப் பார்த்திருக்கிறார்.. அதன் பின் இன்று தான் இந்த மகிழ்ச்சியுடன் பார்ப்பதால் தில்லையிடம் ,

“சாமி ,செல்வி பாப்பாவ ரொம்ப நாளைக்கு அப்புறம் முகதெளிச்சியோட பார்க்கிறேன்.. வாரிசு வரப்போற நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க .. போய் இனிப்பு எடுத்துட்டு வாறேன்..” என.. தேவகி செண்பாவிடம் ,

“செண்பா… உன் கொழுந்தன் பொண்டாட்டி நேத்து கல்யாணமாகி வந்தவ.. ஆனா நீ மூணு பிள்ள பெத்தவதான கூடவே இருக்க உனக்கு தெரியலயா..”

“எ(அ)த்தை.. நம்ம வீட்டுக்கு பத்தே நாள்ல இளவரசரு வருவாருனு நான் எதிர்பார்க்கல… ” எனவும் அவள் தோளில் தட்டிய தேவகி , புன்னகைத்துக் கொண்டே , ” உன்னையப் போய் கேட்டேன் பாரு… போடி அங்குட்டு…” என்றதும் செண்பாவும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்

தேவாவிற்கு செய்திக் கேட்டு மகிழ்ச்சியாக இருந்தாலும் , “சின்ன பொண்ணு.. படிக்கவும் செய்றா…” இப்படி ஒரு கலவையான உணர்வுகள்..தங்கையிடம் , ” உடம்ப பார்த்துக்க பாப்பா…” என்று விட்டு மாலையில் தந்தையுடன் வருவதாகக் கூறிச் சென்று விட்டான்.

மகளை தனியே அழைத்துச் சென்ற தேவகி , “பாப்பா உனக்கு முதல்லயே தெரியுமா.. அப்ப அம்மாகிட்ட ஏன் சொல்லல… “

“போம்மா எனக்கு எப்படித் தெரியும்.” என்றவள் அனீஸ் குறித்துக் கூறி , “அது மட்டுமில்ல.. இதை எப்படி மா வெளியச் சொல்ல.. அத்தை இறந்து ஒரு வருஷம் கூட ஆகல.. இப்ப போய் இந்த விஷயத்தை எனக்கு வெளிய சொல்ல வெக்கமாயிருந்துச்சு மா.. இப்ப பாரு விளையாட்டானாலும் செண்பா மதினி சொல்ற மாதிரி தானே எல்லாரும் சொல்லுவாங்க..” என தான் மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டு இருந்ததைக் கூறினாள்.

“இதுல என்ன பாப்பா இருக்கு… ஆம்பிள்ளைங்க வெளியவும் வீட்லயும் எவ்வளவோ பிரச்சினைகளை சந்திக்கிறாங்க.. அதையெல்லாம் தாண்டி அடுத்த அடுத்த வேலைகளைப் பார்க்க பொண்டாட்டிங்க ஒரு வடிகால் தான் அவங்களுக்கு .. அது உளவபூர்வமாவமா மட்டுமில்ல… உடல் பூர்வமாவும் தான் … ” என்றவர் மகளின் முகம் நிமிர்த்தி ,

” நான் சொல்றது புரியுதுல தங்கம் … இதுல வெக்கப்பட ஒன்னுமில்லடியம்மா… இப்படி தலைகுனிய அவசியமும் இல்ல…நீயே பார்த்தல்ல மருமவன் அவுக அம்மா உடம்பு சரியில்லாம போனதுலருந்து எவ்வளவு இறுக்கமா இருந்தாரு.. அப்பா ஒரு பக்கம் , தங்கச்சி ஒரு பக்கம்.. தொழிலு, படிப்பு ஒரு பக்கம்னு எம்புட்டு பிரச்சினைல இருந்துருப்பாரு… அதையெல்லாம் யார்கிட்டயும் காட்டாம இறுக்கமா இருந்த மனுஷனோட மனச பொண்டாட்டி நீதான் நீ தான் தளர வச்சிருப்ப… இது கடவுளோட முடிவு சாமி … எங்க மதினியும் இதை தான் ஆசைப்பட்டிருப்பாக… பிள்ளைக்காக ஒவ்வொருத்தரும் தவம் கிடக்காக சாமி … இதுல கூச்சப்பட ஒன்னுமே இல்ல.. சரி இங்க உள்ள எங்க கிட்ட தான் சொல்லல ,மருமவன் கிட்டயாவது சொல்லிட்டியா…”

“இல்லை” என்றதும் தேவகிக்கு இன்னும் அதிர்ச்சியாகி , “என்ன சாமி விளையாட்டா இருக்கிற… சரிவா எந்த டாக்டர்கிட்ட போன … நான் வந்து பேசுறேன்…” என்றதும் தயங்கி தயங்கி தில்லை விவரம் சொல்ல…

“உன் அப்பாரு அவரு பங்காளிங்களுக்கெல்லாம் ஆஸ்பத்திரி கட்ட பணத்த அள்ளி அள்ளி கொடுத்தாரு..  என் பொண்ணு தருமாஸ்பத்திரி போய் பார்க்கணும்னு தலையெழுத்தா… வா பாப்பா கஸ்தூரி அக்கா கிட்ட போகலாம்…” என அவரது உறவின மருத்துவர் பெயரைக் கூறி அழைத்தார்.

“ம்மா.. கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்னா உனக்கு இளக்காரமா.. அங்கேயும் நல்லாதான் பார்க்கிறாங்க… இப்படி நீ ஊருக்கே செல்லுவனு தான் நான் கஸ்தூரி பெரியம்மாவ கூட பார்க்க போகல..” என்றவளுக்கு அரசாங்க மருத்துவமனையில் இருந்த செவிலியர் பேசியது இன்னும் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.

“தெரிஞ்சா என்ன… வாரிசு வரப்போகுது வா பாப்பா…” என அழைக்க…

“ம்மா நான் டாக்டர் கிட்ட வாறேன்… ஆனா அதுக்கு முன்ன எனக்கு ஒரு உறுதிக் கொடு..” என உள்ளங்கையை அவர் புறம் நீட்ட…

“இப்ப போய் இதெல்லாம் வேண்டாம்… என்னனு சொல்லு நான் செய்றேன்…” என்றதும் , “ம்மா இந்த விஷயத்தை நாந்தான் மாமா கிட்ட முதல்ல சொல்லணும்னு ஆசைப்படுறேன்… அதுவும் நேர்ல… அதனால நீங்க யாரும் மாமாவுக்கு சொல்லக் கூடாது.” எனும் போதே தாமரையும் கைகளில் கிண்ணங்களுடன் வந்து விட்டாள். தில்லைக் கூறியதையும் கேட்டிருந்ததால் ,

“திலோ .. உன் ஆசைப்படியே நடக்கும் … நானா அண்ணன்கிட்ட சொல்லல… அத்தை பாயாசம் எடுத்துக்கோங்க… இனி உனக்கும் பாப்பாவுக்கும் சேர்த்து சாப்பிடணும்.. எங்க சீனியர் கிட்ட உனக்கு என்னென்ன  சாப்பிட தரலாம்னு கேட்டுட்டு வந்து செய்துக்கொடுக்கிறேன். ” என்றவளைப் பார்த்து ,

“அம்மா.. இவ தினமும் ஏதாவது புதுசா செய்துக் கொடுத்து சாப்பிட வச்சு , என் ட்ரஸ் எல்லாம் டைட்டாகிருச்சு.. இனி டபுளா தருவாளே… ” என தன் உடல் எடை கூடியதற்கான காரணமாக கூறினாள். 

தாமரை மகளை நன்கு கவனித்துக் கொள்கிறாள் என்பது தேவகிக்கு மகிழ்ச்சியே..

“நீ இப்படி தொள தொளனு சாமியார் அங்கிய போட்டு வயிறு தெரியாம பண்றியே பாப்பா…” எனவும், தில்லை ,

“அப்படியும் நீ பார்த்தவுடனே கண்டுபிடிச்சுட்டியே.. எப்படி மா” என தாயிடம் செல்லம் கொஞ்ச..” உன்னைய பெத்தவடி நான்.. எனக்குத் தெரியாமா போகுமா …நல்ல வேளை அந்த பாய் வீட்டு பொண்ணு உன்னைய கவனிச்சுப் பாத்துக்கிட்டது.. இல்லாங்காட்டி … ” என தில்லையை நினைத்து வருந்தியவர் ,இச்சமயத்தில் தான் அவளுடன் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்ததோடு , அவள் கேட்ட வாக்குறுதியை கொடுத்த பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

அவரது எண்ணம் ஆதவன் திரும்பி வர இன்னும் இரண்டு மாதம் தானே… படிப்பு முடியும் சமயம் எந்த தொந்திரவும் தாங்களாக கொடுக்க கூடாது. அவர் வரும் வரை நாம் மகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டால் போதும் என நினைத்து தான் அந்த வாக்குறுதியைக் கொடுத்ததும்.

இதோ அவர்களது உறவினரது மருத்துவமனைக்கு தில்லையை அழைத்துக் கொண்டு வந்து அத்தனை பரிசோதனைகளையும் செய்து முடித்து மருத்துவரின் ஆலோசனைப் பெற அமர்ந்திருந்தனர்.

“தேவகி … தில்லைக்கு ரொம்ப சின்ன வயசு.. என்ன பண்ண மீனா மதினி ஆசைக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்.. என்ன குழந்தைப் பிறப்ப கொஞ்சம் தள்ளி வச்சுருக்கலாம் … இப்போதைக்கு ஒன்னும் பிரச்சினையில்லை எல்லாம் நார்மலா தான் இருக்கு.. எதுக்கும் பஸ்ல போறத குறைச்சுக்கோ தில்லை..” என தன் தங்கை மகளுக்கு ஏகப்பட்ட பத்திரங்களை கூறி அனுப்பினார்.

வீட்டிற்கு அழைத்து வந்த தேவகி , “பாப்பா நம்ம வீட்டுக்கு வாரியா மா.. அம்மா கையால சாப்பிடலாம்… அதோட பக்கத்துல காலேசு … அப்பா அண்ணன்னு மாத்தி மாத்தி மெதுவா வண்டில கொண்டு விடுவாக ..” என்றவரை முறைத்துப் பார்த்தாள். அருகிலிருந்த தாமரைக்கும் அது சரியாகவேப்பட்டாலும் அவள் சென்று விடுவாள் என்பதும் வருத்தமாக இருந்தாலும் ,

“அத்தை சொல்றதும் சரிதான் திலோ … நீ கொஞ்ச நாள் அத்தை கூட இருந்துட்டு வா…” என மெல்லிய குரலில் கூறினாள். அந்த குரலும் முகமுமே அவளது வருத்தத்தை நன்கு காட்ட , அவள் வருத்தத்தைப் போக்குவதற்கான வழிகளைதான் யோசித்தாள் தில்லைநாயகி. மொத்தத்தில் அவள் இங்கு வந்த நாளிலிருந்து தாமரையைச் சுற்றி மட்டுமே அவள் வாழ்க்கைச் சென்றுக் கொண்டிருந்தது.

              

            

Advertisement