அலை 16 ( 1 )

                        உடல் என்ன…உயிர் என்ன…

                        உறவென்ன…உலகென்ன….

                        விதியென்ன…விடையென்ன மனமே…

              தாமரையைக் காட்டிலும் தில்லை கல்லூரிக்கு சென்று வருவதில் மிகவும் சோர்ந்து போனாள். ஆனால் அதனை தாமரையிடம் காட்டிக் கொள்ளாமல் இருந்தவள், அன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன்,

 “செண்பா மதினி.. எனக்கு கொஞ்சம் காஃபி.. ” என்றவாறு சமையலறைக்குள் நுழைய.. செண்பகா அவர்களது மதிய உணவுப் பாத்திரங்களை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார்.தாமரையின் உணவு முக்கால்வாசி மீதம் இருந்ததைப் பார்த்தவளிடம் ,

” நம்ம செல்வி பாப்பா எப்பவும் இப்படித்தான்.. அதுக்கு அவுக அம்மா சமைச்சதுதான் பிடிக்கும்.. நான் என்ன செய்தாலும் பெரியம்மா இருக்கும் போதும் சாப்பிடாது .. இப்பவும் சாப்பிட மாட்டிக்குது.” என அலுத்துக் கொள்ள , அவளது சோர்வெல்லாம் காணாமல் போய்விட்டது .நேராக தேவகிக்கு அழைத்து சில சமையல் குறிப்புகளை எழுதிக் கொண்டாள்.

மறுநாள் காலையே எழுந்தவள் செண்பாவை துணைக்கு வைத்துக் கொண்டு எழுதியதைப் பார்த்து பார்த்து சமைத்து தாமரைக்கு எடுத்து வைத்து விட்டுத்தான் கல்லூரிக்கே கிளம்பினாள். அவளிடம் , “அம்மா கைப் பக்குவமும் அத்தை கைப்பக்குவமும் ஒரே மாதிரி தான்னு பார்த்து பார்த்து செய்துருக்கேன்… ஒழுங்கா சாப்பிட்டிருடி…” என அன்புக் கட்டளையிட,

“எப்படி டி கத்துக்கிட்ட.. எனக்கும் செல்லிக் கொடு திலோ .. எப்பவும் அம்மா செய்துக் கொடுத்து சாப்பிட்டே பழகிட்டேனா.. இப்ப சுத்தமா சாப்பிடவே முடியல… ” என்ற தாமரையிடம்…

“நான் இருக்கும் போது நீ ஏன் டி கத்துக்கணும்… உனக்குப் படிக்க நிறைய இருக்கும்.. அதனால நான் அம்மா கிட்ட கேட்டு செய்ய போறேன்…” என்றாள் தில்லை.

“உனக்கும் தான் படிக்கணும்… ” என்றவளை எப்படியோ சமாளித்து தினமும் சமைக்க ஆரம்பித்தாள் தில்லைநாயகி. முதலில் சுவை குறைவாக இருந்தாலும் தோழிக்காக தாமரை சாப்பிட ஆரம்பித்தவளுக்கு போக போக சுவை அதிகரிப்பது போல் இருந்தது. “இன்னைக்கு அந்த கத்திரிக்காய் குழம்பு நல்லா இருந்ததா… என்ன என்ன போட்டேன் தெரியுமா…” என ஆரம்பிக்கும் தில்லையிடம் ,

” தெரியுமே… உன் அன்பு, பாசம், நேசம். . எல்லாம் போட்டு செயறடி…” என தாமரை செல்லும் போது தில்லைக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒரு நாள் கல்லூரியில் விழா என்பதால் வகுப்புகள் நடைபெறவில்லை.அனீஸ் ஏதோ கடிதம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தவள், அருகில் வந்த தில்லையைக் கண்டதும் அதை மடித்து மறைத்து வைக்க,

” என்ன அனீஸக்கா ரஃபி அண்ணா அனுப்பின லவ் லெட்ட ரா… ” என்றவாரே அமர்ந்தாள்.அவள் கணவரும் வெளிநாட்டில் படிக்க தான் சென்றிருக்கிறான் என்பதை முன்பே பேசிக் கொண்டார்கள். எனவே சாதாரணமாக கேட்டாள்.

அனீஸூம் புன்னகையுடன் , “ம்…” என்றவளிடம் , ஏன் திருமணம் முடிந்ததும் உடனே படிக்க வரவில்லை என்ற கேள்வி மறுபடியும் கேட்டாள் தில்லை.

“உனக்கே தெரியுமே தில்லை .. எனக்கு அடுத்து ரெண்டு தங்கைங்க … எனக்கு கல்யாணம் பண்ணிட்டு சீக்கிரம் அடுத்தவளுக்குப் பண்ணனும்னு எங்காம்மாதான் பிடிவாதம்… வாப்பா படிக்கட்டும்னுதான் சொன்னாரு.ஆனாலும் அவங்க வீட்லயும் பையன் வெளிநாட்டுல படிக்க போகுமுன்ன கல்யாணம் பண்ண பொண்ணு தேடுனதுல நான் கிடைச்சிட்டேன்.

சிவகாசியில எண்ணை மில்லு வச்சிருக்கிறவங்கனு உடனே கொடுத்தாச்சு.. எங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் தான் சேர்ந்து இருந்தோம்..” என்ற அனீஸுக்கும் கணவன் நினைவில் முகம் சிவக்க துவங்க… கூடவே தில்லையின் முகமும் ஆதவன் நினைவில் சிவந்தது..

“அதுல நான்…” என அனீஸ் மேலும் கூற வருவதற்குள் அவர்களை சில தோழிகள் குழ்ந்துக் கொள்ள பேச்சு திசை மாறி விட்டது. அதன் பிறகு அவர்களுக்கு பாடம் எழுத படிக்க என நேரமே வேச பேச கிடைக்கவில்லை. 

இந்நிலையில் தான் ஒரு நாள் தில்லையையும் தாமரையையும் அழைத்துக் கொண்டு மணிகண்டன் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வந்துக் கொண்டிருந்தார். அதன் முடிவில் இடப்பக்கம் அவர்கள் ஊருக்குச் செல்லக் கூடிய சாலைப் பிரியும், அதன் இருப்புறமும் கரும்புத் தோட்டம் இருக்கும் , சரியாக அந்த இடத்தில் வந்ததும் வண்டி பஞ்சர் ஆனது போல் தெரிந்தது.மணிகண்டன் இறங்கிப் பார்க்கவும் தோழிகள் இருவரும் கூடவே இறங்கினர். அது பின்புற சக்கரம் வேறு…

இரவு நெருங்கும் நேரம் அங்கு ஆள் நடமாட்டமும் அதிகம் கிடையாது . கண்ணுக்கு எட்டியவரை கரும்பு மட்டுமே ஆளுயரத்திற்கு வளர்ந்துக் கிடந்தது.மணிகண்டனுக்குமே  வயதுப் பெண்களை அந்நேரம் அங்கு நிற்பாட்டி வண்டியை சரி செய்வது கலக்கத்தைக் கொடுத்தது. ஆனால் அவர்கள் நின்ற ஐந்தாவது நிமிடம் ஒரு இளம்பச்சை நிற அம்பாசிடர் கார் ஒன்று வந்து அருகில் நின்றது.

தில்லையும் தாமரையும் பயத்தில் ஒருவரை ஒருவர் நெருங்கி கைப் பிடித்து நிற்க.. அதிலிருந்து விஜய் இறங்கினான். பார்த்த மூவருக்குமே முகம் மலர … விஜய் தனது காரில் வெளிச்சத்தை பரவ விட்டவன் மணிகண்டனோடு இணைந்து ஸ்டெப்னி மாற்ற உதவினான்.

விரைவாக வேலை முடிய தில்லைநாயகி , “தேங்க்ஸ் அண்ணா.. ரொம்ப பயந்துட்டோம்…” என்றாள் எனில் , தாமரை பார்வையால் நன்றி கூறினாள். ஆனாலும் அவர்கள் பின்னேயே ஊர்வரை சென்று விட்டுத்தான் அவன் திரும்பினான்.

தில்லைக்கு இந்த அனுபவம் ஒரு பயத்தைக் கொடுத்தது , அன்றிரவு  அருணாச்சலம் வந்தவர் மகளையும் மருமகளையும் அழைத்து ,

“பாப்பா … இன்னைக்கு ஆனந்த் பையன் அந்த வழியா வரவும் சரியா போச்சு… இல்ல வண்டியில வேற எதுவும் பிரச்சினையாச்சுனா இருட்டுல ரோட்டுல நிக்க முடியுமா…  காலேஜ் போய்ட்டு வர்றதுல சிரமம் இருக்குது. அதுவும் உங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கிறத நான் கவனிச்சுட்டுத் தான் இருக்கிறேன்… என்ன செய்யலாம் சொல்லுங்க” என தில்லையைப் பார்த்துக் கூறியவர் ,

“நான் எல்லா வகையிலயும் யோசிச்சுப் பார்த்துட்டேன்.. ஆனா நான் சொல்றத விட நீங்க ரெண்டு பேரும் யோசிச்சு சொல்லுங்க… அதுபடி செய்யலாம் .” என்று விட்டார். இதற்கு முன்னரும் இது போன்ற விவாதங்கள் எழுந்ததால் தான் யோசித்து வைத்திருந்ததை தில்லைக் கூறினாள்.

“மாமா… முன்ன நாங்க ஸ்கூலுக்கு பஸ்ல தானே போனோம்.  எங்க கூட படிச்சரெண்டு பேர்,  இங்க இருந்து பஸ்ல தான் மதுரைல இருக்கிற காலேஜூக்கு போய்ட்டு வாராங்க… கூடவே போற வழில ஸ்கூல் காலேஜ் போறவங்க நிறைய பேர் வருவாங்க.அதனால நாங்களும் பஸ்ல போறோம்… அதுதான் எங்களுக்கு பாதுகாப்பானதும் கூட.. ” என்று தில்லை கூறி விட்டாள்.

அனைவருக்கும் அது சரியாகவே பட இருவரும் இப்போது பேருந்தில் செல்லாகினர். மதுரையில் ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி அவரவர் கல்லூரி சாலை வழியாக செல்லும் பேருந்தில் செல்வர். அப்படி தாமரை அவள் கல்லூரிக்கு செல்ல தினமும் ஒரு குறிப்பிட்ட பேருந்தில் ஏற ஆரம்பித்தாள்.

பேருந்து நிலையத்திற்கு வெளியே, காலை மாலை என இரண்டு மூன்று முறை அந்த பச்சை நிற அம்பாஸிடர் கண்ணில் பட்டது. அப்போது விஜயும் நினைவில் வருவான். ஆனால் அவன் கண்களில் படவில்லை. ஒரு நான்கைந்து நாட்களாக அந்தக் காரும் பேருந்து நிலையத்தின் வெளியே நிற்கவில்லை.

“அது யாருடைய வண்டியோ நீ ஏன் அவங்களோடதுனு நினைக்கிற… தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளுக்கு விஜயை மீண்டும் எப்போது பார்ப்போம் என்ற எண்ணம் வராமலில்லை. அப்படி அந்த வாரவெள்ளிக்கிழமை மாலை கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து ஏறியவள் காதில் அவள் ரசிக்கும் அந்த திரை இசைப் பாடலின் துவக்க இசை வரவும்… மனதில் மழைச்சாரல் தான்.. 

பூமாலையே … தோள் சேர வா…

அது கண்களில் பிரதிபளிக்க விழிகள் பேருந்தினுள் உள்ள நபர்களை அலச ஆரம்பித்தது. அன்றைக்கு நிறையக் கூட்டமும் கூட , அமர இடமில்லாமல் நின்றுக் கொண்டுதானிருந்தாள். பத்து நிமிடங்களில் இறங்கி விடுவாள் என்பதால் நின்றுக் கொண்டு பயணிப்பது அவளுக்கு சிரமமாக தெரியவில்லை.

அலசிய விழிகளில் பின்பக்க பேருந்து படிக்கட்டுகளில் மெல்லிய புன்னகையோடு அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த விஜயும் பட்டான். எப்போதும் தன் உணர்ச்சிகளை வெளியே அதிகம் காட்டாத தாமரையின் இதழ்கள் மெல்ல பிரிந்து வெண்முத்துக்களை பார்க்கும் வாய்ப்பை விஜயிற்கு கொடுத்தது. அது ஆனந்த கண்ணீரையும் அவளுக்கு கொடுக்க,அதுக்கூடப் பொறுக்காதவன் மெல்ல கூட்டத்தினுள் நுழைந்து அவள் பின்புறம் வந்து நின்றுக் கொண்டான்.

“அழக்கூடாது.. தினமும் … நீ காலேஜ் சேர்ந்தப் போ இருந்து தினமும் காலை மாலைனு உன் கூடவே தான் வந்துட்டு இருக்கேன். உன் கூடவே தான் இருப்பேன்…” என்றவனை விழியுயர்த்தி பார்த்தாள்.

ஒரு காதல் கடிதம் விழி போடும்

உன்னை காணும் சபலம் வர கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்

நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்…

கல்லூரி வரும் வரை அவன் ஓட்டுனரிடம் கொடுத்து ஒலிக்க விட்டிருந்த  பாடல்கள் மட்டுமே அவர்களுக்கு உரையாடல் ஆனது. எப்போதும் போல் அவன் மட்டும் பேச ..தாமரை விழிகளால் மட்டுமே பேசினாள்.

காலை தில்லை அவள் செல்லும் பேருந்தில் ஏறியதும் , தாமரை ஏறிய பேருந்தின் வாசற்படியில் நின்று பயணிப்பது (பார்ப்பது) விஜயின் வாடிக்கையானது.தினமும் வளையோசை கலகலவென.. தான் .பேருந்து பயணம் இனிமையை அள்ளி அள்ளி தாமரைக்கு கொடுத்து இந்தப் பயணம் தொடர்ந்துக் கொண்டே இருக்காதா என்ற எண்ணத்தைக் கொடுத்தது என்றால் தில்லைக்கு இவை எல்லாவற்றிற்கும் எதிர்பதமாக சோர்வையும் மயக்கத்தையும் கொடுத்து அவதிக்குள்ளாக்கியது.

ஏற்கனவே ஒரு முக்கால் மணி நேர பயணம்.. பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அரை மணி நேர பயணம்.. நின்று நின்று செல்வதால் கூடுதல் நேரமும் ஆகும்.சில சமயம் அமர இடம் கிடைக்கும் , சில சமயங்கள் கிடைக்காது.. பேருந்து புகையும்… சில சமயங்கள் மல்லிகை பூ மூட்டைகளும் அங்கு வரும்.. அது என்னவோ பேருந்துப் பயணத்தில் அவளுக்கு பூ வாசனையும் பிடிக்காமல் போனது. எப்போதடா பேருந்தை விட்டு இறங்குவோம் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.

அன்றைக்கு தில்லைக்கு மிகவும் முடியவில்லை.. இறங்கிய உடனே காலை உண்டது அனைத்தும் வயிற்றைப் பிரட்டி வாந்தியாக வந்து விட்டது. அவளுடன் பயிலும் மாணவர்கள் சிலரும் அந்தப் பேருந்தில் இருந்து இறங்கியதால் அவளிடம் இருந்து கைப்பையை வாங்கிக் கொண்டு முகம் கழுவச் சொல்லி வகுப்பறை வரை கூடவே வந்தார்கள்.

அனீஸ் பார்த்தவள் , “என்னடி இப்படி வார.. உடம்புக்கு எதுவும் செய்யுதா… ” 

சோர்வில் மேசையில் தலை சாய்த்துக் கொண்டவள்,

” சீக்கிரமா எழுந்து சமைச்சு ஒன்றரை மணி நேரம் ட்ராவல் பண்ணி வர்றேன் இல்லையா அதுதான் டயர்டா ஆக்கிடுது… ” என்றாள் சோர்வுடன் .

“ப்ச்.. நான் சொன்னா கேட்கிறியா … ஹஸ்பன்ட்டும் பக்கத்துல இல்லாம நாம மாமியார் வீட்ல … அதுவும் சொந்த மாமா பையனா இருந்தாக்கூட …ஏன் அவங்க வீட்ல எல்லாரும் நம்மள தங்த தட்டுல வச்சு  தாங்கினாக்கூட … அவங்க நம்மக் கூட இல்லாதப்ப  அங்க இருக்கக் கூடாது தில்லை. நீ அடிக்கடி கேட்பியே ஏன் படிக்கப் போகாம ஒரு வருஷம் வீட்ல இருந்தேன்னு…” என ஆரம்பித்த அனீஸ் ஃபாத்திமா கதையை கேட்க கேட்க தில்லைக்கு மேலும் தலை சுற்றியது.