இப்படி தில்லைக்கு ஆதவனை நினைத்தாலே மனதும் உடலும் பரவசமைடய செய்தது என்றால் ஆதவனின் நிலையோ வேறாக இருந்தது.
தொலைப்பேசியை எடுத்ததும் படபடவென பேச ஆரம்பித்தது தில்லைதான் என உணர்ந்தவன், அவள் யாரிடம் பேசுவதாக நினைத்துப் பேசினாளோ.. ஆனால் பேசிய வார்த்தைகள் தன்னைச் சுட்டுவதாகவேத் தோன்றியது. அதிலும் அவள் சுயநலவாதி என்றது… அவன் அவளிடம் அன்று நடந்துக்கொண்டதை நினைத்து இப்போது மிகவும் அவமானமாகவே உணர்ந்தான். ஓரளவு தேற்றி வைத்திருந்த அவனது உள்ளம் மீண்டும் புண்பட்டது போலானது. மனைவி சொல்லுவது எல்லாம் உண்மை தானே.. மறைந்து பதினைந்து நாட்களேயான தாயை மறந்து விட்டான்.
ஓய்ந்துப் போயிருந்த தந்தையை மறந்து விட்டான் ,சிறு பெண்ணான தன் தங்கையை மறந்து விட்டான். அப்படி ஆசையை அடக்க முடியாத சுயநலவாதிதான் நான்… இப்படியாக தன்னை நினைத்து வருந்திக் கொண்டவன் தன்னை ஆசுவாசப்படுத்தி மீண்டும் தங்கைக்கு அழைத்துப் பேசி நலம் விசாரித்துக் கொண்டவன் மீண்டும் தில்லையிடம் பேச முயற்சிக்கவில்லை. அவளிடம் இனிமேல் இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டும் என ஆதவனாக ஒரு முடிவையும் எடுத்துக் கொண்டான்.
நாட்கள் வேகமாகச் சென்று ..இதோ நாளை தாமரைக்கு கல்லூரியும் துவங்க இருக்கிறது.. அவளை கல்லூரியில் விட்ட பின்னர் தான் தனது கல்லூரியில் கால் எடுத்து வைப்பேன் என பிடிவாதம் பிடித்திருந்த தில்லையும் அந்த மாலை வேளையில் தாங்கள் அடுத்த நாள் எடுத்துப் போவதற்கான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
வீட்டினுள் கார் நுழையும் சத்தம் கேட்கவுமே… தன் அன்னை வந்து விட்டார் என உணர்ந்த தில்லை,
“செல்வி.. எங்கம்மா தான் வந்திருப்பாங்க.. இது அந்த கார் சத்தம் தான். நாளைக்கு முதல் நாள் காலேஜ் போறோம்ல..கைப் பிடிச்சு கொண்டு போய்விடறதுக்கு..” என புன்னகையுடன் கூறியவள் தாமரையோடு அறையை விட்டு வெளியே வந்தாள். அதுபோலவே வந்த தேவகி தான் கொண்டு வந்த பொருட்களை செண்பகா துணையோடு உள்ளே கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்தார்.
“அம்மாகிட்ட எத்தனை தடவை சொன்னாலும் கேட்காது… ” என சலித்துக் கொண்டாலும் தேவகியைக் கண்ட மகிழ்ச்சி அப்பட்டமாக தில்லையின் முகத்தில் தெரிந்தது. “சாமி ” என மகளை உச்சி முகர்ந்தவர் மருமகளையும் அணைத்துக் கொள்ளத் தவறவில்லை.
சொக்கலிங்கம் தான் அழைத்து வந்திருந்தார்..தில்லைக்கு பெற்றோருடன் தனிமைக் கொடுத்து செண்பகாவோடு தாமரை சமையலறை செல்ல.. தேவகியிடம் மெதுவாக , ” ஏன் மா வேண்டாம்னு சொல்லியும் இத்தனையும் தூக்கிட்டு வரணுமா…”
” பொண்ணப் பார்க்க வர்றப்ப சும்மா வரக்கூடாது பாப்பா… நாளைக்கு நீயும் செல்வி புள்ளய நம்ம வீட்டுக்கு கட்டிக் கொடுத்து அனுப்புனதும் இப்படி தான் எடுத்துட்டு வரப் போற..” என்பதாக அவளை சமாதனப்படுத்த சொல்ல,
“என்ன சாமி இப்படி சொல்ற ..எங்க மதினிக்கு வாக்கு கொடுத்துருக்கேன் பாப்பா…”
“அம்மா… அது அத்தைய அப்ப சமாளிக்க மட்டும் தான் … இப்ப நான் தான் இந்த வீட்டு மருமக… நான் சொல்றதுதான் இனி … அதனால செல்விபடிப்ப முடிச்சு டாக்டரானதுக்கு அப்புறம் தான் அவ கல்யாணப் பேச்சையே எடுக்கணும் ஆமா… ” என்றவள் தானும் சமையலறைக்குள் நுழைந்து விட்டாள்.
தேவகி தான் குழம்பி போனார். அவர் நினைத்தது ஆதவன் இங்கு ஆறு மாதத்தில் வந்து விடுவான் , அவன் வந்ததும் அடுத்த ஆறு மாதத்தில் மீனாட்சிக்கு திவசம் செய்தக் கையோடு தேவராஜன் தாமரை செல்வி திருமணத்தை முடித்து விடலாம் என்பது தான். ஆனால் தில்லையின் பேச்சு அவரை திகைப்படையச் செய்தது.
“இவள் என்ன எண்ணத்தில் இருக்கிறாள். இப்போதாவது பரவாயில்லை மருமகன் உடனில்லை… ஆனால் அவர் வந்து விட்டால் வயதுப் பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு எப்படி குடும்பம் நடத்த முடியும் .இது சரி வராதே…” என நினைத்தவர் தில்லையிடம் தனிமையில் பேச காத்துக் கொண்டிருந்தார். ஆனால் தில்லை அதற்கு வாய்ப்பே அளிக்கவில்லை. எந்நேரமும் தாமரையின் கையினைப் பிடித்துக் கொண்டே தான் சுற்றினாள்.
தேவகியும் செண்பகாவிடம் வீட்டு நிலவரங்களைக் கேட்டுக் கொண்டதோடு இனி என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறிக் கொண்டார்.
இரவு எட்டரை மணி இருக்கும் அனைவரும் உண்டு உறங்க ஆயத்தமாகினர். அந்த நேரம் தொலைப்பேசி ஒலி எழுப்பவும் அருணாச்சலம் முதலில் எடுத்தார். மேலே அறையில் இருந்த தோழிகளும் படியிறங்கி வந்தனர். அது ஆதவனின் அழைப்பு என்பதை உணர்ந்த தாமரை வேகமாக தந்தை அருகில் வந்து நிற்க..தில்லை ஒரு வித தயக்கத்தோடு மெதுவாக வந்து தாமரை அருகில் நின்றுக் கொண்டாள்.
அருணாச்சலம் பேசியதும் தாமரை மகிழ்ச்சியுடன் பேசியவள், “அண்ணா திலோக் கூட பக்கத்துல தான் நிற்கிறா .. அவளுக்கும் ஆல் த பெஸ்ட் சொல்லுங்க… இதோ கொடுக்கிறேன் ” என்றவள் தில்லையின் காதினில் ரீசிவரை வைத்து விட்டுச் சென்றாள்.
“இவ இருக்காளே.. ” என எண்ணும் போதே தேவகி அவளைப் பார்த்துக் கொண்டிருக்க.. “ஏம்மா நீங்களுமா…” என எண்ணியவள் ரிசீவரின் வாய் பகுதியில் ஒரு முத்தத்தை வைக்க . தேவகி இங்கு திரும்பவா அங்கு திரும்பவா எனத் தடுமாறியவர் அமர்ந்திருந்த தரையிலயே படுத்துக் கொண்டார்.புன்னகையோடே அமைதியாக அவனது குரலைக் கேட்கும் ஆவலில் நின்றாள்.
ஆதவனுக்கு மனைவி முத்தம் கொடுத்ததால் வந்த சத்தம் என்றா தெரியும், தன்னிடம் பேச கொடுத்து விட்டார்களே என்ற கோபத்தில் “உச்’ கொட்டுகிறாள் என நினைத்துக் கொண்டான். எனவே அவனும் தங்கை சொன்னதற்காக , “ஆல் தி பெஸ்ட்… வைக்கிறேன் . ” என்றவன் உடனே வைத்து விட்டான்.
“ஆன் இதென்னடா…முத்தம் பத்தி கிளாஸ் எடுத்துட்டு … இப்ப பதிலுக்கு கூட ஒன்னும் தராம ஆல் தி பெஸ்ட்டாமே…ஒரு வேளை சத்தம் கேட்க லயோ..” உடனே காதில் இருந்து எடுக்கப் போனவள் . உடனே வைத்தால் சற்று தள்ளி அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்பதால் ஒரு ஐந்து நிமிடம் வேறுபுறம் முகத்தை வைத்துக் கொண்டு பேசுவது போல் பாவனைக் காட்டி விட்டு வந்து விட்டாள்.
ஆதவன் அவளிடம் பேசாததை அவள் பெரிய விஷயமாகவே எடுக்கவில்லை. ஏன் அவன் வேறு ஏதாவது பேச ஆரம்பித்தாலும் உடனேயே வைத்து விடும் எண்ணத்தில் தான் இருந்தாள். ஆயினும் ஒரு உற்சாகம் தேவகி அருகில் வந்து குனிந்தவள் ,
“என்னம்மா ரொமான்ஸ் சீன் போனா என்னைய பட் பட் னு படுக்க வைப்ப… இப்ப நீயே படுத்துட்ட.. ” என்றவளை கையினால் தட்டப் போக அவரிடமிருந்து சிரித்துக் கொண்டே தப்பித்து ஓடியவள் தாமரையையும் அழைத்துக் கொண்டு மாடியேறி விட்டாள்.
அங்கிருந்த அருணாச்சலமும் சொக்கலிங்கமுமே தில்லை ஆதவனுடன் பேசியதால் தான் இந்த புன்னகை என நினைத்துக் கொண்டனர்.தேவகியும் மகள் கணவனுடன் பேசியதில் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது எதுவும் கூறி அவளை கோபப்படுத்த வேண்டாம் என நினைத்தவர் ஆதவன் வந்ததும் தேவா மற்றும் தாமரையின் திருமணம் குறித்துப் பேசிக் கொள்ளலாம் என விட்டு விட்டார்.
தாமரையும் தில்லையும் அறைக்கு வந்ததும், ” அண்ணனது ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது. ‘அம்மா ‘ இருந்திருந்தால் ” என்ற நினைவு தாமரைக்கு வரவும் விஜயானந்தும் நினைவிற்கு வந்தான். அவன் கொடுத்த வீடியோ கேஸட்டுகளைப் போட்டுப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது.
கூடவே அப்பாவும் மாமாவும் கீழே அமர்ந்துப் பேசிக் கொண்டிருக்கையில் தொழிலில் விஜயின் ஈடுபாட்டைக் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட தாமரைக்கு விஜயின் நியாபகம் சற்று அதிகமாகவே வந்தது அன்று அண்ணனோடு சென்னைக்கு சென்றவனை அதன் பிறகு அவள் பார்க்கவே இல்லை.இன்றைய அவர்களது உரையாடலில் இருந்து அவன் தங்களது அலுவலகத்தில் தன் தந்தைக்கு துணையாக பணிபுரிகிறான் என்பதை புரிந்துக் கொண்டாள்.
அலமாரியில் இருந்து கேஸட்டை எடுக்கவும் , , படுத்திருந்த தில்லை,” ஐ… என்ன கேஸட் டி இது .. புதுப் படமா…” என அதனைக் கையில் வாங்கிக் கொண்டே கேட்டாள், தாமரை சிறிது சங்கடத்துடன் ,
“இல்லை திலோ.. திருவிழா பொருட்காட்சி போனோமே அது.. வாரீயா .. அண்ணன் ரூம்ல இந்த கேஸட் போட்டு பார்க்கலாம்” என அழைத்தாள்.
“அட… ஆமா அந்த ஆனந்தண்ணாக் கையில பார்த்தேன்…” என்றவளுக்கு அதனை ஆதவனும் கையாண்டது நியாபகம் வர .. அவனது நினைவில் சிறு வெட்கமும் வந்தது. அதுவும் தாமரை ஆதவனது அறைக்கு அழைக்கவும்.. அந்த அறைக் கொடுத்த நினைவுகள் வண்ணப் பூக்களாக மனதில் மலர… சிறிது தயக்கத்துடன் ,
“ஆமா இந்நேரம் கீழ இருக்க டெக்ல (Tech) பார்க்க முடியாதுல… சரி வாடி…” என்றவாறு இருவரும் ஆதவனின் அறைக்குள் நுழைந்தனர்.ஆதவன் கிளம்பிய மறுநாள் செண்பகா அந்த அறையை சுத்தம் செய்திருக்க… இன்று தான் மீண்டும் உள்ளே வருகிறாள் தில்லை.
தாமரை ஒளிநாடாவை இயக்குவதில் மும்முரமாக இருக்க , தில்லை சென்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள். அந்த அறையும் அந்தக் கட்டிலும் ஆதவனை மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்தியது. சிறு பெண்ணிற்கு அவனது சிறு சிறு தீண்டல்களும் மறக்க முடியவில்லை.. ஏன் மறக்க முடியவில்லை… புரியவில்லை. அதோடு அவன் அவளை அணுகிய விதம்..நினைத்தாலே இனிக்கத்தான் செய்தது..
” இப்படி அவங்களை நினைச்சாலே வெட்கம் வருது. அன்னைக்கு அவங்க பார்வைய என்னால எதிர்கொள்ளவே முடியல… இப்பலாம் யார் மாமாவ பத்தி பேசினாலும் கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கே… ” என எண்ணும்போதே, தொலைக்காட்சிப் பெட்டியில் ஆதவன் மீனாட்சியிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். திரையில் அவனருகில் நின்ற தாமரையோ மீனாட்சியோ தில்லையின் கண்ணிலேயே படவில்லை.. கண்ணிலும் கருத்திலும் ஆதவனே நின்றான்.
அவனைப் பார்க்க பார்க்க.. ” திரும்ப நேரில் பார்க்க மாட்டோமா… அவனருகில் நிற்க மாட்டோமா.. இதோ இந்த இடத்தில் … ” என நினைத்தவளுக்கு எண்ணங்கள் எங்கோ போக தலையணையால் முகம் மறைத்துக் கொண்டவளுக்கு ஒரு கள்ளச் சிரிப்பு பூக்க ஆரம்பித்தது.
நான் காண்பதே உன் கோலமே..
அங்கும்…இங்கும்..எங்கும்..
எங்கெங்கோ செல்லும் ..என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்..பொன் வண்ணங்கள்.
தலையணைப் பின் மறைந்து ஒற்றைக் கண்ணால் ஆதவனைப் பார்த்தவள்…பார்த்துக் கொண்டே இருந்தாள். பார்க்க பார்க்க அவன் மீது ஆசையும் அன்பும் அதிகமாகியது. அப்போதுதான் ஒன்றை உணர்ந்தாள்.. உணர்ந்த நொடி தலையணையை மெத்தையில் போட்டுவிட்டு தொலைக்காட்சிப் பெட்டி அருகில் சென்று திரையில் ஆதவனைப் பார்த்தாள்.
வண்ண வண்ண எண்ணங்களும்
வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே..
அப்ப அப்ப இது தான் காதலா… சினிமால எல்லாரும் காதலிச்சு கல்யாணம் பண்ணுவாங்க… எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் காதல் வந்துருக்கா… இல்லையோ …யோசிக்க யோசிக்க இந்த காதலுக்கு நிறைய காரணங்கள் கிடைத்தது தில்லைநாயகிக்கு .