Advertisement

“ஆமா இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… என்னையப் பார்த்து இந்த ஆளு என்ன சொல்லிச்சு.. என்னம்மா குச்சிமிட்டாய் மாதிரி இருக்கிறவளுக்கு புடவையசுத்தி வச்சுருக்காங்கனு கேட்டுச்சுல்ல … ம் இதுவும் சிலம்பு சுத்துற குச்சிகணக்கா தான…” என யோசித்துக் கொண்டிருந்தவள் இப்போது ஆதவனின் முழு உயரமும் கம்பீரத் தோற்றமும்.. அதுவும் அவன் காரில் சாய்ந்து நின்ற வசீகரத் தோற்றமும் இப்போது வசீகரிக்க ..

“அட.. அட.. அந்த புது புது அர்த்தங்கள் ரஹ்மான் மாதிரியில்ல இப்ப மச்சான் இருக்காரு ….அது யாரு பக்கத்துல இந்திக்காரன் போல வெள்ளை வெளேர்னு..” என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அனைவரும் காரிலிருந்து இறங்கியிருக்க ஆதவன் இவர்களைக் கண்டதும் அருகில் வந்தவன் தேவகியைக் கண்டு …

“அத்தை வணக்கம் நல்லா இருக்கீங்களா…” என்றான் – அண்ணன் மகனைக் கண்டவர் பூரித்து ,

“மருமவனே நல்லா இருக்கீங்களா… பார்த்து எம்புட்டு நாளாச்சு..” என நலம் விசாரித்துக் கொண்டிருக்க …ராஜனும் அவனுடன் பேச ஆரம்பித்தவன் , காரின் மறுபுறம் இறங்கி நின்ற தங்கையிடம் வந்து..

“பாப்பா… மச்சானும் கூட இருக்காருல… நீயும் அம்மாவும் சாமி எல்லாம் பார்த்துட்டு பொருட்காட்சிக்கு வந்துடுங்க.. நானும் ஃபிரன்ட்ஸ் கூட அங்க வந்துருவேன் சரியா என்றவன் தங்கை கையில் சில ரூபாய் நோட்டுக்களைத் திணித்து …

“இந்தா இது நான் சம்பாதிச்சது.. உனக்கு புடிச்சதெல்லாம் வாங்கிக்கோ …” என்று விட்டு காரை எடுத்துக் கொண்டு.. அனைவரிடமும் சொல்லிவிட்டு சென்று விட்டான். தேவகியும் அர்ச்சனைத் தட்டுக்களை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்க , தில்லையும் சில தாம்பூலத் தட்டைத் தூக்கிக் கொண்டு தாயின் பின் செல்ல நடக்க ஆதவன் அவளைப் பார்த்து விட்டு ,

“ஹேய் தில்லைநாயகி தான நீ… அடையாளமே தெரியல எப்படி இருக்க.. பரிட்சை நல்லா எழுதியிருக்கியா.. ரஸ்னா கேர்ள் கொண்டையோட உன்னைய முன்னாடி பார்த்தது… அப்புறம் …” என்றவன் அவளை பருவமடைந்த புதிதில் பார்த்ததை நினைவு கூற வர…

எங்கே அன்று அவளை சடங்கு செய்ய மேடையில் ஏற்றிய போது கூறியதை சொல்லிவிடுவானோ என்ற பதற்றத்தில் ..

“ம்… நல்லாதான் எழுதியிருக்கேன்…” என்றவள் அவனைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு கோவிலுக்கு நடையைக் கட்டியவள் ,

” அடையாளமே தெரியலயாமே … அப்புறம் இன்னும் இவரு சொல்ற தாத்தா கைத்தடி குச்சிக் கணக்காவே இருப்பாங்களாமா … பதிமூணு வயசுல அப்படித்தான் இருக்க முடியும் … ம்ஹூம்…” என்று முகத்தை வெட்டிக் கொண்டவள்,

” அவருக் கூடத்தான் அப்ப சிலம்ப குச்சி போல ஒல்லியா வளர்த்தியா இருந்தாரு… இப்ப … எல்லாம் இந்த அம்மாவ சொல்லணும் சடங்கு வைக்காங்களாம் சடங்கு .. ” என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே நடந்தவள் கோவிலுக்குள் சென்று விட்டாள்.

ஆதவன் சிறு சிரிப்புடன் நண்பன் அருகே வந்து, “என் அத்தை பொண்ணுதான் நான் காலேஜ் சேர்ந்த புதுசுல பார்த்தது … இப்ப டோட்டல் சேன்ஜ் … ” என தன் அத்தைக் குடும்பத்தைக் குறித்துக் கூறலானான்.

கோவிலுக்குள் வந்த தில்லை தோழியைக் கண்டு விட்டு ஆர்வமாக அருகில் வந்தவள் ,

“நீ இப்படித்தான் வருவனு எனக்குத் தெரியும்… ” என்றவள் அவள் இரட்டை ஜடையையும் உடையையும் காண்பித்து விட்டு ,

“நாம அடுத்துக் காலேஜ் போறோம் டி… இனி இந்த ரெட்டை ஜடைய விட்டுட்டு நதியா கொண்டை… இல்ல சினிமால வர்ற நடிகைங்க மாதிரி முடிய விரிச்சுப் போட்டு வெளிய போவோம்…” என்றவளிடம் தாமரை ,

“அம்மாதான் போட்டு விட்டுச்சு..” என்றாள்.

“அத்த தான … அவங்க அப்படித்தான்.. சரி சாமியை பார்த்து முடிச்சுட்டு நாம பொருட்காட்சி போற வழில தான சின்ன ஆச்சி வீடு இருக்கு அங்கன போய் நான் உனக்குப் போட கொண்டு வந்த டிரஸ்ஸ மாத்திட்டுப் போவோம்.. இல்ல தாவணி போட்டுட்டு ராட்டினத்துல ஏற விடமாட்டாங்க…” என்றவாறு சாமி கும்பிட ஆரம்பித்தாள்.

வெளியே வர ஆதவனும் விஜயும் தயாராக காரில் அமர்ந்திருக்க இவர்களும் பின் இருக்கைகளில் முன்னும் பின்னுமாக அமர்ந்து பொருட்காட்சி திடல் நோக்கி கிளம்பினர்.

மீனாட்சியும் தேவகியும் ஏதோ பேசிக் கொண்டே வர… தில்லையும் தோழியிடம் வாயாடிக் கொண்டே வந்தாள். போகும் வழியில் அந்த சின்ன ஆச்சி வீட்டின் முன் பெண்கள் அனைவரும் இறங்கிக் கொள்ள , ஆண்கள் காரிலேயே அமர்ந்துக் கொண்டனர் .அருணாச்சலமூர்த்தி , தேவகியின் தந்தையின் உடன் பிறந்த தம்பி வீடுதான் அது. அவர் மறைந்து விட்டார். அவரது மனைவி ஆவுடையம்மாதான் சின்ன ஆச்சி என தில்லையாலும், சின்ன அப்பத்தா என்பதனை சுருக்கி சின்னத்தா என ஆதவன் மற்றும் தாமரையால் அழைக்கப்படுகிறார்.

அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்பதால் மதுரைக்கு வரும்போதெல்லாம் மகன் வீட்டில் இருக்கும் அவரைப் பார்த்து விட்டு செல்வது வழக்கம் … இன்றும் அப்படியே …

வீட்டின் முன்புறம் இருந்த திண்ணையில் வெற்றிலை இடித்து மென்றுக் கொண்டிருந்தவர் , ஆதவன் வந்திருக்கிறான் என்றதும் எழுந்துக் காரருகே வந்தார்.

ஆதவனும் அவரைக் கண்டதும் இறங்க , கூடவே விஜயும் இறங்கினான். தனது கண்ணாடியை சரி செய்து கூர்ந்து பார்த்தவரிடம் ,

“அப்பத்தா எப்படி இருக்கிறீங்க..” என்றவனிடம்,

“எய்யா ராசா நல்லா இருக்கேன் … இது யாரு உன் சோக்காலியா …”

“ஆமா அப்பத்தா..” என்றவன் விஜயின் குடும்பத்தையும் தெரிவிக்க .. அவனையும் வரவேற்று உள்ளே வந்து மகள், மருமகளிடம் பேசிக் கொண்டிருக்க , தில்லையோ அங்கிருந்த ஆச்சியின் அறைக்கு தாமரையை அழைத்துச் சென்று அவளை உடை மாற்றச் செய்து , தோழியின் பின்னலை அவிழ்த்து அந்தக் கூந்தலை அலங்காரம் செய்து விட்டு அழைத்து வந்தாள்.

ஆச்சி தேவகியிடம் , ” நம்ம ராசப்பன் பேரனாமே .. அவரு மவன் யாரோ பஞ்சு மிட்டாய்க் காரிய கல்யாணம் கட்டிக்கிட்டதா சொன்னாங்க.. இந்த புள்ள ரோசா படத்துல வர்ற பையனாட்டம்ல இருக்காரு” என்றதும் ,

“ஷ்..சின்னம்மா அந்தப் புள்ளக் காதுல விழுந்துறப் போகுது. அவங்க பஞ்சு மிட்டாய் காரவுங்க இல்ல… பஞ்சாபி காரவுங்க…” என விளக்கமளித்துக் கொண்டிருக்கவும் , தில்லை வந்தவள்,

“ஆச்சி.. உனக்கு ரோசா பட அரவிந்தசாமியெல்லாம் தெரியுது..”

“உங்க மாமன் நம்ம ஊருக்கு கொட்டகைக்கு கூட்டிட்டுப் போனான்ல.. அப்பதேன் பார்த்தேன்.”

“அப்படியா ஆச்சி எங்க ஊரு கொட்டாய்ல செம்பருத்தி படம் திரும்ப போடுறாங்க … கேசட்ல பார்க்கிறத விட அங்க பார்த்தா நல்லா இருக்கும் .. நீயும் வாயேன் நாம போகலாம்…” என செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

தேவகி அருகில் இருந்தவர் மகளின் முதுகில் தட்டி , ” எப்ப பாரு சினிமா சினிமா .. சின்னம்மா சீக்கிரமே கல்யாணம் கட்டி வைக்கனும்… இவள காலேசு வரை படிக்க வைக்கிறதுக்கே பயமா இருக்கு.. சினிமா பார்த்தே கெட்டு போய்டுவாளோனு பயமா இருக்கு … ” தில்லைக்கு வந்ததே கோபம்…

“ஏம்மா.. அப்படி என்ன சினிமா பார்த்து நான் கெட்டுப் போக இருக்கு.. பொழுது போக்கா ரசிச்சுட்டு போறேன் அவ்வளவுதான் .. நீ என்னைய அடக்க அடக்க தான் எனக்கு அது மேல எல்லாம் ஆர்வம் அதிகமாகுது.. அதுல என்ன இருக்கு.. என்ன இருக்குனு … நீ சாதாரணமா எடுத்தா எனக்கும் அது சாதாரண விஷயம்தான்.. ” என படபடவென பொறிய… ஆச்சி தான் சமாதானம் செய்து வைத்தார்.

அதற்குள் தாமரையும் அறையை விட்டு வெளியே வர…மீனாட்சியும்  மகளை கண்டு விட்டு … ஆவுடையாளிடம்…

“நானும் என் உடம்பு இருக்கிற நிலமைக்கு உங்க பேத்திய ஒருத்தன் கைல பிடிச்சு கொடுத்தா நல்லதுனு தான் நினைக்கிறேன் அத்த… ஆனா உங்க பெரிய மவனும் பேரனும் புள்ளைய படிக்க வைக்கணும்ங்கிறாங்க .. ” என்றார்.

தாமரையின் ஒரு கிளிப் மட்டும் போடப்பட்ட நீண்ட கூந்தலை தோழியின் வலது புறதோளில் புரளுமாறு போட்டுக் கொண்டே..

“ஆச்சி இவ டாக்டருக்கு படிக்கணும்ங்கிறா… எனக்கு அக்ரி படிக்க ஆசை… எங்க ரெண்டு பேருக்கும் காலேஜ் முடிச்சதும் தான் கல்யாணாமெல்லாம் பேசணும் ஆமா… அதுக்கு முன்ன இந்த பேச்சு வந்துச்சு உன் வெத்தல பெட்டிய உன் கண்ணுலயே காட்ட மாட்டேன் ஆமா… வாடி போகலாம்…” என தோழியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

” மதனி … நம்ம நாயகி அவளுக்கு மட்டும் பேசாம உங்க மருமவளுக்கும் வக்காலத்து வாங்குறா பாருங்களேன்… எனக்கு அம்மா வீட்டு சொந்தம்னு சொல்லிக்க கூட இப்ப யாருமில்ல… நாள பின்ன எனக்கு ஏதாவது ஆனாக் கூட பார்த்துக்க ஒரு துணை வேணுமின்னு தான் நம்ம நாயகிய ஆதவனுக்கு கேட்கச் சொன்னேன்… உங்க அண்ணன் படிக்கிற பிள்ளைங்கள இப்பவே சேர்த்து வச்சு பேசாதனு ஏசிபுட்டாரு…”

தேவகியும் , “ஆமா மதனி.. நானும் பொண்ணுக் கொடுத்து பொண்ணு எடுக்கலாம்னு சொன்னதுக்கு அண்ணன்கிட்டயிருந்தும் ராஜன் அப்பா கிட்ட இருந்தும் நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்.. என்ன நடக்கணும்னு தெய்வம் முடிவு பண்ணியிருக்கோ தெரியல… சரி வாங்க மதனி போவோம்….” என்றவாறு அவர்களும் வெளியே வந்தார்கள்.

தில்லையும் தாமரையும் காரருகே வந்துக் கொண்டு இருக்கும் போதே தோழியின் கூந்தலில் இருந்த பூவை சரி செய்துக்கொண்டு இருந்த தில்லையை ஆதவன் பார்த்து விட்டான். விஜயும் இப்போது தாமரையை தான் பார்த்தான்..

இவ்வளவு நேரமாக மடித்து கட்டப்பட்ட இரட்டை ஜடையில் தாமரையின் விழிகளை மட்டுமே பார்த்து புதிய உணர்வுகளை உணர்ந்துக் கொண்டிருந்தவன்.. இப்போது முற்றிலும் தாமரையிடம் தன்னை இழந்துக் கொண்டிருந்தான். முக்கிய காரணம் அவள் அணிந்திருந்த உடை …

தனது பத்தாவது வயதில் தீவிரவாதிகளிடம் இருந்து தாய் நாட்டை காப்பாற்றும் முயற்சியில் உயிரை இழந்திருந்த தந்தையின் மறைவுக்குப் பின் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை ஒதுக்கி வைத்திருந்த இரு வீட்டு உறவுகளின் துணையின்றி இராணுவ பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி செய்து மகனை வளர்த்த தாய் ஜஸ்மித்தின் நியாபகம் தான் வந்தது.

பஞ்சாபியர்களின் பாரம்பரிய உடை அப்போதுதான் இந்தியா முழுவதும் அனைத்து பெண்களும் வசதியாக அணிந்துக் கொள்ளும் உடையாக மாறிக்கொண்டிருந்த நேரம் …

வட இந்திய பெண்களை அவ்வுடையில் அதிகம் பார்த்திருந்தாலும் இன்று காலை வந்திறங்கிய நேரத்திலிருந்து அவனை அலைபாய வைத்த நீண்ட கருங்கூந்தலும்.. கார் கண்ணாடியில் பார்த்த அவளது விழிகளும்… தாமரை தற்போது அணிந்திருந்த அன்னையை ஞாபகப்படுத்திய உடையும்…தன்படிப்பு, .. இராணுவத்தில் தந்தையை போல் ஒரு வேலை என்ற குறிக்கோளுடு மட்டும் இருந்தவனது ஹார்மோன்களை தூண்ட … அவை அவனது மனம் .. உடல் .என புதிய மாற்றங்களை கொடுத்துக் கொண்டிருந்தது.

தோகை இளமயில் ஆடி வருகுது

வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள்

நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம்

நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ… 

Advertisement