திருமணமாகிச் சென்ற அனீஸ் கணவனுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினாள். அவள் புகுந்த வீட்டாரும் அவளை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். ஆதவன் போலவே மேற்படிப்புக்காக அவள் கணவன் ரஃபியும் திருமணம் முடிந்த மறுமாதமே வெளிநாடு சென்று விட, நடந்துப் போகும் தூரத்திலேயே இருந்த பெண்கள் கல்லூரியிலேயே அனீஸை பி.எஸ்.சி தாவரவியல் பிரிவில் சேர்த்து விட்டனர். ரஃபி யின் அக்காக்கள் இருவரது வீடுகளும் அதே ஊர் தான். அவர்களது கணவன்மார்கள் அரபு நாடுகளில் பணி புரிவதால் பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகளை அனுப்பி விட்டும் கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டும் இருவரும் அம்மா வீடு வந்து விடுவர்.
மதியத்திற்கு மேல் கல்லூரி கிடையாது என்பதால் , வீட்டிற்கு வந்தவர்களை உபசரிப்பதும் அவர்கள் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு விளையாடுவதும் சாப்பாடு ஊட்டுவதுமாக இரவு வரை இருப்பாள் அனீஸ்.
அவர்கள் கிளம்பியதும் பணிப் பெண் ஒருவரோடு இணைந்து வீட்டை சுத்தம் செய்து இரவு மாமியாருக்கு உதவிப் புரிந்து விட்டு படிப்பதும் படுப்பதுமாக இருப்பாள்.
யாரும் அவளைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது எல்லாம் இல்லை. அதுவரை தன் கதைகளை சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்த அனீஸ், கண்கள் கலங்க… “ஸ்கூலுக்கு போனமா படிச்சமானு இருந்த எனக்கு என்னடி தெரியும்… பிஸ்டூ பரிட்சை முடிஞ்ச ஒரு வாரத்துலயே கல்யாணம்…அவரு இப்ப போனா ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் வருவாராம்.
அவங்க வாப்புமா (அப்பாவின் அம்மா) வேற உடம்பு சரியில்லாம இருந்தாங்களா அதனால உடனே நிக்காஹ் பண்ண பேசிட்டாங்க. எனக்கு பதினெட்டு ஆகுறதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருந்தது. அதுக்கு முன்னாடி கல்யாணம் பண்றது நம்ம நாட்டு சட்டப்படி தப்பு. அதனால பெரிசா செய்யல… சொந்தக்காரங்க மட்டும் தான்.
ஆனா அப்ப எனக்கும் தெரியல எங்க வீட்ல உள்ளவங்களுக்கும் தெரியல… ம்ம்.. ” எனப் பெருமூச்சு விட்டு ,
“அன்னைக்கு அப்படித்தான் காலேஜ் போயிட்டு வந்தப்ப மைனி மகள் என்னையப் பார்த்து ஆசையா ஓடி வரவும் தூக்கினேன் டி..” என்றவள் சிறிது நேரம் அழுது விட்டாள். பின் ,
“முதுகுல ஒரு பிடி … நிமிரவே முடியல… பார்த்தா பீரியட்ஸ்… அது தான் உடம்பு வலிச்சுருக்குதுனு நான் நாலு நாளா சமாளிச்சேன் காலேஜூம் போக முடியல.. அஞ்சாவது நாள் ஹாஸ்பிட்டல தான் கண் முழிச்சேன். “
“நான் குழந்தை உண்டாகி இருக்கேன் திலோ.. எழுபது நாள் பே்பியாம் .. அது உடம்புக்குள்ளேயே கலைஞ்சு போனதுல இன்ஃபக்ஷன் ஆகி ரொம்ப சீரியஸான நிலைமைக்குப் போய் உயிர் பிழைச்சு வந்துருக்கேன். இதுல எங்க மாமியார் வீட்ல நான் கவனமா இருந்துருக்கணும்னு திட்றாங்க.. அவங்க முதவாரிசாச்சே… எங்கம்மா … அவங்க வீட்ல என்னைய சரியா கவனிக்கலனு பேசி பிரச்சினையாகி எங்களுக்கு தலாக் செய்யற அதாவது டைவர்ஸ் பண்ற நிலமைக்கு போயிட்டாங்க.. அப்புறம் எப்படியோ சமாதானம் ஆனாலும் எங்க மாமி என்னைய அவங்க பையன் வர்ற வரை அம்மா வீட்ல இருக்கச் சொல்லிட்டாங்க…
அம்மா வீடு இங்க திண்டுக்கல் பக்கம்… திரும்ப எப்படி அங்க போய் படிக்கிறது … அப்புறம் என் ஹெல்த்தும் சரியில்ல.. போன வருஷம் அப்படியே போயிருச்சு.. அவர் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தான் வருவார்… அதான் எங்க சாச்சி நான் கூட வே இருந்து பார்த்துக்கிறேன்னு என்னைய இந்த காலேஜ்ல சேர்த்துட்டாங்க.. அதுதான் உனக்கும் சொல்றேன்… உன் ஹஸ்பண்ட் கல்யாணமாகி பதினஞ்சு நாள் கழிச்சு தானே ஊருக்குப் போனாரு…”
“இல்ல அனீஸக்கா.. பத்தொன்பது நாள் ” என்றவளின் தலையை செல்லமாக தட்டி … “நல்லா கணக்கு வச்சுருக்க தில்லை.. நான் சொன்னத செக் பண்ணிக்கோ.. எனக்கும் இது போல சிம்டம்ஸ் இருந்தது … ” என்றிருந்தாள். அன்று குழம்பியே விட்டாள் தில்லை … பள்ளியில் படித்த எக்ஸ் குரோமோசோம் , ஒய் குரோமோசோம் எல்லாம் நியாபகம் வரப் போய்த்தான் அன்று தாமரையின் கல்லூரிப் பாடப்புத்தகங்களை எல்லாம் ஆராய்ந்தது.
அதில் எல்லாம் அறிவியல் விளக்கங்கள்தான்.. சாதாரண விளக்கத்தை அனீஸிடம் கேட்க கூட தயக்கம் … கூடவே.. படிக்கும் போதே மாதவிடாய் அவளுக்கு ஒரு மாதம் தள்ளிக் கூட வரும்.. தேவகி அவளுக்கு வேப்பிலை அரைத்து உருண்டை தருவார்… கருப்பட்டி பூண்டு இணைத்து அல்வா செய்து , உடம்புக்கு நல்லது.. வயிறு வலிக்காது இப்படி எல்லாம் கூறி அவள் வாயில் ஊட்டத்தான் செய்வார்.” இப்போதும் அது போல் வராமல் தானே இருக்கிறது.. சத்துள்ளதாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.” என்றவாறு தான் இருந்து விட்டாள்.
ஆனால் இன்று அனீஸ் மறுபடி நியாபகப்படுத்தியதும் சிறிது பயம், படபடப்பு, ஆசை, வெட்கம் எல்லாம் ஒன்றுக் கூடி வந்து அவளை உணர்ச்சிவசப்படுத்தியது. உடனேயே தெரிந்துக் கொள்ளும் ஆவல் வர யாரிடம் கேட்டு தெரிந்துக் கொள்வது என்றும் தெரியவில்லை.
அனீஸிடமும் ,அம்மாவிடமும் கேட்கலாம் என்றாலும் சிறிது கூச்சமாக இருந்தாலும் அப்படி ஏதாவது இருந்தாலும்.. இருக்கலாமோ என எண்ணும் போது சிறிது வெட்கமும் எட்டிப் பார்த்தது. அப்படி இருந்தால் ஊருக்கே… ஏன் உலகத்துக்கே தெரிந்துவிடுமே… “அதுவும் உடனே அண்ணன தொந்திரவு பண்ணி மாமாவ அர்த்த ராத்திரி எழுப்பி சொல்லிடுவாங்களே … என்ன செய்யலாம் … “
இதே யோசனையில் அன்று முழுவதும் இருந்தவள் மறு நாள் தாமரையிடம் , “செல்வி இன்னைக்கு எனக்கு காலேஜ் அரை நாள் தான் … நான் மத்தியானம் உன் காலேஜூக்கு வந்துடுறேன். நாம சேர்ந்து வந்துரலாம் சரியா…”, மனதினுள் , “சாரி டி… நான் தான் லீவ் போடப் போறேன்.. வள்ளுவர் சொல்லியிருக்காரே நல்லதுக்கு பொய் சொல்லலாம்னு..” என மனதுக்குள் தேற்றிக் கொண்டவளிடம் , “சரி” எனத் தலையாட்டினாலும் “விஜய் வருவானே…” என்ற எண்ணம் வரவும் சிறிது பதற்றம் தொற்றியது தாமரையினுள் .
மறுநாள் பேருந்தில் ஏறிய நேரத்திலிருந்து பதற்றமாக விஜயைப் பார்த்து பார்த்து பயணம் செய்ய… அவளது விழி வார்த்தைகளை நன்கு படிப்பவனாகிற்றே.. இறங்கும் போது ,
“என்ன… என்ன ஆச்சு வீட்ல எதுவும் பிரச்சினையா…” எனக் கேட்க… “இல்லை..” என்பதாக தலையாட்டினாள். “அப்ப காலேஜ்லயா…” எனவும் அதற்கும் இல்லை என்பதாக தலையாட்டினாள்.விஜயிற்கு புன்னகை தோன்ற..
” அப்ப நான் இப்படி வர்றது எதுவும் பிரச்சினையாகும்னு பயப்படுறியா..” தாமரைக்கு கண்ணில் நீர் கோர்த்தது. அவனிடம் பேச நினைத்தாலும் பேச முடியாமல் நின்றாள். அவனுக்கு ஏதோ புரிய …
“பயப்படாதே எதுவும் பிரச்சினையாகாம நான் பார்த்துக்கிறேன் …நீ தைரியமா போ…” என்றதும் திரும்பி திரும்பிப் பார்த்தவாறு கல்லூரிக்குள் நுழைந்தாள்.
அங்கு தில்லையோ கல்லூரியில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏறி தாமரையின் கல்லூரி இருக்கும் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்தாள். மகப்பேறு மருத்துவர் இருக்கும் இடத்தை தெரிந்துக் கொண்டு சீட்டு வாங்கி வரிசையில் நின்றவளுக்கு அழுகையாக வந்தது. அவள் உறவினர்கள் நிறைய பேர் மருத்துவர்களாக மட்டுமின்றி இங்கு மதுரையில் கூட பெரிய பெரிய மருத்துவமனை வைத்துள்ளார்கள். சாதாரண காய்ச்சல் என்றால் கூட தேவகி தகவல் சொன்னால் போதும் வீடு தேடி வந்து மருத்துவம் பார்த்து விட்டுப் போவார்கள்.
இப்படி வரிசையில் எதற்குமே காத்துக் கிடந்து பழக்கமில்லை.பின் தன்னையே தேற்றிக் கொண்டவள் , ” இவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா… நாயகி அழாத டி.” எனும் போதே கண்ணீர் வந்தது, அதை துடைத்துக் கொண்டே அங்கிருந்த செவிலியர் முன் அமர்ந்தாள்.
அவரோ .. அவள் வந்தக் காரணத்தை அறிந்து, அவளது நாடித்துடிப்பு , உயரம், எடை என பரிசோதித்துக் கொண்டே “பார்த்தா படிக்கிற புள்ள மாதிரி இருக்க… அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம் … ஒருவேளை ” என அவர் சந்தேகத்துடன் அவளை மேலும் கீழுமாகப் பார்க்கவும் , முதலில் அவர் என்ன அர்த்தத்தில் கேட்கிறார் எனப் புரியாமல் பார்த்தவளுக்கு அர்த்தம் புரியவும் கோபம் சுர்ரென்று ஏறியது ,
” ஒருவேளை… ம்… ஒரு வேளை … நான் யார் தெரியுமா” என ஆங்கிலத்தில் பேசியவள் , தாங்கள் யார்.. தங்கள் குடும்பம் எப்படிப்பட்டது என கூறியவள்.. அங்கு அரசு மருத்துவர்களாக இருக்கும் சிலரின் பெயரையும் சில அரசியல்வாதிகளின் பெயர்களையும் கூறி அவர்கள் எல்லாம் தனக்கு உறவினர்கள் … ” என படபடவெனப் பொறிந்தாள்.
“ஆமா என்னைய ஏன் அப்படி இளக்காரம பார்த்தீங்க..” என்ற கேள்வியில் பயந்த அந்த செவிலியர் ,
“இல்ல.. சின்ன புள்ளைங்க உடுப்பு .. நெத்தியில் குங்குமம்..கால்ல மெட்டி இருக்கா…” என்றவரை பேசிக் கூட முடிக்க விடவில்லை. “ஓ…அப்ப என்னைய…” என்றவளுக்கு அழுகையை அடக்க கஷ்டமாக இருந்தது, கோபமாக வெளிப்படுத்தியவள் , தான் கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த துப்பட்டாவை நீக்கி ,தன் கனமான தாலிச் சரடை தூக்கி காட்டியவள் ,
“என் மாமா .. என் கழுத்துல போட்டது … ஊரெல்லாம் இந்த லைசென்ஸ்ஸ காட்டணுமா… என்னையவே இப்படி கேட்கிற நீங்க … இங்க வறுமைல வர்ற பொண்ணுங்கள என்னென்ன கேட்பீங்க..இப்படிக் கேட்டதுக்கு உங்கள என்ன செய்றேன் பாருங்க..” என ஆங்கிலத்திலேயே பேச..அங்கிருந்த அதிகம் படிக்காத மக்களுக்கு என்னவென்று புரியவில்லை … ஆனால் சத்தம் கேட்டு வெளியே வந்த மருத்துவருக்கு புரியுமே.. ” வந்தவர் அவளை உள்ளே அழைத்துச் செல்ல , அப்போதும்
“உங்க பெயரை நோட் பண்ணிக்கிறேன்…” என்றவள் செவிலியரின் சட்டையில் இருந்த அவர் பெயரை எழுதி வைத்துக் கொண்டு தான் சென்றாள்.
மருத்துவர் அவளிடம் சில விவரங்களைக் கேட்டாலும் மறுநாள் காலை எடுக்க வேண்டிய பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்து அனுப்பினார். வெளியே வந்தவளிடம் செவிலியர் மன்னிப்புக் கேட்டு அவளது பின்னோடே வர… கண்டு கொள்ளவே இல்லை தில்லை.. திரும்பி ஒரு முறை முறைத்து விட்டு எதுவும் பேசாமல் தாமரைக்காக ஓரிடத்தில் அமர்ந்து காத்திருக்க துவங்கினாள்.
“இங்கு ஏன் வந்தோம்.. இந்தப் பேச்செல்லாம் கேட்க வேண்டுமா.. பேசாமல் அம்மாவிடம் எல்லாம் கூறிவிடலாமா… ” என்றெல்லாம் தோன்றி அழுகையைத் தர… பொதுவிடம் என்பதால் கட்டுப்படுத்திக் கொண்டாள். பின், “இல்லை பார்த்துக்கலாம்…” என தேற்றிக் கொண்டவள் பரிசோதனைகளை எப்படி எடுப்பது என யோசிக்க ஆரம்பித்தாள். இவ்வாறு தில்லை விழித்துக் கொண்டே யோசனைகளில் ஆழ்ந்திருக்க… விஜயும் தாமரைக்காக காத்திருக்க அங்கு வந்து நின்றிருந்தான்.
தாமரை வரும் வழியை நோக்கி பார்வையைச் செலுத்தும் போது தான் தில்லை எங்கோ பார்த்துக் கொண்டு ஒரு சாய்வு இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். காலையில் தாமரையின பதற்றத்திற்கான காரணம் அவனுக்கு உடனே புரிந்துப் போக சற்றுத் தள்ளி மறைந்து நின்றுக் கொண்டு தாமரை வருவதையும் தில்லையோடு இணைந்து வெளியே வருவதையும் கண்டு விட்டு அவர்களறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக நின்றுக் கொண்டான்.
ஆனாலும் தாமரைக் கண்டு விட… அவளை உணர்ந்தவன் விழிகளாலயே தாமரைக்கு தைரியம் கூறி அவர்களோடு பயணித்து பேருந்து நிலையம் வந்ததும் தலையசைத்துக் கிளம்பி விட்டான். அப்போதுதான் நிம்மதியான தாமரை அதுவரை கவனிக்காத தோழியைக் கவனித்து அவளது அழுது சிவந்திருந்த முகத்தைப் பார்த்து, என்னவெனக் கேட்டாள். வந்ததிலிருந்து விஜயே கண்ணில் நிற்க.. “கண்ல தூசி விழுந்து கண்ணீர் வந்தாக் கூட பதறிப் போற திலோவையே மறந்து விட்டேனே… இந்த காதல் இப்படி எல்லாரையும் மறக்கச் செய்யுமா…” தாமரைக்கு மனது கலங்கிப் போனது.