Advertisement

அலை 16 (2)

             எப்போதும் மாலையானால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் தாமரையைக் கண்டதும் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் கலகலவெனப் பேசிக் கொண்டே வரும் தில்லை அன்று அவர்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறினாலும் அதிகம் பேசாமல் யோசனையிலயே இருந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் செண்பகாவிடம் இரவு சாப்பாட்டிற்கு தேவையானதை எடுத்து வைக்கச் சொன்னவள் தான் வந்து அனைத்தும் செய்வதாகக் கூறி விட்டாள். ஒரே குழப்பம்..” அப்படி எல்லாம் இருக்குமா என்ன…ச… ச… அனீ ஸக்கா தெரியாம சொல்றாங்க… அவங்களுக்கும் எனக்கும் பதினோரு மாசம் தானே வித்தியாசம் … ” என யோசித்துக் கொண்டே  படுத்தவள் கண்ணில் தாமரையின் பாடப்புத்தகங்கள் கண்ணில் பட்டது.

“அனாட்டமி (உடற்கூறியல் ) புக் எடுத்துப் பார்த்தா புரியுதா பார்ப்போம்… என அதன் பக்கங்களைப் புரட்ட..” பள்ளிப் பாடப்புத்தகத்தில் சிறிதாக தரப்பட்டு இருந்தது இங்கு விரிவாக இருந்தது. அப்படியே மூடி வைத்தவள்,

“சிஸ்டர் இவான்ஜலின் பயாலஜி எடுக்கிறப்ப .. இது நீங்க படிச்சுக்கோங்கனு சொல்லிட்டாங்க… அப்பவும் சரியா புரியல இப்பவும் ஒன்னும் புரியல… டயாக்ரம் வரைஞ்சு மார்க் வாங்கிட்டேன்… இவ எப்படித் தான் படிக்கிறாளோ… ப்ச் வரும் போது பார்த்துக்கலாம்..” என்றவாறு தலையில் கை வைத்து அமர்ந்தவள், அடுத்த நிமிடம் எழுந்து வேலைகளைப் பார்க்க சென்று விட்டாள்.

தினமும் பேருந்தில் ஏறி தனக்குப் பிடித்தப் பாடல்களை பேருந்தில் ஒலிக்க விட்டு ..   தாமரையின் மீதான காதலைப் பாடல்கள் மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தான் விஜயானந்த். அதிகம் பேச மாட்டான் … என்றாவது வெளியூர் செல்வதாக இருந்தால் தாமரையிடம் கூறி ,  அவளது தலையசைப்பையும், விழி வார்த்தைகளையும் இதழோர புன்னகையையும் மட்டும் வாங்கி விட்டுச் செல்வான்.

பதுமை போலே காணும் உந்தன் அழகிலே

நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே

மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே

என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே….

அவள் அவனிடம் பேசியதே கிடையாது… தாமரையை உளப்பூர்வமாக உணர்ந்துக் கொண்டவன் அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவே இல்லை.மெளனம் பேசும் வார்த்தைகள் போதுமே….அதுவே அவனை போதைக் கொள்ளச் செய்ததே…

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே…

சொன்னது போல் திரும்பி வந்து விட்டானா என பார்வை ஒரு முறை சுற்றிவரும் . இப்படியாக விஜய் , தாமரையின் காதல் வளர்ந்துக் கொண்டே போனது.

தில்லையும் ஆதவனை மிகவும் எதிர்பார்த்தாள்..  அவனது இரண்டாவது கடிதமும் பொதுவாகவே வந்தது. தொலைப்பேசி அழைப்புகளும் இரண்டு வார்த்தைகள் தான் … அதுவும் அவளது அந்த ‘இச்’ சத்தத்தில் அவனுக்கு வைத்து விடத்தான் தோன்றும். தில்லைக்கு அது தன் காதலின் வெளிப்பாடாகவே இருந்தது. எப்படி தனக்கு ஃபோனை எடுத்தால் பேச முடியாமல் வார்த்தைகள் வரவில்லயோ அது போல தான் ஆதவனுக்கும் என நினைத்துக் கொண்டாள்.

ஒரு நாள் அனீஸ் தன் கணவன் அனுப்பிய கடிதத்தை திரும்ப திரும்ப படித்து சிரித்துக் கொண்டிருந்ததைக் கண்டவள் , ஆதவனது கடிதத்தை எடுத்து அவனது கையெழுத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள், சுவற்றில் இருந்த அவன் கல்லூரியில் பட்டம் வாங்கிய போது எடுத்த புகைப்படத்தைப் பார்த்து ,

” மாமா… இது சாதாரண லெட்டர் தான்.. இதுவே எனக்கு திரும்ப திரும்ப படிக்கத் தோணுதே.. அப்ப நிஜமாவே நீங்க எனக்கு லெட்டர் அதுவும் லவ் லெட்டர் அனுப்பினா..உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே உங்கள் கடிதம் வந்ததால் இன்பம் எங்கும் பொங்குதே… னு பாட்டுப் பாடுவேன்.. ” என சிரித்துக் கொண்டவள்.

 “எனக்கும் மாமா கிட்ட காதல சொல்ல ஆசையா தான் இருக்கு … ஆனா சொல்லணும்னு நினைச்சா பேச்சு தான்…” என நடிகர் கமலஹாசனின் பிரபல வசனம் போல் செல்லிக் கொண்டவள் ,

” காதல் கடிதம் அவங்க தான் எழுதணுமா… நானும் எழுதலாம் தானே..ஒன்னு பண்ணலாம்  டைரில எழுதலாம்…” என டைரி எடுத்தவள் , அதை அப்படியே வைத்து விட்டு , ” செல்வி என்ன எழுதுறனு கேட்டுட்டா … அவளுக்கு தெரியாமலும் எழுத முடியாது.. என்னடி அவளுக்கு தெரியாம எழுதுவியா கள்ளி கள்ளி.. ” என தனக்குத்தானே குட்டு வைத்துக் கொண்ட தில்லை…

“ஐயயோ… என் மனசில காதல் பூட்டி வச்சு மாமா கிட்டயும் சொல்லாம எனக்கும் இதயம் பட முரளி போல இதயம் பலஹீனமாகிருச்சுனா..வேண்டாம் வேண்டாம்.. நான் எப்படியாவது காதலிக்கிறத செல்லணுமே.. ” என நினைத்தவள் ,

“அந்தப் படம் போல சென்டிமென்ட்டா டைரி வொர்க் அவுட் ஆகலனா…நான் லெட்டரே எழுதுறேன்… இன்லேட் இந்தியாக்குள்ள மட்டும் தானே போகும்…  பேப்பர்ல எழுதி கவருக்குள்ள வச்சிட வேண்டியதுதான். எப்படி அனுப்ப .. அதை மெதுவாப் பார்த்துக்குவோம். ஆனாலும் தில்லை ரொம்ப சினிமா பார்த்துருக்க.. கண்ட்ரோல் பண்ணு கன்ட்ரோல் பண்ணு… ஆனா மாமா நீயும் நானும் தான் ஹீரோ ஹீரோயின் சொல்லி காட்டின படத்துக்கு அப்புறம் வேற படமே பார்க்கத் தோணலயே ” என தனக்குத்தானே பேசி ஒருவாறு யோசித்து கடிதம் எழுத துவங்கினாள்.

அவை யாவும் அனுப்பபடவில்லை … வெளிநாட்டு தபால் எப்படி அனுப்ப என்றும் தெரியவில்லை… தெரிந்த பின்னரும் அனுப்ப தயங்கி சேர்த்து வைத்துக் கொண்டாள். 

இந்நிலையில் தான் செண்பகாவின் மைத்துனனுக்கு அம்மாத திருமணம் வர இருந்தது. அவர்கள் அனைவரும் உறவுகளே.. எனவே தேவகியும் திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பே வந்து செண்பகாவிற்கு விடுமுறை அளித்து அனுப்பினார். மாலை மகளின் வரவுக்காக அவளுக்கு அவர்கள் வீட்டிலேயே செய்துக்கொண்டு வந்ததையும் அங்கு வந்து சூடாக செய்த பலகாரங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு காத்து நின்றார்.

மாலை ஆறு மணி போல் வீட்டிற்கு வந்த மகளைக் கண்டு அதிர்ந்துதான் விட்டார் தேவகி. அந்த அதிர்ச்சியை அப்படியே முகத்திலும் காட்டியவர்.

“என்ன பாப்பா.. இப்படி மெலிஞ்சுப் போய் இருக்க… ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா…” என தாமரை முன்னேயே கேட்டு விட்டார். அது தாமரைக்கு சங்கடத்தைக் கொடுக்க , அமைதியாக மாடியேறி அவளறைக்குச் சென்றாள்.

“அத்தை சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது… தில்லை சரியாவே சாப்பிடுறது இல்லைனு ஆமா ரொம்ப மெலிஞ்சுதான் போயிருக்கா…” என கவலைக் கொண்டாள் தாமரை.தில்லையோ தேவகியை அழைத்துக் கொண்டு சமையலறைக் சென்றவள் ,

” ஏன் மா செல்வி முன்னாடி அப்படி சொல்ற.. வருத்தப்பட மாட்டாளா… நான் நல்லா தான் சாப்பிடுறேன் .ஆனா பஸ் வாடை பிடிக்காம வாந்தி வந்துடுது.”

“இப்படி உடம்பு போனா பெத்தவளுக்கு மனசு கேக்கு மா.. செல்விக்காக செல்விக்காகனு அது வேண்டாம் இது வேண்டானு சொல்றியே சாமி … நம்ம வீட்ல இருந்து படிக்க போ.. உன் அப்பா அண்ணனு மாத்தி மாத்தி உன்னைய கூட்டிட்டுப் போய் காலேசுல விடுவாக… அண்ணன் முன்னாடியே சொல்லிச்சு செல்விய ஹாஸ்டல்ல விட்டுருறேன்.. நீ பையன் வர்றவரை மருமகள கூட்டிட்டுப் போய் அங்க இருந்து படிக்க அனுப்புனு…. நான் இந்த வாட்டி அண்ணன்கிட்ட சொல்லப் போறேன்…” என அவளுக்குப் பிடித்த வெண்டைக்காய் குழம்பு ஊற்றப்பட்ட சோற்றை  ஊட்டினார்.

வாயில் படவுமே அதன் சுவை உண்ண சொன்னாலும் மனது , “என்ன ஹாஸ்டலா..” என கேள்வியைக் கேட்க.. உண்ணாமல் போய் துப்பிவிட்டு வந்தவள் ,

” நீ கிளம்பு… செண்பாக்கா இல்லனா நாங்க சாப்பிட மாட்டோமா… நீ கல்யாணத்தன்னைக்கு வர வேண்டியதுதான… பாசம்ங்கிற பேர்ல புகுந்த வீட்ல பிரச்சினைய உண்டு பண்றதே நம்ம அம்மாக்கள் தான்னு அனீஸக்கா சொன்னது சரியா தான் இருக்கு… எப்படி சொல்லலாம் செல்விய ஹாஸ்டல்ல சேர்க்கச் சொல்லி … ” என தேவகியை ஒரு பிடி பிடித்து விட்டாள் தில்லை. மகளின் குணமறிந்தவர் தான் என்பதால் அவளை சமாளித்து மேலும் அருணாச்சலத்திடம் எதுவும் சொல்லக் கூடாது என்ற வாக்குறுதியைப் பெற்ற பின்னர் தான் அவரை இருக்கவே அனுமதித்தாள்.

திருமணமும் முடிந்து செண்பகா வந்த பின்னும் மேலும் இரண்டு நாட்கள் தங்கி விட்டுத்தான் தேவகி சென்றார். சொக்கலிங்கமும் தேவராஜனும் கூடதில்லையின் மெலிவைக் கண்டு வருந்தினாலும் அவளிடம் காட்டிக் கொள்ளாமல் தேவகியிடம் மட்டும் கூறி வருந்தினர்.

 இறுதியில் செண்பகா விடம் கூறி புதிதாக திருமணமாகி  வந்த செண்பகாவின் மைத்துனன் மனைவியையும் அங்கு வேலைக்கு அமர்த்தி மகள், மருமகளை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர்.

இப்போது தில்லையின் மேற்பார்வையில் புதிதாக வந்தப் பெண்ணும் நன்றாக சமைக்க .. தில்லைக்கு வேலைப்பழு சற்றுக் கம்மியாகியது. முன்பு போல் அதிகம் வாந்தி வரவில்லை என்றாலும் எப்போதாவது வந்தது. கூடவே நன்கு பசிக்க ஆரம்பிக்க , தேவகி செய்து வைத்துச் சென்ற பலகாரங்களை கூடுதலாகவே கல்லூரிக்கும் எடுத்துச் சென்று உண்ணலானாள்.

அன்றும் அப்படி உண்டு விட்டு வந்திருக்க … மண் ஆராய்ச்சி பாடத்திற்காக அவர்களுக்கு அன்று தோட்டத்தில் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. அனீஸ் மற்றும் இரு ஆண் மாணவர்களோடு ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்க… அதிலிருந்த புழுக்கள், பூச்சிகள் பார்த்ததும் அறுவெறுப்பைக் கொடுத்து மதியம் உண்டதை எல்லாம் ஓரமாகச் சென்று வாந்தி எடுக்கத் துவங்கிவிட்டாள் தில்லைநாயகி.

இது எப்போதாவது அங்குள்ள மாணவர்களுக்கு நடப்பதுதான் , அதனால் மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு , சிறிது நேரம் கழித்து வகுப்பில் கலந்துக் கொள்ளக் கூறினர். ஆனால் அனீஸால் அப்படி முடியவில்லை.

முகம் கழுவி வந்தவளிடம், “நான் அன்னைக்கே சொன்னேன். நீ கேட்கல… நல்லா யோசி… நீயும் நானும் பயாலஜி குருப் தான் , நாம தவளை, எலி, கரப்பான் பூச்சி , இப்ப பார்த்த மண் புழுவக் கூட வெட்டி தால இது கால் இதுனு பராக்டிக்கல் கிளாஸ்ல செய்துருக்கோம்.. அப்போலாம் வராத வாமிட் உனக்கு இப்ப வருதா… போடி… வாழ்க்கைய காப்பாத்திக்கோ..” என்றாள் அக்கறையுடன்  அனீஸ் ஃபாத்திமா .

அதுவரை எல்லாமே விளையாட்டாக எடுத்துக் கொண்டிருந்த தில்லைக்கு… அனீஸ் முன்பு கூறியது எல்லாம் நியாபகம் வந்து இருக்கலாமோ என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. ஆனால் யாரிடம் கேட்பது… இறுதியில் எப்படி தெரிந்துக் கொள்வது என்பதை யாரிடமும் கூறாமல் தானே தெரிந்துக் கொள்ள திட்டமிட்டாள்.

 

           

             

Advertisement