வேகமாக கீழே இறங்கி வந்த தேவாவின் கண்களில் இரவு விளக்கின் ஒளியில் கையில் முகம் புதைத்து முழங்காலில் கவிழ்ந்திருந்த தாவணிப் பெண் தெரியவும் ,
“என்ன பாப்பா இருட்டுல தலைல கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்க.. தலை வலிக்குதா காஃபி போட்டுத் தர வா” என்றவாறே அருகில் வந்தான். அந்த சத்தத்தில் நிமிர்ந்ததோடு எழவும் செய்த தாமரை ,
” ஆன்.. ஆமா… இல்லை தேவாத்தான்..” எனத் தடுமாற்றத்தோடும் கண்களைத் துடைத்துக் கொண்டும் பேசியவள் அருகில் வைத்திருந்த கேசட் பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு தேவகியும் ஆவுடையாளும் இருந்த அறைக்குள் சென்று விட்டாள். தேவா தான் அவளது பதிலில் அப்படியே நின்று விட்டான். நிஜமாக அவனுக்கு இது மாமன் வீடு என்ற நியாபகம் அப்போது வராததால் அங்கு தாமரை அமர்ந்திருப்பாள் என்றே எண்ணவில்லை.
தங்கை அதிகமாக இப்படி தாவணி அணிந்து நடு இரவிலும் படிப்பவள் தலையில் கை வைத்து அமர்வாள். அப்போது அவளுக்கு காஃபி டீ எனப் போட்டுக் கொடுத்த நியாபகத்தில் மட்டுமே இப்போதும் தில்லை என நினைத்துக் கேட்டது. அது தாமரை என்றதோடு அவளது அழைப்பில் நெஞ்சில் பூ மழைதான்.
அவள் உள்ளே சென்று விட்டாள்.. ஆனால் அவள் அமர்ந்திருந்த தூண் அருகே வந்தவன் கைகளைக் கட்டி சாய்ந்து நின்று அவள் நின்ற இடத்தில் தானும் நிற்கிறோம் என்ற சுகத்தை அனுபவித்தான். கூடவே..
“மனசுக்குள்ள ஏதோ வரப் போய் தானே இந்த கிறுக்குத்தனம் தேவா..” என சிரித்துக் கொண்டவன் , பெருமூச்சுடன் , “இந்த நேரம் அத்தை படத்தைப் பார்த்து தனியா அழுதுட்டு இருக்காளே… ப்ச் பக்கத்துல போய் ஆறுதல் சொல்லக் கூட முடியல… ” என வருந்தியவனுக்கு தன் தங்கை மீது சிறிது வருத்தம் தோன்ற…
“அண்ணன் நல்லா பார்த்துக்குவேன்னு நம்பிருக்கலாம்ல… இந்நேரம் இப்படி இருட்டுல உன் ஃபிரண்ட தனியா அழவிட்டுருக்கமாட்டேன்ல… ” என நினைத்துக் கொண்டவன் அறைக்குச் சென்று பணத்தை எடுத்துக் கொண்டுப் போனான்.
அதே நேரம் விஜயும் தாமரை படிகள் இருந்த பக்கத்தை கடந்து செல்வதைப் பார்த்து விட்டு அவள் மேலே வரவில்லை என்பதனை உணர்ந்து சென்றுப் படுத்திருந்தான். தேவா வரும் நேரம் விஜய் பாடலை அனைவரும் கேட்பது போல் வைத்திருந்தான்.
அதுவும் காதல் பாடல்களாக ஒலிக்க முகத்தில் தாமரையின் நினைவில் குறுநகை ஓடியது.
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய்…
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே…
அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை…
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே…
தேவா மேலேறி வந்தவனுக்கும் அந்த பாடல் வரிகள் ஒரு புன்னகையைக் கொடுக்க … அந்தப் பாடலை முணுமுணுத்தவாரே விஜய் அருகில் அமர்ந்து படுக்கத் தயாரானவன்.. அவனது முகத்தையும் பார்த்து விட்டு ,
“நண்பா உன்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரும் என்னவோ ” எனப் பாடியவாறு புருவம் உயர்த்திக் கேட்க,தேவா அருகில் அமர்ந்ததை உணர்ந்த விஜய் அவனைப் பார்த்திருக்க … அவன் கேட்ட பாணியில் எழுந்தமர்ந்து வாய் விட்டு நகைக்க ஆம்பித்து விட்டான்.
தாமரையிடம் தன் நிலையை விளக்கி விட்டோம்… இனி முடிவு அவள் கையில்தான் என்றாலும் நிச்சியம் தனக்குச் சாதகமான பதிலே வரும் என்ற நம்பிக்கையில் அவள் நினைவிலயே மீண்டும் தான் பதிந்து வைத்திருந்த காதல் பாடல்கள் அடங்கிய ஒலிநாடாவை ஓட விட்டு கேட்டுக் கொண்டிருந்தான். தேவா உடனே ஒரு விரலால் தனது தலையைத் தட்டி..
” காதல் பாட்டா கேட்கிற… கேட்டதுக்கு பதில் சொல்லாம இப்படி சிரிக்கிறன்னா .. ஒரு மங்கை உன் மனசுக்குள்ளும் வந்துட்டான்னு நினைக்கிறேன். கரெக்ட்டா …” என தலையைத் தட்டிய விரலால் விஜயைப் பார்த்துக் கேட்டான்.
அப்போதும் சிரித்த விஜயைப் பார்த்தவன் , இப்போது ஆட்காட்டி விரலை அவன் புறம் நீட்டி …
“ஹேய் அப்ப உண்மை தான்.. உன்னைய இப்படி சிரிக்க வைக்கிற அந்த மங்கை யாரோ..” என , தேவாவின் விரலோடு தன் ஒற்றை விரலை கோர்த்த விஜய் ,
இப்போது தேவா வாய் விட்டு சிரித்தான்… ஆதவ் என்கிட்ட நீ பாதி நார்த் இன்டியானு சொன்னான்… ஆனா பக்கா தமிழன் போலவே.. தமிழை இவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சுருக்க… ” என்ற தேவாவிடமிருந்து விஜய் விரலைப் பிரித்து கைகளைக் கட்டி புன்னகைத்துக் கொண்டே,
“இது பதில் இல்லையே..” என்பது போல் விஜய் .பார்க்க.. தேவாவும்…
” மணி பதினொன்னு ஆகப் போகுது… ரெண்டு மணி நேரத்துல எழுந்திருக்கணும் நண்பா… எனக்கு பிடிச்சு என் மனசுக்குள்ள வந்தாலும் எனக்கு வரப்போற மங்கை என் தங்கை முடிவு தான்.. இப்போதைக்கு கனவுல டூயட் பாடிட்டு போய்க்கிறேன்.. இப்ப தூங்கலாம்” என்றவனும் கண்களை மூடிக்கொண்டான்.
கூடவே “தேவா மங்கை தங்கை … ரைமிங்காடா.. அப்ப காதல் வந்துட்டா எல்லாருமே கவிஞன் ஆகிடுவோமா..” என நினைத்தவன் பட்டென விழிகளை திறந்து எழுந்து அமர்ந்தான். கூடவே எழுந்த விஜயும் , “என்ன தேவா..” என கேட்க…
” காதல் … ” என தேவா பதிலளிக்க … விஜயும் ஓர் அழகிய புன்னகையுடன், “காதல்… ” என மென்மையாகக் கூறினான். விஜயைப் பார்த்து திரும்பி அமர்ந்துக் கொண்ட தேவா…
“சகல நானும் எத்தனையோ பொண்ணுங்களப் பார்த்திருக்கேன்.. சைட் அடிச்சுருக்கேன்.. ஆனா ஒரே ஒரு பொண்ணு மட்டும் பிடித்தம்ங்கிறத மீறி எப்போவும் என் நினைவிலயே நிற்கிறா அப்ப அது காதல் தானோ..” அவனது வார்த்தைகளில் மெல்லிய புன்னகையை வீசிய விஜய், மீண்டும் படுத்து தனது கைகளை பின்புற தரையில் ஊன்றி இருள் வானை வெறித்தவாறு ,
“அப்பா அம்மா… சொந்தம் பந்தம் என யாருமே இல்லாத எனக்கு இந்த உறவுகளோட மொத்த உருவமா ஒருத்தி வந்து என் முன்னாடி நிற்கிறான்னா அது இந்த காதலால தான் … அது எப்போ எப்படி வந்ததுனு தெரியாது.. ஆனா இந்த நொடி அவளால மட்டும் தான் இந்த உலகத்துல வாழணும்னு ஆசைப்படுறேன்.. அப்ப அது காதல் தானே தேவா…” உணர்ச்சிவசப்பட்டவாறு தேவராஜனைப் பார்க்க…
“ஹேய் விஜய் உன் கண்கள்ல தெரியற காதலப் பார்த்தா எனக்கு வந்துருக்கிறது காதலாங்கிறா டவுட் தான் வருது… அந்த பொண்ணு லக்கி விஜய்…” என அவன் தோள் தட்ட…
“என் ஃபீல் உனக்கும் இருந்தா அது காதலா தான் இருக்கும்.. தேவா…” என்றவனைப் பார்த்த தேவா…
” இருக்கலாம் சகல … இப்போதைக்கு நீ கேட்கிற பாட்டெல்லாம் எனக்கு என் மனச சொல்றது போல தான் இருக்கு..” என்றவன், ” நேரமாகுது படுக்கலாம்” என்றதோடு தான் தாமரையை விரும்புகிறோம்… என்பதே மனதை இதமாக்கியது. கூடவே “தேவா அம்மா ஓகே சொல்லிடுவாங்க.. ஆனா பாப்பா… அன்று புகைப்பதைக் காரணம் காட்டி தாமரையை திருமணம் செய்ய விட மாட்டேன் என்ற தில்லையை நினைத்தவன் ,
“ஐயோ… முதல்ல பபுள்காம் வாங்கிர வேண்டியதுதான்..” என எண்ணமிட்டுக் கொண்டே படுத்தவன், பாடல்களின் இனிமையில் சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான்.
விஜயிற்குத் தான் உறக்கமில்லை , “அந்த பாட்டெல்லாம் என் மனச சொல்ல பதிவு பண்ணினது தானே தேவ்.. ஆனா… ” என யோசிக்கைலயே எங்கே தாமரை தன்னைத் தவிர்த்து விடுவாளோ என்ற பயம் அவனுக்கு உறக்கமற்றதாக்க… எழுந்து காலையில் அவளைக் கண்ட அறையின் புறம் சென்று கைகளைக் கட்டி ,கைப்பிடிச்சுவரில் அமர்ந்துக் கொண்டான்
தாமரைக்கும் அண்ணன் கிளம்புகையில் விஜயிற்கு என்ன பதில் கொடுப்பது என்ற குழப்பத்தில் உறக்கம் வரவில்லை. திரும்பவும் தனிமைத் தேவைப்பட்டது. ஆனால் தேவகியும் ஆவுடையாளும் விழித்தால் தன்னைத் தேடக்கூடும் என்பதால் அந்த அறையின் ஜன்னலின் கீழ் புற கதவையும் திறந்து காலையில் அமர்ந்தது போல் அமர்ந்துக் கொண்டாள்.
உன் வாசலில் என்னை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே..
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து..
இருவருமே ஒருவரது நிழலை ஒருவர் உணர்ந்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து விட்டனர். இப்படி அந்த இரவு அங்கிருந்த இளையவர்களுக்கு ஒவ்வொரு வித உணர்வைக் கொடுத்து உறக்கமில்லாத இரவாகிப் போனது.