தில்லையின் தந்தை சொக்கலிங்கத்திற்கு மகளை விட்டுக் கிளம்புவது மனதிற்கு என்னவோ செய்தது.தில்லை அவருக்கு அவ்வளவு செல்ல மகள்.. அவரைப் பொறுத்தவரை இன்னும் குழந்தை தான் அவள் . மகளை படிக்க வைக்கவே விரும்பினார்.அருணாச்சலத்தின் தாய் மாமன் மகனே சொக்கலிங்கம்.. எனவே தான் மகளை ஆதவனிற்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க வேண்டிய சூழ்நிலை வந்ததும் வேறு வழியின்றி சம்மதித்து இருந்தார். ஆனாலும் மகள் சம்மதிக்கவில்லை என்றால் எந்த வகையிலாவது உடனடியாக திருமணப் பேச்சை நிறுத்தி இருக்கக் கூடியவர்தான். ஆனால் அவளே வந்து திருமணத்திற்கு சம்மதம் என்றது அவருக்கும் ஆச்சரியமே.
மீனாட்சியை மருத்துவமனையில் சேர்த்திருந்த அன்று அவளது பதினெட்டாம் பிறந்த நாள் என்பதால் , அவளது பெயரில் புதிதாக நிலம் ஒன்றை பதிவு செய்து விட்டு குலதெய்வக் கோவிலில் வழிபாடு முடித்து திரும்புகையில் அவரது அலுவலக பணியாள் வீட்டின் முன் நின்று தகவல் தெரிவிக்கவே ,உடைக் கூட மாற்றாமல் கிளம்பி விட்டனர்.
அன்று முதல் அவர் பார்க்கும் போதெல்லாம் தாமரையோடுதான் அவளது பொழுதுகள்….தங்கள் வீட்டில் அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் அனைத்தும் தேடி வரும் … தேவகி சமையல் பழகு… வீட்டு வேலைகள் பழகு என ஏதாவது சொன்னாலும் தந்தையிடம் சலுகை கொண்டாடி எதுவுமே செய்ய மாட்டாள். அவருக்கு அவள் எப்போதும் இளவரசியே.. அப்படி எந்த வேலையும் செய்யாமல் இருந்தவள் இங்கு வந்த நாட்களாக தாமரையை பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்வதை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறார்.
தேவராஜன் மதுரையிலிருந்து அவர்கள் ஊருக்குச் சென்று விட.. சொக்கலிங்கமும் தேவகியும் மட்டும் வீட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்தனர். நேரம் காலை ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருக்க தாமரையும் தில்லையும் இன்னும் எழவே இல்லை. தேவகி மகளை எழுப்பி சொல்லிக் கொண்டு செல்லலாம் என கணவரிடம் கூற.. அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார்.
“என் பொண்ணு அவளா எழுந்து வரும் போது கிளம்புவோம்… அங்க மட்டுமில்ல இங்கேயும் அவ இளவரசியா தான் இருக்கணும்” என்று விட்டார். திருமணத்தை மெதுவாக செய்யலாம் … இப்போது நிச்சியம் போல் செய்து கொள்ளலாம் என மீனாட்சியிடம் கூறுமாறு அவர் கேட்டிருக்க…தேவகியும் அதற்கு உடன்படவில்லை என்ற கோபம் அவருக்கு இருந்துக் கொண்டே இருக்க.. அதனை இப்படி வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
தேவகியும் செண்பகாவிடம் அவர்கள் கிளம்பியதும் என்ன செய்ய வேண்டும் எனக் கூறிக் கொண்டு இருந்தார். தேவராஜன் வீட்டு தொலைப்பேசிக்கு அழைப்பு விடுக்கவும் , அந்த மணிச் சத்தம் கேட்டு தோழிகள் இருவருக்குமே விழிப்பு வந்தது. நேரமும் பத்தை நெருங்குவது தெரிய இருவருமே முகம் கழுவி விட்டு கீழே கூடத்திற்கு வந்தனர்.
அப்போது தான் தன் பெற்றோர் இருவரும் கிளம்ப தயாராக இருப்பதை உணர்ந்த தில்லை.. தேவகி அருகில் வந்து ,
“என்னம்மா இப்பவே கிளம்பற… சாயந்திரம் போகலாம்ல..” தில்லை அவளது அம்மாச்சி வீட்டிற்கு தேவகியோடு வந்து தேவகியோடே கிளம்பி விடுவாள் இம்முறை அவரும் கூடவே இருந்ததால் அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இப்போது கிளம்புகிறார் என்றதும் , தன்னை தனியாக விட்டுச் செல்வது போல் உணர்வு.. அவளும் சிறுப்பெண் தானே.. கண்ணில் நீர் வரத் துவங்க … சொக்கலிங்கம் அருகில் வந்தவள் ,
“அப்… பா…” என அழுக… அவருக்கு சங்கடமாகி விட்டது. “என்ன மா… வீட்டுக்கு வந்துடுறியா பாப்பா.. நான் மச்சான் கிட்ட பேசிக்கிறேன்.. அங்கிருந்து காலேஜ் போகலாம்.. நான் மாப்பிள்ளைகிட்டயும் பேசிக்கிறேன்” என மகளின் கண்ணீர் துடைத்து அந்த அன்பு தகப்பன் கேட்கவும் தேவகி ஒரு பக்கம் சங்கடத்துடன் நெளிந்தார் என்றால் , தாமரை ஒரு புறம் வருத்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
எங்கே கணவர் அண்ணனிடம் கேட்டு விடுவாரோ என அஞ்சி அவர் தில்லையை சமாதானப்படுத்த அருகில் செல்கையிலயே அழுவதை நிறுத்திய தில்லை ,
” இல்லப்பா… நான் அம்மாச்சி வீட்லயிருந்தே காலேஜ் போறேன்.. நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி வந்து போகணும் சரி யா.. ” என தேம்பியவளிடம் ஆறுதல் வார்த்தைகள் பேசிவிட்டு இருவரும் அவர்களது காரில் ஏறி கிளம்பினர்.
ஆதவன் கிளம்பியபோதுக் கூட அமைதியாக நின்றிருந்த மகள் தங்களை வழியனுப்புகையில் அழுத விழிகளோடு நின்றது பெற்றோராக அவர்களை கவலையுறச் செய்தது. தேவகிக்கு தனது திருமண நாட்கள் தான் நியாபகத்தில் வந்தது. உறவினரே என்றாலும் திருமணமான மூன்றாம் நாளே ஆடி துவங்கிவிட தன்னை அம்மா வீட்டுக்கு அனுப்பிய போது தான் கணவனை எந்தளவுக்குத் தேடினோம்… ஆனால் தில்லையோ … ” என நினைத்தவருக்கு அந்நாட்களை நினைத்து ஒரு புறம் வெட்கமும் இப்போது மகளை நினைத்து கலக்கமும் உண்டாகியது.
இரவெல்லாம் தாமரையை தில்லை தேற்றியிருக்க இப்போது தில்லையை தாமரைத் தேற்றினாள்.
“திலோ நீ வேணுமின்னா மாமா அத்தைக் கூட இருந்து காலேஜ் போறியாடி .. ” எனக் கேட்டுவிட, தில்லை சட்டென அழுகையை நிறுத்தி விட்டு தாமரையைப் பார்த்தாள்.
தாமரையின் முகம் அப்படியொரு சோர்வையும் சோகத்தையும் காட்டியது. கிட்டத்தட்ட எல் கே ஜி முதல் ஒன்றாகவே வளர்ந்தவர்கள்.. “ஐயோ முத்தாரம்மா இவளுக்காகத்தானே நான் இங்க வந்ததே.. என்னைய நினைச்சு இவ கவலைப்படுவாங்கிறதையே மறந்து போய் அழுகிறேனே.. எங்கம்மா ஊருக்குப் போறத நினைச்சே நான் அழுகிறப்போ.. “செல்வீ… “
எனச் சத்தமாக அழைத்தவள் , “நான் அழழடி… எங்கம்மா இனி இது தான் உன் வீடுனு சொல்லிச்சு.. அப்புறம் நான் எப்படி அங்க போக..வா… வா சாப்பிடலாம்.. இன்னும் ரெண்டு நாள் மட்டும் மாத்திரை இருக்குடி அதை சரியா போட்டுக்கோ..செண்பா மதினி.. எங்களுக்கு சாப்பாடு வைங்க..” என்றவள் தாமரையை சாப்பிட வைத்து மாத்திரைகளையும் கொடுத்தாள்.
அன்று முழுவதும் தாமரையுடனேயே இருந்து.. அவளைக் கவனித்துக் கொண்டவள் இரவில் வீடு திரும்பிய அருணாச்சலத்திற்கும் உணவு பரிமாறி அவருக்கும் மாத்திரைகளை எடுத்து தர , அவர் ,,,
“சாமி.. இனி நானே மாத்திரை எடுத்துப் போட்டுக்குவேன்… நீங்க பாப்பாவோட சேர்ந்து படிப்பகவனிங்க..” எனவும்,
“காலேஜ் கிளம்பினதும் நீங்களே போட்டுக்கங்க மாமா… ” என்றவள் அவருக்கும் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டுத்தான் தாமரையோடு அறைக்கு வந்தாள். அத்தையும் இல்லை.. செல்வியின் அண்ணனும் இல்லை … ஆம் தில்லைக்கு இன்னும் ஆதவன் செல்வியின் அண்ணனாக மட்டும் தான் நினைவில் இருந்தான். தேவகி ஏற்கனவே சொல்லியிருந்ததாலும் தான் தான் இனி இந்த வீட்டில் இவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கே இருந்ததாலும் இயல்பாக அவர்களை கவனித்துக் கொண்டு இருந்தாள் தில்லை.
ஐ.எஸ்.டி(ISD) செய்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன்.ராஜா வீட்டுப் பிள்ளைதான்.. ஆனாலும் நிமிடத்திற்கு இத்தனை டாலர்கள் என கட்டினால் தான் இந்தியாவிற்கு தொலைப்பேசி பேச முடியும் என்பதால் யார் யாருக்கு பேச வேண்டும் எனக் குறிப்பெடுத்து பணம் கட்டிக் கொண்டவன்… அந்த அட்டையின் மூலம் முதலில் தந்தை அலுவலகத்தில் இருக்கும் நேரமாகப் பார்த்து அழைத்துப் பேசியவன் , பின் விஜய் தங்கியிருந்த சென்னையிலுள்ள விடுதிக்கும் பேசிவிட்டு தங்கையிடம் பேசுவதற்காக வீட்டிற்கு அழைத்தான்.
அப்போது மாலை ஏழு மணி இருக்கும் தில்லையும் தாமரையும் வீட்டு முன்னிருந்த தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். வீட்டினுள்ளிருந்து தொலைப்பேசி ஒலி எழுப்பவும் ,
“லாங் ரிங் டி … எஸ்டிடி (STD) கால் தான் … எங்கம்மா வா தான் இருக்கும்.. நான் பேசிட்டு வாரேன்.. ” என்றபடி வீட்டினுள் சென்றாள். மகளை விட்டுச் சென்ற இரண்டு நாட்களாக…காலை, மதியம் , இரவு என அழைத்துக் கொண்டு மகளை நலம் விசாரித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு தொலைப்பேசியில் பேச மட்டும் தான் தெரியும். அதை இயக்க யார் துணையாவது வேண்டும். உள்ளூரில் அழைப்பு விடுக்கவே தயங்குபவருக்கு வெளியூரூக்கு அழைக்க எப்படி முடியும்.. எல்லாம் தேவராஜனின் உபயம்தான்.
வேகமாக வந்தவள் தொலைப்பேசியை எடுத்து இடது காதில் வைத்துக் கொண்டே வலது கையில் அதன் அருகிலேயே இருந்த கண்ணாடி உருளைப் போன்ற பேப்பர் வெய்ட்டையும் எடுத்துக் கையில் வைத்துக் கொண்டே ,
” இப்ப மட்டும் உன்னைய நேர்ல பார்த்தேன்.. இந்த பேப்பர்வெய்ட்டாலயே உன் மண்டைய பிளந்திருப்பேன். எத்தனை தடவை சொல்றது.. அம்மாதான் சின்ன பிள்ளைய கட்டிக் கொடுத்த பயத்துல அது சரியா இது சரியானு கேட்டு பாசம்ங்கிற பேர்ல சங்கடப்படுத்தி ஃபோன் போடுறாங்கன்னா… இதெல்லாம் இப்பதேவையானு நீயாவது யோசிக்க வேண்டாம்… அத்தை இறந்து முழுசா ஒரு மாசம் கூட முடியல… இப்படி என் சந்தோஷம் என் சந்தோஷம்னு பார்க்கிறது சுயநலமா இல்ல.. செல்வி ஃபீல் பண்ண மாட்டாளா…”
தில்லை இப்படி பேசிக் கொண்டே போக.. “சாரி … ” என்ற ஒற்றை வார்த்தை எதிர்புறம் இருந்து வர..” என்ன சாரி பூரின்னுட்டு … ” என்றவளுக்கு குரலின் வேறுபாடு புரிய … ரீசிவரைத் தாங்கியில் பட்டென்று வைத்தவளுக்கு உடல் முழுவதும் வேர்த்தது.. கையிலிருந்த பேப்பர்வெய்ட் நழுவி தரையில் விழுந்து சத்தம் எழுப்பியது.
தில்லையோ அதைக் கூட உணராமல் முகத்தில் நாணச் சிவப்பு வர நாக்கைக் கடித்து தலையில் கை வைத்து ,
“அச்சச்சோ யார்கிட்ட பேசிட்டுருக்க… ” என்பதாக நினைத்து அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள். தன் அசட்டுப் பேச்சாலும் ஆதவனின் குரல் கேட்டதாலும் நாணத்தோடு அமர்ந்திருந்த தில்லையை தேவகி பார்த்திருந்தால் மகளுக்கு திருஷ்டி சுற்றி தான் போட்டிருப்பார்.பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள். அதற்குள் பேப்பர்வெய்ட் விழுந்த சத்தத்தில் தாமரையும் செண்பகாவும் அங்கு வந்திருந்தனர்.
மோகமா உன் தாகமா ..முழுவதும் என் மோகமா
ராகமா உன் பாவமா ..நாளெல்லாம் உன் வேகமா..
(Dear 2K கிட்ஸ்… இன்று இருந்த இடத்திலிருந்து உலகின் எந்த மூலைக்கும் ஏன் வான்வெளிக்கே நொடியில் அழைப்பு விடுக்கும் தொழிற்நுட்பம் 90களின் ஆரம்பங்களில் கிடையாது. தெருவில் ஒரு வீட்டில் தொலைப்பேசி இருந்தாலே பெரிய விஷயம். வேறு ஊரில் இருப்பவர்களுக்கு பேசவே மாதக் கணக்கு என்றால் வெளிநாட்டு அழைப்பு என்பது ஆபூர்வமே )