Advertisement

அலை 34

                  மருத்துவமனை நடைமுறைகள் முடித்து தாமரையை விஜய்  வீட்டிற்கு அழைத்து வர இரவாகி விட்டது.அவளை அறையில் விட்டு தாமரைக்கு சாப்பிட ஏதேனும் செய்யலாம் என சமையலறைக்குச் சென்றான். தலையில் இப்போது பெரிய கட்டுகளெல்லாம் இல்லை , சிறிய பிளாஸ்டர் மட்டுமே ஒட்டப்ட்டு வீட்டிற்கு அனுப்பபட்டிருந்தாள். கை கால் காயங்கள் எல்லாம் ஆறியிருந்தன. எனவே மெல்ல சுவற்றைப் பிடித்துக் கொண்டு சமையலறைச் செல்ல … ஏதோ அடுப்பில் வைத்துக் கொண்டிருந்தவன் பதறிக் கொண்டு அவளருகில் வந்தான்.

“ஏன்டா நடந்து வந்த .. இரு சேர் எடுத்துட்டு வாறேன்…” என்றவனது வலது தோளில் சாய்ந்துக் கொண்டவள் , “ம்ஹூம்… எனக்கு இதைவிட பெஸ்ட் பிளேஸ் தெரியல…” என்றதும்.. ஆனந்த அதிர்ச்சியில் அவளது தோளில் நன்கு கைப் போட்டு வளைத்துக் கொண்டவன் ,

“இன்னொரு தடவை சொல்லு…” என்றான்.. தாமரையும் அவனுக்கு கேட்கவில்லையோ என நினைத்து தோளில் சாய்ந்த வண்ணமே மீண்டும் கூறினாள். அவனோ மீண்டும் எனவும் , தலையை நிமிர்த்தி விஜயைப் பார்க்க,

”இல்ல என்கிட்ட நேரடியா பேசுறியா… அதான் திரும்ப திரும்ப கேட்கணும்னு ஆசையா இருக்கு …” என்றவனின் நெஞ்சில் செல்லமாகத் தட்டியவாறு “போங்க நீங்க…” என்ற கொஞ்சல் மொழி விஜயை போதைக் கொள்ளச் செய்தது.

“போய் ஃபிரஷ்யாகிட்டு வா கொஞ்சம் டீ பிஸ்கட் சாப்பிடலாம்.” என்றவன் அவளது தோள் பிடித்தவாறே குளியலறைவரை வரவும், அவள் தனியாக உன்ளே சென்றாள். மருத்துவமனையில் செவிலியர் இருப்பார் ..இங்கு .. தயக்கத்துடன் நின்றவனைப் பார்த்தே புரிந்துக் கொண்டவள் ,

” நான் நார்மலா தான் இருக்கேன்… நீங்க டீயோட ரெடியா இருங்க” என்றவள் திரும்பி திரும்பிப் பார்த்து அவள் சமாளித்துக் கொள்வாளா என்ற தயக்கத்துடன் சென்றவன் மீது காதல் அதிகமாகியது.

எல்லாம் தயாராக வைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் எதையோ அடுக்கிக் கொண்டிருந்தவன் அருகே சென்றவள் ,துவாலையால் முகத்தை துடைத்துக் கொண்டே, ” ஹாஸ்பிட்டல்ல தான் கண்ணாடியே இல்ல… இங்க வீட்லயும் இல்ல… கபோர்ட்ல இருந்ததும் உடைஞ்சுடுச்சு போல…” என்றவளின் இடுப்பை வளைத்து தூக்கி மேசை மேல் அமர வைத்த விஜய்,

“இப்போ என்ன கண்ணாடி தானப் பார்க்கணும் , நேரா என் கண்ணைப் பார்.. நீ தெரிவ… ” என்றவாறு அவள் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தான். ஏற்கெனவே அவன் ஸ்பரிசம் உடலை ஏதோ செய்திருக்க… இப்போது அவன் கண்களைப் பார் என்றதும் நாணம் அதிகமாக ..விழிகளை அலைபாய விட்டவளுக்கு … சில நொடிகள் அந்த பார்வையின் வீச்சு உடலையும் குளிரச் செய்தது. ஆனால் அதையும் மீறி ஏதோ தோன்ற அவன் விழிகளை ஊடுருவியவளின் கண்களில் கண்ணீர் தேங்கி , அது தேம்பலாகவும் மாறி , அமர்ந்திருந்தவாறே விஜயின் கழுத்தோடு கட்டிக் கொண்டவள் ,

” ஐ லவ் யூ …. லவ் யூ… ” என சொல்லிக் கொண்டும் அவன் கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டும் அழுதாள். அவளது லவ் யூ விலும் முத்தமிடலிலும் வானில் பறந்தாலும் அவளது அழுகையைத் தாங்க முடியவில்லை.

“ப்ளீஸ் ப்ளீஸ் அழாதடா.. காயம் சரியாகிருச்சு தான் ஆனாலும் அழும்போது தலைவலி வந்துரக் கூடாது..அழாத டா.. ப்ளீஸ்.. ” என்றவனின் பேச்சை எங்கே கேட்டாள். “அழாதே அழாதே என முகத்தை பிடித்து துடைத்து ஆறுதலளித்தாலும் அழுதுக் கொண்டிருந்தவளின் உதடுகள்  அவனது இதழ்களால் பூட்டப்படவும் தான் அழுகை நின்றது.

எத்தனை வருடக் காதல்.. அத்தனைக் காதலையும் அந்த ஒரு முத்தத்தின் மூலம் மனைவியான தன் காதலிக்கு உணர்த்திக் கொண்டிருந்தான் விஜய். வாங்கியவளும் உணர்ந்ததால் உடலும் மனமும் அமைதியடையத் துவங்க.. ஒரு கட்டத்தில் இதழ் பிரித்து , அவள் தோளில் கிடந்த துவாலையால் அவள் முகம் துடைத்துக் கொண்டே ..

“ஏன் இந்த அழுகை.. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல வளர்ந்துட போகுது… ” என அவளது தலை முடி வெட்டப்பட்டதற்குத்தான் அழுகிறாள் என சமாதானம் செய்தான். அவளது தலையின் பின்புறம் அடிபட்டு இருக்க … அங்கு தானே சிகிச்சை அளித்திருந்தார்கள். அப்போது அங்குள்ள தலை முடியை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் அவளது நீண்ட கூந்தல் வெட்டி எடுக்கப்பட்டு இருக்க… முழுவதும் மழிக்கப்படவில்லை என்றாலும் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டு இப்போது ஆண்பிள்ளை சிகையலங்காரம் போல் இருந்தது.

“நான் ஒன்னும் இதுக்காக அழல.. ” என தன் தலையைத் தொட்டுக் காட்டியவள் , “எங்கே என் முகத்தைப் பார்த்து நான் வருத்தப்படுவேனோனு தானே.. வீட்ல கண்ணாடியே இல்லாம வச்சுருக்கீங்க.. அப்பா.. அம்மா.அண்ணன் திலோனு இப்படி யாருமே என் பக்கத்துல இல்லனாலும் அவங்க எல்லாரும் என் பக்கத்துலயே இருக்கிற உணர்வ இத்தனை நாளா எனக்கு கொடுத்துட்டு இருக்குறீங்க … இப்படியொரு காதலா என் மேலனு தான் அழுதேன்… எப்படி … எங்கேயிருந்து இந்த காதல் ஆரம்பிச்சதுனுத் தெரியாது…

” இத்தனை வருஷமா உங்களை மட்டுமே மனசுல சுமந்துட்டு இருந்ததால நீங்க ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்கனதும்… லீவுக் கூட போடாம நைட்டியூட்டிக்கு போகலாம்னு பிளான் பண்ணி  லட்சுமியோடவே கிளம்பிட்டேன்.. திலோ அவ வர்றவரை இருக்கச் சொன்னா… நீங்க எனக்காக வெய்ட் பண்ணுவீங்க தான் … ஆனா என்னால அங்க இருக்க முடியல.. உங்களை உடனே பார்க்க ஆசைப்பட்டு…” என்றவளின் முகத்தை நிமிர்த்தி மீண்டும் இதழ் நெருங்க..  வெட்கத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

அன்று அதே ஆவலோடு தானே அவனும் அவளைத் தேடி ஓடி வந்துக் கொண்டிருந்தான்.”எனக்கும் அப்படித்தான் இருந்தது.. அந்த வேகத்துல தான் நானும் வந்தேன்…நான் கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும்… ” என்றவனுக்கு அன்றைய நிகழ்ச்சிகள் கண் முன் வந்துப் போனது. தேவா மட்டும் இருவரையும் தண்டவாளத்திலிருந்து தள்ளி விடவில்லை என்றால்… நினைத்துப் பார்க்க முடியவில்லை. தாமரையை நன்கு அணைத்துக் கொண்டான்.

அணைப்பில் இதம் கண்டவள்… “திரும்ப காலைல போய் அவள சமாதானம் பண்ணிக்கலாம்னு, ஒரு வரி மட்டும் பேப்பர்ல எழுதிட்டு கிளம்பினேன்… கடைசியில.. இப்ப அவ கூட பேசவும் முடியல பார்க்கவும் முடியல.. ” என்றவளை சமாதானம் செய்தவனிடம் ,

“நீங்க தர்ற அன்புக்கும் மேல உங்களுக்கு நான் காதலைக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்… அதோட… ” என்றவள் சிறிது நாணத் தோடு,

“எங்கம்மா இருக்கிற வரை அவங்கதான் என் தலைமுடிய பராமரிப்பாங்க..காலேஜ் போறப்ப என்னால முடியல.. திலோக் கூட ஹேர் கட் பண்ணிக்கோ வசதியா இருக்கும்னு சொல்லுவா… ஆனா ..” என்றவள்  அவனைக் நன்கு கட்டிக் கொண்டு,

“நீங்க போடுற பாட்டுல பாதி கூந்தல் வர்ணனைகள் தான் அதிகமா இருக்கும் … என் கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம்னு எனக்குத் தெரிஞ்சதால நானும் பராமரிக்க ஆரம்பிச்சேன்.. இப்போ .. ” என்றவள் மீண்டும் அழப்போக…

 “ஹேய்… ப்ளீஸ்டா .. அழாதே… அன்னைக்கு நீ சொன்ன ஒரு வார்த்தைல என் காதல்லாம் ஒன்னுமே இல்லனு தான் சொல்வேன். அந்த அளவுக்கு காதல் நீ என் மேல வச்சிருக்கன்னு தெரிஞ்சப்ப என் கால் தரையிலயே இல்ல… “என்றவன் மறுபடியும் ஒரு ஆழ்ந்த முத்தத்தைக் கொடுத்தான்.

” முதன் முதல்ல உன்னைய என் கூட சேர்த்து வச்சது உன் ஈரக் கூந்தல் தான் … அதனால ஒரு ஈர்ப்பு … அதுக்காக  அந்த பாட்டுக்கள் மட்டுமா போட்டேன்… அதோட பிடிச்ச விஷயங்கள்னு பார்த்தா உன்கிட்ட நிறையவே இருக்கு … பிடிச்ச பாட்டுக்கள்னு சொன்னாலும் நிறையவே இருக்கு தெரியுமா.. அதெல்லாம் இப்ப பாடுற சூழ்நிலை இல்ல… கொஞ்ச நாள் ஆகட்டும்..” என கண் சிமிட்டி புன்னகைத்தவனிடம் , அதே புன்னகையோடு

“என்ன நான் உங்க கிட்ட பேசினேனா.. பேச ஆசையா இருந்தாக்கூட பேசவே வராது தெரியுமா.. ஆனா கனவுல நிறையப் பேசியிருப்பேன்”.. என்றவளின் புன்னகையில் வீழ்ந்து தான் போனான். அவள் சொன்னதே தெரியாதென்றால் தன்னை எவ்வளவு நேசித்திருப்பாள் என்றவளை இறுக்கமாக அணைக்கத் தோன்றியது. ஆனால் இப்போது தான் தேறி வருகிறாள். “என்ன… என்ன சொன்னேன்.. ” கேட்டவளிடம்,

பார்வையை கலக்க விட்டுக் கொண்டே மறுபடியும் தாமரையைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைச் சென்றவன் , அவளை படுக்க வைத்து தானும் அருகில் படுத்தான். ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து வந்துள்ளோம்..தந்தை பார்க்கவே முடியாத இடத்திற்குச் சென்று விட்டார். தானும் ஊருக்குச் சென்று தில்லையைப் பார்க்க முடியாது. அவளையும் அழைத்து வர முடியாது… அவளிடமும் பேசவே முடியவில்லை…என்ன காரணமோ அண்ணன் சொல்லிவிட்ட ஒரே  காரணத்திற்காக மட்டுமே தன்னை திடப்படுத்திக் கொண்டாள். 

ஆனால் அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த உருவத்தைக் கொண்டவனாக தான் விஜய் இருந்து அவளைக் கவனித்துக் கொண்டது.இப்போதைய அவளது உலகமே விஜய் தான் என்று தோன்றியதாலயே இந்த சரளமான பேச்சுக்களும் அணைப்புகளும்.

இப்போதும் , தன் உயிரோடு கலந்தவனோடு தான் இருக்கிறோம் என்ற நிம்மதியில்… அவன் மட்டுமே தான் இனி தனக்கு என்பது மனதில் பதிந்ததாலும் , விஜயை நெருங்கிப் படுத்தவள் அவனது நெஞ்சில் தலை வைத்துக் கொண்டாள்.

அவளே அறியாமல் அவள் கழுத்தில் தாலி அணிவித்தக் குற்றவுணர்வை இதயத்தின் ஓரத்தில் சிறிது சுமந்துக் கொண்டு இருந்தவனுக்கு , ஒத்தடம் தருவது போல் தாமரையின் செய்கை இருக்க.. நன்கு வளைத்துப் பிடித்துக் கொண்டு அவளது உச்சந்தலையில் முத்தமிட்டவனிடம் உரிமையாக,

 “சொல்லுங்க அடிபட்டப்ப என்ன சொன்னேன்…. ” என்றவளிடம் , “அதைச் சொல்ற நேரம் இதுக் கிடையாது.. ” என்றவன் பதிலளிக்காமல் வேறு பேச … “சரி அப்புறம் பாடுறேன்னு சொன்னதுஎன்ன பாட்டுனாவது செல்லுங்களேன்.. “அதுவா..” என்றவன்,

பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ

என் கவிதை நீ

பாடும் ராகம் நீ என் நாதம் நீ

என் உயிரும் நீ..

எனப்பாட ஆரம்பிக்கவும், அதன் ஆரம்ப வரிகள் மனதில் வந்து வெட்கத்தில் கண்களை மூடி அவனை இறுக்க பிடிக்க .. “ஓகே.. இந்தப் பாட்ட அதுக்கான நேரம் வர்றப்ப பாடிக்கலாம்.. கண்டிப்பா ஆதவ் தில்லை சிஸ்டர  உன் கூட பேச வைப்பான்… அந்த நம்பிக்கையோட நிம்மதியா தூங்கு” என்ற விஜய் டேப் ரிக்கார்டரில் பாடல் போடப் போனான். அவனை அதனைச் செய்ய விடாமல் பிடித்துக் கொண்டவள், “நீங்களேப் பாடுங்க..” என்று விட்டாள்.

என்னை எழுப்பிய பூங்காற்றே..

 இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

என்னை மயக்கிய மெல்லிசையே..

 இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

அவன் மனதை சொன்னப் பாடலைப் பாடியவனின் குரலும், பாடல் வரிகளின் இனிமையும் தாமரையை நிம்மதியாக உறங்க வைத்தது.

Advertisement