அதற்குள் பேப்பர்வெய்ட் விழுந்த சத்தத்தில் தாமரையும் செண்பகாவும் அங்கு வந்திருந்தனர்.
ஊருக்கு சென்றதிலிருந்து தேவகி மகள் சாப்பிட்டாளா… உறங்கினாளா என்ன செய்கிறாள் , விறகடுப்பு… மண்ணென்னை அடுப்பில் மட்டுமே சமைத்து பழகியிருந்த தேவகிக்கே புதிதாக அறிமுகமான எரிவாயு அடுப்பு பயத்தைக் கொடுக்க பார்த்து பார்த்து சமைக்க துவங்கியிருந்தவர் , இப்போது அங்கும் அதே கேஸ் அடுப்பு இருக்க… தேவா காலையில் கிளம்பும்போது ஒரு முறை ,மதியம் சாப்பிட வருகையில் , மாலையில் அவன் வீட்டிற்கு வந்ததும் ஒரு முறை என மூன்று வேளையும் தில்லைக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்து,
“பாப்பா சமையற்கட்டுக்கு வந்தா செண்பாவ துணைக்கு வச்சுக்கோ.. நீயா அடுப்ப பத்த வைக்காத , சாப்டியா.. தூங்குனியா … ” என்பது போல் மகள் மேல் உள்ள அக்கறையில் பேசியவர் ,
“உனக்கு என்னென்ன வேணும் சொல்லு.. எடுத்துட்டு வாறோம்…” என்றிருந்தார். அவர் பேசும் போதெல்லாம் அநேகமாக தாமரையும் அருகில் இருப்பாள். அப்படி தேவகிக்கு பதில் சொல்லும் போது தாமரையின் முகம் புன்னகையைக் காட்டிலும் அதன் பின் இருக்கும் வேதனை மட்டுமே தில்லைக்குத் தெரிந்தது.
“அத்தைய எவ்ளோ மிஸ் பண்ணுவா.. இப்ப போய் அம்மா இப்படி பாசமழை பொழியுதே… வீட்ல இருக்கிறப்போ திட்டிட்டே இருக்கிற மாதிரி இருக்கலாம்… ஐய்யோ நான் வேற அடிக்கடி வாங்கனு சொல்லிட்டேனே… என்னைய இப்படி தாங்கு தாங்குனு தாங்கினா எப்படி…” என நினைத்தவள் தாமரை அருகில் இல்லாத நேரமாகப் பார்த்து தேவராஜன் அலுவலகத்தில் இருக்கும் சமயம் அவனுக்கு அழைத்தாள்.
அவர்களது தனிப்பட்ட எண்ணிற்கு அழைப்பு வரவும் ஒரே அலுவலக அறையில் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த சொக்கலிங்கமும் தேவராஜனும் பதறிப் போய் ஃபோனை எடுக்கப் போக முதலில் சொக்கலிங்கம் கையில்தான் ரிசீவர் வந்தது.
அந்த எண் வீட்டு நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட எண்.. அதுவும் விரலால் எண்களை சுழற்றக்கூடிய தொலைப்பேசி என்பதால் எண்களும் வராது… மேலும் எஸ் டி டி கால் எனவும் பதற்றத்துடன் காதில் வைத்து ‘ஹலோ’ என்றார். மறுபுறம் ,
“அப்பா நான் தான் பேசுறேன்..” என்றதும் சொக்கலிங்கம் பதற்றத்தோடு… “என்னம்மா … என்ன பாப்பா… அப்பா வரட்டுமா…” என்ற கேள்வியில் தேவா அதற்கு மேல் பதறி விட்டான்.
“என்னப்பா .. என்ன ஆச்சு… ” என்றவனிடம் கை காட்டிவிட்டு மகளிடம் பேச ஆரம்பித்தார். அங்கு தில்லையோ , சொக்கலிங்கத்திடம் நலம் விசாரித்து விட்டு தேவாவிடம் கொடுக்கும் படி கூறியவள் அவன் வாங்கியதும்.”
“அண்ணா.. அப்பா அம்மா தான் இப்படினா நீயுமா… இந்த அண்ணன் தங்கச்சி பாசத்துல மதுரக்காரங்கள அடிச்சுக்கவே முடியாது போல… மீனாட்சியையும் அழகரையும் கண் முன்னால கொண்டு வாரீங்க… செல்வி தான் அண்ணன் … நொண் ..” என சொல்லப் போனவள் சிறிது தயங்கி நாணத்தோடு “அண்ணன்னு சொல்றான்னா.. நீயும் அப்படி சொல்ல வச்சுருவப் போலயே… ” என்ற தங்கையின் கேலியில் புன்னகைத்தவனிடம் ,
“அண்ணா.. நான் இருக்கிறது நம்ம அம்மாச்சி வீடு … நம்ம தாய்மாமா வீடு… என் கூட எப்பவும் தாமரை இருப்பா… நம்ம செண்பா மதினி இருக்காங்க… கூடவே வீட்டைச் சுத்தி தோட்டம் , அதுல வேலை செய்ய பண்ணையாட்கள்னு நம்ம வீட்ல இருந்த மாதிரி ரொம்ப செளகரியமாதான் ண்ணா இருக்கிறேன். என்ன நீயும் அப்பா அம்மாவும் பக்கத்துலயே இல்லங்கிற குறை தான்… அதுவும் ஃபோன்ல பேசும் போது அந்தக் குறையும் இல்லாம தான் போகுது… ஆனா இப்படி மூணு வேளையும் ஃபோன் பேச வேண்டாம்னு அம்மாகிட்ட சொல்லு… அதுக்குத் தான் உனக்கு ஃபோன் பண்ணினேன். அம்மாவுக்கு டயல் செய்து கொடுக்காத .. பழக்கியும் விட்ராத.. “
தேவாவும், “நீ சொல்றத கேட்க சந்தோஷமா தான் இருக்கு பாப்பா… மச்சானும் பக்கத்துல இல்லயே… ரெண்டு பேரும் சின்ன பொண்ணுங்க..” என்றது தான்… கோபம் வரப் பெற்றவள் ,
“என்ன சின்ன பொண்ணுங்க.. சின்ன பொண்ணுங்களுக்குத் தான் கல்யாணம் பண்ண சொல்லி கட்டாயப்படுத்துவாங்களா… எனக்கு அதுனாலயே அம்மா மேல கோபம் வருது ணா.. அப்ப சின்ன பொண்ணுங்க… படிக்கட்டும்னு விட்டுருக்கலாம்ல… இப்ப…” என்றவளுக்கு ஆதவனுடனான இரவு நியாபகம் பேச்சிழக்க செய்து …குரலும் மென்மையாக மாறி “நான் பெரிய பொண்ணுதான்… புரிஞ்சுக்கோ… ” என்றவள் வைத்து விட்டாள்.
தேவாவும் தங்கை சொன்னதற்காக மதியம் சென்றவன் தேவகியிடமும் கூற …அவரோ பிடிவாதமாக அழைப்பு விடுக்கக் கூறினார். அங்கும் தில்லையே எடுத்து தேவாவிடம் கோபமாக பேசப்போனவள் தேவகியின் குரலில் அது முடியாமல் அன்பாகவே பேசியவள் தேவாவிடம் ,
“அண்ணா நீ சொன்னா கேட்க மாட்டியா.. அம்மாகிட்ட பேசாதீங்கனு சொல்ல கஷ்டமா இருக்கு. முன்னெல்லாம் கோபமா பேசுவேன்… இப்ப அது முடியலண்ணா… “என்றவளிடம் ,
“ஏன் பாப்பா அவங்க உன்னைய ரொம்ப மிஸ் பண்றாங்க… நானும் தான் .. நீ நல்ல பாதுகாப்பான இடத்துல தான் இருக்கிறனு எங்களுக்கு புரியுது தான்.. ஆனாலும் எங்களுக்கு அப்படியில்லயே அழகா பின்னஃபார்ம் போட்டு ரெட்டை ஜடை போட்டுப் போன என் தங்கச்சி தான் நியாபகத்துல வர்றா… உன் சந்தோஷம் எங்களுக்கு முக்கியமில்லயா ” என்றவனின் பேச்சு மனதை இதமாக்கினாலும் …
“அண்ணா ப்ளீஸ்… என்னைய மட்டும் யோசிக்கிறீங்க செல்விய யாரும் நினைச்சுப் பார்க்க மாட்டிங்களா.. நீங்க எல்லாரும் இப்படி பாசமா கேட்டு ஃபோன் செய்யறப்ப செல்விக்கு அத்தை நியாபகமோ … அவங்கண்ணா நியாபகமோ வந்துட்டே இருக்காதா.. அப்ப அவங்கள எல்லாம் எவ்வளவு மிஸ் பண்ணுவா. பேசும் போது அவளை விசாரிக்கிறீங்க தான் … ஆனாலும் … இப்ப நாந்தாண்ணா எல்லாம் அவளுக்கு… அம்மா அண்ணா எல்லாமே.. அப்ப நான் நிறைய விட்டுக் கொடுத்துதான் ஆகணும்.
அதுல நீங்க எல்லாரும் என் மேல வச்சுருக்கிற அக்கறையும் அன்பையும் சேர்த்து தான் சொல்றேன்.என்னவோ தெரியல செல்வி முகம் கொஞ்சம் வாடினாக்கூட எனக்குப் பொறுத்துக்க முடியல…நீ தான் அம்மா கிட்ட சொல்லி புரியவைக்கணும்.. அப்பா அம்மா கிளம்புறப்ப அழுகை வந்து அடிக்கடி வாங்கனு சொல்லிட்டேன்.. அதுக்காக அடிக்கடி கூட்டிட்டு வந்துராத.. ஆமா…நானே உங்களுக்கு பேசுறேன்..” என அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே தேவகி மகனிடம் அது கொடுத்து விடவா இதைக் கொடுத்துவிடவா என்பது போல் கேட்டுக் கொண்டிருக்க.. கோபமான தில்லையும் ,
“அம்மாகிட்ட சொல்லு… இல்ல உன்னைய தான் திட்டுவேன்.” என்றதும் தேவராஜனுக்கு புன்னகை அரும்பியதோடு தங்கையை நினைத்து பெருமிதமும் கொண்டவன் , ” சரி பாப்பா..” என வைத்து விட்டான். தேவகி அவனிடம்,
“என்னப்பா சொன்னா.. எது கேட்டாலும் இப்ப வேண்டாம்னு சொல்றா.. என்றவரிடம் ., “அம்மா பாப்பா இப்ப நம்ம வீட்டு பொண்ணு இல்லை…அவங்க வீட்டு மருமக… அவ சொல்றது.. செய்றது எல்லாம் சரியா தான் இருக்கும் ..அவளே பேசுவாளாம் .. நாமளா அடிக்கடி ஃபோன் செய்ய வேண்டாம் சொல்றா..” என்றவனது மனதினுள் ,
“பதினெட்டு வயசுல என் தங்கச்சி என்னவெல்லாம் பேசுது… இந்த மெச்சூரிட்டி இப்பக்கூட எனக்கு இருக்கா தெரியலயே.. செல்விய நான் கட்டிக்க என் தங்கை சம்மதம் தான் முதல்ல வேணும். அதுக்கான தகுதிய வளர்த்துக்கோ தேவா…” என மனதுக்குள் நினைத்தவன் ,
” முதல்ல இதுலருந்து ஸ்டார்ட்.. சிக்.. சிக்.. சிகரெட்டுக்கு நோ நோ …. சிக்சிக் சிக்லெட்ஸ் எஸ் எஸ்” என விளம்பரத்தில் வருவது போல் கூறி அந்த சூயிங்கம் எடுத்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்து விட்டான். தேவகி கூட இரண்டு நாட்களாக “என்னப்பா சின்னபுள்ளயாட்டம் பப்புலுகம் சவைச்சு முட்டை விடுற…” எனக் கூறிக் கொண்டிருந்தார்.
சிகரெட் பிடிக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் அந்த சூயிங்கம்மை மென்றுக் கொண்டிருந்தான் தேவராஜன். இந்தச் சூழலில் தான் மாலையில் தொலைப்பேசி நீண்ட சத்தம் கொடுக்கவும் தேவகி தான் பேச அழைக்கிறார் என்ற நினைவில் தில்லை ரிசீவரை எடுத்து காதில் வைக்கவும் திட்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் “சாரி” என்ற குரல்.. அந்த இரவுக் கொடுத்த நெருக்கம் உடலில் மட்டும் அல்ல உள்ளத்திலும் பதிந்து விட்டானே.. காதோடு அவளை மயக்கி சொர்க்கத்திற்கே அழைத்துச் சென்ற குரலை மறக்க முடியுமா..
இருக்கையில் அமர்ந்திருந்தவள் பேச்சிழந்து இருக்க..தாமரை அருகில் வந்து உலுக்கி” என்னாச்சு திலோ … உன் கால்ல எதுவும் படலயே ” என அவள் கால்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அதற்குள் மறுபடியும் அழைப்பேசி சத்தம் கேட்கவும் உணர்வுக்கு வந்த தில்லை… தாமரை அருகில் நிற்பதை உணர்ந்து …
“எ..எடு… டி உங்க அண்ணன் தான் பேசுறார் … ” என்றவள் முகச் சிவப்புடனே எழுந்து தோட்டத்தில் சென்று அமர்ந்து விட்டாள். ” யார்கிட்டயும் நான் பேசத் தயங்குனதே இல்லையே… ஏன் மாமா கிட்டக் கூட தான் ” என நினைத்தவள் கைகளில் முகம் புதைத்துக் கொண்டாள்.
ஆம்.. அவனிடம் கூட சகஜமாக தானேப் பேசிக் கொண்டிருந்தாள்.. இப்போது பேச்சுத் தடைபடக் காரணம்..” காரணம் என்னவாக இருக்கும்… அதனாலோ இதனாலோ.. எதனாலோ … ” என்பதாக இதழோரம் ஆதவனை நினைத்து புன்னகைத் தோன்றியது. அதற்குள் தாமரைப் பேசிவிட்டு வந்திருந்தாள்.
“அண்ணா நல்லபடியா ஊருக்குப் போய் சேர்ந்துட்டாங்கடி .. அடுத்து நான் காலேஜ் போகிற முதல் நாள் பேசுறதா சொல்லியிருக்காங்க.. உன்கிட்ட திரும்ப கொடுக்கட்டா கேட்டேன்.. பேசிட்டேன்னு சொல்லிட்டாங்க… அப்புறம் ” என பேசிக் கொண்டேப் சென்றவளின் முகம் முன்பைக் காட்டிலும் தெளிவாக இருக்க கண்ட தில்லை ,
“உங்கண்ணன் உன்னையப் பேச வைக்கிறாங்க… என்னையப் பேச விடாம வைக்கிறாங்க… சரியான ஆளுடி அவங்க… “. நினைத்தவளுக்கு மீண்டும் முகம் சிவக்க துவங்க தோழியிடம் ,
“போதுமாடி… உங்கண்ணன் பேசிட்டாங்களா… ரெண்டு நாளா நானும் பார்த்துட்டுத் தானே இருக்கிறேன்.. ஃபோன் வந்தா பார்க்கிற … மணி பார்த்து விரல்ல அங்க என்ன டைமா இருக்கும்னு கணக்குப் போடுற… அத விட ரெண்டு நாளா மணிரத்னம் பட டயலாக் மாதிரி ரெண்டு ரெண்டு வார்த்தையா மட்டும் பேசிட்டு இருந்தவ இப்ப பாலசந்தர் பட கேரக்டர் போல பக்கம் பக்கமா வசனம் பேசுற… இப்ப திருப்தியாடி… இனியாவது அடுத்த வாரம் காலேஜ் போறப்ப என்ன டிரஸ் போடலாம்னு பார்ப்போமா…” என்றவள் அவளிடம் பேசிப்பேசி கல்லூரிக்குச் செல்லும் மனநிலைக்குத் தயார் படுத்தலானாள்.
தேவாவும் தங்கையின் வார்த்தைகளுக்கு மதிப்பு தந்து தேவகியிடம் வாரம் ஒருமுறை ஃபோன் போட்டுத் தருகிறேன்.. கல்லூரி துவங்க இருக்கும் முதல் நாளன்று தங்கையைப் பார்க்கச் செல்லலாம் எனக் கூறி விட்டான். அவனுக்குத் தெரியும் தங்கையின் குணம்.. ஒருவர் மீது பாசம் வைத்து விட்டால்.. அந்த அன்புக்காக எதையும் விட்டுக் கொடுப்பாள். இதோ இந்த திருமணமே அவளது தோழிக்காக தானே.. அந்த தோழியை தான் மனைவியாக்க வேண்டுமானால் தங்கையிடம் நற்பெயரை வாங்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான்.