விஜயானந்த் மேல் அருணாச்சலம் கொண்ட நம்பிக்கை விஜயிற்கும் உத்வேகத்தைக் கொடுக்க …  நண்பனின் உணர்வுகளையும் புரிந்துக் கொண்ட விஜய் ஆதவனிடம் , 

“ஆதவ்  ஆன்ட்டி சொல்றதும் சரிதானே… கூடவே மாமாவுக்கு பிஸ்னஸ் ல நான் ஹெல்ப் பண்றேன்.. உன் அப்பாவையும் தங்கையையும் பார்த்துக்க இவங்க எல்லாரும் இருக்கிறாங்க..” என்றவன் மாடியில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தில்லையைப் பார்த்து …

 “இப்ப உன் ஒய்ஃபும் இருக்கிறாங்க.. அவங்க உன் தங்கை பக்கத்துலயே இருந்து கவனிச்சுக்கிறாங்க.. அதனால நீ கவலைப்படாம உன் படிப்ப முடிச்சுட்டு வா ஆதவ் … இன்னும் ஆறு மாசம் தானே…”

இவ்வாறு விஜயானந்த் ஆதவிடம் ஆறுதல் கூற..கேட்டுக் கொண்டிருந்த தில்லை மிகவும் மகிழ்ந்ததுடன் விஜயின் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாகியது. தாமரையின் அருகில் வந்தவள் , 

” பாருடி எங்கிருந்தோ வந்த அந்த அண்ணன் கூட என்னையப் புரிஞ்சு வச்சிருக்காரு… ஆனா உங்க நொண்ணனுக்கு என்னைத் தெரியல…” என்றவள் தோழியையே உற்று நோக்கினாள். அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று.. தாமரையோ பார்த்தது பார்த்தபடி எவ்வித உணர்ச்சியும் இன்றி இருக்க…

“எங்க அண்ணன அப்படியெல்லாம் சொல்லாதனு சண்டை போடுவியே … இப்ப போட மாட்டியாடி .. என் முதுகுல அடிப்பியே அடியேன் டி… ” என்ற தில்லை தாமரையின் கைகளைக் கொண்டு தன்னை அடிக்க வைக்க… தாமரை அப்போதும் அப்படியே இருக்க அவளை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் தில்லை.பின் அழுகையை நிறுத்தி அவள் பின்னங் கூந்தலைப் பிடித்து..

“சரிடி நீ இப்படி எத்தனை நாள் இருந்திருவனுப்பார்க்கிறேன் … உன்னைய இந்த நிலையிலிருந்து வெளிக்கொண்டு வரலனா நானெல்லாம் என்னடி ஃபிரண்டு.. அத்தை எங்கேயும் போகல என் ரூபத்துல உன் கூட தான் இருக்காகனு நம்பு.. அடுத்த மாசம் காலேஜ் ஆரம்பிக்குது ஒழுங்கா படிச்சு டாக்டராகல…. ஆகுற… தாமரை செல்வி எம்.பி.பி.எஸ் னு போட வைக்கல நான் தில்லை நாயகியே கிடையாது.”

கீழே குழப்பத்தில் அமர்ந்திருந்த ஆதவன், தாமரை தற்சமயம் தான் கூறுவதை புரிந்துக் கொள்கிறாளோ இல்லையோ…  தங்கையைப் பார்த்துப் பேசிவிட்டு முடிவெடுக்கலாம் என்ற எண்ணத்தில் தான் அவளைக் காண வந்தான். அச்சமயத்தில் தான், வாசலுக்கு முதுகு காட்டிய வண்ணம் தில்லை தாமரையோடுப் பேசிக் கொண்டிருந்தது..

தாய் மறைந்த அந்த மூன்று நாட்களாக தனக்கு திருமணமானதையே மறந்திருந்த ஆதவன் அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக தனக்கு மனைவியானவளைப் பார்த்தான். அதுவும் அவள் அவனது தங்கையிடம் கூறியதைக் கேட்டு மனதிற்குள் மகிழ்ச்சி பரவ … அப்படியே கீழே இறங்கி வந்து விட்டான்.

வந்து அருணாச்சலத்தின் முன் நின்றவன் , “அப்பா அம்மாவுக்கு பதினாறாம் நாளே காரியம் பண்ணிடலாம்.. அடுத்த நாளே நான் வெளிநாடு போக டிக்கட் இருக்கா பார்க்கிறேன்.” என்று விட்டான். சொன்னது போல அவனுக்கு டிக்கெட்டும் கிடைத்து விட , வெளிநாட்டிற்கு செல்லுவதற்கு முன்னேற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். கூடவே அருணாச்சலத்திற்கு அலுவலகத்தில் அதிக வேலை வைக்காமல் அனைத்தையும் விஜயானந்தே பார்க்கும்படி செய்தவன்.. வீட்டில் அத்தையிடம் தங்கையின் உடல்நிலைக் குறித்துக் கேட்டறிந்ததோடு இரவில் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் தாமரை செல்வியின் அறைக்கு வந்து அவள் பேசினாலும் பேசாவிட்டாலும் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அவள் அருகே அமர்ந்து தோள் சாய்த்து ஆறுதல் வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் அருகிலிருக்கும் அவனது அறைக்குச் செல்வான்.

ஆதவன் அறைக்குள் நுழைந்தாளே அண்ணன் தங்கைக்கு தனிமைக் கொடுத்து அறைக்கு வெளியே வந்து நின்றுக் கொள்ளும் தில்லைக்கு,

“அட… இந்த பிள்ள அண்ணா அண்ணா னு உருகுறது சும்மா இல்ல போலவே.. தங்கச்சி தங்கச்சினு அவளுக்கு மேலல இவரு உருகுறாரு… ” என்பதாக தான் தில்லையின் எண்ணங்கள் இருந்தது. மற்றபடி கணவன் என்கிற எண்ணமெல்லாம் வரவில்லை. ஆனால் தேவகி விடவில்லை.. மகளின் கையில் குடிக்க… சாப்பிட என எதையாவது கொடுத்து , 

“மருமவன் கையில கொடு… அவர் சாப்பிடும் போது கூட இரு…” எனக் கூற..தில்லையோ , ” ம்மா நீங்க போய் கொடுங்க.. நீங்க பரிமாறுங்க… நான் தாமரைக் கூட இருக்கிறேன்” என்று விடுவாள்.

தில்லையைப் பொறுத்தவரை தாமரைக்கு துணையாக இருக்கவே இங்கு திருமணம் என்ற பெயரில் வந்தது. எனவே அவளுக்கு ஆதவன் மீது எவ்வித உணர்வும் தோன்றவில்லை. இருபத்து மணி நேரமும் தோழியோடு இருந்து அவளை மருத்துவமனை அழைத்துச் சென்று என தாமரையைக் கவனித்துக் கொண்டாள்.

தாமரையும் ஓரளவு தேறியிருந்தாள் தான். ஆனால் துக்கத்தை வெளிப்படுத்தாமல் மனதினுள்ளேயே வைத்திருப்பது ஆபத்து என மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.தில்லையும் அவளை அழவைக்க தன்னாலான முயற்சிகளை எடுத்துக் கொன்டிருந்தாள்.

இதோ பதினாறாம் நாளும் வந்தது… மாலையில் தான் பூசை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது. மதியத்திற்கு மேல் உறவுகள் அனைவரும் வரத் துவங்கினர்.தேவகி தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்.தில்லை மற்றும் தேவகிக்கு துணைக்கு மற்ற உறவுப்பெண்கள் இருந்ததால் தில்லை தாமரையோடு இருந்தாள். எப்போதும் மாடியிலுள்ள தாமரையின் அறையிலேயே இருந்தவளை அன்று கீழே கூடம் அருகே இருந்த மீனாட்சியின் அறைக்கு அழைத்து வந்து அமர வைத்திருந்தாள்.

மாலையில் விஜயானந்தும் ஆதவனோடு வந்து இணைந்துக் கொண்டான். மீனாட்சி மறைந்த அன்று அவர் காலடி அருகே அவளை உறவுகள் கட்டிப்பிடித்து அழுதுக் கொண்டிருந்த போது பார்த்தது. அதன் பிறகு அவளைப் பார்க்கவே முடியவில்லை. ஆதவன் கிளம்புவதற்கு முன் சில வேலைகளை அவனோடு இணைந்து பணிபுரிய வேண்டி இருந்ததால் தாமரையைப் பார்க்க ஆவல் கொண்டாலும் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவே இல்லை.

இன்று அந்த வாய்ப்பு அமையவும் விரைவாகவே ஆதவனைக் காண வந்திருந்தான். வீட்டின் முன் இருந்த பெரிய இடத்தில்.ஓலைக் கீற்றால் ஆன பந்தல் போடப்பட்டு இருக்க, ஆண்கள் அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.பெண்கள் அனைவரும் வீட்டினுள் இருப்பதைக் கண்டவன் தாமரையைக் காண காத்துக் கொண்டிருந்தான்.

ஆதவனைத் தேட ,அந்நேரம் அங்கு வந்த தேவராஜன் , ” வாங்க விஜய் .. மச்சான் பின்னாடி சமையல் நடக்கிறதப் பார்த்துட்டு இருக்கிறாரு.. இன்னும் இலை வந்து இறங்கல நான் போய் பார்த்துட்டு வாரேன்னு சொல்லிருங்க..” என்றவன் வெளியே சென்று விட்டான்.

தேவராஜனும் இன்று தான் வந்திருந்தான். வீட்டிற்குள் இயல்பாக செல்ல முடிந்தாலும் தாமரையை அறையில் சென்றுப் பார்க்க அவனால் இயலவில்லை. இன்று எப்படியும் வெளியே அழைத்து வருவாள் தங்கை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து இருந்தான்.

” பாப்பா மட்டும் குறுக்க வரலனா… இந்நேரம் என் பொண்டாட்டியா இருந்திருப்பா.. என்ன பாப்பா உன் அண்ணன நம்பாம போய்ட்டியே … நீ உன் தோழிய பொத்தி பொத்தி பாதுகாக்கிறப்போல நானும் அவள பார்த்துக்கிட மாட்டேனா…” என்பதாக நினைத்து சிரித்துக் கொள்வதை தவிர்த்து மேலும் எதுவும் அவனால் செய்ய முடியவில்லை.

இப்படி விஜய் ஒரு பக்கமும் தேவராஜன் ஒரு பக்ககமாக தாமரை செல்வியை ஒரு முறைப் பார்த்து விட மாட்டோமா… அவளுக்கு ஆறுதல் அளிக்க மாட்டோமா என ஏங்கிக் கொண்டிருக்க , அவர்களின் எண்ணத்தில் இருந்தவளோ தன் தோழியும் தற்போது தனது அண்ணன் மனைவியுமானவளிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.

மெத்தையில் அமர்ந்திருந்தவளிடம் எவ்வளவோ பேசியும் இயல்புக்கு வராதவளைக் கண்டு கோபமும் அழுகையும் வர.. அவளை கைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த அறையின் மிகப் பெரிய ஜன்னலருகே சென்றாள் தில்லைநாயகி.

அந்த ஜன்னல் அருகே மிகப் பெரிய  திண்டு போன்ற அமைப்புடையதாக இருக்கும். தாய்மாமன் வீட்டிற்கு சிறு வயதில் தில்லை வரும் போதெல்லாம் தாமரையுடன் அங்கு அமர்ந்து பின்புற தோட்டத்தைப் பார்த்தவாறு பேசிக் கொண்டிருப்பர். எனவே இன்றும் தாமரையை அமர்த்தி எதிரில் அமர்ந்த தில்லை, கோபத்துடன் கூடிய அழுகையுடன்,

“தாமரை அங்க பாருடி அந்த மாமரம் நீயும் நானும் சின்ன வயசுல மாம்பழம்  சாப்பிட்டு அந்த மாங்கொட்டைய அத்தை கிட்ட கொடுத்தப்ப மண்ணுல புதைச்சு வச்சாங்கள்ல அது தான… நல்லா பாரு அத்தை அந்த மாமரமா நம்ம கிட்டயே தான இருக்காங்க… இதோ இந்த பூச்செடிகளெல்லாம் அவங்க தானே வச்சாங்க… நாமளும் கூட சேர்ந்து அவங்களோட செடிகளுக்கு தண்ணி தெளிப்போம்… பாருடி.. இந்த பூவெல்லாம் அவங்க தான் … அழுடி… சீக்கிரம் இந்த உலகத்துக்கு வாயேன் டி. அடுத்த வாரம் காலேஜ் ஆரம்பிக்குதுடி.. நீ டாக்டராக வேண்டாமா…” என அவளை அடித்ததோடு தானும் அழுதுக் கொண்டிருந்தாள்.

ஆதவனைத் தேடி பின்புற தோட்டத்திற்கு வந்த விஜய் தில்லை பேசிக் கொண்டே ஜன்னலருகே தாமரையை அமர்த்தியதைப் பார்த்து விட்டான். பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான் .அவன் பார்க்கும் போதெல்லாம் பெயருக்கு ஏற்றாற்போல் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்தவள் இன்று வாடிய மலராக காட்சியளித்தாள்.

அந்த ஜன்னல் அருகே அவள் தெரிவது போல் நின்றுக் கொண்டவன் தில்லை அவளிடம் உரையாடியது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். விஜயால் தாமரையின் நிலையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளை உடனேயே சந்திக்க வேண்டும் .. அவள் இயல்பு திரும்ப நிச்சியம் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டும் என நினைத்தவன், அங்கிருந்த வேப்ப மரத்தில் சாய்ந்து நின்று கண்களை மூடிக்கொண்டான். அவன் காதலி ஆம் தற்போதெல்லாம் காதலியாக மட்டுமே தாமரையை நினைக்க ஆரம்பித்து இருந்தான்.

அவளிடம் தனியாக பேச வேண்டும் எப்படி எப்படி.. என கண்களைத் திறக்க.. ஆதவன் பின்புறம் சற்றுத் தள்ளியிருந்த அவர்களது தென்னந்தோப்பில் சமையல் செய்பவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் வேகமாக சிந்தித்து தாமரை செல்வியை தனிமையில் சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டான்.

முதற்படியாக தேவகியிடம் சென்றவன் , “ஆன்ட்டி ஆதவோட ஒய்ஃப் எங்க.. ஆதவ் க்கு ஏதோ எடுத்து தர சொல்லி தேவா என்கிட்ட  சொல்லிட்டு போனார்.” என்றான்.

வந்திருந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்த தேவகிக்கு விஜயின் வார்த்தைகள் காதினில் தேன் பாய்வது போல தான் இருந்தது. தன் அண்ணனுக்காக அண்ணன் குடும்பத்துக்காக அவசரமாக மகளை திருமணம் செய்து வைத்து இருபது நாட்களாகப் போகிறது. ஆனால் இருவரும் ஒரு வார்த்தை பேசியது போல் தெரியவில்லை. ஆதவன்  வீட்டில் இருந்தால் அவர் மாடியேறி சென்று தாமரையின் அறைக்கு கூடச் செல்வதில்லை. ஆகையால் இருவருக்கும் புரிதல் இருக்கிறதா இல்லையா என்றுக் கூட தெரியவில்லை.

தில்லையிடம் ஏதாவது கேட்டால் தேவகியிடம் கோபமாக பேசி விடுவாள். அதனால் கேட்கவும் தயங்கி நின்றவர் , இன்று ஆதவன் அவன் மனைவியைத் தேடுகிறான் என்றதும் மகிழ்ந்துப் போனவர் ,

“இதோ அனுப்புறேங்க தம்பி … ” என்றவர் கைகளை கூப்பி உயர்த்திக் கொண்டே அன்று சாமி கும்பிடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த மீனாட்சியின் புகைப்படத்தின் முன் நின்று..

” மதினி எனக்குத் தெரியும் நீங்க தெய்வமா இருந்து நம்ம புள்ளைங்கள வாழ வைப்பீங்கனு ..” என மனதில் நினைத்தவர் அவர் முன் இருந்த குங்குமத்தை எடுத்துக் கொண்டு மகளைத் தேடிச் சென்றார்.

நிலவுக்கு வானம்

நீருக்கு மேகம்

கொடிக்கொரு கிளைபோல்

துணை நீயம்மா

இனி வாழ்வில் நீதான்

என் சொந்தமே..