Advertisement

அலை 31 

              நீதானே… நீதானே…நெஞ்சே நீதானே.

              நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே…

              எண்ணம் எல்லாம் ஒன்றே என்று

              கண்டேன் அம்மா நானும் இன்று

             இணையானோம் ஒன்று…

    ஆதவன் படபடவென பேசியதில் தாமரையை மதுரையிலயே வைத்திருப்பது ஆபத்து என்பதை மட்டும் உணர்ந்த விஜய் , அவளை இங்கிருந்து அழைத்துச் செல்லும் வழியை யோசிக்கலானான்.

தாமரைக்கு தேவாவுடன் திருமணம் பேசி வைத்திருந்ததையோ , தங்கை கிளம்பி வந்ததால் அங்கு நடந்த மற்ற எந்தப் பிரச்சினைகளையோ விஜயிடம் ஆதவன் தெரிவிக்க வில்லை.தங்கையின் இந்த நிலைக்கு செல்லபாண்டி மட்டுமல்ல சொக்கலிங்கமும் ஒரு காரணம் என்பதை வெளியே எங்கே செல்ல முடியும்..தில்லை தாங்க மாட்டாள்.

கூடவே தில்லையைக் குறித்தும் விஜயிடம் பேசவில்லை ஆதவன்.கனத்த இதயத்துடன் தாமரை இருந்த மருத்துவமனையிலிருந்து அவன் வீட்டினர் இருக்கும் மருத்துவமனைக்கு வந்தான். தில்லை இன்னும் மயக்கத்தில் … அவளை எப்படி எதிர்கொள்வது என யோசித்தவனுக்கு தந்தையும் மறைந்த செய்திக் கிடைக்க , தரையிலேயே அமர்ந்த சிறிது நேரத்தில் தேவாவும் இல்லை என்றாகிவிட்டது.

தேவகி சத்தமிட்டு அழுதார்..சொக்கலிங்கம் பேச்சிழந்து அமர்ந்து விட்டார்.. தன் மகனைத் தானே கொன்று விட்டோமே.. என்பது அவரிடம் விபத்துக் குறித்துப் பேச வந்த போலீசாரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளியது..அடுத்தடுத்து மிகப் பயங்கரமான அடி தான் ஆதவனுக்கு … ஆனால் அனைத்தையும் இனி அவன் தானே பார்த்தாக வேண்டும்.

சொக்கலிங்கத்தின் தந்தை வழி உறவினர்கள் தேவராஜனை அவர்கள் ஊருக்குத்தான் இறுதி மரியாதைக்கு கொண்டு செல்வோம் என்று விட , மருத்துவ நடைமுறைகள் முடிந்து வண்டியில் ஏற்றி விட்ட ஆதவன் , துக்கம் தாளாமல்.. சொக்கலிங்கத்திடம் ,

“தயவு செய்து… என் முன்னாடி இனி வந்துராதிங்க .. ” என கோபத்தில் கத்தியவன் , தேவகியையும் அனுப்பி வைத்தான்… அவரது நொடி நேர கோபத்தில் போனது எத்தனை உயிர்கள்… யார் என்ன சொன்னால் என்ன… பொறுமையாக இருந்து இருக்கலாமே..

இந்த உலகில் கெளரவம் என்ற போலிப் போர்வையைப் போர்த்தியவர்கள் யாரும் நிம்மதியாகவே இல்லை என்பது தான் உண்மை..

கண் விழித்த தில்லை பாக்யத்தின் உதவியுடன் நடந்து… இவ்வுலகை விட்டு சென்ற மூன்று உயிர்களையும் பார்த்தாள். மண்டைக்குள் குறுகுறு என என்னவோ செய்கிறது .. கத்தி அழ வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் எதுவுமே முடியாமல் மயங்கி இருந்தாள்.

ஆதவன் ஒற்றை ஆளாக அனைத்தையும் செய்தான்… எவ்வளவு திடமாக இருந்தாலும் உள்ளங்கை அளவே இருந்தாலும் மண்ணில் பாதமே தொடாத பிஞ்சு உயிர் அல்லவா.. தகனத்தின் போது கதறி விட்டான்.

வீட்டிற்கு வந்தவனை அவனது மனைவி வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்… சுற்றிலும் உறவினர்கள் இருக்க அருகில் சென்றும் ஆறுதலளிக்க முடியாத நிலை தான்.. உடனேயே அவளை அழைத்துக் கொண்டு அவர்களது ஊருக்குச் சென்றான். 

தேவகி இப்போது மருமகன் இருக்கிறான் என்றெல்லாம் எண்ணவில்லை… தாமரை வீட்டை விட்டு ஓடி விட்டாள்.. பரிசம் போடச் சென்ற இடத்தில் பெண் அவனை வேண்டாம் எனச் சென்றதால் தேவாவை ஆண் பிள்ளை இல்லையா எனக் கேட்டு நண்பர்கள் கேலி செய்ததால் வேண்டும் என்றே லாரியில் மோதிக் கொண்டான்.. இப்படியாக மனதில் பதிந்து மகளை அடித்தும் , தானே அடித்துக் கொண்டும் எல்லாவற்றிற்கும் காரணம் தாமரை தான் என்பது போல் அவளை நாக்  கூசும் வார்த்தைகளால் வசைப் பாடி அழுது புலம்பிக் கொண்டே இருந்தார்.

ஓரளவிற்கு மேல் ஆதவனால் அங்கு இருந்து அந்த வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை. தங்கையை வேறுப் பார்க்க வேண்டுமே … சொக்கலிங்கத்தைப் பார்த்து முறைத்து விட்டு , செண்பா மற்றும் பாக்யத்திடம் மனைவியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு மதுரைக்கு கிளம்பி விட்டான்.

முன் தினம் ஆதவன் தாமரையை அழைத்துக் கொண்டு சென்று விடு என்றதுமே அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தான் சிஜய் இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவன் என்பதால் அவனுக்கு தேவையானது எல்லாம் எளிதில் கிடைத்தது.

அன்று மாலையில் கண் விழித்த தாமரைக்கு தன் தலையில் போடப்பட்டிருந்த கட்டு தனக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதை உணர்த்தியது .அருகில் இருந்த செவிலியர் அவள் கண் விழித்த செய்தியை மருத்துவருக்கும் , வெளியேக் காத்துக் கொண்டிருந்த விஜயிற்கும் தெரிவிக்க , வேகமாக உள்ளே வந்த விஜய் புன்னகையுடன் அவளது அடிபடாத கையைப் பற்றிக் கொண்டான்.

அவளைத் தூக்கிக் கொண்டு விழுந்ததில் அவனது மணி கட்டிலும் சிறிது அடிபட்டிருக்க, மணி கட்டில் கட்டுப் போடப்பட்டிருந்தது. அவளே மறுபிறவி எடுத்து இருக்கிறாள்.. ஆனாலும் அவளது கைப்பற்றியிருந்த அவனது மணிக்கட்டு காயம் பார்த்து விழிகளை சுருக்கியவளின் காதலில் வீழ்ந்தவன் ,

“ஹேய் பொண்டாட்டி .. எனக்கு ஒன்னுமில்ல.. உனக்கும் ஒன்னுமில்ல… நாம ரெண்டு பேரும் நாளைக்கு நைட்டே சென்னைல இருக்கிற ஹாஸ்பிட்டல் போறோம்.. அதற்கப்புறம் நம்ம வீட்டுக்குப் போறோம்.. ஓகே… ” என்றவன் அழகாக கண் சிமிட்டி பிடித்திருந்த கரத்தில் முத்தமிட்டான்.

அதற்குள் மருத்துவர் வந்தவர் “மிஸஸ் விஜயானந்த் ” என அழைத்து , ” நீங்களும் எம் பி பிஸ் ஸ்டூன்ட்டுனு சொன்னாங்க…” என்றவர் அவளுக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கி , இனி அவளுக்குப் பிரச்சினையில்லை என்றதோடு மறுநாள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்குச் சென்று அங்கு உள்ள அவர்களது கிளை மருத்துவமனையிலயே சிகிச்சை எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செயப்பட்டுள்ளதையும் கூறிவிட்டுச் சென்றார்.

மெளனமாகவே அவனைப் பார்த்தவளுக்குள் ஆயிரம் கேள்விகள். அவளைப் புரியாதவனா , ” நீ என்ன யோசிக்கிறனு எனக்குப் புரியுது… ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்றேன். அது இதுதான்…” என்றவன் , அவளுக்கு அணிவித்த தாலியை கழுத்தில் இருந்து எடுத்துக் காண்பித்தான்.

தாமரையின் கண்ணிலிருந்து கண்ணீர் வழியத் துவங்க , அதைத் துடைத்து விட்டுக் கொண்டே ,

” உன் அண்ணன் தான் நமக்கு கல்யாணம் பண்ணி வச்சான் … ஆதவ் வந்ததும் உன்னையப் பார்த்து பேசினப் பிறகு தான் கிளம்புறோம்… அதுவரை நிம்மதியா தூங்கு..” என்ற ஆறுதலை அளிக்கவும் சிகிச்சையின் வீரியத்திலும் ,தான் விஜயின் மனைவி..தனக்குத் தன் சகோதரன் முன்னிலையில் தான் திருமணம் நடந்திருக்கிறது என்பதும் மனதில் நிம்மதியைப் பரவச் செய்து நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்தது.

உறக்கத்திலும் அவனது கைகளை இறுகப் பிடித்திருந்தாள் தாமரை செல்வி. மீனாட்சியும் சொக்கநாதனும் மதுரையை வலம் வந்துக் கொண்டிருக்க.. அன்று முழுவதும் ஊருக்குள் செல்ல முடியாத நெரிசல் .எப்படியோ இரவு நெருங்குவதற்குள் தங்கையைத் தேடி வந்து விட்டான் ஆதவன்.

அவளை ஏற்றிச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் தயாராக நின்றது.ஆதவன் எப்படியும் வந்து விடுவான், வந்ததும் உடனே கிளம்பி விடலாம் எனக் காத்துக் கொண்டிருந்தார்கள். தினமும் ஆங்கில நாளிதழ் படித்து விடும் விஜயிற்கு தாமரை மருத்துவமனையில் இருக்கவும் அவளை மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்ததால் வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போயிற்று. மதுரையின் பிரபல தொழிலதிபரும் ஒரு முக்கிய கட்சியில் முக்கிய பதவி வகித்த அருணாச்சலத்தின் மரணச் செய்தியும் தெரியாது , சாலை விபத்தில் உயிருக்கு போராடி உயிர் விட்ட அதே போன்று மற்றொரு அரசியல் கட்சி பிரமுகரின் மகனும் இளம் தொழிலதிபனான தேவராஜனின் மறைவும் தெரியாமல் போயிற்று.

தங்கையைத் தேடி அறைக்கு வந்த ஆதவன் , அருகில் வந்து அவள் நெற்றியைத் தொட , கண் விழித்த தாமரை கண்ணீர் விட , ஆதவனுக்கும் விழிகள் சிவக்கத் துவங்கியது. விழிகளாலயே தந்தையை, தோழியை என அவன் பின்னால் யாரும் வந்திருக்கிறார்களா எனப் பார்த்தாள் தாமரை.

அந்தப் பாசக்கார சகோதரனுக்கும் தங்கையை தெரியாதா என்ன.. மனதில் இருந்த துக்கத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு , முன்பே முடிவு செய்து வைத்ததைக் கூறலானான்.

“பாப்பா.. அப்பாவோட அரசியல் எதிரிங்க தான் உன்னைய இந்த நிலைக்கு கொண்டு வரக் காரணம். அதுல அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இப்ப பரவாயில்ல பாப்பா… திலோவும் அப்பாக்கூட தான் இருக்கிறா… அவளும் உன்னையப் பார்க்க வரேன்னு தான் சொன்னா… ஆனா அப்பாவோட எதிரிங்க எங்கே ஆட்கள் வச்சிருக்காங்க தெரியல… அதனால எல்லாருக்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன் மா. நீ இங்கே இருந்தா உன் உயிருக்கு மட்டுமில்ல விஜய் உயிருக்கும் ஆபத்து… ” என்றதும் தங்கையின் கண்கள் பயத்தைக் காட்டி விஜயைப் பார்த்ததையும் … அதற்கு “பயப்படாதே” என தலையசைப்பில்  அவன் பதில் பார்வைப் பார்த்ததையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ஆதவன்.

அதிலேயே அவர்களது புரிதலும் காதலும் தெரிய நம்பிக்கையுடன் ,

“எப்படி உன்னையப் பாதுகாக்கிறதுனு யோசிச்சுட்டு இருக்கும் போது தான் ஆனந்த் உன்னைய விரும்பறது தெரிஞ்சது….அதுதான் பாப்பா…” என்றவனுக்கு அதற்கு மேல் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை… ஒரு ஆண்மகன் எவ்வளவு துன்பத்தை தான் தாங்குவான். அதுவும் இப்போது தந்தை, தேவா, தன் குழந்தை என யார் மறைவையும் அவளுக்கும் விஜயிற்கும் அறிந்திடாமல் இருக்க , ஒன்றுமே நடவாதது போல் சில உண்மைகளை மறைக்க பல பொய்களைக் கூறிக் கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வோடு ,

இழந்ததை எல்லாம் நினைத்து தாமரைப் படுத்திருந்த மெத்தையிலயே கை மேல் முகம் புதைத்து குலுங்கியவனை விஜய் வந்துப் பிடிக்கவும் , அவனது கரம் பற்றிக் கொண்டவன் ,

“பாப்பா உன்னைய இந்த நிலமைல இங்கேயிருந்து அனுப்புற வலி… நிச்சியம் தாங்க முடியாததா தான் எனக்கு இருக்கு … ஆனா சூழ்நிலையப் புரிஞ்சுக்கோ பாப்பா… ஆனந்த நான் முழுசா நம்பறேன்.. அந்த நம்பிக்கைல தான் பாப்பா உன்னைய அவன் கூட அனுப்பறேன்… உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கில்லயா…” என்றதும் ஆதவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

காய்ந்த உதடுகளைப் பிரிக்க முடியவில்லை … சிரமப்பட்டு பிரித்தவள் , “அண்ணா நீங்க போய் அப்பாவ ,திலோவப் பாருங்க… இங்க எல்லாம் சரியானதும் நான் வாறேண்ணா…” என்றவளுக்கு, “வேண்டாம்” என்பது போல் வேகமாக  தலையசைத்தான்.

தங்கையின் உயிரை எப்படியும் காப்பாற்றி விடுவான்.. ஆனால் ஊர் முழுவதும் பரவியிருக்கும் “ஓடிப்போனவள்” என்ற பேச்சையோ.. அதன் காரணமாக இழந்த உயிர்களை அறிந்தாலோ அவளால் இப்போது தாங்க முடியாது… என்பதை அறிந்தவனாதலால்,

“இல்ல பாப்பா.. நான் சொல்றவரை நீங்க ரெண்டு பேரும் இங்க வரவே வேண்டாம்… நானே உங்களப் பார்க்க வருவேன்…” என்றவன், விஜயைப் பார்த்து….” நான் அவனுகள தேடிக் கண்டுப்பிடிக்கிற வரை இங்க வரவே வேண்டாம் ஆனந்தா.. நீ என்னையப் புரிஞ்சுக்குவனு நம்பறேன்.” என்றதும் விஜயும் இரு மனதோடு சரியென்றான்.

தாமரையும் சரி , விஜயும் சரி ஆதவன் இங்கு இருக்க வேண்டாம் என்றதற்கு பின் வேறுக் காரணங்கள் இருக்கக் கூடும் என சிறு சந்தேகம் கூட தோன்றவில்லை.

ஆம்புலன்சில் ஏற்றி விட்டு வண்டி கிளம்ப இருக்கும் சமயம் , “தேவாத்தான்.. அடிபட்டு … ” என பேச முடியாமல் கேட்டவளுக்கு..” தேவா தெய்வமாகி விட்டான்” என்பதை எப்படிச் சொல்ல..

“அவனும் நல்லாயிருக்கான் மா… நீ எதையும் யோசிக்காம உடம்ப கவனிச்சுக்கோ..” என்றவன் , விஜய் மற்றும் தாமரையின் கரங்களை சேர்த்து வைத்து ,

” நான் இங்கப் பார்த்துக்கிறேன்…. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா குடும்பம் நடத்தணும்… அது தான் பாப்பா எனக்கு வேணும்.”

” திலோவ பேசச் சொல்லுணா…” என காதில் தொலைப்பேசி வைப்பது போல் சைகை செய்தவளுக்கு கண்ணீருடன் தலையசைத்து அனுப்பி வைத்த ஆதவன் அங்கேயே அமர்ந்து தலையில் கை வைத்துக் கொண்டான்.

அவர்கள் வாழ்வில் விதி இப்படியும் விளையாடுமா என்று தான் இருந்தது.

            

Advertisement