விஜயிற்கு இதெல்லாம் புதிதே… தாமரை தூக்கி வைத்திருந்தாள் என்ற ஒரு காரணத்திற்காகவே ஆட்டுக்குட்டியை அவனும் கையில் அள்ளிக் கொண்டது.மொத்தத்தில் தாமரை… தாமரை… தாமரை மட்டுமே அவனது எண்ணங்களில்.. அவள் ஒருவளால் மட்டுமே இங்கேயே இருக்கும் முடிவை எடுத்திருந்தான்.

கையேந்தும் ஆட்டுக் குட்டி 

கன்னிப் பெண்ணாய் மாறாதோ

மையேந்தும் கண்ணைக் காட்டி 

மையல் தீரப் பேசாதோ…

உன்னாலே தூக்கம் போயாச்சு

உள்ளார ஏதேதோ ஆயாச்சு…

வெளியே வந்தவனிடம் , ” விஜய் நாளைக்கு சாயந்திரம் நாங்க எல்லாரும் பாப்பாவோட மெடிக்கல் கவுன்சிலிங்குக்கு சென்னைக்கு கிளம்பறோம். பாஸ்போர்ட் ஆஃபிஸ் போற வேலையும் இருக்கு…நைட் ஒரு ஃபோனுக்காக வெய்ட் பண்றேன். அந்த தகவலைப் பொறுத்துதான் நான் நாளைக்கு காலையிலயே கிளம்புறதா.. சாயந்திரம்  அம்மாவோட கிளம்பறதானு முடிவு பண்ணனும். அப்படி நான் காலையில தனியா கிளம்புறதா இருந்தா என் டிக்கட்ல நீ கிளம்பி வா விஜய்… நீ திரும்பி வரதுக்கு பிளைட் டிக்கட் போட்டுடுறேன்…” எனும் போதே வெளியே வந்த தாமரை “அண்ணா ஃபோன்” என வந்து நின்றாள்.

“நான் எதிர்பார்க்கிற கால்ஆ தான் இருக்கும் … இருவந்துடுறேன்…” என வேகமாக உள்ளே சென்றவனது பின்னால் நடக்கப் போனவள் காதில் …

” வாழ்த்துக்கள்…” என ஆங்கிலத்தில் சொல்ல.. சட்டென்று நின்று விட்டாள். அவளிடம் தான் பேசுகிறான் என்பதும் புரிய… உடல் நடுங்க அவனை நிமிர்ந்துப் பார்க்க..

” மெடிக்கல் படிக்கப் போறீங்க. அதுக்குத் தான் … ” என கையிலிருந்த ஆட்டுக்குட்டியை அவளிடம் தர …  “தேங்க்ஸ் ” என்றவாறு அதனை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

அவர்கள் இருவருக்குமான முதல் உரையாடல்.. விஜயும் ஒருவித புன்னகையில் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு நின்றுக் கொண்டான் என்றால் தாமரை இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது போல் தோன்ற… ச புன்னகை இழையோட தனது அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

படித்தது எல்லாம் பெண்கள் பள்ளியில்… குடும்ப உறுப்பினர்களில் உள்ள ஆண்களிடம் கூட அதிகம் பேசியது கிடையாது. முதன் முறையாக தான் பார்த்த… தான் பேசிய அந்நிய ஆண்மகனே விஜய் தான். மனம் உடல் அனைத்திலும் குறுகுறுப்புத் தோன்ற என்னவென்று அறியாத ஒரு பரவசத்தில் தாமரை.. விஜய் என இருவருமே இருந்தனர்.

வெளியே வந்த ஆதவனும்..விஜயிடம் ..” விஜய் நான் நாளைக்கு காலையிலயே கிளம்பறேன்டா…” என்றவன் தன் பர்சில் வைத்திருந்த இரயில் டிக்கட்டைக் கொடுத்து,

“நாளைக்கு எங்க அத்தை பையன் கிட்ட சொல்லி இவங்கள  இரயில்வே ஸ்டேஷன் அழைச்சிட்டு வரச் சொல்லிடுறேன்.. நீ மெட்ராஸ் வரை துணைக்கு வந்துரு டா..” என்றதும் விஜய் வானத்தில் தான் மிதந்தான். ஒரு நாள் இரவு முழுவதும் தாமரையை அருகிலேயேப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியோடு கிளம்பினான்.

மறுபுறம் தில்லை தங்கள் வீட்டு ஹாலில் ஃபோன் அருகே அமர்ந்து தோழியுடன் கலந்துரையாடி காகிதத்தில் ஏதோ குறித்துக் கொண்டிருந்தாள். மாலையில் வீடு திரும்பிய தேவா.. தங்கையைப் பார்த்துக் கொண்டே கை கால் கழுவி வந்தவன் தேவகியிடம் ..

“ம்மா பாப்பா என்னம்மா பண்ணிட்டு இருக்கா… இன்னும் காலேஜே ஆரம்பிக்கல அதுக்குள்ள நோட்ஸ் எடுக்குறா… ” என்றபடி அவர் கொண்டு வந்த டீயை அருந்தியவனிடம் ,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் மதினி ஃபோன் பண்ணாக … ” என்றவர் மீனாட்சி கூறிய விவரங்களை எல்லாம் கூறி…

“உங்கப்பாவும் எங்க அண்ணனும் வடக்கே போயிருக்காக தானே… நாளைக்கு நாம போய் மதுரையில இரயிலேத்திட்டு வருவோம். உன் தங்கச்சி அவளுக்கு மெட்ராஸ்ல இருந்து பொருளு வாங்கிட்டு வரதுக்கு எழுதி வச்சுட்டு இருக்கா…” என்றதும் தேவராஜனுக்கும் தாமரையை காணும் ஆவல் அதிகமாகியது.

இதோ தாமரையை வழியனுப்பி வைக்க அவளது அத்தைக் குடும்பத்தினர் வந்திருந்தனர். சமீபமாக வெள்ளை வேட்டி சட்டையிலேயே சுற்றி வந்த தேவராஜன் ஜூன்ஸ் டீஷர்ட் என வந்திருந்தான். கல்லூரி முடிக்கும் வரை அப்படி இருந்தவன் தானே… அதனால் பெரிதாக மாற்றம் யாருக்கும் தெரியவில்லை.

வீட்டிலிருந்து கிளம்பி இரயில் நிலையம் வரும் வரை தில்லைதான் தோழியுடன் சலசலவெனப் பேசிக் கொண்டே வந்தாள். தாமரையை கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டு வந்த தேவராஜன். அவளும் தன்னைப் பார்க்க மாட்டாளா என ஏக்கத்துடன் தான் இருந்தான். அவர்களுக்கு பயணத்திற்கு தேவையானதை எல்லாம் வாங்கி வந்தவன், அவர்களது இரயில் நிற்கும் நடைமேடைக்கு அழைத்து வர … இவர்களுக்காகவே காத்துக் கொண்டிருந்த விஜய்.. அருகில் வந்தான்.

தாமரை அவனை எதிர்பார்க்கவில்லை.. முகத்தில் செம்மை பரவ தோழியின் பின் மறைந்துக் கொள்ள… மீனாட்சியோ , அவனை எதிர்பார்த்தது போல் பேசிக் கொண்டிருந்தார். தேவராஜனும்  விஜயிடம் நன்குப் பேசியவன் அவர்களை அமர வைத்து விட்டு இறங்கிக் கொண்டான்.

தில்லையும் இரயில் கிளம்பும் வரை பேசியவள் , ”  மதுரை காலேஜூக்கே வாங்கிரு டி…” எனவும் தாமரையைப் பார்த்தான் விஜய். அவளும் தோழியிடம் உறுதிக் கொடுத்துக் கொண்டிருக்க…விஜயும் ,

“ஓ அப்ப மதுரை காலேஜ் தானா ” என தனக்குள் கேட்டுக் கொண்டான். அது டூடையர் ஏசி கோச்.ஆறு பேர் அமரக்கூடியது அனைத்திலும் ஆட்கள் வந்து விட , தாமரைக்கு ஒதுக்கிய இடத்தை ஒரு வயதான அம்மாவிற்கு ஒதுக்கிவிட.. இப்போது அவளும் மேல் பர்த்தில் படுக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகியது. பயணத்திற்கு வசதியான உடை என தில்லை தோழிக்கு சல்வார் கமீஸ் தான் அணிய வைத்து அழைத்து வந்திருந்தாள்.

ஜன்னல் ஓரமாக அமர்ந்து யோசித்துக் கொண்டே வந்தவள் கண்ணில் முதலில் விஜய் படவேயில்லை. அவனுக்கோ எதிரே அமர்ந்துக் கொண்டு அவளைப் பார்க்காமல் எப்படி தன்னைக் கட்டுப்படுத்துவது எனத் தெரியவில்லை. எனவே வாசல் அருகே சென்று நின்றுப் பயணித்துக் கொண்டிருந்தான். நேரம் ஆக ஆக அனைவரும் உறங்கத் தயாராக ..மீனாட்சிக்கு ஓய்வறை செல்ல வேண்டும் போல் இருக்க..தாமரையின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்தார். அங்கு வாசல் அருகே நின்று வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயைக் கண்டவர் ,

” வாசல்ல நிற்காதீங்க தம்பி … போய் படுங்க …ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது.” எனவும்.. அவனும் சிரித்துக் கொண்டே ,

“சரிங்க ஆன்ட்டி…’ என்றவன் நகரவில்லை. மீனாட்சியை உள்ளே அனுப்பி விட்டு வெளியே நின்றிருந்தவளுக்கு மிக அருகில் தான் நின்றான்.இரயிலின் வேகத்திலும் .. வீசிய தென்றலிலும் அவளது கூந்தல் பறந்து அங்கும் இங்கும் அலைபாய .. அதை ஒரு கையாலும், பறந்து வந்த துப்பட்டா அவன் முகத்தில் மோத அதை வேகமாக ஒரு கையாலும் பிடித்துக் கொண்டவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.

பூமலர் தூவும்…பூமரம் நாளும்

போதை கொண்டு பூமி தன்னை

பூஜை செய்யுதே..

பூவிரலாலும் …பொன்னிதழாலும்

பூவை எண்ணம் காதல் என்னும்

இன்பம் செய்யுதே..

ரசித்துக் கொண்டிருந்தவனை மீனாட்சியின் வருகை நிலைப்படுத்த.. அவரும் மீண்டும் அவனிடம் எச்சரிக்க…

“இதோ வர்றேன் ஆன்ட்டி…” என்றான்.தாமரை அவரைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாலும்.. அவன் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான். .. தாமரை திரும்பவில்லை. இருந்தாலும் அவன் அப்படி வாசலருகே நிற்பது மனதில் கலக்கத்தை தர .. சட்டென்று திரும்பிப் பார்த்தாள்..

பூமழை தூவும்…புண்ணிய மேகம்

பொன்னை அள்ளுதே… வண்ணம் நெய்யுதே

ஏங்கிடுதே.. என் ஆசை எண்ணம்..

ப்பா … பார்க்க மாட்டாளா என்றிருந்தவனாகிற்றே.. அவள் பார்த்து விட்டாள்… அதுவும் அவள் கண்களில் கலக்கத்துடன் பார்த்தது.. விஜயின் இதயம் வரை ஊடுருவியது.வாசலையும் அவனையும் மாற்றி மாற்றிப் பார்த்தவளின் விழிகள் சொன்ன செய்தி.. அவனது அன்னையை நியாபகப்படுத்தியது. அதில் தெரிந்த பயம்… கீழே விழுந்து விடாதே என்ற எச்சரிக்கை… அங்கே நிற்க வேண்டாம்.. என அனைத்து உணர்வுகளையும் ஒரே நேரத்தில் கொடுத்தவளைக் கண்டு மனம் பரவசமடையத் துவங்கியது.. அதைமுகத்திலும் முறுவலாக காட்டியவன் … சத்தமில்லாமல் கைகளை கட்டி , “போ… வாறேன்…” என்றான்.

தான் மட்டுமல்ல அவளும் தன்னைப் பார்க்கிறாள்.. தன் மீதான அக்கறையை கண்களிலேயேக் காட்டிய தாமரையின் மீதான அன்பும் நேசமும் அதிகமாக பெருகியது.மீனாட்சியும் வாய் திறந்து அங்கு நிற்க வேண்டாம் என்று சொன்னார் தான்..ஆனால் அவனது தாய்க்கு இணையான அன்பு பாசம் அக்கறை என அனைத்தையும் கலந்தல்லவா அவளது கண்கள் காட்டியது …. அப்படியானால்.. அப்படியானால்…

தடக்… தடக்… என இரயிலின் வேகத்திற்கு இணையாக திக்.. திக் என அவனது இதயமும் வேகமாக துடித்தது… இதற்கு பெயர் தான் காதலா… அப்பாவிற்கு அம்மாவிடம் வந்த இந்த உணர்வுதான்… ஊரை.. உறவை.. அத்தனை சொத்துக்களை எல்லாம் உதறி விட்டுப் போக சொன்னதா… என்பது போல் தன் பெற்றோரை நினைத்துப் பார்த்தவனுக்கு புன்னகையும் தோன்றியது. அந்தப் பரவசத்தை முகத்தில் மோதிய தென்றலின் குளுமையில் கண்களை மூடி ரசித்தவன் மேலும் சிறிது நேரம் வாசல் அருகே நின்று தன்னவள் தன் இதயத்திற்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்ததை ரசித்துக் கொண்டிருந்தான்.

தாமரை மீனாட்சிக்கு படுக்க வசதி செய்துக் கொடுத்து மேலே இருந்த படுக்கைக்கு ஏறியவள் போர்வையைப் போர்த்திக் கொண்டு மறுபுறமாக திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவள் படுக்கும் வரை அவன் வரவில்லை. இரயிலில் விளக்குகள் அணைக்கப்பட்டு இரயில் ஓடும் சத்தம் மட்டும் கேட்க… விஜய் வந்து விட்டானா என்றுத் தெரியாமல் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

தன் மனம் ஏன் இப்படி அலைப்புறுகிறது என அப்பருவ பெண்ணிற்கும் விளங்கவில்லை. திடீரென இரயில் குலுங்குகையில் அச்சம் பரவ… மெல்ல திரும்பிப் படுத்து போடப்பட்டிருந்த திரையை விலக்க… அவளுக்கு எதிரே இருந்த பக்கத்தில் அவள் பக்கமே பார்த்த வண்ணம் விஜய் ஆனந்த் படுத்திருந்ததைப் பார்த்தவள்… நாணம் கொண்டு திரையை இழுத்துவிட்டு தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். கூடவே ..

“ஐயோ… அவன் என்ன நினைத்திருப்பான்…” என்ற நினைவும் தடுமாற்றத்தைக் கொடுத்தாலும் அதன் பிறகு தான் நிம்மதியான உறக்கம் வந்தது.

விஜய்க்கு இரயிலில் போவது போல் தோன்றவில்லை … வான் மேகக் கூட்டங்களுக்கு இடையே பறக்கிறோமோ என்று தான் நினைக்கத் தோன்றியது. அவளது செயல் அவனுக்கு அவளும் தன்னைத் தேடுகிறாள் என்பதை உறுதிப்படுத்த அவனுக்கும் நிம்மதியான உறக்கம்.

அதிகாலையில் எழுந்தவர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த விஜயை நிமிர்ந்து பார்க்கவே இல்லை தாமரை. இரவில் தான் அவனை நோக்கியதை அவன் கண்டுகொண்டான் என்பது இயல்பாக இருக்க விடாமல் செய்தது. நல்ல வேளையாக இறங்க வேண்டிய நேரம் வந்து விடவே பைகளை சேகரிப்பதில் கவனம் செலுத்தினர்.இரயில் நிலையம் வந்து விட அவர்களை வரவேற்க ஆதவன் தந்தையுடன் நின்றிருந்தான்.

பத்திரமாக அவர்களை அழைத்து வந்ததற்கு நன்றி சொன்ன ஆதவன் விஜயையும் அவர்களோடு அழைத்தான். விஜயோ ,

“இல்லடா.. நான் இங்க இருந்து கோச்சிங் போறதா இருந்தது இல்லையா… இப்ப மதுரைல படிக்கலாம்னு முடிவு பண்ணதால… இங்க உள்ள சென்டர்ல சொல்லி மதுரை பிரான்ச் கேட்கப் போறேன். உனக்கு நான் தங்கியிருக்க இடத்தோட ஃபோன் நம்பர் தர்றேன்.. தகவல் சொல்லு… ” என்றவன் தாமரையின் புறம் சிறிய பார்வையை மட்டும் செலுத்தி விட்டு .. ஆதவன் குடும்பத்தாரிடம் விடைப் பெற்றுச் சென்று விட்டான்.

தாமரையும் உணர்ந்தாள்.. முதலில் சென்னையில் படிக்க இருந்தவன் தற்போது மதுரையில் படிக்க இருப்பதாக கூறுகிறான் என்றால்..என்றால்..

உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது… சமீபமாக விடுமுறை நாட்களில் வீடியோ கேசட்டுகளின் உபயத்தால் கண்டுகளித்த காதல் படங்களின் பாடல் வரிகள் எல்லாம் காதினுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.. அப்படியானால் இந்த பார்வைகளுக்கும் உணர்வுகளுக்கும் பெயர்…

“காதல்… ஆம் காதலே தான் … நான் விஜயை விரும்புகிறேனா.. அதாவது காதலிக்கிறேனா.. உள் மனது “ஆம்” என பதிலளிக்க அப்படியே நின்று விட்டாள்.

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள

கத்திச்சண்டை கண்டாயோ..!

படபடக்கும் நெஞ்சுக்குள்ள

பட்டாம்பூச்சி பார்த்தாயோ..

உயிரோடு…உறவாடும்

ஒருகோடி…ஆனந்தம்..!