தில்லை உணவுகளை பரிமாற முயல்வதைக் கண்டு விஜய் , ” சிஸ்டர் நீங்களும் உட்காருங்க.. நாங்களே எடுத்துக்கிறோம்..” எனவும் தேவகியும் தாமரையும் பரிமாற ஆரம்பித்தனர். தேவகி , “மதினி கைப்பக்குவம் என் மருமகளுக்கும் வருது..” என்றவர்,அவள் சமைத்த உணவுகளாக கூறி அனைவருக்கும் எடுத்து வைத்தார். தேவா ஒரு பக்கம் ,விஜய் ஒரு பக்கம் என தாமரையோடு தங்கள் எதிர்காலத்தை கற்பனையில் கண்டவாறே உண்டு எழுந்தனர்.
ஆதவனோ..” அம்மா இருந்திருந்தால்… ” என எண்ணிக் கொண்டு இருக்கும் போதே ,”அத்தை இது எல்லாம் திலோ எனக்கு சமைச்சு தருகிறதப் பார்த்து நான் கத்துக்கிட்டது தான்…இத்தனை நாள் எங்கம்மா எனக்கு சமைச்சுத் தந்தாங்க… இப்ப நான் திரும்பி வரப்போற எங்க அம்மாவுக்கு சமைக்கிறேன். திலோ தான் சமையற்கட்டுப் பக்கமே விடவே மாட்டிக்கிறா… அண்ணா ப்ளீஸ் நீங்க இனி இவள கிச்சன் பக்கமே விடாதிங்க..”
“நீயும் படிக்கணும் டி.. அதெல்லாம் செண்பா மதினியும் பாக்யமும் பார்த்துப்பாங்க..” இப்படி தோழிகளின் உரையாடல் அங்கிருந்த அத்தனைப் பேரையும் கவர்ந்தது.ஆதவனிற்கு தங்கையும் மனைவியும் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும் விதம் மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்க புன்னகையோடு தேவாவையும் விஜயையும் வழியனுப்ப வந்தவன் ஏதோ நியாபகம் வந்தவனாக அவர்களை நிற்கச் சொல்லிவிட்டு திரும்ப அவனறைக்குச் சென்றான்.
தாமரை விஜய் கிளம்புகிறான் என்றதும் வாசல் வரை விரும்பினாலும் அது முடியாத காரியம் என்பதால் வேகமாக மாடியேறிச் சென்று அவளது அறை ஜன்னலில் நின்றுக் கொண்டாள். விஜயும் சரியாக வேப்ப மரத்தடியில் நின்றவனது பார்வை மாடி ஜன்னலில் தான் இருந்தது. அதற்குள் ஆதவன் வந்தவன் விஜய் மற்றும் தேவாவின் கைகளில் சில பைகளைக் கொடுத்தனுப்பியவன் பயணக் களைப்பின் காரணமாக ஒய்வெடுக்கச் செல்வதாகக் கூறி அறைக்குச் சென்று விட்டான்.
மனைவி வந்தால் அவளிடம் சில விவரங்கள் பேசி தெளிவு பெற வேண்டும் என நினைத்துக் காத்திருந்தான். ஆனால் தில்லையை தேவகி தன்னருகில் தக்கவைத்துக் கொண்டார்.
தில்லையின் அருகில் அமர்ந்திருந்த தாமரை தோழியின் வயிற்றில் கைகளை வைத்து குழந்தையின் அசைவை உணர்ந்தவள் ,
” பாரேன் எப்படி விளையாடுறாங்கனு … அண்ணா தொட்டுப்பார்த்தாங்களாடி..” என கேட்டவளுக்கு சற்று முன்னர் அவன் மீது சாய்ந்திருந்த போது குழந்தை தன் இருப்பை உணர்த்தியதை நினைத்து நாணமடைந்தவள் , “ம்… ” என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்ததைக் கவனித்த தேவகி , தில்லையிடம் தனியே பேசும் சந்தர்பத்திற்காக காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் தனக்கு படிக்க வேண்டி இருப்பதாக கூறி அறைக்குச் சென்று விட்டாள் தாமரை செல்வி. ஆதவன் அறைக்குச் சென்றதில் இருந்து அவனருகில் செல்லத் துடித்த மனதை வெகுவாக கட்டுப்படுத்தி வைத்திருந்த தில்லை தோழி கிளம்பியதும் தானும் செல்லலாம் என எழுந்திருக்க தேவகி அவளை அமர வைத்து ,
“பாப்பா… மருமகன் ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்காரு.. நீ தான் பார்த்து பக்குவமா இருந்துக்கணும் சரியா… ஆறு மாச வயிறு… ” என்றவர் சில அந்தரங்க தகவல்களை மகளிடம் பகிர… வெட்கத்துடன் …” போம்மா…” என கொஞ்சிய மகளுக்கு திருஷ்டி கழித்தவர் ,
“அம்மா சொல்றது நல்லதுக்குத் தான் சாமி … ரெண்டு பேரும் சின்ன வயசு.. உன் வயசத்தாண்டி வந்தவதானே நானும்…” எனப் பேசிக் கொண்டே போகயில் விருப்பமில்லாது கேட்பது போல் பாவனைக் காட்டினாலும் அனைத்தையும் மனதில் ஏற்றிக் கொண்டவள்மாடியேறப் போகயில் ,
” சரி பாப்பா சொன்னது புரிஞ்சது இல்ல… நான் போய் அண்ணன்கிட்ட ராஜனுக்கும் , செல்விக்கும் கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்றேன். இனியும் வயசு பிள்ளைய கல்யாணம் பண்ணாம வீட்ல வச்சுட்டு இருக்கிறது நல்லதுக் கிடையாது…” என்ற வார்த்தைகளை உதிர்க்க தில்லை படி ஏறாமல் நின்று விட்டாள்.
“என்ன… என்னம்மா சொல்ற.. எத்தனை தடவை சொல்றேன் அவ படிப்பு முடிக்கிற வரை கல்யாணத்தை பத்திப் பேசாதீங்கனு…”
“என்ன சாமி விளாங்காம பேசுற… உன்னைய விட நாலஞ்சு வயசு சின்ன பிள்ளையா இருந்தாலும் பரவாயில்ல… உன் வயசு பிள்ளை … ” என்றவர் தில்லையை அறைக்குள் அழைத்துச் சென்று …
” வயசு பிள்ளைய பக்கத்துல வச்சுட்டு , பூட்டுன அறைக்குள்ள புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து இருக்கிறது நல்லா இருக்காது இல்லையா… அதுக்குத் தான் முதல்ல பொட்ட புள்ளைகள கல்யாணம் கட்டி மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புறதும்..நீ தான் முதல்ல எனக்கு அப்புறம் அண்ணனுக்குனு சொல்லிட்டு இப்ப தள்ளிப் போட்டுட்டே இருக்க..
தாயில்லாத பிள்ளை, காலாகாலத்துல என்னென்ன செய்யனுமோ அதெல்லாம் செய்துடணும் பாப்பா.. நாளைக்கு தப்பா எதுவும் நடந்தா பெத்தவ இருந்தா இப்படி ஆகியிருக்குமானு யாரும் சொல்ற மாதிரி வைக்க கூடாது சாமி .. ” தேவகி கூறக் கூற தில்லையின் எண்ணங்கள் ஏதேதோ சிந்தனைக்குச் சென்றது.
அவளது தாடைப்பிடித்து ,”பாப்பா.. அம்மா சொல்றது புரியுதுல்ல… புருஷன் கூட வாழ்ந்து பிள்ளையும் பெத்துக்கப் போறவங்கிறாலதான் நான் இம்புட்டு பேசுறேன்…இவ்வளவு நாள் செல்விக் கூடவே நீ இருந்த… அதாவது இராவுலையும்.. இனி அப்படி இருக்க முடியாதுல்ல…மதினி உயிரோட இருந்தாலாவது செல்விக்கு துணைக்கு இருப்பாக.. இப்ப அவுகளும் இல்லாதப்ப நீ புருஷன கவனிப்பியா நாத்தனார கவனிப்பியா.. அந்த புள்ளைய ஆஸ்டலுக்கும் அனுப்ப மாட்டங்கிற ..அப்ப எல்லாத்துக்கும் தீர்வு இந்த கல்யாணம்தானே.. அதுதான் அண்ணன்கிட்டப் பேசப் போறேன்… என் மருமவள நான் நல்லாப் பாத்துக்கிடுவேன் சாமி … என்னைய விடு… எம்புள்ள … பொண்டாட்டிய அம்புட்டு உகரா பார்த்துக் கிடுவான்.” என்றவர்.
“போ… போ.. நீ மாப்பிள்ளைய கவனி.. அவருக்கு பால் எடுத்துட்டு போ…” என்றவர் மகளிடம் பால் குவளையையும் கொடுத்து தான் அனுப்பினார்.
தில்லைக்கு யோசிக்க யோசிக்க தலை வலிக்க ஆரம்பித்தது…கணவன் எப்போது தன் முன் வருவான் , அவனிடம், தான் அவன் மீது காதல் கொண்டதைச் சொல்ல வேண்டும்.. வயிற்றில் இருக்கும் குழந்தையை அவன் தொட்டு உணர்ந்து மகிழ வேண்டும். ஒரு நாள், அந்த ஒரே நாள் இரவில் தான் பெற்ற முத்தங்களை தினம் தினம் பெற வேண்டும்.. அவன் வரவிற்காக காத்திருந்த போது அவனை நினைத்து தான் எழுதிய காதல் கடிதங்களில் எழுதியவற்றை எல்லாம் அவனுக்குப் படித்துக் காட்டுவதோடு நேரிலும் பகிர்ந்து… மகிழ வேண்டும் என நினைத்து கணவனறைக்குச் செல்ல விரும்பியவளின் மனதில் சலனத்தை உண்டாக்கிவிட்டு தேவகி தமையனிடம் பேசச் சென்று விட்டார்.
எதையும் மனதில் வைக்காமல் பேசித் தீர்த்துக் கொள்பவள்.ஆதவன் மீதான நேசத்தின் வெளிப்பாடுகளையும் , தான் விரும்பிய படிப்பை விட்டதற்கான உண்மையான காரணத்தையும் கடிதங்களாக எழுதி வைத்திருந்தாள். இனியும் அப்படித்தான் இருக்க வேண்டுமோ ..
“எனக்குத் தெரியும் என் மாமா ரொம்ப நல்லவங்க… தங்கச்சி மேல அதிகம் பாசம் வச்சிருக்கிறவங்க.. அதே அளவு அன்பும் என் மேல வச்சிருப்பாங்க.. அம்மா சொன்னது உண்மையா தான் இருக்கும் … அத்தை இறந்தப்போ எவ்வளவு இறுக்கமா இருந்தாங்க.. ஆனா என் கூட இருந்தப்போ நான் மட்டும் தானே அவங்களுக்கு தெரிஞ்சேன்… நான் தாமரைய பார்த்துக்குவேன்னு சொன்னப் பிறகு தானே தைரியமா வெளிநாட்டுக்கு கிளம்பினாங்க… மாமா என்னைய கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க… “
ஆதவனறைக்குள் சென்றவள் அவன் அசந்து தூங்குவதைப் பார்த்தாள். மறுபுறம் அமர்ந்து அவன் முகத்தையேப் பார்த்து ரசித்தவள் , தன் பூங்கரம் கொண்டு அவன் நெற்றியில் விழுந்த முடி ஒதுக்கினாள்.
“மாமா.. உங்க முத்தம் வாங்க ரொம்ப ஆசைதான். ஆனா இப்போ முடியாது போல… நிச்சியம் நான் உங்கள விரும்புறத சொன்னா… அன்னைக்கு கொடுத்த முத்தத்தை விட அதிகம் கிடைக்கும் … ஆனா தாமரை தனியா இருக்காளே.. நீங்க தர முடியலனா என்ன.. நான் தந்துட்டுப் போறேன்…” என எண்ணியவள் ஆதவனின் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து விட்டு தாமரையின் அறைக்குச் சென்றாள்.
புத்தகத்திலேயே மூழ்கியிருந்த தாமரை, தில்லையைக் கண்டதும் , “ஹேய் திலோ என்னடி பால் கிளாஸ் எடுத்துட்டு இங்க வந்துட்ட… அண்ணனுக்கு கொண்டு போ… அப்படியே மறக்காம டேப்ளட்ஸ் போட்டுட்டு தூங்கு” என்றாள்.
“சரி பால் நான் குடிச்சுக்கிறேன். . அண்ணன் வந்துட்டாங்கல்ல.. இனி அங்கப்படு…” என்றவாறு டம்ளரை வாங்கியவளிடம் …
“ஏன்டி இங்க படுக்க கூடாதா.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு …” என்றவாறு படுக்கப் போனவள் அருகில் வந்து அமர்ந்த தாமரை,
“திலோ திலோ … இனி நீ அங்க தான் டி படுக்கணும்… அண்ணன கவனி… நீயும் அண்ணாவும் என் செல்லத்துக்கிட்ட பேசணும்ல.. நான் இன்னும் கொஞ்ச நேரம் படிச்சுட்டு தூங்கிடுவேன்.. கிளம்பு கிளம்பு..” என அவளை மெல்ல எழுப்ப ..
“அடியே இங்க வந்த பதினஞ்சு நாளும் நான் இங்க தான் உனக்கு துணையா தூங்க வருவேன்.. அப்பலாம் நான் அங்க தான் படுக்கணும்… உங்கண்ணன கவனிக்கணும்னு சொல்லாம… எங்கேயோ முழிச்சுப் பார்த்துட்டே இருந்துட்டு.. இப்ப எல்லாம் தெரிஞ்ச பெரிய மனுஷியாட்டம் பேசுற…..” என மனதினுள் நினைத்துக் கொண்டவள் ,
“போடி இங்க தான் படுப்பேன்… உனக்கு ஒன்னும் தெரியாது.. நீ போய் படி..” என்றவள் , நன்கு வசதியாகப் படுத்துக் கொண்டாள். தாமரையோ …
“எனக்கா தெரியாது… எல்லாம் தெரியுமடி.. இன்னும் நாலஞ்சு மாசத்துல எம்.பி.பி.எஸ் முதல் வருஷத்த முடிக்கப் போறேனாக்கும்.” என புன்னகையுடன் சொன்னவளைப் பார்த்த தில்லை … “அப்படிங்கிற ..” எனவும் , “அட ஆமாங்கிறேன்…” என ராகமிட்டவளிடம்,
“சரி அப்ப நான் சொல்றதக் கேளு… எங்கம்மா என்ன சொல்லுச்சுனா.. மருமகன் ரொம்ப நாள் கழிச்சுப் பொண்டாட்டிய பார்க்கிறாரு..இந்த நேரத்துல ஆசையா வர்ற புருஷனப் பக்கத்…ம்ம்..ம்..” என்றவளின் வாயை மூடிய தாமரையிடம் தான் தில்லை “ம்ம்” எனப் பேசிக் கொண்டிருந்தாள். தாமரையின் முகம் சிவந்து ..
“ஹேய் தில்லைநாயகியே … நான் உன் ஃபிரண்ட் மட்டுமில்ல உன் நாத்தனாரும்னு சொல்லியிருக்கேன்… இங்க தான் படுப்பியா படு … உனக்காக தான் சொன்னேன்… நீ விளக்கமேக் கொடுக்க வேண்டாம்…” என்ற தாமரை அவள் உறங்க வசதிகள் செய்துக் கொடுத்து விட்டு தானும் புத்தகங்களை ஒதுங்க வைத்துவிட்டு அவளருகில் படுத்துக் கொண்டவளுக்கு இது போன்ற பேச்சுக்கள் தன்னவனை நியாபகப்படுத்த … அவளது மூடிய விழிகளில் விஜயே வந்து நின்றான்.
கனவுகள் போலே கண்ணில் நீயே
வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பத் தேனும்
கலந்தோடும்
தில்லையோ…” அப்படினா அம்மா சொன்னது சரிதான் போலவே.. மாமா சும்மாயிருந்தாலும் நான் சும்மாயிருக்க மாட்டேனே… இப்பக்கூட அவங்களப் பார்த்ததும் நான் தான கட்டிப்பிடிச்சேன்.. கல்யாணம் ஆகாத அவ இருக்கிறப்போ நான் எப்படி மாமாக் கூட சந்தோஷமா இருக்க முடியும்… விடுடி …விடுடி… காதலிக்கிறதே சந்தோஷமா தானே இருக்கு.. இப்ப காதலிப்போம்… நேரம் வரும் போது குடும்பம் நடத்துவோம்… அதுவரை கனவுல குடும்பம் நடத்துறேன்… என்னென்ன யோசிக்கிற..” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளுக்கு ஆதவன் அருகில் இருக்கிறான் என்பதே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்க, அவளது விழிகளிலும் ஆதவனே நிற்க , இப்போது தில்லையும் நிம்மதியாக உறங்கினாள்.
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை..
மறுநாள் அதிகாலையே விழிப்பு வந்த ஆதவனுக்கு , மனைவி அருகில் இல்லாதது சிறு ஏமாற்றத்தைக் கொடுக்கத்தான் செய்தது. எழுந்துக் கீழே சென்றால் சமையலறையில் பெண்களாக இருப்பது தெரிந்தது. வந்தவன் அருணாச்சலம் அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொள்ள , அருணாச்சலம் மகனிடம் தனிமையில் பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.
சிறிது நேரத்தில். தேவகியும் சொக்கலிங்கமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட , தாமரை கல்லூரிக்குச் செல்ல தயாராகி வந்தவள் , தில்லையிடம், “அதைச் சாப்பிடு.. இதைக் குடி… ” என்றதோடு துணைக்கு இருக்கும் பெண்களிடமும் தில்லையைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுக் கிளம்பினாள். தான் வந்திருப்பதால் விடுமுறையில் இருக்கிறாளோ என்று எண்ணியவனுக்கு சற்று நேரத்தில் தந்தையின் மூலம் அறியபட்ட விவரம் மீண்டும் குற்றவுணர்வைக் கொடுத்து தில்லையிடம் இருந்து தள்ளியிருக்க வைத்தது.
இப்படி ஆதவனும் தில்லையும் அவரவர் எண்ணங்களில் உறுதியாக இருந்தது… சில நாட்களோ… சில மாதங்களோ அல்ல… சில வருடங்களாக…