அலை 8

                 இன்றோடு பதினாறு நாட்கள் ஆகிற்று மீனாட்சி உலகை விட்டுச் சென்று … இன்று மாலை மீனாட்சிக்கு காரியம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, வீடு முழுவதும் உறவுகள் குழுமியிருந்தனர். மறைந்த அன்றிலிருந்தே வீட்டில் நிறைய உறவுகள் தங்கியிருக்க .. தேவகி இப்போது முழுப்பொறுப்பையும் எடுத்திருந்தார். அவர் இப்போது அருணாச்சலத்தின் தங்கை மட்டுமல்லவே.. இவ்வீட்டின் சம்பந்தியும் கூட .. அதுவும் அவரது மகள் தான் இனி இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் அத்தனை வேலைகளையும் தில்லையை முன்னிறுத்தி அவளின் பின்னால் நின்று செய்துக்கொண்டிருந்தார்.

அன்று திருமணத்தை மீனாட்சிக்காக செய்து வைத்து அவரை சிகிச்சைக்காக அனுப்பிய அடுத்த விநாடியே தான் அணிந்திருந்த மாலையையும் , தங்க வைர அணிமணிகளோடு பட்டுப்புடவையையும் மாற்றிய தில்லை நாயகி தாமரையை மடி சாய்த்துக் கொண்டாள். தோழியை விட்டுச் சிறிதும் நகரவில்லை.

கனத்த இதயத்தோடு நின்றிருந்த ஆதவனின் அருகில் வந்த விஜயும் நண்பனின் தோள் தொட… தன்னை மீட்டுக் கொண்ட ஆதவனும் நண்பனிடம் அங்கு எப்போது வந்தான் என்ற விவரத்தைக் கேட்டதோடு நடந்தவற்றையும் விளக்கினான்.

விஜயும் நண்பனிடம் பேசி அவனை ஆறுதல் படுத்தினாலும் பார்வை தாமரையை தழுவி தழுவி மீண்டது. தோழி மடி சாய்த்திருக்க வெறித்து எங்கோ பார்த்துக் கொண்டே இருந்த தாமரையை தன் நெஞ்சில் சாய்த்து ஆறுதலளிக்க  ஏங்கிக் கொண்டு இருந்தது விஜயின் மனது.

அறுவை சிகிச்சை முடிந்து அவர் ஐசியுலேயே இருந்தபோது தாமரை சாப்பிட மறுக்க.. அவளைக் கட்டாயப்படுத்தி இரண்டு வாயாவது உணவை ஊட்டிப் பார்த்த தில்லைக்கு கிடைத்தது ஏமாற்றமே. என்னக் கொடுத்தாலும் வாயைத் திறந்து உண்டால்தானே… அப்படியே கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்ட உணவும் வாந்தியாக வெளியேற.. அது தில்லையின் உடலில் பட்டாலும் முகம் சுழிக்காது தோழிக்கு துடைத்து விட்டதோடு.. தானும் சுத்தம் செய்துக் கொண்டவளை கண்களில் வாங்கி இதயத்தில் பூட்டிக் கொண்டிருந்தான் ஆதவன்.

அனைவருமே மீனாட்சி மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் தான் இருந்தனர். உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் என்பதால் ஆதவனும் சிறு நம்பிக்கையோடு தான் இருந்தான்.தேவகி உடைந்துப் போய் அமர்ந்திருந்த சகோதரனைப் பார்த்துக் கொள்ள…தேவராஜனுக்கும் தொழிலை கவனிக்க வேண்டுமே எனவே தந்தையுடன் அவனும் மற்ற வேலைகளைப் பார்க்க கிளம்பினான். ஆதவனை தனிமையில் விடாது விஜயானந்த் பார்த்துக் கொண்டான்.

ஆதவனை அழைத்துப் போய் உணவருந்த வைக்க , அவர்களது தொழிற்சாலை உயரதிகாரி அவனை சந்திக்க வந்து விட்டார். மிக முக்கியமான தொழில் முறை ஒப்பந்தம் ஒன்றை அன்று பேசுவதாக இருந்தது. ஆனால் இருந்த சூழ்நிலை ஆதவனையோ அருணாச்சலத்தையோ நகர விடாமல் செய்ய… நண்பனின் நிலையை உணர்ந்த விஜயானந்தன் ,

“ஆதவ் .. நீ வெளிநாடு கிளம்பினதும் அங்கிளோட சேர்ந்து பிஸ்னஸ் பார்த்துக்க சொன்னல்ல.. அதை நான் இப்பவே பார்க்க ஆரம்பிக்கிறேன் … நான் மேனேஜரோட போறேன்… நீ இங்க .” என்றவன் பார்வை தாமரையிடம்  சென்று திரும்பி, ” பார்த்துக்கோ…” என்ற நண்பனை ஆதவன் கட்டித் தழுவிக் கொண்டான்.

இப்படியாக இரண்டு நாட்களும் சரியாக உணவருந்தாமல் மீனாட்சியின் வருகைக்காக காத்திருந்த தாமரைக்கு அவர் நிரந்தரமாக உறங்கி விட்டார் என்ற செய்தி அறிந்த நொடி மயக்கதிற்கு சென்று விட்டாள்.

ஆதவன் மருத்துவர் சொன்னதைக் கேட்டு மனம் உடைந்து நின்று விட, அருகில் நின்றிருந்த விஜய் நண்பனை தோள் சாய்த்துக் கொண்டான். எத்தனை வயதானாலும் தாயின் இழப்பை எந்த மகனாலும் தாங்க முடியாது என்பதை அனுபவித்தவன் அல்லவா. 

அதே நேரம் ‘அத்தை’ என கதறி அழுத தில்லையும், ” மதினி வந்துருவீகனு நினைச்சேனே..” என கதறி அழுத தேவகியும் தாமரையைக் கட்டிக் கொண்டு அழத் துவங்கினர்.

தோழியின் முகத்தை மடியில் இருந்து தூக்கிய தில்லை அப்போதுதான் தாமரை சுயநினைவின்றி தன் மேல் சாய்வதை உணர்ந்தவள்,

“அம்மா செல்வி… “எனக் கத்தவும் ஆதவனும் விஜயும் அவர்களருகே ஓடி வந்தனர். விஜயின் மனது தாமரையைக் கண்டு படபடவென துடிக்க துவங்கியது.ஆதவனை முந்திக் கொண்டு அவனது கைகள் தாமரையை ஏந்திக் கொள்ள தூண்டியது. ஆனால் சாத்தியமில்லயே.. ஆதவன் தங்கையை கைகளில் ஏந்தியவன் மருத்துவர் இருந்த அறைக்கு தூக்கிச் செல்ல.. சிகிச்சை அளித்தவர் உணவு உண்ணாதது மற்றும் மன அழுத்தம் அவளை மயக்க நிலைக்கு தள்ளியது என தெரிவித்தார்.

மீனாட்சியின் இறுதிக் காரியங்கள் உடனடியாக ஏற்பாடாக.. தாமரையின் முகத்தை அசைத்து அவள் காதினில் பேசியும் உணர்வுக்கு கொண்டு வர முயன்ற தில்லையை தோள் தொட்டு விலக்கிய ஆதவன் தங்கையிடம் பேச ..ஆரம்பித்தான்.

“பாப்பா… செல்வி மா.. அண்ணன் இருக்கேன் டா… இங்க பாரு அம்மா தெய்வமா நம்ம கூடத்தான் இருப்பாங்க..” என்றவனுக்கும் அழுகை வர.. அருகில் இருந்த தில்லைக்கு முதன் முறையாக ஆதவனைக் கண்டும் பரிதாபமாகியது. எப்போதும் கம்பீரமாக வலம் வருபவன் தங்கையிடம் மனம் நொந்து பேசும் அவனின் வார்த்தைகளாலும் தில்லைக்கும் அழுகை  அதிகமாக … அவர்களைக் கண்டு சூழ இருந்தவர்களும் துக்கப்பட.. அந்த சத்தம் தாமரையை கண்விழிக்கச் செய்தாலும் தாயின் மறைவை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

கையில் போடப்பட்டிருந்த ட்ரிப்ஸோடு எழ முயன்றவளை பிடித்து நிறுத்தி கையில் இருந்தவற்றை அகற்றி மீனாட்சியின் உடல் அருகே கொண்டு செல்ல.. அழாமல் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அத்தனைப் பேரும் அழ சொல்ல அழவே இல்லை அவள். மருத்துவர்களோ தாமரை அழுதால் தான் அவள் உடல் நலத்திற்கு நல்லது என்றுக் கூறியே அனுப்பினார்.

ஒரு பொம்மை போல் இருந்தவளை தில்லைநாயகிதான் கைப்பிடித்துக் கொண்டே அழைத்து வந்தாள். விஜயும் தாமரை தன்னைப் பார்ப்பாளா பார்ப்பாளா… தானும் ஆறுதல் தர மாட்டோமா என காத்துக் கொண்டே இருந்தான். இல்லை பார்க்கவே இல்லை..தில்லையின் மீது சாய்ந்திருந்தவள் தான் பார்வையை எங்குமே திருப்பவே இல்லை.

மீனாட்சியை காடு கொண்டு செல்லும் நேரமும் வந்தது… மகளாக அவரது இறுதி காரியங்களை தில்லை கைப் பிடித்து செய்து அவரை வழியனுப்ப பெண்கள் அனைவரும் ஓவென கதறி தாமரையின் மீது விழவும் மீண்டும் மயக்கத்திற்கு சென்று விட்டாள். அதன் பிறகு ஐந்து நாட்கள் மருத்துவமனை மீதி நாட்கள் வீட்டில் விட்டம் பார்த்து இருக்க என நாட்கள் ஓடி இதோ இன்று பதினாறாம் நாள் காரியத்திற்காக உறவுகள் சூழ்ந்திருந்தனர். 

பொதுவாக அவர்கள் குடும்பத்தில் முப்பதாம் நாள் தான் இந்த காரியங்களைச் செய்வர். ஆனால் அதற்கு முன்பே ஆதவன் வெளிநாடு சென்று அவனது படிப்பை தொடர வேண்டிய நிலையிருக்க .. தந்தையின் தளர்வு , தங்கையின் உடல்நிலை இரண்டும் அவனை மனம் தளரச் செய்து படிப்பை கைவிடலாம் என்ற நிலைக்குத் தள்ளியது.

மீனாட்சி மறைந்து மூன்று நாட்கள் சென்ற நிலையில் உறவினர்கள் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அலுவலக விவரம் கூற  விஜயானந்தனும் அங்கு வந்திருந்தான். அதே நேரம் தேவராஜனும் அவனது தந்தையும் அங்கு வந்தனர். சென்ற இரண்டு நாட்களாக யோசித்து வைத்திருந்த தன் முடிவை உறவுகளுக்கு அறிவிக்கும் விதமாக , தளர்ந்து அமர்ந்திருந்த அருணாச்சலத்திடம் ,

“அப்பா… நம்ம குடும்ப வழக்கப்படி முப்பதாம் நாள் காரியமே அம்மாவுக்கு செய்யலாம்பா.. நான் படிப்பைத் தொடரல… இங்கேயே இருந்து நம்ம தொழில பார்க்குறேன்..” என்றவனை அருணாச்சலம் வருத்தத்துடன் அமைதியாக தான் பார்த்து அமர்ந்திருந்தார். மனைவியும் இல்லாமல் மகனும் அருகில் இல்லாமல் மகளை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்ற எண்ணம் உள்ளுர இருக்கவும்.. ஆதவனின் இந்த வார்த்தைகள் சிறிது ஆறுதலைக் கொடுக்க தான் செய்தது.

ஆனால் மாடியில் தாமரையின் அறை வாசலில் நின்று கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த தில்லைநாயகி திடுக்கிட்டு ஆதவனைப் பார்த்தாள். 

“என்ன படிக்க போகலயா… எங்கண்ணனுக்கு அந்த படிப்புனா ரொம்ப பிடிக்கும் அப்படி இப்படினு பெருமையா சொல்லுவா… இப்ப இவரு போகலயாமே.. ” என நினைத்தவள்… கட்டிலில் சோர்வாக படுத்திருந்த தாமரையின் அருகில் வேகமாக சென்று …

“தாமரை … உங்கண்ணன் ஆசைப்பட்டு இந்த படிப்ப படிக்கப் போச்சுனு சொன்னலடி … இப்ப பாரு படிப்பத் தொடரல இங்கேயே இருக்கேன்னு சொல்றாரு… நீ இப்படி அழாம பேசாம இருந்தா அவருக்கு எப்படி படிக்கப் போக தோணும்.. வந்து சொல்லுடி…” என அவள் கன்னம் தட்டினாள்.

தாமரை விழித்தது விழித்தபடி இருக்க… தில்லைக்கு அழுகை அதிகமாகியது. அங்கு வந்த தேவகியிடம் ,

“ஏம்மா இவளையும் பெரிய மாமாவையும் நான் கவனிச்சுக்க மாட்டேனா… உன் மாப்பிள்ளையப் பார்த்திங்களா படிக்க போகலயாம்…”ஆதவனின் மனதை அப்படியே படித்தவள் போல் தில்லை அழ… தேவகி மகளை உணர்ந்துக் கொண்டவர் , 

“சாமி … நீ அழாத நான் போய் பேசுறேன்.. மதினி சொல்லுவாக ..என் புள்ளபடிப்ப முடிக்கிற வரைக்குமாவது நான் நல்லா இருக்கணும்னு… எனக்கு ஒன்னுனா அவன் இஷ்டபட்ட படிப்பக் கூட வேண்டாம்னுட்டு வந்துருவான்னு… புலம்புவாக … .மருமவனும் அப்படியே இருக்காகளே..” என்றவர் கீழே சென்றார்.

அங்கு ஆதவனும் தந்தையிடம் , “பாப்பாவ பார்க்கணும் .. உங்களுக்கும் பிரஷர் அதிகமா இருக்குது…” எனக் காரணங்களை அடுக்க… தேவகி ,

“என்ன மருமவனே இப்படிச் சொல்றீக.. மதினி நீங்க படிப்ப முடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாக … அவுக ஆசைய நிறைவேத்தினா தானய்யா அந்த ஆன்மா நிம்மதியா இருக்கும் … இங்க நாங்க இருக்கோம்யா நீங்க நல்லபடியா படிப்ப முடிச்சுட்டு வாங்க ” என்றார்.

அருணாச்சலமும் சோர்ந்த குரலில் , “ஆமாம் பா… மீனா உடல் தளர்ந்து போரப்பலாம் நான் உன்னைய இங்க கூப்பிட்டுக்கலாம்னு சொல்லுவேன்… இல்லைங்க எம்புள்ள படிப்பு என்னால கெடக் கூடாதுனு சொல்லுவா… நீ படிப்ப முடிச்சுட்டு வரணும்ங்கிறது தான் அவளோட ஆசை… ஏன் என்னோட பாப்பாவோட ஆசையும் கூட… நீ வர்ற வரைக்கும் நான் தொழிலப் பார்த்துக்கிறேன்.. இங்க துணைக்கு தங்கச்சி, மச்சான் , மச்சான் புள்ளங்க.. இப்ப உன் நண்பன் இந்த ஆனந்த் தம்பிக்கூட உதவிக்கு இருக்குதே… ” என விஜயானந்தைக் காட்டினார். இந்த நான்கைந்து நாட்களாக தொழிலில் அவனது பங்களிப்பை அறிந்திருந்ததால் மகனுக்கு நம்பிக்கை கொடுத்தார்.