Advertisement

அலை15 ( 2 )

             “ஹேய் தில்லை.. நீ கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்ட… ஆமா எனக்கு பிளஸ் டூ முடிக்கவும் கல்யாணம் ஆகிருச்சு.. ஆனா உன் கேள்வி தான் புரியல… உங்களுக்கும்னா வேற யாருக்கு கல்யாணமாச்சு … உங்க ஊருலருந்து வருவாளே காமர்ஸ் குரூப் இந்துமதி அவளுக்கும் கல்யாணமாகிருச்சா…”

  “இல்ல  அனீஸக்கா.. அவங்க ஃபாத்திமா காலேஜ்ல பி.காம் செகன்ட் இயர் படிக்கிறாங்க.. லீவுல கல்யாணம் எனக்குத் தான் ஆச்சு…” என சிறிது நாணத்தோடு கூறியவள் உடனேயே..

“ஆமா.. நானெல்லாம் இப்பவே ஜாய்ன் பண்ணிட்டேனே நீங்க ஏன் உடனே சேரல… “அனீஸ் அதற்கு பதிலளிப்பதற்குள் பேராசிரியை வந்து விட.. புதிய மாணவியான தில்லையை தனியாக எழுப்பி, எந்த பள்ளியில் படித்தாள்.. என்ன மதிப்பெண்கள் வாங்கினாள் என கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டார்.

தில்லைக்கு அதன் பிறகு அனீஸிடம் சொந்த விவரங்கள் பேசிக் கொள்ள நேரம் கிடைக்கவில்லை. அதுவும் அவள் முதலாமாண்டு துவங்கி நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிக்கு வந்ததால் அது வரை நடத்திய பாடங்களை கேட்க.. எழுத என நேரம் சென்று விட்டது.

அன்றைக்கு தாமரைக்கு அரை நாள் கல்லூரி என்பதால் தில்லையும் முன்பே கிளம்பி வர வெளியே ஆதவன் வீட்டில் நெடு நாட்களாக பணிபுரியும் மணிகண்டனை தான் எதிர்பார்த்தாள்.அவரும் உறவுக்காரர் அதோடு செண்பகாவின் கணவர் என்பதால் தில்லைக்கும் சிறு வயதிலிருந்தே தெரிந்தவர் என்பதால் அவர் தான் அவர்களை அழைத்துப் போக வருவார் என்றவாறு வெளியே வர… அங்கு இருந்தது தில்லைநாயகியின் வீட்டு கார் .பார்த்ததுமே யார் வந்திருப்பர் என யூகித்தவள் அருகில் சென்று கார் கண்ணாடியைத் தட்டினாள்.

அவள் யூகம் சரியே என்பது போல் தேவராஜன் கார் கண்ணாடியை இறக்கி கண்களில் மாட்டியிருந்த கருப்பு குளிர் கண்ணாடியை கழட்டியவாறே இறங்கியவன் தங்கையைப் பார்த்து சிரித்தான். பார்த்த தில்லை சகோதரனின் தோற்றத்தில் ஆச்சர்யமாகி தாடையில் கை வைத்துக் கொள்ள …

‘என்ன பாப்பா புது கெட்டப் எப்படி இருக்கு… ” என்றவாறு உடலை அங்கும் இங்கும் திருப்பி காண்பிக்க ,

“அதான் யோசிக்கிறேன் .. தேவர் மகன் கெட்டப் காணாம போய் மீரா படத்துல வர்ற ஹீரோ மாதிரில இருக்கிற..ம் உண்மையச் சொல்லுணா… என்னையக் கூப்பிட வந்தியா … இல்ல அந்தப் படத்துல வர்ற பட்டர்ஃபிளை பாட்டுப் பாட யாரையும் தேடுறியா..”

“ஐயோ பாப்பா உன்னைப் பார்த்துட்டுப் போக தான் மா வந்தேன்…” என்றவன் மனதினுள் அப்படியே செல்வியப் பார்த்துட்டுப் போகலாம்னுதான் பாப்பா..” என சொல்லிக் கொண்டான்.

காரினுள் அமர்ந்தவாறே.. ” இந்த கூலர்ஸ் இப்ப எதுக்கு யாரப் பார்க்கிறன தெரியாம இருக்க தானே…”

“பாப்பா… ப்ளீஸ் இந்த அண்ணன விட்டுருடா… இதோ கழட்டி பின்னால போட்டுட்டேன்.” என்றவனின் செய்கை சிரிப்பைத் தர . சிரித்துக் கொண்டே அங்கு இருந்த நீல வண்ண கோப்பினை ஆராய்ந்தாள்.

அது முழுக்க தேவராஜனது பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள். அதனைப் புரட்டிப் பார்த்து விட்டு, “என்னண்ணா இது… நிறைய ஜெராக்ஸ் எடுத்து வச்சுருக்க.. ” என்றவள் உள்ளிருந்த மேலும் சிலவற்றை எல்லாம் பார்த்து விட்டு,

“வாவ் அண்ணா நீ கரஸ்ல எம் பி ஏ படிக்கப் போறீயா.. பிஸ்னஸ்ல தான் முழுக்கவனமும்னு சொன்ன .. கமல் “பங்க்.” கூட அதான் காணாம போச்சா..என ஆச்சரியமாக கேட்டாள்.

“அது பாப்பா… முதல்ல அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா ஆதவன் தான் … ” என்றவன் , நிறுத்திவிட்டு… “ஷ் … மச்சான் தான் .. நாம நம்ம பிஸ்னஸ நம்மூருக்குள்ளயே முடக்க கூடாது உலகம் பூரம் எடுத்துட்டு போகணும்னு சொல்லிட்டு இருந்தாரா… அது தான் நம்ம தொழிலுக்கும் எம்.பி.ஏ. கொஞ்சம் பயன்படுமேனு பார்த்தேன்…” என்றவன் மனதினுள் ,

“நாளைக்கு படிப்ப காரணம் காட்டி நீ உன் நாத்தனார எனக்கு தரமாட்டேன்னு சொல்லிட்டா என்ன பண்றது பாப்பா…” தங்கைக்கு காரணம் சொல்வதற்குள் தேவராஜனுக்கு மூச்சு வாங்கியது. தில்லையோ ஆதவன் குறித்துப் பேச ஆரம்பித்ததும் கேள்வி கேட்பதை நிறுத்தி சிறிது நேரம் அவன் நினைவிற்கு சென்று  விட்டாள். ஆனாலும் ,

“என்ன அண்ணா முன்னெல்லாம் அவங்க பெயர் தான சொல்லுவ.. இப்ப அவரு இவருனு… “மெல்லிய புன்னகையுடன் கூறியவளைப் பார்த்த தேவராஜன்..

” தங்கச்சி வீட்டுக்காரராச்சே .. மரியாதை கொடுக்கணும்ல.. நீ கூடதான்… சாலிடர் ஹீரோ… அப்புறம் ஆன்.. மணிபாரதினு எல்லாம் சொன்ன … இப்ப அவங்க இவங்க.. அதோட அன்னைக்கு பேசறப்ப “மாமா”னு சொல்ல ஆரம்பிச்சுருக்க … ” என்றவன் யதார்த்தமாக தங்கையின் முகம் பார்க்க வித்தியாசத்தை உணர்ந்தவன் ,

“ஹேய் பாப்பா… இது என்ன முகமெல்லாம் ரெட்டிஷ்  .. “என்றவனிடம் , “போண்ணா.. ரொம்ப கிண்டல் பண்ற…” என கையிலிருந்த பெரிய நோட்டால் முகத்தை மூடிக்கொண்டாள்.

தேவராஜனுக்கு அந்த செய்கை அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது. கணவன் நினைவில் இருப்பவளை அதற்கு மேல் தொந்திரவு செய்யவில்லை. ஆனால் , ” கல்யாணம் ஆனா பொண்ணுங்க மாறிருவாங்களா… அப்ப செல்வியும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்….” என்ற நினைவே ஒரு இதத்தைக் கொடுக்க மென்னகையோடு வாகனத்தை செலுத்துவதில் கவனமானான்.

தில்லையோ ஆதவனை நினைத்து  இரவு சரியாக உறங்காமல் கல்லூரிக்கும் கிளம்பி வந்ததும் சோர்வைத் தர அப்படியே உறங்கி விட்டாள்.

தில்லையின் கல்லூரியில் இருந்து அரை மணி நேரம் பயணித்து மருத்துவக் கல்லூரிக்கு வந்தார்கள். காத்திருக்கச் சொன்ன இடத்தில் ஒரு மாணவியுடன் அமர்ந்திருந்த தாமரை , தேவராஜனை எதிர்பார்க்கவில்லை.

 புதிய தோற்றத்தில் வித்தியாசமாக இருக்க “வாங்க அத்தான் ” என்றவள் , அருகில் மிகவும் சோர்வுடன் வந்த தில்லையைப்  பார்த்து விட்டு , ” என்ன திலோ ரொம்ப டயர்டா இருக்க.. இங்கிருந்து ரொம்ப தூரம் தானே உன் காலேஜ் ..”

“அதெல்லாம் பக்கம் தான்… வரும் போது தூங்கிட்டேன் அதான் உனக்கு அப்படி தெரியுது வா கிளம்பலாம்..” என்றவள் பக்கத்தில் நின்றவளிடம் , “ஹாய்.. நான் திலோ இவளோட ஃபிரண்ட்… நீங்க” என ஆங்கிலத்தில் பேசி கைக் கொடுக்க கை நீட்டினாள். அந்த பெண்ணும் கைக் கொடுத்தவள் ,

“நீங்க தான் தாமரை செல்வி மைனியா … இப்ப தான் உங்களப் பத்தி சொல்லிட்டு இருந்தா. சொன்ன மாதிரியே ரொம்ப நல்லா பேசுறீக… நான் விஜயலெட்சுமி திருச்செந்தூர் பக்கம்.. ஹாஸ்டல்ல இருந்துப் படிக்கப் போறேன்.” என்றவளின் பேச்சு தில்லையையும் கவர அவளிடம் மேலும் இரு வார்த்தைகள் பேசிவிட்டு இருவரும் கிளம்பினர்.

அதுவரை காரில் சென்று அமர்ந்துக் கொண்ட தேவராஜன் கறுப்புக் கண்ணாடியை அணிந்து தாமரையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவர்கள் வருவது அறிந்து கழட்டி வைத்துவிட்டான்.தங்கைக்கு பதில் சொல்ல முடியாதே.. உள்ளே தோழிகள் இருவரும் அமர்ந்து கொள்ள , தில்லை ,

“அவ சொல்ற மைனி ரொம்ப நல்லா இருக்குடி.. ஆமா என்னையத் தவிர யாருகிட்டயும் பேச மாட்ட.. எப்படி டி முத நாளே அவள ஃபிரண்டு பிடிச்ச… நான் உன் மைனீனு எல்லாம் சொல்லியிருக்க .. “

“அது..” என ஆரம்பித்தவள் , ” விஜய் ” என்ற முதல் பெயரைக் கேட்டதும் அவளையே பார்த்ததால் வந்துப் பேசினாள் என்ற சொல்ல முடியும். சற்றுநிறுத்தி , ” உன்னையப் போலவே நான் பேசாம அமைதியா இருந்தாலும் அவளே வந்துப் பேசினாடி … அப்படியே ரெண்டு பேரும் பேசிக்கிட்டோம்” என பாதி உண்மையைக் கூறினாள் .

தங்கைக்கு பயந்து கண்ணாடி போடாமல் வண்டி ஓட்டினாலும் , பார்வை இங்குமங்கும் அலை பாய்ந்து தாமரையிடம் சென்றுக் கொண்டே இருந்தது.

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்

எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ… 

பட்டர்பிளை பட்டர்பிளை..

தேவாவிற்கு தங்கை சொன்னப் பாடல் நினைவு வந்து ஒரு புன்னகையைக் கொடுத்தது. வீட்டில் கொண்டு வந்து விட்டவன் உடனே கிளம்பியும் விட்டான்.

வீட்டிற்கு வந்து இருவரும் முதல் நாள் கல்லூரிக்குச் சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருந்தனர். அதில் “அனீஸக்கா” பேச்சும் வந்துப் போனது.

 செண்பகா சமைத்து தர .. இருவரும் அதைக் கல்லூரிக்கும் டிபன் பாக்ஸில் கட்டிக் கொண்டு சென்று வந்தனர். மாலை வந்ததும் இருவரும் அவரவர் பாடப்புத்தகங்களில் மூழ்கினர்.

இதில் தினமும் கல்லூரிக்கு வந்து, காலை மாலை என இரு வேளைகளும் தாமரையை அவளறியாமல் பார்த்து விட்டுச் செல்லும் வழக்கத்தை விஜய் கொண்டிருந்தான் என்றால் , வார இறுதியில் வரும், பல்கலைகழக நேரடி  வகுப்புக்கு வரும் காரணத்தை வைத்து தேவராஜன் தேவகியோடு வந்து தாமரையை மனதில் நிரப்பிக் கொண்டிருந்தான்.

தாமரையோ விஜய் கண்ணில் படுகிறானா என கல்லூரி வளாகத்தையும் அவ்வப்போது ஆராய்ந்துக் கொண்டுதானிருந்தாள். அவளோடவே இருக்கும் விஜயலெட்சுமியை யாரும் விஜி, விஜய் என விளையாட்டாக அழைத்தால் கூட பார்வை ஒரு சுற்று சுற்றி விட்டுத்தான் நிலைக்கு வரும்.

கல்லூரி துவங்கிய அந்த ஒரு மாதத்தில் ஒரு முறை தொலைப்பேசி அழைப்பு விடுத்திருந்த ஆதவன் தாமரையிடம் ஐந்து நிமிடம் பேசுபவன் , தில்லையிடம் “நல்லாயிருக்கியா ,நல்லா படி…” என்ற வார்த்தைகளோடு நிறுத்திக் கொண்டான்.

அவளுக்கும் அவனது குரல் கேட்டாலே மெளனம் வந்து ஒட்டிக் கொள்ள… “என்னடி மாமாகிட்ட வாயே கொடுக்க மாட்டிக்க… கொடுத்தா மாட்டிக்குவேன்ல…” என இரு பொருள்பட நினைத்து சிரித்துக் கொள்வாள்.

ஒரு கடிதம் அதுவும் பொதுவாக அவளையும் கேட்டு அலுவலக முகவரிக்கு வந்தது. அதை மகளிடம் கொடுத்தார் அருணாச்சலம்.தில்லை அவனது கையெழுத்தை ரசித்தவள் தாமரையின் அலமாரியில் வைத்திருந்த அந்த கடிதத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டாள்.

தில்லைக்கும் ஆதவனுக்கு கடிதம் எழுத ஆசை வரும் … ஆனால் தாமரையைப் பார்த்து விட்டால் தில்லை தன் ஆசை, காதல் கனவுகள் அத்தனையையும் மூட்டைக் கட்டி வைத்து விடுவாள். அப்படி ஒன்றையும் தாமரைக்காக விட்டுக் கொடுத்தாள் அந்த அன்புத் தோழி.

ராஜாக்கள் கதையெல்லாம்

ரத்தத்தின் வரலாறு

ரோஜாக்கள் கதையெல்லாம்

கண்ணீரின் வரலாறு

உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம்

 உலகத்தில் அதுதானே சத்தம்…

Advertisement