Advertisement

அலை 2

                  மாலை நான்கு மணியளவில் ஒரு டீ ஷர்ட்டும் ஜீன்ஸூம் அணிந்து அன்றைய புதிய வகை வாகனமான மாருதி எஸ்டீமில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் ஆதவன்.விஜயும் தன் பையோடு வர ,

“என்னடா பையெல்லாம் எடுத்துட்டு வந்துட்ட… இன்னைக்கு இங்க தங்க சொன்னேனே..”

“இல்ல ஆதவ் … மதியம் அப்பா ஊருல இருக்கிற ஒரு அங்கிளுக்கு எஸ்டிடி பண்ணினேன்… அவர் நாளைக்கு காலையிலயே திண்டுக்கல் ரிஜிஸ்டர் ஆஃபிஸ்க்கு வரச் சொல்லிட்டாருடா… போய் என்ன செய்யனு பார்க்கணும்… அதான் நைட் நான் மதுரையிலருந்து நேரா அங்கேயே கிளம்பிடுவேன்…” என்றவாறு ஆதவன் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

தாமரைச் செல்வி தற்போதும் இரட்டை பின்னல்  போட்டு மடித்துக்கட்டி அவள் அணிந்திருந்த தாவணி நிறத்தில் ரிப்பன் கட்டியிருந்தாள்.மீனாட்சி என்ன உடை உடுத்தச் சொல்கிறாரோ … அதுதான் அணிவாள்… அவர் எண்ணையிட்டு தலையை வாரியிருந்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டாள். அம்மா அப்பா.. அண்ணன் இவர்கள் மூவரும் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுக் கொள்ளும் ரகம் அவள் . இன்றும் அப்படியே … தானாக கூந்தலை அலங்காரம் செய்துக்கொண்டதெல்லாம் கிடையாது.

மூங்கில் கூடை ஒன்றில் விதவிதமான மாலைகளைச் சுமந்துக் கொண்டு வந்து , முன்பக்க கதவைத் திறக்க .. இப்போதும் விஜயின் அருகில் … ஆதவன் தங்கையிடம் ,

” நீ பின்னாடி அம்மாக்கூட உட்காரு மா…” எனவும் , விஜய் அமர்ந்திருந்த இருக்கையின் நேர்பின்னால் சென்று அமர்ந்துக் கொண்டாள்.மீனாட்சியும் சில பைகளோடு வந்தவர் அமர்ந்துக் கொண்டு ,

“ஆதவா … மதியம் போட்ட மாத்திரைக்கு கொஞ்ச நேரம் உறங்குவேன். இன்னைக்கு இதையெல்லாம் எடுத்து வச்சதால உறங்க நேரமில்ல.. இப்ப கண்ண சொக்குது.. மருத வந்ததும் சொல்லுயா…” என்றவர் , இருக்கையில் நன்கு சாய்ந்துக் கொள்ள… ஆதவனோ…

“ம்மா.. தங்கச்சிமடியில தலை வச்சு வசதியா படுங்க… “

“இல்லய்யா… பாப்பா கையில பூக்கூட இருக்கு.. நான் இப்படியே சாய்ஞ்சுக்கிறேன்…” என மீனாட்சி சொன்னதும் , தங்கையிடம் இருந்து அந்தக் கூடையை வாங்கிய ஆதவன் , எங்கு வைக்க என முன்பக்கம் பார்க்க … விஜய் உடனே அதை வாங்கியவன் , தான் வைத்துக் கொள்வதாக சொல்லி விட்டான்.

விஜயின் மடியில் இருந்தக்கூடையில் நிறைய மாலைகள்.. அருகம்புல் மாலை ,துளசி மாலை … இப்படி வகை வகையாக … அதனைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், ஆதவன் ,

” அம்மா அவங்க இஷ்ட தெய்வங்கள் கிட்ட நிறைய வேண்டுதல் வச்சுருப்பாங்க .. அதான் இத்தனை வெரைட்டி என சிரித்துக் கொண்டே சொன்னான்.

“ஓ… ” என்ற விஜயும் புன்னகைத்துக் கொண்டவன் , வாக்மேன் ஒன்றை தன் கைகளில் வைத்து இருந்தவன் தலையில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்து விட்டான். அவனை உலுக்கிய ஆதவன் ,

“டேய் கேசட்டக் கொடு கார்ல போட்டா நாங்களும் கேட்போமில்லயா.. அதுவும் உன்னோட கலெக்ஷன்ஸ் எல்லாமே சூப்பரா இருக்குமே… “

“ஆன்டி தூங்குறாங்களேனுப் பார்த்தேன்… ” என்றவனுக்கு படுத்திருந்த மீனாட்சியே …

“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க தம்பி. பாட்டுக் கேட்டுட்டே தூங்கிடுவேன்…” என அனுமதி தர … புன்னகைத்துக் கொண்ட விஜய் அந்த கேசட்டை எடுத்து காரில் ஒலிக்க விட்டான்.

செந்தாழம் பூவில்

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா ..

பூ வாசம் மேடை

போடுதம்மா பெண்போல

ஜாடை பேசுதம்மா

அம்மம்மா ஆனந்தம் ..

கேட்க இனிமையான இந்தப் பாடல் ஒலிக்க … பயணம் செய்துக்கொண்டிருந்த அனைவருக்குமே ஒரு இனிமையான உணர்வு. பாடல் முடிந்து மறுமுறை ஒலிக்க … விஜயும் ஆதவனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

ஆதவன் அறிந்த ஒன்று தான் அது. விஜய்க்கு விருப்பமான பாடலை இரண்டு மூன்று முறை அந்த ஒலிநாடாவில் பதிந்து வைத்து இருப்பான். மறுபடி மறுபடி அதை சுழற்றுகையில் நாடாதேய்ந்து விடும் என்பதால் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து வைத்து இருப்பான்.இப்போது மூன்றாவது முறை ஒலிக்க பின்னால் இருந்த தாமரைக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்போது நான்காவது முறை ஒலிக்கத் துவங்க… ஆச்சர்யமடைந்த தாமரை முன்புற கண்ணாடியில் விஜயைப் பார்க்க …அதுவரை இருக்கையில் தலை சாய்த்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ,

வளைந்து நெளிந்து போகும்பாதை

 மங்கை மோக கூந்தலோ

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் 

பருவ நாண ஊடலோ…

என்ற வரிகளில் காலையிலிருந்து தன்னை வருடிச் சென்றக் கூந்தலின் நினைவில் யதார்த்தமாக முன்புற கண்ணாடியைப் பார்க்க …தாமரையின் விழிகளைச் சந்திக்க நேர்ந்தது …. இருவரது பார்வைகளும் உரசவும்.. இமைகள் படபடக்க பார்வையை மாற்றிக் கொண்டாள் தாமரைச்செல்வி.அடுத்தாற் போல் பாடலும் மாற ஆரம்பிக்க .. தாமரை வெளியே பார்த்த பார்வையை மாற்றவில்லை தான். ஆனால் விஜய் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்தப் பாடல் வரிகளும் அவனுக்கு மெல்லிய புன்னகையைக் கொடுக்க ஆரம்பித்தது.

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே…

இவர்கள் இப்படி மதுரையை நோக்கி பயணிக்கும் அதே நேரத்திலேயே தில்லையும் சல்வார் கமீஸ் ஒன்றைப் போட்டுக் கொண்டு தங்களது அம்பாசிடரில் ஏற வந்தாள். தேவராஜனோ வெள்ளை வேட்டி சட்டையில் பளீரென்று கம்பீரமாக வந்து நின்றான்.

“என்ன அண்ணா நீ.. நானே அம்மாகிட்ட கெஞ்சி … கொஞ்சி இந்த டிரஸ்ஸ போட சம்மதம் வாங்கியிருக்கேன்.. நீ இப்படி தேவர் மகன் கமலோட செகன்ட் ஹாஃப்  வேட்டில வந்து நிற்கிற… ஃபர்ஸ்ட் ஹாஃப் ஜீன்ஸ் டீ ஷர்ட்ல வருவேன்னு நினைச்சேன் தெரியுமா… போ இப்ப எனக்கு அம்மாகிட்ட தாவணி போடலங்கிற பாட்டு இருக்கு…”

“அதுலாம் நான் பார்த்துக்கிறேன் பாப்பா… இப்படி கெட்டப்ல போனாதான் நம்மளையும் பெரிய ஆளுனு பார்த்து பயப்படுவாங்க… அதுவும் தலைவர் கெட்டப்னா சும்மாவா… அப்படியே ஒரு கெளதமி..ரேவதினு ஜோடி பார்த்துருவோம்..” என தன் கை சட்டையை மடித்து விட்டுக் கொண்டே தனது பெரிய மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான்.

உடனே தேவகியை திரும்பி பார்த்தவள் , 

“பார்த்தியா… உன் குசும்பு தெரியாம இந்த அம்மா என் புள்ள பால் குடி பாப்பானு எல்லாருக்கிட்டயும் சொல்லிட்டு இருக்கு ..”

“அதெல்லாம் அப்படித்தான்…” என தங்கையிடம் கண் சிமிட்டி சிரித்தான்.

“போண்ணா திருவிழால வர்ற பொம்பள பிள்ளைகள் பயந்து ஓடுறதுக்கு… எல்லாம் வருஷம் 16 கார்த்திக் மாதிரி ஆளுங்கள சைட் அடிச்சிட்டு இருக்காளுங்க..” என்றவளின் காதைப் பிடித்தவன் ,

“யார் சொன்னா எல்லா பிள்ளைகளும் என்னைய தான் பார்க்கும் பாரேன்… அப்புறம் வீட்ல என் ரூம்ல இருக்கிற வீடியோ கேசட் ஒன்னு விடாம பார்த்துட்ட போல… தேவர் மகன் … வருஷம் பதினாறுனு படம் பேரா வருது ..”

“ஆமா.. லீவுல என்ன வேலை .. அப்புறம் ஒரு சாமி படம்.. திருவிளையாடல்னு போட்டு இருந்தது … அது மட்டும் அப்புறம் பார்க்கலாம்னு வச்சுட்டேன் … ” என்றவளை பீதியுடன் பார்த்தவன் ,

“அதுக என்னைய பார்க்குதா பார்க்கலயானு அப்புறம் பார்ப்போம்.. முதல்ல நீ அந்த கேசட் எங்கனு சொல்லு…”

“பார்ப்போம் பார்ப்போம்.. அது கிடக்கு என் ரூம்ல.” என்ற தில்லையை கண்ட தேவகி ,

“என்ன உடுப்புடி இது … அங்க பாரு என் புள்ளைய இந்த ஜில்லாவுக்கே ராசாவாட்டம் … ஒரு தாவணியோ… சீலையோ கட்டுவியா… என்னமோ சினிமாக்காரி மாதிரி…” என புலம்பிக் கொண்டே காரில் ஏறினார்.

” கேட்டியாண்ணே… நான் சொன்னேன்ல உன்னால திட்டு வாங்குறேன் பாரு..” என தில்லைச் சகோதரனிடம் குறைபட..ராஜனோ..

“ம்மா… பாப்பா காலேஜ் போகப் போகுது.. இப்பல்லாம் இந்த டிரஸ்தான் மா ஃபேஷன்… நல்லாதானம்மா இருக்கு …. எதுவும் சொல்லாதீங்க…” என்றவன் தாயை மேலும் பேச விடாது செய்ததோடு.. வீட்டினுள் வேகமாக சென்று அவள் அறையில் இருந்த வீடியோ கேசட்டுகளை அள்ளிக் கொண்டு வந்து தனது அறை கபோர்டில் போட்டு பூட்டி விட்டு வந்தவன் ,

“தேவா.. தங்கச்சி வீட்ல இருக்குது… இனி.. சாமி படம் பார்க்குறதை குறைச்சுக்கோ..” என தனக்குள்ளேயே புலம்பியவாறு வந்து வண்டியை எடுத்தவன் மதுரையை நோக்கி செலுத்தினான்.

அங்கு முதலிலேயே ஆதவன் குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து இறங்கினர்.மீனாட்சி மெல்ல இறங்கியவர் ,

“ஆதவா உங்க அத்தை வீட்ல வர்றதுக்குள்ள நான் இங்க இருக்கிற சாமியெல்லாம் கும்பிட்டுக்கிறேன்” என்றவர், மகளிடம் ,

” விநாயகருக்கு அந்த அருகம்புல் மாலைய எடுத்துட்டு வாம்மா…” என்று விட்டு முன்னால் நடக்க , ஆதவனிடமும் அருகிலிருந்த கடைகளில் சில பொருட்களை வாங்க சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

இப்போது விஜய் மட்டுமே காரினுள் கதவை திறந்து வைத்து விட்டு அமர்ந்திருக்க … பின்னாலிருந்து இறங்கிய தாமரை முன்புறம் தயக்கத்துடன் நிற்கவும் ,இறங்கி சிறிது தள்ளி நின்றான். தாமரையும் பூக்கூடையில் இருந்து அருகம்புல் மாலையைத் தேடி மெதுவாக எடுத்துக் கொண்டிருக்க , முன்னால் சென்ற மீனாட்சி நின்று திரும்பி மகளைப் பார்த்து ..

‘தாமரை .. பூமாலையையும் சேர்த்து எடுத்துட்டு வா…” என்றவாறு நடக்க ஆரம்பித்தார். “சரி மா…” என்றவாறு ஒன்றுடன் ஒன்று இணைந்து சிக்கலாகாதவாறு அவள் மற்ற மாலைகள் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அதனையேப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு அதில் தாமரைப்பூ மாலை கண்ணில் படவே இல்லை. அவன் நினைத்துக் கொண்டதும் அவள் தாமரைப்பூ மாலையை தான் தேடுகிறாள் என்பதாக …

கடவுளுக்கு போட வேண்டியது மறந்து வந்து விட்டார்கள் போல என நினைத்தவன் , சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அருகில் வரிசையாக இருந்த பூக்கடைக்குச் சென்றவன் , அங்கு தொடுத்து வைத்திருந்த தாமரைப்பூ மாலையை வாங்கிக் கொண்டு தாமரைச் செல்வியின் அருகில் வரவும் , அவளும் மாலைகளை எடுத்துக் கொண்டு கிளம்பவும் தயாராக நின்றாள்.

வந்தவன் அவன் கையிலிருந்த பூமாலையை அவள் கையில் கொடுக்க .. புரியாது வாங்கியவளின் அருகில் வந்த ஆதவன் , தனது கையிலிருந்த சில பொருட்களையும் கொடுத்து ,

“தாமரை.. அம்மா கிட்ட இதையும் சேர்த்துக் கொடுத்துடுமா..” என்றான்.

அதனை வாங்கிக் கொண்டு நடந்தவள் காதில் விஜய் , “தாமரை…தாமரைப்பூமாலை தானே…” என ஐயத்துடன் கேட்பது விழ ,ஆதவனும் ,

“ஆமான்டா .. தாமரை கையிலிருப்பது தாமரைப்பூ மாலை தான்…” என்றவாறு அவனருகே காரில் சாய்ந்துக் கொண்டான்.

“தாமரை..தாமரை அவங்க பெயரா…” என விஜய் கேட்பது முன்னால் நடந்துக் கொண்டிருந்தவள் காதில் விழ.. இதழில் சிறு புன்னகை தாமரையிடத்தில் … ஆதவனும் பலத்த சிரிப்புடன் ,

“டேய் உங்கம்மாதான் பஞ்சாபி .. உங்கப்பா பக்கா தமிழர் தானே… நம்ம ஊர் பக்கம் பூக்கள் பெயரெல்லாம் குழந்தைங்களுக்கு பெயரா வைப்பாங்கனு தெரியாதா..” என்பதாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே…மாமனின் வீட்டுக் காரின் அருகில் தங்கள் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான் தேவராஜன்.

உள்ளே அமர்ந்திருந்த தில்லை ஆதவனின் அந்த சிரிப்பை கோபமாகப் பார்த்து முறைத்துக் கொண்டே வந்து இறங்கினாள்.

Advertisement