அலை 24

          இராமேஸ்வரத்திற்கு குடும்பத்தோடு சென்று தன் தாயிற்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வந்தவர்கள் , இன்னும் இரண்டு நாளில் வரக்கூடிய தங்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டருகே இருந்த தோட்டத்தில் அறுவடை முடிந்திருந்த இடத்தில் பெரிய பந்தல் போடபட்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருமண நிகழ்வுக்கு இணையானது என்பதால் அனைவரும் பட்டுடுத்தி தயாரானார்கள்.தில்லை தயாராகி வந்ததிலிருந்து ஆதவன் பார்வை முழுவதும் அவள் மேல் தான்.தில்லையும் சளைக்காமல் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல் வந்து நின்றவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகனிடம் , “உங்கப்பா ரொம்ப ஹேன்ட்சம்மா இருக்கிறார் பாருங்களேன்… ஒன்னு தெரியுமா உங்கப்பாவ இப்படி சைட் அடிக்கிறது அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… உங்கப்பாக்கூட அம்மாவ அப்படி பார்க்கிறார்… நான் ரொம்ப என்ஜாய் பன்றேன்… நிஜமா இந்த காதல் காலம் ரொம்ப நல்லாயிருக்கு செல்லக்குட்டி … கொஞ்ச நாள் ஆகட்டும்… உங்கப்பாக்கிட்ட மனசு விட்டு நிறைய பேசணும். அப்புறம் தான் எங்க கல்யாண காலம் ஆரம்பமாகனும்ங்கிறது என்னோட ஆசை… பார்ப்போம் அது எப்போ நடக்கும்னு…” என குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே.. தாமரையும் தயாராகி வந்தவள் ,

“என் மருமகன் கிட்ட என்னடி பேசிட்டு இருக்கிற ..” என்றவளைப் பார்த்த தில்லை மீண்டும் மகனிடம் ,

“உங்கத்தை புதுப் பொண்ணு போல வந்துருக்கா… உங்களுக்கு என்ன பெயர் செலக்ட் பண்ணி இருக்காளாம்…” 

“உன்னைய விட வா.. இன்னைக்கு நீயும் அண்ணனும் தான் சென்ட்ர் ஆஃப் அட்ராக்ஷனே… கல்யாண பொண்ணு மாப்பிள்ளை போல இருக்கீங்க… ” என்றவள் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். ஆனாலும் நினைவுகள் விஜய் வந்து விடுவானா என்று தான் இருந்தது. இதோ மேளச் சத்தமும், பட்டாசு சத்தமும் கேட்க , மாடியில் இருக்கும் பொது பால்கனி க்குச் சென்று தோழிகள் இருவரும் சென்று நின்றனர்.

கரகாட்டம், சிலம்பாட்டம், கூடவே குதிரை வண்டிகள் , மாட்டு வண்டிகளில் சீர் பொருட்கள் வர , அவர்கள் ஊரே திரண்டு கைகளில் சீர்தட்டுக்கள் ஏந்தி வந்தனர். தேவா எங்கே எனத் தேட , அலங்கரிக்கப்பட்ட யானை மீது பட்டு வேட்டி சட்டையில் அமர்ந்து வந்துக் கொண்டிருந்தான்.தாமரைக்கு அவனைப் பார்த்து, “தேவராஜனே தான்…” என கடவுள் இந்திரனையும் அவரது வாகனமான வெள்ளை யானையையும் நினைத்து  சிரிப்பு வந்து விட , தில்லையும் , ” இந்த தாய் மாமன் அலும்பு தாங்க முடியல ” என சிரித்துக் கொண்டாள். சத்தங்களில் குழந்தை அழ ஆரம்பிக்க , தாமரை சமாதானம் செய்ய உள்ளே அழைத்துச் சென்றாள்.

அருணாச்சலம் தங்கை வீட்டார் வந்த விதம் கண்டு மீசையை முறுக்கிக் கொண்டார்.தேவகியையும் சொக்கலிங்கத்தையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்ற அருணாச்சலம் , அனைவருக்கும் ஆரத்தி எடுத்து மாலை மரியாதைகள் செய்து விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஆவுடையம்மாள் குடும்பம் மொத்தமும் அங்கு தான் இருந்தனர். அவர்களது பங்காளி ஒருவர் அருணாச்சலத்திடம் ,

“என்ன சகல தங்கச்சி வீட்ல மகளுக்கு பெரிசா இறக்கிட்டாக… நாமளும் நம்ம பொண்ணுக்கு இதைவிட பெரிசா செய்யணும்ல… “

“நாம ஊரே அதிர்ற அளவுக்கு மாப்பிள்ளை அழைப்பையே அசத்திருவோம்ல.. சரிதானப்பா” என மகனைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.தாமரையின் திருமணத்தை ஊரார் வியந்து போகும் அளவில் செய்ய விரும்பியே மகனைப் பார்த்தார். அவர்கள் மனம் தேவராஜன் தான் தங்கள் வீட்டு மாப்பிள்ளை என உறுதி செய்திருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே துவங்கி இருந்தனர். 

அனைவரும் விழா நடக்கும் இடம் செல்ல ,தாமரையின் கண்கள் கூட்டத்தில் தன்னவன் வந்திருக்கிறானா எனத் தேடிக் கொண்டே இருந்தது. திடீரென தில்லை , “செல்வி அங்க பாரு விஜய் ..” என்றதும் வேகமாக திரும்பிப் பார்த்தாள். ஒரு இடத்தில் விஜயலெட்சுமியும் அவர்களது வகுப்பு தோழியர்களும் அமர்ந்து இருந்தனர். சிறிது ஏமாற்றம் தான் என்றாலும் அவர்களைக் கண்டதும் சிறிது மகிழ்ச்சியாக இருந்தது.

அதே போல் அனீஸும் வந்திருந்தாள். ஆவுடையம்மாள் அவர்கள் ஊர் சடங்குகள் ஒன்றையும் விடவில்லை. குழவிக்கல்லை தாய்மாமன் வேட்டியில் போட்டு தொட்டிலாக்கி பின் அதில் குழந்தையைப் போடுவதாகட்டும் ,அரிசி புடைக்கும் முறத்தில் ஆதவன் மற்றும் தில்லையின் உடைகளை வைத்து குழந்தையை படுக்க வைப்பதாகட்டும் , பாரம்பரிய சடங்கு முறைகள் ஒன்றையும் விடவில்லை.

மீனாட்சி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஓடியது. எல்லா சடங்குகளும் முடிந்து குழந்தையின் பெயரை காதில் சொல்லும் நிகழ்வும் வந்தது.தாமரையை அழைக்க , சரியாக வெளியே ஒலிப்பெருக்கியில்… இந்த ஒரு வருடமாக அவள் உயிரோட கலந்தப் பாடலின் ஆரம்ப இசை கேட்க ஆரம்பித்து விட்டது. ஆம்… பூ மாலையே தோள் சேர வாதான் …

தரையில் அமர்ந்து அப்போதுதான் குழந்தையை வாங்கியிருந்தவளின் விழிகள் சட்டென உயர்ந்து சுற்றி இருந்தவர்களை காண , அவளுக்கு மிக அருகிலேயே நின்றிருந்த ஆதவனின் அருகில் பட்டு வேட்டி சட்டையில் கைகளைக் கட்டி இளம் புன்னகையோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போகிறாள் என்பதாக சுற்றியிருந்தவர்கள் அனைவர் பார்வையும்..தாமரையின் மீதே இருக்க , விஜய் அவளைப் பார்ப்பது யாருக்கும் தவறாகப் படவேயில்லை.

பட்டு வண்ண சேலைக்காரி

எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி…

ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை..

அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…

முதன் முறையாக பட்டுப்புடவையில் அழகோவியப் பாவையைப் பார்த்தவனது மனது சிறகடித்துக் கொண்டிருந்தது. அவனைக் கண்ட மகிழ்ச்சியை அப்பட்டமாக முகத்திலும் கண்களிலும் காட்டியவளின் இதழ்களும் மலர்ந்து விரிந்து மருகனுக்கு தான் வைத்தப் பெயரை மூன்று முறை சொல்ல வைத்தது.

பெயரைக் கேட்டதும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த , மூத்தப் பெண்மணிகள் அனைவரும் குலவைச் சத்தம் கொடுத்தனர். ஆதவன் , தில்லை ,அருணாச்சலம் , தேவகி , தேவராஜன் … என அனைவரும் அந்தப் பெயரில் மகிழ்ந்து தங்களுக்குள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள , தில்லை அப்போதுதான் தேவராஜனைக் கவனித்தாள். விட்டால் தாமரையை அப்போதே தூக்கிக் கொண்டு சென்று விடுபவன் போல பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது அருகில் நின்றிருந்த அவனது நண்பர்களும் , “டேய் மச்சான் என்ன நடக்குது.. இந்தப் பெயரை வச்சு உன் மாமன் பொண்ணு பப்ளிக்கா உன்னைய பிடிச்சுருக்குனு சொல்லிட்டா டோய்… பேசாம ‘மாமா உன் பொண்ணக் கொடுனு ‘ இப்பவே கேட்டுற வேண்டியதுதான…” என்றவர்களிடம்  பதிலளிக்காது சிரித்து வைத்தான்.

தாமரையின் முகமும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க கண்ட தில்லைக்கு முதன் முறையாக  சந்தேகம் வந்தது. தேவாவின் பார்வை அப்பட்டமாக தாமரை மீதான காதலைக் காட்டியது என்றால் தாமரை குழந்தையின் பெயரை தேர்வு செய்வதில் தன் விருப்பத்தைக் காட்டுகிறாளோ என்று இருந்தது. காரணம் அவள் சூட்டிய பெயர் அப்படி … குடும்பத்தில் உள்ள அத்தனைப் பேரின் பெயர்களையும், எழுத்துக்களாலும் , அர்த்தங்களாலும் உள்ளடக்கியதாக இருந்தது.

தில்லை இப்போது ஆராய்ந்த வரையில் தாமரையிடம் தேவராஜனைப் பார்க்கும் பார்வை ஓர் உறவினனாக மட்டுமே தெரிந்தது. ஆனால் தேவராஜன் பார்வை வேறாக இருந்தது. “அட அண்ணா உன் மச்சான் என்னையப் பார்க்கிறது எல்லாம் ஒன்னுமே இல்லங்கிற மாதிரில என் ஃபிரன்டப் பார்க்கிற.. ஆனா அவளுக்கு அது தெரிஞ்ச மாதிரியும் இல்ல புரிஞ்ச மாதிரியும் இல்லையே… “மிகவும் குழம்பி விட்டாள்.

அதற்குள் மேடைக்கு குழந்தையை ஆசீர்வதிக்க அனைவரும் வரவும் தில்லையின் கவனம் அதில் சென்று விட்டது. அவர்களோடு ஃபோட்டோ எடுக்க வீடியோ எடுக்க என நேரமும் செல்ல , விஜயானந்தும் கை நிறைய நகைப் பெட்டிகளுடன் மேடை ஏறினான்.தில்லை குழந்தையை கையில் வைத்திருக்க , கழுத்து சங்கிலி ,கை சங்கிலி , இடுப்பு சங்கிலி என ஒவ்வொன்றாக அவன் எடுக்க தேவகிக்கூட ஆச்சரியமாகப் பார்த்தார்.

விஜயும் தூரத்து உறவினன் என்பதால் அங்கிருந்தவர்கள் சிலர் அவனையும் அவன் குடும்பத்தையும் அறிந்து வைத்திருந்ததால் அவர்களுக்குள் அவனது தாயின் பின்னனிக் குறித்து முணுமுணுத்துக் கொண்டனர்.பாக்யமும் விஜயானந்தின் ஊரே … அவளுக்கும் அவன் ஒன்று விட்ட மாமன் மகன் முறை என்பதால் , அவளிடம் அதிகம் விவரம் கேட்டுக் கொண்டனர். அந்த ஊரின் மிகப் பெரும் செல்வந்தனின் பேரன் என்பதோடு பார்க்க வட இந்திய திரைப்பட நடிகன் போல ஆணழகனாக காட்சியளிக்கும் அவனைப் பற்றி அங்கு பேசாமல் இருந்தால் தான் அதிசயம்.

இப்படி மேடையேறிய அவனைப் பற்றி சுற்றி இருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க , அவனோ கையில் இருக்கும் பொருட்களை குழந்தைக்கு உதவி தேவைப்படுவது போல் தில்லை அருகில் அமர்ந்திருந்த தாமரையிடம் ,

” நீங்களே போட்டு விடுங்க… ” என்று விட்டான். தாமரையும் புன்னகையுடன் ஒவ்வொன்றாக மருமகனுக்கு அணிவிக்க , புகைப்படக்காரர்கள் அனைத்து நிகழ்வையும் படம் பிடித்துக் கொண்டார்கள். குடும்ப புகைப்படம் எடுக்கும் போதும் ஆதவன் நண்பனை தனியே விடவில்லை. விஜய் , தாமரை மட்டுமல்ல தேவாவும் இந்த புகைப்படங்களை அதிகம் எதிர்பார்த்தான்.

பெயர் சூட்டும் விழா சீரும் சிறப்புமாக நடைப்பெற்று முடிந்தது … மாலை வரை உறவுகளும் நட்புகளும் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.நட்புகள் அனைவரும் கிளம்பி விட , தில்லையின் ஊரில் இருந்து வந்த உறவினர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு இரவு உணவு அளித்து விட்டு அவர்கள் வந்த வாகனங்களில் அனுப்ப இருந்தனர்.

ஆதவன் , தேவராஜன் என உணவு தயாரிக்குமிடத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க , தில்லையைச் சுற்றியும் அவர்களது ஊர் உறவினப் பெண்கள் அமர்ந்திருக்க , தாமரை ஓர் ஓரமாக அமர்ந்திருந்தாள். நினைவெல்லாம் விஜய் எப்போது கிளம்புகிறான். இன்றும் அவனுக்காக தயாரித்து பத்திரப்படுத்தியிருக்கும் பலகாரப் பொருட்கள் அடங்கியிருக்கும் பையினை கொடுத்து விட முடியுமா, அவனுடன் தனிமை கிடைக்குமா… என்பதாகவே இருக்க… பிராயணத்திற்கு தயாராக ஒரு ஜீன்ஸ் டி ஷர்ட்டில் முதுகில் மாட்டப்பட்டிருந்த பெரிய பையோடு அங்கு வந்தவன் தில்லையிடம் ,

” சிஸ்டர் நான் கிளம்புறேன், நைட் பதினோரு மணிக்கு ட்ரைன்.. ” எனவும் விழிகளை உயர்த்திப் பார்த்த தாமரைக்கு கண்ணில் நீர் நிரம்பி விட்டது.  உடனேயே எழுந்தவள் , வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள். இருள் சூழ துவங்கியிருந்த நேரம் … ஆனாலும் பந்தல் போடப்பட்டு இருந்த இடத்திலிருந்து அவர்கள் வீடு வரை .. ஏன் வீடே அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

எனவே கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நடந்தவள் பின்னால் தில்லையிடம் சொல்லிக் கொண்ட விஜய் , ஆதவன், தேவா, அருணாச்சலம் என அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருப்பதை உறுதி செய்துக் கொண்டவன் தாமரையின் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

அவன் பின் வந்ததை கவனிக்காமல் அழுதுக் கொண்டே வீட்டிற்குச் சென்றவள் தாழிடப்படாத வாசற்கதவை திறந்தவாறு அவளது அறைக்குச் சென்று விட்டாள். அவளால் விஜயை அருகில் பார்க்காமல் பேசாமல் கிளம்பியதை தாங்கவே முடியவில்லை. கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவளின் காதுகளில் ,

 ” உன்கிட்ட பேசாம எப்படி கிளம்புவேன்…” என்ற விஜயின் குரல் ஜன்னல் வழி காற்றில் மிதந்து வர , விழிகளை துடைத்துக் கொண்டே ஜன்னலுக்கு வெளியே ஆடிக்கொண்டிருந்த கையடக்க டேப் ரிக்கார்டரைக் கண்டவள் , விழிகள் மின்ன அவனுக்காக எடுத்து வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு , வீட்டினுள் இருந்து செல்லும் படி வழியாக மாடிக்கு ஏறினாள்.

விஜய் பேசாமலே கிளம்பி விட்டான் என நினைத்தவளுக்கு அவன் பின்னோடு வந்ததும் அவனை அருகில் பார்த்ததும் மகிழ்ச்சியைத் தர மீண்டும் அழுகை வந்து, கையிலிருந்த பையோடு சுற்றுச்சுவரோடு சாய்ந்து அமர்ந்து முழங்காலில் முகம் பதித்துக் கொண்டாள்.

காதல் அலை..வீசும் கடல் தான் மனது

காலம்… பல காலம் இது வாழுவது

தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது

தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது

நீ இன்றி நானேது நேசமோடு வாழும் மாது…